Skip to content
Home » வஞ்சிப்பதோரும் பேரவா! – 23

வஞ்சிப்பதோரும் பேரவா! – 23

அத்தியாயம் 23

நண்பகல் நேரம்…

ஆளரவம் அத்தனையாக இல்லாமல், ஒன்றிரண்டு பேர் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த அந்த சந்தில் நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள்.

அப்போது அந்த குறுகிய சந்திற்கு சற்றும் சம்பந்தமில்லாமல் உள்ளே வந்த நாற்சக்கர வாகனம் அவளிற்கு முன்பு நிற்க, அவளிற்கு யோசிப்பதற்கு கூட அவகாசம் கொடுக்காமல், சடுதியில் அந்த வாகனத்திலிருந்து இறங்கிய ஒருவன், அவளை அதற்குள் தள்ள முயற்சித்தான்.

நொடியினில், நடப்பதை கிரகித்தவளோ, தன் பலம் கொண்டு அவனை எதிர்த்து, வேகமாக தன் கைப்பைக்குள் துழாவி ‘பெப்பர் ஸ்ப்ரே’யை எடுத்து தடுமாறி நின்றவனின் முகத்தை நோக்கி அடித்தாள்.

அவள் முகத்தில் துளியளவு கூட பயமில்லை!

முதலாமவன் திணறுவதை பார்த்த வாகன ஓட்டியோ, கீழே இறங்க ஒரு காலை கீழே வைக்க, சட்டென்று அவன் புறம் வந்தவள், நிலத்தில் இருந்த அவன் பாதத்தில் தன் ஹீல்ஸ் காலால் மிதித்து, கரங்கள் கொண்டு கதவை அவனை நோக்கி தள்ளினாள்.

இந்த சம்பவங்கள் நிகழும் வேளையிலேயே, “யாரு மேல கை வைக்கிற? ப்ரெக்னன்ட்டா இருக்காளே, ஈஸியா கடத்திடலாம்னு நினைச்சியா? அதுவும் பட்டப்பகல்ல!” என்றவள் சுற்றிலும் பார்க்க, அங்கிருந்த ஒன்றிரண்டு பேரும், அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனரே தவிர உதவிக்கு வரவில்லை. இதில், ஒருவன் அதை காணொளியாக படம்பிடித்துக் கொண்டிருந்தான்!

‘இவங்களும் இவங்க ‘மாப் மெண்டாலிட்டியும்’!’ என்று மனதிற்குள் சுற்றத்தாரை சாடியவள், “ஹலோ, இப்படி ப்ரெக்னன்ட் லேடியை கடத்த டிரை பண்றானுங்க, நீங்க சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருக்கீங்க. வந்து பிடிங்க இவனுங்களை. நாளைக்கு உங்க பொண்ணுக்கு இதுவே நடந்தா, இப்படி தான் இருப்பீங்களா?” என்று ஒருபுறம் அந்த கயவர்களை சமாளித்தபடி, ஆங்கிலத்தில் வினவ, அவர்களோ ஒருவரையொருவர் பார்த்தபடி, அவளிற்கு உதவி செய்ய முன்வந்தனர்.

இதுவே, பகல் நேரம் தானே, சுற்றி இருப்பவர்கள் உதவி செய்வார்கள் என்று அவள் அமைதியாக இருந்திருந்தால், ஒன்று வேறு யாராவது உதவட்டும் என்று எட்ட நின்று பார்த்திருப்பர், இல்லை தங்களிற்கென்ன என்று கடந்து சென்றிருப்பர். இதை தான் ‘மாப் மெண்டாலிட்டி’ என்பர்.

அதை அறிந்ததால் தான், முதலில் இருந்தே, அந்த சண்டையில் தன் கை ஓங்கி இருப்பதை போல காட்டிக் கொண்டாள். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதையும் அடிகோடிட்டு காட்டினாள். இரண்டுமே,  சுற்றத்தாரிடம் வேலை செய்தது.

இதுவே, அவள் கர்ப்பமாக இல்லாமல் இருந்திருந்தால், அவளே சமாளித்திருப்பாள். இருவர் தானே!

இப்போதும் நன்றாகவே சமாளித்தாள் தான். ஆனால், கர்ப்பிணியாக இருக்கும் நேரம் ஆபத்து வேண்டாம் என்பதால் தான் மற்றவர்களின் உதவி தேவைப்பட்டது.

