அத்தியாயம் – 19
வந்தவர்கள் யாரென்று தெரியவில்லை ஆனால் யாரோ தங்களை நோட்டமிடுவது புரிந்தது ஆராஷிக்கு அதனால்தான் அங்கிருந்து கிளம்பினான்..
அந்த இடத்திற்கு வரும்போது இருந்த உற்சாகமும் சந்தோஷமும் கிளம்பும்போது அவனிடம் இல்லை.. ஹர்ஷத் கேட்டதைதான் மனதில் ஓட்டி பார்த்துக்கொண்டு இருந்தான்.. அவன் கேட்பதுபோல மேதா இப்போது வேறு யாருக்காவது ஓகே சொல்லி இருந்தா இல்ல சொல்லலாம்னு இருந்தா? தன்னால் அதை தாங்கமுடியுமா?
இல்லை அவனை அவள் வெறுத்தால்? நினைக்க நினைக்க அவனுக்கு ஏதோ தன்னைவிட்டு மேதா தூரமாய் செல்வது போல வலித்தது..
அவளுக்காக மட்டுமே அவனது வாழ்வு என்று அவன் முடிவு செய்து பல நாட்கள் ஆகிவிட்டது.. ஆனால் அவனுக்காக வாழ்ந்தவள் இப்போதும் அவனுக்காக இருக்கிறாளா? இல்லையா? இதுவே அவனை குழப்ப துவண்டு போனான் ஆராஷி..
அங்கு..அவன் சந்தோஷமாய் கிளம்பியதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியாய் அவனையே தான் பார்த்தபடி நின்றனர்.. அவன் நின்று தன் அண்ணனிடம் கூறிவிட்டு சென்றபின் தான் ரியோட்டோவை அங்கேயே விட்டு செல்கிறான் என்பதே உரைத்தது அவனுக்கே..
‘அடப்பாவி கூட இருந்து எனக்கு சப்போர்ட் பண்ணி பேசிஅவள சமாதானம் படுத்துவனு பார்த்தா இப்படி கழட்டிவிட்டுட்டு போறியே..
அவகிட்ட என்ன பேசுறதுனே தெரியலையே? எப்படி பேசினாலும் அவள் இறங்கி வருவாளானே தெரியலையே?’ என்று மனதில் புலம்பியபடி திரும்பியவனை தான் பார்த்துக்கொண்டு இருந்தாள் அருந்ததி.. அவனது சோகமுகம் அவளுக்கு சிரிப்பை தர.. வாயை மூடி சிரிக்கும் அவளை பார்த்தவன் கண்களை உருட்டி அவளை மிரட்ட சின்னபிள்ள போல இருந்தது அவளுக்கு..
‘இவங்க ரெண்டு பேரும் வளர்ந்த குழந்தைங்க’ என மனதில் நினைத்தவள் அமைதியாக வேறுபுறம் திரும்பினாள்..
மீட்டிங் பாதியிலேயே தடைப்பட்டதால் அதை வேறு ஒரு நாள் மாற்றியமைத்தவன் அதை அறிவித்து அனைவரையும் உணவு அருந்த கூட்டி சென்றான்.. அனைவரும் அமர ரியோட்டோவோ அமராமல் தேஜுவை பார்க்க தன் பக்கத்தில் அமராமல் நிற்கும் அவனை பார்த்த தேஜு
‘என்ன?’ என்பது போல பார்க்க..
“இல்ல..பேபிக்கு நா..நான் ஃபீட் பண்ணவா?” என்று கேட்க அவளுக்கே அவனது தயக்கமுகம் ஏதோ போல் ஆகிவிட குழந்தையை அவனிடம் போக சொன்னாள்..
சாச்சியும் அவனிடம் தாவ அவளை அள்ளிக்கொண்டவன் தேஜு நீட்டிய கிண்ணத்தை எடுத்த அதிலிருந்து உணவை அவளுக்கு ஊட்ட பெரியதாய் அள்ள அதை பார்த்தவள்
“அவ்ளோ பெருசு இல்ல.. கிட்ஸ்க்கு சின்னதா ஊட்டனும்” என்று அளவு காட்ட
“ஓ..ஐயம் சாரி” என்றபடி அவன் சிறு உருண்டைகளாக எடுக்க அவள் மகளோ எந்த தடையும் இல்லாமல் வாங்கி கொண்டு உண்டாள்..
அதை பார்த்த தேஜுவிற்கு மீண்டும் கலக்கம்.. அவனுடன் போக மனது சம்மதிக்கவே இல்லை ஆனாலும் ஷ்ரத்தா கேட்ட ஒரு கேள்விக்கு கூட அவளால் பதில் கூற முடியவில்லையே.. அவனது நிலையில் இருந்து தானும் யோசிக்க வேண்டிய அவசியம் இருக்கிறதே..கூடவே தனது மகளின் எதிர்காலமும் அவனோடு தானே சேர்ந்துள்ளது..
என்னதான் ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அப்பா என்னும் உறவு அரியது அல்லவா..
தனக்கு ஒரு துன்பம் வந்தபோது தான் தன் தந்தையை தானே நாடினோம் என்று தான் அவள் யோசித்தாள்.. தன் மகளும் அவனை தேடி இருக்கிறாளே என்பது அவனுடனேயே ஒட்டிக்கொள்வதிலேயே தெரிகிறதே..
தன்னுடைய வீண் பிடிவாதத்தால் அவளது எதிர்காலம் பாழாவதை அவளால ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. ரியோ ஒன்றும் தன்னை ஏமாற்றி விடவில்லையே.. அவன் கெட்டவனோ இல்லை வேறு காரணங்களோ எதுவும் இல்லையே அவனை வேண்டாம் என்று கூற..அவனது அப்போதைய சூழ்நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தானே நடந்திருப்பார்கள்.. சிறுவயது முதலே கூடவே இருந்த நண்பனைதானே முதலில் நம்பத்தோன்றும்.. அதிலும் உயிர்போகும் நேரம் ஒருவன் பொய் பேசுவான் என யாராலும் நம்ப முடியாதே..
அதைத்தானே ரியோவும் செய்தான் வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லையே.. இன்று உண்மை உணர்ந்து தன்னையும் மகளையும் தானே தேடி வந்து உள்ளான்..
தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்கிறானே.. அதை மன்னித்து ஏற்றுக்கொள்வது தானே நம் மனிதபண்பு..
அவனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைப்பதில் அவளுக்கு சிறு தயக்கம் இருந்தாலும் எல்லாம் ஒருநாள் மாறும் என்று நம்பினாள் தேஜுஶ்ரீ.. அவளது நம்பிக்கைத்தான் இன்று அவனோடு போக சம்மதிக்க வைத்தது.. இருந்தாலும் அவனை முழுதாய் ஏற்கவும் மனம் விரும்பவில்லை தன்னை நம்பவில்லையே என்ற ஆதங்கம் அவளுக்கு ஒரு ஓரமாய் இருந்து கொண்டே தான் இருந்தது..
இதெல்லாம் யோசித்தபடி உணவை உண்டவளை எதுவும் கேட்காமல் சாப்பிட்டவன்..
“கிளம்பலாமா ஶ்ரீ?” என்று கேட்க.. நீண்ட நாள் கழித்து அவனது ஶ்ரீ என்ற அழைப்பு அவளுக்கு ஏதோ செய்ய ‘ம்ம்’ என்று தலையை மட்டும் ஆட்டினாள்..
“பேபியோட திங்க்ஸ்” என்று நிதின் கேட்க..
“நாங்க வாங்கிக்கிறோம்” என்றான் ரியோ..
“பொருள்லாம் விக்குற விலை தெரியுமா உங்களுக்கு? அசால்ட்டா வாங்கிக்கிறோம்னு சொல்றீங்க?” என்று தேஜு கோவமாய் கேட்க.. அதிர்ந்த ரியோட்டோ..
