சந்திரன் மீண்டும் தன் பணிக்குத் திரும்பிச் சென்று முப்பது நாட்கள் சென்றிருந்தது. இந்த முறை திருமணம் என்ற காரணத்தால் பத்து நாட்கள் அதிக விடுப்பு எடுத்திருக்கவே, பணிக்குச் சென்றவுடன் வேலைப் பளு அதிகமாகவே இருந்தது. எல்லையில் ஊடுருவல் நடந்திருக்க, எல்லைப் பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.
சிறு இராணுவக் குழுவினருக்கு சந்திரன் தலைமையேற்று இருந்தான். வேலைகள் அதிகமாகவே இருந்தது. அதனிடையில் வீட்டிற்கு அழைத்துப் பேச எல்லாம் இயலவில்லை. வந்து சேர்ந்தவுடன் பேசியதோடு சரி.
சந்திரன் சென்ற பிறகு மீண்டும் காமாட்சி சத்யாவை ஏதாவது சொல்லிக் கொண்டு தான் இருந்தார். சத்யாவும் பதில் கொடுத்துக் கொண்டு இருந்தாள். அவளின் நாத்தனார்கள் கூட தங்கள் அம்மாவை அமைதியாக இருக்கும்படி கூறினார்கள் தான். ஆனால் காமாட்சி யார் சொல்லியும் கேட்கக் கூடியவர் இல்லையே.
நாட்கள் வேகமாக சென்றிருக்க, சத்யாவிற்கு சில நாட்களாகவே சோர்வாக இருந்தது. உடலும் இளைக்க ஆரம்பித்து இருக்க, ஊரில் உள்ளவர்கள் எல்லாம் கேட்க ஆரம்பித்து இருந்தனர். காமாட்சிக்கும் கேட்க வேண்டும் என்று தோன்றியது தான். ஆனால் அவரின் குணம் இடம் கொடுக்கவில்லை.
காமாட்சிக்குள் சிறு சந்தேகம் இருந்தது ஆனால் ஒருவேளை அப்படி இல்லையென்றால், தன் சந்தேகத்தை எதிர்பார்ப்பு என்று கூறி, அதற்கும் சத்யா எதுவும் பதில் பேசுவாளோ என்றே வாய் திறக்காமல் இருந்தார். அவ்வப்போது வாய் பேசினாலும், தன் மகன் இல்லாத நேரத்தில் எந்த பெரிய சிக்கலுக்குள்ளும் காமாட்சி செல்ல விரும்பவில்லை.
ஒரு நாள் சத்யாவிற்கு வயிற்றில் எதுவும் தங்காமல் விடாமல் வாந்தியாக வெளியேற, பயந்து போன காமாட்சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். காமாட்சி நினைத்தது போல் சத்யா பிள்ளை உண்டாகியிருந்தாள். டாக்டர் அவளை கேள்விகள் எல்லாம் கேட்டு, பரிசோதனைகள் மூலம் உறுதி செய்தார். சத்யா பொதுவாக ஆரோக்கியமாக இருப்பதாகக் கூறியவர், முதல் சில மாதங்களுக்கு ஓய்வில் இருப்பது நல்லது என்று அறிவுறுத்தினார்.
வீட்டிற்கு சென்று எல்லோரிடத்திலும் கூற, அனைவருக்கும் மகிழ்ச்சியே. காமாட்சி கூட வாயெல்லாம் பல்லாகத் தான் தெரிந்தார். என்னதான் மகள்கள் மூலம் பேரன், பேத்தி என்று பார்த்திருந்தாலும், இவர்கள் வம்சத்தின் அடுத்த வாரிசு என்பது மகன் வயிற்றுப் பிள்ளைகள் தானே. அந்த சந்தோஷம் அவரிடத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது.
விஷயம் சத்யாவின் பெற்றவர்களுக்குச் சொல்லப்பட அவர்கள் சத்யாவை வந்து பார்த்துச் சென்றனர். அவர்களிடத்தில் சாதாரணமாகவே நடந்துக் கொண்டார் காமாட்சி. ஒற்றைப் படை மாதத்தில் அழைத்துச் செல்லக் கூறி அனுமதியும் கொடுத்தார். எல்லாருக்கும் தெரிய வந்த இந்த சந்தோஷமான செய்தி, சந்திரனுக்கு மட்டும் சொல்லப்படவில்லை.
சந்திரன் பதினைந்து நாட்கள் முன் பேசியது தான். தற்போது வரை அவனைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. வழக்கமாக உடனே சென்று சேர வேண்டிய தகவல்கள் தவிர மற்றவற்றை கடிதமாக எழுதி அனுப்பி விடுவார் சந்திரனின் தந்தை. இந்த முறை வீட்டினரிடம் தானே மீண்டும் தொடர்பு கொள்வதாகக் கூறியிருக்கவே, எல்லோரும் அவனின் போனிற்காக காத்து இருந்தனர்.
காமாட்சி தற்போது சத்யாவை நன்றாகவே கவனித்துக் கொண்டார். சிறு சிறு வார்த்தைப் போர்கள் நடந்தாலும், அதை அப்படியே இருவரும் விட்டுச் செல்லப் பழகியிருந்தனர். சத்தான உணவு, ஓய்வு எல்லாமே டாக்டர் அறிவுரைப்படியும், அதே சமயம் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டும் சத்யா நடந்துக் கொண்டாள். மூன்றாம் மாதம் நடக்கையில், சத்யாவின் பெற்றோர் முறைப்படி சீர் செய்து தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து சந்திரன் வீட்டிற்கு ஃபோன் செய்தான். வீட்டில் உள்ளவர்களை நலம் விசாரித்து விட்டு, சத்யாவைக் கேட்க, அவள் பெற்றோர் வீட்டில் இருப்பதாகக் கூறப்பட்டது. என்ன விஷயம் என்று கேட்கையில் தான் அவன் தந்தையாகப் போகும் செய்தியைக் கூற, மிகுந்த சந்தோஷமாக இருந்தது.
சத்யாவிற்கு பேச வேண்டும் என்று நினைக்கையில் இன்னும் எல்லைப் பிரச்சினை முடிவடையாததால் இராணுவத்தினருக்குக் கட்டுப்பாடுகள் அதிகமிருந்தது. ஒரே இடத்தில் சில நாட்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். அப்படி இருந்தால் எதிரிகளுக்கு இவர்களின் பலம் தெரிந்துவிடும் என்பதால். மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இவர்கள் காவல் நிற்கும் எல்லையில் இராணுவத் தொலைப்பேசிகள் தவிர மற்றவைகளுக்கு சிக்னல் கிடையாது. எனவே ட்ரூப் மாற்றிச் செல்லும் வழியில் சிக்னல் கிடைத்த இடத்தில் பேசினான். மற்றும் ஒரு ஃபோன் கால் எல்லாம் பேச வாய்ப்பில்லை. அதனால் தன் வீட்டினரிடம் சத்யாவைப் பார்க்கச் செல்லும்போது தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கச் சொன்னான்.
சத்யவதியின் உடல் ஓரளவு தேறி, பிரசவ கால அசௌகரியங்கள் கட்டுக்குள் வரவும், அவளைப் புகுந்த வீட்டில் கொண்டு விட வேண்டும் என்று முடிவு செய்தனர். பிறகுதான் வளைகாப்பு நடத்தி, மீண்டும் பிரசவத்திற்கு அழைத்து வரமுடியும். அதைப் பற்றி காமாட்சியிடம் பேச, அவர் தாங்கள் அந்த வார இறுதியில் நேரில் வருவதாகவும் அப்போது எல்லாமே முடிவு செய்து விடலாம் என்றும் கூறினார்.
சத்யாவின் பிரசவம் சென்னையில் தான் என்பதால் இவர்கள் வீட்டிற்கு ஓரளவு அருகில் இருந்த நல்ல மருத்துவமனையில் தற்போது ஒருமுறை செக்கப் செய்து வந்தனர். ஊரில் இருக்கும் டாக்டரிடமும் கலந்துக் கொள்ள வசதியாக அவளின் ஃபுல் மெடிக்கல் ரிப்போர்ட், ஸ்கேன் ரிப்போர்ட் எல்லாமும் ஃபைல் போட்டுக் கொடுத்துவிடுகிறோம் என்று கூற, மறுநாள் வரச் சொல்லிக் கூறினார்.
ரிப்போர்ட்ஸ் வாங்கி வரும் வழியில் சத்யா நடித்துக் கொண்டிருந்த நாடகக் குழுவின் சக நடிகை ஒருவர் பார்க்க, அவரோடு பேசிவிட்டு வந்தனர். அவர் தங்கள் குழுவில் மற்றவரிடம் சத்யா வந்திருப்பதைக் கூற, எல்லோரும் சேர்ந்து அந்த வாரயிறுதியில் சத்யாவைப் பார்த்து வர முடிவு செய்தனர்.
காமாட்சி தன் மகள்களோடு சத்யா வீட்டிற்கு வந்திருந்தார். வாராயிறுதி அன்று காலையில் புறப்பட்டு மதியம் சாப்பாட்டு நேரத்திற்கு வர, சத்யாவின் பெற்றோர் நன்றாகவே விருந்து வைத்தனர். சாப்பிட்டதும் சந்திரன் பேசியதைக் கூறியவர், தற்போதும் அவன் சிக்னல் கிடைக்காத இடத்தில் இருப்பதால், சிறிது நாட்கள் கழித்துப் பேசுவதாகக் கூறியதையும் சொன்னார் காமாட்சி. சத்யாவிற்கு தன்னோடு சந்திரன் பேசாதது சிறு வருத்தம் இருந்தாலும், அவனின் நிலைமையைப் புரிந்து கொண்டாள்.
அதன் பின் பேச்சு சந்திரனால் வரமுடியுமா என்பதைப் பொறுத்து ஏழு அல்லது ஒன்பதாம் மாதம் வளைகாப்பு வைக்கலாம் என்றும், தேதிகள் மட்டும் குறித்து வைத்தனர். அந்த வாரத்திலேயே சத்யாவை கணவன் வீட்டில் கொண்டுவிடவும் பேசினார். சத்யாவின் சகோதரி வேதாவும் வந்திருக்கவே மாலை தேநீர், சிற்றுண்டி என நேரம் செல்ல, சந்திரனின் வீட்டினர் புறப்பட ஆயத்தமாகினர்.
அந்த சமயத்தில் இரு நாட்கள் முன்பு சத்யாவைப் பார்த்திருந்த சக நாடகக் குழு நடிகை மேலும் சிலரை அழைத்துக் கொண்டு சத்யாவின் வீட்டிற்கு வந்தார். அவர் கையில் பழங்களும், இனிப்புகளும் இருக்க சத்யாவின் உடல்நிலை தெரிந்து வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது. வேதா எல்லோரையும் வரவேற்று உபசரிக்க, சத்யாவின் பெற்றோர் அவர்களுக்கு காபி, டீ எனக் கேட்டு தயார் செய்யச் சென்றனர்.
வரவேற்பறையில் எல்லோரும் அமர்ந்திருக்க, சத்யா தன் புகுந்த வீட்டினரை அவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். எல்லோரும் வணக்கம் தெரிவிக்க, பேருக்குத் தலையசைத்தார் காமாட்சி.
வந்தவர்கள் சத்யாவோடு பேச ஆரம்பித்தனர். “சத்யா, இப்போ எல்லாம் நடிப்பதற்கு நிறைய நல்ல வாய்ப்புகள் வருகிறது. எல்லா தனியார் சேனலும் தனியாக சீரியல்கள் தயாரிக்கிறார்கள். அதனால் எல்லா ஆர்டிஸ்ட்டுக்கும் வாய்ப்பு இருக்கு. உனக்கு நல்ல திறமை இருக்கு. அதோட உன் குரலுக்குத் தனியா டப்பிங்கும் செய்தால் எங்கியோ போயிடலாம். எங்கியோ கிராமத்தில் இருந்து உன்னுடைய திறமை வீணாகப் போகும். உன் கணவர் வரும் நாட்களில் பிரேக் எடுத்துக்கிட்டு மற்ற நேரங்களில் இங்கேயே இருந்தால் நன்றாக முன்னுக்கு வந்துவிடலாமே” என்றார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த காமாட்சிக்கு கொதிக்க ஆரம்பித்தது. அவர்கள் சத்யாவோடு தானே பேசிக் கொண்டிருக்கிறார்கள். சத்யா அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறாள் என்று எல்லாம் யோசிக்காமல் “இங்கே பாருங்க. வந்தீங்களா, உங்க கூட்டுக்காரிகளைப் பார்த்தோமா, கொடுக்கிற டீ, காபித் தண்ணியக் குடிச்சிட்டு கிளம்பினோமான்னு இருக்கணும். அதை விட்டுட்டு அடுத்தவங்க குடிய கெடுக்கிற வேலை எல்லாம் என் வீட்டு மருமக கிட்டே வச்சுக்கக் கூடாது. சொல்லிட்டேன்” என்றார்.
சத்யாவின் நண்பர்கள் அனைவரும் திடுக்கிட்டு எழுந்தனர். எல்லோரும் கோபப்பட்டு ஏதோ பேசப் போக அவர்களில் சற்றுப் பொறுமையான ஒரு பெண் மட்டும் “நீங்க நினைக்கிற மாதிரி நாங்க இல்லைமா. சத்யாவோட திறமைக்கு இங்கேயே இருந்தா நல்லா இருக்குமேன்னு அர்த்தத்தில் சொன்னோம். மற்றபடி யாருடைய குடும்பத்தையும் கெடுக்கிற அவசியம் எங்களுக்கு இல்லை” என அமைதியாக அதே சமயம் அழுத்தமாகக் கூறினார்.
சத்யாவிற்கும் தன் மாமியார் மேல் கோபம் வந்தது. வந்திருப்பவர்கள் வெளி மனிதர்கள். அவர்களின் அபிப்பிராயங்களைச் சொல்லிவிட்டுப் போகிறார்கள். எந்த முடிவும் எடுக்கப் போவது நான் தானே. என்னிடம் பேசுவதை விட்டு விட்டு எதற்காக விருந்தினரை அவமதிப்பது போல பேசுகிறார் என்று ஆத்திரம் அடைந்தாள்.
“அத்தை, அவங்க என்னோட விருந்தாளி. அவங்க நாலு விஷயம் பேசுவாங்க. எது வேணும், வேண்டாம்னு நான் தான் முடிவெடுக்கணும். இந்த விஷயத்திலே நீங்க ஏன் தலையிடறீங்க? அப்படிச் சொல்லணும்னா எங்க குடும்பத்தில் இது சரிப்பட்டு வராதுமா. இனிமேல் இதைப் பத்திப் பேசாதீங்கன்னு டீசண்ட்டா சொல்லிட்டுப் போக வேண்டியது தானே. இப்படியா இன்சல்ட் பண்ணுவீங்க?” எனக் கோபப்பட்டாள்.
சத்யாவின் விருந்தினர்கள் பேசியதில் பிடித்தம் இல்லைதான். ஆனாலும் இந்த இடத்தில் தன் அன்னை பேசியிருக்கக் கூடாது என்று தான் நினைத்தனர் அமுதாவும், அகிலாவும். அதற்கு அந்தப் பெண்ணின் பதிலில் கோபமடைந்தாலும், எதுவும் பேசாமல் நின்றனர். இப்போது சத்யாவும் பேசவும் அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல்
“அண்ணி, அம்மா பேசின முறை வேணா தப்பா இருக்கலாம். ஆனால் அவங்க சொல்றது சரிதானே. இந்த மாதிரி யாரும் பேசி உங்களைக் குழப்பி விட்டுடக் கூடாதுன்னு தானே பெரியப்பா வீட்டிற்கு போகும்போது கூட அவரை விட்டு சொல்லச் சொன்னாங்க. நான் கூட தேவையில்லாம அம்மா பேசிட்டு இருக்காங்கன்னு தான் நினைச்சேன். இன்னிக்கு அதுதானே நடக்குது” என அமுதா பேசினாள்.
பெரியப்பா வீட்டிற்கு சென்று வந்ததைப் பற்றிப் பேசியதும் சத்யாவிற்கு இன்னுமே கோபம் வந்தது.
“இப்போ இவங்க வந்து பேசினதுக்கு உங்க அம்மா குதிக்கிறாங்களே. உங்க பெரியப்பா மட்டும் உங்க வீட்டு விஷயத்தில் தலையிடலாமா? அவர் நல்லத்துக்குச் சொல்லுவார்னு சொன்னீங்கனா, இவங்களும் என்னோட நல்லதுக்குத் தானே சொல்றாங்க.” என்றாள் சத்யா.
இப்போதும் காமாட்சி சும்மா இராமல் “ஏய், யாரை யாரோடு இணை சேர்த்துட்டு இருக்க? அவர் குடும்பத்துக்குப் பெரியவர். கண்ட கூத்தாடிங்க இல்லை” என்றார்.
