Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 15

வஞ்சிப்பதோரும் பேரவா! – 15

அத்தியாயம் 15

யஷ்வந்த்துடன் வந்த இரு காவலர்களும் ஹர்ஷவர்தனை காவல் நிலையம் அழைத்துச் செல்வதில் தீவிரத்துடன் செயல்பட்டனர்.

ஹர்ஷவர்தனோ அவர்களுடன் செல்லும் வழியெல்லாம், “சார், என்னை நம்புங்க. மௌனிகா காணாம போனதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. யஷ்வந்த் தான் எல்லாத்துக்கும் காரணம். என்னால அதை ப்ரூவ் பண்ண முடியும்.” என்று ஆங்கிலத்தில் கூற, அதை எல்லாம் கண்டு கொள்ளாதவர்களோ, “நீயும் அந்த பொண்ணும் முன்னாள் காதலர்களாமே?” என்று தெலுங்கில் கூறி, அதற்கு அவர்களே சிரித்தும் கொண்டனர்.

அதில் ஹர்ஷவர்தன் முகம் கருக்க அமர்ந்திருக்க, அவர்களோ மேலும் அவனை வெறுப்பேற்றுவது போல பேசினர்.

“ஆமா, இது யாரோட பிளான்? காதலிக்கும் போதே, பெரிய பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ண சொல்லி நீதான் உன் காதலிக்கு ஐடியா குடுத்தியா? சும்மா சொல்லக் கூடாது, கோடீஸ்வரனா தான் பிடிச்சு குடுத்துருக்க உன் காதலிக்கு.” என்று தெலுங்கில் பேச, முழுதாக புரியவில்லை என்றாலும், தன்னையும் மௌனிகாவையும் தான் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொண்டவனோ, அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. பேசினாலும், அங்கு வேலைக்காகாது என்று எண்ணியவன், அடுத்து என்ன என்று யோசிக்கலானான்.

அப்போது தான் அபிஜித்தின் நினைவு வர, அவனிற்கு அழைத்து விபரத்தை கூறலாம் என்று எண்ணிய ஹர்ஷவர்தன் அலைபேசியை எடுக்க, அதை பறித்துக் கொண்டார் காவலர்களில் ஒருவர்.

அதில் அதிர்ந்த ஹர்ஷவர்தனோ, “சார், என் ஃபிரெண்டுக்கு நடந்ததை பத்தி சொல்லணும்.” என்று கூற, “சொல்லி… உன் முன்னாள் காதலியை தப்பிக்க வைக்க பிளானா? ஸ்டேஷன் போற வரைக்கும் அமைதியா வா.” என்று காவலர்கள் கூறி விட, “ப்ச், ரிடிகுலஸ்!” என்று கோபமாக முணுமுணுக்க மட்டுமே முடிந்தது ஹர்ஷவர்தனால்.

காவல் நிலையத்தை அடைந்ததும் ஹர்ஷவர்தனை அங்கிருந்த காவல் ஆய்வாளரிடம் அழைத்துச் சென்ற காவலர்கள் இருவரும் ஆய்வாளரிடம் ஏதோ ரகசியமாக பேசினர்.

அதன்பின்பு அந்த ஆய்வாளரோ ஹர்ஷவர்தனை நோக்கி, “சோ, கல்யாணமான உங்க முன்னாள் காதலியை கடத்தியிருக்கீங்க. அவங்க வீட்டுலயிருந்து திருட்டுத்தனமா வெளிய போறப்போ கையும் களவுமா சிக்கிட்டீங்க.” என்று குற்றம்சாட்ட, அதைக் கேட்டு பொங்கிய ஹர்ஷவர்தனோ, “சார், இது என்ன அபாண்டமான குற்றச்சாட்டு? என்னை விசாரிக்காமலேயே நீங்களே முடிவெடுத்துடுவீங்களா?” என்று ஆங்கிலத்தில் கத்தினான்.

அந்த காவல் ஆய்வாளரோ காதை குடைந்து கொண்டு, “இதுல விசாரிக்க என்ன இருக்கு?” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே, யஷ்வந்த் அங்கு வர, அவனைக் கண்டதும் பவ்யமாக எழுந்து நின்றார் காவல் ஆய்வாளர்.

அதிலேயே புரிந்து போனது ஹர்ஷவர்தனிற்கு, தான் இனி என்ன பேசினாலும் ஒன்னும் ஆகப்போவதில்லை என்பது.

அதனுடன், மௌனிகாவின் எச்சரிக்கையும் நினைவு வர, இதிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற யோசனைக்கு சென்றான் ஹர்ஷவர்தன்.

அப்போது அந்த காவல் ஆய்வாளர் யஷ்வந்த்திடம், “சார் அஃபிசியலா கம்ப்லைன்ட் ஃபைல் பண்றீங்களா?” என்று வினவ, அவனோ வேண்டாம் எனக் கூறி விட்டு, ஹர்ஷவர்தனை பார்த்தபடி, “என் ஒய்ஃப்பை கண்டுபிடிச்சு குடுத்தா மட்டும் போதும்.” என்று கூற, “ராஸ்கல், நீயே கடத்தி வச்சுட்டு, இங்க வந்து நடிச்சுட்டு இருக்கியா? எங்க டா மௌனிகா?” என்று யஷ்வந்த்தின் சட்டையை பிடித்து விட்டான் ஹர்ஷவர்தன்.

அதைக் கண்ட காவலர்கள் வேகமாக ஹர்ஷவர்தனை விலக்கி, “யாரு மேல டா கையை வச்ச?” என்று அவனை அடிக்க, அதே நேரம் அந்த காட்சியை கண்கள் கலங்க பார்த்தபடி உள்ளே நுழைந்தாள் பிரியம்வதா. அவளுடன் அபிஜித்தும் வந்தான்.

“ஸ்டாப்பிட்!” என்றபடி அபிஜித் நுழைய, மேலதிகாரியை பார்த்ததும் மற்ற காவலர்கள் பம்மிவிட, காவல் ஆய்வாளர் தான், “சார் சஸ்பெக்ட்…” என்று இழுக்க, அவரை இடைவெட்டிய அபிஜித்தோ, “சஸ்பெக்ட்னா, இப்படி தான் அடிப்பீங்களா?” என்று கோபமாக தெலுங்கில் வினவினான்.

ஹர்ஷவர்தன் எங்கே அதை கவனித்தான்?

அவன் பார்வை முழுக்க தனக்காக அழும் பாவையிடத்தில் தான்!

அவளை சமாதானப்படுத்த வேண்டும் என்று எண்ணினாலும், அதற்கு சரியான இடம் இதுவல்ல என்பதால் அமைதியாக இருந்தான். அதனுடன், செய்யாத தவறுக்காக தண்டனை பெற்றதும், அதுவும் மனைவி முன்னிலையில் நடந்ததும் அவமானமாக இருந்தது. அதன் விளைவால், தலை குனிந்து இருந்தவனை சமீபித்தான் அபிஜித்.

ஹர்ஷவர்தன் அருகே நின்ற அபிஜித், காவல் ஆய்வாளரிடம் ஒரு விரலியை (பென்டிரைவ்) கொடுத்தவன், “இது ஹர்ஷவர்தன், சம்பவம் நடந்த அன்னைக்கு முழுசா எங்க இருந்தார், என்ன செஞ்சாருங்கிறதுக்கான எவிடன்ஸ்.” என்றவன், யஷ்வந்த்திடம் திரும்பி, “எவிடன்ஸ் க்ரியேட் பண்ணனுங்கிறதுக்காக எடுக்கப்பட்ட சிசிடிவி ஃபூட்டேஜ் இல்ல.” என்றான் எள்ளலாக.

அபிஜித் கூறியதை புருவச் சுழிப்புடன் கேட்ட யஷ்வந்த்தோ, நொடிக்கும் குறைவாக, ஒரு கோணல் புன்னகையை இதழில் படற விட்டவன், “சாரி மிஸ்டர். அபிஜித், போலீஸுக்கு எப்படி எல்லார் மேலேயும் சந்தேகம் வருமோ, அதே மாதிரி தான மனைவியை தொலைச்ச எனக்கும் வரும்? அதுவும், மிஸ்டர். ஹர்ஷவர்தனுக்கும் என் மனைவிக்கும் ஏற்கனவே பழக்கம் இருக்குன்னு தெரிஞ்சு… நான் சந்தேகப்படலன்னா தானே ஆச்சரியம்! இதே மாதிரி எத்தனையோ கேஸ் நீங்க பார்த்துருப்பீங்க. நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணுமா?” என்று நக்கலாக தமிழில் வினவ, அது அங்கிருந்த மற்ற காவலர்களிற்கு புரியவில்லை என்றாலும், புரிய வேண்டியவர்களிற்கு புரிந்து தான் இருந்தது.

ஹர்ஷவர்தன் கோபத்தில் யஷ்வந்த்தை அடிக்க பாய, அவனை தடுத்த அபிஜித்தோ, “நிறைய கேஸ் விபரம் தெரியும் போலயே யஷ்வந்த். அப்படின்னா, மனைவி காணாம போற பல கேஸ்ல முதல் சஸ்பெக்ட் அவங்க கணவன் தான்னும் தெரிஞ்சுருக்குமே.” என்று சூடாக பதில் கொடுத்தான்.

யஷ்வந்த் கோபத்தை அந்த நொடி பிரதிபலிக்க, அதைக் கண்டு களித்த அபிஜித்தோ, மற்ற காவலர்களிடம் திரும்பி, “இந்த கேஸ் எனக்கு அசைன் ஆகப் போகுது. கூடிய சீக்கிரம் தகவல் வரும். அதுக்குள்ள உங்க கடமை உணர்ச்சி பொங்குச்சுன்னா, இதோ காணாம போன விக்டிமோட ஹஸ்பண்ட்டை விசாரிச்சு வைங்க. பின்னாடி எனக்கு யூஸ் ஆகும்.” என்று தெலுங்கில் கூறி விட்டு, ஹர்ஷவர்தனையும் பிரியம்வதாவையும் அழைத்துச் சென்றான்.

ஹர்ஷவர்தனோ முறைத்துக் கொண்டே அவன் அலைபேசிக்காக கையை நீட்ட, அவனிடம் இருந்து அதை பறித்த காவலரோ, இப்போது பவ்யமாக அதை அவனிடம் நீட்டினார். அவரையும் அவருடன் இருந்தவர்களையும் முறைத்து விட்டு அங்கிருந்து சென்றான் அவன்.

அந்த காவலர்களோ என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க, யஷ்வந்த்தோ சீற்றத்துடன் மூவரும் செல்வதை பார்த்தான்.

*****

தன் வாகனத்திற்கு அருகே வந்த அபிஜித், அமைதியாக தலை குனிந்தபடி வந்து கொண்டிருந்த இருவரையும் பார்த்து பெருமூச்சு விட்டான்.

“உன்னை அப்பறம் பேசிக்கிறேன்.” என்று ஹர்ஷவர்தனை பார்த்து பல்லைக் கடித்த அபிஜித்தோ பிரியம்வதாவிடம் திரும்பி, “நீ எதுக்கு மா, அங்க வந்த? உனக்கு எப்படி தெரியும்?” என்று வினவினான்.

‘அப்போ, வதுவை அபி கூட்டிட்டு வரலையா?’ என்று அப்போது தான் கேள்வி உதித்தது ஹர்ஷவர்தனிற்கு.

“இவரை ஏதோ பொண்ணு விஷயமா ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்காங்கன்னு கால் வந்துச்சு.” என்று ஹர்ஷவர்தனை முறைத்துக் கொண்டே பிரியம்வதா கூற, மற்ற இருவருக்கும் குழப்பம் தான். ஹர்ஷவர்தனிற்கு அதனுடன் சேர்ந்து லேசான பயமும் தொற்றிக் கொண்டது.

கோபம் கொண்டது மனைவி அல்லவா?

“யாரு கால் பண்ணா?” என்று கணவன் – மனைவி இடையே மௌனமாக நடக்கும் ஊடல் தெரியாமல் அபிஜித் வினவ, “யஷ்வந்த்…” என்று கூறியவளிற்கும் கோபம் வந்தது.

*****

மாலையில் தான் வருவதைக் கூட பொருட்படுத்தாமல் வெளியே சென்ற கணவனை எண்ணி கோபத்தில் குளம்பியை கலக்கிக் கொண்டிருந்த பிரியம்வதாவை மேலும் குழப்பும் விதமாக அமைந்தது ப்ரைவேட் நம்பரிலிருந்து வந்த அந்த அலைபேசி அழைப்பு.

ஏதாவது ‘ஸ்பேம் கால்’லாக இருக்கும் என்று அதை ஏற்காமல் இரு முறை தவிர்த்தவள், மூன்றாம் முறையும் அழைப்பு வர, இருக்கும் கோபத்தை எதிர்முனையில் இருப்பவரிடம் இறக்கி வைக்கவே அழைப்பை ஏற்றாள்.

ஆனால், அதில் சொல்லப்பட்ட செய்தியில், இருக்கும் கோபம் மேலும் கிளறப்பட, அச்செய்தியினை சொன்னவனை அச்சமயம் அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.

அவனை விட அவளின் கணவனே முக்கியமாக பட்டான்!

“ஹலோ மிசஸ். ஹர்ஷவர்தன்…” என்ற குரல் மறுமுனையில் கேட்க, அக்குரல் பரிச்சயமானதாக தோன்ற, அதனுடன் அவன் ஹர்ஷவர்தனையும் இணைத்து பேசியதில், யாரென்ற குழப்பமே முதலில் உண்டானது.

“என்னங்க லைன்ல இருக்கீங்களா?” என்று அக்குரல் வினவ, “யாரு நீங்க? என்னோட நம்பர் எப்படி கிடைச்சது?” என்று வினவினாள் பிரியம்வதா.

“என்னை அடையாளம் தெரியலையா என்ன?” என்று சிரித்தவன், “ஹஸ்பண்டை தவிர வேற யாரும் உங்க கண்ணுக்கே தெரிய மாட்டாங்க போலயே!” என்று அதற்கும் அவன் கேலி செய்ய, “ப்ச், இப்போ எதுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்கீங்க?” என்று மறுமொழி கொடுத்தாள் பிரியம்வதா.

“தேவை இருக்க போய் தான பேசிட்டு இருக்கேன். உங்களை மாதிரியே உங்க ஹஸ்பண்டும் இருந்துருந்தா, நான் ஏன் உங்க கிட்ட பேச போறேன்?” என்று விஷயத்தை கூறாமல் சுத்தலில் விடுபவனை எண்ணி கடுகடுத்தவள், “ஹலோ, உங்களுக்கு வேலை இல்லன்னா, மத்தவங்களுக்கும் இருக்காதுன்னு அர்த்தம் இல்லை. தேவையில்லாம என் நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க!” என்றாள் அவள்.

“ஏன் வேஸ்டாகுற டைமை உங்க ஹஸ்பண்ட் கூடவா செலவு செய்ய போறீங்க? இல்லையே, அவரு தான் வெளிய போயிட்டாரே!” என்ற குரலில் நக்கல் சற்று அதிகமாகவே இருக்க, “ஹே, யாரு மேன் நீ? என்ன ஸ்டாக்கிங்கா?” என்று கோபத்தில் மரியாதையை கைவிட்டவளாக பொங்கினாள் அவள்.

“கூல் கூல், உங்களுக்கு சிசிடிவி வீடியோ அனுப்பி இருக்கேன். உங்க ஹஸ்பண்ட் வேறொரு வீட்டுல இருந்து திருட்டுத்தனமா வெளிய வரதை பாருங்க. ஹான், அது என் வீடு தான். உங்க ஹஸ்பண்ட் வெளிய வரது என் ஒய்ஃப் மௌனிகாவோட ரூம்ல இருந்து தான். அண்ட், இன்னைக்கு மார்னிங்ல இருந்து மௌனிகா மிஸ்ஸிங். இதெல்லாம் உங்க கிட்ட ஏன் சொல்றேன்னா, மௌனிகா மிஸ்ஸிங் கேஸ்ல உங்க ஹஸ்பண்ட் தான் சஸ்பெக்ட்னு போலீஸ் அரெஸ்ட் பண்ணியிருக்காங்க.” என்று அவன் கூற கூற, உடம்பெல்லாம் நடுங்கியது பிரியம்வதாவிற்கு.

அவன் ‘மௌனிகா’ என்று கூறியதுமே, அழைத்தவன் யஷ்வந்த் தான் என்பதை அறிந்து கொண்டாள். அதனுடன், அவன் குரல் பரிச்சயமாக இருந்ததற்கான காரணமும் நன்கு விளங்கியது.

மேலும், ஹர்ஷவர்தன் கைது செய்யப்பட்டான் என்ற செய்தியின் மூலம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஒருங்கே அவளிற்கு பரிசளித்தான் யஷ்வந்த். அதனால் உண்டான கோபத்துடன், அழைப்பை துண்டித்தவளிற்கு, மௌனிகா காணாமல் போனதற்கு ஹர்ஷவர்தன் தான் காரணம் என்பதில் சற்றும் நம்பிக்கை இல்லை.

பின்னே, கோபத்திற்கான காரணம் என்னவென்றால், தேவையில்லாமல் மௌனிகா விஷயத்தில் கணவன் மூக்கை நுழைத்தது தான்!

‘இதுக்கு தான் கால் பண்ண சொன்னாராமா? இவருக்கு வேற வேலையே இல்லையா? அவ தான் வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டாள, பின்ன எதுக்கு அவளை தாங்கணும்? ப்ச், தேவையில்லாத டென்ஷன்!’ என்று மனதிற்குள் படபடத்தவள், யஷ்வந்த் அனுப்பியிருந்த காணொளியை பார்க்கலாமா வேண்டாமா என்று குழம்பி, பின் ஒருவழியாக அதை திறந்து பார்த்தாள்.

யஷ்வந்த் வீட்டில் மாட்டப்பட்டிருந்த பல சிசிடிவி கருவிகள் வழியே, ஹர்ஷவர்தன் மௌனிகா அறைக்கு சென்றது, பின் அங்கிருந்து திரும்பி வந்தது, காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, இறுதியாக காவலர்கள் அவனை இழுத்துச் சென்றது என்று அனைத்தும் பதிவாகி இருந்தது.

பிரியம்வதாவிற்கு அதைக் காண காண மனதே ரணமாக வலித்தது. இதற்காகவா தன்னை கூட கண்டு கொள்ளாமல் அவன் சென்றான் என்று பாரம் ஏறியது அவள் நெஞ்சுக்குள்.

அந்த காணொளியுடன், காவல் நிலையம் விலாசத்தையும் யஷ்வந்த் அனுப்பியிருக்க, உடனே கிளம்பி விட்டாள் கணவனை தேடி!

காவல் நிலைய வாயிலில் பிரியம்வதா நுழைய, அப்போது தான் அபிஜித்தும் அங்கு வந்திருந்தான்.

இருவருக்கும் காணொளி அழைப்பின் மூலம் ஏற்கனவே அறிமுகம் இருந்ததால், அபிஜித் அவளிடம் பேச செல்ல, அவளோ அவனை முந்திக் கொண்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்திருந்தாள்.

அங்கு அவள் கண்ட காட்சி, காவலர் ஒருவர் ஹர்ஷவர்தனை அடிப்பது தான். அதைக் கண்ட அவள் மட்டுமல்ல அபிஜித்தும் கூட திகைத்து தான் போனான்.

*****

நடந்த காட்சிகளை எண்ணிப் பார்த்த பிரியம்வதாவோ கோபத்தில் ஹர்ஷவர்தனை முறைக்க, அவனோ யஷ்வந்த்திற்கு எப்படி பிரியம்வதாவின் அலைபேசி எண் கிடைத்தது என்ற யோசனையில் இருந்தான்.

கணவன் மனைவி இருவரையும் பார்த்து மீண்டும் ஒருமுறை பெருமூச்சு விட்ட அபிஜித், “ரெண்டு பேரும் இங்கேயே இருக்காலம்னு முடிவு பண்ணிட்டீங்களா என்ன? வாங்க போவோம்.” என்று அவன் வாகனத்தில் இருவரையும் ஏறச் செய்து அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

செல்லும் வழியில் அவன் யோசனையில் இருந்து வெளிவந்த ஹர்ஷவர்தனோ, “என் கார் அவன் வீட்டுல இருக்கு அபி.” என்று சூழல் புரியாமல் பேச, அவனை பார்த்த இரு ஜீவன்களும் முறைக்கவே செய்தனர்.

‘இது இப்போ ரொம்ப அவசியமா?’ என்ற விதத்தில் பிரியம்வதா பார்க்க, அதையே வாய் விட்டு கேட்டிருந்தான் அபிஜித்.

அதில் சுதாரித்த ஹர்ஷவர்தனும் மௌனமாக வர, அந்த பயணம் அவர்களின் வீட்டில் முடிவுற்றது.

அவர்களை இறக்கி விட்டு, அப்படியே கிளம்ப இருந்த அபிஜித்தை தடுத்த பிரியம்வதாவோ, “வீட்டுக்கு வாங்க அண்ணா. நைட் டின்னர் முடிச்சுட்டு போங்க.” என்று அழைக்க, அதை மறுக்க முடியாமல் வீட்டிற்கு வந்தான் அபிஜித்.

அவள் மட்டுமல்ல, ஹர்ஷவர்தனுமே கண்களால் கெஞ்சி அல்லவா கேட்டுக் கொண்டான்.

நிமிட நேரத்தில் அவசரமாக குளம்பியை தயாரித்து அபிஜித்திற்கு மட்டும் வழங்கிய பிரியம்வதா, “டென் மினிட்ஸ் அண்ணா. ஃப்ரெஷ்ஷப்பாகிட்டு வந்துடுறேன்.” என்று கூற, “நீ ரிலாக்ஸாவே வா மா.” என்று அவளை அனுப்பி வைத்தவன், அவள் உள்ளே சென்று விட்டாள் என்பதை அறிந்ததும், அருகில் அமர்ந்திருந்த ஹர்ஷவர்தனை திட்டி தீர்த்து விட்டான்.

“என்னடா நினைச்சுட்டு இருக்க மனசுல? இன்னொருத்தர் வீட்டுல போய் துப்பு துலக்க, பெரிய ஹீரோவா நீ? அப்படியே ஏதாவது கண்டுபிடிச்சுட்டு வந்தா, ரெட் கார்பெட் போட்டு உன்னை வரவேற்பாங்கன்னு எண்ணமோ! நான் மட்டும் இல்லன்னா, இந்நேரம் நீதான் அக்யூஸ்ட்னு சார்ஜ் ஷீட் ஃபைல் பண்ணி, கேஸை கிளோஸ் பண்ணியிருப்பாங்க.” என்றான் அபிஜித்.

“ப்ச், தப்பு தான். மௌனிகாவை காப்பாத்த போய்…” என்று பேசிய ஹர்ஷவர்தனை இடைவெட்டிய அபிஜித், “நீயே மாட்டிகிட்ட.” என்று அவன் வரியை முடிக்க, “பேச விடேன் டா.” என்று அலுத்துக் கொண்டான் ஹர்ஷவர்தன்.

பிறகு, சட்டைக்குள் ஒளித்து வைத்த மௌனிகாவின் குறிப்பேட்டை எடுத்து அபிஜித்திடம் நீட்ட, அதை வாங்கி படித்து பார்த்த அபிஜித்திற்கும் மௌனிகாவை எண்ணி பாவமாக தான் இருந்தது.

அதற்காக, ஹர்ஷவர்தன் செய்ததை சரியென்று அவன் ஏற்றுக் கொள்ளவில்லை.

“நல்ல வேளை, இதை அவங்க கிட்ட காமிக்கல. இல்லன்னா, டைரில லாஸ்ட்ல அவ எழுதியிருக்குறதை வச்சு நீதான் கலப்ரிட்னு முடிவே பண்ணியிருப்பாங்க.” என்று அபிஜித் கூற, “ஹ்ம்ம், எனக்கென்னவோ, வேணும்னே இதை அங்க விட்ட மாதிரி இருக்கு அபி. இவ்ளோ டீடெயில்ஸ் எழுதியிருக்க மௌனிகா, இந்த டைரியை மட்டும் ஏன் அங்க விட்டுட்டு கிளம்பி இருக்கணும்?” என்று வினவினான் ஹர்ஷவர்தன்.

“எஸ், உன்னை பார்க்க கிளம்பியிருந்தா, கண்டிப்பா டைரியை எடுத்துட்டு தான் வந்துருப்பா. விச் மீன்ஸ்… அவ உன்னை பார்க்க கிளம்பல. அதுக்குள்ள அவளுக்கு…” என்று அபிஜித் கூறும்போதே பிரியம்வதா வெளியே வர, அத்துடன் பேச்சை நிறுத்தினர் இருவரும்.

அதன்பிறகு, அபிஜித்தும் பிரியம்வதாவும் மட்டுமே பேசினர். ஹர்ஷவர்தன் வெறும் பார்வையாளனாக மட்டுமே இருந்தான்.

அவன் ஏதாவது பேசினால் தான், பிரியம்வதா அமைதியாகி விடுகிறாளே!

மேலும், அபிஜித் முன்னிலையில், அவளிடம் எதுவும் பேசவும் தோன்றவில்லை ஹர்ஷவர்தனிற்கு. அதனால், அமைதியை கடைபிடித்தான்.

இரவுணவு முடிந்ததும் கிளம்பிய அபிஜித்தை வாகன தறிப்பிடம் வரை விடச்சென்ற ஹர்ஷவர்தன், “அபி, இந்த கேஸ் உனக்கு எப்படி அசைன் பண்ணாங்க? யஷ்வந்த் மாதிரி ஆளுங்க சம்பந்தப்பட்ட கேஸை அவ்ளோ சீக்கிரம் உன்னை மாதிரி நேர்மையான போலீஸ் கிட்ட குடுக்க மாட்டங்களே!” என்று வினவினான்.

“ம்ம்ம், ஆனா, போலீஸ் கமிஷனரோட பொண்ணு இன்வால்வ் ஆகியிருந்தா, அசைன் பண்ணி தான ஆகணும்.” என்று சினத்துடன் கூறினான் அபிஜித்.

தொடரும்…

11 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *