அத்தியாயம்—3
இனிமையாகத் தான் வாழ்க்கை ஆரம்பம் ஆனது சந்தியாவுக்கு இனிமை என்பது
புரிதலில் தான் இருக்கிறது. பணத்தில் இல்லை, பதவியில் இல்லை.
உடல் ஆரோக்கியத்தில், மன ஆரோக்கியத்தில் இருக்கு நல்ல வாழ்க்கை. அந்தப்
புரிதல் அவர்களுக்குள் சீக்கிரமே வந்துவிட்டது.
முதல் இரவு. புத்தம் புது ராஜகோபால். புதிய இருபது வயது ரோஜா மலர் போல்
சந்தியா. அவர்கள் சந்திப்பில் என்ன நடக்கும்.? தெரிந்து கொள்ள கள்ளத்தனமாக
நிலா ஜன்னலில் ஆஜார்….
பால் செம்பை வைத்துவிட்டு, அவன் காலில் விழப் போனாள்.
“அம்மாடி. இந்த சடங்கெல்லாம் வேண்டாம். ஓ. கே?. இப்படி பக்கத்தில் உக்கார்.
அப்புறம் சந்தியா எப்படி இருக்கே.?” என்றான்.
அவள் களுக்கென்று சிரித்தாள்.
“எதுக்கு சிரிக்கிறே.?”
“பொதுவா நீ ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்வாங்களாம். நீங்க எப்படி
இருக்கேன்னு கேக்றீங்க.?”
அவள் கையை எடுத்து அவன் தன் மடியில் வைத்துக் கொண்டான். அன்புடன்
பேசினான், அவள் கண்ணுக்குள் பார்த்து….
“உன் சித்தியின் ஆட்டம் ஜாஸ்தியாவே இருக்கு பார்த்தேன். அவங்க கிட்டே
வளர்ந்தே. உன் மனசு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க அப்படி கேட்டேன்.”
என்றான்.
“பரவாயில்லையே வித்தியாசமான கணவராத் தான் இருக்கீங்க.”
“சந்தியா….நான் ஒண்ணு கேப்பேன். நீ உண்மையா பதில் சொல்வியா.?”
“கண்டிப்பா….சொல்லுங்க மனசு விட்டுப் பேசத்தான் முதல் இரவு.”
“ஒரு வேளை….ஒரு வேளை….என் முதுமை காலத்தில் கை கால் விளங்காமல்
போயிட்டா, நீ என்னை ஹோமில் சேர்த்து விடு. என்னால் நீ கஷ்டப்படக் கூடாது.”
என்றான்.
திடுக்கிட்டுப் போனாள் சந்தியா. அதிர்ச்சியுடன் அவனனைப் பார்த்தாள். “என்ன
பதிலே இல்லே.?”
“என்னங்க கேள்வி இது.? அக்னி சாட்சியா நீங்களும் நானும் கணவன் மனைவிங்கற
புனித பந்தத்தில் மனமொத்து நுழஞ்சிருக்கோம். என்ன ஆனாலும் கடைசி வரை உங்க
பக்கத் துணையா இருப்பேன்னு நான் சொல்லித் தான் தெரியனுமா.? முதல்
சந்திப்பிலேயே ஏன் இப்படி அபசகுணமா பேசறீங்க.?”
“சந்தியா அபசகுனமா பேச எனக்கு மட்டும் ஆசையா என்ன.?….என்னக்குன்னு
யாருமில்ல. ஏதோ ஒரு மாதிரியா அநாதை போல வளர்ந்திட்டேன். நம்மை காலம்
பிரிச்சிடுமோன்னு ஒரு பயம்….நாம சந்தோஷமா கடாசி வரை வாழணும்.”
“கண்டிப்பா வாழ்வோம். நான் இருக்கேன் உங்களுக்கு.”
“தேங்க்ஸ் சந்தியா….ரொம்ப தேங்க்ஸ்.”
“ஆத்மார்த்தமான ஒரு நண்பன் கூடவா உங்களுக்கு இல்லே.? எனக்கு சரசு கிடைச்சா
மாதிரி.?”
“இருக்கு….அவன் பேர் விவேகானந்தன். அவன் இல்லாவிட்டால், நான் இன்று உன்
முன் உக்காந்து இருக்க மாட்டேன். ஒரு வேளை மன பிறழ்வு காரணமா ஏதாவது
ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன்….இப்ப அவன் லண்டனில் இருக்கான். வாழ்த்து
சொன்னான். நினைவில் நிற்கும் நிறைந்த நட்பு. அந்த நட்பு இப்ப
உன்னுடன்….கிடைக்கும் தானே.?” அவளை அன்புடன் பார்த்தான்.
குழந்தை போல் அவனை சேர்த்து அணைத்துக் கொண்டாள். அவள் கம்மிய குரலில்
சொன்னாள். கண்ணில் ஈரம் மினுமினுத்தது.
“என்னுடய பயம் உன்னை குழப்பக் கூடாது. போக போகப் என்னை புரிஞ்சுப்பே. நீ
என்னோட உயிர்.” அவளுக்கு குழப்பமாகத் தான் இருந்தது. ஏன் இவனுக்கு இந்தப்
பயம்.? நல்ல வேலையும், அந்தஸ்த்தும், மரியாதையும் உள்ள கௌரவம் அவனுக்கு
இருக்கும் போது எங்கிருந்து வந்தது இந்த பயம்.?
“என்னடா இப்படி பேசறான்னு கன்பியூஸ் ஆயிட்டியா.? உனக்கும் அம்மா
இல்லை….உன் அண்ணன் கல்யாணத்துக்கே வரலை. உறவுகள் இப்படி இருந்தால்
மனதுக்கு எப்படி தெம்பு வரும்.? சித்தியின் பூசி மெழுகும் அன்பு….நீ தொலைந்து
போயிட்டியோன்னு கேட்டேன். நீ நல்லா இருந்தா தானே நான் நல்லாயிருக்க
முடியும்.”
அவள் உள்ளம் திடீரென புஷ்பித்தது. ஆதரவற்ற இருவர் ஒன்று சேரும் போது அங்கே
கெட்டியான காதல் பூக்கள் தங்க நூலில் கட்டப்பட்டு வளமை பெற்றுவிட்டது.
“ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா.? உண்மைக் காதல் மாறிப் போகுமா.?” என்று அவள்
மெல்லிதாக பாடினாள். அவன் இன்று காலை தான் தாலி கட்டினான். அதுக்குள்
காதல் கோட்டை எழுந்து விட்டது அவர்கள் மனசில். கட்டின தாலிக்கு அர்த்தம்
கிடைத்துவிட்டது.
சித்தியின் வறண்ட மனசின் பிடியிலிருந்து அவள் தப்பித்து, அன்புக் கணவனின்
இதயக் கடலில் விழுந்திருக்கிறாள். என்ன ஒரு கொடுப்பினை.!
“உங்க மனசும் என் மனசும் சேர்ந்தாச்சு.” என்று அவனைக் கட்டிக் கொண்டாள்.
“நான் முனிவன் இல்லை சந்தியா. இப்படி வந்து கட்டிக் கொண்டால்……..”
அப்புறம் விளக்குக்கு என்ன அவசியம்.? நிலாவும் மேகத்துள் மறைந்தது. அந்த
முதலிரவை நினைத்துப் பார்க்கிறாள் சந்தியா.
அந்த இரவு மட்டுமா.? எத்தனை எத்தனை இரவுகள்….பேசிப் பேசி ராசி ஆனார்கள்.
அவள் மணக்க மணக்க சமைக்க. அவன் ரசிச்சு ரசிச்சு சாப்பிட….இல்லறம் நல்லறமாக
அமைந்த கொடுப்பினை அவளுக்கு. தித்திக்கும் நாட்களில் ஊடலும் கூடலும் நடந்தது.
எத்தனை எத்தனை சம்பவங்கள். தேன் தடவிய இனிப்பு லட்டு மாதிரி.! அக்கா
வீட்டுக்கு விருந்துக்கு போன போது….
அக்கா குழந்தைகளுடன் கொஞ்சி, அவர்களுக்கு சாக்லேட்ஸ் கொடுக்க அவர்கள்
விளையாடப் போய்விட்டார்கள்.
“உன் ஹப்பிக்கு என்ன பிடிக்கும் சந்தியா.? என்ன சமைக்கட்டும்.?” அக்கா கேட்டாள்.
அடுக்களைக்குள் வந்த ராஜகோபால்.
“உங்க தங்கச்சி மாதிரி சாம்பார் மட்டும் வச்சுடாதீங்க மதனி. வேற நீங்க என்ன
செய்தாலும் ஓ. கே.” என்றான்.
“ஹேய்….பிராட். உன் சாம்பார் செம டேஸ்ட்ன்னு சொல்லி வழிச்சு வழிச்சு
சாப்பிடுவார் அக்கா. இப்ப வேணுமினே சொல்றார்.” என்று சிணுங்கினாள் சந்தியா.
“பார்றா….ஒண்ணுமே சொல்லலை அதுக்குள்ள குத்தால அருவி மாதிரி கண்ணிலே நீர்
கொட்டுது. இதை சேமிச்சு வச்சா ஊருக்கே தண்ணி விநியோகம் பண்ணிடலாம்…..”
“சும்மா இருங்க தம்பி. குழந்தை மாதிரி அவ. நீங்க அவளைப் பூப் போல வச்சுக்கணும்.”
என்றாள் பிரபா.
பிரபா சொதி வைத்திருந்தாள். தேங்காயை பூவாக்கி, அரைத்து பால்
எடுத்து….பாசிப்பருப்பு கடைந்து ஊற்றி….எலுமிச்சை பிழிந்து….. அட்டகாசமாக
இருந்தது. கூடவே இஞ்சித் துவையல். உருளைக் கிழங்கு ரோஸ்ட். பருப்பு வடை.
பால் பாயாசம்….”
ஒரு பிடி பிடித்தான் ராஜகோபால்.
“மதனி உங்க கைக்கு தங்கப் காப்பு போடணும். அண்ணாக் கிட்டே சொல்லறேன்….”
அப்பொழுது தான் உள்ளே வந்த பிரபாவின் கணவர் ஸ்ரீராம்..
“தம்பி செலவு வைக்க வழி பண்ணிட்டீங்க. இனி உங்க மதனி என் உசுரை
எடுத்திடுவா. ஏற்கனவே லாக்கரில் ஒரு டஜன் வளையல் இருக்கு….பூவர் மீ….”
என்றபடி சாப்பிட உட்கார்ந்தான்.
கலாட்டாவும் கேலியுமாக விருந்து உண்டார்கள். சாப்பிட்டுவிட்டு ஸ்ரீராம் அலுவலகம்
சென்று விட்டார்.
வெற்றிலை தட்டில் சுண்ணாம்பு இருந்தது பாக்கு இல்லை..
“மதனி பாக்கு இல்லே….” என்றான் ராஜகோபால்.
“பாக்கு எடுத்து வரேன்..” அவசரமாக எழுந்த பிரபா….தரையில் நீர் சிந்திக் கிடக்க
சடாரென்று வழுக்கி விழுந்தாள். விழுந்த வேகத்தில் மேஜையில் இருந்த கண்ணாடி
கிளாஸ் தவறி விழுந்து, உடைந்து, அந்த சில்லுகள் மேல் விழுந்தாள். மேலும் பின்
தலை நாற்காலியின் கூர் முனைப் பட்டு, கிழிக்க….அவள் மயங்கி விட..ரத்தம்
கொட்ட….அக்கா அக்கா என்று சந்தியா அலறி விட்டாள்.
குழந்தைகள் அம்மா அம்மா என்று கத்தினர். அவர்களை சேர்த்து அணைத்துக்
கொண்டாள் சந்தியா.
“பதட்டப்படாத….ஒன்னுமில்லே…” குத்தி உள்ள பெரிய கண்ணாடி துகள்களை
லாவகமாக எடுத்தான். கட்டு போட வேண்டாம். ஏதாவது கண்ணாடி சில்லுகள்
உள்ளே பொதிந்து விடக் கூடும். ரத்தம் கசிந்தது. மெல்ல கண் விழித்தாள் பிரபா.
ஆனால் இலக்கு இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அக்கா….அக்கா என்னைப் பாரு அக்கா..”
“சந்தியா ஆஸ்பத்திரி போகணும்….கிளம்பு குவிக்.”
“சுதா…. பாலன் வீட்டில் இருங்க. அடுத்த வீட்டு ஆன்ட்டியை துணைக்கு வரச்
சொல்றேன். சமர்த்தா இருங்க. அம்மாவுக்கு ஒன்னுமாகாது.” என்றாள் சந்தியா.
எதையும் யோசிக்காமல்….பிரபாவை அலக்காக கைகளில் ஏந்தி ஓடிச் சென்று காரின்
பின் சீட்டில் படுக்க வைத்தான். சந்தியா அடுத்த வீட்டு அனுசூயா என்ற பெண்ணை
குழந்தைகளை பார்த்துக்க சொல்லிவிட்டு வந்தாள்.
“சீக்கிரம் ஏறு சந்தியா மதனி தலையை மடியில் வச்சுக்க.”
கார் வேகமாக சென்றது. ஆஸ்பத்திரி வாசலில் நிமிஷமா போய் நின்றது. சந்தியாவுக்கு
முதலுதவி செய்தார்கள்.
டாக்டர் ரத்னா வெளியே வந்தாள்.
“டாக்டர்….அக்கா எப்படி இருக்காங்க.? ஒண்ணும் ஆபத்தில்லையே.?” என்று சந்தியா
கவலையுடன் கேட்டாள்.
“பயப்பட ஒண்ணுமில்லைன்னு சொல்ல முடியாது ஆனா காப்பாத்திடலாம். அவங்க
ஐ. சி. யு வில் தொடர்ந்து இருக்கணும். மூளையில் ரத்தக் கசிவு. ஆங்காங்கே பிளட்
கிளாட் ஆகியிருக்கு. கிளாஸ் பீசஸ் ரிமூவ் பண்ணியாச்சு. இன்னும் இருக்கான்னு
பார்க்கனும். கொஞ்சம் கிரிட்டிகல்….”
சந்தியா உடைந்து போனாள். அவளின் ஒரே உறவு அக்கா தான். அவளுக்கு ஒன்று
என்றால்….கடவுளே காப்பாற்று….
“உங்களால வந்தது……எதுக்கு பாக்கு கேட்டீங்க.?” என்று சொல்லி விசும்பிக்
கொண்டே இருந்தாள் சந்தியா.
ஸ்ரீராமுக்கு ஃபோன் செய்தான் ராஜகோபால். ஸ்விட்ச் ஆப் என்று வந்தது. பிரபாவின்
போனுக்கு கால் வந்தது. சந்தியா அக்காவின் போனை கையில் வைத்திருந்தாள்.
எடுத்தாள்.
“அம்மா….சார் அவசரமா வேலை விஷயமா கொச்சின் போயிருக்கார். வர ஒரு
வாரமாகும். சொல்லச் சொன்னார்.” என்ற செய்தி வந்தது.
“தேங்க்ஸ் சார்….”
“இப்ப என்ன செய்யறதுங்க.? அத்தானுக்கு எப்படி தெரிவிப்பது.?” என்று கேட்டாள்
சந்தியா.
“பதட்டப்படுவார் பொறு….இப்ப சொல்ல வேண்டாம்.” என்றான்.
ஊசி மருந்து மாத்திரை….சின்ன ஆபரேஷன் என்று ஒரு வாரம் கழிந்தது. ஏழாம் நாள்
டாக்டர் டிஸ்சார்ஜ் பண்ணிவிட்டார். ஸ்ரீ ராமும் வந்துவிட்டான். மனைவியின் நிலை
கண்டு துடித்து விட்டான். பிரபாவின் தலைமுடியை ஓட்ட ஷேவ் பண்ணி விட்டார்கள்.
தலையில் கட்டு போடப்பட்டிருந்தது. நூறு கேள்விகள் கேட்டான். டாக்டர்
சொன்னார்.
“ரொம்ப கேர்புல்லா பார்த்துக்கணும். தலையில் தண்ணி படக் கூடாது. நாங்க
கொடுக்கும் மாத்திரை மருந்து பாலோ பண்ணனும்.” என்று ஏகப்பட்ட
இன்ஸ்டிரக்ஷன்ஸ் கொடுத்து அனுப்பி வைத்தார்.
பிரபா பேசினாள். “ரொம்ப நன்றி தம்பி….நீங்க மட்டும் இல்லேன்னா….” கண்களில்
நீர் நின்றது அவளுக்கு.
“ஒண்ணும் பீல் பண்ணாதீங்க மதனி. உங்க தம்பி போல நான். இது கூட செய்யக்
கூடாதா.? நல்ல வேளை நல்லாயிடுச்சு.” என்றான்.
மயிரிழையில் தப்பித்தாள்….இது அவளுக்கு மறுபிறவி என்றார் டாக்டர். இல்லே
பிரேன் டாமேஜ் ஆகி கோமாவில் போயி விட்டிருக்கும்….பிரபாவுக்கும் இது தெரிய
வந்தது.
ஸ்ரீராம் சொன்னான். “என் உயிரை எனக்கு கொடுத்திட்டீங்க தம்பி.” என்றான்
நெகிழ்ச்சியுடன்.
அன்று முதல் பிரபாவும் அவள் கணவரும் ராஜகோபாலை தெய்வமாக
கொண்டாடினார்கள்.
“தேங்சுங்க….கடவுள் மாதிரி வந்து அக்காவை….” என்றாள் சந்தியா.
“போதும் டீ. பாக்கு கேட்டது தான் ஓட்டையா போச்சுன்ணு என்னை கொலைகாரன்
பார்வை பார்த்தியே. உசுரே போயிடுச்சு தெரியுமா.? மதனிக்கு மட்டும் எதான
ஆகியிருந்தா என்னை உசிரோட பொலி போட்டிருப்பே. சும்மா சொல்லக்
கூடாது….உன் பாசம் வேற லெவல். எனக்கும் உன் மனசில் அந்த மாதிரி ஒரு உயர்ந்த
இடம் இருக்கா.?”
“இது என்ன கேள்விங்க.? அசட்டுத்தனமா.? அக்காவுக்கே அப்படின்னா
உங்களை….நான் என் கண்ணுக்குள் வச்சு பார்த்துப்பேன்.”
“வயசான காலத்தில் கை கால் விழுந்து கிடந்தா கூட நல்ல பாரத்துக்குவேன்னு
சொல்லு.”
“இப்படி எதுக்கு சொல்லிக்கிட்டே இருக்கீங்க.? ஏதாவது உளறாதீங்க. உங்களுக்கு
அதெல்லாம் ஆகாது.’”
“ஆச்சுன்னு வச்சுக்க… என்னை ஹோமில் கொண்டு டம்ப் பண்ணிடு.” என்றான்.
அவன் அன்று விளையாட்டுக்கு சொன்னது இன்று நிஜமாகிப் போனது. அவள்
சொன்னது போல் இருக்கிறாள். ஆனால் அவன் தான் தன் சுயம் இழந்த வருத்தத்தில்
வசம் இழந்து நிற்கிறான். அவளை வார்த்தையால் கொல்கிறான்.
-தொடரும்
-சங்கரி அப்பன்
interesting
பிரமாதம்