சத்யாவிற்கு கூத்தாடி என்ற வார்த்தைப் பிடிக்காது. அதையும் இகழ்ச்சியாகக் கூறினால் மிகவும் கோபம் வந்துவிடும்.
“கூத்தாடின்னு எல்லாம் சொல்லாதீங்க. என்னோட குடும்பம்னா அது நான், என் கணவர், எங்க பிள்ளைங்க தான். நீங்களே மூணாவது மனுஷங்க தான். இதில் மற்ற உறவுக்காரங்க எல்லாம் கிட்டத்திலேயே வரவிட மாட்டேன். அந்த மனுஷன் வயசுக்கும், அனுபவத்துக்கும் மரியாதை கொடுத்துத் தான் அவர் கிட்டே பதில் பேசலை. நான் நடிக்கப் போறேனா இல்லையா, அது எல்லாம் உங்க பிள்ளைகிட்டேப் பேசித் தான் செய்வேன். அதுக்காக அதைப் பத்தி யாரும் பேசக் கூடாதுன்னு சொல்றது எல்லாம் இதோட விடுங்க” என்றாள் சத்யா.
சத்யாவின் பேச்சில் இன்னும் காமாட்சி ஏதோ பேச வர, அமுதா கையைப் பிடித்துத் தடுத்தாள்.
“அம்மா, நாம வந்த வேலை முடிஞ்சது இல்லை. கிளம்புங்க. இனிமேல் எதுனாலும் அண்ணன் கிட்டே பேசிப்போம்” என்று அழைத்துக் கொண்டு சத்யாவிடமோ அவள் வீட்டினரிடமோ கூட சொல்லிக் கொள்ளாமல் கிளம்பினார்கள் சத்யாவின் புகுந்த வீட்டினர்.
இதைப் பார்த்த சத்யாவின் நண்பர்கள் “சாரி சத்யா, நாங்க உன்னோட நல்லத்துக்குன்னு நினைச்சுப் பேசினது இவ்ளோ பிரச்சினையாகும்னு நினைக்கலை. எதுவானாலும் யோசிச்சு முடிவெடு. உன் கணவர் என்ன சொல்றாரோ அதை கேட்டுக்கோ. மற்றபடி நல்லபடியா குழந்தைப் பெற்று, சந்தோஷமா இரு” என்று கூறினார்கள்.
சத்யாவும் “அவங்க இன்னும் ஊர்ப்பக்கமிருந்து வெளிலே வரவே இல்லை. அதனால் மனசில் பட்டதை அப்படியேப் பேசிடுவாங்க. நீங்க யாரும் தப்பா நினைக்காதீங்க. இப்போதைக்கு நல்லபடியா குழந்தை பிறக்கணும். அது மட்டும் தான் என்னோட சிந்தனை. அதோட என் கணவருக்கும் இதில் அத்தனை இஷ்டம் இருக்காது. அதனால் இனிமேல் நான் நடிக்கிறது பற்றிய பேச்சு வேண்டாம். மற்றபடி நாம டச்லே இருப்போம்” என்று கூறி அவர்களுக்கு விடை கொடுத்தாள்.
சத்யாவின் நண்பர்கள் கிளம்பவும், அவளின் பெற்றோர் மற்றும் சகோதரி அவளிடம் புகுந்த வீட்டினரின் செயல்களைப் பற்றி விசாரித்தனர். அங்கே நடந்ததை சத்யா இதுவரை தன் வீட்டில் சொல்லியிருக்கவில்லை. இப்போது சொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. சத்யா சொன்னதை கேட்ட அவள் அப்பா,
“நாம அவசரப்பட்டுடோமா சத்யா. இன்னும் தீர விசாரிச்சு இருக்கணுமோ? எனக் கேட்டார்.
சத்யா “நீங்க என்ன விசாரிச்சாலும் இந்த குணங்கள் எல்லாம் வெளியில் தெரியதுபா. சந்திரன் நல்லவர் தான். அவர் என்னிடம் காட்டுகின்ற அன்பிலும் எந்தக் குறையும் கிடையாது. மாமியார் மட்டும் தான் அப்படி. என் நாத்தனார்கள் கூட இன்னிக்கு அவங்க அம்மாவப் பேசினதில் தான் சண்டை போட்டாங்க. மற்றபடி ரொம்பவே நல்ல டைப் தான். அவர் வரும்போது பார்த்துக்கலாம் விடுங்க” என்றாள்.
“இப்போ உன்னைக் கொண்டு விடறதா வேண்டாமா?” என சத்யாவின் அம்மா கேட்க,
“மா, இதை விட அதிகமா நானும், என் மாமியாரும் அடிச்சுப்போம். அதைப் பத்தி எல்லாம் யோசிக்காதீங்க. அவர் வரும்வரை அங்கே தான் இருப்பேன். சம்பிராதாயத்துக்குத் தான் நம்ம வீட்டுக்கு வருவேன் மற்றபடி அவரே என்ன செய்யணும்னு பார்த்துப்பார். நீங்க நாம புறப்படுவதற்கு ஏற்பாடு செய்யுங்க” என்றாள்.
சத்யவதிக்கு என்ன கோபம் இருந்தாலும், கணவனின் வீடு தான் தன் வீடு என்பதில் தெளிவாகவே இருந்தாள். அதனால் அங்கே செல்வதற்கு அவளுக்கு எந்த தடையும் இல்லை.
அவசரம் என்றால் சந்திரனோடு பேசுவதற்கு என்ன விதிகள் பின்பற்றவேண்டும் எனபது எல்லாம் காமாட்சிக்குத் தெரியும். அதைக் கொண்டு சந்திரனை தனக்கு ஃபோன் செய்ய வைத்தார்.
சந்திரனும் தன் மனைவி பிள்ளை உண்டாகியிருக்கும் நேரம். என்னவென்று சொல்லாமல் அவசரமாகப் பேசச் சொல்லி வந்தத் தகவல் கிடைத்ததும் உடனே தொடர்பு கொண்டான்.
ஃபோன் தொடர்பு கிடைத்ததும் அவன் அன்னை எடுக்க, சந்திரன் கேட்ட கேள்வி “மா, சத்யா நன்றாக இருக்கிறாள் தானே?” என்பது தான்.
சந்திரன் போனில் தொடர்பு கொண்டதும், காமாட்சி எதைப் பற்றியும் யோசிக்காமல் “சந்திரா, உன் பொண்டாட்டிய இத்தோட விட்டுடு. நம்ம பேச்சுக்கு, வழக்கத்துக்கும் கட்டுப்படாதவளை காலம் பூரா என்னத்துக்கு சுமக்கணும்னேன்” என்று பேச, சந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
சரியாகத்தான் கேட்டோமா, இல்லை லைனில் எதுவும் கோளாறா, என்று ஃபோனை எடுத்துப் பார்த்தான். மீண்டும் “மா, என்ன சொல்றீங்க? நீங்க பேசுறது சரியாக் கேட்கலை” என்றான்.
“ஆ. உனக்கு காதில விழுந்தது சரிதான். இன்னையோட அவளை மறந்துடு” என்றார்.
“மா, நான் எந்த மாதிரி இடத்தில் நிக்கறேன். என்ன பேச்சு பேசிட்டு இருக்கீங்க? இங்கே யாருக்கும் பேசவே அனுமதிக்க மாட்டாங்க. நீங்க அவசரம்னு சொல்லவும், என்னவோ ஏதோன்னு வந்தா, ஆகாத கதை எல்லாம் பேசிட்டு இருக்கீங்க. எதுவானாலும் அப்புறம் பார்த்துக்கலாம். சத்யாவோட சண்டை எல்லாம் போட்டுட்டு இருக்காதீங்க” என வைத்து விட்டான்.
“சந்திரா” எனக் காமாட்சி அழைக்க அழைக்க தொடர்பு விட்டு விட்டது. சந்திரன் வீட்டினர் அனைவரும் பார்த்திருக்க, காமாட்சி ஃபோனை வைத்தார்.
அமுதாவும் , சரவணனும் “அம்மா, நாங்க தான் சொல்றோம்லே. எதுவானாலும் அண்ணா நேரில் வரவும் பார்த்துக்கலாம்னு. இப்பவே இந்த விஷயத்தைப் பேசணும்னு என்ன அவசரம்? முதலில் இப்படி எடுத்தோம், கவுத்தோம்னு பேசறதை நிறுத்துங்க. அண்ணி இப்போ நம்ம வீட்டு வாரிசை சுமந்துகிட்டு இருக்காங்க. அதை மனசில் வச்சு வார்த்தையை விடுங்க.” எனக் கூற,
“நீங்க எல்லாம் சும்மா இருங்க. அன்னைக்கே சந்திரன் என் அம்மா சொன்னதைக் கேளுடின்னு அடிச்சு சொல்லியிருந்தானா, இன்னிக்கு இப்படி என்னைப் பேசத் தைரியம் வருமா?” என்றார் காமாட்சி.
“மா, அப்படி மட்டும் அண்ணன் செஞ்சுருந்தா, அன்னைக்கே அண்ணி உன்னை போலீஸ்லே பிடிச்சுக் கொடுத்துருப்பா. நீதான் இன்னிக்கு வாயை மூடிட்டு இருந்துருப்ப.” என்றாள் அமுதா.
காமாட்சிக்கும் உள்ளூர அந்தப் பயம் இருந்தாலும், சந்திரன் மேல் இருந்த நம்பிக்கையில் , “அப்படி எல்லாம் நடக்க என் மகன் விடுவானா? என்ன ஆனாலும் சரி. இந்த வாட்டி அவளைக் கொண்டுவிட வரும்போது ஒரு பஞ்சயாத்து வச்சித் தான் வீட்டுக்குள் சேர்ப்பேன். இதை யாராலும் மாத்த முடியாது” என்றார்.
மற்றவர்களுக்கு இதில் அத்தனை தூரம் இஷ்டம் இல்லை. ஆனால் ஏனோ சத்யாவும் பிடிவாதக்காரிதான் என்பதாகத் தோன்றவே, ஏதோ ஒரு வகையில் சரியானால் நல்லது தானே என்று எண்ணினார்கள்.
-தொடரும்-
சின்ன சின்ன விஷயங்கள் கூட லாஜிக் தவறிவிடாமல் சரியா யோசிச்சு எழுதறீங்க. நிதர்சனங்கள் அப்படியே இருக்கிறது உங்க எழுத்திலே. மிக யதார்த்தமான கதை. very nice
Vayasu aaghuthu…pechchula oru muthirchchi ella kamatchi ammakku…chumma yeduththom kavuththom nu pesurathu….
வயசுக்கும் முதிர்ச்சிக்கும் சம்பந்தமே இல்லை. அவங்க இயல்பான குணம் வெளிப்படும் போது முதிர்ச்சி எல்லாம் வேலை செய்யாது. நன்றி சிஸ்டர்.
நன்றி நன்றி. லாஜீக் பற்றி சொன்னது ரொம்ப ஹாப்பி. குறைகள் இருந்தாலும் தவறாமல் கூறினால், திருத்திக் கொள்கிறேன். நன்றி
இந்த அம்மா ஒண்ணும் இல்லாத விஷயத்தை பெரிசாக்குது. சந்திரன் அப்பா ஒண்ணும் பேசமாட்டாரோ?
சந்திரன் அப்பா பேசுவார். ஆனால் காமாட்சி கேக்கணுமே. நன்றி மா
Every words are counted in family. Chandran mother konjam adamant nature. Chandran understand pannipana Sathya vai?
சந்திரன் எப்போதும் புரிந்து கொள்வான் சத்யாவை. புரிந்து கொண்டாலும் வாழ்க்கை என வரும்போது அதற்கு சில விட்டுக் கொடுத்தல்கள் வேண்டுமே. அது இருவரிடத்திலும் இருக்குமா. பார்க்கலாம். நன்றி நன்றி
காமாட்சி அம்மாவோட ஆட்டம் அதிகமா இருக்கே எல்லோரும் தன்னுடைய பேச்சை மட்டும் கேக்கனுன்னு நினைக்கிறாங்க இந்த அம்மா அது சாத்தியப்படாதுன்னு சத்தியா காட்டப்போறா
சத்யாவை கட்டுப்படுத்த முடியாது தான். நன்றி நன்றி
yen intha chandru amma ippadi irukangalo sathya friends pesitu irukum pothu neenga poi ippadi pesinathe thappu ithula oru paiyan life pathi yosikama eduthom kavuthomnu tha solranga athuvum army la iruka paiyan kitta avan ena situation la irupanu kuda yosikama
சத்யா மாமியார் பொறுத்தவரை அவங்க சொன்னது நடக்கணும். அதுக்கு அவங்க இடம் சூழ்நிலை எல்லாம் பார்க்கறது இல்லை. நன்றி நன்றி