அத்தியாயம் – 7
சத்யாவிற்கு புகுந்த வீட்டில் முதல் நாள் சிறு சஞ்சலத்துடன் தான் ஆரம்பித்தது. அம்மா, பிள்ளை உரையாடல் இவளுக்குத் தெரிந்து இருந்தாலும், அதைப் பற்றி இருவருமே இவளிடம் பேசவில்லை. இதுவும் நல்லதற்குதான் என்று நினைத்தாள் சத்யா. அப்படிப் பேசியிருந்தால், இவள் அதற்கு கூறும் பதிலை எந்த மாதிரி அர்த்தம் கொள்ளுவார்களோ என்று தோன்றியது.
சந்திரன் வெளியில் ஆண்களோடு பேசிக் கொண்டிருக்க, மற்றவர்கள் எல்லோரும் காலை வேலைகளை முடித்துக் கொண்டு வந்தனர். வர வர அவரவருக்கு டீ, காபி என்று கொடுத்துக் கொண்டிருந்தார்கள் அந்த வீட்டுப் பெண்கள். சத்யாவிடம் பெண்களுக்கு பூ கொடுப்பது, யார் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வருவது போன்ற வேலைகளைக் கொடுத்தனர்.
வீட்டின் பின்புறம் இருந்த இடத்தில் அன்றைக்கு விருந்து சமையல் ஆட்கள் மூலம் தயாராக, அதை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தார் காமாட்சி, அவருக்குச் சந்திரன் பேசியது மனதோரம் நம நமவென்று இருந்தாலும், தற்சமயம் அதைப் பெரிதாக்கினால் பிரச்சினை ஆகி விடும் என்று விட்டுவிட்டார்.
திருமணத்திற்கான விருந்து முடிந்து, சத்யாவின் வீட்டினர் மாப்பிள்ளை, பெண் இருவரையும் அன்றே மறுவீடு அழைத்துச் சென்றனர். இன்னும் ஒரு மாதம் மட்டுமே சந்திரனுக்கு விடுமுறை . அதனால் அதிகம் இழுத்து அடிக்காமல், சத்யா வீட்டிலும் மூன்று நாட்களில் சீர் வரிசையோடு சந்திரன் வீட்டிற்கு சத்யாவை அனுப்பி வைத்தனர்.
சத்யாவின் வீட்டில் இருந்த மூன்று நாட்களும் நன்றாகவேச் சென்றது. சென்னை என்பதால் பகலில் கொஞ்சம் வெளியில் சுற்றிவிட்டு வருவதும், அவளின் அக்கா மற்றும் தாய்மாமா வீட்டில் விருந்தும் முடித்து விட்டனர். மேலும் சில உறவினர்கள் சென்னையில் இருந்தாலும், அவர்கள் வீட்டிற்கு எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
திருமணம், மறுவீடு என்று புகுந்த வீடு பழக சத்யாவிற்கு ஒரு வாரம் ஆகியிருந்தது. சந்திரனின் ஊரில் கொஞ்சம் நிலமும், சில கடைகளும் அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. சந்திரன் விடுமுறையில் வரும்போது அவற்றை எல்லாம் ஒருமுறை மேற்பார்வை செய்து வருவான். அதில் தேவைப்படும் மராமத்துப் பணிகள் எல்லாம் அவன் இருக்கும்போதே ஆட்கள் வைத்து முடித்து விடுவான்.
சந்திரன் பணிக்குச் சென்ற பிறகு சந்திரனின் அப்பா நிலத்தில் உள்ள வேலைகள் மட்டும் வேலையாள் வைத்துப் பார்த்துக் கொள்வார்.
சந்திரன் பகல் நேரத்தில் அந்த வேலைகளுக்குச் சென்ற பின், சத்யா தன் மாமியாருக்குச் சமையலில் உதவி , வீட்டு வேலைகள் என்று பழகிக் கொண்டாள்.
காமாட்சியைப் பொருத்தவரை அவரின் மகன் எல்லோரையும் விட பெரிய விஷயம். அவனுக்குச் சிறு வசதி குறைவு என்றாலும் கோபம் வந்துவிடும். அதே சமயம் மகன் அவரை மீறி எந்தக் காரியமும் செய்யக் கூடாது. அதனால் சந்திரனின் விஷயத்தில் அவர் மட்டுமே முடிவு எடுக்க வேண்டும். மற்றவரை அதில் தலையிட விட மாட்டார்.
சந்திரனும் அம்மா பிள்ளை தான். ஆனால் இராணுவத்தில் பணியாற்றச் சென்ற பிறகு வெளியுலக அனுபவம் அவனைப் பாக்குவப்படுத்தியது. அதனால் அன்னையின் சொல்படி நடந்தாலும், மற்றவர்களிடத்தில் அவனின் உறவினை நன்றாகவேத் தான் தொடர்ந்தான். அது சொந்தம், நட்பு என எல்லா இடத்திலும் அவனின் சொல்லுக்கு ஒரு மதிப்பைக் கொடுக்குமளவு வளர்ந்து இருந்தது.
வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் வெளியே சென்ற பின், காமாட்சியின் வேலை டிவியில் நாடகம் பார்ப்பது தான். அப்போது தான் மெகா சீரியல்கள் கான்செப்ட் அறிமுகமாகியிருக்க, தினமும் அதைப் பார்த்தே ஆக வேண்டும்.
சத்யாவிற்கு மாமியாயர் சீரியல் பார்ப்பது பற்றி எல்லாம் கவலை இல்லை. ஆனால் அண்டை வீட்டினரோடு சேர்ந்து கதாப்பாத்திரங்களை போற்றுவதும், தூற்றுவதும் என்று பேசுவது அவளுக்குப் பிடிப்பது இல்லை. சில நேரங்களில் அந்த வில்லி நடிகைகள் சொந்த வாழ்க்கைப் பற்றித் தவறாகப் பேசுவது அறவே பிடிக்கவில்லை.
நாடகத்தில் நடிப்பது அவர்களின் உண்மையான குணம் கிடையாது. தனிப்பட்டு மிகவும் நல்லவர்கள் என்று சொல்லிப் பார்க்க, அப்படி நல்ல குணம் உள்ளவர்கள் இப்படி ஒரு வேஷத்தில் நடிப்பார்களா என்று சத்யாவிற்கு அந்தப் பெண்கள் எல்லாம் சேர்ந்து பாடம் எடுத்தனர். அதற்கு மேல் அவர்கள் விஷயத்தில் சத்யா தலையிடுவது இல்லை. ஆனால் தன் மாமியார் மேல் ஒரு ஊமைக் கோபம் மட்டும் இருந்தது.
சந்திரனின் இரு தங்கைகள் வீட்டிலும் விருந்திற்கு அழைத்து இருக்க, மணமக்கள் இருவரும் சென்று வந்தனர். அவர்கள் செய்த மரியாதை எல்லாம் இயல்பாகவே எடுத்துக் கொண்டனர். ஆனால் காமாட்சிக்கோ தன் மகனுக்கு எடுத்த உடையைப் பற்றி அத்தனைக் குறை.
இத்தனைக்கும் அமுதா வீட்டினர் எடுத்துக் கொடுத்த ஷர்ட் பிராண்டட் வகை தான். சந்திரன் யூனிஃபார்ம் போடும் தனக்கு ஏன் இத்தனை விலையில் என்று கூட கேட்டான். அதற்கு அமுதா இதுதான் அண்ணனுக்கு நன்றாக இருக்கும் என்று விடாப்பிடியாகக் கூறினாள்.
உண்மையில் சத்யாவிற்கு எடுத்த புடவை தான் அடிக்க வரும் நிறத்தில் இருந்தது. அவளின் மாமியார் கூட அந்த நிறத்தில் புடவை அணிந்து அவள் பார்த்தது இல்லை. விலை என்று பார்த்தால் நல்லதாகவே தான் எடுத்து இருந்தார்கள். ஆனால் தேர்வு என்பது சரியில்லை.
அதற்கு காரணம் சத்யா நாடகங்களில் நடித்தவள் என்று தெரியவும், டிவியில் அவர்கள் அதிகம் பார்த்த ஒரு நிறத்தில் புடவை எடுத்து விட்டார்கள். அது டிவியில் தான் அப்படித் தெரியும். நேரில் பார்க்கையில் மெல்லிய நிறத்தில் இருக்கும் என்பது எல்லாம் அவர்களுக்குத் தெரியவில்லை. இதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்துக் கொண்ட சத்யா, அதைப் பெரிது படுத்தவில்லை.
ஆனால் சத்யாவின் மாமியாருக்கோத் தன் மகனின் சட்டை மட்டுமே குறையாகத் தெரிந்தது. அதைக் கண்டு அப்போதைக்குச் சிரித்தாலும், உள்ளுக்குள் அப்படி என்ன அவருக்குக் கண் மூடித்தனமான பாசம் என்று எரிச்சலும் வந்தது,
இதோ அதோ என நாட்கள் நகர, இன்னும் பத்து நாளில் சந்திரன் பணிக்குச் செல்ல வேண்டும். அது தெரிந்ததில் இருந்து காமாட்சி தினம் விருந்து போன்று சமைப்பதும், அவரின் பெண்களை அண்ணனுக்கு நீ செய், இது பிடிக்கும் என வரச் சொல்லி விடுவதுமாக இருந்தார்.
அவர்கள் வந்து செல்வதில் படும் சிரமங்களைப் பார்த்து, சத்யா ‘ஏன் எல்லாரையும் கஷ்டப்படுத்தறீங்க? உங்க பையன் வருஷ வருஷம் வந்துட்டுப் போவார் தானே. இந்த தடவை அண்ணன் கல்யாணம், விருந்துன்னு அவங்க வீட்டை விட்டு நிறைய நாள் வந்துட்டும் போயிட்டும் இருந்தாங்க. இப்போவும் அப்படியே இருந்தா, அவங்க வீட்டிலே என்ன நினைப்பாங்க’ என்று கேட்டதற்கு, ‘அவங்க அண்ணனுக்கு ஆசையா செஞ்சுக் கொடுக்க வராங்க. உனக்கு என்ன வந்துது. நீ இப்போ தான் வந்துருக்க. இங்கத்தி பழக்க வழக்கம் எல்லாம் என்ன தெரியும்? உனக்கு புருஷன் ஆகறதுக்கு முன்னயே அவங்களுக்கு அண்ணன் தெரிஞ்சிக்கோ’ என ஒரு பாட்டம் பேசினார் காமாட்சி.
ஒரு சில உறவினர் அவர்கள் சொந்தங்களும் இராணுவத்தில் இருக்கவே, அவர்களுக்குப் பொருட்கள் சந்திரனிடம் கொடுத்து விட கேட்டு வந்து சென்றார்கள். அவர்களிடம் மட்டுமல்லாமல், அக்கம் பக்கம் உறவினர்களிடமும் அண்ணன், தங்கைகளைப் பிரிக்கப் பார்க்கிறாள் என்பது போல் காமாட்சி கூற, சத்யாவிற்கு அசூசையாக இருந்தது. அதற்கு பின் அவரிடம் எதுவும் பேசுவதில்லை சத்யா.
சந்திரன் கிளம்பும் நாள் நெருங்குகையில் இவர்கள் குடும்பத்தின் பெரியவரான அவனின் பெரியப்பா வீட்டிற்கும் சந்திரன் தன் மனைவியோடு சென்றான். விருந்து பலமாக நடந்து முடிந்ததும், பெரியப்பா வாழ்க்கைப் போராட்டங்கள் பற்றி பாடம் எடுத்தார். இருவருக்கும் லேசான உறக்கம் வந்தாலும், பெரியவரை மதித்து அமைதியாகக் கேட்டு இருந்தனர்.
சிறிது நேரம் ஏதோ பேசியவர் “இந்தா பொண்ணு, நீ ஏதோ நாடகம் எல்லாம் நடிச்சுருக்க அப்படின்னு இவன் அம்மா சொன்னா. அது எல்லாம் உன் கல்யாணத்துக்கு முன்னோட சரி. இனிமேப்பட்டு அது எல்லாம் சரியா வராது. உன் அப்பா, அம்மா கூட கல்யாணம் முடிஞ்சதும் நிறுத்திருவான்னு சொன்னாகளாம். அதை அப்படியே காப்பாத்திக்கோ” என்றார்.
இதை சிறு எரிச்சலுடன் கேட்டுக் கொண்டிருந்த சத்யா பதில் கூறப் போகுமுன் “பெரியப்பா, அதான் கல்யாணத்துக்கு மொத நாளு நாம பேசியாச்சு தானே. திரும்ப ஏன் அதைக் கிளர்றீங்க “ என்றான் சந்திரன்.
“எல்லாம் சரிதான் சந்திரா. ஆனா உன் அம்மா இன்னும் சலசலன்னுட்டு கிடக்கா. அவளுக்கு மத்த எல்லாப் பிள்ளைங்களோட நீ தான் முக்கியம். கல்யாணம் கேள்விப்பட்டு விசாரிக்க வரவுக ஒண்ணுக்கு ரெண்டா பேசிட்டுப் போயிராக. அதை பிடிச்சுக்கிட்டு இவ சாமியாடிக்கிட்டு இருக்கா. “
“அப்படி ஒண்ணும் அம்மா என்கிட்ட சொல்லலையே.”
“நீ கல்யாணம் முடிஞ்ச மொத நாளே உன் அம்மாகிட்டே ஏதோ சடைச்சுகிட்டேன்னு ஊரெல்லாம் பேசிட்டுத் திரியறா. அத்தோட உன் சம்சாரமும் அந்த நாடகத்தில் நடிக்கிற பொண்ணுங்களுக்கு ஏத்துட்டுப் பேசிச்சாம். இந்த மாதிரி இருந்தா நாள பின்ன அவளும் நடிக்கிறேனு போயிட்டா என்ன செய்யறதுன்னு கேக்கா உங்கம்மா. நான் எம்புட்டோ சொல்லிபுட்டேன். இது எல்லாம் தேவையில்லாத பேச்சுன்னு. அதுக்கு நீங்க தான் குடும்பத்துக்குப் பெரியவரு. ரெண்டு பேருக்கும் புத்தி சொல்லி அனுப்புறது தானேன்னு என்கிட்ட சடைக்கிறா.”
சந்திரனுக்கு லேசாக எரிச்சல் வர, சத்யாவிற்கோ கோபமே வந்தது. பெரியவரிடம் எதுவும் பேசவில்லை என்றாலும், முகத்தில் எரிச்சலை அப்பட்டமாகக் காட்டியிருந்தாள்.
அதைக் கவனித்த சந்திரனின் பெரியப்பா, “உனக்கு கோபம் வரது நியாயம் தான்மா மருமகளே. ஆனா குடும்பம்னா இப்படித் தான் நாலும் இருக்கும். நமக்கு முக்கியம் சந்திரன் தான். பொறுப்பான, குணமான பையன். இவங்க சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டிட்டுப் போனா போதும். உன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்” என்றார்.
இதுவரை எதுவும் பேசாமல் இருந்த சத்யா “இப்போ எல்லார் பேச்சுக்கும் தலையாட்டி என்னோட நிம்மதியைக் கைக்குள்ள வச்சுக்கணும்னு சொல்ற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலையே மாமா. அத்தோட என்னைப் பற்றி சொல்லித் தானே உங்க வீட்டுப் பையனுக்குக் என் அம்மா, அப்பா கல்யாணம் பேசினாங்க. நானும் ஒரு ஆசைக்குத் தான் நடிக்கப் போனேன். எங்க வீட்டிலேயே அப்படி உடனே எல்லாம் சம்மதம் சொல்லிடலை. அப்படியிருக்க, இங்கே வந்து அவளோ பெரிய முடிவு எல்லாம் நான் எடுப்பேனா? இல்லை உங்க பையனோ, வீட்டில் பெரியவங்களோ சொன்னா கேட்டுக்காமப் போயிடுவேனா? என்ன பிரச்சினை செஞ்சேன்னு இப்படி எனக்கு அறிவுரை சொல்ல சொல்றாங்க?” எனக் கேட்டாள் சத்யா. கேட்டாள் என்பதை விட தன் பக்க நியாயத்தை எடுத்துப் பேசினாள்.
சத்யாவின் கேள்விக்குப் பதிலாக சந்திரனின் பெரியப்பா “சரிதான் மருமகளே. இதைத்தான் உங்க கல்யாணம் மொத நாள் சந்திரன் கிட்டே சொன்னேன். நம்மூட்டுப் பொம்பளைகளை நம்பாதே. இன்னிக்கு சிரிக்கிற அத்தனை வாயும், பின்னாடி ஒண்ணுக்கு ரெண்டா பேசி வைக்கும்னு சொன்னேன். அது உன்னைச் சங்கடப்படுத்தும்னும் சொன்னேன். ஆனாலும் அந்த நேரத்தில் ஒண்ணும் செய்ய முடியாதுன்னு தான் மேலே எல்லாம் நடந்தது. இப்போ உன் மாமியாரே பேசிட்டுத் திரியறா. என்ன செய்ய?” என்றார்.
சத்யாவிற்கு என்னவோ போலிருக்க, முகம் வாடிப் போனது. அதைக் கவனித்த சந்திரன் “சத்யா, எங்கம்மா சொன்னதுக்காக அவர் பேசறார். நீ ஏதும் மனசில் வச்சிக்காத.” என்றவன், “பெரியப்பா நீங்க சொல்றது எல்லாம் சரிதான். ஆனால் ஒண்ணுமே இல்லாம அம்மா ஏன் இப்படிப் பேசிட்டு இருக்காங்கன்னு தெரியல. நான் என்னனு பார்க்கறேன்” என்று சொல்ல, பெரியாப்பவும் “பார்த்துக்கோப்பா” என்று கூறி அனுப்பி வைத்தார்.
சந்திரனின் பெரியப்பா வீட்டில் இருந்து கிளம்பிய பின், இருவரிடத்திலும் மௌனம் மட்டுமே. திருமணம் முடிந்து இன்று வரை இருவருக்குள்ளும் எந்த சங்கடமும் வந்தது இல்லை. அவர்களுக்கு இடையேயான உறவு தாம்பத்தியம் தாண்டி கருத்துப் பகிர்தலும் நல்ல முறையிலேதான் இருந்தது.
இராணுவத்தில் தன் பணி, சந்திரனுக்குக் கிடைக்கும் சலுகைகள் என தன்னைப் பற்றித் தெளிவாகவே சத்யாவிற்கு கூறியிருந்தான். தற்போது சந்திரனுக்குக் குடியிருப்பு வசதி கிடைத்தாலும், சில வருடங்கள் போகட்டும். அதன் பின் ஒரே இடத்தில் சேர்ந்து இருக்கலாம் என்று கூறியதற்கு சத்யாவும் சம்மதித்தாள்.
சந்திரனின் தம்பி படிப்பு முடிந்து வேலையில் சேர்ந்த பிறகு என்று காரணம் கூறினாலும், உள்ளுக்குள் அடுத்து தங்களுக்கு குழந்தை என்று வந்துவிட்டால் தெரியாத இடத்தில் சத்யா சமாளிப்பது கடினம் என நினைத்துக் கொண்டான். சத்யாவிற்கு துணையாக யாரையும் வரச் சொல்வது கடினம். சந்திரன் பணியிட சூழ்நிலை வீட்டின் பெரியவர்களுக்கு ஒத்துக் கொள்ளாது. மொழிப் பிரச்சினையும் இருக்கும்.
சத்யா சமாளித்துக் கொள்வாள் என்றாலும், பெரியவர்கள் துணை தேவைப்படும் சமயத்தில் எல்லோருக்கும் சிரமம் தான். உடன் வேலை செய்பவர்கள் வீட்டுப் பெண்கள் படும் கஷ்டம் எல்லாம் பார்ப்பதால் சந்திரனின் எண்ணம் தற்காலிகமாக சத்யா தன் வீட்டிலேயே இருக்கட்டும் என்பதாகவே இருந்தது.
சத்யாவும் எடுத்த உடன் சந்திரனோடு செல்ல முடியும் என்று எண்ணவில்லை. மிலிட்டரி ப்ரொசீஜர்ஸ் தனி என்பது எல்லாம் தெரியும். அத்தோடு தனிக்குடித்தனம் எல்லாம் அத்தனை எளிது கிடையாது. வெளியூரில் வேலைப் பார்க்கும் மகன்களுக்கு மட்டுமே அந்தச் சலுகை. அப்போதும் வாரம் ஒருமுறை வந்து செல்லும் தூரமாக இருந்தால், பிள்ளையைப் பெற்றவர்கள் தங்களோடு மருமகள் இருக்கட்டும் என்றே எண்ணுவார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பேர் மட்டுமே தனிக் குடித்தனம் செய்தவர்கள்.
திருமணம் முடிந்த முதல் சில நாட்களிலே தங்களைப் பற்றி பேசியிருந்தவர்கள், அதன் பின் சந்திரன் அவனின் சம்பளம், குடும்பத்திற்கு அனுப்பும் பணம், செலவுகள், தங்கைக்களின் திருமணக் கடன் எல்லாம் அடைத்து விட்டான். என்றாலும் அதற்கு பிறகு செய்முறைகளுக்காக வாங்கிய சிறு கடன்கள் பற்றிய விவரம் அனைத்தும் சத்யாவிற்கும் கூறியிருந்தான். இருவரும் வருங்காலம் பற்றியும் ஓரளவு திட்டமிட்டு இருந்தனர். தவிரவும் வேலையைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களும் இருவரும் பேசிக் கொண்டனர். இதனால் தனிமைப் பொழுதுகளில் தம்பதிகள் குரலில் சிரிப்பும், கேலியும், சந்தோஷமும் நிறைந்து இருக்கும்.
இன்றைக்கு முதல் முறையாக அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர். இதுவரை குடும்பத்தினர் பற்றிய பொதுவான விஷயங்கள் தவிர்த்து அவர்களின் குணம் பற்றியெல்லாம் இருவரும் பேசியதில்லை.
சந்திரனுக்கு அவனின் அம்மா செய்வது எல்லாம் கோபம் தான். ஆனால் அவரின் பாசம் மட்டுமே அவனை வாய்மூடி நிற்க வைத்து விடும். அவ்வப்போது வெடுக்கென்று பேசி விடுவான் தான். அதற்கு மேல் அவனால் காமாட்சியிடம் சண்டையிட முடிந்தது இல்லை.
பெரியப்பா பேசியதைப் பார்க்கும்போது தன் மனைவியோடு அம்மாவிற்கு ஒத்துப் போவது கஷ்டமோ என்று தோன்றியது. அவன் இத்தனை நாட்களில் கண்டுகொண்ட வரை சத்யாவும் எதையும் பொறுத்துப் போகும் பெண் அல்ல. அவளின் படிப்பும், வெளியுலக பழக்கங்களும் தைரியமான பெண் என்று நன்றாகவேத் தெரிந்தது.
தன் நாத்தனார்களை அனாவசியமாக அலைகிறார்கள் என்று மாமியாரிடம் நேராகப் பேசிய போதே சந்திரன் அதைத் தெரிந்துக் கொண்டான். அவை எல்லாம் சந்திரனைச் சுற்றி நடக்கும் செயல்கள் என்பதால் பொருட்படுத்தவில்லை. தற்போது நேரடியாக சத்யாவைப் பற்றிப் பேசியிருப்பதை அவள் பொறுத்துக் கொள்ள மாட்டாள் என்று புரிந்தது.
வீட்டிற்கு போவதற்குள் இதைப் பற்றி சத்யாவிடம் பேசிவிடலாம் என்று எண்ணிய சந்திரன், வழியில் இருந்த கோவில் அருகே தனது புல்லட்டை நிறுத்தினான். வண்டி நின்றதைக் கூட கவனியாமல் சத்யா அமர்ந்திருக்க,
“சத்யா” என்று குரல் கொடுத்தான். திடுக்கிட்டுப் பார்த்தவள், அதன் பின்னே சுற்றுமுற்றும் பார்த்து விட்டு வண்டியில் இருந்து இறங்கினாள். ஏன் என்பது போல பார்த்தாலும், கோவிலுக்குச் செல்லும் வழியில் சந்திரன் வண்டியை நிறுத்தி விட்டு வரக் காத்து நின்றாள்.
திருமணம் முடிந்த அடுத்த நாள் முதலே சத்யாவோடு உள்ளூரில் ஏன் தங்கைகள் வீடிருக்கும் பக்கத்து ஊருக்குக் கூடச் செல்வது இந்த புல்லட்டில் தான். அந்த புல்லட் சவாரி சத்யாவிற்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்பதை வாயால் மட்டுமின்றி செயல்களாலும் உணர்த்தி இருந்தாள்.
ஆனால் இன்றைக்கு அதைக் கூட உணராத அளவிற்கு சத்யாவின் நடவடிக்கை இருக்கவே, சிறு கவலையோடு அவள் அருகில் வந்தான் சந்திரன். பின் இருவருமாக கோவில் உள்ளே சென்று கடவுளைத் தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்த மண்டப படிகளில் அமர்ந்தனர்.
இவர்கள் சென்றது வார நாட்களில் நடுவில் ஒரு நாள். பொதுவாக வெள்ளி, சனிக் கிழமைகளில் இருக்கும் கூட்டம் வார நாட்களில் அதிகம் இருப்பது இல்லை. செவ்வாய் அன்று மட்டும் ராகு காலத்தில் விளக்கேற்றுவது என்று ஒரு கூட்டம் இருக்கும். மற்றபடி அவ்வப்போது ஒரு சிலர் வந்து செல்வார்கள் அவ்வளவு தான்.
கோவில் உள்ளேயும், மண்டபத்திலும் ஆள் அரவமற்று இருக்க, சந்திரன் “சத்யா” என்று அழைத்தக் குரல் உரக்கவே கேட்டது.
சத்யா திரும்பிப் பார்க்கவும் “சத்யா, பெரியப்பா பேசினது உனக்குச் சங்கடமா இருந்து இருக்கும். அவரைத் தப்பா நினைக்காத“ என்று சமாதானப் பேச்சில் முதல் படி எடுத்து வைத்தான் சந்திரன்.
“சே. அவரை என்னாலே புரிஞ்சிக்க முடியுது சந்துரு. கொஞ்சம் பழமையில் ஊறிப் போயிருக்கிறாரே தவிர, எல்லாரையும் முக்கியமா பெண்களை மதிப்பாதான் பாக்கிறார். ஆனா ..” என்று நிறுத்தினாள்.
சத்யாவின் சந்துரு என்ற அழைப்பில் முகம் மலர்ந்தாலும், கடைசியில் ஆனால் என்று நிறுத்தியதும் சந்திரனுக்கு லேசான பதட்டம் வந்தது.
“சொல்லுமா”
“உங்க அம்மாவச் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. ஒண்ணும் இல்லாத விஷயத்தைப் பெரிசு படுத்தறாங்களோனு இருக்கு. அவங்களுக்கு நீங்க முக்கியம் தான். உங்க மேலே பாசமும் அதிகம் தான். ஆனால் அதுக்காக மத்தவங்கள உங்களுக்கு அடிமை மாதிரி ஆக்கிறது என்ன நியாயம் இருக்கு?“
சத்யாவின் கடினமான இந்த வார்த்தைகள் வருத்ததைக் கொடுத்தாலும், சந்திரனே சில சமயம் தன் அன்னையிடம் இதைக் கூறியிருக்கிறான் தானே. அந்த உண்மையை எப்படி மறுக்க முடியும்.
“அம்மா அப்படி இருந்தாலும், என் மனதில் அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லை சத்யா. என் தங்கச்சிகளோ, தம்பியோ செய்வது பாசத்தில் தான் தவிர என்னை ஒரு எஜமானன் மாதிரி நினைச்சு எல்லாம் செய்யல” என சந்திரன் பதில் கூறினான்.
“நான் அப்படி எல்லாம் சொல்லலை சந்துரு. இப்போ பாசத்தில் செய்யறது, இதே உங்க அம்மா தொடர்த்து செஞ்சுட்டு இருந்தா, உங்க மேலே வெறுப்பை வளர்த்து விட்டுடும். அதைத் தான் நான் சொல்ல வந்தேன்” என்றாள் சத்யா.
“அம்மா என்னைப் பத்திப் பேசறது வேணா அதிகப்படியா இருக்கலாம். அவங்க அன்பு எல்லார்கிட்டேயும் ஒண்ணு போல்தான் இருக்கும். உனக்கு இப்போ தான் அவங்க பழக்கம். அதனால் புதுசாத் தெரியலாம். ஆனால் மத்தவங்களுக்கு அவங்க குணம் நல்லாத் தெரியும் சத்யா”
“உங்க தம்பி, தங்கச்சிங்க விஷயத்தில் நீங்க சொல்றது சரியா இருக்கலாம். ஆனால் என் விஷயத்தில் அவங்க நடந்துக்கிறது அதிகமாத் தோணுது சந்துரு.”
“அம்மாக்கு சின்ன விஷயத்தையும் பெரிசா யோசிக்கிற குணம். கொஞ்ச நாளில் உன்னைப் புரிஞ்சிக்குவாங்க. இப்போதைக்கு அவங்கப் பேசினதை மனசில் வச்சுக்காத. நான் ஊருக்குப் போற முன்னாடி அவங்களுக்கு எடுத்துச் சொல்லிட்டுப் போறேன்” என சந்திரன் கூறவும், சரி என்று தலையாட்டினாள்.
ஏனோ சந்திரன் சொல்லுவது நடக்கும் என்று தோன்றவில்லை. சந்திரன் அவன் அன்னையோடு இருக்கும் நேரம் மிகவும் குறைவு. அந்த நேரங்களிலும் காமாட்சியின் கவனம் முழுதும் சந்திரன் சவுகரியங்கள் சார்ந்து இருக்கும் என்பதால், மற்றவரிடத்தில் வெளிப்படும் அவரின் குணம் பற்றி சந்திரனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
-தொடரும் –
Very smooth flow. மெது மெதுவாகத் துவங்குகின்றன பிரச்சனைகள். எதையுமே மிகைப் படுத்தி சொல்லாமல் யதார்த்தமா சொல்லி இருக்கீங்க. ஆடம்பரம் இல்லாத அழகான எழுத்து நடை.
மிக்க நன்றி. கதையின் நடை பற்றி ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. நன்றி
பெரியப்பா பழமைவாதிகள் இருந்தாலும் நியாயமாத்தான் பேசறார். இந்த அம்மாவாலதான் பிரச்சனை ஆரம்பிக்குமோ?
பிரச்சினை ஆரம்பிக்கும் தான். நன்றி மா
சந்திரன் அம்மாவால தான் பிரிச்சிருப்பாங்க
Prachchanai yennannu 2 perukkum theriyuthu…etha chandran kekka ponaa vera vithamaa therumba chance erukku…appdiye vidrathu nallathu…paakkalaam yenna nadakkuthu nu 👍👍👍👍
பிரச்சினை இல்லாமல் குடும்பமா. சந்திரன் என்ன செய்யப் போகிறான்னு அடுத்து படித்துத தெரிந்து கொள்ளுங்கள். மிக்க நன்றி சகோதரி
அப்படியா? தங்களின் தொடர்ந்த கருத்துகளுக்கு மிகுந்த நன்றிகள்
சத்யா நடிப்பதில்லைன்ற முடிவை மாமியாரால் மாத்திக்கிட்டாளா
முடிவு அவள் கையிலா, காலத்தின் கையிலா? தொடர்ந்து படியுங்கள். நன்றி நன்றி
Problems slowly started. Family na appadi than. Mothers are always like that. Marumagal nu oruthi vanthutaale maamiyaar thought maaridum.
குடும்பம் னா அப்படித்தான். அழகா சொல்லிட்டீங்க. மிக்க நன்றி