Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 18

வஞ்சிப்பதோரும் பேரவா! – 18

அத்தியாயம் 18

யஷு பேலஸ்…

செவ்வரியோடியிருந்த கண்களிற்கு ஓய்வு கூட கொடுக்காமல், அந்த பெரிய திரையை உற்று நோக்கியபடி எதையோ செய்து கொண்டிருந்தான் யஷ்வந்த்.

அப்போது அவனின் அலைபேசி ஒன்பதாவது முறையாக அடித்து ஓய, ஒரு கோணல் சிரிப்புடன் அதை பார்த்தவன், மீண்டும் தன் வேலையில் மூழ்கினான்.

அடுத்து சுமார், ஐந்து முறை ஒலியெழுப்பிய பின்னரே, அதை ஏற்றான் யஷ்வந்த்.

மறுமுனையில் பேசிய நபரோ, “யஷ்வந்த், என்ன இது? எதுக்கு இப்படி ஒரு வீடியோவை எனக்கு அனுப்பி இருக்க? கூடவே, அது என்ன மிரட்டல் மெசேஜ்?” என்று பதற்றத்துடன் பேச, அவரின் பதற்றத்தை ரசித்தவனாக, “என்ன சார் பண்றது? என் பொழப்பையும் பார்க்கணுமே?” என்றான் யஷ்வந்த்.

அவன் பேச்சு சாதாரணமாக தெரிந்தாலும், அதில் கோபமும் நக்கலும் சரிவிகிதத்தில் கலந்தே இருந்தது.

“இதெல்லாம் நல்லா இல்ல யஷ்வந்த். ஐடென்டிடி சீக்ரெட்டா இருக்கும்னு சொன்ன தான? இப்போ எப்படி…?” என்று மறுமுனையில் வார்த்தைகள் வராமல் தவிக்க, “ஆமா சொன்னேன் தான். அதெல்லாம் உங்க தேர்தல் வாக்குறுதி மாதிரி தான்.” என்றான் யஷ்வந்த் கூடுதல் நக்கலாக.

“ப்ச், விளையாடாத யஷ்வந்த். இப்போ உனக்கு என்ன வேணும்?” என்று அவர் கேட்க, அதற்காகவே காத்திருந்தவன் போல, “உங்களுக்கே தெரியுமே! எப்பவும் போல, இந்த முறையும் கேஸை ஒன்னுமில்லாம ஆக்கணும்.” என்றான் யஷ்வந்த்.

“அது… ரொம்ப கஷ்டம் யஷ்வந்த். போன முறை… அந்த பொண்ணு சூசைட் கேஸ்லயே சொன்னேன் தான.” என்று அவர் பேரம் பேசுவதை போல பேச, “அப்போ நான் செய்ய போறதுக்கு என்னை குறை சொல்லாதீங்க. எனக்கும் வேற வழி தெரியல.” என்றான் யஷ்வந்த் பூடகமாக.

“என்ன செய்யப் போற?” என்றவருக்கு வார்த்தையே வரவில்லை, பாவம்!

“நம்ம மக்கள் கிட்ட இருக்க ஒரு கெட்ட பழக்கம் என்னன்னா, மறதி! இன்னைக்கு சென்சேஷனலா ஒரு நியூஸ் கிடைச்சுட்டா, நேத்து வந்த நியூஸை மறந்துடுவாங்க. அதான் சின்ன கோடு பக்கத்துல அதை விட பெருசா ஒரு கோடு போடுறது… ச்சே, அதை கரைச்சு குடிச்ச உங்க கிட்டயே விளக்கிட்டு இருக்கேன் பாருங்களேன்.” என்றான் யஷ்வந்த் கிண்டலாக.

“நோ நோ… அவசரப்பட்டு… எதையும் பண்ணிடாத யஷ்வந்த். நான்… நான்… இதை எப்படி… சரி பண்றதுன்னு பார்க்குறேன்.” என்றபடி மறுமுனையில் இருந்தவர் அழைப்பை துண்டித்தார்.

அலைபேசியில் தெரிந்த அவரின் புகைப்படத்தை பார்த்து, “நரை விழுந்து தள்ளாடுற வயசுல ஸ்ட்ரிப்பிங் வீடியோஸ் கேட்குதா? அதுவும் யங் கேர்ள்ஸ்! ஓல்ட் ***** எனக்கு பிரச்சனைன்னா ஹெல்ப் பண்ண மாட்ட. உனக்கு நான் பாவம் பார்க்கணுமா? இந்த பிரச்சனையை விட்டு வெளிய வந்ததும் இருக்கு எல்லாருக்கும்.” என்று சொல்லிக் கொண்டவன், அங்கு ஓரமாக கட்டி வைக்கப்பட்டிருப்பவளை பார்த்து, “ரெண்டு நாள்ல எல்லாம் சரியாகிடும் பேபி… அப்பறம் நமக்கு எந்த தொந்தரவும் இருக்காது. உன்னை அணுவா அணுவா துடிக்க வச்சு கதையை முடிக்கணும். அதுக்கு எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக் கூடாதுல.” என்று அரக்கனாக சிரித்தான் யஷ்வந்த்.

*****

காவல் நிலையம்…

அந்த வலைதளத்திற்குள் செல்வதற்கான முயற்சிகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் மேற்கொண்டிருக்க, அதை பார்த்தபடி அங்கு அமர்ந்திருந்தனர் அபிஜித் மற்றும் ஹர்ஷவர்தன்.

“லேட் நைட்டாச்சு ஹர்ஷா. நீ வீட்டுக்கு போ.” என்று அபிஜித் கூற, அதை மறுத்த ஹர்ஷவர்தனோ, “அங்க போய் மட்டும் என்ன செய்ய? இங்கேயே இருக்கேன். மனசு ஒரு மாதிரி படபடன்னு இருக்கு. இதெல்லாம் முடிஞ்சா தான் நிம்மதியா இருக்கும் போல.” என்று சோர்வுடன் கூறியபடி, அந்த நாற்காலியில் கண்மூடி பின்னால் சாய்ந்து கொண்டான்.

“பிரியாக்கு கால் பண்ணியா?” என்று அபிஜித் வினவ, கண்மூடியபடி உதட்டைப் பிதுக்கியவனோ, “இன்னும் பிளாக்ல தான் வச்சுருக்கா.” என்றான் ஹர்ஷவர்தன்.

“அட்லீஸ்ட், உன் மாமனாருக்காவது கால் பண்ணி பேசு டா.” என்று அபிஜித் கூற, “ஹ்ம்ம், இப்போ லேட்டாகிடுச்சு. நாளைக்கு பேசணும்.” என்றான் விரக்தியாக.

அவனின் மனநிலையை ஓரளவிற்கு புரிந்து கொண்ட அபிஜித்திற்கும், இந்த பிரச்சனைகள் முடிந்தால் தான் ஹர்ஷவர்தனின் வாழ்க்கை தெளிவாகும் என்ற எண்ணம் வந்திருந்தது. அதற்காகவாவது விரைவில் இதை முடிக்க வேண்டும் என்று எண்ணினான்.

“சார், அந்த வெப்சைட் செக்யூரிட்டியை பிரீச் பண்ணியாச்சு.” என்று அந்த வல்லுநர்களில் ஒருவர் சொல்ல, சரியாக அதே சமயம் காவல் ஆணையரிடமிருந்து அழைப்பு வந்தது.

இந்நேரத்தில் இவர் ஏன் அழைக்கிறார் என்ற குழப்பத்துடன் அழைப்பை ஏற்றவனிற்கு, அதற்கான காரணம் தெரிய வந்தபோது, முன்னில்லாத வகையில் எரிச்சலும் கோபமும் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு வந்தது.

“அபிஜித், ஸ்டாப் ப்ரொசீடிங் ஆன் திஸ் கேஸ்.” என்று சோர்வுடன் ஒலித்த ஆணையரின் குரலில் புருவம் சுருக்கி அபிஜித்தோ, “ஏன் சார், வேற யாருக்காவது இந்த கேஸை அசைன் பண்ண போறீங்களா?” என்று காரணம் அதுவல்ல என்று நன்கு தெரிந்தாலும் ஆணையரிடம் வினவினான்.

“ப்ச், காரணம் எல்லாம் உங்களுக்கு சொல்ல தேவையில்ல அபிஜித். ஜஸ்ட் ஸ்டாப் இன்வெஸ்டிகேஷன்.” என்று அவர் குரலை உயர்த்த, அபிஜித்தோ விரக்தி சிரிப்புடன், “அப்படின்னு மேலிடம் சொல்லியாச்சா சார்? ஹ்ம்ம், எதிராளியோட பவர் எனக்கும் தெரியும் தான். இதெல்லாம் எக்ஸ்பெக்ட் பண்ணது தான். இருந்தாலும், உங்க பொண்ணு விஷயங்கிறதால கொஞ்சம் கெடுபிடியா இருப்பீங்கன்னு நினைச்சேன். ஆனா, அப்படி இல்ல, நீங்களும் சாதாரண போலீஸ் தான்னு நிரூபிச்சுட்டீங்க சார்.” என்று மேலதிகாரி என்பதால் வெகுவாக சிரமப்பட்டு கோபத்தை கட்டுப்படித்தியபடி பேசினான் அபிஜித்.

“நீங்க உங்க லிமிட்ஸை கிராஸ் பண்றீங்க அபிஜித். இதுக்கு மேல போனா, உங்க மேல டிசிப்லினரி ஆக்ஷன் எடுக்க வேண்டியது வரும். பி கேர்ஃபுல்! உங்களுக்கான அடுத்த கேஸ் பத்தி டிஸ்கஸ் பண்ண, நாளைக்கு என்னை ஆஃபிஸ்ல வந்து பாருங்க.” என்றவாறு அழைப்பை துண்டித்தார் ஆணையர்.

அழைப்பு துண்டிக்கப்பட்ட போதும் அலைபேசியையே பார்த்தபடி இருந்த அபிஜித்தின் தோள் தொட்டு அழைத்த ஹர்ஷவர்தன், “என்னடா ஆச்சு?” என்று வினவ, அவனோ ஒரு பெருமூச்சுடன், “இன்வெஸ்டிகேஷனை ஸ்டாப் பண்ணனுமாம். மேலிடத்து உத்தரவு!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.

அதில் ஹர்ஷவர்தன் மட்டுமல்ல, அந்த வலைதளத்திற்குள் ஊடுருவும் முயற்சியை மேற்கொண்டிருந்தவர்களும், ‘என்ன இது?’ என்பது போல பார்த்து வைத்தனர்.

“உங்க கமிஷனருக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? மத்த கேஸை விடு, இது அவரோட பொண்ணு கேஸ் தான?” என்று ஆற்றமாட்டாமல் ஹர்ஷவர்தன் கேட்க, “நானும் அப்படி தான் நினைச்சேன். ஆனா, பெத்த பொண்ணை தாண்டியும், உயிர் பயம் அதோட வேலையை காட்டிடுச்சு போல.” என்று விரக்தியாக கூறினான் அபிஜித்.

இனி, அங்கு என்ன வேலை என்பது போல மௌனமாக அனைவரும் கிளம்ப, அபிஜித்தை உடன் அழைத்துக் கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான் ஹர்ஷவர்தன்.

அன்றைய இரவை அங்கேயே கழிக்குமாறு அபிஜித்திடம் கூறியபடி ஹர்ஷவர்தன் பக்கவாட்டில் பார்த்தபடி நடந்து வர, “… ச்சை, அவனுங்க பேசுறது நமக்கு புரிய மாட்டிங்குது. நம்ம பேசுறது அவனுங்களுக்கு புரிய மாட்டிங்குது. என்ன பொழப்போ?” என்று புலம்பியபடி வந்து கொண்டிருந்த வாயில் காவலாளி மீது மோதினான்.

இருவரும் மற்றவரிடம் மன்னிப்பை வேண்ட, அது பெரிய பிரச்சனை ஆகாமல் சுமூகமாக முடிந்தது.

அவரிடம் விடைபெற்று, அவனின் வீட்டிற்கு செல்ல, மின்தூக்கி இருந்த பக்கம் ஹர்ஷவர்தன் நகர, “சார், அந்த லிஃப்ட் யூஸ் பண்ணாதீங்க. செகண்ட் பிளாக் லிஃப்ட் யூஸ் பண்ணிக்கோங்க.” என்றார் காவலாளி.

“என்னாச்சு சார்? லிஃப்ட் திரும்ப ஃபால்ட்டாகிடுச்சா? முந்தா நேத்து தான ரிப்பேர் செஞ்சாங்க?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “லிஃப்ட் ஃபால்ட் எல்லாம் எதுவும் இல்லை சார். அந்த லிஃப்ட் பக்கத்துல இருக்க சின்ன ஸ்டோரேஜ் ரூம் தான் பிரச்சனை. பல வருஷமா அந்த ரூமை பழைய பொருட்களை போட்டு வைக்கிற ரூமா தான யூஸ் பண்ணிட்டு வரோம். அதனாலேயே அந்த ரூம்ல பூச்சி, பல்லி, கரப்பான்னு இருக்கு. அதை சுத்தம் பண்ண தான் மதியம் ஆளுங்க வந்தாங்க. இன்னும் சுத்தம் பண்ண பாடில்லை. அவங்க கொண்டு வந்த பொருட்கள் எல்லாம் அப்படி அப்படியே வச்சுட்டு போயிட்டாங்க. அது இப்போ லிஃப்ட்டுக்கு போற வழியை அடைச்சுட்டு இருக்கு. இதுல, அதே ஆட்களை வச்சு அந்த ரூமை பட்டி டிங்கரிங் பார்த்து, எங்களுக்கு அலாட் பண்ண போறாங்களாம். கொடுமை! இந்த வேலை முடியுற வரை, அந்த லிஃப்ட் பக்கம் போகாதீங்க. “ என்று புலம்பி விட்டு சென்றார் அந்த காவலாளி.

அதை அசுவாரஸ்யத்துடன் கேட்ட ஹர்ஷவர்தனோ, வேறு மின்தூக்கி இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டி திரும்ப, எதிரில் வந்த ஆட்களின் மீது மோதிக் கொண்டான்.

அவர்கள் தான் காவலாளி சொன்ன பணியாளர்கள் என்பதை புரிந்து கொண்ட ஹர்ஷவர்தனோ, ஒரு மன்னிப்பை வேண்டியபடி அபிஜித்துடன் அங்கிருந்து நகர்ந்தான்.

*****

மறுநாள், அபிஜித் ஆணையர் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றிருக்க, ஹர்ஷவர்தனோ மனைவியின் அலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்து, அது தோல்வியில் முடிந்ததால், மாமனாருக்கு அழைக்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் சிறு விவாதம் ஒன்றை நடத்தி, அதன் முடிவாக அவருக்கு அழைத்தும் விட்டான்.

ஆனால், அவரோ வெளியில் இருப்பதால் பிறகு அழைப்பதாக கூறி வைத்து விட, பிரியம்வதாவுடன் பேச முடியாத கடுப்பை வேலையில் காட்டிக் கொண்டிருந்தான்

மனமோ, யஷ்வந்த்தை தான் சுற்றி வந்து கொண்டிருந்தது, அவனை எப்படி சிக்க வைப்பது என்று!

அப்போது அபிஜித் அழைப்பு விடுக்க, என்னவாகிற்றோ என்ற ஆர்வத்துடன் அழைப்பை ஏற்றான் ஹர்ஷவர்தன்.

மறுபுறம் அபிஜித்தோ, “கமிஷனர் ஹெல்ப் இருக்காது ஹர்ஷா.” என்று பட்டென்று கூற, மொத்த ஆர்வமும் வடிந்து போனது ஹர்ஷவர்தனிற்கு.  

“என்னவாம் டா உங்க கமிஷனருக்கு?” என்று கடுப்புடன் ஹர்ஷவர்தன் வினவ, “அதை சொன்னா தான. இன்னைக்கு கூப்பிட்டு, வேறொரு பெட்டி கேஸை குடுத்து, அதை முடிக்க சொல்றாரு. இன்-டைரெக்ட்டா, இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகக்கூடாதுன்னு சொல்றாராம்.” என்று எரிச்சலாக கூறினான் அபிஜித்.

“உஃப், இப்போ என்ன பண்றது அபி?” என்று ஹர்ஷவர்தன் கேட்க, “ஹ்ம்ம், ரகசியமா தான் ஏதாவது பண்ணனும். முதல்ல, அந்த வெப்சைட் செக்யூரிட்டி பிரீச் பண்ண டெக்னிகல் டீமை கான்டேக்ட் பண்ணி, ஏதாவது உருப்படியான தகவல் கிடைக்குதான்னு செக் பண்ணி பார்க்குறேன்.” என்ற அபிஜித் அழைப்பை துண்டித்தான்.

அபிஜித் கூறியவற்றை எண்ணியபடியே தன் அலுவலக வேலையை ஹர்ஷவர்தன் பார்த்துக் கொண்டிருக்க, அதை கலைத்தது வாசலில் கேட்ட அழைப்பு மணி சத்தம்.

ஒருவேளை பிரியம்வதாவோ என்ற எண்ணத்தில் உடல் முழுவதும் சட்டென்று சுறுசுறுப்பாக, ஒருவித உற்சாகத்துடன் கதவை திறந்தவனை ஏமாற்றும் விதத்தில் வெளியே நின்று கொண்டிருந்தான் ஒருவன்.

மகிழ்ச்சி மொத்தமும் தொலைந்த நிலையில், எதிரிலிருந்தவனை நோக்கி அறிமுகமில்லாத பார்வையை செலுத்திய ஹர்ஷவர்தன், “யாரு நீங்க? என்ன வேணும்?” என்று சம்பிரதாயமாக கேட்க, “என் பேரு கைலாஷ். ஏ பிளாக்ல இருக்கேன்.” என்று கூறியவன், ஹர்ஷவர்தனின் முகம் தெளிவடையாததை கண்டு, “நான் லாவண்யாவோட அண்ணன்.” என்றும் சேர்த்துக் கூற, இப்போது ஹர்ஷவர்தன் லேசாக அதிர்ந்தான்.

அப்போதும் கைலாஷை உள்ளே அழைக்கவில்லை.

“நீங்களும் உங்க போலீஸ் ஃபிரெண்டும் கார் பார்க்கிங்ல பேசினதை கேட்டேன்.” என்று கைலாஷ் அடுத்த அதிர்ச்சியை ஹர்ஷவர்தனிற்கு பரிசளிக்க, ‘ஷிட்!’ என்று தாங்கள் செய்த மடத்தனத்தை எண்ணி நிந்தித்துக் கொண்டே, அவனை உள்ளே அழைத்தான் ஹர்ஷவர்தன்.

சில நொடிகள் மௌனத்தில் கழிய, கைலாஷே முதலில் பேச ஆரம்பித்தான்.

“அன்னைக்கு, நீங்க பேசுறதை ஒட்டுக் கேட்கணும்னு கேட்கலை. எதேச்சையா காதுல விழுந்த வார்த்தைகள் எனக்கு பரிச்சயமா இருந்ததால தான் கவனிச்சேன். அதனால தான் இவனுங்க எவ்ளோ மோசமானவங்கன்னு தெரிய வந்துச்சு.” என்று பல்லைக் கடித்தான் கைலாஷ்.

தங்கையை பறிகொடுத்த வலி அவன் குரலில் அப்பட்டமாக தெரிந்தது.

அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த ஹர்ஷவர்தன், “முதல்ல, உங்களுக்கு எப்படி விஷயம் தெரியும்னு சொல்லுங்க கைலாஷ்.” என்று கேட்க, “உங்களுக்கே தெரியும், என் தங்கச்சியோட கேஸை போலீஸ் எப்படி ஹேண்டில் பண்ணாங்கன்னு…” என்ற கைலாஷின் வார்த்தைகள் கோபத்தை தாங்கி வந்து விழுந்தன.

அவனின் வேதனையும் கோபமும் புரிந்தவனாக ஹர்ஷவர்தன் மௌனமாக இருக்க, கைலாஷே தொடர்ந்தான்.

“அதனால தான், என் தங்கச்சிக்கு என்னாச்சுன்னு நானே கண்டுபிடிக்க களத்துல இறங்குனேன். என் ஃபிரெண்டோட உதவியோட, லாவண்யாவோட மொபைல்ல இருக்க ஆப்ஸ், வெப்சைட்ஸ்னு எல்லாமே செக் பண்ணதுல தான், அவ ‘ஃபேன்டஸி நைட்ஸ்’ங்கிற டார்க் வெப்ல யூசரா இருந்துருக்கான்னு ஒரு ஷாக்கிங்கான நியூஸை என் ஃபிரெண்டு கண்டுபிடிச்சு சொன்னான். இதுல, கொடுமையான விஷயம் என்னன்னா, அவளுக்கு அவ எவ்ளோ பெரிய ஆபத்துல சிக்கி இருக்கான்னு கூட தெரிஞ்சுருக்கல. கடைசி வரை, அது ஒரு டேட்டிங் வெப்சைட்ன்னு தான் நினைச்சுருக்கா.” என்று விரக்தியும் வேதனையும் கலந்த குரலில் கூறினாள் கைலாஷ்.

அவனிற்கு தண்ணீர் கொடுத்து ஹர்ஷவர்தன் ஆசுவாசப்படுத்த, கைலாஷ் மீண்டும் தொடர்ந்தான்.

“என்னதான் வெப்சைட்டை கண்டு பிடிச்சாலும், அதுக்கு மேல எந்த க்ளூவும் கிடைக்காம சுத்துனப்போ தான், உங்க பேச்சை கேட்டேன். அதுல அதே வெப்சைட் பேரு அடிபட்டதுல, நீங்க சொல்ற கேஸுக்கும், என் தங்கச்சி கேஸுக்கும் சம்பந்தம் இருக்கும்னு தோணுச்சு. அதனால தான் உங்களை ஃபாலோ பண்ணேன். அந்த யஷ்வந்த் பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன்.” என்று சுருக்கமாக கைலாஷ் கூற, ‘ஒருத்தன் ஃபாலோ பண்றது கூடவா தெரியாம திரிஞ்சுருக்கோம்!’ என்று அதற்கும் தங்களை திட்டிக் கொண்டான் ஹர்ஷவர்தன்.

“சோ, இப்போ என்ன முடிவு செஞ்சுருக்கீங்க கைலாஷ்?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “என் தங்கச்சி இறப்புக்கு நியாயம் கிடைக்கணும் சார். என்னதான் மத்த போலீஸ் கைவிட்டாலும், உங்க ஃ பிரெண்டு நேர்மையா இருப்பாருன்னு நம்புறேன். அதான், உங்களுக்கு தேவையான ஹெல்ப் பண்ண நானே முன் வந்துருக்கேன்.” என்றான்.

அதில் திகைத்த ஹர்ஷவர்தனோ, “ஹெல்ப்பா?” என்று கேட்டு வைக்க, “இவன் என்ன ஹெல்ப் பண்ண போறான்னு நினைக்குறீங்களா?” என்ற கைலாஷோ, “என் வீட்டுக்கு வாங்க சார். என்ன ஹெல்ப்புன்னு நேர்லயே காட்டுறேன்.” என்று அழைத்தான்.

அவனை நம்பி செல்லலாமா வேண்டாமா என்று யோசித்த ஹர்ஷவர்தன், தனியே வந்து அபிஜித்திற்கு அழைக்க, அவனோ புதிதாக கொடுக்கப்பட்ட வழக்கை பற்றிய உரையாடலில் இருந்ததால், ஹர்ஷவர்தனின் அழைப்பை ஏற்கவில்லை.

‘சரி, என்னன்னு தான் போய் பார்ப்போமே.’ என்று முடிவிற்கு வந்த ஹர்ஷவர்தன் கைலாஷுடன் அவன் வீட்டிற்கு செல்ல, அங்கே அவன் காட்டியதை பார்த்து அதிர்ந்து தான் போனான்.

தொடரும்…

11 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 18”

  1. Avatar
    Shanmugasree sudhakar

    Kailash enna katinan. Intha Harsha eruma innum pondati ah thedala. Antha dash katti vechurukathu vathu va mouni ah

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *