அத்தியாயம்..14
அமைதியான இயற்கை சூழல். அன்பான கவனிப்பு. காலை மெல்ல இழுத்து இழுத்து நடந்து தன் காரியங்களை பார்த்துக் கொள்கிற நிம்மதி…..இது தான் விழுந்து கிடந்த நோயாளிக்கு கிடைக்கும் ஆறுதல். ராஜகோபால் தன்னை சுற்றி நடப்பதை கவனிக்கும் பக்குவத்துக்கு வந்திருந்தார்.
“விவேக்….நான் இந்தளவு நடப்பேன்னு கனவிலே கூட நினைக்கலை டா. எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா.? உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை.”
வீட்டின் வெளியே நிழல் குடையின் கீழ் அமர்ந்து இருவரும் டீ பருகிக் கொண்டிருந்தார்கள். வண்ண வண்ண ரோஜாக்களின் மலர்ச்சி….தூர தெரியும் மலைகளின் முகடுகளில் தழுவும் மேகங்கள். பனி காற்றின் தழுவலால், மனசும் குளிரும் விந்தை…
“என்ன? உள்ளே எரிந்த நெருப்பு குளிர்ந்து போச்சா.? உனக்கு இது செகண்ட் லைவ். புதுசா பிறந்திருக்கே. இந்த வாழ்வில் பழைய துள்ளல் இருக்காது. தெளிந்த மனசுடன் நீ இருந்தா தான் இந்த வாழ்க்கையை நீ முழுமையா அனுபவிக்க முடியும். மீண்டும் நீ….” விவேக் முடிக்கவில்லை ராஜு பேச ஆரம்பித்தார்.
“ஓடாத கடிகாரம் மாதிரி என் மனசின் முட்கள் நின்னு போச்சு. இப்ப கீ குடுத்திட்டியே……வேகமா ஓடும் பெரிய முள்ளா இருந்தேன். இப்ப மெதுவா அவர் டூ அவர் ஓடும் சின்ன முள்ளா இருப்பேன். காலம் ஓடுது. அது தான் முக்கியம்.”
கொஞ்சம் நடந்தாலே கால் வலிக்கத் தான் செய்தது. ஒரு வீல் சேரில் அமர்த்தி நண்பனை காலை நேரத்தில், அதிக நடமாட்டம் இல்லாத சமயம் தெருவில் உருட்டிக் கொண்டு போனார் விவேக்.
“மேலே ஆகாயம். சுற்றி பசுமை….மரங்கள், பனிதுளி தூங்கும் மலர்கள்…..ஜில் குளிர்ச்சி. அய்யோ இது எனக்கு….எனக்கு… வெளியுலகை பார்த்தே எவ்வளவு நாளாச்சு.? மனசு ஊஞ்சலில் உட்கார்ந்துகிச்சு. தேங்க்ஸ் டா….”
உணர்ச்சி வசப்பட்டு பேச முடியாமல் கண்ணீர் மல்க தோளில் விழுந்த நண்பனின் கையை பிடித்து அழுத்தினார் ராஜகோபால்.
நிறைய பேச்சுக் கொடுத்தார் விவேக். நண்பன் மனம் ஓரளவு பக்குவப்பட்ட பின் சொன்னார்.
“ராஜு….உன் கூட பேசணும். நீ இங்க வந்து ஆறு மாசம் ஓடிடுச்சு. உன்னைப் பத்தி தினம் சந்தியா விசாரிச்சுக்கிட்டு தான் இருக்கா. அவ நல்ல பொண்ணு ராஜு. இனிமேல் நீ அவளுடன் வாழப் போகும் நாட்களில்….டார்ச்சர் ராஜகோபலின் சாயல் இருக்கக் கூடாது…..உன் புன்னகை தான் அவளுக்கு எனர்ஜி.”
“என்னை நினச்சா எனக்கே அவமானமா இருக்கு….ஒரு கஷ்டம் வந்தது இப்படி மாறிப் போயிட்டேன்….இவ்வளவு தானா நான்.?”
ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தனர். பூச் செடிகளை பாதுகாத்து. தண்ணீர் ஊற்றி….கொத்தி, டிரிம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் வேலை ஆட்கள். சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.
“இவர்கள் எளிமையான வாழ்க்கை வாழ்றாங்க. ஆடம்பர ஹோட்டல் போவது இல்லை….விலை உயர்ந்த ஆடை இல்லை….பங்களா போன்ற வீடு இல்லை. ஆனால் மகிழ்ச்சியா இருக்காங்க. உனக்கு பணமிருக்கு. வசதி இருக்கு…பிள்ளைகள் நல்ல நிலைமையில் இருங்காங்க……கவனிக்க அன்பான மனைவி இருக்காங்க….ஒரு சிறு சறுக்கலை உன்னால் பொறுத்துக்க முடியலை இல்லே.?”
ராஜகோபால் தலை குனிந்ததார்.
“ஏழ்மை என்பது இயலாமை அல்ல. செம்மைப்படுத்திக் கொண்ட வாழ்க்கை வாழ முடியும் என்ற பக்குவம். வானைத் தொடத் துடிக்கும் உயர்ந்த மரங்களின் தாவல் போல்….உயரத்தை எட்டத் துடிக்கும் ஆசைகள் உள்ளவர்கள் இந்த தோட்ட வேலை செய்பவர்கள். உனக்கு என்ன குறை சொல்லு.? உடல் ஊனம் ஒரு குறையா.?”
“என் குறையால் சந்தியா கஷ்டப்படக் கூடாதுன்னு….”
“அவ….சட்டுன்னு மாறி உனக்கு ஊன்று கோலா இருக்க பக்குவமாயிட்டா. நீ தான்……உன் அப்பாவை பார்த்துக்க உனக்கு கஷ்டம் இருந்தது என்பதுற்காக லூஸ் மாதிரி நடந்துகிட்டே. ….எதையும் எதையும் முடிச்சு போடற ராஜு.? இப்படியா அவளை ஓட ஓட விரட்டுவே.? ஹோமில் உன்னை சேர்த்திட்டு அவளால நிம்மதியா இருக்க முடியுமா.? உயிரில் கலந்த உறவு நீ….இது கூட புரியாம போச்சா உனக்கு.?”
ராஜகோபால் கண்களில் கண்ணீர் மட மடவென்று இறங்கியது.
“சந்தியா தூக்க மாத்திரைகள் எடுத்துக்கிட்டு, உயிரை விட துணிஞ்சது உனக்கு தெரியுமா.? எந்தளவு நீ டார்ச்சர் பண்ணியிருந்தா அவ இந்த முடிவுக்கு வந்திருப்பா?”
தலை கிர்ரென்று சுற்றியது ராஜூவுக்கு. ஒரு கணம் இதயம் துடிப்பை நிறுத்தியது. “நிஜமாவா.?..” வார்த்தை குட்டிக்கரணம் அடித்த படி திடுக்கிடலுடன் வந்தது.
அந்த வலி அவன் உள் மனதுக்குள் நன்றாக இறங்கட்டும் என்று அடுத்து சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார் விவேக்.
வீட்டுக்கு வந்தார்கள். அந்தக் குளிரிலும் ராஜூவுக்கு வேர்த்தது.
“ஏதாவது சாப்பிடறயா.? சூடா காப்பி….”
சமையல் செய்ய அமர்த்தி இருந்த ராஜம்மாவை கூப்பிட்டு ரெண்டு காப்பி கொண்டு வரச் சொன்னார்.
வேர்வையை துடைத்து விட்டு….நெஞ்சை நீவி விட்டு நண்பனை ஆசுவாசப்படுத்தினார். காப்பி வந்தது. குடிக்க வைத்தார்.
“நீ சந்தியாவை பார்க்கணும்னு சொன்னே. அதுக்கு நீ மனசை தயார் பண்ணிட்டு தான் பார்க்கணும். நீ வேற ராஜகோபால்….உடல் குறையை ஏற்றுக் கொண்ட ராஜகோபால்….அனுசரித்து கொள்ள ஆசைப்படும் ராஜகோபால்….இப்படி ஒரு நிலையை நீ அடஞ்ச பிறகு சந்தியாவை பாரு. புலம்பும் மனுஷனா இருந்தா நீ அவளை பார்க்கவே வேண்டாம்……ஹோமில் சேர அவள் விட மாட்டாள், அதனால் டார்ச்சர் பண்ணி போயிடனும்னு நினைக்கும் குட்டிப் பையனின் மனோ நிலையிலிருந்து நீ விடுபடனும். இல்லே…. சந்தியாவை நீ இழக்க நேரிடும்.”
“அய்யோ….” என்று கூவிய நண்பனை அணனைத்து கொண்டார் விவேக். “பயப்படாதே….அந்த அளவு நீ போகமாட்டேன்னு நினைக்கிறேன்.”
இரவு சாப்பாடை முடித்து….பால் அருந்த வைத்து. மாத்திரைகளை உட்கொள்ள வைத்து….ராஜகோபால் படுக்க ஏதுவாக கட்டில் விரிப்பை தட்டிப் போட்டார் விவேக்.
தலையை தடவி அன்புடன் சொன்னார்….
“மனசு இளநீர் மாதிரி இருக்கணும். சந்தியாவின் அன்பை சரியா புரிஞ்சுக்க. உன்னை எங்கோ தள்ளிவிட்டு அவளால் சந்தோஷமாக இருக்க முடியாது. நீ தாழ்வு மனப்பான்மையை விட்டுவிட்டு….இந்த நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ முடியும்ன்னு புரிஞ்சுக்க. தூங்கு. நிம்மதியா தூங்கு…. விடிந்ததும் உன் மனசும் விடியனும்..”
போர்வையை போர்த்திவிட்டார்.
“தேங்க்ஸ் விவேக்….” நண்பனின் கை பிடித்து ஈரமான மனதுடன் குட் நைட் சொல்ல….
“குட் நைட்..” என்றார் விவேக் அதே நெகிழ்ச்சியுடன்.
சந்தியாவுடன் கழித்த இன்பமான நினைவுகளை நினைவுபடுத்தி பார்த்து நண்பன் சொன்னது போல் இளநீர் மனசை கொண்டு வர முயற்சித்தார் ராஜு….
சந்தியாவுடன் எப்படியெல்லாம் இனி மகிழ்ச்சியாக இருக்க முடியும்ன்னு யோசிக்க யோசிக்க….வழிகள் பிறந்தது.
“இது ஏன் எனக்கு முன்னமே தோனலை.? என் ரசனை எல்லாம் எங்கே தொலைந்து போனது.? வாழணும் வாழணும்….சந்தியாவுடன் செகண்ட் இன்னிங்சில் செஞ்சுரி போடணும்….
நிம்மதியான உறக்கம் வந்தது.
சந்தியாவுக்கு வீட்டு சாமான்கள் சில வாங்க வேண்டியிருந்தது.
“அம்மு….ஷாப்பிங் போலாம் வரயா.?”
“சரி டீச்சர்….”
ஆறு மாதம் முந்தி வந்த பெண்ணா இவள்.? பூசினாற் போல் ஒரு மினுமினுப்பு. கண்களில் நட்சத்திரம் டால் அடித்தது. வாழ்க்கையில் அவள் பார்க்காத பக்கங்களை எல்லாம் பார்க்கிறாள்.
இருவரும் ஷாப்பிங் போக தயாராக வந்தனர். கேப் வர காத்திருந்தனர். அம்மு குறுகுறுவென்று பார்த்தாள்.
“என்ன அப்படி பார்க்கிறே.?”
“டீச்சர்….நான் எப்பவும் இங்க இருக்கலாமா.?”
“உனக்கு எதுக்கு சந்தேகம்.?”
“எங்க அத்தை….சித்தி எல்லாம் தூர நின்னு வேடிக்கை பார்ப்பாங்க. நான் ஓட்டுண்ணியாம். நான் பாரமாம். நீங்க அப்படி….”
“கண்டதையும் நினைக்காதே அம்மு. கவலைப்படாதே. நீ பெரியாளா ஆனதும் உன்னைத் தேடி வருவாங்க. பல்லைக் காட்டுவாங்க…நான் உன்னை பெரியாளா ஆக்கி காட்டறேன். டோன்ட் யு வொர்ரி.”
கேப் வந்தது. கிளம்பினார்கள். கடையில்….
“அட அம்முவா இது.? தேவதை மாதிரி ஆயிட்டாளே….” சிறுமியின் கன்னத்தில் கிள்ளி திருஷ்டி கழித்தது….
“பிரேமா சித்தி எப்படி இருக்கீங்க.?”
“வீட்டுக்கு வாடா….டீச்சர் கூட்டி வாங்க என் அக்கா பொண்ணை.” என்றாள் அந்தப் பெண்மணி. அவள் போனதும்.
“இப்பவே பல்லை காட்றாங்க பார்த்தியா.?” என்றாள் சந்தியா. சிறுமி சிரித்தாள். நீங்க சொன்னது உண்மை டீச்சர் என்றாள். அம்முவால் தன் வலி மறந்து இருந்தாள் சந்தியா. எப்போ ராஜகோபால் வருவார் என்று ஆசையுடன் காத்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ராஜு…. சிறகடிக்க ஆசையா.? ஊட்டியின் குளிர்ச்சி உன் மனசுக்கு வந்திடுச்சா.? சொல்லு….நாளை கிளம்பலாம்.” என்றார் நண்பனிடம் விவேக்.
“எனக்கு ஒரு புது மனசை கொடுத்திட்ட விவேக். கண்டிப்பா நான் சந்தியாவோட நல்ல படியா வாழ்வேன்.”
“உன்னை சந்தியா கிட்டே ஒப்படச்சிட்டு நான் லண்டன் போனும். இனி எப்ப பார்ப்பேனோ?”
“வீடியோ கால் இருக்கவே இருக்கு. யானை பசிக்கு சோளப் பொறி மாதிரி தான். இருந்தாலும் அதாவது இருக்கேன்னு ஆறுதலா இருக்கு.” பிரிய வேண்டிய நேரம் வந்திவிட்டதை உணர்ந்த நண்பர்கள் இருவரும் கண்ணீர் மல்க பேச முடியாமல் சிறிது நேரம் தவித்தனர். “பெஸ்ட் ஆப் லக் டா….” என்றார் விவேக்.
“கடைசியா உனக்கு ஒரு உண்மை கதை சொல்லப் போறேன். லண்டனில் நடந்தது. ஆயிரத்தி தொளாயரத்தி தொன்னுராம் ஆண்டு நடந்தது. அப்பொழுது லண்டன் மார்க்கெட் தெருக்களில், அஞ்சு வயசு முதல் இருபது வயது வரை உள்ள பெண்கள்…..பூங்கொத்துக்களை விற்று பிழைத்தார்கள். மிகவும் வறுமையான நிலைமை. அநாதைகள். கிழிந்த உடையும். அழுக்கு தோற்றமும், பசியால் வாடிய மெலிந்த தேகமுமாக, தாங்களே. அந்தந்த சீசனில் கிடைக்கும் மலர்களை கொத்தாக கட்டி..காலனி இல்லாமல் நடந்து நடந்து விற்பார்கள். பரிதாபமாக இருக்கும். இவர்களுக்கு ஒரு நேர கஞ்சியும்….இரவு சூடான டின்னரும் கொடுத்தாரம் ஜான் குறும் என்பவர். இவர் ஒரு ஹோம் நடத்தி இவர்களுக்கு கல்வியும் அளித்தாராம் இவர்கள் பெயரே பிளவர் கேர்ள்ஸ். அவருக்கு எவ்வளவு பெரிய மனசு இல்லே.?
இதில் விஷேசம் என்ன தெரியுமா.? இவர்களில் பலரும் ஊனமுற்றவர்கள். ஒரு கை இல்லாதவர்கள். ஒரு கால் இல்லாதவர்கள். பாதி குருடானவர்கள்….
இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து வாடாத செயற்கை ரோஜாக்களை செய்ய பயிற்சி அளித்து….அந்தப் பூக்களை விற்பனை செய்து விக்டோரியா மகாராணிக்கு மாலை செய்து கொடுத்தார்கள் என்று தெரிகிறது. இதனால் பொது மக்களும் வாங்கினார்கள்.
அந்தப் பெண்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி….தங்கள் ஊனத்தை மறந்து இந்தக் கைவேலையை செய்தார்கள். ஏழ்மை…… ஊனம்….இதையெல்லாம் ஜெயித்து, சிரித்து வாழ்ந்தார்கள் என்று வரலாறு சொல்கிறது. உனக்கு எதுக்கு சோர்வு.? அவர்களை விட நீ நல்ல நிலமையில் தானே இருக்கே.? சொல்லு.”
இந்த நிஜக் கதை ராஜூவின் மனசுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்பத்தியது. வாழ வேண்டும் என்ற ஆசையை அதிகப்படுத்தியது.
“உண்மை தான். இப்ப தத்தி தத்தி நடக்கிறேன். அதுவே எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. நீ கொடுத்த தைரியம்.”
“சந்தியாவுடன் இனி உன் வாழ்க்கை முன்ன போல இருக்காது. லவ் அண்ட் லிவ். மகிழ்ச்சி தானா வரும்.” என்றார் விவேக். சொல்லி முடிக்கவும் அவருக்கு வாந்தி வந்தது. பாத்ரூம் போனார். திரும்ப வரக் காணும். என்னாச்சு? விவேக்..விவேக்..கூப்பிட்டார் ராஜு. பதிலில்லை. பதற்றத்துடன் காலை இழுத்து இழுத்து பாத்ரூம் அருகே போனார் ராஜு. அங்கே….”என்னாச்சு டா உனக்கு?..” என்று கதறினார்.
nice