Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – 15

மெய்யெனக் கொள்வாய் – 15

அத்தியாயம் – 15

கீர்த்தி தான் சென்று வந்த விஷயத்தைப் பற்றி தன் அன்னையிடம் எதுவும் கூறவில்லை. சத்யாவும் யோசனையிலேயே இருந்தார்.

குணசேகரன் பிரபஞ்சன் கூறிய பாயிண்ட்ஸ் எல்லாமே சத்யாவிற்கு சாதகமாகவே இருக்கும் என்று தைரியம் கொடுத்து இருந்தார். அதையொட்டி மறுநாள் பிரபஞ்சனிடம் எதைச் சொல்லுவது என்று சத்யா யோசிக்க ஆரம்பித்தார்.

பிரபஞ்சனிடம் சொல்லும் முன் சந்துருவிடம் சொல்ல வேண்டியதுதான் முறை என யோசித்தாள். இதுவரை யாரிடமுமே சத்யா கூறியிருக்கவில்லை. குணசேகரன் , கீர்த்திக்கும் கூட சந்தர்ப்பங்களை மட்டுமே தான் கூறியிருந்தாள்.

கருணாகரன் கேட்டதும் அதற்கு தன்னுடைய பதில் என்ன என்ற உரையாடலை மட்டுமே இருவரிடமும் கூறியிருந்தாள். ஆனால் அன்றைக்கு நடந்த விஷயங்களைச் சந்திரனிடம் இனியும் மறைப்பது தவறு எனத் தோன்றியது. இந்த யோசனையில் கீர்த்தியின் செயல்களை சத்யா கவனிக்கவில்லை.

பிரபஞ்சனைப் பார்த்து விட்டு வந்த பின் அதைப் பற்றி சந்திரனோடு பேச வேண்டும் என்று சத்யா நினைத்தாலும் தயக்கம் தடை போட்டது. இருவரின் பிரிவிற்கு பின் எந்த நேரத்திலும் சந்திரனைத் தொடர்பு கொண்டது இல்லை. சத்யாவின் பெற்றோர் மறைவிற்கு கூட அவள் அவனுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் சந்திரன் வந்திருந்தான். அப்போதும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

தன் பெற்றோர் மறைவிற்கு பின் சத்யா பாதுகாப்பான இடத்திற்கு தன் வீட்டை மாற்றிக் கொண்டாள். அப்போதும் சந்திரனுக்கு வக்கீல் மூலமே தகவல் கொடுத்து இருந்தாள். கீர்த்தியின் பொறுப்பு சத்யாவினது எனும் போது சந்திரனுக்குத் தெரியப்படுத்துவதில் தெளிவாகவே இருந்தாள்.

ஆனால் நேரடியாகப் பேசிக் கொண்டது இல்லை.  அவசர கால உதவிக்கு என கீர்த்தியின் விவரங்களில் சந்திரன் தொடர்பு எண்ணும் கொடுத்து இருந்தாள். அவனின் சம்மதத்தோடு தான். எந்த இடத்திலும் கீர்த்தியின் பொறுப்புகளில் இருந்து சந்திரனை சத்யா விலக்கியது இல்லை.

சந்திரனின் தொலைபேசி எண் அவளிடத்தில் போனிலும், நினைவுகளிலும் சேமிப்பாகவே இருந்தது.

சிறிது நேரம் தயங்கிவிட்டு, ஒரு பெருமூச்சுடன் சந்திரனுக்கு அழைக்கப் போனாள். அப்போது அவளின் எண்ணிற்கு அழைப்பு வரவே, யார் எனப் பார்த்தவளுக்கு கண்களில் கண்ணீர் அருவியாகக் கொட்டியது. தோன்றாத் துணை என்பது இதுதானோ என்று நினைத்தாள்.

ஒரு முறை முழுதாக மணி அடித்து நின்றது. இரண்டாம் முறையும் அடிக்கவும் சட்டென்று எடுத்தாள் சத்யா.

“ஹலோ” என கூற, சிறிது மௌனத்திற்கு பின் “என்னாச்சு வதி?” எனக் கேட்டான்.

அந்த குரலே சந்திரன் மனதில் சத்யா இன்னும் வதியாகத் தான் இருக்கிறாள் என்று உணர்ந்து கொண்டாள்.

“நானே பேசணும்னு நினைச்சேன்.” என்றாள்.

“என்ன விஷயம் சத்யா ?”

வதி சத்யாவாக மாறினாலும் குரலில் மாறுபாடு இல்லை. தயக்கம் இன்னும் மிச்சமிருந்தாலும், சொல்லித்தான் ஆக வேண்டும். இதை விட்டால் இனி ஒரு வாய்ப்புக் கிடைப்பது அரிது.

“சந்துரு” என்று ஆரம்பித்தவள், தொண்டையை சரி செய்தாள். பின் “குணசேகரன் சர் சொன்ன லாயர் கிட்டே போய் பேசிட்டு வந்தோம். அவர் கேஸ் கொடுக்கலாம்னு சொல்றார்” என்றாள். பிரபஞ்சன் கூறிய அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

மாலையே வக்கீல் குணசேகரனிடம் இதை எல்லாம் சந்திரன் பேசியிருந்தான். இருந்தாலும் சத்யா கூறும்போது அப்போதுதான் கேட்பது போல அமைதியாகவே இருந்தான்.

சத்யா முடிக்கவும் “சரி. நீ என்ன முடிவு பண்ணியிருக்க?” என்றான் சந்திரன்.

“எனக்கு லீகலா போறது தான் சரின்னு தோணுது.”

“சரிதான்.” என்றவன் “நான் எதுவும் ஹெல்ப் பண்ணலாமா?” என்று கேட்டான்.

சந்திரன் கேள்வியில் லேசாக மனம் வருந்தினாலும், இதை கேட்க காரணமும் தான் தானே என்று நினைத்தாள் சத்யா. பிரிவின் போது பல வார்த்தைகளை இவள் தான் கொட்டியிருந்தாள். மாமியாரால் தான் என்றாலும், அதில் அதிகம் காயப்பட்டது சந்திரன் தான்.

சந்திரன் ஃபோன் தொடர்பில் இருப்பது நினைவு வர “நான் லாயர் கிட்டே நாளைக்கு என்ன நடந்ததுன்னு சொல்ல வேண்டியிருக்கும். அதுக்கு முன்னாடி நீங்க அதைத் தெரிஞ்சிக்கணும்” என்றாள்.

சந்திரன் ஒரு நிமிடம் கண்களை மூடித் திறந்தான். பின் “இதற்கு முன் எந்த விஷயமும் நீ என்னிடம் சொல்லவில்லையே. இது மட்டும் ஏன் ?” என்றான்.

“எனக்கு என்ன பிரச்சினை என்று நீங்களும் என்னைக் கேட்கவில்லையே”

சத்யாவின் பதிலில் திகைத்தான். உண்மைதானே. அவனின் அம்மா சத்யா வீட்டில் பிரச்சினை செய்ததை பெரியப்பாவின் மூலம் அறிந்தும் அதைப் பற்றி சத்யாவிடம் கேட்கவில்லை. சத்யாவின் நிம்மதிக்கு வழி செய்தான் தான். ஆனால் அவனிடம் சத்யா மனம் விட்டுப் பேச வழி செய்யவில்லையே என்று நினைத்தான்.

இப்போதும் அவளுக்கு கருணாகரனால் பிரச்சனை என்றதும் ஓடி வந்தான். ஆலோசனை சொன்னான். ஆனால் அவளைத் தோள் சாய்த்துக் கொள்ளத் தோன்றவில்லையே.

இதை எல்லாம் இப்போது யோசித்துப் பயனில்லை என முடிவு செய்தவன்,  “நாளைக்கு நானும் லாயர் ஆபீஸ் வர்றேன். அங்கேயே பேசிக்கலாம்” என்றான்.

சத்யாக்கு கோபம் வந்தது. “உங்க கிட்டே தனியா சொல்லணும்னு தானே இப்போ பேசறேன்னு சொன்னேன்” என்றாள்.

“என்கிட்ட இப்போ போனில் சொல்றதும், நாளைக்கு லாயர் ஆபீஸ்லே பேசறதும் ஒண்ணு தான்.” என்றான் சந்திரன்.

“அது எப்படி ஒண்ணாகும்? அங்கே நடந்ததை நியூஸ் வாசிக்கிற மாதிரி தான் சொல்ல முடியும். உங்க கிட்டே மட்டும் தான் என்னோட உணர்வுகளைக் காமிக்க முடியும்.” என்றாள்.

“ஃபோன்லே உன்னோட உணர்வுகள் புரிஞ்சாலும் என்னாலே என்ன பண்ண முடியும்? தோள் சேர்த்து ஆறுதல் சொல்ல முடியுமா? இல்லை கண்ணைத் துடைக்கத் தான் முடியுமா? எப்போவோ கேட்டுருக்க வேண்டிய ஆறுதல் இப்போ கேக்கறதில் எந்த உபயோகமும் இல்லை. இப்போ எதுவும் எனக்குத் தெரிய வேண்டாம். நாளைக்கு அங்கேயே பேசிக்கலாம். போய் படுத்துத் தூங்கு.” என்றான்.

சத்யாவிற்கு கோபம் வந்தாலும், சந்திரன் சொல்வது போல இப்போது பேசுவதால் என்ன கிடைக்கப் போகிறது என்று உணர்ந்தாள். சரி என்று கூறிவிட்டு ஃபோன் கட் செய்யப் போனாள்.

சந்திரன் “ஒரு நிமிஷம்” என, சத்யா லைனில் இருந்தாள்.

“நாளைக்கு அங்கே பிரபஞ்சன் சர் பார்க்க கீர்த்தி வரவேண்டாம். குணசேகரணும் வேறே வேலை இருக்குன்னு சொன்னார். நான் முன்னாடி போயிடறேன்.” என்றான்.

“கீர்த்தி ஏன் வேண்டாம்?” என சத்யா வினவினாள்.

“சில விஷயங்கள் நம்மளோட மட்டுமே இருக்கட்டும். லாயர் மேலே நம்பிக்கை இருக்கு. அதோட வேறே வழியும் கிடையாது.” என்றான்.

இவர்கள் இருவருக்குள்ளாக மட்டும் இருக்கட்டும்னு சந்திரன் கூறியதில் சத்யாவிற்கு இதமாக இருந்தது. சரியென சம்மதித்து ஃபோன் வைத்தாள்.

இரண்டு நாள் முன் நடந்தவைகளை எண்ணி தூக்கம் தொலைத்தவர்கள், இன்று நிம்மதியாகத் தூங்கினர்.

சத்யா மறுநாள் காலையில் தேவையான சான்றுகளை எடுத்துக் கொண்டு புறப்படும் நேரம் கீர்த்தியிடம் கூறினார்.

“மா, குணசேகரன் சர் கூட வரலை. நான் வரேனே” என்றாள் கீர்த்தி.

“வேண்டாம் கீர்த்தி. அப்பா அங்கே முன்னாடி வந்திடறேன்னு சொல்லிட்டாங்க. நீ ரிலாக்ஸ்சா இரு.” என்றார் சத்யா.

தந்தை வருவதை அறிந்த பின் கீர்த்தி சத்யாவைத் தனியே அனுப்பி வைத்து விட்டாள்.

சத்யா பிரபஞ்சன் அலுவலகம் சென்ற போது சந்திரன் வரவேற்பறையில் காத்து இருந்தார். பிரபஞ்சன் உதவியாளர் சத்யாவைப் பார்த்ததும் இன்றைக்கு உடனே அனுப்பி வைத்தார்.

சத்யாவோடு வரும் மற்றொரு நபரை யார் என்பது போலப் பார்த்தாலும், இருவரையும்  அமரும்படி கூறினான் பிரபஞ்சன்.

பின் “சொல்லுங்க மேடம். உங்களுக்கு சட்டப்படி செல்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை தானே. அல்லது வேறு முடிவு எடுத்து இருக்கீங்களா?” எனக் கேட்டான்.

“இல்லை சர். சட்டப்படியே சந்திக்கிறேன்.” என்றவள் “இவர் என் கணவர் சந்திரன்.” என அறிமுகப்படுத்தினார்.

பிரபஞ்சன் சிறு யோசனையோடு சந்திரனைப் பார்க்க “நைஸ் டூ மீட் யு லாயர் சர். உங்கள் யோசனை புரிகிறது. சில வருஷங்களுக்கு முன் நாங்க ரெண்டு பேரும் சட்டப்படி பிரிஞ்சிட்டோம். அது சுற்றியுள்ள உறவுகளுக்காக எடுத்து முடிவு. எங்களைப் பொருத்தவரை மனதால் ஒன்றாகத் தான் வாழுகிறோம். கேட்பதற்கு சினிமா கதை மாதிரி இருக்கலாம். ஆனால் உண்மைக் கதைகள் தான் சினிமாக்களாக எடுக்கப்படுகிறது” என்றான் சந்திரன்.

அதற்கு மேல் அவர்களின் பெர்சனல் பற்றி பேசாமல் “க்ரேட்” என்று மட்டும் கூறினான் பிரபஞ்சன்.

“அந்த நோட்டீஸ் கொடுங்க” எனக் கேட்டு வாங்கிப் படித்தான்.

பின் “மேடம் இந்த நோட்டீஸ்லே உங்கள் மீது எந்த தயாரிப்பாளரும் பணம் சம்பந்தமாக எந்த கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டும் கூறவில்லை. அதே போல படம் நடித்துக் கொடுப்பதில் தாமதம். குறித்த நேரத்தில் வருவதில்லை போன்ற புகர்களும் இல்லை. உங்கள் பக்கமிருந்து பாலியல் துன்புறுத்தல் குற்றம் செய்ததாகவும் யாரும் புகார் கொடுக்கவில்லை. கருணாகரன் ஒரு ஆடியோ வெளியீட்டு இருக்கிறார். அதை விளக்க வேண்டும் என்பது மட்டுமே நோட்டீஸ். அதற்கு நடிக்கத் தடை போட வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலக்கெடு வேண்டுமானால் சொல்லலாம். இதற்கு பதில் நோட்டீஸ் முதலில் தயார் செய்யலாம்” என்றான் பிரபஞ்சன்.

சொன்னபடி அரைமணி நேரத்தில் நோட்டீஸ் டிராப்ட் சத்யா கையில் கொடுத்தான்.

சத்யாவின் நடிகர் சங்க உறுப்பினர் எண் மற்றும் தனி மனித அடையாள எண், சங்க நோட்டீஸ் எண் முதற்கொண்டு அனைத்தையும் விவரமாக வரிசைப்படுத்தினான். பின் தனது கட்சிக்காரர் மீது மேலே குறிப்பிட்ட எந்த புகாரும் இல்லாத நிலையில், அவரின் நடிப்பைத் தடை செய்ய சட்டத்தில் இடமில்லை. எனவே அந்த தடையை உடனே நீக்குமாறு கேட்டுக் கொண்டு, தவறும் பட்சத்தில் நீதி மன்றம் சென்று தடையை நீக்கும் உத்தரவை பெற்று வருவோம் என்றும் எழுதி இருந்தது.

சத்யாவிற்கு திருப்தியாக இருக்க, பிரபஞ்சன் சந்திரனிடமும் படித்துப் பார்க்கக் கூறினான். அதே சமயம் தன் மெயில் வழியாக குணசேகரனுக்கும் காப்பி அனுப்பி அவரிடமும் ஒப்புதல் வாங்கிக் கொண்டான்.

பிரபஞ்சனின் அலுவலகத்திற்கு சத்யா வந்த ஒரு மணி நேரத்தில் ப்ரொடியூசர் கவுன்சில் மற்றும் நடிகர் சங்கம் இருவருக்கும் மெயில் மற்றும் ரிஜிஸ்டர் போஸ்ட் இரண்டையும் அனுப்பி வைத்து விட்டான்.

பின் நிதானமாக சத்யாவிடம் “இப்போ கருணாகரன் வெளியிட்ட ஆடியோ பற்றி உங்களுக்கு என்ன தெரியுமோ அதைச் சொல்லுங்க” என்றான்.

சத்யா சந்திரனை ஒரு பார்வையிட்டு விட்டு ஆரம்பிக்க, பிரபஞ்சன் “வெயிட்” என்றான்.

என்ன என்பது போல் சத்யா கேட்க “இந்த கருணாகரன் விவாகரம் உங்கள் பிரிவிற்கு பின் நடந்தாதா? அல்லது அது தான் உங்கள் பிரிவிற்கு காரணமா? இதை முதலில் கூறிவிடுங்கள். அப்படியென்றால் உங்களுக்குள் நடந்த விவாதங்களும் என்னிடம் சொல்ல வேண்டியிருக்கும்.” என்றான்.

“இல்லை சர். எங்கள் பிரிவு கீர்த்தியின் பத்து வயதில் நடந்தது. கருணாகரன் என்னிடம் பேசியது கீர்த்தியின் பதினெட்டாவது வயதில். அதனால் இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றாள் சத்யா .

அந்த சமயத்தில் தான் கீர்த்தி சந்திரனோடு வந்து ஒரு மாத காலம் தங்கியது சந்திரனுக்கு நினைவில் ஓடியது. சத்யாவைப் பார்க்க, அவள் தலை குனிந்தாள்.

பிரபஞ்சன் கவனித்தாலும் கண்டுகொள்ளவில்லை.

சத்யா, சந்திரன், பிரபஞ்சன் மூவரும் அலுவலகத்தில் இருந்த அதே நேரத்தில் கீர்த்தி முதல் நாள் அத்வைத்தைச் சந்தித்த அதே ஹோட்டலுக்கு வந்திருந்தாள்.

இன்றைக்கு முகம் மறைக்கும் அலங்காரம் எதுவும் இல்லை. காரில் இருந்து இறங்கி ரெஸ்டாரன்ட் உள்ளே செல்லும் போது சிலர் கவனிப்பதைக் கண்டு கொண்டாள்.

சற்று நேரத்தில் அத்வைத்தும் நேராக கீர்த்தி அமர்ந்து இருந்த இடத்திற்கு சென்றான். இருவரும் சற்று நேரம் சிரித்துப் பேசி, கூல் டிரிங்க்ஸ் வரவழைத்துக் குடித்து விட்டுப் புறப்பட்டனர்.

அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில் வரும்போது சில பத்திரிகையாளராகள் சூழ்ந்து கேள்விகள் கேட்டனர்.

“உங்கள் இரண்டு பேரின் சந்திப்பின் நோக்கம் தெரிந்து கொள்ளலாமா?” எனக் கேட்க,

கீர்த்தி “பெர்சனல்” என்றாள்.

“அப்போ கருணாகரன் சர் குற்றச்சாட்டு எல்லாம் உண்மையா மேடம். அந்த ஆடியோவில் உங்கள் அம்மா சொன்ன மாதிரி எல்லாவிதமான அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கும் நீங்களும் ரெடியா?” என ஒரு நிருபர் நக்கலுடன் கேட்டார்.

கீர்த்தியின் கண்களில் வழிந்த கோபத்தை அவளின் கூலிங் கிளாஸ் மறைத்து இருக்க, புன்னகையை ஒட்ட வைத்துக் கொண்டு பதில் கூறினாள்.

“சர், ரெண்டு பேருக்குள்ளே பெர்சனல் என்பது அட்ஜஸ்ட்மெண்ட் தாண்டி எத்தனையோ விஷயங்களில் இருக்கு. அதை எல்லாம் பொது வெளியில் சொல்லணும்னு அவசியம் இல்லை. “ என்றாள்.

“அது எப்படி மேடம்? இவங்க அப்பா அப்படி பேசின பிறகு நீங்க ரெண்டு பேரும் சந்திக்கறீங்க என்றால் என்னவென்று தெரியத்தானே வேண்டும். பெர்சனல்னு அந்த ஆடியோ வெளியிடாமல் இருந்தால் நாங்கள் கேட்டிருக்கவே மாட்டோம்” என மீண்டும் கேட்டார் அந்த நிருபர்.

அப்போத அத்வைத் “ஸ்ரீகீர்த்தி மேடம் என் அப்பாவைச் சந்தித்தால் தான் சர் நீங்க கேட்க முடியும். என்னோட கேரியர் வளர்ச்சிக்கு மேடம் ஒரு படம் என்னோடு நடித்தால் நல்லா இருக்குமேனு கேட்டேன். அவங்க அதுக்கு நோ சொல்லிட்டாங்க. ஆனால் ஒருத்தருக்கு நோ சொல்றதை பொது வெளியில் சொல்ல விரும்பாததால் பெர்சனல்னு சொன்னாங்க.” என்றான்.

அதைக் கேட்டு மற்றும் ஒரு நிருபர் “ஏன் நோ சொன்னீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா? அவங்க அப்பா அப்படிப் பேசியதில் நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்களா?” என்றார்.

“இதோ இதுக்காகத் தான் பெர்சனல் சொன்னேன். அத்வைத் சர், நான் ரெண்டு பேரும் இதைப் பற்றி எதுவும் பேசலை. ஒரு படத்தில் என்னை நடிக்க வைக்கணும்னு நினைச்சார். ஷூட்டிங் இல்லாததால் அவர் கிட்டே கதை கேட்க வந்தேன். அந்த கதை எனக்கு செட் ஆகலை. சோ நோ சொல்லிட்டேன். இதை ஏன் அவர் அப்பா பேச்சோடு கனெக்ட் பண்ணறீங்க?” எனக் கேட்டாள் ஸ்ரீகீர்த்தி.

பின் “ஓகே ஃபிரண்ட்ஸ், வேறே எதுவும் ஸ்பெஷல் நியூஸ் என்னிடத்தில் இல்லை. அதனால் நான் கிளம்புகிறேன்” என்று கூறிவிட்டு நடந்து விட்டாள்.

நடந்து செல்லும் கீர்த்தியைச் அத்வைத் பார்த்திருக்க, அதை பல காமிராக்கள் உள் வாங்கிக்கொண்டன.

மறுநாள் காலையில் தலைப்புச்  செய்தியாக “நம்பர் ஒன் ப்ரொடியூசரின் மகன் மற்றும் வளர்ந்து வரும்  இயக்குநருமான அத்வைத், லேடி சூப்பர் ஸ்டார் நடிகையுடன் காதலா “ என்று இவர்களின் புகழ் பாடினார்கள்.

சத்யா என்னவென்று கீர்த்தியை விசாரிக்க, பிரபஞ்சனோ ஓ இவள் தன் வேலையை ஆரம்பித்து விட்டாளா என்று புன்னகைத்தான்.

அத்வைத்திடமும் கருணாகரன் விசாரித்துக் கொண்டிருக்க, அத்வைத்தோ அவன்  கீர்த்தியிடம் ப்ரபோஸ் செய்ததாகவும் ,அவள் மறுத்து விட்டதாகவும் கூறிக் கொண்டிருந்ததான் .

-தொடரும் –

9 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – 15”

  1. Avatar

    Story important stage ku varuthu.
    Keerthi ,indha problem I handle panra vidham super.
    Prabanjan ,legal reply kudukurathu correct.
    Ini enna aagum?

  2. Avatar

    கீர்த்தி அத்வைத் கூட சேர்ந்து போட்ட பிளான் ஒர்க்அவுட் ஆகுதுன்னு நினைக்கேன் கீர்த்தியை பற்றி நியுஸ்ஸை பாத்து சத்யா எப்படிரியாக்ட் போறான்னு தெரியலை இந்தபக்கம் சத்யா சொன்னதை வச்சி பிரபஞ்சன் சட்ட நடவடிக்கை ஆரம்பிச்சுட்டான் கருணாகரன் ரெண்டு பேரு கிட்ட மாட்டுவானா இல்ல நழுவிடுவானா

  3. Avatar

    எனக்கு இந்த எபியிலே சந்திரன் சத்யா கான்வோ ரொம்ப பிடிச்சது. தங்களுக்கான கணங்களை மீட்டுக் கொள்ள முயன்றது போலே இருந்தது. பிரபஞ்சன் ஒரு ரூட் கீர்த்தி ஒரு ரூட் கருணாகரனை ரெண்டு சைட்லேர்ந்து கார்னர் பண்ண போறாங்க. அடுத்து எப்படி மூவ் ஆகுதுன்னு பார்க்கலாம். அத்வைத் கூட ஒரு நல்ல கதாப்பாத்திரம். அவர் எப்படி ஹெல்ப் பண்ண போறார்னு தெரிந்து கொள்ள ஆவல்.

  4. Avatar

    எனக்கு இந்த எபியிலே சந்திரன் சத்யா கான்வோ ரொம்ப பிடிச்சது. தங்களுக்கான கணங்களை மீட்டுக் கொள்ள முயன்றது போலே இருந்தது. பிரபஞ்சன் ஒரு ரூட் கீர்த்தி ஒரு ரூட் கருணாகரனை ரெண்டு சைட்லேர்ந்து கார்னர் பண்ண போறாங்க. அடுத்து எப்படி மூவ் ஆகுதுன்னு பார்க்கலாம். அத்வைத் கூட ஒரு நல்ல கதாப்பாத்திரம். அவர் எப்படி ஹெல்ப் பண்ண போறார்னு தெரிந்து கொள்ள ஆவல்.

  5. Kalidevi

    Keerthi oru route potuta prabanjan avar move start pana poraru rendu perum sernthu attack pana poranga karunakaran ah . Good luck keerthi .
    sathya chandru ku theriyama ethaiyo marachi iruka atha ipo solla pora papom. rendu perum pirinji irunthalum manasu onna tha vazhranga atha alaga sonnaru chandru sathya oda oru sila thavippa ipo sonnathum atha apo kekama ipo ketu onum aga porahu illa solrathum aarudhal koduka mudilanum chandru sonathu super .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *