Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 19

வஞ்சிப்பதோரும் பேரவா! – 19

அத்தியாயம் 19

கைலாஷுடன் அவன் வீட்டிற்கு சென்ற ஹர்ஷவர்தனோ, வாசலில் தொங்கிய பூட்டை பார்த்து, “உங்க வீட்டுல யாரும் இல்லையா?” என்று வினவ, கதவை திறந்து கொண்டே, “அப்பாவும் அம்மாவும் இங்க இருந்தா லாவண்யா நினைப்பாவே இருக்குன்னு புலம்புனாங்க. அதான், ஊருக்கு அனுப்பி வச்சுட்டேன்.” என்றபடி உள்ளே நுழைந்தான் கைலாஷ்.

அவனுடன் நுழைந்த ஹர்ஷவர்தனோ, சுற்றிலும் பார்த்தபடி, ‘இங்க அப்படி எதை காட்ட போறான்?’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், “சார், இங்க வாங்க.” என்ற கைலாஷின் குரல் ஒரு அறைக்குள்ளிருந்து கேட்டது.

அந்த அறைக்கு சென்று பார்த்த ஹர்ஷவர்தன் அதிர்ச்சியில் என்ன பேசுவது என்று தெரியாமல் நின்று விட்டான்.

காரணம், அந்த அறையில் கைகள் மற்றும் கால்கள் நாற்காலியுடன் சேர்த்து கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இருந்தார்.

“என்ன இது கைலாஷ்?” என்று அதிர்ச்சி விலகாமல் ஹர்ஷவர்தன் வினவ, “உங்களுக்கான ஹெல்ப் சார்… இவன் அந்த சைக்கோ யஷ்வந்த்தோட பி.ஏ. இவனை நல்லா கவனிச்சா, அந்த சைக்கோவை பத்தி ஏதாவது க்ளூ கிடைக்கும்.” என்று சாதாரணமாக கூறினான் கைலாஷ்.

“அதுக்காக கடத்தி… ப்ச், என்ன இது கைலாஷ்?” என்று ஹர்ஷவர்தன் தன் அதிருப்தியை வெளிப்படுத்த, “குற்றவாளியை சிக்க வைக்க, இது மாதிரியான முடிவுகள் எடுக்க தான் வேணும் சார். நீங்க அவனோட வீட்டுல யாருக்கும் தெரியாம நுழைஞ்ச மாதிரி தான் இதுவும்.” என்று கைலாஷ் கூற, அதற்கு மேல் என்ன பேசிவிட முடியும் ஹர்ஷவர்தனால்!

“சரி, ஏதாவது கேட்டீங்களா?” என்று கட்டி வைக்கப்பட்டிருந்த நபரை பார்த்தபடி ஹர்ஷவர்தன் வினவ, உதட்டைப் பிதுக்கிய கைலாஷோ, “வந்ததுல இருந்து மயக்கத்துல தான் இருக்கான்.” என்றான்.

“எப்படி இவனை கண்டு பிடிச்சீங்க? எப்படி கடத்துனீங்க?” என்று தன் சந்தேகங்களை ஹர்ஷவர்தன் கேட்க, “இதென்ன பெரிய விஷயமா சார்? சமூகத்துல பெரிய இடத்துல இருக்கவங்களோட வக்கிரங்கள் எல்லாம் தெரிஞ்சவங்க, ஒன்னு அவங்க பார்ட்னரா இருக்கணும், இல்லன்னா பி.ஏவா இருக்கணும். அந்த யஷ்வந்த்தோட ஒய்ஃப் பத்தின நியூஸ் தெரிய வந்ததுல, நான் தேடுற ஆள் அவனோட பி.ஏ தான்னு முடிவு பண்ணிட்டேன். இவனை தூக்குறது எல்லாம் பெரிய விஷயம் இல்ல. சரியான பயந்தாங்கோலி!” என்று கைலாஷ் சொல்லும்போதே, யஷ்வந்த்தின் காரியதரிசியான கவின் மயக்கத்திலிருந்து வெளி வந்தான்.

சில நொடிகள் சூழல் புரியாமல் விழித்த கவினோ, தன் நிலையை பார்த்து தான் சிக்கியிருக்கும் சூழலை கிரகித்தவனாக, “யாரு நீங்க? எதுக்காக என்னை கடத்தி இருக்கீங்க?” என்று பதற்றமாக வினவினான்.

“உன்கிட்ட என்ன கோடி கோடியா பணமா இருக்கு? எதுக்கு கடத்தி இருப்பேன்னு உனக்கே தெரியலையா?” என்று நக்கலாக கேட்டான் கைலாஷ்.

“ம்ச், நீங்க கை வச்சுருக்குறது சாதாரண இடம் இல்ல.” என்று கவின் முயன்று மிரட்டும் தொனியில் பேச, அதைக் கண்டு கொள்ளாத கைலாஷோ ஹர்ஷவர்தனிடம் திரும்பி, “பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம். நேரடியா அடிதடிக்கு போயிடலாம்.” என்று கூற, கவினிற்கோ தொண்டைக்கும் வயிற்றிக்கும் இடையே பயபந்து உருண்டு ஓடியது.

“சார்… சார்… நீங்க நினைக்கிற மாதிரி நான் அவ்ளோ பெரிய ஆளெல்லாம் இல்ல சார். அந்த யஷ்வந்த் கிட்ட ஒரு வருஷமா தான் வேலை செய்யுறேன் சார்.” என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான் கவின்.

அவன் கெஞ்சலை பார்த்து பரிதாபம் கொண்ட ஹர்ஷவர்தனோ, “கைலாஷ், அவரோட கட்டுகளை எல்லாம் அவிழ்த்து விடுங்க.” என்று கூற, இப்போது கைலாஷோ அதிருப்தியாக அவனை பார்க்க, கண்களாலேயே ஏதோ ஜாடை காட்டினான் ஹர்ஷவர்தன்.

அதன்படி கவினின் கட்டுகள் அவிழ்க்கப்பட, அவனிற்கு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள சொன்னான் ஹர்ஷவர்தன்.

அவன் நிலை சற்று இயல்பானதும் ஹர்ஷவர்தன் பேச ஆரம்பித்தான்.

“கவின், உங்களுக்கு அந்த யஷ்வந்த் கிட்ட வேலை செய்ய பிடிக்கல இல்லையா?” என்று வினவ, உடனே தலையசைத்து ஆமோதித்த கவினோ, “எப்படி சார் பிடிக்கும். சரியான சாடிஸ்ட் சார் அவன். தினம் தினம் எத்தனை பேரு கால் பண்ணி கெஞ்சுவாங்க தெரியுமா. இவ்ளோ ஏன், ரீசண்ட்டா சென்ட்ரல் மினிஸ்டர் ஒருத்தர்…” என்று கூற ஆரம்பித்தவன் சுதாரித்து பாதியில் நிறுத்தி விட்டான்.

அதைக் கண்டு கொண்டாலும், வெளியே காட்டிக் கொள்ளாமல், “அப்பறம் ஏன் அவன் கிட்ட இன்னமும் வேலை செய்யுறீங்க கவின்?” என்று எதிராளியின் மனநிலையை படிக்க முயன்றான் ஹர்ஷவர்தன்.

“என் குடும்ப நிலை சார்! என் வருமானத்தை வச்சு தான் என் குடும்பம் ஓடுது. அப்பாக்கு கிட்னி பிராபிளம், அம்மாக்கு ஆஸ்துமா… ரெண்டு தங்கச்சிங்களை வேற கரை சேர்க்கணும். இப்போதைக்கு இதெல்லாம் ஓரளவு சமாளிக்க முடியுதுன்னா, அதுக்கு அந்த சைக்கோ குடுக்குற சம்பளம் தான் காரணம்!” என்று வருத்தத்துடன் கூறினான் கவின்.

‘லோயர் மிடில் கிளாஸுக்கே’ உரிய சாபம் இது! பிடிக்காவிட்டாலும், மனம் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் வாழ்க்கை இழுக்கும் வழிகளில் இடிபட்டு, மிதிபட்டு போகத்தான் வேண்டும்!

“உங்களுக்கே அவனோட அழுக்கான முகம் தெரியுறப்போ கூட, அவனுக்கு வேலை செய்யணும்! அதுக்கு உங்க குடும்ப வறுமையை காரணம் காட்டுறீங்க.” என்று கைலாஷ் முகத்தை திருப்ப, ஹர்ஷவர்தனோ, “இந்த ஒரு வருஷத்துல, ஒருமுறை கூடவா அவனோட தப்பை வெளிய சொல்லி, அவனுக்கு தண்டனை வாங்கி  குடுக்கணும்னு தோணல கவின்?” என்று நிதானமாக கேட்டான்.

“ஏன் தோணல சார்? ஒவ்வொரு முறையும், யாராவது ஒருத்தர் கால் பண்ணி கதறும் போது, என் மனசாட்சி அந்த இடத்துல என்னை சேர்ந்தவங்களை வச்சு பார்த்து, என்னை காறி துப்பும்! ஆனா, பல அரசியல்வாதிகளையும், பணக்காரர்களையும் கூட்டு சேர்த்து, இந்த அசிங்கத்தையே ஒரு தொழிலா நடத்துறைவனை, என்னை மாதிரி ஒரு சாதாரண மனுஷன் எப்படி எதிர்க்க முடியும் சார்? படத்துல கதைல வேணும்னா அது சாத்தியமா இருக்கலாம். நிஜத்துல சான்ஸே இல்ல. ஒருவேளை, அப்படி ஏதாவது செஞ்சு எனக்கு ஏதாவது ஆகிட்டா, என் குடும்பம் என்ன ஆகும் சார்?” என்று கவின் கேட்க, பதிலில்லை மற்ற இருவரிடமும்.

அவன் கேட்பது அனைத்தும் நியாயம் தானே! இத்தனை அதிகாரத்தை தன்னுடன் கூட்டு சேர்த்திருப்பவனை சாதாரண மனிதனாக எதிர்ப்பது சாத்தியமா? யதார்த்தமா?

அதிசயமே ஆயினும், அதை நடத்தி காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். இல்லையெனில்… நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது ஹர்ஷவர்தனிற்கு.

“நீங்க சொல்றதெல்லாம் சரி தான் கவின். ஆனாலும், இதை இப்படியே விட முடியாதே! இது இப்படியே தொடர்ந்தா, கண்டிப்பா நாளைக்கு உங்களுக்கு தெரிஞ்சவங்களே இதுல சிக்கலாம். அப்போ, தடுக்கலையேன்னு வருத்தப்பட கூடாது. சோ, நம்ம இப்போவே ஏதாவது செஞ்சா தான் உண்டு.” என்று ஹர்ஷவர்தன் கூற, கவின் சற்று யோசிக்க ஆரம்பித்தான்.

“ஆனா, நம்மளால என்ன செய்ய முடியும் சார்?” என்று கவின் கேட்க, அவனின் உதவி தங்களிற்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், “நீங்க சொல்ற தகவல் தான் நமக்கு முதல் படி கவின். அவனைப் பத்தின சின்ன சின்ன டீடெயில் கூட நமக்கு பெருசா உதவலாம்.” என்றான் ஹர்ஷவர்தன்.

அத்தனை நேரம் அவர்களின் உரையாடலில் பெரிதாக நம்பிக்கை இல்லாத கைலாஷ் கூட, இப்போது ஒரு பரபரப்புடன் அவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

“எனக்கு தெரிஞ்சவரை நான் சொல்றேன் சார். ‘ஃபேன்டஸி நைட்ஸ்’ங்கிற டார்க் வெப்போட அட்மின் அந்த யஷ்வந்த் தான். என்னதான், அவங்க அப்பாவோட பிசினஸ் முழுக்க அவன் வசம் இருந்தாலும், அவன் முழுசா கவனிக்கிற ‘பிசினஸ்’ இது தான். சொல்லப்போனா, மத்த பிசினஸை விட இதுல தான் அவனுக்கு லாபம் அதிகம். அதுக்காக அவன் பெருசா மெனக்கெடுறது இல்ல. மக்களோட இருண்ட பக்கத்தை, வக்கிரங்களை வெளிய கொண்டு வந்தான். அது இன்னைக்கு வைரஸ் மாதிரி இவ்ளோ பரவியிருக்கு. அவனோட இந்த வெப்சைட்டுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு பெரிய ஆளுங்களை அவன் வசம் வச்சுப்பான். அதுக்கும் அந்த சைட்டை பத்தி தெரியாத அப்பாவிகளை யூஸ் பண்ணிப்பான்.” என்று கூறிய கவினின் குரலில் ஆத்திரம் அப்பட்டமாக தெரிந்தது.

“இந்த ஒரு வருஷத்துல, எனக்கு தெரிஞ்சே ஏகப்பட்ட கொலைகள், தற்கொலைகள்… எதுக்கும் இவன் டைரெக்ட்டா சம்பந்தப்பட்டிருக்க மாட்டான். ஆனா, அடிப்படை காரணம் இவனா தான் இருப்பான். ஷப்பா, அதுல இருக்க கூட்டம்… என்ன சொல்லன்னே தெரியல. ஒருபக்கம், என்ன நடக்குதுன்னு உண்மை புரியாம அல்ப சந்தோஷத்துக்காக சில பேர்… இன்னொரு பக்கம், தங்களோட கோபதாபங்கள், வக்கிரங்களை தீர்த்துக்க முகமூடி போட்ட பல பேர்… இவங்க ஒருத்தரை ஒருத்தர் அடிச்சுக்குறதை பார்த்து ரசிக்கிற இந்த சைக்கோன்னு… ச்சீ சொல்றதுக்கே அருவருப்பா இருக்கு!” என்றான் கவின்.

இவை எல்லாம் ஏற்கனவே அறிந்திருந்தாலும், ஒவ்வொரு முறை கேட்கும் போதும், அதற்கு காரணமானவனை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கையாலாகத்தனம் ஹர்ஷவர்தனை வாட்டியது.

“கவின், உங்களுக்கு தெரிஞ்சு பல கொலைகள், தற்கொலைகள் நடந்ததா சொன்னீங்க தான, அதை சொல்ல முடியுமா?” என்று அவன் கூறப் போவதை பதிவு செய்ய தயாராக, அதைக் கண்டு பயந்த கவினை, “நோ வொரிஸ், உங்க பேரு எங்கேயும் வெளிய வராது.” என்று தைரியம் அளித்தான் ஹர்ஷவர்தன்.

அதைக் கேட்டு திருப்தியுற்ற கவினோ, அவனிற்கு தெரிந்த தகவல்களை கூறினான். அதில் லாவண்யாவின் செய்தியும் அடங்கும்.

விதவிதமாக ஒவ்வொரு கொலைகள்… அதற்காக திரை மறைவில் கை மாற்றப்பட்ட பணம் ஏராளம். இவை எல்லாம் பண போதை தலைக்கேறி புத்தி கெட்டு திரியும் வீணர்களின் பொழுதுபோக்கு என்பதை தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஹர்ஷவர்தனால்.

மறைமுக புகைப்பட கருவி வைத்து பெண்களையும் ஆண்களையும் ஆபாசமாக படம் எடுத்து, அதை இதற்காகவே காத்திருக்கும் பொறுக்கிகளிற்கு விற்பது, மறுபுறம் அப்படங்களை சம்பந்தப்பட்ட நபர்களிற்கு அனுப்பி, அவர்களை பணம் கேட்டோ, இல்லை வேறு விதமாகவோ மிரட்டுவது துவங்கி, அதிகாரம் மிக்கவர்கள் பொழுபோக்கிற்காக கொலை விதவிதமாக கொலை செய்வது, அதை படம்பிடித்து பார்த்து மகிழ்வது வரை அனைத்து விதமான வக்கிரங்களை கவின் கூற, அதில் பாதிக்கும் மேலே ஹர்ஷவர்தனாலேயே கேட்க முடியவில்லை.  

கவினோ ஒரு விரக்தி சிரிப்புடன், “எனக்கு பழகிடுச்சு சார். இதை ரெட் லைட் ஏரியான்னு கூட சொல்ல முடியாது. அதை விட பல மடங்கு மோசமானது. சொல்லப்போனா, முதல்ல நார்மலா இருக்குறவனுங்க கூட, தொடர்ந்து இந்த மாதிரி சம்பவங்களை பார்த்து பார்த்து, அதுக்கு அடிக்ட்டாகிடுறானுங்க. அது தான் அந்த சைக்கோக்கு பல மடங்கு லாபத்தை தருது.” என்றவன், “இதுல கொஞ்ச சம்பவங்கள்ல நாட்டோட முக்கியப்புள்ளிங்களுக்கு சம்பந்தம் இருக்குன்னாலும், ஷாக்கிங்கா பல சம்பவங்கள் சாதாரண மக்களால தான் நடக்குது.” என்று கூற, மற்ற இருவருக்கும் இது புது செய்தியே!

அந்த திகைப்பு விலகாமலேயே, அதைப் பற்றி அவர்கள் வினவ, “அட ஆமா சார், நாம பார்க்குற எல்லாம் உண்மையே இல்லன்னு எனக்கு மண்டைல அடிச்சு புரிய வச்சதே இந்த மாதிரி சம்பவங்கள் தான்! கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு யூசர் கிட்ட இருந்து வந்த மெசேஜ்ல, அவருக்கு வேலைல ஸ்டிரஸ் அதிகமானதாவும், அதுக்கு காரணமான அவரோட மேனேஜரை பழி வாங்க ஐடியா கேட்க, அதுக்கு ஏகப்பட்ட கமெண்ட்ஸ் வந்துச்சு.” என்று அதை பார்த்த அதிர்ச்சியில் எடுத்த புகைப்படங்களை மற்ற இருவருக்கும் காட்டினான் கவின்.

அதில் சொல்லப்பட்ட கருத்துகளை பார்த்து விழி பிதுங்கி விட்டது ஹர்ஷவர்தனிற்கு.

அவனிற்கு ஆசுவாசப்பட கூட அவகாசம் கொடுக்காத கவினோ, “கொடுமை என்னன்னா, இதுல சொன்ன ஐடியாவை அடுத்த நாளே அந்த மேனேஜரை கடத்தி இம்ப்ளிமெண்ட் பண்ணிருக்கானுங்க பாவிங்க.” என்றவன், அந்த காணொளியையும் காட்டினான்.

அதில் ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், முகம் முழுவதும் கலவரத்துடன், விழிகளில் வழியும் கண்ணீருடனும், அவருக்கு முன்னிருந்த கணினியில் எதோ செய்து கொண்டிருக்க, அவருக்கு அருகில் பல வயர்கள் பொருத்தப்பட்ட கருவியும், அதற்குள் ஏதோ திரவமும் சொட்டிக் கொண்டிருந்தது.

ஏதோ ஆபத்து என்று புரிந்தாலும் முழுமையாக அது என்னவென்று தெரியாததால், அதை கவினிடமே ஹர்ஷவர்தன் கேட்க, “அவரு அந்த கம்ப்யூட்டர்ல இருந்து கை எடுத்தா, பக்கத்துல இருக்க கெமிக்கல் லீக்காகி அந்த இடமே வெடிச்சுடுமாம். இந்த ஐடியாவை சொன்னவன், அதை ஏதோ படத்துல இன்ஸ்பயராகி சொன்னானாம்.” என்ற தகவலையும் சேர்த்து கூறினான் கவின்.

இப்படி இன்னும் பல சம்பவங்கள். இவை அனைத்தும் கவின் அறிந்தது மட்டுமே. அவன் அறியாதவை இன்னும் எத்தனையோ?

கவின் கூறியதை ஜீரணிக்க முடியாத ஹர்ஷவர்தனோ, முயன்று அதிலிருந்து வெளியே வந்து, “இதுக்கெல்லாம் அந்த வெப்சைட் தாண்டி ஏதாவது ஆதாரம் இருக்கா கவின்?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “இல்ல சார், யஷ்வந்த் அந்த வெப்சைட் தாண்டி எந்த டீலிங்கும் வெளிய வச்சுக்க மாட்டான் சார். எல்லாமே அந்த வெப்சைட்டுக்குள்ள தான். அதை தவிர, பாதிக்கப்பட்டவங்க கிட்டயிருந்து தான் கால்ஸ் வரும். அதை வச்சு தான், இவன் பண்ற இந்த அசிங்கத்தை எல்லாம் தெரிஞ்சுக்கிட்டேன் சார்.” என்றான் கவின்.

“ஹ்ம்ம், அந்த கால்ஸோ, இல்ல உங்க கிட்ட இருக்க ஃபோட்டோஸோ, ஸ்டிராங் எவிடான்ஸ் இல்ல கவின். ஈஸியா அதுல இருந்து வெளிய வந்துடுவான். இருந்தாலும், முயற்சி பண்ணி பார்ப்போம்.” என்ற ஹர்ஷவர்தன், “அந்த வெப்சைட்டுக்கு உங்களுக்கு ஆக்சஸ் இருக்கும் தான?” என்று கேட்க, “ஆஃபிஸுக்குள்ள தான் சார் ஆக்சஸ் இருக்கும். அதுவும் அவனோட பெர்சனல் கம்பியூட்டர்ல மட்டும் தான்.” என்று கவின் கூற, அந்த வலைதளத்திற்கு யஷ்வந்த் எத்தனை முக்கியத்துவம் கொடுக்கிறான் என்பது ஹர்ஷவர்தனிற்கு புரிந்தது.

அதையே கைலாஷும் கூற, “அவனோட ஹிஸ்டரி மொத்தமும் அதுல தான இருக்கு. அதான் அத்தனை பாதுகாப்பு!” என்று கேலியாக கூறிய ஹர்ஷவர்தன், அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கேள்வியை கேட்டான்.

“மௌனிகா பத்தி உங்களுக்கு தெரியுமா கவின்?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “அவனோட ஒய்ஃப் தான சார்? அவங்களை கூட பிளான் பண்ணி தான் கல்யாணம் பண்ணான் போல சார். இந்த விஷயம் ரீசண்ட்டா தான் தெரிய வந்துச்சு.” என்று கவின் கூற, ஏதோ பெரிதாக ஒன்று வெளிவரப் போகிறது என்று பதற்றமாக இருந்தது ஹர்ஷவர்தனிற்கு.

“என்ன பிளான் பண்ணி கல்யாணம் பண்ணானா? இது வேறயா?” என்று அதைப் பற்றி தெரியாத கைலாஷ் கூற, “அட ஆமா சார், அவன் எவ்ளோ பெரிய சாடிஸ்ட்டா இருந்தா, அந்த வெப்சைட்ல யாரோ சொன்னதுக்காக அந்த பொண்ணை கல்யாணம் பண்ணி, பொண்டாட்டியையே தப்பு தப்பா வீடியோ எடுத்து அதுல போடுவான்? இதுல அதை பெருமையா வேற யாருக்கிட்டயோ சொல்லிட்டு இருந்தான். அது என்ன ஃபேன்டஸியோ கருமம்!” என்று கவின் கூற, அதைக் கேட்ட மற்ற இருவருக்கும் அதிர்ச்சியே!

கைலாஷிற்கு அந்த சம்பவத்தை கேட்ட அதிர்ச்சி என்றால், ஹர்ஷவர்தனிற்கோ, வேறு யாரோ இதில் சம்பந்தப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சி! யார் அந்த நபர்?

தொடரும்…

6 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *