அத்தியாயம் 24
என்னதான் யஷ்வந்த்திடம் வீரமாக பேசிவிட்டு வந்து விட்டாலும், ஹர்ஷவர்தனின் இதயம் மனைவிக்காக துடிப்பதை நிறுத்தவில்லை. ஒருவேளை, அவன் சொன்னது போலவே நடந்து விட்டால்… அதை நினைக்க கூட இயலவில்லை ஹர்ஷவர்தனால்.
தன் எண்ணவோட்டத்தை அபிஜித்திடம் பகிர்ந்தவன், மீண்டும் தன்னவளை தவறவிட்ட தருணத்திற்கு மனதால் பயணித்தான். அவளை அந்த வாகனத்திற்குள் கண்ட பொழுதை மீண்டும் நினைவிற்கு கொண்டு வந்தவனின் எண்ணத்தை இன்னொரு ஒலியும் ஆக்கிரமித்தது.
அது அந்த கயவனின் அலைபேசி ஒலியாக இருக்கலாம் என்று எண்ணியவனின் மனம் மீண்டும் அந்த ஒலியை நினைத்து பார்த்து, அதை அதற்கு முன்னரே எங்கோ கேட்டிருப்பதாக எடுத்துக் கூறி, அவனை மேலும் சிந்திக்க வைத்தது.
அதன்பிறகு, அதிக நேரத்தை எல்லாம் எடுத்துக் கொள்ளவில்லை ஹர்ஷவர்தன்.
அன்று, அவன் குடியிருப்பில் பழுது பார்க்க வந்த பணியாளன் ஒருவனிடமும் அதே ஒலியை கேட்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
‘இந்த வேலையை செய்ய பிஹாரி கேங்கை வர சொன்னதா தான கவின் சொன்னாரு. எஸ், அவனுங்களே தான்!’ என்று எண்ணியவன், நொடியும் தாமதிக்காமல், வாகனத்தை கிளப்பினான்.
அதே சமயம், அபிஜித்திற்கு வந்த அழைப்பில், சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட காவலர்கள், அந்த வாகனம் ஆளரவமற்ற இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறியவர்கள், அந்த இடத்தையும் கூறினர்.
‘இது ஹர்ஷா வீடு இருக்க இடம் தான?’ என்று அபிஜித் சந்தேகப்படும் வேளையில் தான் ஹர்ஷவர்தன் வாகனத்தில் பறந்தான்.
“ப்ச், இவன் வேற… இப்போ எங்க போறான்னு தெரியல.” என்று புலம்பிய அபிஜித் ஹர்ஷவர்தனிற்கு அழைக்க, வாகனத்தை செலுத்திக் கொண்டே அழைப்பை ஏற்ற ஹர்ஷவர்தனோ, “அபி, நான் கண்டு பிடிச்சுட்டேன். என் அப்பார்ட்மெண்ட்ல ரிப்பேர் ஒர்க் பார்க்க வந்த ஆளுங்க தான் வதுவை கூட்டிட்டு போயிருக்காங்க. அந்த ரிங்டோன்… ஒரே மாதிரி இருந்துச்சு.” என்று கூற, அபிஜித்திற்கு ஆச்சரியம் தான்.
“ஹர்ஷா, சிசிடிவி செக் பண்ணத்துல, அவங்க போன கார், உன் வீட்டுக்கு பக்கத்துல இருக்க இடத்துல தான் இருக்கு.” என்று தனக்கு கிடைத்த தகவலை அபிஜித் பகிர, “அப்போ வது அங்க இருக்க சான்ஸ் இருக்கு. நான் முன்னாடி போறேன் அபி.” என்ற ஹர்ஷவர்தன் வேகத்தை அதிகரித்தான்.
அசுர வேகத்தில் வாகனத்தை ஓட்டி அவன் வீட்டை அடைந்த ஹர்ஷவர்தன், அன்று தன்னிடம் அந்த பணியாளர்களை பற்றி கூறிய காவலாளியிடம் விரைந்து சென்று அவர்களைப் பற்றி விசாரித்தான்.
ஹர்ஷவர்தனின் பதற்றத்தை கண்ட காவலாளியோ குழப்பத்துடனே, அவங்க இப்போ தான் வேலையை முடிச்சுட்டு வெளிய போனாங்க சார். ஏன் சார் ஏதாவது பிராப்ளமா?” என்று பயத்துடன் கேட்க, “அவங்க… அவங்களோட வேற யாரும் வந்தாங்களா?” என்று அப்படி இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் வினவினான் ஹர்ஷவர்தன்.
“சார், அவங்க உள்ள வரும்போது நான் பார்க்கலயே.” என்று அந்த காவலாளி கூற, ஏமாற்றத்துடன் அபிஜித்திற்கு அழைத்து விஷயத்தை பகிர்ந்தான் ஹர்ஷவர்தன்.
“ஹர்ஷா, அந்த சிசிடிவியை தொடர்ந்து கண்காணிச்சுட்டு தான் இருக்காங்க. அவங்க அந்த கார்ல இருந்து இறங்குறப்போ, பெரிய மூட்டையை தூக்கிட்டு தான் போயிருக்காங்க. மேபி, அதுக்குள்ள பிரியா இருந்துருக்கலாம்.” என்று அபிஜித் கூறும்போதே, தன்னவள் என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தாளோ என்று கொண்டவனின் உள்ளம் திண்டாடியது.
ஹர்ஷவர்தன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “ஹர்ஷா, டோன்ட் லூஸ் ஹோப். பிரியா அங்க தான் இருக்கணும். நான் இதோ, வந்துட்டே இருக்கேன்.” என்றான் அபிஜித்.
அபிஜித் இறுதியாக கூறியது சற்று மனபலத்தை உயர்த்தியிருக்க, ஹர்ஷவர்தனின் மூளையும் சற்று நிதானித்து வேலை செய்ய ஆரம்பித்தது.
“அவனுங்க உள்ள வரப்போ நீங்க பார்க்கல சரி… ஆனா, வெளிய போறப்போ பார்த்தீங்க தான? அவனுங்க கூட யாராவது போனாங்களா? இல்ல, பெருசா மூட்டை ஏதாவது எடுத்துட்டு போனாங்களா?” என்று ஹர்ஷவர்தன் வினவ, அதுவே அந்த காவலாளிக்கு மேலும் பயத்தை கொடுக்க, “இல்ல சார், அவனுங்க கூட யாரும் போகல. பெருசா எந்த பொருளையும் அவனுங்க எடுத்துட்டும் போகல. ஆளுக்கு ஓர் சின்ன பை… அதுவும் அவங்க யூஸ் பண்ண டூல்ஸ் இருக்க பையை தான் தூக்கிட்டு போனாங்க.” என்றார் அவர்.
அதில், ஒருவித பதற்றம் சூழ, “அவங்க எங்க கடைசியா போனாங்க? எங்க இருந்து கிளம்புனாங்க?” என்று ஹர்ஷவர்தன் வினவ, “அந்த ரூமை ரெனோவேட் பண்ணிட்டு…” என்று அவர் கூறும்போதே, அந்த அறையை நோக்கி விரைந்தான் அவன்.
மஞ்சள் நிற விளக்கு அந்த அறைக்கு ஏனோ அமானுஷ்ய உணர்வை தர, படபடவென்று அடித்துக் கொண்ட மனதை கட்டுப்படுத்திக் கொண்ட ஹர்ஷவர்தனோ, அந்த அறையை சுற்றி வேகமாக பார்வையிட்டான்.
பொருட்கள் ஏதும் இன்றி காணப்பட்ட அறையை எத்தனை முறை தான் சுற்றிப் பார்க்க முடியும்? ஆயினும், ஒருவித பரபரப்புடனும், வேண்டுதலுடனும் பார்வையை சுழற்றியவன் கண்களில் பட்டது தரையில் புதிதாக காணப்பட்ட சிமெண்ட் தடம்.
மற்ற இடங்களில் பூசப்பட்ட சிமெண்ட் கலவை நன்றாக காய்ந்திருக்க, அந்த இடம் மட்டும் தனியாக தெரிந்தது. வேகமாக அந்த இடத்தை நெருங்கிய ஹர்ஷவர்தனின் இதயம் துடிக்க ஆரம்பிக்க, அவன் கரங்களோ நடுங்கியவாறே அந்த இடத்தை தொட்டன.
பின், சற்றும் தாமதிக்காமல் காவலாளியிடம் மண்வெட்டியை கொண்டு வர அவசரப்படுத்தி, அவனே அந்த இடத்தை தோண்டவும் ஆரம்பித்தான்.
அவன் செயல்களை கண்ட காவலாளியோ என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு நின்றார். பின்னே, அவரின் கவனக்குறைவால் தான் இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது என்று புகார் கூறினால், மாட்டுவது அவர் தானே. அவர் கவலை அவருக்கு!
அதற்குள் அபிஜித்தும் அங்கு வந்துவிட, ஹர்ஷவர்தனின் செயலை கொண்டே நடந்திருப்பதை யூகித்தவன், விரைந்து செயல்பட்டு ஆட்களை வர சொன்னான். அதனுடன், மருத்துவமனைக்கும் அழைத்து விஷயத்தை கூறி, தயார் நிலையில் இருக்க கூறினான்.
கண்களில் வழியும் நீர் காட்சியை மழுங்கடித்தாலும், அதையும் மீறி, பாதி குழியை அசுர வேகத்தில் ஹர்ஷவர்தன் தோண்டும் போதே, அதற்குரிய ஆட்கள் வந்துவிட, அவனை தன்னுடன் இழுத்துக் கொண்டான் அபிஜித்.
“அபி… என்னால தானா? வது… அவளுக்கு எதுவும் ஆகியிருக்காது தான? ப்ச், நீங்க சொல்லும்போது புரியல… ஆனா, இப்போ புரியுது… அவளை எவ்ளோ பெரிய ஆபத்துல மாட்டி விட்டுருக்கேன்னு. ஒருவேளை, எனக்கு அவமேல அக்கறையே இல்லையோன்னு தோணுது. இவ்ளோ நாளா, அவளை நல்லா பார்த்துட்டு இருந்துருக்கேன்னு நானே நினைச்சுட்டு இருந்தேனோ! மத்தவங்களை பார்த்துட்டு, என் வாழ்க்கையை மிஸ் பண்ணிட்டேனே… எவ்ளோ பெரிய முட்டாள் நான்!” என்று புலம்பியபடி இருந்தான் ஹர்ஷவர்தன்.
அவனின் புலம்பல், அந்த குழியிலிருந்து மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரியம்வதாவை காணும் வரை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.
பிரியம்வதாவை அந்த நிலையில் பார்த்தவன், மேலும் உடைந்து போனான். ஆனால், மறந்தும் அவளை நெருங்கவில்லை. தள்ளி நின்றே அவளை மருத்துவமனை கொண்டு செல்வதை பார்த்துக் கொண்டிருந்தவனை நெருங்கிய அபிஜித், “இப்போ எதை யோசிச்சு இப்படி தள்ளி நிக்கிற?” என்று அவனை புரிந்து கொண்டவனை போல வினவினான்.
“திரும்ப அவளை நெருங்கி, அதனால வர ஆபத்தை அவ ஃபேஸ் பண்ண விட மாட்டேன் அபி.” என்று தீர்க்கமாக உரைத்த ஹர்ஷவர்தனை யோசனையுடன் பார்த்த அபிஜித், “சோ, சார் என்ன பண்ண போறீங்க?” என்று வினவ, “அந்த ஆபத்தை இல்லாம ஆக்கிட்டு அவளை நெருங்குறேன். இந்த முறை, எல்லாத்தையும் சரியா செய்யப் போறேன்.” என்றான் ஹர்ஷவர்தன்.
“அது சரி, இப்போ அவளை ஹாஸ்பிடல்ல தனியா விடப்போறீயா?” என்று அபிஜித் வினவ, “பிரஜனுக்கு சுருக்கமா தகவல் சொல்லியிருக்கேன். அவன் வந்துட்டு இருக்கான். அதுவரை மட்டும் அவ பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு.” என்று கேட்டுக் கொண்டான் ஹர்ஷவர்தன்.
“பிரியாவோட அப்பா, உன் அப்பா அம்மா கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாமா ஹர்ஷா?” என்று அபிஜித் கேட்க, “கண்டிப்பா சொல்லணும். ஆனா, இப்போ இல்ல. வது கொஞ்சம் தேறி வரட்டும். அப்பறம் சொல்லிக்கலாம். இப்போ, அந்த ப**டையை பார்க்க போலாம்.” என்றான் ஹர்ஷவர்தன்.
செல்லும் வழியில், “பிரஜன் உன்னை ஒன்னும் சொல்லலையா?” என்று அவன் மனநிலையை மாற்றுவதற்காக அபிஜித் கேட்டான்.
மனைவி கிடைத்து விட்டாள் என்ற தகவல் ஒன்றே ஹர்ஷவர்தனை சிறிது சாந்தப்படுத்தி இருக்க, அபிஜித்தின் முயற்சியும் அதற்கு சிறிது உதவி செய்தது.
“ஒன்னும் சொல்லலையாவா? அவன் திட்டுன திட்டுல, என் காதுல ரத்தம் வராதது தான் பாக்கி! அதுக்குள்ள விஷயத்தை சொல்லிட்டு காலை கட் பண்ணிட்டேன். இல்லன்னா, கன்ஃபார்மா பிளட் தான்! சார், நேர்ல பார்க்கும்போது அடிக்காம விட்டாலே ஆச்சரியம் தான்.” என்று சற்று இலகுவான குரலில் கூறினான் ஹர்ஷவர்தன்.
“அவன் மட்டுமா? பிரியாவோட அப்பா, மாமா, அத்தைன்னு ஒரு படையே வெயிட்டிங்.” என்று அபிஜித் கிண்டலாக கூற, “அவங்களை கூட சமாளிச்சுடுவேன். ஆனா, வது… அவளை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல.” என்றவனின் குரல் மீண்டும் உள்ளே சென்றுவிட, அவன் மனமோ மனைவியின் கன்னம், தாடை, உதடு, கைகள், கால்கள் என்று கண்ணுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் இருந்த காயங்களை எண்ணிப் பார்த்து வேதனையில் வாடியது.
அவற்றிற்கெல்லாம் காரணம் அவன் தானே என்ற குற்றவுணர்வும் அவனைக் குத்திக் கிழித்தது!
அதனை உணர்ந்த அபிஜித்தும் அதற்கு மேல் எதுவும் கூறாமல் ஹரிஹரனின் காவல் நிலையத்தை நோக்கி வாகனத்தை செலுத்தினான்.
இந்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கும் போதே, ஹரிஹரன் யஷ்வந்த்திடம் விசாரிக்க, “என் லாயர் வரட்டும். எதுவா இருந்தாலும் அவருக்கிட்ட பேசிக்கோங்க.” என்று அப்போதும் திமிராக கூற, அவனை ஒன்றும் செய்ய முடியாத கோபத்துடன் இருந்தான் ஹரிஹரன்.
சரியாக அதே சமயம் உள்ளே நுழைந்த ஹர்ஷவர்தனோ, யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல், யஷ்வந்த்தை அடித்து துவைத்து விட்டான்.
தன்னவளிடம் கண்ட காயங்களை, அவற்றை ஏற்படுத்தியவனிடமும் காண வேண்டும் என்று எண்ணினானோ என்னவோ!
அதைக் கண்டு ஒருவகையில் சாந்தமான ஹரிஹரனோ, அபிஜித்திடம் நடந்ததை விசாரித்து அறிந்து கொண்டான்.
பின் அவனே, “இப்போ பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டான்னு சொன்னா நம்ப மாட்டாங்களே.” என்று சத்தமாக யோசிக்க, அதைக் கேட்ட அபிஜித்திற்கு கூட, அந்த நேரத்திலும் சிரிப்பு வந்து விட்டது.
அடி வாங்கிய வேதனையை முகத்தில் சற்றும் காட்டாமல் இருந்த யஷ்வந்த்தோ ஹர்ஷவர்தனை சீண்டும் பொருட்டு, “என்ன உன் பொண்டாட்டியோட டெட் பாடியை பார்த்துட்டியா? நான் நினைச்சதை விட வேகமா செயல்பட்டுருக்க போல!” என்று நடந்தது தெரியாமல் மிதப்பாக கேட்டு வைத்தான்.
“அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தா, அடிச்சதோட விட்டுருப்பேன்னு நினைச்சியா? கொன்னுருப்பேன். இப்பவும் உன்னை கொல்ற அளவுக்கு கோபம் இருக்கு தான். ஆனா, இங்க உன்னை கொலை செஞ்சா, உன்னை பத்தி ஒன்னுமே வெளிய வராது. உன்னை சேர்ந்தவங்க, இதை லாக்கப் டெத்ன்னு ஃப்ரேம் பண்ணி, உன்னை பெரிய தியாகியாக்கி, அதுல அனுதாபம் தேடிக்க கூட சான்ஸ் இருக்கு. அதனால, அந்த தப்பை நான் செய்ய போறது இல்ல. உன்னை பத்தின எல்லாமே இந்த உலகத்துக்கு வெட்ட வெளிச்சமா தெரியணும்! டார்க் வெப்ல இவ்ளோ நாள், முகமூடிக்கு பின்னாடி மறைமுகமா ஆட்டுவிச்சுட்டு இருந்த நீ, வெளிச்சத்துக்கு வரணும். உன்னால பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் நியாயம் கிடைக்கணும்னா, இப்போ நீ சாகக் கூடாது. அந்த ஒரு காரணம்… ஒரே காரணத்துக்காக தான் இப்போ உன்னை உயிரோட விடுறேன்.” என்று மிரட்டினான் ஹர்ஷவர்தன்.
அவன் மிரட்டலில், அத்தனை நாட்கள் மற்றவர்களை ஆட்டுவித்த யஷ்வந்த்தே ஆடி தான் போனான் என்றால், மற்ற இருவருக்கும் ஹர்ஷவர்தனின் இந்த மாற்றம் இனிய அதிர்ச்சியாகவே இருந்தது.
யஷ்வந்த்தின் அதிர்ச்சிக்கு காரணம், இரண்டாம் முறையாக அவன் திட்டம் பாழாய் போனதாலா, இல்லை இந்த சமயம் பார்த்து இவர்களிடம் சிக்கிக் கொண்டதாலா என்பது அவனிற்கே வெளிச்சம்! ஆனால், ஒரே நாளில் இரு திட்டங்கள் தோற்று போனதில், பல வருடங்கள் கழித்து சிறு பயம் அவன் உள்ளத்தில் உதயமாகி இருந்தது என்னவோ உண்மை தான்!
எனினும், கவனமாக அதை வெளிக்காட்டி விடாமல், “அடடே, வாழ்த்துக்கள் மிஸ்டர். ஹர்ஷவர்தன், உங்க ஒய்ஃபை கண்டுபிடிச்சுட்டீங்க போல? ஒய்ஃபை தேடுனதுல, உங்க எக்ஸை விட்டுட்டீங்க பார்த்தீங்களா?” என்று குட்டையை குழப்பும் வேலையை ஆரம்பித்தான் யஷ்வந்த்.
ஆனால், இந்த இரு நாட்களில் பட்டு தெளிந்த ஹர்ஷவர்தனோ, “உண்மை தான் யஷ்வந்த். என் பிரையாரிட்டி என்னன்னு புரிஞ்சுக்கிட்டேன். ஆனா, அதுக்காக என்னை நம்பி உதவி கேட்ட பொண்ணை அப்படியே விட மாட்டேன். நான் இதுக்கு முன்னாடி செஞ்ச ஒரே தப்பு, என்னை சேர்ந்தவங்களோட பாதுகாப்பை உறுதி செய்யாம, அவங்க கிட்ட கலந்து பேசாம முடிவெடுத்தது தான். இந்த முறை அந்த தப்பை செய்ய மாட்டேன். அதே சமயம் இந்த விஷயத்தையும், அவ்ளோ சீக்கிரமா விடவும் மாட்டேன். பணபலம், அதிகார பலம் இருந்துட்டா, உன்னை எதுவும் செய்ய முடியாதா? அந்த ஆணவத்துல தான, நீயும் உன்னை மாதிரி ஆட்களும் ஆடுறீங்க? அந்த ஆணவத்தை அழிச்சு, உனக்கும் தண்டனை வாங்கி குடுத்து, உன்னை மாதிரியான ஆளுங்களுக்கு எக்ஸாம்பிலா உன்னையே மாத்திக் காட்டுறோம்.” என்றான் ஹர்ஷவர்தன்.
அதைக் கேட்டு கோபத்தில் கொந்தளித்த யஷ்வந்த்தோ, “ஓஹ், சாதாரண ஆளு நீ, என்கிட்ட சவால் விடுறியா?” என்று அப்போதும் ஆணவமாக வினவ, அவனை மேலும் கோபப்படுத்த எண்ணிய ஹர்ஷவர்தனோ அவனருகே சென்று, “ரெட் லைட் ஏரியால பொறந்த ‘சாதாரண’ ஆளு தான் நீயும்னு மறந்துட்டியா யஷ்வந்த்? இல்ல, இந்த பணம், அதிகாரம் எல்லாம் மறக்க வச்சுடுச்சா?” என்று எள்ளலாக வினவினான்.
அது யஷ்வந்த்தை மூர்க்கமாக மாற்ற, அப்போதும் நிறுத்தாத ஹர்ஷவர்தனோ, “ஆமா, உன்னை பெத்த அம்மாவையே கொன்னவன் தான நீ! அட, இந்த நியூஸ் வெளிய லீக்கான என்ன செய்வ?” என்று கேட்க, அவன் முகத்தில் குத்தினான் யஷ்வந்த்.
உதட்டோரம் வழிந்த ரத்தத்தை துடைத்த ஹர்ஷவர்தன், “கம்ப்லைன்ட் குடுக்க வந்த விக்டிமோட ஹஸ்பண்ட்டை சஸ்பெக்ட் தாக்குனதால, தற்காப்புக்காக தள்ளி விட்டதுல, சஸ்பெக்ட் டேபிள் மேல விழுந்து உருண்டு, கீழ விழுந்து, அவரு மேல டேபிள் விழுந்து, அதனால ஏற்பட்ட காயம் தான் இதெல்லாம்.” என்று யஷ்வந்த்தின் காயங்களை காட்டியவன், “இதை சொன்னா நம்புவங்கள?” என்று ஹரிஹரனை பார்த்து கேட்டுவிட்டு, “ஹான், அப்பறம்… உங்க ஸ்டேஷன்ல இருந்த சிசிடிவி, சம்பவம் நடந்தப்போ ரிப்பேரா இருந்துச்சு.” என்றும் கூற, ஹரிஹரன் அவனை ஆச்சரியமாக பார்த்தான் என்றால், அபிஜித் ஒருபடி மேலே சென்று, “உண்மைலேயே எனக்கு தெரிஞ்ச ஹர்ஷா தானா நீ?” என்று கேட்டே விட்டான்.
அதில் மற்ற இருவரும் சிரிக்க, அது யஷ்வந்த்திற்கு எரிச்சலாக இருந்திருக்க வேண்டும்.
“ரொம்ப ஆடாதீங்க! நான் இங்க இருக்க விஷயம் வெளிய தெரிஞ்சுது… அவ்ளோ தான்! இந்த ஸ்டேஷனே இல்லாம பண்ணிடுவாங்க.” என்று யஷ்வந்த் கூற, “பார்றா, அப்படியா? என் ஸ்டேஷனை அடிச்சு உடைக்கிற அளவுக்கு யாருக்கு தைரியம் இருக்கு?” என்று யஷ்வந்த் முன்னால் வந்து நின்றான் ஹரிஹரன்.
“ஏன் இல்ல? ஸ்டேட்ல இருந்து சென்டிரல் வரைக்கும் எனக்கு சப்போர்ட் பண்ண ஆளுங்க இருக்காங்க.” என்று ஒரு வேகத்தில் கூறிய யஷ்வந்த், தான் உளறுவதை அப்போது தான் புரிந்து கொண்டு அமைதியானான்.
‘மனசு எதை ரொம்ப விரும்புதோ, அதுக்கு ஆபத்து வரப்போ, எல்லாரும் பதறுவாங்க, பயப்படுவாங்க. அவங்க மனசு, மூளை சொல்றதை கேட்காது. தப்பு தப்பா முடிவெடுக்க வைக்கும். அதுல, நான் மட்டும் என்ன விதிவிலக்கு?’ – யஷ்வந்த் கூறியதாக கவின் சொன்ன வார்த்தைகள் மற்ற மூவரின் மனதிலும் இப்போது வந்து போனது.
இதோ, யஷ்வந்த்திற்கு ஆபத்து என்று தெரிந்ததும், அவன் மனமே பதறி, பயப்பட ஆரம்பித்து விட்டது. தவறாக சிந்திக்க வைக்கவும் ஆரம்பித்து விட்டது என்பதை அவன் உணர்ந்தானோ என்னவோ, மற்ற மூவரும் உணர்ந்தனர்.
அதன் காரணமாகவே, அவனை பேச வைத்து இன்னும் தகவல்களை சேகரிக்கும் முயற்சியில், “ஹ்ம்ம், சொல்லுங்க மிஸ்டர். யஷ்வந்த், ஸ்டேட்லயிருந்து சென்டிரல் வரைக்கும் சப்போர்ட் இருக்காமே… அந்த சப்போர்ட் யாருன்னு சொல்லுங்க, உடனே கூப்பிட்டு சப்போர்ட் பண்ண சொல்லுவோம்.” என்றான் ஹரிஹரன்.
“என்னை ரொம்ப ஈஸியா நினைச்சுட்டு இருக்கீங்க. என் லாயர் மட்டும் வரட்டும்.” என்று யஷ்வந்த் பல்லைக் கடிக்க, “அட வர சொல்லி இவ்ளோ நேரமாச்சு, இன்னுமா உங்க லாயர் வந்து சேரல?” என்று ஹரிஹரன் வினவ, “வர வழில வேற ஏதாவது வேலை வந்துருக்கும் லாயருக்கு.” என்றான் அபிஜித் கிண்டலாக.
“ஒருவேளை, லாயருக்கு தகவல் போய் சேர்ந்துருக்கலன்னா?” என்று ஹர்ஷவர்தன் கூற, மூவரின் உரையாடல்களும் யஷ்வந்த்தின் மூளைக்குள் அபாய மணியை ஒலிக்க செய்தது.
‘இன்னும் அந்த கவின் இடியட் என்ன பண்றான்?’ என்று யஷ்வந்த் மனதிற்குள்ளேயே திட்ட, அவன் எண்ணத்தை படித்ததை போல, “உங்க பி.ஏவை ஏன் சார் திட்டுறீங்க? ஓஹ், உங்களுக்கு விஷயமே தெரியாதுல… நீங்க எப்படி எங்களுக்குள்ள ஸ்பை வேலை பார்க்க ஆளை அனுப்புனீங்களோ, அதே மாதிரி நாங்களும் உங்களை ஸ்பை வேலை பார்க்க ஆளை அனுப்பி வச்சுருக்கோமே.” என்றான் ஹர்ஷவர்தன்.
“அட என்ன ஹர்ஷா, இவ்ளோ பண்ணியிருக்க ஆளுக்கு, அந்த ஸ்பை யாருன்னு இந்நேரம் தெரிஞ்சுருக்காதா என்ன?” என்றான் அபிஜித்.
அதனை புரிந்து கொண்ட யஷ்வந்த்தோ, “க…வி…ன்…” என்று பல்லைக் கடிக்க, “அட சரியா சொல்லிட்டீங்களே, இதுக்காக உங்களுக்கு ஏதாவது செஞ்சாகணுமே. ஹ்ம்ம், உங்களோட ரெண்டு திட்டம் ஃபெயிலியரானதுக்கு காரணம் என்னன்னு உங்க மூளையை குடைஞ்சுட்டு இருந்தீங்களே… அதுக்கான காரணத்தை நானா சொல்லவா?” என்று வினவினான் ஹர்ஷவர்தன்.
யஷ்வந்த் புருவம் சுருக்கி ஹர்ஷவர்தனை பார்க்க, “நீ எங்களை வேவு பார்க்க அனுப்பின ஆள் தான் காரணம்!” என்று ஹர்ஷவர்தன் கூற, அதிர்ச்சியில் கண்களை விரித்தான் யஷ்வந்த்.
“ஹர்ஷா, இதென்ன மொட்டையா சொல்லிட்டு இருக்க? சார் ஷாக்லேயே செத்துட போறாரு.” என்று கேலி செய்த அபிஜித்தோ, “கைலாஷை ஞாபகம் இருக்கா யஷ்வந்த்?” என்று வினவ, பதற்றம் இன்னும் கூடி தான் போனது யஷ்வந்த்திற்கு.
“அதெப்படி ஞாபகம் இல்லாம போகும்? ஒரு பெரிய கேஸ்ல இருந்து சாரை காப்பாத்தினவனாச்சே.” என்று பல்லைக் கடித்த ஹர்ஷவர்தன், “என்ன மறந்துடுச்சா? விக்டிமோட ஒன்னு விட்ட அண்ணனை, காசு குடுத்து சரிகட்டி, மீடியாக்கு முன்னாடி அவனை வச்சு நாடகமாடி, அவனை வச்சே விக்டிமோட பேரண்ட்ஸை கேஸை வாபஸ் வாங்க வச்சதை அவ்ளோ சீக்கிரத்துல மறந்துடுவியா?” என்று கூறியபடி கன்னத்தில் அறைந்தான்.
“இது அந்த பொண்ணுக்காக. எங்களை என்னன்னு நினைச்ச? ஒருத்தன் அவனா வந்து, விக்டிமோட அண்ணன்… உங்களுக்கு ஹெல்ப் செய்ய வந்துருக்கேன்னு சொன்னதும் நம்பிடுவோம்னா? நான் வேணும்னா முன்னாடி நம்பி இருக்கலாம். ஆனா, போலீஸ் அவ்ளோ சீக்கிரம் யாரையும் நம்ப மாட்டாங்க.” என்று கூறிய ஹர்ஷவர்தன் அபிஜித்தை நோக்கி அர்த்தம் பொதிந்த பார்வையை வீசினான்.
“ஆனா, யஷ்வந்த் நீ செஞ்சதுல ஹைலைட்டான விஷயம், கைலாஷை எங்ககிட்ட அனுப்புனது மட்டுமில்லாம, உன் குட்டை வெளிய வந்துடக் கூடாதுன்னு, ஒரு அப்பாவியையும் அவனுக்கே தெரியாம மாட்டி விட்டிருக்க பார்த்தியா, அது தான்… அதே தான் உன்னோட பிளான் எல்லாம் ஃபிளாப்பானதுக்கு காரணம்! இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சுக்குறதுன்னு சொல்றது.” என்றான் அபிஜித்.
யஷ்வந்த் புரியாமல் பார்க்க, “அட முட்டாளே, நீ யாரை இடியட்னு இவ்ளோ நாளா திட்டிட்டு இருந்தியோ, அவன் சிம்பிளா உன் மொபைலை ஹேக் பண்ணி, உன்னை இங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கான்னு சொல்றோம். இப்போயாவது புரியுதா? நாலு கம்ப்யூட்டர், ஒரு வக்கிரம் பிடிச்ச வெப்சைட் வச்சுருந்தா, நீ என்ன பெரிய ஜீனியஸா?” என்றான் ஹரிஹரன்.
அதைக் கேட்டதும், தன்னை ஏமாற்றியவர்களை ஒன்றும் செய்ய முடியாத இயலாமை அவனை மிருகமாக்க, அந்த காவல் நிலையமே அதிரும்படி கத்தினான் யஷ்வந்த்.
“இதையும் கேட்டுட்டு மொத்தமா கத்து! கமிஷனர் பொண்ணு கேஸ்ல சம்பந்தப்பட்ட அந்த நாலு *****களையும் பிடிச்சுட்டோம்.” என்று அபிஜித் கூற, இது அவனிற்கு அடுத்த அடி.
“ஷாக்கை குறைங்க சார். இன்னும் இருக்கே! என்னமோ ஸ்டேட்ல சப்போர்ட் இருக்கு, சென்டிரல்ல சப்போர்ட் இருக்குன்னு குதிச்சியே… அந்த சப்போர்ட் எல்லாம் ஒன்னுமில்லாம ஆக்க தான் இந்த அடி. புரியல? அந்த நாலு தறுதலைங்களை பெத்த புண்ணியவான்களுக்கு, நீ ஸ்டேஷன் வந்த விஷயம் போயாச்சு. ஆனா, என்னன்னு போயிருக்கு தெரியுமா? அந்த தறுதலைங்களை பத்தி விசாரிக்கன்னு தகவல் போயிருக்கு. இந்நேரம் அவங்க அரெஸ்ட்டான விஷயம் தெரிய வந்தா… இதுக்கு மேல நான் சொல்லி தான் தெரியணும்னு இல்ல. ஹ்ம்ம், இப்போதைக்கு இந்த போலீஸ் ஸ்டேஷன் தான் உனக்கு சேஃப். சோ, பொத்திட்டு இங்கேயே கிட.” என்று ஹர்ஷவர்தன் தன்னவளை பார்க்க மருத்துவமனைக்கு சென்று விட்டான், அங்கு அவனிற்கான அடுத்த அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமல்!
தொடரும்…
Semma update.viruviruppaa poghuthu kathai dear 👍👍👍👍
Tq so much sis 😍😍😍
Super 😍😍thrilling epi👏👏
Tq so much sis 😍😍😍
செமையா விறுவிறுப்பாகவும் கதையின் நகர்வு செம
Tq so much sis 😍😍😍
super super super super super super super epi . edutha plan ellam waste ah pochi ninchapo thana vanthu oruthan solratha nambi poriya nu abi ketathu crt athe eppadi pani irukan but athula ushara agi harsha panna velai great
Tq so much sis 😍😍😍 Aama police epavum sandhegapattutu dhana irupanga… Abiyoda intuition correct aagiduchu… Happada nenga oruthar dhan Harsha va paaratirukinga 😍😍😍