சத்யா, சந்திரன் இருவரும் வீட்டிற்குச் செல்ல, வாசலிலே காத்திருந்தார் காமாட்சி. இதுவரை அப்படி அமர்ந்தது இல்லை. இது அவரின் சீரியல் நேரம் வேறு. யாரும் வாசலில் கூப்பிட்டால் கூட வீட்டில் இருப்பவரைத் தான் அனுப்பி வைப்பார் காமாட்சி. இன்றைக்கு இப்படி அமரவும் சத்யாவிற்கு முகம் சுருங்கியது. தன்னைச் சரி செய்துக் கொண்டு உள்ளே சென்றாள். அவளின் பின்னோடு சந்திரனும் உள்ளே செல்ல, காமாட்சிக்கு சுருக்கென்றது.
வெளியேச் சென்று திரும்பும்போது, சந்திரன் தன் அன்னையைக் கண்டால் என்ன என்று கேளாமல் சென்றது இல்லை. இன்றைக்கு அன்னையைக் கண்டாலும், ஒன்றும் சொல்லாமல் சென்றது காமாட்சிக்கு கோபமாகியது.
சந்திரன் அதை வேண்டுமென்று செய்யவில்லை. சத்யா, காமாட்சி இருவருக்கும் சண்டை வராமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணமே பிரதானமாக இருந்தது. அதனால் காமாட்சியைக் கண்ணால் பார்த்தாலும், கருத்தில் பதியவில்லை. இன்றைய சண்டைக்கு இதுவே பிள்ளையார் சுழி போடப் போகிறது என்று அவன் அறிந்திருக்கவில்லை.
சத்யா கையில் வைத்திருந்த பையை ஓரமாக வைத்துவிட்டு, விளக்கு வைக்கும் நேரம் என்பதால் முகம் கழுவி வர கீழே உள்ள குளியலறைக்குச் சென்றாள். ஹால் சோபாவில் அமர்ந்து இருந்த சந்திரனைப் பார்த்த காமாட்சி ,
“பெரியவர் என்ன சொன்னாரு சந்திரா? உன் பொண்டாட்டி கிட்டே நல்லா எடுத்துச் சொன்னாரா?” என்றார்.
தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு உள்ளே வந்த சத்யாவிற்கு, காமாட்சி பேச்சு சினத்தை ஏற்படுத்தியது. பெரியவர் இல்லத்திலிருந்து கிளம்பும்போது இருந்த கோபம், சந்திரன் பேச்சில் குறைந்து இருந்தது. என் கணவருக்கு என்னைப் பற்றித் தெரிகிறது. மற்றவர்களைப் பற்றி நமக்கு ஏன் கவலை என்ற எண்ணம். மாமியாரின் பேச்சு மறைந்திருந்தக் கோபத்தைக் கிளறியது. அவருக்குப் பதில் கூற வாய் திறக்கையில், சந்திரன் பேச ஆரம்பிக்கவும் சத்யா மௌனமாக நின்றாள்.
சந்திரன் “சத்யாக்கு என்ன எடுத்துச் சொல்லணும்? அதுவும் பெரியப்பா சொல்ற அளவிற்கு இங்கே என்ன நடந்தது?” எனக் கேட்டான்.
காமாட்சி ஒரு கணம் திணறினாலும் “அது வந்து, நடிக்கப் போறது எல்லாம் கூடாதுன்னு சொன்னாரான்னு கேட்டேன்” என்றார்.
“என்கிட்டே அவ நடிக்கிறதா சொல்லலை. ஏன் உங்க கிட்டே சத்யா சொன்னாளா?”
“இல்லைதான். ஆனா நடிக்கிறவளுக்கு எல்லாம் ஏத்துப் பேசறா. அவ மனசில அந்த நினைப்பு இல்லாமலா பேசுவா?”
“மா, அவளுக்கு என்ன தோணுதோ அதைச் சொல்றா. உங்களுக்குப் பிடிக்கலைனா அதைப் பத்தி பேசாதீங்க. ஏன் ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க? நம்ம வீட்டு விஷயம் வெளிலே தெரியணுமா? பெரியப்பா வரை போகனுமா?”
“ஏன் தெரிஞ்சா என்ன? நம்ம வீட்டுப் பஞ்சயாத்து பெரியவர் தானே பைசல் பண்ணுவார். அதான் அவர கண்டிஷனா பேசச் சொன்னேன்”
“அம்மா, நீங்க எதுவும் சொல்லி அவக் கேக்கலையா. அப்படின்னா முதலில் என்கிட்டே தானே சொல்லணும். இல்லை அப்பா கிட்டே சொல்லிருக்கணும். அதுவும் நடக்காத ஒரு விஷயத்தை நடந்துருமோன்னு நினைச்சுக்கிட்டு பேசறீங்க. இது நல்லா இல்லை.”
“என் பயம் எனக்குத் தான் தெரியும். நீ நாலு நாளில் கிளம்பிப் போயிடுவ. அதுக்கு அப்புறம் அவ இஷ்டப்படி நடந்தா யாரு பாக்குறது.”
அம்மா, பிள்ளை வாக்குவாதம் கேட்டு சந்திரனின் தந்தை லோகநாதன், அவன் தம்பி சரவணன் இருவரும் கூடத்திற்கு வந்துவிட்டனர். சத்யாவிற்கு பெரும் அவமானமாக இருந்தது.
“ஏன்மா இப்படி இருக்க?“ என்று சரவணன் திட்ட, சந்திரனுக்கோ கோபம் வர ஆரம்பித்தது.
இத்தனை நேரம் பொறுமையாக எடுத்துக் கூறினால் தன் அன்னை புரிந்துக் கொள்வார் என்று தான் நினைத்து இருந்தான். இப்போது தான் காமாட்சி தன் எண்ணத்தை எந்த காரணத்தினாலும் மாற்றிக் கொள்ள மாட்டார் எனப் புரிந்துக் கொண்டான்.
“அம்மா, இப்போ என்ன பண்ணனும் உங்களுக்கு?” எனக் கேட்டான் சந்திரன்.
“உன் பொண்டாட்டி நடிக்கப் போகக் கூடாது.” என்றார் காமாட்சி.
“இனிமேல் அது எனக்கும் அவளுக்கும் நடுவில் உள்ளது. நீங்க தலையீடாதீங்க” என சந்திரன் கூற,
“இது என்னோட வீடு. இந்த வீட்டில் இருக்கிறதுனா நான் சொன்னதைத் தான் செய்யணும்.” என்றார் காமாட்சி.
“மா,” என்றவன் , “நான் உங்க பையன் தானே. இந்த இடம் தாத்தா சொத்து. இதை எடுத்துக் கட்டினது நான். அப்போ எனக்குப் போக தான் எல்லோருக்கும்.“ என்றான் சந்திரன்.
“ஓ. அந்த அளவிற்கு போயிடுச்சா. பட்டணத்துப் பொண்ணுங்க லேசுப்பட்டவங்க இல்லைன்னு சொல்றது சரிதான் போல். வாழ வந்து முப்பது நாள் ஆகலை. கட்டின மஞ்சக் கயிறு நிறம் கூட மாறலை. அதுக்குள்ளே சொத்துப் பிரிக்கப் பார்க்கறியே. என்னிக்கும் என்னைப் பார்த்தா என்னம்மான்னு கேட்காம போக மாட்டான். இன்னைக்கு பொண்டாட்டி உள்ளே போகவும் பின்னோடு போறான். இதுதான் பட்டணத்துப் பவிசோ“ என காமாட்சி நேரடியாக சத்யாவிடம் சண்டையிட்டார்.
சத்யா பதிலுக்கு “இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யார் யாருக்கு என்ன சொத்து இருக்குன்னு கணக்கு எடுக்கற வேலை நான் பார்க்கலை. உங்க பிள்ளை நேரா வந்து ஹாலில் தானே உட்கார்ந்தார். தனியா எங்க ரூமுக்காப் போனோம். வீட்டுக்குள்ளே வந்த மனுசனுக்குத் தண்ணி கூட கொடுக்கலை. இதுதான் உங்க கிராமத்துப் பவிசா? எல்லா சொந்த பந்தங்களோட வாழனும்னு தான் கல்யாணம் செஞ்சுட்டு வந்தேன். உங்க கற்பனைக்கு எல்லாம் நான் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது” என்று பேசினாள்.
சந்திரனின் தம்பியும், அப்பாவும் என்ன இப்படிப் பேசறா என்று சத்யாவைப் பார்த்தனர். அவளின் பேச்சுத் தொனி எடுத்தெறிந்து பேசுவது போல இருந்தாலும். உண்மையில் ரொம்பவேத் தன்மையோடு தான் பேசிக் கொண்டிருந்தாள். தன்னை யார் குறை கூறினாலும் பொறுத்துக் கொள்ள மாட்டாள். அப்படிப்பட்டவள் சந்திரன் என்ற மனிதனுக்காக மட்டுமே இத்தனை பொறுமையாய்ப் பேசினாள்.
இத்தனை நேரம் தன் பையனிடமும் மல்லுக்கட்டினது தான் தானே என்ற எண்ணம் கூட இல்லாமல், “பாருடா சந்திரா, இன்ன வரைக்கும் யாராச்சும் என்கிட்டே இப்படிப் பேசியிருக்காங்களா? நான் உனக்காகத் தானே பேசினேன். இப்படி மட்டு மரியாதை இல்லாமல் பேசறவ நாளைக்கு என்னை மீறிப் போக மாட்டான்னு என்ன உறுதி இருக்குன்னு சொல்லு. இது சரிப்படாது. நாளைக்கே அவ பெத்தவங்களை வரச் சொல்லு. என்னன்னு பைசல் பண்ணிடலாம்” என்றார்.
அதற்கு சத்யா “இங்கே பாருங்க. தேவையில்லாம அவங்க வரைக்கும் போச்சுன்னா, நான் மாமியார் கொடுமைப்படுத்தறாங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்லே கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்” என்றாள்.
அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்து நிற்க, சந்திரன் “சத்யா, என்ன பேச்சு இது? இன்னிக்கு இல்லை என்னிக்கா இருந்தாலும் குடும்ப விஷயம் இந்த வீட்டு வாசல் தாண்டி வெளியேப் போகக் கூடாது. இந்த ஒரு தடவை தான் சொல்லுவேன். என்னை நம்பினால் இதை இத்தோடு விடு.” என்றான்.
சத்யாவிற்கு கோபம் வந்தாலும், “நான் இதைப் பற்றி இனிமேல் பேசலை.” என்று கூறிவிட்டு தங்கள் அறைக்குச் சென்றாள்.
சத்யா சென்றதும் தன் அன்னையிடம் திரும்பிய சந்திரன் “மா, நீங்க செய்யறது நல்லதாப் படலை. இப்படியே பேசிட்டு இருந்தீங்கனா, நானே அவளைக் கூட்டிட்டுத் தனியாப் போயிருவேன். அப்புறம் அதுக்கும் பஞ்சயாத்து வச்சா, நான் வரக் கூட மாட்டேன். சொல்லிட்டேன்.” எனக் கூறிவிட்டு தானும் தன் அறைக்குச் சென்று விட்டான்.
சந்திரன் அறைக்கு வரவும், சத்யா முகத்தைத் திருப்பிக் கொள்ள, சந்திரனுக்கும் கோபம் வந்தது. அதே நேரம் வருத்தமாகவும் இருந்தது. இன்னும் நான்கு நாட்களில் பணிக்குத் திரும்ப வேண்டும். அதன் பின் அடுத்த லீவு வரை கடிதம் மூலம் மட்டுமே குடித்தனம் நடத்த முடியும். வருடத்திற்கு ஒருமுறை விடுமுறை என்றாலும், அது சரியாக அடுத்த வருடம் இதே நாள் என்று எல்லாம் சொல்ல முடியாது. வேலைப் பொறுத்து, இடம் பொறுத்து எல்லாமே மாறும். இந்த நேரத்தில் இப்படி பிரச்சினையா என்று வேதனையாக இருந்தது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த சந்திரன் , “சத்யா” என்றழைக்க, அந்த குரல் மாறுபாட்டில் அவனின் பக்கம் திரும்பினாள் சத்யா. பொதுவில் கம்பீரமாகவும், தங்களின் தனிமையில் குழைந்தும் மட்டுமே கேட்ட சந்திரனின் குரலில் இன்றைக்கு வருத்தமும், வேதனையும் தெரிந்தது.
“சந்துரு” என சத்யா கேள்வி போல கேட்கவும், “ம்” என்று தன்னைச் சரி செய்துக் கொண்டான்.
“சத்யா, உனக்குப் பிரச்சினைனா, நேரா அம்மாகிட்டேயேப் பேசிடு. இல்லை என்கிட்டே சொல்லு. நான் கேட்கறேன். போலீஸ் அது இதுன்னு சொல்லி என்னையும் டென்ஷன் ஆக்காதே.” என்றான்.
சத்யா பேசியதில் சந்திரனுக்கு லேசான பயமே வந்துவிட்டது. என்னதான் மிலிட்டரியில் வேலைப் பார்த்து, நாட்டு நடப்புகள் தெரிந்து இருந்தாலும், வீட்டு விஷயம் என்று வரும்போது இயல்பான குடும்பஸ்தனாகவே சிந்தனை ஓடியது.
தன் பெற்றோரைக் கூப்பிட வேண்டும் என்று காமாட்சி சொன்னதில் தான் போலீஸ் பேச்சை எடுத்தாளேத் தவிர, உண்மையில் அப்படி எல்லாம் சட்டென்று செய்யக் கூடியவள் இல்லை சத்யா.
மீண்டும் சந்திரனின் மேல் கோபம் வந்தாலும், அவனின் நிலைமையும் அவளால் புரிந்துக் கொள்ள முடிந்தது.
சிறு முகச் சிணுக்கத்துடன், “நீங்க நினைக்கிற அளவிற்கு நான் ராட்சசி இல்லை. நான் அந்த வார்த்தை சொல்லலைனா, நீங்க கிளம்பின பின்னாடி இன்னும் என்னைப் பேசுவாங்க. அந்த நேரம் என் மைண்ட் எப்படி இருக்கும்னு தெரியாது. ஒருவேளை நிஜமாவே செஞ்சுட்டா நீங்க வருத்தப்படுவீங்க. அதனால் தான் முன்னாடி சொன்னேன். மத்தபடி எனக்கும் குடும்ப விஷயம் வெளியில் தெரியறதில் விருப்பம் கிடையாது” என்று சத்யா கூறவும், சந்திரன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.
பின் இரவு உணவிற்கு கூடச் செல்லாது, ஒருவரையொருவர் அணைத்தப்படி உறங்கி விட்டனர்.
காமாட்சி தன் மகன் இரவு உணவிற்கு வரவில்லையே என்று அலைபாய, கணவனும், இளையவனும் சேர்ந்து பயமுறுத்தியே அவரை உறங்க அனுப்பினர்.
மறுநாள் காலையில் சத்யா, சந்திரன் இருவரும் ஒன்றாகவே எழுந்து வர மீண்டும் காமாட்சி ஆரம்பித்தார்.
“வீடான வீட்டில் பொழுது விடிஞ்சு இவ்ளோ நேரம் கழிச்சு எழுந்து வர. இராத்திரிலே புருஷங்காரன் சாப்பிடலையே. சீக்கிரம் எழுந்து காபித் தண்ணி கொடுப்போம். பலகாரம் ஆக்குவோம்னு இல்லாம மகாராணி கணக்கா வந்தா என்னனு நினைக்கிறது?” என ஆரம்பிக்க, சந்திரன் தலையில் கை வைத்தான்.
சத்யாவோ “ஏன் உங்க மகன் மட்டும் தான் பட்டினியாப் படுத்தாரா? நான் நல்லா மூக்குப் பிடிக்கத் தின்னுட்டு உலாத்துனேனா. என்னவோ சூரியன் உச்சிக்கு வந்ததும் எழுந்து வந்த மாதிரி பேசறீங்க. வழக்கத்தை விட பத்து நிமிஷம் லேட். இன்னும் நீங்க வாசத் தெளிச்சுக் கோலம் கூட போடலை. மாடிப் படிய காவல் காத்துக்கிட்டு இருக்கீங்க. இங்கே யாரு மகாராணினு மத்தவங்களுக்கேத் தெரியும்” என்று பதில் கொடுத்தாள்.
இந்தப் பதிலை காமாட்சி எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவரும் விடாமல் பேசிக் கொண்டு தான் இருந்தார். சத்யாவும் பதில் கொடுத்தாள். இப்படியே அடுத்த நான்கு நாட்களும் செல்ல, சந்திரன் ஊருக்குக் கிளம்பும் நாள் வந்தது.
எப்போதும் சந்திரன் கிளம்பும்போது அவனின் தங்கைகள் தங்கள் கணவர், பிள்ளைகளோடு வந்து வழியனுப்புவது வழக்கம். இந்த முறையும் காமாட்சி வரச் சொல்லியிருக்க, அவரின் பெண்கள் இருவரும் மறுத்தனர். தாங்கள் வந்தால் அண்ணன், அண்ணியோடு நேரம் செலவிட முடியாது என்று கூறினார்கள்.
அதற்கு ‘உங்கண்ணன் மேலே பாசமே இல்லையா? அவன் இல்லைனா, இப்படி ஒரு வசதி வாய்ப்போடு கல்யாணம் நடந்திருக்குமா? நான் இருக்கும்போதே இப்படி. பின்னாடி உங்கண்ணன் தான் உங்களுக்கு எல்லாம் செய்யணும்’ என்று எல்லாம் பேசி, அமுதா, அகிலா இருவரையும் வரவழைத்தார்.
வீட்டிற்கு வந்த பெண்களிடத்தில் அண்ணனுக்கு அதைச் செய், இதைச் செய் என்று அதட்டியவர், மருமகள் பற்றிக் குறை கூறவும் மறக்கவில்லை. பெண்கள் இருவருக்கும் சற்று வருத்தம் தான் என்றாலும், சத்யா இடத்தில் இருந்து பார்த்தால் சரியாகவேத் தோன்றியது. அன்னைக்கு ஆறுதல் கூறினாலும், சத்யாவிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
சத்யாவிற்கும் மாமியாரின் பேச்சு எல்லாம் கேட்டது தான். சந்திரன் ஊருக்குக் கிளம்பும்போது அவனைக் கவலைப்படுத்த வேண்டாம் என்று எண்ணி கண்டு கொள்ளாமல் விட்டாள்.
தங்களின் அறையில் சந்திரனிடம் “சந்துரு, என்னையும் உங்களோடு அழைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தால் சீக்கிரம் ஏற்பாடு செய்யுங்க. இப்படி ஒவ்வொரு நாளும் நாங்க இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பது எனக்குமே அசிங்கமாக இருக்கிறது. அதனால் என்ன செய்ய வேண்டுமோ சீக்கிரம் செய்து விடுங்க” எனச் சத்யா கேட்டாள்.
சந்திரனும் அதையே நினைத்தான் தான். சத்யாவின் பொறுமை எத்தனை நாள் என்று தெரியாது. அத்தோடு அவன் அன்னையும் லேசுப் பட்டவர் இல்லை. பேசியே சத்யாவைத் தூண்டி விட்டுக் கொண்டிருப்பார்.
சந்திரனைப் பொருத்த வரை அவனால் அதிக நாட்கள் வீட்டில் இருக்க முடியாது. வீட்டில் ஒன்றாய் இருக்கப் போகிறவர்கள் அம்மாவும், மனைவியும் தான். அம்மாவின் விருப்பபடி திருமணம் செய்து கொண்டால், அவர்களுக்குள் ஒத்துப் போய்விடும் என்று எண்ணினான்.
ஆனால் தன் அன்னையின் குணத்திற்கு இருவரும் பிரிந்து இருப்பது தான் இருவருக்குமே நல்லது என்று தோன்றியது. கூடிய விரைவில் தன்னோடு சத்யாவை அழைத்துக் கொள்ளத் தேவையான ப்ரொசீஜர்ஸ் பார்க்க வேண்டும் என உறுதி கொண்டான்.
நினைப்பதெல்லாம் நடந்து விடுமா என்ன ?
-தொடரும்-
சில இடங்களில் மௌனம் காத்து இருக்கலாம் என்றாலும், சத்யாவின் பேச்சு நியாயமாகத்தான் இருக்கு. கதை நகரும் பாதை புரிகிறது. சந்திரன் கூட கூட்டிட்டு போயிடுவார்னு நினைச்சா கடைசி லைன்லே ஒரு ஷொட்டு வெச்சுட்டீங்க. காத்திருந்து பாப்போம். நடை ரொம்ப நல்லா இருக்கு.
நன்றி நன்றி. நினைச்சபடி எல்லாம் நடக்குமா என்ன? என்ன காத்திருக்கிறது என வரும் அத்தியாயங்களில் படிக்கலாம். மிக்க நன்றி
mamiyar pesina elaru, ketute iruka matangale athe mari tha sathya pesita athula thappu illaye . sathya kovama pesalaye ethum pathil tha kodutha . aanalum inga irunthu ippadi pesitu iruntha sari irukathu athanala kuda kutitu porathu crt so sikram procedures pannu chandru
சந்தரு நினைச்சபடி நடந்திடுமா என்ன ? ரொம்ப அழகா கதையை ஃபாலோ பண்ணறீங்க சகோதரி. மிக்க நன்றி
Nice update 👍👍👍👍
நன்றி
இவர்களால் தான் பிரச்சனை வருது. பேசாம அவள அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம்
அங்கே போனாலும் காமாட்சி விட்டுடுவாரா என்ன? மிக்க நன்றிமா
Chandran mother is a typical maamiyaar. She should think she was also marumagal before.
Sathya pesinathu thappe illai. Chandran thanikudithanam poga sammathipaana?
காமாட்சி பேசறது செய்றது ரொம்ப ஜாஸ்தி. .. சத்யா பேசியது சரி தான் இவங்களால தான் இரண்டு பேரும் பிரிச்சிருப்பாங்க
இவங்க பிரிஞ்சிருக்க அவங்களும் ஒரு காரணம். மற்றது விரைவில் தெரிய வரும். மிக்க நன்றி சகோதரி
மாமியார் மாமியார் தான் அப்படின்னு காட்டிகிட்டே இருக்காங்க காமாக்ஷி அம்மா சந்திரன் சத்யாவ அவனோட கூப்பிடறதுக்கு முன்ன காமாக்ஷி அம்மா சத்யாவ அவ அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிடுவாங்க போல
ஆமா.. ஆமா .. மாமியார் அப்படிதான். சத்யா வீட்டுக்கு மாமியார் அனுப்பறாங்களா இல்லையானு அடுத்த எபிசோட் லே படிங்க.
நன்றி நன்றி