அத்தியாயம் 20
கவின், யஷ்வந்த் – மௌனிகா திருமணமே திட்டமிட்டு நடத்தப்பட்டது என்றும், அதற்கான காரணம் யாரோ ஒருவர் என்றும் கூறியதைக் கேட்ட அதிர்ச்சியிலிருந்த ஹர்ஷவர்தனோ, முழுதாக இரு நொடிகள் கழிந்த பின்னரே, “யாரோ சொன்னதுக்காகன்னு சொன்னீங்களே கவின், யாரு அதுன்னு தெரியுமா?” என்று படபடப்புடன் வினவினான்.
“அது யாருன்னு எல்லாம் எனக்கு தெரியாது சார். சமீபத்துல, மேடம் காணாம போறதுக்கு முன்னாடி தான், யாருக்கிட்டயோ இதை எல்லாம் அவன் ஃபோன்ல பேசிட்டு இருந்ததை கேட்டேன். முழுசா இல்லன்னாலும், ஓரளவுக்கு மேடம் கிட்டயும் நேர்ல பார்க்கும்போது சொன்னேன். ஆனா, மறுநாளே அவங்க காணாம போயிட்டாங்க.” என்றான் கவின்.
மௌனிகாவின் குறிப்பேட்டில் இருந்தவற்றை நினைத்து பார்த்த ஹர்ஷவர்தன், அவை கவின் சொல்லியதன் எதிர்வினை தான் அவள் காணாமல் போனது என்பதை புரிந்து கொண்டான்.
“அப்போ அவங்க காணாம போனதுக்கு காரணம், அந்த சைக்கோவை பத்தி தெரிஞ்சதால தானா?” என்று கைலாஷ் வினவ, “அது சரியா தெரியல, ஆனா, எனக்கு தான் பயமா இருந்துச்சு. ஒருவேளை, நான் சொல்லி தான் அவங்களுக்கு விஷயம் தெரிஞ்சுருக்குன்னு அவனுக்கு தெரிஞ்சா, என்னை என்ன வேணும்னாலும் பண்ணுவான்.” என்று பயத்துடன் கூறினான் கவின்.
“இப்போ உங்களை எதுவும் செய்யலன்னா, அப்போ அவனுக்கு விஷயம் இன்னும் தெரியல போல.” என்று யோசனையுடன் கூறிய ஹர்ஷவர்தன், “கவின், மௌனிகாவை எங்க அடைச்சு வச்சுருப்பான்னு ஏதாவது ஐடியா இருக்கா? லைக், அவனுக்கு ஏதாவது சீக்ரெட் பிளேஸ் எதுவும் இருக்கா? உங்களுக்கு தெரியுமா?” என்று வினவினான்.
“இல்ல சார், அப்படி எதுவும் சீக்ரெட் பிளேஸ் இருக்குதான்னு எனக்கு தெரியல. முன்னாடி சொன்ன மாதிரி, நான் பார்த்தது வரை, அவன் இதுவரை எதுலயும் டைரெக்ட்டா இன்வால்வானது இல்ல.” என்று கவின் கூற, “அப்போ உங்களுக்கு தெரியாம இருக்கலாம்.” என்றான் ஹர்ஷவர்தன்.
“இப்போ அதை எப்படி நம்ம தெரிஞ்சுக்குறது?” என்று கைலாஷ் கேட்க, கவினை பார்த்த ஹர்ஷவர்தனோ, “உங்க மூலமா தான் தெரிஞ்சிக்க போறோம். நீங்க அவனோட பி.ஏ… அதுவுமில்லாம உங்களுக்கு அந்த வெப்சைட்ல அட்மின் அக்சஸ் வேற இருக்கு. சோ, அவன் பக்கத்துலயே இருந்து அவனுக்கு எதிரான ஆதாரங்களை உருவாக்க நீங்க தான் ஹெல்ப் பண்ணனும்.” என்று கூற, கவினோ பயந்து நடுங்கினான்.
“சார், நான் தான் ஏற்கனவே சொன்னேனே… என் குடும்பம்… நான் இல்லன்னா…” என்று கவின் பயத்தில் படபடக்க, “ரிலாக்ஸ் கவின். உங்களுக்கு ஆபத்து வர மாதிரி எதுவும் நடக்காது. டிரஸ்ட் மீ.” என்றான் ஹர்ஷவர்தன்.
இந்த இடத்தில், அவனும் கவினை போலவே சாதாரண மனிதன் தான் என்பதை மறந்து போனான் ஹர்ஷவர்தன்.
*****
ஆணையர் அலுவலகம்…
ஆணையரின் முன்பு எரிச்சலுடன் அமர்ந்திருந்தான் அபிஜித்.
அவர் கொடுத்த வேலையை சில மணி நேரங்களில் முடித்து, இதோ அதற்கான கோப்புகளை அவர் முன் வைத்தவன், “அடுத்த முறை இப்படி ஈஸியா முடியுற கேஸை தராதீங்க சார்.” என்ற அபிஜித் அங்கிருந்து கிளம்ப முற்பட, வாயில் கதவு மூடியிருக்கிறதா என்பதை சரிபார்த்த ஆணையரோ, “சிட் டவுன் அபிஜித்.” என்றார்.
மேலதிகாரி என்பதால் அவர் உத்தரவை மீற முடியாமல், அதை முகத்தில் காட்டியபடி அபிஜித் அவரெதிரே அமர, ஆணையரோ அந்த அறையின் கதவை ஒரு முறை பார்த்துவிட்டு, “இப்போ என்னை பத்தி நீங்க என்ன நினைச்சுட்டு இருப்பீங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும் அபிஜித். சொந்த பொண்ணுக்கே நியாயம் வாங்கி தர வக்கில்லாதவன்னு தான உங்க எண்ணமா இருக்கும்.” என்று விரக்தியாக கூறியவரை புருவம் சுருக்கி பார்த்தான் அபிஜித்.
“என்ன பண்றது அபிஜித், ஜெனரல் பப்லிக்கா இருந்தா, அந்த பொறுக்கிங்களை கொன்னுட்டு, ஜெயிலுக்கு கூட போயிருப்பேன். ஆனா, இந்த கமிஷனர் பதவி என்னை அப்படி செய்ய விடாம தடுக்குது. கூடவே, இந்த விஷயத்தை இப்படியே விடலன்னா, என் குடும்பத்தையே உரு தெரியாம அழிச்சுடுவேன்னு என்னையே மிரட்டுறானுங்க. இத்தனைக்கும் இந்த சிட்டியோட கமிஷனர் நான்! ஹ்ம்ம், பணமும் அதிகாரமும் அதிகாரிங்களை அதோட கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுருக்கு! தப்பு பண்ணவன் ஜாலியா சுத்திட்டு இருக்கான். பாதிக்கப்பட்டவங்க அந்த பாதிப்புல இருந்து வெளியவும் வர முடியாம, தப்பு பண்ணவனுக்கு தண்டனையும் வாங்கி தர முடியாம அல்லாடிட்டு இருக்கோம். இது இந்த நாட்டோட சாபம் போல.” என்று எப்போதும் இருக்கும் கம்பீரம் தொலைந்து தளர்ந்து பேசியவரை வருத்தத்துடன் பார்த்தான் அபிஜித்.
“சார், இதுக்காகவே அந்த கேஸை நீங்களே முன்னாடி நின்னு விசாரிக்கணும். அந்த பா*****க்கு தண்டனை வாங்கி தரணும்.” என்று கோபத்துடன் பேசிய அபிஜித்தை பார்த்தவரோ, “அதுவரை, என்னை உயிரோட இருக்க விடுவானுங்கன்னு நினைக்குறீங்களா அபிஜித்? குறைஞ்ச பட்சம், டிரான்ஸ்ஃபராச்சும் பண்ணிடுவானுங்க.” என்றார் ஆணையர்.
“அதுக்காக, இப்படியே விட்டுடுறதா சார்? அப்போ தப்பு பண்ணவன் இன்னும் தப்பு பண்ணிட்டே இருப்பான். பாதிக்கப்பட்டவங்களோட எண்ணிக்கை மட்டும் உயர்ந்துட்டே இருக்கும்.” என்ற அபிஜித்தை பார்த்த ஆணையரோ, “நோ, அப்படியே விட போறேன்னு யாரு சொன்னா? என் மகளுக்கு நியாயம் வாங்கி தருவேன். ஆனா, இப்போதைக்கு அதை வெளிப்படையா செய்ய முடியாது.” என்று பூடகமாக பேசியவரை புருவம் சுருக்கி பார்த்தான் அபிஜித்.
“எஸ், அவனுங்களை பத்தி அக்குவேறா ஆணிவேறா தெரியுற வரை, இதை ரகசியமா தான் விசாரிக்கணும் அபிஜித். இந்த டிப்பார்ட்மெண்ட்ல, எனக்கு உங்களை தவிர வேறு யாரையும் நம்ப முடியல. இப்போ நேர்மையா இருக்க மாதிரி தெரிஞ்சாலும், பணம்னு வந்தா எப்படி மாறுவாங்கன்னு கெஸ் பண்ண முடியல. ஆனா, உங்களை ஏனோ என் மனசாட்சி நம்ப சொல்லுது. அதுக்காக தான், உங்களை மட்டும் இதுல இன்வால்வ் பண்றேன்.” என்றவர், அவன் சற்று முன்பு கொடுத்த கோப்பை அவரின் மேஜையின் கடைசி அடுக்கில் வைத்து பூட்டியவர், “மத்தவங்களை பொறுத்தவரை, நீங்க இன்னும் உங்களுக்கு அசைன் பண்ண வழக்கை தான் விசாரிச்சுட்டு இருக்கீங்க.” என்று அவர் கூற, அவரின் மீதிருந்த அதிருப்தி மறைந்து போனது அபிஜித்திற்கு.
சில நிமிடங்கள், அந்த வழக்கை பற்றி உரையாடினர் இருவரும். அபிஜித் அங்கிருந்து விடைபெறும் சமயம், “சார், நீங்க சொன்ன மாதிரி நம்ம டிப்பார்ட்மெண்ட் ஆளுங்களை நம்ப முடியாது. சோ, என் ஹெல்புக்கு என் ஃபிரெண்ட்டை இன்வால்வ் பண்ணிக்குறேன். எல்லாத்துலயும் இல்ல, என்னால தனியா முடியாதுங்கிற சமயத்துல மட்டும்.” என்றான்.
சிறிது யோசித்த ஆணையரும், “உங்களுக்கு நம்பிக்கையானவங்கன்னா ஓகே அபிஜித். பட், இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியாம பார்த்துக்கோங்க.” என்ற எச்சரிக்கையுடன் வழியனுப்பினார்.
*****
“போலீஸ் சைட்ல ஏதாவது நியூஸ் இருக்கா?” என்று யாரிடமோ அலைபேசியில் வினவினான் யஷ்வந்த்.
அதற்கு மறுமுனையில் இருந்தவனோ, “நம்ம கேஸை கிளோஸ் பண்ணிட்டாங்க சார். எல்லாம் நம்ம சென்டிரல் மினிஸ்டர் வேலை தான். மீடியா வாயையும் அடைச்சாச்சு.” என்று உற்சாகமாக கூற, யஷ்வந்த்திடம் அந்த மகிழ்ச்சி இல்லை.
‘அந்த அபிஜித் அவ்ளோ சீக்கிரம் விட மாட்டான்னு நினைச்சேனே!’ என்ற யோசனையுடன், “கமிஷனரும் அந்த அபிஜித்தும் இப்போ என்ன பண்ணிட்டு இருக்காங்க?” என்று வினவ, “முதல்ல, கமிஷனர் கோபப்பட்டாரு போல சார். வழக்கம் போல, நம்ம பசங்க அவரோட குடும்பத்தை வச்சு மிரட்டி, ஆஃப் பண்ணிட்டாங்க. அந்த அபிஜித் தான் ரொம்ப துள்ளிட்டு இருந்தான் போல. கமிஷனரே அவனுக்கு வேறொரு கேஸை கொடுத்து அமைதியாக்கிட்டாரு. இப்போ அவன் அந்த கேஸை தான் விசாரிச்சுட்டு இருக்குறதா, அவனோட ஸ்டேஷன்ல இருந்து தகவல் வந்துச்சு.” என்றான் அவன்.
எனினும், யஷ்வந்த்திற்கு சந்தேகம் தீர்ந்த பாடில்லை. ‘அந்த அபிஜித் கிட்ட கேர்ஃபுல்லா தான் இருக்கணும்.’ என்று தனக்குத்தானே கூறிக் கொண்டான்.
*****
ஆணையர் அலுவலகத்திலிருந்து நேராக ஹர்ஷவர்தனின் இல்லத்தை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான் அபிஜித். காவலர்களிடம் மட்டுமல்ல, அவனுடைய காவல் நிலையத்திலும் கூட அவனிற்கு நம்பிக்கை இல்லை. ஆணையரையே மிரட்டியவர்களிற்கு, அவன் அலுவலகத்தை உளவு பார்க்க இயலாதா என்ன?
அவன் இல்லத்தில் கூட இதே வேலை நடக்கலாம் என்பதால் தான் ஹர்ஷவர்தனின் இல்லத்தை தேர்ந்தெடுத்தான். இப்போது பிரியம்வதாவும் அங்கில்லாதது வசதியாக போயிற்று அவனிற்கு.
வரும் வழியெல்லாம் ஹர்ஷவர்தனிற்கு அழைத்து போய் ஓய்ந்திருந்த அபிஜித், வாகன தறிப்பிடத்தில் அவனின் வாகனத்தை நிறுத்தி விட்டு, ஹர்ஷவர்தனின் இல்லம் நோக்கி சென்றபடி, ‘அவன் வேலையா இருந்தா என்ன செய்ய? இங்க வந்திருக்க கூடாதோ? இதுல அவனை இன்வால்வாக வேண்டாம்னு சொல்லிட்டு, இப்போ நானே அவனை இன்வால்வ் பண்றேனே, இது தப்போ?’ என்ற சிந்தனையில் இருந்தான்.
அதே யோசனையுடன் ஹர்ஷவர்தனின் இல்லத்தை அடைந்தவன், அழைப்பு மணியை அழுத்தப் போக, அதே சமயம், “அபி…” என்ற ஹர்ஷவர்தனின் குரல் அவனிற்கு பின்னிலிருந்து கேட்டது.
“வெளிய போயிருந்தியா ஹர்ஷா? ஏன்டா எத்தனை முறை கால் பண்ணேன்? உனக்கெல்லாம் மொபைல் ஒரு கேடு!” என்று அபிஜித் திட்ட, “அது… மொபைல் மறந்து வீட்டுலேயே வச்சிட்டு போயிட்டேன் டா.” என்றான் ஹர்ஷவர்தன்.
“அப்படி எங்க தான் போயிருந்த? என்று கடுப்புடன் அபிஜித் வினவ, “உள்ள போய் பேசுவோம்.” என்ற ஹர்ஷவர்தனோ அபிஜித்துடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
பின்னர் அபிஜித்திடம் கைலாஷ் வந்தது, அவனுடன் அவன் வீட்டிற்கு சென்றது, அங்கு கவினை பார்த்தது என்று அனைத்தையும் கூற, “லூஸா டா நீ! அவன் வந்து கூப்பிட்டா, உடனே போயிடுவியா? அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போய், உன்னை ஏதாவது செஞ்சுருந்தா?” என்று முதலில் கத்திய அபிஜித், பின்பு குரலை தணித்து, “ஹர்ஷா, முதல்ல உன்னை சுத்தி இருக்க சூழலை புரிஞ்சுக்கோ. ரொம்ப பெரிய தப்பெல்லாம் அசால்ட்டா பண்ணிட்டு இருக்கவங்களோட, ஒருவகையில நீ டைரெக்ட்டா மோதியிருக்க. நீ இப்போ அவங்களோட கண்காணிப்புல இருக்கலாம். உனக்கு புரியுதா?” என்று ஹர்ஷவர்தனிற்கு இருக்கும் ஆபத்தை எடுத்துக் கூறினான் அபிஜித்.
“எனக்கு புரியது அபி. ஆனா, கைலாஷ் லாவண்யாவோட அண்ணன். ஹீ இஸ் ஆல்ஸோ அ விக்டிம்.” என்று ஹர்ஷவர்தன் கூற, “இந்த நிலைமைல யாரையும் நம்ப கூடாது ஹர்ஷா.” என்று அவன் கூற்றில் உறுதியாக நின்றான் அபிஜித்.
“ப்ச், இப்போ அங்க போனதால தான் கவின் கிட்ட பேச முடிஞ்சுது அபி.” என்று ஹர்ஷவர்தன் சலித்துக் கொள்ள, “கவின் கைலாஷ் கிட்ட மாட்டிக்கிட்டது கூட யஷ்வந்த்தோட பிளானா இருக்கலாமே.” என்று அபிஜித் கேட்க, “இப்படி எல்லாத்தையும் சந்தேகப்பட்டா எப்படி அபி?” என்றான் ஹர்ஷவர்தன்.
“போலீஸா இருந்தா அப்படி தான் ஹர்ஷா, எல்லாத்தையும் தான் சந்தேகப்படனும். என்னால நீ சொல்றது அப்படியே நம்ப முடியல. ஏன்னா, யஷ்வந்த் அவ்ளோ ஈஸியான ஆளில்ல.” என்றான் அபிஜித்.
“நீ சொல்றதை நானும் ஒத்துக்குறேன் அபி. யஷ்வந்த் அவ்ளோ ஈஸியான ஆளில்ல தான். ஆனா, அவனுக்கும் எதிரிங்க இருப்பாங்க தான. கவினை பார்த்தா, எனக்கு அந்த இடியட்டை சப்போர்ட் பண்ற ஆள் மாதிரி இல்ல. அப்படி இருந்தா நமக்கு ஏன் இவ்ளோ இன்ஃபர்மேஷன் குடுக்கணும்? அண்ட், உன் டிப்பார்ட்மெண்ட்ல கமிஷனர் பொண்ணு கேஸ், லாவண்யா கேஸ் ரெண்டையும் கைவிட்டுட்டாங்க. அங்கயிருந்து எந்த ஹெல்பும் கிடைக்க போறது இல்ல. சோ, ஒய் நாட் வீ டிரை திஸ்?” என்றான் ஹர்ஷவர்தன்.
அதற்கு மேல் அவனிடம் விவாதிக்க விரும்பாத அபிஜித்தோ, “அடுத்து என்ன பிளான் பண்ணியிருக்கீங்க?” என்று ஹர்ஷவர்தனிடம் கேட்டான்.
மறந்தும், ஆணையரிடம் பேசியதை ஹர்ஷவர்தனிடம் பகிரவில்லை. என்னதான், ஹர்ஷவர்தன் கூறினாலும், அபிஜித்தால் அந்த இருவரையும் முழுதாக நம்ப முடியவில்லை.
“முன்னாடி சொன்ன மாதிரி, யஷ்வந்த்துக்கும் எதிரிங்க இருப்பாங்க. பண பலமும் அதிகார பலமும் இருக்க யஷ்வந்த்தை எதிர்க்க சாதாரணமா இருக்க நம்மளால முடியாது. ஆனா, அவனை விட பலம் அதிகமா இருக்க அவனோட எதிரிங்களால முடியலாம் இல்லையா? சோ, முதல் அடியா, அவனோட எதிரிங்களை கண்டுபிடிக்க போறோம்.” என்றான் ஹர்ஷவர்தன்.
“ம்ம்ம் சரிதான். ஆனா, அவனோட எதிரிங்க என்ன நல்லவங்களாவா இருக்க போறானுங்க?” என்று அபிஜித் யோசனையுடன் வினவ, “நமக்கு இப்போ வேற என்ன வழி இருக்கு சொல்லு? ‘முள்ளை முள்ளால எடுக்குறதை’ போல, ஒரு கெட்டவனை அழிக்க இன்னொரு கெட்டவனை தான் தேடி போகணும்.” என்றான் ஹர்ஷவர்தன்.
“ஹ்ம்ம் ஓகே, நீங்க இதுல ப்ரோசீட் பண்ணுங்க. ஆனா, எந்த தகவல் கிடைச்சாலும் அதை என்கிட்ட ஷேர் பண்ணனும் ஹர்ஷா.” என்று அழுத்தமாக அபிஜித் கூற, “இதுல என்ன சந்தேகம் அபி. உன்கிட்ட சொல்லாம எப்படி? கைலாஷ் கூட…” என்று ஏதோ கூற வந்த ஹர்ஷவர்தனை இடைவெட்டிய அபிஜித், “இந்த விஷயம் எனக்கு தெரிஞ்சுருக்குன்னு அவங்க ரெண்டு பேருக்கும் தெரிய வேண்டாம். நான் இதுல இன்வால்வாகுறதும் தெரிய வேண்டாம். நான் எனக்கு குடுத்த கேஸ்ல பிஸியா இருக்க மாதிரியே இருக்கட்டும்.” என்றான் அபிஜித்.
அவனின் அவநம்பிக்கை புரிய ஹர்ஷவர்தனும் அவனை வற்புறுத்தவில்லை.
அப்போது ஹர்ஷவர்தனின் அலைபேசி ஒலியெழுப்ப, வெகு நேரம் கழித்து அலைபேசிக்கு கவனத்தை திருப்பினான் அவன்.
அழைத்தது கணேஷ் தான். இதற்கு முன்னரும் இருமுறை அழைப்பு விடுத்திருந்தார்.
அலைபேசியை வீட்டிலேயே வைத்துவிட்டு சென்ற தன் மடத்தனத்தை நிந்தித்தவாறே அழைப்பை ஏற்றான்.
அழைப்பை ஏற்றதும் மனைவியை பற்றி கேட்க வேண்டும் என்ற ஆவலை கட்டுப்படுத்தியவன், “ஹலோ மாமா, எப்படி இருக்கீங்க?” என்று வினவ, “நல்லா இருக்கேன் ஹர்ஷா. நீங்க எப்படி இருக்கீங்க? பிரியா எப்படி இருக்கா? மூணு நாளா அவ கால் பண்ணவே இல்லையே. பிஸியா இருப்பீங்கன்னு தான் நானும் கால் பண்ணல. நீங்க கால் பண்ணப்போ, கோவில்ல இருந்தேன். அதான் சரியா பேச முடியல…” என்று கணேஷ் பேசிக் கொண்டே இருக்க, ஹர்ஷவர்தன் எங்கு அதை எல்லாம் கவனித்தான்?
அவன் மூளை, ‘பிரியா எப்படி இருக்கா?’ என்பதிலேயே தேங்கிவிட, மனமோ படபடவென அடித்துக் கொண்டது.
மாமனாரிடம் எதையோ சொல்லி அழைப்பை துண்டித்தவனின் முகம் எதுவோ சரியில்லை என்பதை அபிஜித்திற்கு உணர்த்த, “என்னாச்சு ஹர்ஷா?” என்று வினவ, “வது… வது… ஊருக்கு போகல அபி…” என்று திக்கி திணறி கூற, அபிஜித்திற்கும் அதிர்ச்சி தான்.
நொடியினில் திகைப்பிலிருந்து வெளிவந்த அபிஜித், “இடியட்… இடியட்… எத்தனை முறை சொன்னேன்? ரெண்டு பேரும் ஆபத்துல இருக்கீங்கன்னு… ஷிட்… இப்போ எங்கன்னு போய் தேட?” என்று திட்ட, ஹர்ஷவர்தனோ என்ன செய்வது என்று தெரியாமல் இடிந்து போய் அமர்ந்து விட்டான்.
*****
அதே சமயம்… யஷு பேலஸ்…
நாற்காலியில் கட்டப்பட்டிருந்தவளை நெருங்கிய யஷ்வந்த், அவளின் முகவடிவை வருடியவன், “அன்னைக்கு மிஸ்ஸாகிட்ட. ஆனா, விதியை பாரு, திரும்ப உன்னை என் கையில சேர்த்துருக்கு! இனி, உன்னால என்கிட்ட இருந்து தப்பிக்க முடியாது.” என்று அவளின் கழுத்தை அழுத்தியவாறு கர்ஜித்தான்.
தொடரும்…
Nice epi👍👍
Tq so much sis 😍😍😍
Omg, Ivan Priya va dha kidnap panitana😳
Apdi dhan irukum polaye 😷😷😷
pochi antha paithiyam kitta mattikitala apo antha lavanya oda anna va vachi tha etho pani irukan pola avan tha ipo mounika vishayathula etho nadanthu iruku
Lavanya voda anna va… idhu list laye ilaye 🙄🙄🙄 Irukumo 🤔🤔🤔
Very interesting
Tq so much 😍😍😍
🙄🙄🙄