Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 22

வஞ்சிப்பதோரும் பேரவா! – 22

அத்தியாயம் 22

கட்டிலில் பலம் இழந்து கிடக்கும் பெண்ணிடம் தன் வீரத்தை காட்ட யஷ்வந்த் முன்னேறும் சமயம், அவனின் அலைபேசி ஒலியெழுப்பி தொந்தரவு செய்தது.

முதலில் அதை கவனிக்காமல் முன்னேறியவன் அவளின் கைகளில் அழுத்தம் கூட்ட, அந்த இடமே கன்றி விட்டது பிரியம்வதாவிற்கு.

நடக்கப் போவதை எண்ணி, மறுகி, அதை தடுக்க இயலாத தன்னை நினைத்தே கழிவிரக்கம் கொண்டு, மூடியிருந்த விழிகளிலிருந்து கண்ணீரை கசிய விட்டவள், துணி கொண்டு அடைத்திருந்த இதழ்களையும் பற்களால் கடித்தாள்.

துணி மறைத்திருந்ததால், அது அந்த கயவன் அறிய வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால், அதற்கும் மகிழத் தானே செய்வான்!

அவன் அவள் மீது படரும் சமயம், அவனை கடுப்பேற்றும் வகையில் விடாமல் அவனின் அலைபேசி ஒலிக்க, “ப்ச், இந்த நேரத்துல எவன்?” என்று எரிச்சலுடன், அலைபேசி பக்கம் கவனத்தை திருப்பினான்.

அதில் அவனின் காரியதரிசி கவினின் பெயர் ஒளிர, ‘இப்போ எதுக்கு இவன் விடாம கால் பண்றான்?’ என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்க, மறுமுனையில் கவினோ “சார், நீங்க கேட்ட ஃபைல்ஸை வீட்டுக்கு கொண்டு வந்துட்டேன்.” என்று பவ்யமாக கூறினான்.

அவனிடம் எந்த கோப்பை கேட்டான் என்பதை மறந்து போன யஷ்வந்த்தோ, “இதுக்கு ஒரு காலா? அங்க வச்சுட்டு போ இடியட்.” என்று அவன் காரியம் கெட்டதினால் திட்ட, “சார்… அந்த ஹோம் மினிஸ்டர் பையன் அடிக்கடி கால் பண்ணி மிரட்டுறான்னு சொல்லியிருந்தேனே… அதைப் பத்தி பேசலாம்னு சொன்னீங்களே…” என்று நினைவு படுத்தினான் கவின்.

“ப்ச், எல்லாம் இப்போவே செய்யணுமா? நாளைக்கு பேசலாம்.” என்று பொறுமையை இழுத்துப் பிடித்து யஷ்வந்த் கூற, “சார்… இதை தள்ளிப் போடுறது ஆபத்துன்னு தோணுது. அதுவும் உங்க பேரு போலீஸ் ஸ்டேஷன்ல அடிபடுற இந்த நேரத்துல அவங்களை பகைச்சுக்க கூடாதுல சார்.” என்று கவின் பவ்யமாக கூறினான்.

அதற்கு அவனை திட்டினாலும், அவன் சொல்வது நியாயமாக பட்டதால், “ஓகே வரேன்.” என்ற யஷ்வந்த், கட்டில் புறம் திரும்பி, “இப்போவும் தப்பிச்சுட்ட. ஆனா, இது ரொம்ப நேரம் நீடிக்காது. நைட்டு பார்த்துக்குறேன்.” என்றபடி வெளியேறினான்.

இன்னும் சில நொடிகளில், சிதைந்து விடுவோம் என்று பிரியம்வதா எண்ணியிருந்த வேளையில், கிடைத்த இந்த சிறு சந்தர்ப்பத்தை அவளின் அதிர்ஷ்டமாக எண்ணினாள். அலைபேசியில் பேசிய அந்த நபருக்கு மானசீகமாக நன்றி கூறியவளின் மனமோ, அந்த கயவனிடமிருந்து முழுதாக தப்பிக்கவில்லை என்பதை எடுத்துக் கூறியது.

இரவு நேரம் இது போல சந்தர்ப்பம் கிடைக்குமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் வேளையிலேயே, அதிக சோர்வு காரணமாக மயக்கமுற்றாள்.

இரவும் அவளின் அதிர்ஷ்டம் கைகொடுக்குமா?

*****

அதே சமயம்… ஹர்ஷவர்தனோ படபடக்கும் இதயத்தை நீவியபடி அலைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகே அமர்ந்து வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த அபிஜித்திற்கு அவனை அப்படி பார்க்க வருத்தமாக இருந்தது.

ஹர்ஷவர்தனின் இந்த பரபரப்புக்கு காரணம், சற்று முன்னர் கவினிடமிருந்து வந்த தகவல் தான்.

“சார், நான் கவின் பேசுறேன்.” என்ற போதே அபிஜித்தும் கேட்கும் வகையில் அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டிருந்தான் ஹர்ஷவர்தன்.

“சொல்லுங்க கவின்… எதுக்கு பதட்டமா இருக்கீங்க?” என்று ஹர்ஷவர்தன் முயன்று இயல்பாக வினவ, “சார், எனக்கு தெரிஞ்ச வகையில யஷ்வந்த்தோட மொபைலை ஹேக் பண்ணதுல, ரீசண்ட்டா அவன் யாருக்கோ பேசுனதை கேட்க முடிஞ்சுது. அதுல, உங்க ஒய்ஃப் காணாம போன கேஸை விசாரிக்கிற போலீஸை பத்தின தகவலை கேட்டான். அதோட, அவரோட ஃபேமிலி, ஃபிரெண்ட்ஸ் பத்தியும் விசாரிக்க சொல்லியிருக்கான்.” என்று கவின் கூறினான்.

அதைக் கேட்ட அபிஜித்தோ, ‘இவன் திருந்துற கேஸ் இல்ல.’ என்று எண்ணிக் கொண்டு, ஹரிஹரனிற்கு ‘பி கேர்ஃபுல். அண்ட் யுவர் ஃபேமிலி அண்ட் ஃபிரெண்ட்ஸ் ஆர் ஹிஸ் நெக்ஸ்ட் டார்கெட். டேக் கேர்.’ என்ற செய்தியை அனுப்பினான்.

“சார், அதோட அவனுக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குறதாவும் சொன்னான். அதை சொன்னப்போ, அவன் குரல்ல… வன்மம் மட்டும் தான் இருந்துச்சு. அவன் இன்னைக்கு முழுக்க ஆஃபிஸ் வரல. இங்க அவனுக்கு முக்கியமான வேலையும் இல்ல. அப்போ, அவன் வீட்டுல தான்… எனக்கு ஏதோ தப்பா தெரியுது சார். இதோ, நான் அவன் வீட்டுக்கு தான் போயிட்டு இருக்கேன். ஏதாவது சாக்கு சொல்லி அவனை ஆஃபிஸுக்கு கூட்டிட்டு போறேன். நீங்க அவன் வீட்டை செக் பண்ணுங்க. உங்க ஒய்ஃப் அங்க இருக்கலாம்.” என்று கவின் கூற, மற்ற இருவருக்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இதோ, கவினிடமிருந்து வரும் செய்திக்காக அலைபேசியையே பார்த்தபடி இருந்தான் ஹர்ஷவர்தன்.

ஹர்ஷவர்தனின் குடியிருப்பில் இருந்த வாகன தறிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்திய அபிஜித், “ஹர்ஷா, இட் இஸ் அ குட் க்ளூ. ஆனா, கவின் சொல்ற மாதிரி நம்மளா அவன் வீட்டுல சேர்ச் பண்ண முடியாது. போன முறை என்னாச்சுன்னு பார்த்த தான?” என்று வினவ, அதற்கு பதிலில்லை அவனிடம்.

“ப்ச், வாயை திறந்து ஏதாவது சொல்லேன் டா.” என்று அபிஜித் கூறும்போதே ஹரிஹரனிடமிருந்து அழைப்பு வர, அதை ஏற்க வேண்டி வாகனத்தை விட்டு இறங்கினான் அபிஜித்.