அங்கிருந்த வேறு சிலர், காவலர்களிற்கு அழைத்திருக்க, அந்த இருவரையும் கூட்டி செல்ல காவல் வாகனம் வந்தது.

அவளோ அலைபேசியில் யாருக்கோ அழைத்து, வந்த காவலர் ஒருவரிடம் கொடுக்க, மறுமுனையில் என்ன சொன்னார்களோ, அந்த காவலர் அவளை மரியாதையாக அழைத்து சென்று அந்த காவல் நிலையத்தில் விட்டார்.

அவள் உள்ளே நுழைய, ஏற்கனவே கூட்டி வரப்பட்ட இருவரை அடித்து விசாரித்துக் கொண்டிருந்த ஹரிஹரன், அவளிடம் வந்து, “ஓய் ஒயிட் க்ளவுட், உன்னை பத்திரமா இருன்னு சொன்னா, பாப்பாவை வயித்துக்குள்ள வச்சுட்டு வீரசாகசம் பண்ணிட்டு இருந்துருக்க.” என்று அவளிற்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

“அவ்ளோ அக்கறை இருந்தா, பாதுகாப்புக்கு ஆள் அனுப்பி இருக்கணும். இல்ல, கூட வந்துருக்கணும்.” என்று முறைத்தபடி கூறியவள், அவனை விட்டு விலகி நின்று, “நான் கம்ப்லைன்ட் குடுக்க தான் வந்தேன்.” என்றாள்.

என்னதான் அபிஜித்திடம் திடமாக கூறி விட்டாலும், மனைவிக்கு ஆபத்து என்றதும் பதறித்தான் போனான் ஹரிஹரன். இப்போது அவளை எவ்வித ஆபத்தும் இன்றி, கையருகே வைத்து பார்த்ததும் தான் சிறிதாக நிம்மதி எட்டிப் பார்த்தது. முழு நிம்மதி, சம்பந்தப்பட்டவனை முடித்து விட்டால் தான் வரும் போலும்!

*****

ஹர்ஷவர்தனோ யஷ்வந்த் மாளிகைக்கு அருகே உள்ள தேநீரகத்தில், அவன் வீட்டை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.

ஏனெனில், கவினிடமிருந்து கிடைத்த தகவல் அத்தகையது!

“சார், உங்க ஒய்ஃப் கண்டிப்பா அவன் வீட்டுல தான் இருக்காங்க. இப்போ தான், அவங்களை அங்கயிருந்து ஷிஃப்ட் பண்ணனும்னு பேசிட்டு இருந்தான்.” என்று கவின் கூற, “நீங்க சொன்ன செகண்ட் ஃப்ளோர் முழுசா தேடி பார்த்தாச்சு கவின். ஆனா, அங்க வது இல்ல…” என்று ஹர்ஷவர்தன் கூறும்போதே, அதற்கான விடை தெரிய வர தலையில் அடித்துக் கொண்டான்.

“சீக்ரெட் ரூம்! இதை ஏன் நான் தேடலை?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவன், “கவின், வதுவை எங்க ஷிஃப்ட் பண்ண போறான்னு தெரியுமா?” என்று பதற்றமாக கேட்க, “இல்ல சார், இன்னும் அதை டிசைட் பண்ணலன்னு தான் நினைக்குறேன். ஏதாவது தகவல் கிடைச்சா உடனே சொல்றேன்.” என்றான் கவின்.

இதோ, அப்போதிருந்தே அந்த தேநீரகத்தில் காத்திருக்க ஆரம்பித்து விட்டான் ஹர்ஷவர்தன். ஒருநொடி கூட அவன் பார்வை அங்கிருந்து விலகவில்லை. இதை விட்டால், வேறு சந்தர்ப்பம் கிடைக்காமல்  போய் விடும் என்பதை நன்கறிந்தவனாக அவன் மனைவியை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் அமர்ந்திருந்தான் அவன்.

“ரிலாக்ஸ் ஹர்ஷா, அவன் வீட்டை சுத்தி மஃப்டில போலீஸ் இருக்காங்க. பிரியாவை வெளிய கூட்டிட்டு வரப்போ, கையோட பிடிச்சுடலாம்.” என்று அவனிற்கு நம்பிக்கை அளித்தான் அபிஜித்.

*****

இங்கு யஷ்வந்த்தோ கோபத்தில் வானிற்கும் பூமிக்குமாக குதித்துக் கொண்டிருந்தான்.

“இடியட்ஸ், எப்படி டா மிஸ் பண்ணீங்க? த்தூ, ஒரு பொண்ணு, அதுவும் கர்ப்பமா இருக்க பொண்ணை தூக்க முடியல. இதுல நீங்க எல்லாம் ஏ-லிஸ்ட் ரவுடி! சரி, அந்த பொண்ணை தூக்க தான் முடியல, அங்கயிருந்து தப்பிக்க கூடவா முடியல உன் ஆளுங்களுக்கு! போலீஸ் விசாரணைல என் பேரு வெளிய வந்துச்சு… மொத்தமா எல்லா ஆதாரத்தையும் வெளிய விட்டுடுவேன் பார்த்துக்கோ.” என்று யாரோ ஒருவனிடம் அலைபேசியில் கத்திக் கொண்டிருந்தான் யஷ்வந்த்.

மறுமுனையிலிருந்து என்ன பதில் வந்ததோ, “ஹ்ம்ம், இங்க இன்னொரு பொண்ணை என் வீட்டுல இருந்து டிரான்ஸ்ஃபர் பண்ணனும்.” என்று யஷ்வந்த் கூறினான்.

சில நொடிகளில் மீண்டும், “எனக்கு அந்த சொங்கிங்க எல்லாம் வேண்டாம். அந்த பிஹாரி கேங் இங்க தான இருக்கானுங்க. அவனுங்களை வர சொல்லு.” என்று அழைப்பை துண்டித்தவன், அரை மயக்க நிலையிலிருந்த பிரியம்வதாவிடம் வந்தான்.

“உன்கிட்ட நெருங்குறதுக்குள்ள எவ்ளோ தடை? இதோ, இப்போ கூட அவசரமா உன்னை எதுவும் செய்ய முடியலையேங்கிற கோபம் மனசை அழுத்திட்டே இருக்கு! ஆனா, இங்க எதுவும் செஞ்சுட முடியாது. வெளிய, உன் புருஷனும் அவனோட இருக்க போலீஸும், நாய் மாதிரி காவல் காத்துட்டு இருக்கானுங்க.” என்று பல்லைக் கடித்துக் கொண்டு யஷ்வந்த் கூற, தனக்காக கணவன் இருக்கிறான் என்ற செய்தி சற்று மகிழ்ச்சியையும், சிறிதளவு உத்வேகத்தையும் கொடுத்தது பிரியம்வதாவிற்கு.

அது அவளின் முகத்திலும் தெரிய, “புருஷன் பெயரை கேட்டதும் ரொம்ப சந்தோஷமோ?” என்று அவளின் தாடையை வலிக்க பற்றியவன், “நீதான் அவனை பார்க்க போறது இல்லயே பேபி…” என்று கொடூரமாக சிரித்தான்.

“உன்னை இங்க வச்சு தான் எதுவும் பண்ண முடியாது. அதான், உன்னை நைட்டோட நைட்டா ஷிஃப்ட் பண்ணிடுவேன். எவ்ளோ நேரம் அசையாம ஒரே இடத்துல உட்கார்ந்துருப்பான்? லைட்டா கண்ணசையுற கேப்ல, உன்னை அள்ளி போட்டுட்டு போயிட்டே இருப்பேன். நான் எடுத்த ஒரு காரியம் முடியாம போறதா? நெவர்! என்னைக்கா இருந்தாலும், நீ துடிதுடிச்சு சாகுறதை பார்க்காம, நான் ஓயப் போறதில்ல.” என்று அரக்கன் போல கூறியவனை மிரண்டு பார்த்தவளின் மனம் மீண்டும் சுருங்கிப் போனது.

ஆனால், நடுஇரவு வந்து விட்டாலும் கூட, ஹர்ஷவர்தனோ, அபிஜித்தோ, அந்த இடத்திலிருந்து சிறிதும் நகரவில்லை. இப்போது அந்த தேநீரகத்தின் வாசலில் அமர்ந்திருந்தனர்.

அதைக் கேள்விப்பட்ட யஷ்வந்த்தோ பெருத்த ஏமாற்றத்துடன், அடுத்து என்னவென்று யோசிக்கும் வேளையிலேயே, அவன் கேட்டிருந்த ஆட்கள், முகத்தை மறைத்த கவசத்துடன் அங்கு வர, சற்று யோசித்த யஷ்வந்த்தும் துணிந்து அந்த காரியத்தில் இறங்கினான்.

அவன் மற்ற காவலர்களை கவனிக்கவில்லை. அவன் கவனம் முழுவதும் ஹர்ஷவர்தன் மற்றும் அபிஜித்திடம் தான். இருவர் தானே என்ற அலட்சியத்தில் தான் அவன் திட்டத்தை செயல்படுத்த துவங்கினான்.

அதன்படி, வந்தவர்களிடம் எதையோ சொல்லி, பிரியம்வதாவை கை காட்டினான். அவர்களில் ஒருவன், தாங்கள் வந்த வாகனத்தை அந்த மாளிகையின் பின்பகுதிக்கு ஓட்டி வர, மற்ற இருவரும் பிரியம்வதாவை, அவளின் எதிர்ப்பையும் மீறி தூக்கி வந்து அந்த வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது தான் வெளியில் ஆட்களின் நடமாட்டத்தை பார்த்த யஷ்வந்த்திற்கு ஏதோ தவறாக தோன்ற, பதற்றத்தில் என்ன செய்வதென்று என்று தெரியாமல் தடுமாறினான்.

அதற்குள் அந்த வாகனத்தை ஓட்டுபவன், அவனையும் ஏறிக்கொள்ள அழைக்க, ஏதோ சிந்தித்த யஷ்வந்த்தோ, திட்டத்தில் சிறு மாறுதலை கூறி, அவர்களை மட்டும் அனுப்பி வைத்தான்.

*****

அத்தனை நேரம் அயர்ந்திருந்த ஹர்ஷவர்தனின் விழிகள், ஏதோ ஒரு வாகனம் யஷ்வந்த்தின் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டதும் உன்னிப்பாக கவனிக்க, அவர்களின் முககவசத்தை வைத்தே நடக்கப்போவதை யூகித்து விட, அபிஜித்தும் அதை பார்த்ததும் மஃப்டியில் இருந்த காவலர்களிற்கு எச்சரிக்கை செய்தான்.

அதன்படி, யஷ்வந்த் வீட்டிற்கு பின் நின்றிருந்த காவலர், “சார், பின்பக்கம் தான் நடமாட்டம் இருக்கு. மேபி, இங்கயிருந்து தப்பிக்க பிளான் பண்ணியிருக்கலாம்.” என்று கூறும் வேளையிலேயே பின்பக்க கதவு திறக்கப்பட, வேகமாக ஒரு வாகனம் வெளியே வந்தது.

அதை அந்த காவலர் தடுப்பதற்குள் அங்கிருந்து விரைந்து சென்று விட, அந்த வாகனத்தை பின்தொடர்ந்தபடி, அபிஜித்தும் ஹர்ஷவர்தனும் சென்றனர்.

இரு வாகனங்களும் அவ்வப்போது முட்டிக் கொள்வதும், ஒன்றன் பின் ஒன்றாக வேகமெடுத்து செல்வதுமாக இருந்தது.

இந்த சமயத்தில் ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த ஹர்ஷவர்தன், அந்த வாகனத்தினுள் இருந்த பிரியம்வதாவை பார்த்து விட்டான்.

“அபி, வது… வது அதுல தான் இருக்கா. ஸ்பீட் பண்ணு.” என்று கத்தினான் ஹர்ஷவர்தன்.

ஆனால், விதி வேறு விளையாட்டை ஆட காத்திருந்தது போலும்.

அதுவரை ஆளில்லாத சாலைகளில் வீர சாகசத்தை காட்டிக் கொண்டிருந்த இரு வாகனங்களும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் மாட்டிக் கொண்டன.

திரையரங்கில் இரவுக்காட்சியை முடித்துவிட்டு வந்த கூட்டம் அது!

அவர்கள் மத்தியில் புகுந்து வெளியே வருவதற்குள், மற்ற வாகனத்தை தவற விட்டிருந்தனர் அபிஜித் மற்றும் ஹர்ஷவர்தன்.

வாகனத்தில் இருந்து கோபத்துடன் இறங்கிய ஹர்ஷவர்தன், “ஷிட்! இப்படி மிஸ் பண்ணிட்டேனே.” என்று கோபத்துடன் கத்த, “ரிலாக்ஸ் ஹர்ஷா, கோபத்துல எதையும் சரியா யோசிக்க கூட முடியாது. சிட்டியோட மெயின் ஏரியா இது. சோ, கண்டிப்பா சுத்தியிருக்க சிசிடிவில மாட்டிப்பானுங்க. நான் அதுக்கான வேலைகளை பார்க்க சொல்றேன்.” என்று தான் அலைபேசியில் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தான்.

மறுபுறம், பதற்றத்துடன் அவனின் அறையில் அமர்ந்திருந்த யஷ்வந்த்தின் ரகசிய அலைபேசிக்கு, ‘ரீச்ட் சேஃப்லி. ஸ்டார்டிங் பிளான் பி.’ என்ற செய்தி வர, வன்ம சிரிப்புடன் அந்த அலைபேசியை உடைத்து கழிப்பறையில் அப்புறப்படுத்தினான்.

அதே சமயம், கீழே சத்தம் கேட்க, மனைவியை காணாத கோபத்தில் ஹர்ஷவர்தன் தான் வந்திருப்பான் என்று எண்ணிய யஷ்வந்த், அவனை வெறுப்பேற்ற என்றே கீழே இறங்கினான்.

ஆனால், வந்திருந்ததோ ஹரிஹரன்!

அவனைக் கண்டு சிறு அதிர்ச்சி உண்டாகி இருந்தாலும், “என்ன சார் இந்த நேரம்?” என்று சாதாரணமாக கேட்பது போல வினவினான் யஷ்வந்த்.

“நான் தான் சொன்னேனே, உங்களை அடிக்கடி விசாரிக்க வேண்டியது இருக்கும்னு!” என்று ஹரிஹரன் கூற, “வாட்? விசாரணையா? எந்த கேஸ்ல?” என்று கேலியாக கேட்டாலும், யஷ்வந்த்தின் மனம் அதிரவே செய்தது.

“ஓஹ் சாரி, நீங்க தான் ஏகப்பட்ட கேஸ்ல சம்பந்தப்பட்டு இருக்கீங்களே! இன்னைக்கு மதியம் ஒரு பொண்ணை கடத்த சொல்லியிருந்தீங்கல, அந்த கேஸ் தான். அன்னைக்கே சொன்னேன், அவ நீங்க நினைச்ச மாதிரி சாதாரண பொண்ணு இல்லன்னு, கேட்டீங்களா?” என்றான் ஹரிஹரன்.

அவன் கிண்டலில் பல்லைக் கடித்த யஷ்வந்த், “ஆதாரம் இருக்கா?” என்று கேட்க, “ஆதாரம் இல்லாத மிதப்புல தான் அடுத்தடுத்து தப்பு பண்ணிட்டு இருக்க! இப்போதைக்கு ஆதாரம் இல்ல. அவனுங்களுக்கு குடுக்குற ட்ரீட்மெண்ட்ல நாளைக்கே உன் பேரை கக்கிடுவானுங்க. ஆனா, அதுக்குள்ள நீ தப்பிச்சுடுவியே.” என்றான் ஹரிஷரன்.

இப்போது சற்று தைரியம் வந்திருக்க, “ஆதாரம் கிடைச்சதுக்கு அப்பறம் வாங்க. விசாரணைக்கு ஒத்துழைப்பு தரேன்.” என்று மிதப்பாக யஷ்வந்த் கூற, “நீ என்ன ஒத்துழைப்பு தருவன்னு எனக்கு தெரியும் வாடா ஸ்டேஷனுக்கு.” என்று அவனின் சட்டையை பற்றி இழுத்து சென்றான் ஹரிஹரன்.

“நீங்க ரொம்ப தப்பு பண்றீங்க…” என்று யஷ்வந்த் தொடர்ந்து கத்திக் கொண்டே வர, “நீ என் பொண்டாட்டி மேலேயே கைவைப்ப, நான் பார்த்துட்டு சும்மா இருப்பேன்னு நினைச்சியா? ஆதாரம் என்ன ஆதாரம்… இன்னைக்கு உனக்கு ஆகுற சேதாரத்துல, இன்னொரு முறை தப்பு பண்ண யோசிக்கணும்.” என்று மிரட்டலாக கூறியபடி வாகனத்தில் ஏற்றினான் ஹரிஹரன்.

அப்போது தான் அபிஜித் ஹரிஹரனிற்கு அழைத்து நடந்தவற்றை கூற, “நீங்க ஸ்டேஷனுக்கு வாங்க. அவனை அங்க தான் கூட்டிட்டு போறேன்.” என்ற ஹரிஹரன், யஷ்வந்த் புறம் திரும்பி, “ஆதாரம் தான கேட்ட, வசமா ஒன்னு சிக்கியிருக்கு. வா இன்னைக்கு முழுசா உனக்கு விசாரணை தான்!” என்றான் ஹரிஹரன்.

*****

காவல் நிலையம்…

அபிஜித் பரபரப்பாக உள்ளே நுழைய, அவனருகே தொங்க போட்ட தலையுடன் நடந்து வந்தான் ஹர்ஷவர்தன்.

அங்கு கையில் விலங்குடன் நாற்காலியில் அமர்ந்திருந்த யஷ்வந்த்தை பார்த்ததும், கோபம் பெருக்கெடுக்க, மேஜையில் இருந்த லத்தியை எடுத்து பார்க்கும் இடங்களில் எல்லாம் அவனை அடித்தான் ஹர்ஷவர்தன்.

நொடியில் நடந்ததை அதிர்ச்சியுடன் பார்த்த அபிஜித், அவனை தடுக்க பார்க்க, “விடுங்க அபிஜித். பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான்னு சொல்லிப்போம்.” என்றான் ஹரிஹரன்.

“இவன் அடிக்குறதை பார்த்தா, பாத்ரூம்ல வழுக்கி விழுந்து செத்துட்டான்னு சொல்ற நிலை வந்துடும் போல.” என்ற அபிஜித்தோ ஹர்ஷவர்தனை வெகு சிரமத்துடன் தடுத்து, “நிறுத்து ஹர்ஷா! நீ என்ன மிருகமாடா?” என்று திட்டினான்.

யஷ்வந்த்தை கைகாட்டி, “இவனை போல மிருகத்தை விட கேவலமானவனை தடுக்க நான் மிருகமாவே இருந்துட்டு போறேன் டா.” என்ற ஹர்ஷவர்தன், மீண்டும் யஷ்வந்த்தை அடித்தபடி, “எங்க டா என் வது?” என்று கத்தினான்.

அதுவரை வலியில் துடித்துக் கொண்டிருந்த யஷ்வந்த்தோ இப்போது சிரித்தபடி, “என்னை எவ்ளோ தான் அடிச்சு கேட்டாலும், அவ இருக்க இடம் உனக்கு கடைசி வரை தெரியவே போறதில்ல. இதோ, நீ என்கிட்ட பேசிட்டு இருக்க இதே நேரம், உன் பொண்டாட்டி ஏதோ ஒரு இடத்துல செத்துட்டு இருப்பா. என்னையவே எதிர்க்க நினைச்சீங்கள, அதுக்காக தண்டனை இது!” என்று ஆர்ப்பாட்டமாக சிரித்தான்.

“தண்டனை தர இடத்துல நீயும் இல்ல, வாங்குற இடத்துல நாங்களும் இல்ல. அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு… உன் சாவு என் கைல தான்… அதுவும் ரொம்ப கொடூரமா!” என்று கூறிய ஹர்ஷவர்தன், விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினான்.

அவனை பின்தொடர்ந்த அபிஜித், “ஹர்ஷா, நில்லு எங்க போற?” என்று வினவ, “எங்கடா போக? எனக்கும் தெரியலையே! அவ எங்க இருக்கான்னு தெரியல. உயிரோட இருக்காளான்னு தெரியல. கைக்கு பக்கத்துல இருந்தா டா… பிடிச்சுடலாம்னு நினைச்சப்போ… திரும்ப தொலைச்சுட்டேனே!” என்று கண்ணீரில் கரைந்தான் ஹர்ஷவர்தன்.

“அதுக்குள்ள மனசை தளர விடாத ஹர்ஷா. பிரியா கண்டிப்பா நமக்கு கிடைச்சுடுவா!” என்ற அபிஜித்திற்கு அழைப்பு வர, சற்று தள்ளி வந்து அதை அவன் ஏற்க, ஹர்ஷவர்தனின் மூளையில் திடீரென்று எதுவோ மின்னலடிக்க, வேகவேகமாக வாகனத்தை கிளப்பி, அபிஜித் கத்துவதை கூட பொருட்படுத்தாமல், அதே வேகத்தில் வாகனத்தை செலுத்தினான்.

பிரியம்வதாவை உயிருடன் கண்டு பிடிப்பானா ஹர்ஷவர்தன்?

தொடரும்…

12 thoughts on “வஞ்சிப்பதோரும் பேரவா! – 23”

  1. Avatar

    ஹர்ஷா வது கண்டுபிடிக்கனும் … யஷ்வந்த் மாதிரி ஆளுங்களுக்கு தண்டனை மிக கொடூரமா இருக்கனும். ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *