Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய் – 17 -2

மெய்யெனக் கொள்வாய் – 17 -2

அத்தியாயம் – 17 (2)  

தொலைக்காட்சியில் கருணாகரன் மனைவி பேசுவது தெரிய, கீர்த்தி, சந்திரன் இருவரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

கருணாகரன் மனைவியின் வலது புறம் சத்யா நிற்க, இடது புறத்தில் அத்வைத் நின்று இருந்தான். சத்யாவின் மற்றொரு பக்கத்தில் லாயர் கோட்டோடு பிரபஞ்சன் மற்றும் குணசேகரன் நின்று இருந்தனர்.

கருணாகரன் மனைவியை நோக்கிக் கேள்விகளைத் தொடுத்தனர் நிருபர்கள்.

“மேடம். நீங்க மிஸ்ஸஸ் கருணாகரன் தானே. அவர் எட்டு மணிக்கு பிரஸ் மீட் என உங்கள் வீட்டிற்கு வரச் சொல்லியிருந்தார். ஆனால் உங்கள் மகன் அத்வைத் ஃபோன் செய்து எங்களை இங்கே வரச் சொன்னார். மிஸ்ஸஸ் சத்யவதி மீது உங்கள் கணவர் கொடுத்த புகார் இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் போது உங்கள் இருவரின் சந்திப்பின் காரணம் என்ன?”.

மற்றும் ஒரு நிருபர் “உங்கள் மகன், மற்றும் நடிகை ஸ்ரீகீர்த்தி இருவரும் விரும்புவதாகச் செய்தி பரவியதே. அதைக் கொண்டு உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளப் போகிறீர்களா. அதற்கு தான் இந்த சந்திப்பா ?” எனக் கேட்டார்.

“எல்லோருக்கும் வணக்கம். நான் உமாமகேஸ்வரி. இதுவரை மிஸ்ஸஸ் கருணாகரன் என்றே எல்லா இடத்திலும் பெருமையாகச் சொல்லியிருக்கிறேன். இன்றைக்கு அப்படிச் சொல்ல மிகவும் வெட்கப்படுகிறேன். தன்னுடைய சுயநலத்திற்காக அபாண்டமாக ஒரு பெண்ணின் மீது பழி போடுபவர், திரை மறைவில் எந்தக் கொடுமையும் செய்வதற்கு தயங்க மாட்டார். அவரின் மனைவி என்று சொல்ல வேதனைப்படுகிறேன்”

“மேடம் இந்த திடீர் திருப்பம் எதனால் வந்தது? அவரின் குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கலாம் அல்லவா?”

அப்போது அத்வைத் “சாரி ஃபிரண்ட்ஸ் , மெயின் ஸ்ட்ரீம் மீடியா நீங்க இங்கே இருக்கீங்க. அதே சமயம் சோசியல் மீடியாவில் லைவ்வா மிஸ். ஸ்ரீகீர்த்தி என் அப்பாவை சாரி மிஸ்டர் கருணாகரனின் சுயரூபத்தைக் கிழித்துக் கொண்டிருக்கிறாங்க. அந்த லிங்க் உங்களுக்கும் அனுப்பி இருக்கிறேன். அதை ஒருமுறை பார்த்துவிட்டு கேள்விகளைக் கேளுங்கள்” என்றான்.

அனைவரும் அதைப் பார்க்கும் நேரம் அங்கே அமைதி மட்டுமே.

நிருபர்களுக்கு அடுத்து என்ன கேள்வி கேட்பது என்றே தெரியவில்லை. ஆனாலும் ஒருவர் விடாது “மிஸ்டர் கருணாகரன் விஷயம் சரி. ஆனால் மிஸ்ஸஸ். சத்யவதியின் ஆடியோவும் உண்மைதானே. அதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்?” எனக் கேட்டார்.

உமாமகேஸ்வரி “மிஸ்ஸஸ் சத்யவதியை எனக்கு என் அப்பாவின் காலத்தில் இருந்தே தெரியும். திருமணத்திற்கு பிறகு எங்கள் இருவருக்கும் தொடர்பு இல்லை. ஆனால் அப்பா இருந்தவரை அவரின் நாடகங்களில் முக்கியக் கதாப்பத்திரம் சத்யாவிற்கு தான் கொடுப்பார்கள். என் அப்பா நாடக சிரோன்மணி திரு. மனோகர் பற்றி நீங்கள் எல்லாம் அறிவீர்கள். இடையில் சில திரைப்படங்கள் எடுத்து இருந்தாலும், தன் உயிர் உள்ள வரை நாடகத்தையே மூச்சாக நினைத்து இருந்தார். அவரின் குழுவில் சத்யா நிரந்தர இடம் கொண்டவர் என்றால் இதுவே சத்யாவின் மீது எந்தக் குற்றமும் இல்லை எனக் கொள்ளலாம். ஏன் என்றாள் என் அப்பா ஒழுக்கத்திற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுத்தவர். இதை ஏன் கருணாகரன் குற்றச்சாட்டின் போதே சொல்லியிருக்கலாமே என்று கேட்கலாம். நேற்றுவரை அது வேறு ஒருவருக்காக இவர் செய்திருக்கிறார் என்றே நினைத்தேன். ஆனால் சில சந்தேகம் வரவும், அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள தான் இங்கே வந்தேன். தெளிவுரும் நேரம், இந்த லைவ் வரவும், உங்களை இங்கேயே சந்திக்க நினைத்து அத்வைத் மூலம் நடத்தினேன்” என்று முடித்தார்.

அப்போதும் ஒரு சிலர் முணுமுணுக்க “எக்ஸ்க்யூஸ் மீ. நான் கொஞ்சம் பேசலாமா?” என்று ஒரு குரல் கேட்டது.

எல்லோரும் வழிவிடவும் “ஹலோ. நான் விவேக். நான் ஸ்ரீகீர்த்தி மேடம் லைவ் பார்த்துட்டு இங்கே வந்தேன். அந்த கருணாகரன் வெளியிட்ட ஆடியோ ரெகார்ட் செய்தது நான் தான். இது ஒரு திரைப்படத்திற்கு டப்பிங் செய்த போது ரெகார்ட் பண்ணினது. படத்தின் வசனங்கள் முன்ன பின்ன எடிட் பண்ணி தவறா தோன்றும்படி வெளியீட்டு இருக்காங்க.” என்றான்.

“அது எப்படி சாத்தியம்?” எனக் கேட்டனர்.

“இது ரெகார்ட் செய்யப்பட்ட டப்பிங் ஸ்டுடியோவிற்கு கருணாகரனின் ஃப்ரெண்ட் தான் ஓனர். கருணாகரணை எனக்கு அறிமுகப்படுத்தியதும் என் ஓனர் தான். எட்டு வருஷத்துக்கு முன்னால் ஒருநாள் சத்யா மேடம் டப்பிங் பேசி முடிச்சிட்டு கிளம்பவும், இவர் வந்து இந்த ரெகார்டிங் எனக்கு ஒரு காப்பி வேணும்னு கேட்டார். அது எப்படி சர்னு கேட்ட போது, அவரோட படத்திற்கு வசனம் எழுதுபவர் ரொம்ப சொதப்பறார். அவருக்கு இதைப் போட்டு காட்டணும்னு சொன்னார். ஓனர் கிட்டேயும் பேசித் தான் அவருக்கு கொடுத்தேன். அதுக்கு அப்புறம் அதைப் பற்றி எதுவும் தெரியாது. இந்த ஆடியோ ரிலீஸ் ஆனப்போ இது கேட்ட மாதிரி இருக்கேன்னு தான் யோசிச்சேன். இப்போ லைவ்லே கருணாகரன் முகம் பார்க்கவும் விஷயம் புரிந்தது. அதை நேரடியா ஸ்ரீகீர்த்தி மேடம் கிட்டே சொல்லலாம்னு வந்தேன்” என்றான் விவேக்.

இப்போது நிருபர்கள் அனைவரும் சத்யாவிடம் “மேடம் நீங்க என்ன சொல்லறீங்க?” எனக் கேட்டார்.

“இன்னைக்கு நான் ஒரு நடிகையா இங்கே நிற்கறேன்னா அதுக்கு காரணம் மனோகர் சர் தான். அவரோட நாடகங்களில் தான் முதலில் நடிக்க ஆரம்பித்தேன். அவர் எங்களை அவரோட பொண்ணா தான் பார்த்தார். அந்த நம்பிக்கையில் தான் நடிப்பைத் தொழிலா நான் ஒரு கட்டத்தில் தேர்ந்து எடுத்தேன். அதற்காக இழந்தவைகள் பல. ஆனால் என் தன்மானம், மரியாதை இரண்டையும் எந்த சமயத்திலும் விட்டுக் கொடுத்தது இல்லை. இத்தனை காலம் கழித்து இப்படி ஒரு பிரச்சனை சந்தித்தப்போது மிகவும் துவண்டு தான் போனேன். ஆனால் இறைவன் அருளால் என்னைச் சுற்றி இருந்த நல்லவர்கள் மூலம் இன்று என் களங்கம் துடைக்கப்பட்டது. எல்லோருக்கும் நன்றி” என்று மட்டும் சத்யா சுருக்கமாகக் கூறி முடித்தார்.

மீண்டும் உமாமகேஸ்வரியிடம் திரும்பிய நிருபர்கள் “மேடம் உங்கள் கணவர் விஷயத்தில் என்ன முடிவு செய்வீர்கள்?” எனக் கேட்டனர்.

“அதைப் பற்றி எதுவும் இப்போ நான் சொல்ல முடியாது. இப்போ சத்யாவிற்காக தான் வந்தேன். அவங்க என்ன முடிவு எடுத்தாலும் , அதுக்கு என்னோட சப்போர்ட் உண்டு. பாதிக்கப்பட்டப் பெண்கள் வெளியில் வந்து குரல் கொடுக்கும் போது, ஒரு சக பெண்ணாக நானும் அவங்களை ஆதரிக்கணும்னு நினைச்சு வந்தேன். தப்பு செய்யறவங்க கண்டிப்பா தண்டனை அனுபவிக்கணும். அவ்ளோ தான்” என்று முடிக்க, கைத்தட்டினர் அங்கிருந்த நிருபர்கள் அனைவரும்.

பின் உமா மீண்டும் நிருபர்களிடம் “இவர் மிஸ்டர் பிரபஞ்சன். லாயர். சத்யவதி விஷயத்தில் இன்னொரு பக்கமும் இருக்கலாம் என காட்டிக் கொடுத்தவர். அவரின் அந்த நிதானமான பேச்சு தான் என்னை சத்யாவின் பக்கம் என்ன என்று ஆராய வைத்தது. அவருக்கும் நன்றி” என்று கூற, மைக்குகள் பிரபஞ்சன் பக்கம் திரும்பியது.

“சர் நீங்க இதில் எந்த இடத்தில் அவங்களுக்கு உதவியா இருக்கீங்க?”

“முதலில் போக்சோ, செக்ஸுல் டார்ச்சர் அது சம்பந்தப்பட்ட அடிப்படைச் சட்டங்களை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரியாத காமெரா எங்க வைத்து இருப்பாங்கனு யாருக்கும் தெரியாது. கவனமா இருங்க. அதையும் மீறி உங்களைத் தவறாக சித்தரிக்கப்பட்டால் அதைக் கண்டு பயப்படாதீங்க. சத்யா மேடம் சரியான அட்வைஸ் கேட்டு என்கிட்ட வந்தாங்க. சட்டப்படி என்ன செய்யணுமோ அதைச் செஞ்சேன். ஆனால் அதுவே கருணாகரணை நெருக்கடியில் தள்ளி தானேப் போய் லைவ்லே மாட்டிக்கிட்டார். என்னிக்கும் உண்மை தாமதம் ஆனாலும் ஜெயிக்கும். அதுக்கு தேவை நம்பிக்கையும், பொறுமையும் தான்” என்று கூறி முடித்தான் பிரபஞ்சன்.

பிரபஞ்சன் தன்னுடைய செயல்களைப் பெரிதாகப் பேசாத அந்தப் பாங்கு சத்யாவிற்கு பிடித்தது. அதற்கு மேல் நிருபர்கள் கலைந்து போக உமாமகேஸ்வரி மற்றும் அத்வைத் அங்கேயே விடை பெற்றனர். சத்யா இருவருக்கும் உள்ளார்ந்த நன்றி கூறினார். அவர்களோ சத்யாவிடத்தில் கை கூப்பி மன்னிப்புக் கேட்டனர்.

பின் விவேக் ஸ்ரீகீர்த்தி பற்றி கேட்க, அவள் கெஸ்ட் ஹவுஸ்லே இருப்பாள் என்று தகவல் கூறினார் சத்யா.

சத்யா “மிஸ்டர். விவேக், நீங்க யார்? எங்கே இருக்கீங்க?” எனக் கேட்டார்.

“நான் சந்திரன் மாமா தங்கச்சி அமுதா பையன்” என சிரித்தபடி கூற, சத்யா அதிர்ந்தார்.

யார் தன் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாய் இருப்பார் என்று சத்யா நினைத்தாரோ, அவரின் பக்கமிருந்து கிடைத்த மிகப்பெரிய உதவியைக் கண்டு கண்கள் ஈரமாகின. அவரால் நன்றி என்று சொல்லக் கூட முடியவில்லை.

விவேக் சத்யாவிடம் சொல்லி விட்டு கீர்த்தியின் கெஸ்ட் ஹவுஸ் செல்ல, சத்யா இத்தனை நல்ல சொந்தங்கள் கிடைத்தும், எங்கள் இருவரையும் காலம் ஏன் பிரித்தது என்று எண்ணி வேதனைப்பட்டர்

-அடுத்து அத்தியாயதில் நிறைவு பெறும் –

9 thoughts on “மெய்யெனக் கொள்வாய் – 17 -2”

  1. Pingback: மெய்யெனக் கொள்வாய் - 17 (prefinal) - Praveena Thangaraj Novels

  2. Avatar

    காலம் செய்த சதி இல்லை உன் மாமியார் காமாட்சி செய்த சதி

  3. Avatar

    அச்சோ அப்படி அந்த லைவ்ல கருணாகரன் என்ன பேசினாரு அதை சொல்லையே… அப்பறம் சத்யா சந்திரன் எப்படி பிரிந்தாங்கனும் சொல்லலை

  4. Avatar

    சாரி இது தான் முதல் அத்தியாயம் நினைச்சு கிளிக் மாத்தி படிச்சிட்டேன் … செம கருணாகரன் மனைவியின் பதிலடி செம

  5. Avatar

    சத்யா மேல தப்பில்லைன்னு கீர்த்தி ஒரு பக்கம் பிரபஞ்சன் ஒரு பக்கம் நிருபிச்சுட்டாங்க சத்தியா பிரிவுன்னு முடிவு அவசரபட்டு எடுத்திருப்பாங்களோ ஏன்ன அவங்க குடும்பத்திலே ஒரு ஆள் சினி பில்டுக்குள் வந்திருக்கும் போது சத்தியா நடிப்பதற்க்கு சந்திரன் சம்மதம் தராம இருந்திருப்பாரா இப்ப புதுசா ஒரு குழப்பம் விவேக்,அத்வைத்,பிரபஞ்சன் இந்த மூணு பேரில் யார் கீர்த்திக்கு ஜோடி

  6. Avatar

    Sema epi.
    Sikinaanda sivanaandi range la iruku epi .
    Karunagaran I maati Vida sariyaana idea. 2k kids na summa vaa. AntiJammer pottu avana maati vitutaa.
    Chandran , karunagaran I veliya theriyaama adi vitathu super. Good husband and a good father.

    Sathya, prabanjan help oda karunagaran wife vechu interview kuduthathu super.
    Surprise twist Vivek character.
    Amudha son a Avan. So family support Sathya ku kidaithu vitathu.
    Media sariyaa seyalpattal indha problems i thavirkalaam.

  7. Kalidevi

    epovum unmaiya irukavanga thorka matanga atha sathya ku thunaiya karunakaran wife and paiyane support ku nikuranga . ithula periya support eerthi ammakaga entha alavu erangi karunakaran ah vara vachi pesi unmaiya avan vailaye solla vachi social media la nalla matikittan atha live la potu ellarum pathu ipo ithuku ena pathil solla poraru papom .
    sathya chandru yen pirinjanga therila ipovathu rendu perum seranum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *