அத்தியாயம் 26
பிரஜன் ஹர்ஷவர்தனிற்கு அழைத்து, விஷயம் எதையும் சொல்லாமல், உடனே மருத்துவமனைக்கு வர சொல்ல, பதறியடித்து வந்து சேர்ந்திருந்தான் அவன்.
மருத்துவமனை வாசலிலேயே பிரஜன் நின்றிருக்க, அவனருகே வேகநடையில் சென்ற ஹர்ஷவர்தன், “என்னடா ஆச்சு? கால்ல ஏன் எதுவும் சொல்லல? வது எப்படி இருக்கா? கண்ணு முழிச்சுட்டாளா? நல்லா தான இருக்கா?” என்று கேள்வி கேட்டால் பதில் வரும் என்பதை தற்காலிமாக மறந்து போனவனாக, கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்தான்.
ஹர்ஷவர்தனின் கேள்விகள் முடிவதற்குள் பிரியம்வதா அனுமதிக்கப்பட்டிருந்த அறையையே அடைந்து விட்டனர்.
அத்தனை நேரமிருந்த வாய் ஓயாத பேச்சும், அவனின் வேகநடையும் தடைபட்டு போனது.
அத்தனை நேரம் அவன் தொடர் நச்சரிப்பில் சலித்து போன அபிஜித்தோ, “எதுக்கு டா மரம் மாதிரி நடுவழில நிக்கிற? ஒன்னு உள்ள போ, இல்ல வழியை விடு.” என்று கூற, மெல்ல அந்த அறைக்குள் அடியெடுத்து வைத்தான்.
அவனின் பார்வையும், கட்டிலில் களைத்து படுத்திருந்தவளின் பார்வையும் ஒன்றோடொன்று முட்டிக் கொண்டு நின்றது.
அடுத்த அடியை கூட எடுத்து வைக்காமல், மனைவியை பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.
அவனின் எதிர்வினையில் தலையிலடித்துக் கொண்ட பிரஜனோ, “இந்த கருமத்தை எல்லாம் கல்யாணமான புதுசுல பண்ணனும்! எங்க நின்னு பண்ணிட்டு இருக்கான் பாரு!” என்று அபிஜித்திடம் கிசுகிசுத்தப்படி, முயன்று ஹர்ஷவர்தனை நகர்த்தினான்.
அப்போதும் ஹர்ஷவர்தன் வாயே திறக்காமல் இருக்க, “இப்போ எப்படி இருக்கு பிரியா?” என்று சம்பிரதாயமாக கேட்டான் அபிஜித்.
அதில், பிரியம்வதாவின் கவனம் மற்ற இருவரிடம் திரும்பியது.
அவர்கள் சில நிமிடங்கள் பேசியபடி இருக்க, பிரஜன் அபிஜித்திடம் சைகை காட்டி, “நாங்க போய் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரோம்.” என்று வெளியே அழைத்துச் செல்ல, இப்போது அவர்கள் இருவர் மட்டுமே அந்த அறைக்குள் இருந்தனர்.
அதற்கு மேல் பேசாவிட்டால் நன்றாக இருக்காது என்று எண்ணிய ஹர்ஷவர்தன், “சாரி…” என்று கூறும் சமயம், மற்றொரு ‘சாரி’ பிரியம்வதாவிடமிருந்து வந்தது.
அந்த ‘சாரி’க்களில் இருவருமே மற்றவரை பார்வையால் ‘ஏன்’ என்று கேட்டுக் கொள்ள, முதலில் வாயை திறந்தது பிரியம்வதா தான்.
“எவ்ளோ கோபமா இருந்தாலும், நான் சொல்லாம போயிருக்க கூடாது. அதுவும் தனியா…” என்று கூறும்போதே, அவளிற்கு நடந்தவைகளும் நினைவிற்கு வர, வேதனையில் முகம் சுருக்கினாள் பிரியம்வதா.
அவளின் கரத்தை ஆறுதலாக பற்றிய ஹர்ஷவர்தனோ, “வேண்டாம் வது. நீ ‘சாரி’ சொல்ல வேண்டிய அவசியமும் இல்ல. நான் தான் தப்பு…” என்று ஆரம்பித்தவனின் கரத்தை அழுத்தி, “திரும்ப அதேவா? அதான் தூக்கத்துல ஒரு முறை கேட்டுட்டேனே. திரும்ப அதையேவா கேட்கணும்.” என்று சிறு சிரிப்புடன் கூற, ஹர்ஷவர்தனும் மென்மையாக சிரித்தான்.
ஆனாலும், அவளிடம் தன்னை விளக்க வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்ந்தவன், “நான் சொல்றதை கேட்க உனக்கு கஷ்டமா இருக்கலாம் வது. ஆனா, இந்த ஒருமுறை கேட்டுடேன்.” என்று ஆரம்பித்தவன், அடுத்து எப்படி சொல்வதென்று தெரியாமல், “நான்… மௌனிகா… அவ ஹெல்ப் கேட்டு…” என்று தடுமாற, அவனை நிறுத்தியவள், “எந்த விளக்கமும் எனக்கு குடுக்க வேண்டாம் ஹர்ஷா. எனக்கு உங்களை புரிஞ்சுக்க முடியுது. நீங்க ரொம்ப நல்லவர் ஹர்ஷா.” என்று மென்மையாக சிரித்தவள், “சில நேரம் தோணும், இவ்ளோ நல்லவரா இருக்க வேண்டாமேன்னு. இந்த உலகம், இவ்ளோ நல்லவங்களா ஏமாளியா தான் பார்க்குது.” என்று அப்போதும் அவனிற்காக வருந்தியவளை கண்டு வியந்து தான் போனான் ஹர்ஷவர்தன்.
அவளருகே அமர்ந்தவன், கட்டிடாத அவளின் கரத்தை எடுத்து நெற்றியில் வைத்து கண்களை மூடியவன், “தேங்க்ஸ் வது! ஒன்னை இழக்குறது, அதை விட பெட்டரா ஒன்னு கிடைக்க தான்னு அம்மா சொல்லுவாங்க. அது எவ்ளோ சரின்னு இப்போ தான் எனக்கு புரியது. உன்னை விட என்னை இந்தளவுக்கு யாரும் புரிஞ்சுக்கிட்டது இல்ல வது. நீ எனக்கு பெட்டர் மட்டுமில்ல, பெஸ்ட்! ஆனா, உனக்கு நான்…” என்றவன் கண்களை திறந்து, அவளை நேருக்கு நேர் பார்த்து, “நான் உனக்கு டிசர்விங்கான்னு தெரியல.” என்றான்.
இப்போது அவன் கரத்தை தன் கைகளிற்குள் பிடித்துக் கொண்டவள், “ஏன்னு தெரியல… ஆனா, உங்க மேல எனக்கு கோபமே வராது ஹர்ஷா… அந்த ஒரு இன்சிடெண்ட் தவிர… அது கூட, அந்த பொண்ணு உங்களை யூஸ் பண்றாளோ, அது தெரியாம நீங்க திரும்ப ஏமாந்துட போறீங்களோன்னு தான்.” என்று பிரியம்வதா கூற, “என் விஷயத்துல, நீயும் இவ்ளோ நல்லவளா இருக்கக் கூடாது வது.” என்று சிரித்தான் ஹர்ஷவர்தன்.
பின் அவனே, “ஆனாலும், நீ அந்த சைக்கோ கிட்ட சிக்கிக்கிட்டதுக்கு நான் தான காரணம் வது?” என்று வினவ, அத்தனை நேரமிருந்த இயல்பு நிலை மாறி, “அதுக்கு நீங்க காரணம் இல்ல ஹர்ஷா.” என்றாள் பிரியம்வதா.
இந்த பேச்சை இப்போது எடுத்திருக்கக் கூடாதோ என்று காலம் தாழ்ந்து யோசித்த ஹர்ஷவர்தனிற்கு பிரியம்வதாவின் பதில் குழப்பத்தை கொடுக்க, “என்ன சொல்ற வது?” என்று வினவினான்.
பிரியம்வதா ஒரு பெருமூச்சுடன், “உங்களுக்கு என் அக்காக்கு நடந்தது பத்தி எவ்ளோ தெரியும்னு எனக்கு தெரியல.” என்று கூற ஆரம்பிக்கும் போதே, ஏதோ பெரிதாக வெளி வரப் போகிறது என்று ஹர்ஷவர்தனிற்கு தெரிந்து போனது.
“மாமா சொன்னாரு வது…” என்று யோசனையுடன் ஹர்ஷவர்தன் கூற, “ஹ்ம்ம், அப்பாக்கே முழுசா தெரியாது ஹர்ஷா. அன்னைக்கு அந்த கொலைகாரனோட டார்கெட் அக்கா இல்ல, நான் தான்!” என்று பிரியம்வதா சொல்ல, உடல் நடுங்கியது ஹர்ஷவர்தனிற்கு.
ஏதோ கணித்தவனாக, “அந்த யஷ்வந்த் தானா?” என்று அவன் வினவ, கண்களில் தேங்கிய கண்ணீருடன் அவனை பார்த்து ஆமென்று தலையசைத்து, அவன் தோளில் ஆறுதலிற்காக சாய்ந்து கொண்டவள், “அன்னைக்கு மௌனிகா கூட அவனை பார்த்தப்பவே, அவனை எங்கயோ பார்த்த மாதிரி இருந்துச்சு. அவனும் கூட கேட்டான். ஆனா, இவன் தான் அந்த ராஸ்கல்னு நினைக்கல.” என்று விசும்பிக் கொண்டே கூறினாள்.
மனதில் ஒரு புறம் கோபம் மூண்டாலும், தன்னவள் அன்று தப்பித்ததும், அவளிற்கு பதில் அவளின் தமக்கை சிக்கிக் கொண்டதும் பயத்தையும் பதற்றத்தையும் விளைவித்தது ஹர்ஷவர்தனிற்கு.
பிரியம்வதாவோ பாதுகாப்பு கிடைத்த திருப்தியில் அன்று நடந்ததை விவரிக்க ஆரம்பித்தாள்.
“நானும் தனா அக்காவும் வெளிய போயிட்டு திரும்பிட்டு இருந்தோம். அந்த இடம் கொஞ்சம் ஆள்நடமாட்டம் இல்லாத இடம்னாலும், நாங்க எப்பவும் போற வழிங்கிறதால பயமில்லாம தான் போனோம். அப்போ தான் என்னோட மோதிரம் ஒரு பள்ளத்துக்குள்ள விழுந்துடுச்சு. அந்த இடம் வேற இருட்டி இருந்ததால, அக்கா அடுத்த நாள் எடுத்துக்கலாம்னு எவ்ளோவோ சொன்னா. நான் தான் கேட்காம, அந்த இருட்டுக்குள்ள போய்…” என்றவள் விசும்ப ஆரம்பிக்க, அவளை தட்டிக் கொடுத்து சமாதானம் செய்ய முயற்சித்தான் ஹர்ஷவர்தன்.
சில நிமிடங்கள் அப்படியே அவனுள் அடங்கி இருந்தவள், மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.
“அங்க ஒருத்தன்… எப்படி வந்தான்னே தெரியல. ரொம்ப நேரமா எங்களை ஃபாலோ பண்ணியிருக்கணும். அவன்… என்னை… தொட்டு…” என்று அதற்கு மேல் கூற முடியாமல் விலகி செல்ல, அவள் விலகலிற்கான காரணம் இப்போது புரிந்தது ஹர்ஷவர்தனிற்கு.
யஷ்வந்த்தின் மீதிருந்த கோபம் உச்சத்தை அடைந்தாலும், மனைவியை கவனிப்பதே இப்போது முக்கியம் என்பதால், விலகியவளை தொடாமல் வார்த்தைகளால் ஆறுதல் கூற முயன்றான்.
“நடந்ததை மறக்குறது ஈஸி இல்லன்னு எனக்கு தெரியும் வது. ஆனா, நமக்கு வேற வழி இல்லையே. லெட்ஸ் ஃபர்க்கெட் அண்ட் ஸ்டார்ட் ஃபிரெஷ் மா. என்றான், அப்போதும் அவளை தொடாமல் விலகி நின்றே!
“நானும் அதை தான் டிரை பண்றேன். ஆனா, முடியல ஹர்ஷா. இயல்பா யாராவது தொட்டா கூட, அந்த தொடுகை தான் ஞாபகம் வருது. அதோட, அன்னைக்கு என்னை காப்பாத்த வந்த அக்கா அவன் கிட்ட மாட்டிக்கிட்டதும் நினைவுக்கு வந்து ரொம்ப குற்றவுணர்ச்சியா இருக்கு.” என்ற பிரியம்வதாவை நெருங்கி அமர்ந்தவன், “இப்போ நான் தொடுறது ஆக்வர்ட்டா ஃபீலாகுதான்னு சொல்லு வது.” என்றவன் அவளின் கன்னத்தை இரு கரங்களால் பற்றி, கண்ணோடு கண் நோக்கச் செய்தான்.
இருவரின் கண்களும் காதலை சுமந்திருக்க, அந்த நொடி பிரியம்வதாவினால் அவளவனை தவிர வேறு எதையும் யோசிக்க முடியவில்லை. இதில், எங்கிருந்து தொடுகை பற்றிய ஆராய்ச்சி எல்லாம் செய்ய நேரமிருக்கும்?
அவளின் உணர்வுகளை புரிந்து கொண்டவனாக, மேலும் நெருங்கியவன், அவளின் நெற்றியோடு தன் நெற்றியை வைத்து, “இப்போ சொல்லு வது, அன்-கம்ஃபர்டபிளா இருக்கா?” என்று அவன் வினவ, வாய் வார்த்தையாக இல்லாமல், அவளின் நெற்றியை இடவலமாக ஆட்டி, அவனிற்குள் புதைந்து கொண்டாள்.
“தேங்க்ஸ் ஹர்ஷா. என்னை புரிஞ்சு, எனக்கான ஸ்டெப்பை நீங்க எடுத்ததுக்கு. இதை யாரு கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு தான் நினைச்சேன். இன்-ஃபேக்ட் இதையெல்லாம் ஃபேஸ் பண்ண முடியாதுன்னு தான், கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன். அப்பா தான் ஃபோர்ஸ் பண்ணி…” என்று கூறிக் கொண்டிருந்தவளை தன்னிலிருந்து பிரித்து ஒரு மார்க்கமாக பார்த்தபடி, “ஃபோர்ஸ் பண்ணியா?” என்று கேலியாக கேட்டான் ஹர்ஷவர்தன்.
“உண்மை தான் ஹர்ஷா. இந்த கல்யாணம் நடந்தா, உங்க லைஃப் ஸ்பாயிலாகிடும்னு நினைச்சு, முதல்ல மறுத்தேன். அதுக்கப்பறம் தான் உங்க லவ்… பிரேக்கப்பானதும், நீங்க வேற கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டிங்குறீங்கன்னும் தெரிய வந்துச்சு…” என்று அடுத்து சொல்லாமல் தயங்கியவளை புருவம் சுருக்கி பார்த்தவன், “சோ… இந்த லவ் ஃபெயிலியர் பையனுக்கு வாழ்க்கை குடுத்தா, கடைசி வரைக்கும் உன்னோட ரகசியத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வச்சுக்கலாம்னு திட்டம் போட்டுருக்க. வெயிட் வெயிட்… இங்க ரகசியம்னு நான் மீன் பண்றது, அந்த குப்பையை இல்ல. உன்னோட காதலை! குப்பையை வெளிய கொட்டியாச்சு, அதோட பதுக்கி வச்சுருக்க காதலையும் சொல்லிடலாமே.” என்று அவளின் மனநிலையை மாற்ற முயன்றான் கணவனாக.
அதில் பெண்ணவளின் முகம் நாணம் கொள்ள, இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் அவளை அணைத்துக் கொண்டான் ஹர்ஷவர்தன்.
“உஃப், இப்போ தான் நிம்மதியா இருக்கு வது. இந்த பிரஜன் வேற கால் பண்ணி டென்ஷன் பண்ணிட்டான்…” என்று ஹர்ஷவர்தன் கூறும்போதே, “அச்சோ, முக்கியமானதை சொல்ல மறந்துடேன் ஹர்ஷா.” என்று அவளிலிருந்து அவனை பிரித்தவளின் முகம் கலவரமாக மாறியது.
அதைக் கண்டவனின் முகமும் அடுத்து என்ன அதிர்ச்சியோ என்ற நிலையில் இருக்க, சரியாக அதே சமயம் பிரஜனும் அபிஜித்தும் உள்ளே நுழைந்தனர்.
அபிஜித்தின் முகம் இறுகி இருந்ததிலேயே, அவனிற்கு விஷயம் தெரியும் என்பதை அறிந்து கொண்ட ஹர்ஷவர்தன், பிரியம்வதாவிடம் திரும்பி, “என்ன வது?” என்று வினவினான்.
அவளோ பிரஜனை பார்க்க, அவன் ஆறுதலாக தலையசைக்க, அதை பார்க்கும்போதே படபடவென்று அடித்துக் கொண்டது ஹர்ஷவர்தனின் மனம்.
பிரியம்வதா ஹர்ஷவர்தனின் கரத்தை பற்றிக் கொண்டு, “மௌனிகாவை அங்க பார்த்தேன்…” என்று கூற, அவளை முழுதாக பேச விடாமல், “நினைச்சேன், அவ்ன் தான் கடத்தி வச்சுட்டு டிராமா பண்றான்னு எனக்கு தெரியும். அபி, இந்த முறை லீகலா சேர்ச் பண்ணி மௌனிகாவை காப்பாத்துவோம்.” என்று கூறியவனை தடுத்த பிரியம்வதா, “ஹர்ஷா, மௌனிகா… அவங்க… இறந்து…ட்டாங்க…” என்று ஒருவழியாக சொல்லி முடித்தாள்.
அதைக் கேட்ட அதிர்ச்சியிலிருந்து முழுதாக ஒருநொடி முடிந்த போதும், ஹர்ஷவர்தனால் மீள முடியவில்லை.
“என்ன சொல்ற வது? மௌனிகா இறந்துட்டாளா? அது… நீ பார்த்தது மௌனிகா தானா? எப்படி? ஷிட், என்னை நம்பி சொன்னாளே… ஆனா, நான் என்னால ஒன்னும் பண்ண முடியலையே!” என்று முதலில் அதிர்ச்சியை கேள்விகளாக மாற்றியவன், அதற்கான பதிலாக மௌனமே கிடைக்க, அதை புரிந்து கொண்டவனாக புலம்ப ஆரம்பித்தான்.
“இல்ல ஹர்ஷா, இதுல உங்க தப்பு எதுவும் இல்ல.” என்று பிரியம்வதாவும், “நம்மளால முடிஞ்சதை நாம செஞ்சோம் ஹர்ஷா. எல்லாத்தையும் நம்மளால கண்ட்ரோல் பண்ண முடியாது டா.” என்று அபிஜித்தும் எவ்வளவோ சொல்லி பார்த்தும் ஹர்ஷவர்தன் நிறுத்தவில்லை.
“ப்ச், போதும் நிறுத்து ஹர்ஷா. இப்படி புலம்புனா, செத்தவ திரும்ப வந்துடுவாளா? அடுத்து ஆக வேண்டியதை பார்க்காம, சும்மா புலம்பிட்டு இருக்க! நீ இன்னும் புலம்ப தான் போறன்னா, ஓரமா போய் புலம்பு. எங்களுக்கு வேலை இருக்கு.” என்று பிரஜன் கூற, “ஏன் அண்ணா?” என்று பிரியம்வதாவும், “ஏன் டா?” என்று அபிஜித்தும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
“பின்ன என்ன? எப்போ பார்த்தாலும் இதே தான்!” என்ற பிரஜன், “நீ முழுசா சொல்லுமா.” என்று பிரியம்வதாவிடம் கூறினான்.
‘இன்னுமா?’ என்றவாறு ஹர்ஷவர்தன் பிரியம்வதாவை பார்க்க, தான் சொல்லப் போவதினால், அவன் இன்னும் பாதிக்கப்படலாம் என்ற எண்ணத்தில் மீண்டும் அவனின் கரத்தை தன் கைகளிற்குள் வைத்துக் கொண்டு, “அவன்… மௌனிகாவோட ஃபிளஷை சமைச்சு சாப்…” என்று அவள் சொல்வதற்குள், வாயை மூடியபடி கழிப்பறை நோக்கி ஓடிவிட்டான் ஹர்ஷவர்தன்.
தொடரும்…
Aiyo vadhu pavam… Yeswanth vampire person ah
Vampire verum blood dhan kudikum… Ivan cannibal vagai ah serndhavan pola 😂😂😂
intha yashwanth entha saiko list la serkurathu ippadi ah oru manushana konnu sapdura alavuku veri irukum
Hmm kandathum kotti kedakura internet yugam manushana thirumba kal kalathuku izhuththu pogudhu pola
😱waiting for nxt epi👌👌👌
Tq so much sis 😍😍😍
😡😠
Idhu yaruku 🤔🤔🤔
For yashwanth
Apo ok 😊😊😊