அத்தியாயம் – 13
சத்யவதி, சந்திரன் இருவரும் நிகழ் காலத்திற்கு வந்தனர். அவரவரிடத்தில் இருந்து தங்கள் நினைவுகளை மீட்டதில் இருவருக்குமே அன்றைய தூக்கம் தான் கெட்டது. ஏதோ ஏதோ காரணங்கள், பிடிவாதங்கள் தாங்கள் தொலைத்தக் காலத்தைத் திருப்பிக் கொடுக்குமா என்று வேதனையானது.
அதே சமயம் இருவரின் மகளோ அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருந்தாள். ஸ்ரீகீர்த்தியின் எண்ணம் முழுதும் தன் அன்னையின் பெயரை களங்கப்படுத்திய கருணாகரனுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே.
சத்யவதி கருணாகரனைப் பற்றிக் கூறியவற்றை எல்லாம் யோசித்தவளுக்கு, அவரை எதிர்ப்பதோ அல்லது ஏமாற்றுவதோ அத்தனை எளிதல்ல என்று தெரிந்தது.
இதற்கு முன் சத்யவதி அவரிடம் தப்பியதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது அவர்களின் நாடகக் குழு ஓனர் மட்டுமே. ஆனால் தற்போது அவர் உயிரோடு இல்லை. கீர்த்திக்குள் சில திட்டங்கள் தோன்றினாலும், அவளுக்கு கருணாகரன் பக்கத்திலிருந்தும் உதவி தேவைப்பட்டது. அதற்கு யாரைப் பிடிக்கலாம் என்பதே அவள் சிந்தனை.
சத்யவதி பேசிய ஆடியோ வெளியான அடுத்த நாளும் செய்திச் சேனல்களில் இதுவே ஓடிக் கொண்டிருந்தது. தலைப்புச் செய்தியாக இல்லாவிட்டாலும் மக்களுக்கு நினைவூட்டுவது போல அவ்வப்போது ஒளிபரப்பப் பட்டது.
இதுவே சத்யவதிக்கு வெளியே செல்ல இடைஞ்சலாக இருக்க, அவரின் படப்பிடிப்புக் குழுவோ சில நாட்கள் கழித்து சத்யவதி சம்பந்தப்பட்ட காட்சி எடுப்பதாகக் கூறி தவிர்த்தார்கள். அதிலேயே இனி தனக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்து விடும் என சத்யவதிக்குத் தெரிந்துவிட்டது
அதற்குள் கருணாகரன் தயாரிப்பாளர் சங்கம் மூலமும் சத்யவதி பேரில் புகார் கொடுத்திருந்தார். அவர்கள் சத்யவதியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். சங்கம் ஒத்துக் கொள்ளும் வரை சத்யா எந்த படப்பிடிப்பிலும் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
ஆனால் ஸ்ரீகீர்த்தியின் மேல் எந்த புகாரும் கொடுக்கப்படவில்லை. அதற்கு பதில் ஸ்ரீகீர்த்தி நடிக்கும் படத்தின் தயாரிப்பாளரை கருணாகரணைச் சேர்ந்தவர்கள் ஒரு விதமாக மிரட்டினர்.
அதன் விளைவு, அவளின் தயாரிப்பாளர் கீர்த்தியை அழைத்து கருணாகரனுடனான மோதல் போக்கை கைவிடக் கூறினார். இல்லாதபட்சத்தில் இந்த படத்தில் இனியும் தொடர்ந்து நடிப்பது சாத்தியப்படாது என்றார். அம்மா, மகள் இருவரும் அவரவர் சிந்தனையில் இருந்தனர்.
அப்போது மேனேஜர் வந்து வக்கீல் வந்திருப்பதாக கூறினார். இருவரும் வரவேற்பறையில் சென்று அமரும் போதே வக்கீலுக்கும் சேர்த்து காபி வந்தது.
சற்று நேரம் மௌனமாகக் கழிய, வக்கீல் பேச ஆரம்பித்தார்.
“ரெண்டு பேருமே வீட்டில் இருக்கீங்க. ஷூட்டிங் இல்லையா?”
“கருணாகரன் பிரச்சினை முடியும் வரை எங்களுக்கு ஷூட்டிங் இருக்காது” என்றார் சத்யவதி.
“ஓ.“ என்றவர், “அன்னிக்கு நடந்த விஷயத்தை நீங்க மீடியாலே சொல்ல முடியாதா மேடம்?” என சத்யாவிடம் கேட்டார்.
“வாய்ப்பில்லை சர். அன்றைக்கு நடந்தது என் வழியாக யாருக்கும் வெளியே வராது என்று வாக்குக் கொடுத்திருக்கிறேன்” என்றார் சத்யா. வக்கீல் விடுவதாக இல்லை.
“நீங்கள் யாருக்கு வாக்குக் கொடுத்தீர்களோ அவர்களே உயிரோடு இல்லை. இனியும் அதைக் கட்டிக் காக்க வேண்டுமா மேடம்?”
“நான் கொடுத்த வாக்கிற்கு உயிர் இருக்கிறது தானே சர்”
“அதை கருணாகரன் நினைக்கவில்லையே மேடம். காத்திருந்து உங்களைப் பழி தீர்க்கிறார்”
“ஆனால் நான் கருணாகரன் கிடையாதே”
வக்கீல் இதற்கு பதில் சொல்ல முடியாமல் இருக்க, கீரத்தி தற்போது இடையிட்டாள்.
“சர், அம்மா ஸைட் ரூல்ட் அவுட். அதை விட்டுடுங்க. இப்போ கருணாகரன் ஸைட்லர்ந்து தான் உண்மை வெளிலே வரணும். அதுக்கு எனக்கு ஒரு ஐடியா தோணுது.”
“சொல்லுங்க” என வக்கீல் கூற, சத்யா கீர்த்தியைப் பார்த்தார்.
“சர், இப்போ கருணாகரன் பையன் அவரோட டைரக்ஷன்லே நான் ஒரு ஹீரோயின் ரோல் பண்ணனும்னு ரெண்டு, மூணு பார்ட்டிலே பார்த்து கேட்டு இருக்கார். அவரை யூஸ் பண்ணிக்கலாமா?” எனக் கேட்டாள்.
சத்யா “வேண்டாம் கீர்த்தி. கருணாகரன் சம்பந்தப்பட்ட எதிலும் நீ இறங்க வேண்டாம்” என்றாள்.
“அம்மா, உனக்கு அத்தனை பெரிய சப்போர்ட் இருந்தும், கருணாகரன் உன்னை தனக்கு உடன்பட வைக்க முயற்சித்து இருக்கிறார். அப்போ எந்த பின்புலமும் இல்லாமல் வரும் மற்ற பெண்களை என்ன என்ன செய்திருப்பார்? அவரின் உண்மையான முகம் வெளியில் தெரிய வேண்டும்.”
“தெரிந்து மட்டும் என்ன ஆகப் போகிறது கீர்த்தி? இப்போது எனக்கு நியாயம் கிடைக்க முயற்சித்தாலும், அதில் அதிகம் காயப்படப் போவது நானாக மட்டும் தான் இருப்பேன். அதைக் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் அவற்றின் நிழல் உனக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே என்னுடைய கவலை.”
“அதற்காக அவரை சும்மா விடச் சொல்கிறாயா? இல்லை அந்தாள் சொல்வது போல அவரின் படத்தில் நடிக்கச் சொல்லப் போகிறாயா?”
“தேவையில்லை. இனி நடிப்புத் தொழிலில் நீயோ, நானோ இருக்க வேண்டியதில்லை. நடித்தால் தானே அவருக்கு சலாம் போட வேண்டும். இதை விட்டு விலகிவிட்டால் அவரால் நம்மை எப்படிக் கட்டுபடுத்த முடியும்?”
அப்போது “இதைப் பதினைந்து வருடங்களுக்கு முன்னே செய்திருக்கலாமே சத்யா?:” என்றபடி வந்தார் சந்திரன்.
“வாங்க மிஸ்டர் சந்திரன்” என வக்கீல் வரவேற்க, சத்யா மௌனமாக எழுந்து நின்றாள்.
சந்திரன் வரவை சத்யா எதிர்பார்க்கவில்லை. பிரிவிற்கு பின் இருவரும் நேருக்கு நேராக சந்திப்பது இப்போது தான். இதற்கு முன் மற்றவர் அறியாமல் மறைவில் இருந்து பார்த்திருக்கிறார்கள்.
வக்கீல் குணசேகரன் சந்திரனுக்கும் தெரிந்தவர் தான். சத்யா விவாகரத்து முடிவு எடுக்கும் போது பாதுகாப்பான வக்கீலாக தன் நண்பர்கள் மூலம் அறிமுகப்படுத்திக் கொடுத்தார். பிரிவிற்கு பின் அவரையே தன்னுடைய லீகல் அட்வைஸராகவும் மாற்றிக்கொண்டாள் சத்யா.
அவ்வப்போது நண்பர்கள் கூடும்போது இருவரும் சந்தித்து இருக்கிறார்கள். பொதுவாக மனைவி, குழந்தைப் பற்றி சந்திரன் விசாரிப்பார். மற்ற எதுவும் கேட்டுக் கொள்ள மாட்டார். அதனால் வக்கீலுக்கு சந்திரன் மீது நல்ல அபிப்ராயமே.
சந்திரன் வந்ததும் வக்கீலுக்குமே சற்று ஆசவாசம் வந்தது. பதினைந்து வருடங்களாக சத்யாவிற்கு வேலை செய்திருக்கிறார். மிகவும் தைரியமான பெண்மணி. அதே சமயம் அலட்டல் இல்லாதவர். கீர்த்தியின் வளரப்பிலும், தன்னுடைய வளர்ச்சியிலும் சரியாகத் திட்டமிட்டு நிமிர்ந்து நின்றவர்.
இன்னும் சொல்லப் போனால் கருணாகரனோடு நடந்த நேரடிப் பிரச்சினையின் போது கூட சத்யா கலங்கியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் தற்போது சத்யாவின் கலக்கம் நன்றாகவேத் தெரிந்தது. சத்யா, சந்திரன் பிரிவின் காரணம் அவருக்குத் தெரியுமே. அன்றைக்கு எதைக் கூறி, சந்திரன் வீட்டினர் பிரிவினை வலியுறுத்தினார்களோ அது தான் இன்றைக்கு நடக்கிறது.
சந்திரனின் கேள்விக்கு சத்யா மௌனமாக நிற்க, தன் தந்தையின் வரவைக் கண்டு கீர்த்திக்குத் தான் மிகவும் சந்தோஷம்.
“பா” என்றபடி சந்திரனின் தோளில் சாய்ந்தவள், அவரைத் தன்னருகில் அமர வைத்துக் கொண்டாள். இவர்கள் எல்லோரின் கவனமும் சந்திரனின் மேல் இருக்க, சத்யாவின் கண்ணசைவில் வேலையாள் சந்திரனுக்கும் காபி கொண்டு வந்தார்.
சந்திரன் தயங்கியபடி தன் மனைவியின் முகம் பார்க்க, சத்யாவின் பார்வை கெஞ்சியது. சிறு பெருமூச்சுடன் எடுத்துக் கொண்டார் சந்திரன்.
பின் “சொல்லு சத்யா. கருணாகரன் போன்றவர்கள் அதிகம் இருக்கும் துறை என்று அன்றைக்கே சொன்னேன் தானே. அப்போது எங்கும் கெட்டவர்கள் நிறைந்து தான் இருக்கிறார்கள். அதற்காக உலகத்தில் வாழாமல் இருக்க முடியுமா என்று எல்லாம் என்னிடம் கேட்டாயே.? இன்றைக்கு அவனைப் போன்றவனுக்குப் பயந்து உனக்கு விருப்பமான ஒன்றை விட்டுத் தரப் போகிறாயா?” எனக் கேட்டார் சந்திரன்.
கீர்த்தி “எக்ஸாக்ட்லி பா. அதைத் தான் நானும் கேக்கறேன். அவங்களும் மீடியாலே வந்து உண்மையைச் சொல்ல மாட்டாங்க. நாமளும் எந்த முயற்சியும் எடுக்கக் கூடாதுனு சொல்றாங்க” என்றாள்.
கீர்த்தி, சந்திரன் இருவருக்கும் இடையிலான அந்தப் பிணைப்பையேப் பார்த்து இருந்தார் சத்யா.
பின் எல்லோருக்கும் பொதுவாக “அன்றைக்கு எனக்கும் ஒரு சில பிடிவாதம். அதே சமயம் என்னைச் சுற்றி நல்லவர்கள் அதிகம் இருந்தார்கள். அந்த தைரியம் தான் அப்படிப் பேச வைத்தது. ஆனால் இன்றைக்கு சிறு பிஞ்சுகளைக் கூட விட்டு வைக்காத அளவில் நாகரீகம் முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது. இதில் என்னுடைய பாதுகாப்பும் முக்கியமாக கீர்த்தியின் எதிர்காலமும் எனக்கு முக்கியம். அதற்காகத் தான் இப்படி ஒரு முடிவை யோசித்தேன்” என்றார் சத்யா.
“கீர்த்தியின் எதிர்காலம் முக்கியம் தான். உன் மேல் விழுந்த பழி நீங்காவிட்டால் அந்த எதிர்காலமும் கேள்விக்குறி தானே” இது சந்திரனின் வாதம்.
சத்யா இதற்கு என்ன பதில் கூறுவது என்று திகைத்து நின்றார்.
கீர்த்தியோ “அப்பா, என் எதிர்காலம் இருக்கட்டும். ஆனால் அம்மாவின் மேல் சுமத்திய பழி நீங்க வேண்டும். அதற்கு அந்த கருணாகரன் பக்கத்தில் இருக்கும் ஒருவர் தான் சரிபட்டு வரும். அதைத் தான் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.
“இது வேண்டாம்னு நானும் ஏற்கனவே சொன்னேன் தானே கீர்த்திமா. உன்னுடைய கருத்துக்கு எதிர்ப்பு என்ற அளவில் தான் இந்த விஷயம் மீடியா பேசிக் கொண்டிருக்கிறது. நீ நேரடியாக இறங்கினால் உன்னுடைய கேரக்டர் பற்றி விவாதம் ஆரம்பித்து விடும். அதனால் வேறு வழி தான் பார்க்க வேண்டும்” என்றார் சந்திரான்.
“அப்போ என்ன தான் செய்யறது?”
“தனியாக உன்னையோ, அம்மாவையோ மிரட்டி இருந்தால், கருணாகரணை பதிலுக்கு மிரட்டி விரட்டியிருப்பேன். அவன் உஷாரா மீடியாவை உள்ளேக் கொண்டு வந்து விட்டான். இனிமேல் அவனை என்ன செய்தாலும் மீடியாவிற்கு பதில் சொல்லியாக வேண்டும். அதனால் சட்டபடி நடவடிக்கை எடுக்க ஏதும் iவழி இருக்கா?” என கீர்த்தியிடம் ஆரம்பித்து, வக்கீலிடம் கேட்டார் சந்திரன்.
வக்கீலோ “எனக்குத் தெரிந்த ஒரு லாயர் இருக்கிறார். அவர் பெயர் பிரபஞ்சன். சினிமா சம்பந்தபட்ட நிறைய வழக்குகள் எடுத்து நடத்தி இருக்கிறார். அதில் உள்ள சட்ட நுணுக்கங்கள் அனைத்தும் அவருக்கு அத்துபடி. அதோடு சைபர் க்ரைம் வழக்குகளும் வாதாடி வெற்றி பெற்றிருக்கிறார். அவரிடம் ஒருமுறை கன்ஸல்ட் செய்து வரலாமே” என்றார்.
சத்யா, சந்திரன் இருவருக்கும் இது நல்ல யோசனையாகத் தான் தோன்றியது. கீர்த்திக்கோ தந்திரமாக மட்டுமே கருணாகரனை ஜெயிக்க முடியும் என்றே தோன்றியது.
“சர், நீங்க இன்னைக்கே இவங்க ரெண்டு பேர் கூடவும் போய் அவரை அறிமுகப்படுத்தி, கேஸ் கொடுக்கலாமான்னு கேட்டுட்டு வாங்க. அவர் சொல்றதை வச்சு நாளைக்கு என்ன பண்ணலாம்னு முடிவெடுப்போம்” என்றார் சந்திரன்.
வக்கீல் சம்மதிக்கவும், சந்திரன் புறப்பட கீர்த்தி “அப்பா, நீங்க இங்கேயே இருங்களேன். எங்களுக்கும் சப்போர்ட்டா இருக்கும்” என்றாள்.
“நான் எங்கிருந்தாலும் உங்களுக்கு சப்போர்ட்டா தான் இருப்பேன். ஆனால் மீடியா கவனம் பூரா உங்க ரெண்டு பேர் நடவடிக்கைகள் மேலே தான் இருக்கு. நான் தங்கினா வேறே மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க. அதனால் நான் எப்போதும் போல் வெளியில் தங்கிக்கறேன். இன்னைக்கு என்னனு பேசிட்டு, நாளைக்கு முடிஞ்சா வக்கீல் ஆபீஸ்லே பேசலாம். தினமும் இங்கே வந்து மீடியா கவனைத்தை கவர வேண்டாம்” என்றார் சந்திரன்.
சத்யாவிற்கு லேசாக அழுகை வரும் போலிருந்தது. இருந்தாலும் தன்னைச் சமாளித்து “எப்படி இருக்கீங்க சந்துரு?” என்றார்.
நீண்ட நாட்கள் கழித்துக் கேட்ட சந்துரு என்ற அழைப்பு சந்திரனையும் ஏதோ செய்ய, “ம்” என்று மட்டும் தலையசைத்து விட்டுச் சென்று விட்டார்.
அன்றே சத்யாவும், கீர்த்தியும் குணசேகரனோடு அந்த வக்கீல் பிரபஞ்சனை சந்திக்கச் சென்றனர். இவர்களோடு சென்றாலும் கீர்த்தி தன் மொபைலில் கருணாகரனின் மகன் பற்றிய விவரங்களைத் தேடினாள்.
கருணாகரன் மகன் அத்வைத் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே எடுத்திருக்க, அனைத்தும் சுமார் ரக வெற்றிப் படங்கள். கருணாகரனின் மகன் என்ற மிகப்பெரிய முகவரி இருந்தும், அந்த அளவில் தான் படம் இருந்தது. அப்போதைய உச்சத்தில் இருக்கும் நடிக, நடிகையர்கள் தான் நடித்து இருந்தகர்கள். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களும் பிரபலங்கள் தான். ஆனால் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை. கமர்ஷியல் வெற்றி இல்லையேத் தவிர, மோசம் என்ற வகையில்லை தான்.
அத்வைத் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், தன் மார்க்கெட்டும் சரியுமே என்பதால் அந்த விவரங்களையும் பார்த்து வைத்தாள். அதற்குள் ஆமாம் இருக்கிற பிரச்சினையில் இனி படமே நடிக்க முடியுமா தெரியலை. இதில் இந்த கவலை வேறா என்றும் அவள் மனசாட்சியே கேட்டது.
கீர்த்திக்கு சத்யா ஏற்பாடு செய்திருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலம் தான். என்றாலும் அவளின் நட்பு, சக கலைஞர்களோடான பழக்கங்களை தடை செய்தது இல்லை. அந்த வகையில் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் ஒளிப்பதிவாளர் நல்ல நண்பரே. அவரின் மூலம் அத்வைத்திடம் பேச முடிவு செய்தாள் கீர்த்தி. இந்த வேலை எல்லாம் வக்கீல் பிரபஞ்சன் அலுவலகத்தில் வைத்துத் தான் கீர்த்தி செய்துக் கொண்டிருந்தாள்.
இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் சரியாகவேத் தான் வந்திருந்தனர். இருந்தாலும் இவர்களுக்கு முன் சென்ற நபரோடு சந்திப்பு நீண்டு கொண்டே இருந்ததில், கீர்த்தியும், மற்றவர்களும் காத்திருக்க வேண்டியிருந்தது.
அந்த அலுவலகத்தின் உதவியாளர் வந்து விவரம் கூறியதோடு இவர்களுக்கு டீ, காபி இவற்றில் வேண்டியதைக் கேட்டு கொடுத்தார். கீர்த்தியோ அந்த பானத்தைக் குடிப்பதை விட்டு விட்டு போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். இதை எல்லாம் அலுவலக காமிரா மூலம் பார்த்துக் கொண்டிருந்தான் வக்கீல் பிரபஞ்சன்.
-தொடரும் –
என்ன நீங்க, நான் சத்யா சந்திரன் மீட்டிங் பெரிய சீன் எதிர்பார்த்தேன். இப்படி சிம்பிளா முடிச்சிட்டீங்க? ‘எப்படி இருக்கீங்க சந்துரு’வோட,
பிரபஞ்சன்தான் ஹீரோவா? என்ட்ரீ நல்லா இருக்கு.nice epi
பிரபஞ்சன் தான் கீர்த்தியோட ஹீரோவா?
Irunthalum last la sathya chanru vum yennpirinji irukanga nu therilaye sollalaye just rendu perum thaniya irukanga etho oru situation nala aana manasu rendu perkum onna tha iruku athe purithal iruku. Oru prachanai vanthathum udane support ku odi vanthutare wife and ponnukaga athane appa solrathu. Papom keerthi edykura mudovu crt ah irukumanu
Nice update 👍👍👍👍
Sathya,chandran meet pannitanga after long gap.
Prabanjan ,ivangalai indha problem la irunthu save pannuvaata?
Waiting.
சத்தியாவும் சந்திரனும் பாத்துக்கிட்டத புஷ்ன்னு முடிச்சிட்டிங்க பிரபஞ்சன் கீர்த்திக்கு ஹீரோவா வருவானா இல்ல வக்கிலாவே இருப்பானா
Way of story going good
Interesting