அத்தியாயம்…5
எந்த உறவில் உரிமை இருக்கிறதோ, அங்கே தான் பயமும் இருக்கும். சித்தியின் கோபத்தை பற்றி சந்தியா கவலைபட்டதில்லை. ஆனால் ராஜகோபால் அப்படி இல்லையே.!
என்ன செய்வது என்று தெரியவில்லை. அழுது கொண்டே அக்காவிடம் சொன்னாள்.
“பயமா இருக்குக்கா. இனிமே என்னிடம் பேசவே மாட்டாரா.?”
“மக்கு….இதெல்லாம் ஒரு விஷயமா.? அதெல்லாம் பேசுவார். இதுக்குபேர் பொசசிவ்னஸ் உன் மேல் உயிரையே வச்சிருக்கார்ன்னு புரியலை.? உன் அத்தான் கூட அப்படித்தான். சுதாவை உண்டாக்கி இருக்கும் போது, முதலில் மாமியாரிடம் சொல்லிவிட்டேன். அம்மா சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கனுமா.? அப்படி இப்படின்னு ஒரே ஆட்டம்….” என்று சிரித்தாள்.
“அப்படியா.? அத்தான் பார்த்தா சாதுவா இருக்கார். அவரா ஆட்டம் போட்டார்.? அப்புறம் எப்படிக்கா சமாதானப் படுத்தின.? அந்த டெக்னிக்கை எனக்கும் சொல்லேன்.”
“அதெல்லாம் அந்தரங்கம். சொல்லித் தெரியாது மன்மதக் கலை. நீயே பிகர் அவுட் பண்ணிக்க….உன் சமர்த்து….பை.” என்றுவிட்டாள் அக்கா. என்னடா செய்வது இந்த முனிபுங்கவரை? என்று யோசித்து மண்டை குழம்பினாள் சந்தியா……அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சரி போய் மன்னிப்பு கேட்டிடுவோம்…. மாடிக்குச் சென்றாள். நட்சத்திரங்கள் மினுக்கிக் கொண்டிருந்தது. காற்று பரம் பரம் என்று அடித்துக் கொண்டிருந்தது,,,, அவன் எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்….
“என்னங்க….ரொம்ப கோபமா.? என்னை மன்னிச்சிடுங்க….ப்ளிஸ்..”
“சந்தியா….எதுவானாலும் என் கிட்டே தான் நீ முதல்லே சொல்லணும். இந்த ஒரு தரம் உனக்கு மாப்பு….”
“ஆனா நீங்க மட்டும் ஒரு விஷயத்தை என் கிட்டே மறைக்கலாமா.?
“நான் என்ன மறைச்சேன்.?”
“கோவிலுக்குப் போனதும் அங்க வச்சு….டவுட் கிளீர் பண்ணறேன்னு சொன்னீங்க. ஆனா மழுப்பிட்டீங்க….எதுக்கு கை கால் விழுந்தா என்ன செய்வேன்னு சொல்லிட்டே இருக்கீங்கன்னு..”
அவன் மௌனமாக நின்றான். அவன் முகமே மாறியது.
“சொன்னேன்….சொல்றேன். வற்புறத்தாதே….” என்று விட்டு கீழே இறங்கிச் சென்றுவிட்டான். அப்பா ஆகப் போற சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டாடுவான் என்று நினைத்தால்….
அவள் சோகமாக கீழே இறங்கி வந்தாள். அவள் கடைசி படி இறங்குவதற்குள், அவன் அவளை தூக்கி தோளில் சாயித்தான்.
“புள்ளை பொறந்ததும் என்னை மறந்திட மாட்டியே.? எனக்கு அப்பா பட்டம் கொடுத்த உனக்கு கோடானு கோடி நன்றி.” கீழே இறக்கி விட்டான். அவள் கண்ணையே பார்த்தான்.
“போங்க….என்னை பயமுறுத்திட்டீங்க. அதுக்கு தண்டனை….நீங்க எனக்கு தோசை சுட்டுப் போடணும்.”
விசில் அடித்துக் கொண்டே கேசை பற்ற வைத்து, முறுகலாக அவளுக்கு தோசை சுட்டுக் கொடுத்தான்.
“இவ்வளவு பிரமாதமா சுடறீங்க. யார் கிட்டே கத்துக்கிட்டீங்க.?”
“அதுவா. ? பார்வதிக் கிட்டே….”
“பார்வதியா.? யார் அது? உங்கம்மா பேர் கங்கான்னு சொன்னீங்க….”
“அதுவா? வந்து….வந்து என் அம்மாவின் பட்டப் பேர் பார்வதி..” சமாளித்தான். பொய் சொல்கிறோமே அவள் கண்டுபிடிச்சுட்டா..?
“ஆமா….கேக்கணும் நினச்சேன். உங்கப்பாக் கிட்டே…. அவர் தாத்தா ஆகப் போறதை சொல்ல வேண்டாமா.? எங்கே இருக்கார்.?”
“அவருக்கு என்னையே நினைவு இல்லை…ஹோமில் இருக்கார்.”
“நான் போய் சொல்லிட்டு வரேனே. அவருக்குப் புரியாட்டி பரவயில்லை. கூட்டிப் போங்க. நானும் கேட்டுக்கிட்டே இருக்கேன்..”
அவன் மாவை வழித்து விட்டு….சிங்கில் கை கழுவினான்.
“இப்ப சமர்த்தா எனக்கு சுட்டுப் போடுவியாம்…..சில உறவுகள் தள்ளி இருப்பது நல்லது தூர இருக்கும் நட்சத்திரம் மாதிரி….”
“உங்கள புரிஞ்சுக்கவே முடியலை….”
முதல் தோசை வந்து விழுந்தது. மல்லி சட்னி தொட்டுக் கொண்டு சாப்பிட்டு முடித்தான்.
படுத்துக் கொண்ட போது சந்தியா கேட்டாள்.
“சித்திக்கிட்டே சொல்ல வேண்டாமா.? இப்ப ஃபோன் பண்ணட்டா.?”
“வேண்டாம்….அவளுக்கு நல்ல மனசு இல்லே. குதர்க்கமா பேசுவா.”
உண்மை தான். இந்த சந்தோஷ செய்தியை நாளை சாவகாசமாக சரசுவிடம் சொல்ல வேண்டும்.
மறுநாள் அவள் சாம்பாருக்கு தாளித்த போது, அந்த வாசனை பிடிக்காமல் குமட்டியது. பாத் ரூம் சிங்கி இருக்கும் இடத்துக்கு ஓடினாள். அவள் வாந்தி எடுத்து விட்டு, வாய் துடைத்துக் கொண்டு வந்த போது, வாசல் மணி அடித்தது. யாரா இருக்கும்.? சித்தி….
“ஓ….நீங்களா.?” எவர்சில்வர் தூக்குடன் நின்று கொண்டிருந்தாள்.
“உள்ளே வரச் சொல்ல மாட்டியா.?”
“வாங்க….என்ன இந்தப் பக்கம்.?”
“உன் அக்கா சொன்னா….நீ மாசமா இருக்கியாமே.? அதான் உனக்கு பிடிக்குமேன்னு முறுக்கு செஞ்சு கொண்டு வந்திருக்கேன். எத்தனையாவது மாசம்.?”
சோபாவில் உட்கார்ந்தாள். தூக்கு சட்டி திறந்து ஒரு முறுக்கு எடுத்துக் கொடுத்தாள். “சாப்பிடு….உனக்காக பார்த்து பார்த்து..”
“எதுக்கு உங்களுக்கு சிரமம்.? நான்….”
“நீ கேட்டா தான் செய்யனுமா.? உங்கப்பாவை கல்யாணம் பண்ணி இருபது வருஷம் ஆச்சு. நான் சாதிக்காததை நீ சாதிச்சிட்டே. என் வயத்திலே தான் ஒரு புழு பூச்சி உண்டாகலை….உனக்கு ஆறு மாசத்துக்குள்ளே ஜாக்பாட் அடிச்சிடுச்சு……எடுத்துக்க.”
முறுக்கை வாங்கி அப்பால் வைத்துவிட்டு “எதுக்கு வந்தீங்க?..” என்று நாக்கு நுனி வரை வந்த சொல்லை கஷ்டப்பட்டு உள்ளே தள்ளினாள். காப்பி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள்.
“உங்க அண்ணன் ஜெயபாண்டி….அவன் ஒருத்தன் இருப்பதே உங்களுக்கு மறந்திருக்குமே….அவன் பெண்டாட்டி நேத்து தான் மூனாவது புள்ளையை பெத்தா. அது பொறந்தவுடன் செத்துப் போச்சாம். தெரியுமா உனக்கு.?”
சந்தியா பதில் பேசாமல் அதிர்ச்சியுடன் நின்றாள். அவன் யார் தொடர்பும் வேண்டாம்ன்னு போனவன் தான். மூணு வருஷம் ஆச்சு..
“எனக்கு உங்கப்பா பண்ணிய துரோகம் தான்….”
“இத பாருங்க. உங்க தங்கச்சிகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சது எங்கப்பா தான். அந்த புண்ணியம் எங்களை காப்பாத்தும். உங்களுக்கு புள்ளை பொறக்காததுக்கு யார் என்ன செய்ய முடியும்.? துரோகம் அது இதுன்னு பேசிட்டு இருக்கீங்க.”
“அம்பது வயசிலே இருபது வயசு பொண்ணை கல்யாணம் பண்ணினா…. அது துரோகம் இல்லையா.?”
“எங்கப்பா சொத்துக்கும், அந்தஸ்துக்கும் ஆசைப்பட்டு தானே கட்டிக்கிட்டீங்க.?….”
“சரி சரி நான் கிளம்பறேன். உனக்கு பொறக்கும் குழந்தை, உன் அண்ணன் குழந்தை போல் பொட்டுன்னு போயிடுடாம. பார்த்துக்கோ….”
அவள் மின்னல் வேகத்தில் எழுந்து போய்விட்டாள்.
இதுக்குத் தான் வந்தாளா.? என்ன ஒரு கெட்ட எண்ணம்.! அவள் கண்கள் சிவக்க அழுதாள். ராஜயகோபால் வந்த போது அவள் கண்கள் சிவந்து கன்னம் வீங்கி இருந்தது.
“என்னாச்சு சந்தியா.?” அழுது கொண்டே சொன்னாள். அவன் தூக்குச் சட்டியை திறந்து முறுக்குகளை குப்பை கூடையில் போட்டான். சித்திக்கு ஃபோன் செய்தான்..
“ஹலோ….என்ன மாப்பிள்ளை.?’
“உங்களை யார் இங்கே வரச் சொன்னது.? கட்டிக் கொடுத்தாச்சு. இல்லே.? அத்தோடு உங்க கடமை முடிஞ்சுது. இனிமே வந்தா..திரும்பி போக நீங்க இருக்க மாட்டீங்க. மைன்ட் இட். கேக்க ஆள் இல்லன்னு நினப்பா.? சே..”
சந்தியா போனை வாங்கிப் பேசினாள்.
“சித்தி புரிஞ்சிருக்கும்ன்னு நம்பறேன். நீங்க அதட்டினா பயந்து நடுங்கும் சந்தியா இல்லே நான். அந்த சந்தியா செத்துப் போயிட்டா.”
சரோஜா முதல் முறையாக அதிர்ந்தாள். பிரபாவின் கணவர். மூத்த மாப்பிள்ளை ஸ்ரீராம், இதுவரை அவளை ஒரு வார்த்தை சொல்லியது இல்லை. இந்த அநாதை பையலுக்கு இவ்வளவு திமிரா.? அந்த சந்தியா என்னைக் கண்டு நடுங்குவா….என்ன பேச்சு பேசிட்டா….நீ இனிமே நிம்மதியா தூங்க முடியாது சந்தியா….கருவினாள்.
-தொடரும்
NICE
Thankyou so much ma .
Thanks a lot ma
Thanks ma