அத்தியாயம் – 6
திருச்சி அருகே என்று கூறியிருந்த போதும், அங்கிருந்து ஒரு மணி நேரப் பயண தொலைவில் தான் சந்திரனின் ஊர் இருந்தது. கிராமமும் இல்லாத, நகரமும் இல்லாத ஊர் அது. தேவையான வசதிகளும் போக்குவரத்து வசதி உட்பட அனைத்தும் அந்த ஊரில் இருந்தது. ஆனால் அங்கு வசிக்கும் மக்கள் பழமைவாதிகளாகத் தான் இருந்தனர்.
சிறிது தாமதம்தான் என்றாலும், திட்டமிட்டபடி மாலை சந்திரன் வீட்டில் விளக்கேற்ற மணமக்கள் சென்று விட்டனர். நேரமின்மையால் வந்ததும் சடங்குகள் நடைபெற, சத்யாவினால் மணமகள் கோலத்தை மாற்றக் கூட முடியவில்லை.
சந்திரனின் வீட்டில் சடங்குகள் முடியும்போதே திருமணத்திற்கு வர முடியாதவர்கள் வந்துவிட, அவர்களை அறிமுகம் செய்து, ஆசீர்வாதம் வாங்கி என நேரம் பறந்தது. வந்தவர்களுக்கு இனிப்பு, பலகாரம் எடுத்துக் கொடுத்து, இன்னும் நெருங்கிய சில உறவினர்களை இரவு விருந்துக்கு இருக்கக் கூறியது என சந்திரன் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் அனைவரும் வேலையாக இருந்தனர்.
ஆண்கள் எல்லோரும் வெளியில் பந்தலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பெண்கள் உள்ளே ஜமுக்காளத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சத்யாவும் அங்கேயே அமர வைக்கப்பட்டு இருக்க, மணமகள் அலங்காரம் இடைஞ்சலாகவே இருந்தது. சத்யாவின் பிறந்த வீட்டினரும் அவளோடே அமர்ந்து இருந்தனர். அவர்களுக்குத் தேவையான காப்பி, சிற்றுண்டி எல்லாமே சரியாக வந்தது. ஆனால் சந்திரன் வீட்டினர் யாருக்கும் பயணம் செய்து வந்தவர்களுக்கு ஓய்வு தேவை என்று தோன்றவில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. அவர்களுக்குமே நேரம் கிடைக்கவில்லை.
மெட்ராஸ் வாழ்க்கையில் சத்யா வீட்டினர் இந்த அளவு எல்லாம் உறவுகள் ஒரே நேரத்தில் சேர்ந்து பார்த்தது இல்லை. திருமணத்தின் போதும் அநேக சொந்தங்கள் மண்டபத்தோடு கிளம்பி விட, மிகவும் முக்கியமான சிலர் மட்டுமே சத்யா பிறந்த வீட்டில் தற்போது இருக்கப் போவதாகக் கூறியிருந்தார்கள். அவர்களும் கூட இரவு இரயிலில் சென்று விடுவார்கள்.
சத்யா பெற்றோரின் உதவிக்கு அவளின் மாமா, மாமி மட்டுமே தங்குகின்றனர். அதனால் இந்தக் கூட்டம் எல்லாம் சத்யாவின் அத்தை, மாமாவிற்கு அதிசயம் தான் என்றால், சத்யாவிற்கும் அவளின் சகோதரிக்கும் பேரதிசயம் தான்.
சந்திரனின் சகோதரிகள் வந்திருந்த எல்லோரையும் முறை வைத்துப் பேசினார்கள். அந்த உறவு முறை எல்லாம் சத்யாவிற்கு பாதிக்கு மேல் புரியக் கூட இல்லை.
முதல்நாள் இவர்களின் ரிசப்ஷனுக்கு வந்திருந்த யாரையும் சந்திரனுக்குத் தெரியாது தான். ஏன் அவள் பெற்றோருக்குக் கூட அப்போது தான் தெரியும். ஆனால் அவர்களை பெயர் நினைவு வைத்துக் கொண்டால் மட்டுமே போதுமானது. கூட ஒரு சர், மேடம் சொன்னால் போதும். ஆனால் இங்கே இந்த உறவுகளின் பெயர்களோடு, முறையையும் வேறு நினைவில் வைத்திருக்க வேண்டுமே என சத்யாவிற்குப் பயமாகவே இருந்தது.
சத்யாவின் பயந்த முகம் கண்ட சந்திரனின் பெரிய தங்கை அமுதா அருகில் வந்து “அண்ணி, ஒண்ணும் யோசிக்காதீங்க. எல்லா உறவு முறையும் உள்ளூர்காரங்க தான். அடுத்து அடுத்து விஷேச வீடு வரும்போது பார்த்துத் தெரிஞ்சிக்கிடலாம்.“ என்றாள்.
“இல்லைங்க“ என்றவளுக்கு அவளை எப்படி அழைப்பது என்று தெரியவில்லை. வயது இருவருக்கும் மாதக்கணக்கில் தான் வித்தியாசம் இருக்கும். ஆனால் இங்கே பெயர் சொல்லி அழைத்தால் என்ன சொல்லுவார்களோ என்று யோசித்தாள்.
அமுதாவே “அமுதான்னு பேரைச் சொல்லுங்கண்ணி” என்றாள்.
சரி என்று தலையசைத்த சத்யா “இல்லை அமுதா. இன்னிக்கு நீங்க கூட இருக்கீங்க. இவங்களும் வேலைக்குக் கிளம்பிட்டா, யாருன்னு எனக்குத் தெரியாதே. அத்தைகிட்டே கேட்டா தப்பா நினைச்சுக்குவாங்களோன்னு தோணிச்சு“ எனக் கேட்டாள்.
“என்னை இந்த உறவு முறைலே தான் கட்டிக் கொடுத்து இருக்காங்க. இங்கே உள்ள எல்லோரும் எங்க வீட்டிலே உள்ளவங்களுக்கும் உறவு தான். அதனால் இங்கே என்ன விசேஷம்னாலும் நாங்க வந்துடுவோம். சொல்லப் போனா நான் பேருக்குத் தான் வெளியூர்காரி. மாசம் பதினைஞ்சு நாளு இந்த ஊரில் தான் குப்பை கொட்டிக்கிட்டு கிடப்பேன். அதனால் கூட இருந்து நான் பார்த்துக்கறேன்” என அமுதா கூறவும்,
“தாங்க்ஸ் அமுதா” சிறு புன்னகையோடு கூறினாள் சத்யா.
சத்யாவின் உறவுகளுக்கும் லேசாக அந்தப் பயம் இருந்தது தான். சந்திரன் இராணுவத்தில் பணியாற்றுகிறான். திருச்சி சொந்த ஊர் என சத்யாவின் பெற்றோர் கூறியதை வைத்து ஓரளவு நகர வழக்கைக்கு ஏற்றவாறு இருப்பார்கள் என்று தான் எண்ணியிருந்தனர். திருமணத்தின் போது அணிந்திருந்த அணிகலன்கள் கூட சற்றுக் காடியாக தெரிந்தாலும், அது எல்லாம் குடும்ப வழக்கமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டனர்.
இவர்கள் ஊருக்கு வந்த பிறகு தான் ரொம்பவே வித்தியாசம் தெரிந்தது. வந்திருந்த ஊர்ப் பெண்கள் புடவைக் கட்டுக்கள் கூட பழைய கண்டாங்கி முறையில் இருந்தது. சந்திரனின் தங்கைகள் சாதாரணமாக புடவை அணிந்து இருந்தது மட்டுமே லேசான ஆறுதல். இவை எல்லாம் சத்யா எப்படி சமாளிக்கப் போகிறாள் என்றே யோசனை ஓடியது. இருந்தும் நாமாக எதுவும் சொல்வதை விட, அவளே இங்கே சமாளிக்கக் கற்றுக் கொள்ளட்டும் என்று வெறுமே பார்த்து இருந்தனர். அமுதாவின் பேச்சு அவர்களுக்கு சிறு ஆறுதலைக் கொடுத்தது.
அதற்குள் அங்கே இரவுச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் பற்றி உறவுப் பெண்கள் பேச ஆரம்பிக்க, சத்யாவிற்கு தலை நிமிர்த்த முடியவில்லை. என்ன நினைத்தாளோ சத்யாவின் சகோதரி, நேராக சத்யா மாமியாரிடம் சென்றாள்.
“அத்தை, சத்யா ரொம்ப நேரமா இங்கேயே உக்காந்துருக்கா. பாத்ரூம் போகணும் போலிருக்கு. எங்கே என்னனு சொன்னா, போயிட்டு, அப்படியே குளிச்சிட்டு அடுத்த அலங்காரத்துக்குப் பார்க்கலாம்” என்றாள் வேதா.
“அட ஆமாம். நானும் இதப் பத்தி நினைக்கவே இல்லையே.“ என்றவர், தன் மகளை அழைத்தார்.
“அமுதா இங்கே வா” என, அமுதா வரவும், “பின்னாலே இருக்கிற புழக்கடைக்கு இவங்களைக் கூட்டிக்கிட்டுப் போ. அங்கிருந்தே பின் வாசல் வழியா கீழே ரூமில் விட்டுட்டு வா. நீ அங்கேயே நிக்காம வந்துடு. உங்கண்ணன் கிட்டே பேசறது எல்லாம் உன் வீட்டுக்காரர வச்சுத்தான் பேசணும்” என்றார்.
பின் வேதாவிடம் “நீ உன் தங்கச்சிய அங்கே கூட்டிட்டு போயிடு. குளிக்கிறது இன்னும் கொஞ்ச நேரம் போகட்டும். இன்னும் எட்டு ஆகலையே. யாராவது வரப் போக இருப்பாங்க. அவங்க வரும்போது அமுதாவக் கூப்பிட அனுப்பறேன். அந்த நேரம் குளிச்சிக்கிட்டு இருக்கான்னு சொல்ல முடியாது“ என சந்திரனின் அன்னை கூறினார். வேதா அவரிடம் சரி எனத் தலையசைத்து விட்டு சத்யா அருகில் சென்று, அவளை எழுப்பிப் பின் பக்கம் அழைத்துச் சென்றாள்.
தற்போது தான் சத்யா முகத்தில் சிறு ஆசுவாசம். என்ன தான் படித்துப் பட்டம் பெற்று இருந்தாலும், புது இடம், புது உறவுகள் என உள்ளுக்குள் படபடப்பாகவே இருந்தது. சற்றுத் தனிமையும், தன் பயத்தை வாய்விட்டுப் பேச வாய்ப்பும் கிடைத்து இருந்தால் இதைச் சமாளித்து இருப்பாள். அந்த வாய்ப்பு இப்போது கிடைக்கவே, தன்னைக் கொஞ்சம் சமாளித்தாள்.
வேதாவும், அவளின் அத்தையும் மெதுவாக சத்யாவிடம் பேச்சுக் கொடுத்தனர். சிறு குரலில் பொதுவாக குடும்பத்தை எப்படி அனுசரித்துப் போவது என்பது போல பேசியதோடு, மெட்ராசில் இருந்த வசதிகளை இங்கே எதிர்பார்க்காதே என எல்லாம் கூறினார். ஏனெனில் இன்னும் அங்கே அட்டாச்டு பாத்ரூம் எல்லாம் கட்டப்படவில்லை.
பின் நேரம் செல்லவும், எட்டு மணியளவில் வேதாவே சந்திரனின் அன்னையிடம் கேட்டு சத்யாவைக் குளித்து வரக் கூறி, மெல்லிதான அலங்காரம் செய்துவிட்டாள். அமுதாவும் அவள் தங்கை அகிலாவும் சேர்ந்துக் கொண்டனர். சிறு கேலி கிண்டல்களோடு அலங்காரத்தை முடிக்க, எல்லோரையும் இரவு உணவிற்கு அழைத்தார் சந்திரனின் அன்னை.
புதுமணமக்கள் இருவரையும் அருகருகே அமரவைத்து விருந்து பரிமாறினர். இரவு வேளை என்பதால் பலமாக எதுவும் இல்லாமல், இட்டிலி, இடியாப்பம் அதற்கு தொடுகறிகள் இவற்றோடு இனிப்புக்காக கேசரி செய்து இருந்தனர்.
சத்யா சந்திரன் அருகே அமரும்போது இருவருக்குமே சிறு வெட்கம் வந்தது. சந்திரனும் இந்த இடைவெளியில் குளித்து வேறு வேஷ்டி, ஷர்ட் மாற்றி வந்திருக்கவே, ஒருவரையொருவர் அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டனர்.
பின் பெரியவர்கள் அனைவரையும் நிற்க வைத்து மணமக்கள் வணங்கி எழுந்திருக்க, ஆண்கள் வெளிப்பக்கம் செல்லவும், பெண்கள் சத்யாவை மாடியில் கொண்டு விட்டனர். சந்திரனிடம் அவன் தங்கைகளின் கணவர்கள் பேசிக் கொண்டிருப்பது போல பாவனை செய்ய, பெண்கள் இறங்கி பின் பக்கம் செல்லவும், சந்திரனை அவனின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறு சிரிப்போடு தன் அறைக்குச் சென்றவன், அங்கே ஜன்னல் பக்கம் ஓரமாக நின்று இருந்த சத்யாவைப் பார்த்தான். கதவை அடைத்து விட்டு, அவளருகில் செல்ல, சத்யா குனிந்த தலை நிமிரவில்லை.
“என்னை நிமிர்ந்து பார்” எனக் குரல் கேட்டது. சத்யா நிமிர, மிக அருகே நின்று இருந்த சந்திரனின் முகம் கண்டு வெட்கம் கொண்டாள்.
சத்யாவை கைப்பிடித்து கட்டிலில் அமரச் செய்தவன், தானும் அருகே அமர்ந்துக் கொண்டான்.
“சத்யா, என்னை உனக்குப் பிடிச்சு இருக்கா?” எனக் கேட்க, தலையைச் சாய்த்துச் சிரித்தாள் சத்யா. சிரிப்பின் காரணம் புரிந்த சந்திரன் “நீ நினைப்பது சரிதான். இது இப்போது கேட்கவேண்டிய கேள்வி இல்லைதான். ஆனால் கேட்கும் சந்தர்ப்பம் இப்போதுதானே கிடைத்தது” என்றான்.
“நான் வேறு பதில் சொன்னால் என்ன செய்யறதா இருக்கீங்க?” எனக் கேட்டாள் சத்யா.
“உனக்கு என்னைப் பிடிக்க என்ன செய்யணும்னு கேட்பேன்” என்று சந்திரன் பதில் கூறவும், பெரிதாக சிரித்துவிட்டாள் சத்யா.
“உஸ். இன்னிக்கு இப்போ இங்கே யாரும் வரமாட்டாங்க தான். ஆனால் மற்ற நேரத்தில், நாளில் எல்லாம் வரலாம். ஏன்னா, இதுக்கு அந்த பக்கம் மொட்டை மாடி. வெயில் காலத்தில் காத்துக்காக அப்பா, சரவணன் அவனின் படிப்புக்காகன்னு வர வாய்ப்பு இருக்கு”
“சரி சரி. மெல்லவே சிரிக்கிறேன்.”
“என் கேள்விக்கென்ன பதில்?’
“என்னோட சம்மதம் கேட்டப் பிறகு தான் என் அப்பா, அம்மா கல்யாணமே பேசினாங்க”
“என் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் அவங்களுக்காக சம்மதம் சொல்றதும், என்னைப் பிடிச்சு இருக்குன்னு சொல்றதும் ஒண்ணு இல்லையே”
“பிடிச்சு இருக்கு சந்துரு” எனவும், சத்யா அழைத்த அந்தப் பேரில் சந்திரனுக்கு அவளின் பிடித்தம் தெரிந்தது. இப்போது இன்னும் நெருக்கமாக அவளருகே அமர்ந்தவன்,
“உன்னைப் பற்றி சொல்லு வதி” என்றான். அந்த அழைப்பில் சத்யாவிற்கு வெட்கம் வந்தது.
சத்யா தன் படிப்பு, காலேஜ் என்று பேசிக் கொண்டிருந்தவளை எந்தக் கணம் சந்திரன் தனக்குள் அணைத்தான் என்று அறியவில்லை. திடீர் என்று உடலில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ, சத்யா சந்திரனை நேராகப் பார்த்தாள். சந்திரனின் அனுமதி வேண்டியப் பார்வையில், சத்யாவும் கண்களால் பதில் கொடுத்தாள்.
இருவரும் சம்சார சாகரத்தின் அடுத்தக் கட்டத்தில் அடியெடுத்து வைத்தனர். விடியலில் இருவருக்கும் இடையில் இருந்த சிறு சிறு தயக்கங்களும், வெட்கங்களும் விடைபெற்றுச் சென்று இருந்தன.
அலாரம் சத்தம் கேட்டு கண் முழித்த சத்யா, தான் இருக்கும் நிலை கண்டு மௌனமாகச் சிரித்தாள். பின் எழுந்து அமர, அந்த அசைவில் சந்திரனும் விழித்துக் கொண்டான். அறையின் மெல்லிய வெளிச்சத்தில் கடிகாரத்தைப் பார்த்து
“ஏன் அதுக்குள்ளே எழுந்துட்ட வதி?” என்றான்.
“மத்த உறவுக்காரங்க எல்லாம் எழுந்து வரதுக்குள்ளே குளிச்சிட்டு வந்துடுன்னு அத்தையும், எங்க அக்காவும் சொன்னாங்க. அதான்“
“அப்படின்னாலும், ஆறு மணிக்கு நீ கீழே போனா போதும். இப்போ மணி நாலு தான் ஆகுது”
“இல்லை. கீழே யாரும் வரமுன்னே குளிச்சிட்டு வரணும். இப்போ போனா சரியா இருக்கும்”
“குளிக்க ஏன் கீழே போகணும்?”
“பாத்ரூம் பின் பக்கம் தானே இருக்கு. நேத்திக்கு அங்கே தான் ரெஃப்ரெஷ் பண்ணிக்கிட்டேன்”
“அது எல்லோரும் உபயோகப்படுத்தறது. அத்தோட கீழே அட்டாச்டு பாத்ரூம் வீட்டிற்குள்ளே கட்டுறது அப்பா, அம்மாக்குப் பிடிக்கலை. ஆனால் நம்ம ரூமிற்கு அட்டாச்ட் பாத்ரூம் தான்” என்று சந்திரன் கூறினான்.
“ஓஓ. நல்ல வேளை. இன்னிக்கு சீக்கிரம் எழுந்துக்கிறது ஓகே. தினமும் எப்படி பண்ணப் போறேனோன்னு பயந்தேன். ஏன் இதை யாரும் சொல்லலை?”
“அம்மாக்கு அது எல்லாம் நியாபகம் இருந்திருக்காது.”
“அமுதா கூட சொல்லலையே”
“நான் சொல்வேன்னு நினைச்சிருப்பாள்”
“இப்போ நான் டிரஸ்க்கு என்ன பண்ணுவேன்? கீழே உள்ள ரூமில் தான் திங்க்ஸ் எல்லாம் வச்சிருந்தாங்க”
“அட என்ன கவலை உனக்கு. நைட் நாம சாப்பிடும்போது உன் திங்க்ஸ் எல்லாம் அமுதா இங்கே கொண்டு வந்து வச்சிட்டா”
“ஓ. இதோ போய் குளிச்சிட்டு வரேன்”
“கொஞ்சம் நேரம் போகட்டும் வதி. ஐஞ்சரைக்கா குளிச்சிட்டுப் போகலாம்”
“அத்தை எல்லாம் முழிச்சு இருப்பாங்களே?”
“எல்லாம் கல்யாண அசதியில் தூங்குவாங்க. நீ பேசாம இங்கேயே இரு”
“அது வரை என்ன பண்ணுறது.?
“ம். இவ்ளோ நேரம் என்ன செய்தயோ அதையேச் செய் “
சத்யா இரவு கொண்டாட்டத்தைக் கூறுகிறானோ என்று வெட்கத்தோடு பார்க்க, சந்திரன் அவளின் தலையில் தட்டி “எனக்கு ஓகே தான். பின்னாடி இன்னிக்கு முழுதும் நீதான் கஷ்டப்படுவ. பேசமால் தூங்கு” என்று தன்னோடு சேர்த்துப் படுக்க வைத்தான்.
அவனின் செயலில் சிறு வெட்கம் கொண்டாலும், ஒரு மணி நேரம் படுத்து எழுந்தாள் சத்யா. சந்திரன் கூறிய நேரம் வரை எல்லாம் தூங்காமல், ஐந்து மணிக்கு எழுந்தவள், அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து, உடை மாற்றிக் கொண்டு கீழே சென்றாள்.
இத்தனையிலும் சந்திரன் முழித்துக் கொள்ளாதவாறு சத்தமில்லாமல் தன் வேலைகளை முடித்தாள். முதல் முறை சிறு அசைவிற்கும் சந்திரன் முழித்ததைப் பற்றிக் கேட்ட போது, இராணுவப் பயிற்சி என்று கூறியிருந்தான். தூக்கத்திலும் புத்தி விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை விதிகளில் ஒன்று.
என்ன தான் எல்லோருக்கும் கல்யாண அலுப்பு என்று கூறியிருந்தாலும், சத்யா எழுந்து சென்ற நேரத்திற்கே அவளின் மாமியார் எழுந்து வாசல் தெளித்துக் கொண்டிருந்தார்கள். அந்த சத்தத்தில் கீழே உள்ளவர்கள் ஒவ்வொருவராய் விழித்து வர, எல்லோருக்கும் பாத்ரூம் உபயோகிப்பதில் சிரமமாக இருந்தது.
அந்த ஊரைச் சேர்ந்த ஆண்கள், அதாவது வீட்டின் மாப்பிள்ளைகள், சந்திரனின் அப்பா எல்லோரும் ஊரில் இருந்த வாய்க்கால் பக்கம் சென்றனர். பெண்களோ கிணற்றடியை உபயோகித்தனர். இதில் சத்யாவின் வீட்டினருக்குத் தான் சங்கோஜமாக இருந்தது.
சத்யாவின் அத்தான், மாமா இருவரும் பெண்கள் கிணற்றடியில் நிற்பதால், அங்கும் செல்ல முடியவில்லை. வெளியில் ஆண்களோடு செல்லவும் இயலவில்லை. அவர்களின் சிரமம் பார்த்த சத்யாவிற்கு ஆண்களை மட்டுமாவது தங்கள் அறைக்கு அனுப்பலாம் என்று நினைத்தால், சந்திரன் இன்னும் உறங்குகிறானே என்று இருந்தது.
அதற்குள் சத்யாவின் மாமியார் வந்து, “நீ விளக்கேற்றி சாமி படத்துக்கு பூ எல்லாம் போட்டு வை. சந்திரன் வந்ததும் சேர்ந்து கும்பிடலாம்” என்று விட்டு சமையலறைக்குச் சென்றார்.
சிறு தவிப்போடு சத்யா சாமியறைக்குச் செல்லும்போதே சந்திரன் மாடியில் இருந்து இறங்கக் கண்டாள். அவனிடத்தில் சத்யாவின் அக்கா கணவர், அவளின் மாமா இருவரையும் கண்ணால் ஜாடை காண்பிக்க, நெற்றி சுருக்கி யோசித்தவனுக்கு கிணற்றடி சத்தம் கேட்டு புரிந்து விட்டது.
அவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தபடி “நீங்க வேணா மேலே எங்க ரூமில் ரெஃப்ரெஷ் பண்ணிட்டு வாங்க” எனக் கூற, அவர்கள் இருவரும் சங்கோஜத்துடன் மறுத்தனர்.
சத்யாவின் மாமியார் சந்திரன் குரல் கேட்டு வந்தவர், “இரு சந்திரா. மேலே ரூம் எல்லாம் கூட்டியப் பின்னாடி அனுப்பி வைக்கலாம். அதுக்குள்ளே அவங்களுக்கு காபி, டீ குடுத்தடறேன். “ என்றார்.
“அம்மா, எல்லாம் நானே பண்ணிட்டேன்.“ என்றான் சந்திரன். அவனின் அன்னை சிறு அதிருப்தியோடுப் பார்க்க, சத்யாவோ மெச்சுதலாகப் பார்த்தாள். சந்திரன் முழித்து விடக்கூடாதே என்று தான் அவள் தன் துணிகளை மட்டும் துவைத்து விட்டு, ரூமை விட்டு வெளியில் வந்துவிட்டாள். அவனோ மற்ற வேலைகளை எல்லாம் முடித்து விட்டான். இனி அவனே தன் உறவுகளைப் பார்த்துக் கொள்வான் என்று எண்ணியபடி, தன் வேலையைத் தொடர்ந்தாள்.
அவர்களை மாடிக்கு அனுப்பியவன் மீண்டும் கீழே வரும்போது அமுதாவும், சத்யாவுமாக எல்லோருக்கும் காபி , டீ கொடுத்துக் கொண்டிருந்தனர்.
சந்திரன் வரவும் காபி கப் எடுக்கப் போகும்போது, அமுதா , “அண்ணா, முதலில் சாமி கும்பிட்டு வாங்க. அதுக்கு அப்புறம் தான் காபின்னு அம்மா சொல்லிட்டாங்க” என்றாள்.
“ஏய், நான் காபி மட்டும் குடிச்சிட்டுப் போறேன்” என, “இது நல்லாருக்கே. ரெண்டு பேருக்கும் சாமி கும்பிட்டப் பிறகு தான் காபின்னு சொல்லி, அண்ணியும் எதுவும் குடிக்காம இருக்காங்க. முதலில் போங்க” என்றாள் அமுதா.
இருவருமாக பூஜை முடித்துவிட்டு வரவும், சந்திரனின் அன்னை காமாட்சி, “ஏண்டா, சந்திரா என்னையோ, அமுதாவையோக் கூப்பிட வேண்டியது தானே ரூமைக் கூட்ட. இல்ல உன் பொண்டாட்டியக் கூப்பிட்டு இருக்க வேண்டியது தானே நீயேன் செஞ்ச?” என்றார்.
“மா, கீழே எல்லோரும் வேலையா இருந்தீங்க. அதான் நானே செஞ்சிட்டேன். இப்போ என்ன?”
“அது இல்லடா. ஆம்பள உன்னைய வீடு கூட்டுற வேலை செய்ய வச்சா, வந்திருக்கிற சொந்த பந்தம், சம்பந்தக்காரங்க எல்லாம் என்ன நினைப்பாங்க?”
“இன்னும் உன் காலத்திலேயே இருக்காதாம்மா. இப்போ எல்லாம் புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேரும் வேலைக்குப் போற வீட்டில், ஆண்கள் சமையல்லர்ந்து எல்லா வேலையும் சேர்ந்து செஞ்சா தான் குடும்பம் நடத்த முடியும். அத்தோட நான் வேலையில் இருக்கும் போது என்னோட ரூம் சுத்தம் பண்ணுற வேலை எல்லாம் யார் செய்வா? “
“ஏண்டா, இப்போ நீதான் ஏதோ அடுத்த ஆபிசர் ஆகிட்டேன்ன்னு சொன்ன. இதுக்கு எல்லாம் ஆளுங்க கிடையாதா?”
“அதுக்கு எல்லாம் இன்னும் மூணு , நாலு படி ஆபிசர் கிரேடுக்குப் போகணும். “
“சரி அதை விடு. இதே நம்ம வீட்டு மாப்பிள்ளை, உன் அப்பா, தம்பி எல்லாம் வெளியில் வாய்க்கால் தானே போயிருக்காங்க. அவங்களை உன் ரூமில் குளிக்கச் சொல்ல வேண்டியதுதானே. நாளைக்கு மருமகன் வீட்டில் எல்லாம் என்ன பேசுவாங்க?”
காமாட்சி தன் மகனுடன் பேசிக் கொண்டிருக்கும் போது தான் சத்யா சமையலறையில் இருந்து அவளுக்கும், கணவனுக்குமாக டீ எடுத்துக் கொண்டு வந்தாள். மாமியாரின் பேச்சில் முகம் சுருங்கி விட, யாரும் கவனிக்கும் முன் மாற்றிக் கொண்டாள் சத்யா.
“அம்மா, நான் இந்த மாடி எடுத்துக் கட்டி ரெண்டு வருஷம் ஆச்சு. நீதான் அப்பா, சரவணன் யாரையும் எனக்குக் கட்டினதுன்னு அந்தப் பக்கமே விடலை. மாப்பிள்ளைங்க நம்மூருக்காரங்க. அவங்களுக்கு வாய்க்கால் பழக்கம். நான் இறங்கி வரும்போது அவங்க வீட்டிலும் இல்லை. சத்யா உறவுக்காரங்களுக்கு வாய்க்கால் எல்லாம் பழக்கமில்லை. நம்ம புழக்கடையில் வீட்டுப் பொம்பளக எல்லாம் குளிக்கும் போது இவங்க எங்க போவாங்க? அதான் மாடிக்கு அனுப்பினேன்.“ என்று பேசிய சந்திரன், சத்யா கையில் இருந்து டீ எடுத்துக் கொண்டு திண்ணைப் பக்கம் சென்று விட்டான்.
இந்தப் பேச்சில் காமாட்சிக்கு மகன் தன்னை மீறியதாகத் தோன்றிவிட, லேசான முணுமுணுப்புடன் அந்த இடத்தை விட்டு தானும் சென்று விட்டார். நல்லவேளை இவர்களின் இந்தப் பேச்சுக்கள் எல்லாம் சத்யாவின் உறவினர் அறிய நடக்கவில்லை.
-தொடரும் –
அத்தியாயம் அதிக அலட்டல் இல்லாமல் மிக அழகாக யாதார்த்தமாக இருந்தது. சந்திரன் நல்ல பொறுப்புள கணவனாகத் தான் தோன்றுகிறார். ராணுவத்தில் இருப்பவர்கள் குணத்தை அப்படியே சொல்கிறீர்கள். மிக அழகு. நல்ல எழுத்து நடை.
Murumuruppu thodangiruchchaa…chandru kelambittaa eva nilamai 🤧🤧🤧
கதையின் யதார்த்தம் உங்களை ஈர்த்தத்தில் மிக்க மகிழ்ச்சி வத்சலா. தொடர்ந்த ஆதரவுக்கு நன்றிகள் பல
Chandran,sathyavathi married life natural a iruku.
Village habits nalla explain panni irukeenga. Chandran good husband .
பழக்க வழக்கங்கள் பற்றி குறிப்பிட்டது மகிழ்ச்சி. தொடர்ந்து ஆதரவிற்கு மிக்க நன்றி
சந்திரன் நல்ல பொறுப்புள்ள அன்பான கணவனாகத்தான் இருக்கான். ஆனால் அவன் கிளம்பிட்டா அப்புறம் சத்யா எப்படி சமாளிக்கப் போறாளோ?
சத்யா எப்படி சமாளிக்கிறாள் என்பதை தொடர்ந்து படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் கமெண்ட்டுக்கு நன்றி மா .
Interesting😍😍
இவங்களால தான் சந்திரன் சத்யா பிரிவு வந்தருக்கலாம்
இருக்கலாம். காரணம் பற்றி வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம். மிக்க நன்றி சிஸ்டர்
ippadi sila mamiyar eneyathu irunthute tha irukanga ithanalye husband wife kulla problem varuthu antha mari tha ivanalukum irukumo
உங்கள் யுகங்கள் சரிதானா ? வரும் அத்தியாயங்களில் காணலாம். மிக்க நன்றி
நன்றி மா