*****

மின்தூக்கி கீழே வருவதை பார்த்தபடி இருந்த கவினோ, அதன் கதவுகள் திறந்ததும், பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

சட்டை பொத்தான்களை மாட்டியபடி வந்த யஷ்வந்த்தை அவனறியாமல் கவனிக்க ஆரம்பித்தான் கவின். கரத்திலும் உடல் பாகங்களிலும் இருந்த நகக்கீறல்களும், முழங்கையில் லேசாக தீட்டியிருந்த இரத்தமும் அவன் பயத்தை அதிகரிக்க செய்தது.

அதை தன் உடல்மொழியில் வெளிக்காட்டி விடாமல் இருக்க பிரம்மப்பிரயத்தனம் மேற்கொண்டிருந்தான் கவின்.

கவினின் முகத்தை கவனிக்காத யஷ்வந்த்தும் அவன் நீட்டிய கோப்பை வாங்கி பார்த்தபடி, “என்னவாம் அவனுக்கு?” என்று வினவ, பயத்தை மறைத்த கவினோ செறுமியபடி, “அவனை நீங்க ரொம்ப மிரட்டுறீங்களாம் சார். இப்படியே போனா, அவனோட அப்பா கிட்ட சொல்லிடுவானாம்.” என்றான்.

“ஓஹோ, மிரட்டுறேனாமாம்? மிரட்டல்னா எப்படி இருக்கும்னு காட்டுறேன்.” என்ற யஷ்வந்த், “என்னோட ஆஃபிஸுக்கு வா.” என்று கவினை அழைத்துக் கொண்டு யஷ்வந்த் முன்னே செல்ல, கவினோ அவன் இறங்கி வந்து மின்தூக்கியையும், இரண்டாம் தளத்தையும் பார்த்தபடி அவனுடன் சென்றான்.

வாகனத்தில் ஏறும் முன்னரே, ஹர்ஷவர்தனிற்கு செய்தி அனுப்பியவன், ‘செக் இன் செகண்ட் ஃப்ளோர்.’ என்றும் சேர்த்து அனுப்பினான்.

*****

அபிஜித் அனுப்பிய செய்தியை பார்த்து அழைத்த ஹரிஹரனிடம், சுருக்கமாக தங்களிற்கு கிடைத்த தகவலை பகிர்ந்த அபிஜித், “இதுல உங்க ஹெல்ப் வேணும்.” என்றும் கேட்டுக் கொள்ள, “ஸ்யூர் அபிஜித். அங்கிருந்து மெசேஜ் வந்ததும் சொல்லுங்க. ரெண்டு போலீஸை கூட்டிட்டு போய், என்குவரின்னு சொல்லி, நமக்கு சாதகமா ஏதாவது இருக்கான்னு பார்க்குறேன்.” என்று ஹரிஹரன் சொல்லில் கொண்டிருக்கும் போதே, புயல் வேகத்தில் வாகனத்தை கிளப்பி இருந்தான் ஹர்ஷவர்தன்.

“ஷிட்! ஹர்ஷா ஸ்டாப்…” என்று அபிஜித் கத்த, மறுமுனையில் இருந்த ஹரிஹரனோ நடந்ததை யூகித்து, “நீங்க கிளம்புங்க அபிஜித். நான் நேரடியா யஷ்வந்த் வீட்டுக்கு வந்துடுறேன்.” என்றபடி அழைப்பை துண்டித்தான்.

கவினிடமிருந்து செய்தி வந்ததும், உடனே கிளம்பியிருந்தான் ஹர்ஷவர்தன். அவனிற்கு சற்று முன்னர் அபிஜித் கூறியதெல்லாம் நினைவிலேயே இல்லை. அவன் மனம் முழுவதும் பிரியம்வதா மட்டுமே நிறைந்திருந்தாள். நொடி நேர தாமதமும், அவளை எமன் அருகில் நிறுத்தும் என்பதை நன்கறிந்ததால் தான் இந்த வேகம்.

அவன் வீட்டில் ஆரம்பித்த வேகம், யஷ்வந்த் வீட்டை அடைந்த போது தான் குறைந்தது.

வாகனத்திலிருந்து இறங்கியவன் அந்த மாளிகைக்குள் செல்ல முற்பட, வாயில் காவலாளி தடுத்தான். அதனை எல்லாம் ஹர்ஷவர்தன் கண்டு கொண்டால் தானே!

அப்போது அபிஜித்தும் அங்கு வந்துவிட, “போலீஸ் என்குவரி…” என்றான் அந்த காவலாளியிடம்.

அப்போதும் உள்ளே விடாமல் முரண்டு பிடித்தவனிடம், “கமிஷனர் பேசுனா விடுவீங்களா?” என்று அபிஜித் கத்தியதும் தான் இருவரையும் உள்ளே விட்டான்.

செல்லும் வழியில் ஹர்ஷவர்தனிற்கு மட்டும் கேட்கும் குரலில், “சொன்னது எதையும் கேட்க கூடாதுன்னு நினைச்சுருக்கியா ஹர்ஷா?” என்று கடுமையுடன் வினவ, அவனை பார்க்காமலேயே, “என் நிலைமைல இருந்து யோசிச்சு பாரு அபி.” என்றான் ஹர்ஷவர்தன்.

“ஆமா, பொல்லாத நிலைமை! எப்போ யோசிக்கணுமோ, அப்போ மண்ணு மாதிரி இருக்க வேண்டியது. காணாம போனதும் இப்படி கிடந்து துடிக்க வேண்டியது!” என்று முணுமுணுத்த அபி, அவன் பின்னே இரண்டாம் தளத்தை அடைந்தான்.

“ஏன்டா இங்க? கவின் என்ன மெசேஜ் அனுப்பினாரு?” என்று அபிஜித் வினவ, அதற்கு பதில் கூறிய ஹர்ஷவர்தன், அந்த தளத்தில் இருந்த எல்லா அறைகளையும் சோதனையிட்டான், யஷ்வந்த்தின் ரகசிய அறை உட்பட!

ஆனால், பிரியம்வதா சம்பந்தப்பட்ட எந்த துப்பும் அங்கு கிடைக்கவில்லை. மாறாக, யஷ்வந்த் அந்த ஈனச்செயல்களிற்காக உபயோகப்படுத்திய கணினிகளும் மற்ற கருவிகளும் காணக் கிடைத்தன.

இருவருக்குமே, அவை என்னவென்று தெரிந்திருந்தாலும், அவற்றை சோதிக்க அவசரம் காட்டவில்லை. ஏனெனில், அவர்களிற்கு அதற்கான அவகாசமும் இல்லை. மேலும், யஷ்வந்த் வீட்டிற்குள், சரியான காரணமின்றி, அத்துமீறி தான் நுழைந்திருந்தனர். இப்போது கண்டுபிடிக்கும் எந்த ஆதாரங்களையும் அடிப்படையாக வைத்து, அவனை கைது செய்யவும் முடியாது.

பிரியம்வதாவை பற்றிய தகவலை அந்த அறை முழுவதும் தேடிப் பார்த்து தோற்று போன இருவரும் தளர்ந்து வெளியே வர, அந்நேரம் யஷ்வந்த் காவலாளியை சத்தமிட்டவாறே வீட்டிற்குள் வந்தான்.

“நான் வர வரைக்கும் அவங்களை வெயிட் பண்ண சொல்லணும்ல. இடியட்!” என்று திட்டியவாறே வந்த யஷ்வந்த், அபிஜித் மற்றும் ஹர்ஷவர்தன் மின்தூக்கியிலிருந்து வெளியே வருவதை பார்த்து உண்டான கோபத்தை வெகுவாக கட்டுப்படுத்தியவாறே, “என் வீட்டுல என்ன பண்றீங்க? லாஸ்ட் டைம் நடந்தது மறந்துடுச்சா?” என்று ஹர்ஷவர்தனை பார்த்து வினவியவன், “நீங்க போலீஸ் தான? இப்படி தான் இன்னொருத்தர் வீட்டுக்குள்ள, சரியான காரணம் இல்லாம அத்துமீறி நுழைவீங்களா? என் பெர்சனல் ஸ்பேஸுக்குள்ள நுழையுறதுக்கு உங்களுக்கு யாரு அனுமதி குடுத்தா?” என்று கோபமாக வினவினான்.

அதற்கு அவர்கள் பதில் கூறுவதற்கு முன்பே, சமையலறையிலிருந்து வெளிவந்த ஹரிஹரன், “சரியான காரணம் இல்லைன்னு யாரு சொன்னா யஷ்வந்த்?” என்று கேட்டவாறு, அவன் கரத்திலிருந்த வெள்ளை நிற பொடி அடங்கிய பொட்டலத்தை தூக்கி காட்டினான்.

அதில் குழப்பமும் அதிர்ச்சியும் அடைந்த யஷ்வந்த், “என்னது இது?” என்று வினவ, “அட, இது என்னன்னு தெரியலையா? இவ்ளோ பெரிய ‘பிசினஸ்’ பண்ற உங்களுக்கு இது என்னன்னு தெரியலைன்னு சொல்றது வேடிக்கையால இருக்கு!” என்று ‘பிசினஸ்’ என்பதில் அழுத்தம் கொடுத்து,  சீண்டலாக கேட்டான் ஹரிஹரன்.

அது என்னவென்று தெரியாதவனா யஷ்வந்த்? எத்தனை முறை, ஆயிரக்கணக்கான பொட்டலங்கள், அவன் வலைதளத்தின் மூலம் கை மாறுவதை வேடிக்கை பார்த்திருக்கிறான்.

எனினும், அவனிடம் இல்லாத கெட்ட பழக்கங்களில் ஒன்று, போதை மருந்தை பாவிப்பது. அப்படி இருக்கையில், அவன் வீட்டிலிருந்து போதை மருந்தை கைப்பற்றியிருப்பதாக ஹரிஹரன் கூறுவதை நம்ப இயலவில்லை.

யஷ்வந்த் குழப்பத்துடன் சமையல் செய்பவரை பார்க்க, “ஐயா, எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.” என்று பதற்றமாக கூறினார் அவர்.

அவன் இப்போது சந்தேகமாக ஹரிஹரனை பார்க்க, அவனோ கோணல் சிரிப்புடன், “உங்க பார்வையை பார்த்தா, நான் என்னமோ வேணும்னே உங்க வீட்டை ரெயிட் பண்ண, உங்களை போதை மருந்து கேஸ்ல ஃபிரேம் பண்ற மாதிரில இருக்கு! மத்த போலீஸ் பத்தி தெரியல மிஸ்டர். யஷ்வந்த். ஆனா, நீங்க என்னை நம்பலாம். ஏன்னா, நான் நேர்மையான போலீஸ்.” என்றவன் அபிஜித் மற்றும் ஹர்ஷவர்தனை நோக்கி அர்த்தம் பொதிந்த பார்வையை வீசியவன், “அப்பறம் உங்க ரியாக்ஷன் பார்த்தாவே தெரியுது. இதுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லன்னு. சோ, உங்க ஹெல்பர்ஸை நல்லா விசாரிங்க. இதை உங்க வெல்-விஷரா சொல்றேன்.” என்று யஷ்வந்த் தோளில் தட்டி கூறியவன், அந்த பொட்டலத்தை அவன் கைகளிலேயே கொடுத்தான்.

பின், அபிஜித் மற்றும் ஹர்ஷவர்தனிடம் திரும்பிய ஹரிஹரன், “எனக்கு ஹெல்ப் பண்ணதுக்கு தேங்க்ஸ் கைஸ். சார், இதை பெருசா எடுத்துக்க மாட்டாரு.” என்ற ஹரிஹரன் யஷ்வந்த்தை பார்த்து, “அப்படி தான சார்?” என்று கேட்க, அவன் குரல் சாதாரணமாக இருந்தாலும், அதில் மிரட்டல் கலந்தே இருந்தது.

யஷ்வந்த் ஒன்றும் பேசாமல் கோபத்தில் பல்லைக் கடித்து கொண்டு நிற்க, மற்ற மூவரும் அங்கிருந்து வெளியேறினர்.

“இதுக்கு தான் சொல்றது, கொஞ்சமாச்சும் யோசிச்சு செய் ஹர்ஷா. உன்னால பாரு…” என்று அபிஜித் ஹர்ஷவர்தனை கண்டிக்க, “விடுங்க அபிஜித். அவரு மனைவியை தொலைச்சுட்டு நிக்கிறாரு. அவரோட நிலைமைல இருந்தா தான் அவரு செய்யுறது புரியும்!” என்று ஹர்ஷவர்தனிற்கு ஆதரவாக பேசினான் ஹரிஹரன்.

ஹர்ஷவர்தனின் நிலை ஹரிஹரனிற்கு புரிந்திருந்தது!

“ஆனா, ஒரு யூஸும் இல்லையே சார்! வது எங்க இருக்கான்னு இன்னும் தெரியலயே! கண்டிப்பா இவன் தான் அவளை கடத்தியிருக்கணும்.” என்று ஹர்ஷவர்தன் கூற, “ரிலாக்ஸ் ஹர்ஷா. உங்க ஒய்ஃபை கண்டிப்பா கண்டு பிடிச்சுடலாம். உங்க ஸ்பைக்கு கால் பண்ணி ஏதாவது தகவல் தெரிஞ்சுதான்னு கேளுங்க.” என்றான் ஹரிஹரன்.

ஹர்ஷவர்தன் கவினின் அலைபேசி எண்ணிற்கு முயற்சிக்கும் சமயம், “இப்போ யஷ்வந்த் உங்க மேல செம கோபத்துல இருக்கான். கண்டிப்பா உங்க ஃபேமிலியை டார்கெட் பண்ணுவான். உங்க ஒய்ஃப் வேற ப்ரெக்னன்ட்டா இருக்காங்கன்னு சொன்னீங்களே.” என்று அபிஜித் சொல்ல, “ஹ்ம்ம் ஆமா, என் ஒயிட் க்ளவுட் ப்ரெக்னன்ட்டா தான் இருக்கா. ஆனா, அவ கையை கூட அந்த நாயால தொட முடியாது. மீறி தொட்டா, அவனை அவகிட்ட இருந்து தான் காப்பாத்தனும்.” என்று ரசனையுடன் கூறிய ஹரிஹரன் மனைவிக்கு, ‘பத்திரம்… நீயில்ல, என் குட்டி க்ளவுட்!’ என்ற செய்தியையும் தட்டி விட்டான்.

*****

இங்கு கோபத்தில் கனன்று கொண்டிருந்த யஷ்வந்த்தோ யாருக்கோ அழைத்து, “*****, இன்னுமா டா அந்த ****யை பத்தின தகவலை தேடுறீங்க?” என்று கத்த, “சார், அவன் பொண்டாட்டியை மட்டும் தான் இங்க கூட்டிட்டு வந்துருக்கான். அவ கர்ப்பமா இருக்காளாம் சார்.” என்ற தகவலை மறுமுனையில் இருந்தவன் கொடுக்க, ‘என்னையவே ஆட்டிப் படைச்சேல, இப்போ உன் பொண்டாட்டி, பொறக்காத பிள்ளைன்னு ரெண்டு பேரை கடத்தி வச்சு உன்னை எப்படி அலைய விடுறேன் பாரு! நீ எனக்கு செஞ்சதுக்கு, அவங்க எலும்பு கூட உனக்கு கிடைக்காம செய்றேன்.’ என்று மனதிற்குள் கறுவினான் யஷ்வந்த்.

பின், அழைப்பில் இருந்தவனிடமே, ஹரிஹரனின் மனைவியை கடத்த சொன்னவன், இனிமேல் பிரியம்வதா இங்கிருப்பது பாதுகாப்பானது அல்ல என்பதையும் கூற, அதை கவினும் கேட்டுக் கொண்டிருந்தான்.

யஷ்வந்த் சறுக்கிய இடம் அது தான்! எத்தனையோ பெரிய மாபாதகங்களை செய்தவன், அவனின் தனிப்பட்ட அலைபேசியை  ஒட்டுக் கேட்கக்கூடும் என்பதை கணிக்காமல் விட்டு விட்டான்.

அவனின் கவனமின்மை, அது அவனின் தனிப்பட்ட எண் என்பதாலா, இல்லை கவின் தானே என்பதாலா என்பது அவனிற்கே வெளிச்சம்!

தொடரும்…

12 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *