Skip to content
Home » மெய்யெனக் கொள்வாய்

மெய்யெனக் கொள்வாய்

Disclaimer – இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள், காட்சிகள் அனைத்தும் எனது சொந்த கற்பனையே. யாரையும் தனிப்பட்டு குறிப்பிடப்படுபவை அல்ல.

அத்தியாயம் – 1

சிங்காரச் சென்னை நகரின் பெரும்புள்ளிகள் வசிக்கும் முக்கியப் பகுதி. மாநில அளவில் பெரிய கட்சித் தலைவர்களும், திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் என வெகு சிலருக்கு  மட்டுமே அங்கே வீடுகள் உண்டு.  அந்த ஏரியாவிற்குள் அங்கே வசிப்பவர்களின் வாகனங்கள் தவிர மற்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு அனுமதி கூடக் கிடையாது.

அப்பேற்பட்ட பகுதியில் ஒரு பிரபலமான திரைத்துறை தயாரிப்பாளரின் வீட்டின் முன்னே பிரஸ் என்று எழுதப்பட்ட பல ஸ்வரஜ் மஸ்தா வேன் மற்றும் கார்கள் அணிவகுத்து நின்றன. சமூக வலைத்தளத்தில் நூறு சப்ஸ்கரைபர்  வைத்திருக்கும் யுடியூபரில் ஆரம்பித்து, மாநில முக்கிய மெயின் ஸ்ட்ரீம் மீடியா நிருபர்கள் வரை அந்த வீட்டின் முன்னே காத்து இருந்தார்கள்.

அந்த தயாரிப்பாளர் பெயர் கருணாகரன். திரைத்துறையில் மட்டுமல்லாமல் அரசியலிலும் செல்வாக்கானவர். ஆளும் கட்சி முக்கியத் தலைவரின் பினாமி என்றும் கூடச் சொல்லுபவர்கள் உண்டு. அதற்கும் வாய்ப்பு இருக்கத் தான் செய்தது. கருணாகரன் பரம்பரைப் பணக்காரர்தான் என்றாலும், தனியார் சேனல் வரவிற்குப் பின் மிகப் பெரிய அளவில் பிரபலமாகியிருந்தவர். அவர் தயாரிக்கும் படம் அனைத்தும் வசூலில் மட்டுமல்ல, பட்ஜெட்டிலும் , தரத்திலும் பெயர் பெற்றது. ஒவ்வொரு படமும் ஏதோ ஒரு வகையில் தேசிய விருதுக்குத் தகுதிப் பெற்று விடும்.

அந்தப் பிரபலத்தின் பெயரில் சர்ச்சை என்றால் மீடியாவிற்கு மாதக் கணக்கில் வருமானம் வருமே. எனவே அத்தனை மீடியாக்களும் திரையரங்குகளில் கதவு திறக்கக் காத்து இருப்பது போல நின்று இருந்தனர். காத்திருந்தவர்களின் பொறுமையைச் சோதித்தது போதும் என்று அந்த வீட்டின் பெரிய மரக் கதவுகள் திறந்தன. தயாரிப்பாளரை எதிர்பார்த்து காமிராவோடு முண்டியடித்து நிருபர்கள் நிற்க, கதவைத் திறந்ததோ கேட் வாட்ச்மேன்.

சே என்று சலித்து மீண்டும் வெளியேற எண்ணித் திரும்ப, வாட்ச்மென் “ரிப்போர்ட்டர், காமிரா மேன் என ஒரு நிறுவனத்திற்கு இருவர் மட்டும் உள்ளே தோட்டத்தில் அமருங்கள்’ என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்தான்.

சட்டென்று அவர்களுக்குள் பேசி, ஒவ்வொரு பத்திரிகையிலிருந்தும் இரண்டு பேர் எனப் பிரிந்து நின்றனர். அவர்களின் அடையாள அட்டை வாங்கிச் சரிபார்க்க வாட்ச்மேன் பின்னால் இருவர் நின்று அந்த வேலையைச் செய்தனர். முதலில் நிருபர்களுக்கு காபி, டீ, குளிர்பானங்கள் கேட்டுக் கொடுக்கப்பட்டது. தோட்டத்தில் வரிசையாக நாற்காலிகள் போடப்பட்டு எல்லோரும் அமர்ந்தனர். எதிரில் சிறு மேஜை வைக்கப்பட்டு இருக்க, அதில் சேனல்களின் மைக்குகளை வரிசைப்படுத்தினர். காமிராமேன் அனைவரும் படம் பிடிக்க சரியான கோணத்தைத் தேர்வு செய்துக் கொண்டிருந்தனர்.

எல்லாம் தயாராகி ஐந்து நிமிடங்கள் கழித்து, அறுபது வயது மனிதர் ஒருவர் தூய வெள்ளை நிறத்தில் வேஷ்டியும், வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்து,  விலையுயர்ந்த கண்ணாடியைச் சரி செய்தபடி வந்து, அந்த மேஜையின் முன் நின்றார்.

தயாரிப்பாளர் கருணாகரன் அவர்களை அதிகம் ஊடகங்களில் பார்த்திருக்க முடியாது. அவர் தயாரித்த படத்திற்கான விளம்பரங்களுக்கோ, வெற்றி விழா மற்றும் விருதுகள் விழாவிற்கோ கூட அவர் வருவதில்லை. தயாரிப்பாளர் சங்கம் சார்ந்த முக்கிய மீட்டிங்களில் மட்டுமே கருணாகரனைப் பார்க்க முடியும். அங்கும் ஊடகத் துறையினருக்கு நேரடி அனுமதி கிடையாது. சங்கத்தின் சார்பில் அறிக்கை அல்லது பொறுப்பாளர் ஒருவர் வந்து ஊடகங்களில் பேசுவார் அவ்வளவே. அந்த வகையில் இன்றைக்கு கருணாகரனை ஊடகத் துறையினரில் சிலர் முதல் முறை நேரில் பார்க்கின்றனர். பார்த்தவுடன் ஆண், பெண் பாலினப் பாகுபாடு இல்லாமல் அத்தனை பேரும் வாவ் என்று அதிசயித்தனர்.

அறுபது வயது என்பதற்கு ஒரு நரைமுடியோ, வயதின் தளர்ச்சியோ கூட இல்லாமல் ஜிம் பாடியாக இருந்தார். இன்றைக்கு நடிக்கும் சில அவர் வயதையொத்த முன்னணி கதாநாயகர்களை விட  நல்ல ஃபிட்னஸ் வைத்து இருந்தார்.

மைக் முன் நின்றவுடன் “வணக்கம், இதுவரை பொது நிகழ்ச்சிகளில் மட்டுமே சந்தித்த உங்களை எல்லாம் இன்றைக்கு என் வீட்டின் முன் நிற்க வைக்கும் அளவிற்கு என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ளலாமா?” எனக் கேட்டார்.

“என்ன சர் இப்படி கேட்கறீங்க? சமீப காலமா தொடர்ந்து பேசு பொருள் ஆகியிருக்கும் மீ டூ சர்ச்சைப் பற்றிய சமூக வலைத்தள கருத்துப் பகிர்வு ஒன்றில் உங்கள் கருத்துகள் செம வைரல் ஆகியிருக்கு. ஆனால் அதைப் பற்றிய முழு விவரம் எதுவும் நீங்க சொல்லவில்லை. பிரபல நடிகை ஸ்ரீகீர்த்தி கூட உங்க கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவிச்சு இருக்காங்க. இதற்கு உங்க பதில் என்ன?” என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

“முதலில் ஒரு விஷயம். நான் பெரும்பாலும் தயாரிப்பாளர் சங்க நிகழ்ச்சிகள் தாண்டி பொது நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லைன்னு உங்க எல்லோருக்குமே தெரியும். இப்போ சமூக வலைதளங்கள் மூலமாவும், யு ட்யூப் மூலமாவும் அநேகப் பிரபலங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி அலசி, அதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கைப் பெருகிட்டேப் போகுது. அதை ஒரு கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சில முயற்சிகள் செய்துட்டு இருக்கோம். அப்படிபட்ட ஒரு நிகழ்வில் தான் என்னோட கருத்தைச் சொல்லிருக்கேன். அங்கே பலரும் கருத்துச் சொல்லியிருக்க, என்னை மட்டும் சுற்றி வளைத்துக் கேள்வி கேட்பது ஏன்?”

“இல்லை சர். பெரும்பாலான கருத்துக்கள் பெண் நடிகைகளுக்கு ஆதரவா இருக்கும்போது, ஆண்கள் மட்டுமே இதுக்கு காரணம்ன்னு சொல்லமுடியாது. சம்பந்தபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான் முக்கிய காரணம்னு சொல்லியிருக்கீங்க. அதற்கு உங்க கிட்டே ஆதாரம் இரூக்குன்னும் சொல்றீங்க. அது உண்மைன்னு நாங்க எப்படி நம்பறது?”

“ஆதாரம் இருக்குனு சொன்னதும் உண்மை தான். திரும்பவும் சொல்றேன். பெண்களை மீ டூ குரல் கொடுக்க வைக்கக் காரணம் ஆண்கள் மட்டுமல்ல. பெண்ணுக்கு பெண்ணே கூடக் காரணமாக இருக்கிறார்கள். எத்தனையோ நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி இப்போ பேசறாங்க. ஆனால் அந்த விஷயம் நடப்பது முழுக்க அவங்க சம்மதத்தோடு தானே. இன்னும் சொல்லப் போனா நடிக்கும் வாய்ப்பிற்காக அவர்கள் குடும்ப உறுப்பினர்களே அட்ஜஸ்ட்மெண்ட் செய்யத் தயாரா இருக்காங்க.” என்றும் கூற சட்டென்று அமைதியாகியது.

ஒரு பெண் நிருபர் எழுந்து “இப்படிப் பொதுவா குற்றம் சாட்டுவது தப்பு சர். உங்களுக்கு அப்படி ஒருத்தர தெரியும்னா, எங்களுக்கு ஆயிரம் பேரைத் தெரியும். நீங்க சொன்ன ஸ்டேட்மெண்ட வாபஸ் வாங்கிக்கணும்.” என்றார்.

“ஒருத்தரா, ஆயிரம் பேரா முக்கியமில்லைமா. ஆனால் இன்னைக்கு இதைச் சாக்கா வச்சு, எத்தனையோ குடும்பங்கள் பிரிஞ்சு போகுது. நீங்க ஆயிரம் பேர உதாரணமா சொன்னாலும், நான் ஒருத்தர பற்றி பேசினாலும் ரெண்டு பக்கமும் தப்பு இருக்குன்னு எல்லாருக்கும் தெரியணும். அதைத் தான் நான் அந்த நிகழ்ச்சியில் சொன்னேன். மற்றபடி என்னோட கருத்துக்குக் கண்டனம் தெரிவிச்ச நடிகை பற்றி எனக்கும் தெரியும். அவங்களோட திறமைகள் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவங்களுக்கு இத்தனை வாய்ப்புகள் தொடர்ந்து எப்படி வந்துதுனு யோசிச்சுப் பார்த்தா, நான் சொல்றதில் உள்ள அர்த்தம் புரியும். இதைத் தவிர இப்போதைக்குச் சொல்ல வேறே ஒண்ணும் இல்லை. எல்லோருக்கும் நன்றி. வணக்கம்” என்று கூறிவிட்டு எழுந்தார்.

நிருபர்கள் மேலும் ஏதோ கேள்விகள் கேட்க வர, அவர்களை பவுன்சர்ஸ் தடுத்து நிறுத்தினார்கள். கருணாகரன் அவரின் வீட்டின் உள்ளே சென்று விட, பாதுகாவலர்கள் மற்றும் வேலையாட்கள் சேர்ந்து எல்லோரையும் அங்கிருந்து கிளப்பி அனுப்பி விட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் முக்கியப் பகுதியில் அமைந்த கேட்டட் வில்லா. அந்த வளாகம் உள்ளேயே ஜிம், நீச்சல் குளம், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள் என அமைக்கப்பட்டு இருந்தது. மொத்தம் எழுபத்தைந்து வில்லாக்கள் மட்டுமே இருந்தது. ஒவ்வொரு வில்லாவும் ஐந்து பணியாளர் குடியிருப்பகள் வரை கொண்டது. வீட்டின் உள்ளே அலங்காரங்களும், பொருட்களும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. இந்த வில்லா கட்டிக் கொடுத்த நிறுவனமே அலங்காரங்களும் பொறுப்பேற்று இருக்க, இங்கே ஒரு வில்லா மட்டுமே இடமும், கட்டிடமும் சேர்த்து பல கோடிகள் மதிப்புப் பெரும். அதனால் சில பல பிரபலங்கள் அந்த வில்லாவில் இடத்தோடு வீடு வாங்கியிருந்தனர்.

ராக் மியூசிக்கும் பாப் மியூசிக்கும் மட்டுமே இசை என பெருமிதப்பட்டுக் கொள்பவர்கள் குடியிருக்கும் அந்த வளாகத்தில், சுத்த சமஸ்கிருத ஸ்லோகமும், கர்நாடக சங்கீதமும் மெலிதாயக காதில் விழுகின்றது. அந்த வில்லாக்களில் குடியிருப்பவர் எல்லாம் பெரிய தொழிலதிபர்கள், அதிகாரிகள், நேரடி அரசியலில் இல்லாமல், அரசியல் பின்புலம் சார்ந்தவர்கள். அவர்கள் வீடுகளில் கூட இந்த ஸ்லோகங்களோ, மெல்லிசையோ கேட்க முடியாது. ஏதும் விஷேச நாட்களில் வேண்டுமானால் ஒன்றிரெண்டு இடங்களில் கேட்க வாய்ப்பு உண்டு.  சாதாரண நாட்களில் கேட்பது எல்லாம் பெரிய விஷயம். இன்னும் சற்று நெருங்கி வர, என்ன ஸ்லோகம் எனத் தெளிவாகக் கேட்டது.

ஆபதாமபஹர்தாரம் தாதாரம்ʼ ஸர்வஸம்பதாம் । லோகாபிராமம்ʼ ஶ்ரீராமம்ʼ பூயோ பூயோ நமாம்யஹம் ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ

என்ற ராம ரக்ஷ மந்திரம் ஸ்பீக்கரில் தொடர்ந்து ஒலிக்க, அது வளாகத்தினுள் உள்ள கோவில் என்று நினைத்தால் இல்லை. அதுவும் ஒரு வில்லாவில் இருந்து தான் ஒலித்தது. அது தமிழ்த் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் ஸ்ரீகீர்த்தியின் இல்லம்.

ஸ்ரீகீர்த்திக்கும், அவள் அன்னை இருவருக்கும் இராமரின் மேல் பக்தி அதிகம். அதிலும் ராம ரக்ஷ மந்திரம் சொல்லிவிட்டு நாம் வெளியில் செல்லும்போது நமக்கு முன்னால் இராம இலக்ஷ்மணர்களே வில்லேந்தி பாதுகாத்து வருவார்கள் என்று சில பெரியவர்கள் கூறக் கேட்டு இருக்கிறார்கள். அதனால் தினமும் காலையில் இந்த மந்திரம் வீட்டில் ஒலிக்க வைத்துக் கேட்டு, அதன் பின் தான் கீர்த்தியும், அவள் அன்னையும் வெளியில் கிளம்புவார்கள் .  

ஸ்ரீகீர்த்தி இருபத்தைந்து வயது யுவதி. கடந்த சில வருடங்களாக நடிப்புத் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கிறாள். முதலில் கமர்ஷியல் ஹீரோயினாக வெற்றிப் பெற்று, தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறாள். மக்கள் மனதிலும் நிரந்தர இடம் பிடித்திருக்கிறாள்.

கீர்த்தியின் இந்த புகழுக்குத் திறமை மட்டும் காரணமல்ல. கீர்த்தியின் பக்கபலமாக இருக்கும் அவளின் அன்னை சத்யவதிதான் முக்கியக் காரணம். அவளின் பாதுகாப்போடு சேர்த்துச் சரியானப் பாத்திரத் தேர்வுகள் மற்றும் பொருத்தமான படக்குழுவினரைத் தேர்ந்தெடுக்கும் திறமையும் சத்யவதிக்கு இருந்தது.

இத்தனை நேரம் தயாரிப்பாளர் கருணாகரன் வீட்டைச் சுற்றி வளைத்து இருந்த ஊடகத் துறையினர், தற்போது ஸ்ரீகீர்த்தியின் வீட்டின் வாசலில் கால் மாற்றி நின்று இருந்தனர். அந்த வில்லாவிற்குள் அப்படியெல்லாம் சட்டென்று சென்று விட முடியாது. ஆனால் இன்றைக்கு விடிந்ததில் இருந்தே ஊடகங்களுக்கு வேட்டை தானே. அதனால் செக்யூரிட்டியால் தடுக்க முடியவில்லை. மற்ற பிரபலங்களுக்குத் தொந்தரவு தரக் கூடாது என்ற கட்டளையோடு தான் வில்லாவின் மேனேஜர் அனுமதித்து இருந்தனர்.

வளாகம் முழுதும் மறைத்தார் போல பெரிய மதில் சுவர் இருந்தாலும், ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் கூட தனி மதில் உண்டு என்பதால், எல்லோரும் ஸ்ரீகீர்த்தியின் வீட்டின் சுற்றுபுறத்திலலேயே நின்று இருந்தனர்.

அப்போது இரு பெண் நிருபர்கள் பேசிக் கொண்டனர்.

“சகோ இந்தம்மா நடிக்கிற படம் எல்லாம் பார்த்தா பக்தின்னா கிலோ என்ன விலைன்னு கேட்கும்னு நினைச்சேன். இங்கே வந்து பார்த்தா காவடியே எடுப்பாங்க போலிருக்கே. இதுவும் நடிப்பா?”

“அப்படி எல்லாம் சொல்ல முடியாதுமா. சின்னப் பொண்ணா இருக்கும்போதே நடிக்க வந்துட்டாங்க. முதலில் சில குழந்தைப் பாத்திரங்கள் நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. ஹீரோயின் ஆன பிறகு அதுக்கு தகுந்து தானே இருந்தாகனும். சக நடிகர்கள் கூட அதிகமா கிசுகிசுப்பில் வராத ஒரு நடிகை தான் ஸ்ரீகீர்த்தி. அவங்களுக்கு நடிக்க ஸ்கோப் இருக்கிற கதைகள் மட்டுமே செலக்ட் செய்யறதால் நமக்கு  தனிப்பட்ட குணாதிசயம் பற்றித் தெரியாமல் இருக்கும்” 

முதலில் பேசியவர் புதிதாக இந்த துறைக்குள் வந்திருப்பவர். அடுத்த நிருபர் சற்று அனுபவம் வாய்ந்த பெண். அவர்தான் கருணாகரனிடம் கேள்வி கேட்டவரும் கூட. அதனால் ஆராய்ந்துப் பேசும் தன்மை இருந்தது.

இங்கே நிருபர்கள் காத்திருக்க, வீட்டின் உள்ளே நடிகை ஸ்ரீகீர்த்தி மற்றும் அவளின் அன்னை சத்யவதி இடையே வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது. 

“மா, நான் அந்த மீட்டிங்கு போகற ஐடியாலேயே இல்லை. அன்னிக்குனு பார்த்து இப்போ நடிக்கிற படத்தோட ப்ரொடியூசர் கால்ஷீட் விஷயமா சேஞ்சஸ் இருக்கு. நீங்க ஷூட்டிங் பிரேக்லே அந்த ஹோட்டல்க்கு வந்துடுங்கன்னு சொன்னார். உங்ககிட்டே சொல்லிட்டுப் போக முடியலை. நீங்க பிசி. அதான் நான் போனேன். அப்போ மீ டூ பற்றி அஜண்டா வச்சு ப்ரொடியூசர் கவுன்சில் மீட்டிங் நடந்தது. அது தான் இங்கே வந்து நிக்குது. நான் என்ன பண்ண ?”

“கீர்த்தி, இப்போ பிரஸ் எல்லாம் வாசலில் நிக்கிறாங்க. என்ன பதில் சொல்லப் போற? அதோட அந்த கருணாகரன் கவனம் உன் பக்கம் திரும்புவது எனக்கு சரியாப்படலை. அன்னிக்கு நீ அங்கே பேசின விஷயம் யார் மூலமா பிரஸ்க்குப் போச்சு? அங்கே பிரஸ் வரலைன்னு தானே நீ சொன்ன?”

“எஸ்மா. அங்க அவங்க வரலைன்னு எனக்கு நல்லாத் தெரியும். ப்ரொடியூசரே அதைச் சொல்லித் தான் அங்கே வரவும் சொன்னார்.”

“சரி, இப்போ நீ போய் வாசலில் நிற்கிற மீடியா மக்கள் கிட்டேப் பேசு. பொறுமையாப் பேசு. எதையும் யாருக்கும் பாதகமா பேசிடாத. உன்னோட கேரியர் முக்கியம். அதே சமயம் கேரக்டர் மேலேயும் கவனம் இருக்கட்டும். சின்ன விஷயம் கிடைச்சாலும் மீடியா பெரிசாக்கிடுவாங்க. ரொம்ப ஜாக்கிரதையாப் பேசு”

ஸ்ரீகீர்த்தியின் அன்னை சத்யவதி என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், அவளோடு எல்லா இடத்திற்கும் செல்ல மாட்டார் சத்யவதி. அவரும் பேர் தெரியும் அளவிற்கு நடிகையே. அவருக்கும் படப்பிடிப்புகள் இருக்கும் என்பதால் தன் மகளோடு ஒட்டிக் கொண்டுச் செல்வதில்லை. இதோ தற்போதும் ஊடகத்துறையைச் சந்திக்க கீர்த்தியையே அனுப்பி வைத்து விட்டு, உள்ளே தொலைக்காட்சியில் நேரலைப் பார்க்க அமர்ந்தார்.

-தொடரும் –

14 thoughts on “மெய்யெனக் கொள்வாய்”

  1. Avatar

    Nice start. Latest trend la kadhai iruku.
    Me too patriya storyline nu theriyudhu. Srikeerthi role different a iruku.
    Let’s see what will happen.

  2. Avatar

    நைஸ் ஸ்டார்ட், வாழ்த்துகள் தேவி💐💐💐💐, கார்த்தியின் பதிலென்ன?

    1. Avatar

      மிக்க நன்றி கோதை மா. நீங்க படிக்க ஆரம்பிச்சதும் ரொம்ப சந்தோஷம். மீண்டும் நன்றிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *