அத்தியாயம் – 11 (1)
“ஆயர் பாடி மாளிகையில்” பாடல் பின்னணியில் ஒலிக்க, அந்த மினி ஹால் மேடையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்டத் தொட்டிலில் தேவதையாக பெண் குழந்தை படுத்திருந்தது. பெரிய கூட்டம் என்றில்லாவிட்டாலும், முக்கியமான சொந்தங்கள் என்ற வகையில் ஐம்பது பேர் வரை அந்த மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.
பலர் முகத்தில் சந்தோஷமும், ஆர்வமும் தெரிந்தாலும். வெகு சிலர் முகத்தில் சங்கடங்கள் தெரிந்தது. ஒரே ஒருவர் மட்டும் கோபத்தை மட்டுமே முகத்தில் காண்பித்து அமர்ந்து இருந்தார். ஆனால் அந்த கோபத்தைக் கண்டுகொள்வார் தான் அங்கே யாருமில்லை.
நல்ல நேரத்தில் குழந்தையின் காதோரம் “ஸ்ரீகீர்த்தி, ஸ்ரீகீர்த்தி, ஸ்ரீகீர்த்தி” என்று மூன்று முறை கூறி, குழந்தையை உச்சி முகர்ந்தான் சந்திரன். அருகில் சத்யா முகமெல்லாம் பூரிக்க நின்று இருந்தாள்.
சந்திரன் கூறியதின் பேரில் குழந்தைப் பிறக்கும் வரை சத்யா சென்னையிலே தங்கிவிட்டாள். சத்யாவிற்கு பிரசவ நேரம் நெருங்கும் சமயம் விடுமுறைக்கு விண்ணப்பித்து இருந்த சந்திரனுக்கு சில அவசர கால நடைமுறையால் விடுமுறை கிடைக்கத் தாமதமாகியது. சந்திரன் வரமுடியாத வருத்தம் சத்யாவிற்கு இருந்தாலும், அவனின் வேலையை மனதில் கொண்டு அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சத்யாவிற்கு பெண் குழந்தைப் பிறக்க, எல்லோருக்கும் மிக்க மகிழ்ச்சி தான். வீட்டின் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால், மகாலக்ஷ்மியே வந்திருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே தேவதையின் அம்சமாக சத்யாவும், சந்திரனும் குழந்தையைப் போற்றினர்.
திருமணம் முடிந்து சில நாட்களில் பணிக்குச் சென்றவன், மீண்டும் தன் மனைவியைச் சந்தித்தது அவர்கள் குழந்தை பிறந்து மூன்றாம் மாதம் தொடங்கும்போது தான்.
குழந்தைப் பிறந்த முப்பது நாளில் வீட்டளவில் சிறிதாக பூஜை ஏற்பாடு செய்து தொட்டில் போட்டு இருந்தனர் சத்யாவின் பெற்றோர். இருந்தாலும் சந்திரனின் ஆசைக்காக மூன்றாம் மாதம் பெரிதாகவே விழா ஏற்பாடு செய்து இதோ நடந்துக் கொண்டிருக்கிறது.
கீர்த்தி என்ற பெயரை சந்திரன் தேர்ந்தெடுக்க, சத்யாவிற்கு ஸ்ரீ யில் தொடங்க வேண்டும் என்ற ஆசை. இந்தியாவில் பிரபலமான பத்து பெயர்கள் வரிசையில் ஸ்ரீ மூன்றாம் இடம் என ஒரு கருத்துக் கணிப்பில் கூறியிருந்தது. சத்யாவிற்கு தன் மகளும் அந்த வரிசையில் இடம் பெற ஆசை. இருவரின் ஆசையையும் இணைத்து ஸ்ரீகீர்த்தி என்று பெயரிட்டனர்.
சந்திரன் விடுமுறைக்கு வந்து ஒரு வாரம் கழிந்து இருந்தது. நேராக சென்னை வந்து இறங்கி குழந்தையையும், சத்யாவையும் பார்த்து விட்டு, அவர்களோடு ஒரு நாள் தங்கிவிட்டே தன் சொந்த ஊருக்குச் சென்றான். காமாட்சிக்கு அது இரண்டாம் அடி.
ஏற்கனவே சத்யா அங்கே இருக்க வேண்டாம் என்று கூறி அவளின் பிறந்த வீட்டிற்கு மகனே அனுப்பியிருந்தாலும், அவருக்கு உள்ளூர நம்பிக்கை இருந்தது. சமயம் கிடைக்கும் போது தன்னிடம் விசாரிப்பான். அப்போது நடந்ததை ஏற்ற இறக்கமாகக் கூறினால் தன் பேச்சுக்குத் தலையாட்டி விடுவான் என்றே நினைத்திருந்தார்.
ஆனால் சந்திரனோ அன்றைக்கு போனில் சத்யாவோடு பேசியபிறகு, அதைப் பற்றி எதுவும் காமாட்சியிடம் கேட்டுக் கொள்ளவில்லை. எப்போதும் போல நேரம் கிடைக்கும்போது தன் தாய்க்குப் பேசினாலும், சத்யா பேச்சை எடுப்பதில்லை. ஒன்பதாம் மாதம் நெருங்கும் வேளையில் சத்யாவிற்கு வளைகாப்புச் செய்வதைப் பற்றி ஊரில் எல்லோரும் கேட்க ஆரம்பிக்கவும், தன் மகள்களை விட்டுச் சந்திரனிடம் கேட்கச் சொன்னார்.
சந்திரன் அவனே பொருட்கள் எல்லாம் வாங்கி அனுப்புவதாகவும், அதைக் கொண்டுபோய் சத்யாவிற்கு சீர் வைத்து, வளையல் அடுக்கிவிட்டு வரும்படியும் கூறினான். காமாட்சிக்கு அதுவே முதல் அடி.
தன் வீட்டு விஷயங்கள் அனைத்திலும் அவரின் முடிவு மட்டுமே. மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டது கூட கிடையாது. சந்திரனின் திருமணத்தின் போது கூட, அவனின் உடை, நட்புகள் பற்றிய விஷயங்கள் மட்டுமே சந்திரன் பொறுப்பு. மற்றது அனைத்தும் காமாட்சியின் முடிவுகள் தான்.
முதல் முறையாக காமாட்சியிடம் கலக்கக் கூட இல்லாமல் தேதி முதற்கொண்டு முடிவு செய்து வளைகாப்பு நடத்தி வரச் சொன்னதை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.
சத்யாவின் வளைகாப்பிற்குச் செல்லமால் விட்டுவிடலாமா என்று கூட யோசித்தார்தான். ஆனால் மகன் இதையேக் காரணம் காட்டி சத்யாவை அங்கேயே நிரந்தரமாகத் தனிக் குடித்தனம் வைத்துவிடுவானோ என காமாட்சிக்கு உள்ளூர ஒரு பயம் வந்திருந்தது. அதனால் மூன்றாம் மனிதர் போல வந்து சபையில் நின்றுவிட்டுக் கிளம்பி விட்டார்.
சத்யாவிடம் மட்டுமல்ல அவரின் குடும்பத்தினரிடம் கூட குழந்தையின் நலன் பற்றியும் விசாரிக்கவில்லை. அதற்கு ஈடுக்கட்டுவது போல சந்திரனின் தந்தை எல்லோரிடமும் பேசி, அவரின் மகள்களை விட்டு அடுத்து என்னன்னு பாருங்க என்பது போல அவர்களை வேலை வாங்கி நல்லபடியாக வளைகாப்பு நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.
சத்யாவின் நெருங்கிய சொந்தங்களுக்குக் கூட நடந்தப் பிரச்சினைகள் தெரியாது. கணவரும் அருகில் இல்லாததால், குழந்தைப் பிறப்பு முழுதாக இங்கேயே பார்த்துக் கொள்கிறாள் என நினைத்துக் கொண்டனர்.
நேர்மாறாக சந்திரனின் ஊரில் அக்கம் பக்கம் எல்லாம் லேசாக விஷயம் பரவி இருந்தது. அமுதா, அகிலாவின் கணவர் இருவரும் வெளி மனிதர்களிடம் சொல்லாவிட்டாலும், அவர்கள் வீட்டினரிடம் லேசுபாசாகக் கூறியிருந்தனர். அது கை கால் முளைத்து காமாட்சியிடம் நேரடியாக சிலர் கேட்டனர். அவர்களுக்கு பதில் கூறாமல் வாயை அடைத்தாலும், வதந்தியாகப் பரவியதை காமாட்சியால் தடுக்க இயலவில்லை. அதனால் மட்டுமே வளைகாப்பிற்குச் சென்றிருந்தார்.
இப்போதும் மகன் நேராக குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தது கண்டு எரிச்சல் வந்தது. அதை வார்த்தைகளால் சொல்லாமல்,
“சந்திரா, உன்னைப் பார்த்து வருஷமாகப் போகுது. அம்மா காத்துகிட்டு இருப்பேன்னு இல்லாம, எங்கேயோ போயிட்டு வரியே. என் மேலே உனக்கு அவளோதான் பாசமா?” என்று லேசாகக் கண்கலங்கக் கேட்டார்.
சந்திரனுக்குத் தன் அன்னையின் உள் குத்துப் பேச்சுப் புரிந்தது. ஒன்றும் அறியாதவன் போல் “என்னம்மா செய்ய? என் குழந்தையை பொண்டாட்டி வயித்தில் சுமக்கும்போது கூட நான் பார்க்கலை. நாளைக்கு விவரம் தெரிஞ்சு என் பொண்ணு உனக்கு என் மேலே பாசமே இல்லையான்னு உங்களை மாதிரியேக் கேட்டா என்ன சொல்லுறது? அதான் என் பொண்ணைப் பார்த்திட்டு, நேரா இங்கே தான் வரேன்” என்றான்.
என் மனைவியைப் பார்த்துவிட்டு வந்தேன் என்று கூறியிருந்தால், என்னை விட அவள் முக்கியமா என்று கேட்டிருப்பார். பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தேன் எனவும் காமாட்சி பதில் கூற முடியாமல் நின்று இருந்தார்.
எப்போதும் போல சந்திரனின் வரவிற்காக அவனின் வீட்டினரை எல்லாம் காமாட்சி வரவழைத்திருக்க எல்லோரும் ஆ என்று பார்த்தனர். காமாட்சியின் பேச்சை நிறுத்துவது எல்லாம் யாராலும் முடியாத காரியம். சத்யா கூட பதில் தான் பேசுவாளேத் தவிர, பேச்சை நிறுத்த வைக்க முடியாது.
எல்லோரும் சந்திரனைப் பற்றி என்னவோ நினைத்து இருக்க, அவனின் பணியில் ஏற்படும் அனுபவம் அன்னையைக் கையாளக் கற்றுக் கொடுத்து இருந்தது. காமாட்சி பதில் ஏதும் கூறாமல் சமையல் அறைப் பக்கம் திரும்ப, சந்திரன் பின் பக்கம் உள்ள குளியலறைப் பக்கம் செல்வதைக் கண்டார்.
மீண்டும் தன் மகனிடம் “சந்திரா, மாடியில் உன் ரூமு பெருக்கி சுத்தமா தான் இருக்கு. அங்கே போய் உடம்ப கழுவிட்டு வா” என்றார்.
சந்திரனோ “இருக்கட்டும்மா, இன்னிக்கே திருப்பி என் குழந்தையைப் பார்க்கப் போறேன். அதனால் கீழேயே எல்லாம் பார்த்துக்கறேன்.” எனவும், காமாட்சியின் முகம் இருண்டு விட்டது. சத்யா இங்கே வந்தபோது நடந்ததை எல்லாம் சொல்லிவிட்டாள் என்று நினைத்து,
“இப்படியா ஒரு பொம்பளை இருப்பா? வந்து ஒரு நாள் ஆகலை. அதுக்குள்ளே ஒரு வருஷக் கதையும் ஒப்பிச்சு இருக்கா. இதெல்லாம் நல்லா இருக்கா?” என படபடத்தார்.
நிதானமாகத் தன் அன்னையைப் பார்த்த சந்திரன் “ஒரு வருஷத்தில் என்னம்மா நடந்தது?” எனக் கேட்டான். இப்போது காமாட்சி முழித்தார்.
“அம்மா, இதுவரை என்ன நடந்ததுன்னு நான் இப்போ இல்ல எப்பவும் ரெண்டு பேர் கிட்டேயும் கேட்க மாட்டேன். ஆனால் இனிமேல் என்ன பண்ணப் போறீங்கன்னு சொல்லிடுங்க. அதுக்குத் தகுந்த மாதிரி நானும், சத்யாவும் இருந்துக்கிறோம்” என்றான்.
சந்திரனின் தந்தை தான் “சந்திரா, உன் பொண்டாட்டியை உன்னோடு கூட்டிக்கிட்டுப் போ. உன் அம்மாவின் குணத்திற்கும் மருமகளின் தன்மைக்கும் ஒத்துப் போறது ரொம்பச் சிரமம். உங்களுக்கு நல்ல அம்மாவா இருந்து இருக்கலாம். ஆனால் அவளோட குணத்திற்கு நல்ல மாமியாரா இருக்க முடியாது. சண்டை பெரிசாகி ஒருத்தரை ஒருத்தர் முகம் முறிச்சிக்கிட்டு நிக்க வேண்டாம். இப்போவே அப்படித் தான் இருக்கு. இதை வளர விட வேண்டாம்” என்றார்.
சந்திரன் மீண்டும் காமாட்சியிடம் “உங்க தேவையில்லாத பயம் தான் இதுலே கொண்டு விட்டிருக்கு. இப்போதைக்கு குழந்தைக்கு ஆறு மாசம் ஆகற வரைக்கும் சத்யா அவ அம்மா வீட்டில் இருக்கட்டும். அதுக்குள்ளே நான் குவார்ட்டர்ஸ் அப்ளை பண்ணி என்னோட கூட்டிக்கிட்டுப் போயிடுவேன். உங்களோட பயமும் போயிடும். கொஞ்ச நாள் கழிச்சு, திருப்பி இங்கே கொண்டு விடுவேன். அதுக்குள்ளே நீங்க, சத்யா ரெண்டு பேருமே கொஞ்சம் அனுசரணையா நடந்துக்க முயற்சி செஞ்சா நல்லா இருக்கும். இதைத் தான் சத்யாக்கும் சொல்லப் போறேன்.” என்றான்.
“அப்போ எங்களை விட்டுட்டு, இந்த குடும்பத்துக்குத் தலைமகனா எதுவும் செய்ய மாட்டியா?” எனக் கேட்டார் காமாட்சி.
“செய்வேன். என்னோட கடமையை என்னைக்கும் விட மாட்டேன். சரவணன் தலை எடுத்து வேலைக்குப் போற வரைக்கும் அவனுக்கும் சேர்த்துச் செய்வேன். என்னோட காலம் வரை இந்த குடும்பத்திற்குத் தேவையானதைச் செய்வேன். ஆனால் என் மனைவி, குழந்தைகள் விருப்பத்திற்கும் அவர்களின் வசதிக்கும் ஏற்ப தான் என் வாழ்க்கை இருக்கும். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டேன்” என்றான் சந்திரன்.
இதற்கு காமாட்சி அமைதியாகவே இருக்க, தன் தங்கைகளிடம் திரும்பியவன் “அடுத்த வாரம் குழந்தைக்குத் தொட்டில் போட்டு, பேர் வைக்கிற ஃபங்சன் வச்சுருக்கேன் மா. சத்யா வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள மினி ஹாலில் தான் ஏற்பாடு செய்திருக்கேன். கொஞ்சம் லேட்டா தான் ஃபங்சன். நீங்க யார் யார் வர்றீங்கனு சொன்னா, அதுக்கேத்த மாதிரி பஸ், வேன் ஏற்பாடு செய்யறேன்” என்றான்.
அமுதா, அகிலா இருவரும் “அண்ணா ஏன் இப்படி சொல்றீங்க? எல்லோரும் தான் வருவோம். குழந்தைக்குத் தான் மூணாம் மாசம் ஆரம்பிச்சிடுச்சே. அண்ணியோட குழந்தை இங்கே வந்திட்டா எல்லோரும் சேர்ந்து ஜமாயச்சிடலாம்னா“ என்றார்கள்.
“உங்களுக்கு எல்லாம் எதுக்கும்மா சிரமம்?
“ஏன் அண்ணா? உங்களுக்குச் செய்வதில் என்ன கஷ்டம்? அதோட எங்க மருமகளுக்குச் செய்ய எங்களுக்குக் கசக்குமா?”
“அப்படி நினைச்சிருந்தா, சத்யா வீட்டில் விசேஷம் செஞ்சப்போ ஏன் நம்ம வீட்டிலர்ந்து யாரும் போகலை?” என்று கேட்டான் சந்திரன்.
“அது “ என்று அகிலா ஏதோ சொல்ல வர, காமாட்சி தான் “என் பேத்திக்கு அவங்க வீட்டில் விசேஷம் பண்ணினா நாங்க ஏன் போகணும்?” என்றார்.
“அவங்களுக்கும் என் குழந்தை பேத்தி தானே. அதோட நம்ம தங்கச்சிங்களுக்குப் பிள்ளைங்க பிறந்தப்ப, நம்ம வீட்டில் தொட்டில் போட்டு, விருந்து வச்ச பிறகு தானே மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினோம். அந்த விருந்துக்கு மாப்பிள்ளை வீட்டில் எல்லோரையும் கூப்பிட்டீங்க தானே. அது தானே சத்யா வீட்டிலும் செஞ்சாங்க. நீங்க ஏன் போகலை?”
“எனக்கு அங்கே போகப் பிடிக்கலை” என்று காமாட்சி கூற, “ஆனால் குழந்தை என்னோடது. இந்த வீட்டு வாரிசு தானே. நீங்க தானே கொண்டாடியிருக்க வேண்டும்” என்றான் சந்திரன்.
“உன் பொண்ணு, இந்த வீட்டு வாரிசுன்னு தான் ஆஸ்பத்திரியிலே பார்த்துட்டு வந்தோம். “
“ஓ. சரி. உங்க கடமையை அப்போச் செஞ்சிட்டீங்க. இப்போ நான் என் பொண்ணுக்கு பேர் வைக்கிற ஃபங்சன் வைக்கப் போறேன். அதுக்கும் வந்து கடமையச் செஞ்சிடுங்க. நானும் இனிமேல் உங்களுக்குச் செய்யறத கடமையா செஞ்சிடறேன்.” என்று முடித்தான் சந்திரன்.
மீண்டும் யாரும் எதுவும் பேசவில்லை. எல்லோருக்கும் காமாட்சியின் மீது வருத்தம் தான். கோபம் தான். ஆனால் காமாட்சியைக் கண்டிக்கும் மனம் வரவில்லை. கண்டித்தாலும் அவர் மாறப்போவதில்லை. தங்கள் சகோதரனைக் காயப்படுத்துகிறோமே என்ற வேதனையையும் மாற்ற முடியவில்லை.
அன்றைக்கு இரவே கிளம்புவதாக இருந்தவன், சந்திரனின் பெரியப்பா வருவதாகக் கூறியிருக்கவே வீட்டில் தங்கினான். காமாட்சியோடு பேசாவிட்டாலும் அவர் சமைத்ததைச் சாப்பிட்டான். தங்கைகளின் புகுந்த வீடுகளுக்குச் சென்று விசேஷத்திற்கு முறையாக நேரில் அழைத்து விட்டு வந்தான்.
அக்கம் பக்கத்திலும், அடுத்தச் சுற்று உறவுகளில் மிகவும் நெருங்கியவர்களையும் அழைக்கச் சென்றான். அங்கே காமாட்சி, சத்யா இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதங்கள் பற்றி அலசப்பட, வருத்தப்பட்டாலும் இருவரையும் விட்டுக்கொடுக்காமல் பேசிவிட்டு வந்தான்.
மறுநாள் காலையில் பெரியப்பா வந்து சந்திரனிடம் குழந்தை, சத்யா பற்றியெல்லாம் விசாரித்தார். அப்போதுதான் சந்திரனுமே தன் அன்னை இதுவரை கேட்கவில்லை என்று உணர்ந்தான். மற்றவர்கள் முதலில் கேட்கவில்லை என்றாலும், அவரவரிடம் தனியாகப் பேசும்போது தாய், சேய் நலன் எல்லாம் தெரிந்துக் கொண்டார்கள்.
இப்போதும் காமாட்சி உள்ளூர சிறு நப்பாசையில் சந்திரனின் பெரியப்பாவிடம் “நீங்களே சொல்லுங்க. சந்திரா வந்து ரெண்டு நாள் ஆகலை. அதுக்குள்ளே அந்த சீமை சித்ராங்கி எல்லாக் கதையும் ஒப்பிச்சு, இங்ஙன வரும்போதே தனியாக் கூட்டிட்டு போற முடிவ எடுக்கவச்சிருக்கா. இத எல்லாம் என்னனு கேக்க மாட்டீங்களா?” என்றார்.
சந்திரன் அவன் அன்னையை நேரடியாக முறைக்க, “உன் மருமக எதுவும் பிள்ளைக் கிட்டேச் சொல்லல. நான்தான் இங்கே நடந்ததை ஆறேழு மாசம் முன்னாடியே கடுதாசி எழுதி எங்கூர்கார பையன்கிட்டே கொடுத்தனுப்பினேன். அதுக்கு உன் மவனும் இப்போதைக்கு எதுவும் யார்கிட்டேயும் பேசிக்க வேண்டாம். நான் நேரில் வந்து எல்லாத்தையும் சரி செய்றேன்னு பதில் அனுப்பியிருந்தான். இல்லாட்டா வளைகாப்பு நீ நடத்தின இலட்சணத்துக்கே சத்யா வீட்டில் பஞ்சயாத்து வைக்கிறதா தான் இருந்தாங்க. சந்திரன் பேர் சொல்லித் தான் எல்லாம் தள்ளிப் போட்டுருக்கோம்” என்றார்.
காமாட்சிக்கு இது புது செய்தி. அவரிடம் யாரும் இதுவரை சொல்லவில்லை. பஞ்சாயத்து என்பது சும்மா. நேரடியாக வந்து சண்டை போடும் முடிவில் தான் இருந்தனர். பெரியவர் சொல்லியது போல சந்திரன் தான் தடுத்து இருந்தான் .
தன் செயல்களும் பேச்சுக்களும் சந்திரனை இன்னும் தன்னிடமிருந்து விலக்கி விடும் என்று காமாட்சிக்கேப் புரிகிறது. ஆனால் ஒரு வகையான பயத்தை விடமுடியாமல் இன்னும் சிக்கலாக்கிக் கொள்கிறார். அதற்கு மேல் எதுவும் பேசாத சந்திரன், அன்று மதியமே சென்னை சென்றுவிட, ஊரில் எல்லோரின் வாய்க்கும் காமாட்சி தான் அவலாகினார்.
சந்திரன் சென்னை சென்ற பின் மற்றவர்களோடு பேசி, ஒரு பஸ் ஏற்பாடு செய்து பேர் சூட்டும் விழா அன்று காலையில் புறப்பட ஏற்பாடு செய்தான்.
வந்த இடத்தில் தான் காமாட்சி முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க, மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் நடமாடினர்.
சத்யாவும், அவள் பெற்றோரும் காமாட்சியை வரவேற்கத் தான் செய்தனர். அதை சிறு தலையசைவுடன் கடந்து விட்டார். தொட்டில் போடும் நேரம் சந்திரன் தன் அன்னையை அழைக்க, முகத்தில் எரிச்சல் காட்டினாலும், உள்ளுக்குள் ஆசையுடனே வந்தார்.
பிறந்தவுடன் பார்த்த தன் பேத்தியை தற்போது பார்க்க அவருக்கும் சந்தோஷம் தான். ஓரளவு உடல் தேறி, அங்கும் இங்கும் தலையை ஆட்டியபடி சிரிக்கும் பேத்தியை உச்சி முகர்ந்தார். பின் தானே தொட்டிலிட்டு, ஆட்டியும் விட்டார்.
அதற்கு மேல் யாரும் எதுவும் பேசிக்கொள்ளாமல், விழாவை நல்லபடியாக முடித்து விட்டு ஊர் திரும்பினர். சந்திரன் ஒரு மாதம் லீவு என்றாலும், கடைசி வாரம் வரை தன் மகளோடு இருந்துவிட்டு, பிறகே தங்கள் ஊருக்குச் சென்றான்.
-தொடரும் –
பின் குறிப்பு – அத்தியாயத்தின மற்றொரு பகுதிக்கான லிங்க்
Chandran good character. Ella vishayathaiyum sariya than purinthu vaithu irukan. Srikeerthi name selection nice.
Kamatchi thirunthinaala?
காமாட்சி எல்லாம் எந்த காலத்தில் திருந்துவாங்க. நன்றி நன்றி
ellam nalla tha nadanthu iruku chandru ku iruka porumai elarkum irukuma therila but crt ah nadanthukuran ithula ethala pirinjanga rendu perum
எதனால் பிரிஞ்சாங்கனு விரைவில் தெரியும் சிஸ்டர். மிக்க நன்றி
காமாட்சி😡😡😡😡
உங்க எமோஜி தான் கிளாஸ். நன்றி மா .