“ஶ்ரீ.. நா..நான் அப்படி சொல்லல.. இத்தனை நாள் தான் நம்ம பேபிக்கு நான் எதுவும் வாங்கல இப்பவாச்சும் வாங்கலாம்னு தான் நினைச்சேன்” என்று அவன் இழுக்க..
“ம்ம்க்கும் நல்லா நினைச்சீங்க..அவளுக்கு அவ பொம்மைலாம் வேற யாராவது தொட்டாகூட கோவம் வரும்..யாருக்கும் கொடுக்கமாட்டா..அது இல்லாம இருக்கவும் மாட்டா” என்றாள் தேஜு..
“ஓஓஓ…ஓகே..சாரி..போய் எடுத்துட்டு போலாமா?” என்று கேட்க..
“ம்ம்..” என்றாள்.. இவர்களது இந்த உரையாடலை எல்லோரும் புன்னகையோடு பார்த்துக்கொண்டு இருந்தனர்..
“வீட்டுக்கு போய்ட்டு சாப்பிட்டு கிளம்பலாம்.. நல்ல நேரம் பார்த்து அனுப்புறேன்” என்றான் நிதின் சரியென ரியோட்டோ மண்டையை ஆட்ட அதனை பார்த்தவள் தலையும் தானாய் ஆடியது..
மகளை பாந்தமாய் தூக்கி தன்னுள் வைத்துக்கொண்டவன் அவளோடு உரையாடி அவளை பேசவைத்து என தனி உலகில் சஞ்சரித்தான்..
அதன்பின் ஏற்பாடுகள் உடனே துவங்கியது.. இருவரையும் வரவேற்க தடபுடலாக ஏற்பாடு செய்திருந்தான் நிதின்.. வீட்டுக்கு வாசலில் நிற்கவைத்து இருவருக்கும் ஆரத்தி எடுத்த நிதினின் மனைவி இருவரையும் வரவேற்க அதை ஏற்றவர்கள் உள்ளே சென்றனர்..
அவர்களுக்கு வரவேற்பு பானம் அளிக்கப்பட்டது.. அதற்குள் அருந்ததி ஷ்ரத்தா நிலவினி எல்லாம் சேர்ந்து சாச்சியின் துணிமணி பொம்மைகள் என பேக் செய்தனர்.. ஆனால் தேஜுவின் பொருட்கள் எதையும் எடுத்து வைக்கவில்லை.. வேண்டும் என்றே விட்டுவிட்டனர்..
அதன்பின் உணவருந்திய இருவரும் கிளம்ப சாச்சியின் பொருட்கள் எல்லாம் மூன்று சூட்கேஸ்களில் ஏற்ற அது தனதும் சேர்த்தே என நம்பி கிளம்பிவிட்டாள் தேஜுஶ்ரீ..
அவர்களை கண்களில் ஆனந்த கண்ணீரோடு வழியனுப்பினர் நிதின் தம்பதியினர்..
இவர்களின் சம்பிரதாய சடங்குகள் ரியோட்டோவிற்கு மிகவும் பிடித்து இருந்தது.. அதனால் எதையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டவன் கிளம்பிய சிறிது நேரம் தேஜு எதுவும் பேசாமல் அமைதியாய் வர.. அவளை என்ன சொல்லி பேச வைப்பது என்றும் புரியாமல் அமைதியாகவே வந்தான்.. தோளில் தூங்கும் தன் மகளை தாங்கியபடி.. இதைவிட வேறு என்ன சந்தோஷம் வாழ்வில் கிடைத்துவிட போகிறது..
என்ன மேதா கொஞ்சம் முன்னாலேயே எனக்கு இவளது தங்கை என தெரிந்து இருக்கலாம்.. அப்போதே தன் மனைவியையும் மகளையும் வந்து சேர்ந்து இருப்பேனே.. என எண்ணியபடி வந்தான்..
வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் அவள் இறங்க.. அங்கும் இருவருக்கும் ஆரத்தி எடுக்கப்பட்டது.. பார்த்தால் ஹர்ஷத் நின்றிருந்தான்..
இதெல்லாம் தம்பியின் ஏற்பாடு என உணர்ந்த ரியோட்டோ அவனை எங்கே என கேட்க..
“சார் ஹோட்டல்ல இருக்காரு சார் உங்க திங்க்ஸ்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்..அரேஞ்ச் பண்ண சொல்லிட்டேன்.. மேடமோடதும் பேபியோடதும் ஆள் இருக்காங்க அரேஞ்ச் பண்ணிடுவாங்க..” என்று கூற..
பெட்டியை எடுத்தவளிடம் வேலையாட்கள் வாங்கி கொள்ள இருவரும் அந்த புது வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தனர்..
உள்ளே சென்றதும் அவனது அறையை காட்டியவன் அதில் உடமைகளை எடுத்து வைக்க சொல்ல பெட்டியை திறந்தவளுக்கு அதிர்ச்சி தான்..அவளது உடைகள் ஒன்றில்கூட இல்லை..
உடனே கோவமானவள் ஷ்ரத்தாவிற்கு ஃபோன் செய்து கத்தினாள்..
“என்னடி பண்ணி வெச்சு இருக்கீங்க? எல்லாம் அவளோட திங்கஸ் மட்டும் இருக்கு என்னோடது எங்கே?” என்று அவள் கோவமாய் கத்துவதை கேட்டவன் உள்ளே ஓடிவந்தான்..அவள் ஸ்பீக்கரில் ஃபோன் பேசிக்கொண்டு இருந்ததால் அவனுக்கும் கேட்டது
“அதுவாக்கா..மாம்ஸ் பாப்பாக்கு வாங்கிதர்றேன் னு சொன்னாரா எந்த பாப்பாக்குனு சொல்லல..அதனால உனக்கு வாங்கி தருவாருனு நாங்க உன்னோட திங்க்ஸ் எதையும் எடுத்து வைக்கல.. மாம்ஸ்கிட்ட கேளு வாங்கி தருவாரு” என்றாள் அருந்ததி இடையே புகுந்து.. அதை கேட்டு ஷ்ரத்தா சிரிக்க.. தேஜுவோ கோவமானாள்..ரியோட்டோவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது.. நல்லவேளை அவளது பின்னால் நின்று இருந்ததால் அவளுக்கு தெரியவில்லை..
“அடியே அருந்ததி.. அவரு எப்போடி என்னை பாப்பானு சொன்னாரு? நேர்ல வந்தேன் நீ காலிடி.. உன்னை கடல்ல கரைச்சுடுவேன்..” என்று அவள் கோவமாய் திட்ட
“ஆமா..உன்னையும் பேபிங்குறாரு உன்ற புள்ளையையும் பேபிங்குறாரு.. ரெண்டுல எது பேபினே தெரியல.. பேபினா பாப்பாதானே ஷ்ரத்தாக்கா?” என்று அவள் விளக்க..
“ஆமா அரூ பேபி” என்றாள் ஷ்ரத்தா.. இருவரும் ஹைஃபை அடித்துக்கொண்டனர்..
தலையில் அடித்துக்கொண்ட தேஜுவோ
“ஏன்டி இப்போ மாத்திக்க ஒரு செட் டிரஸ்ஸாவது எடுத்து வெச்சு இருக்கலாம்ல? இப்போ நான் எதைடி போடுவேன்?” என்றாள் பரிதாபமாய்..
“அத உன் புருஷன்கிட்ட கேளு? ரெனி ஃபேஷன்ஸ் ஓனருக்கு ஒரு துணி இல்லையா? ஹையகோ.. இதென்ன அநியாயம்?” என்று அருந்ததி பேச
“ஃபோன வைடி..உன்ன நாளைக்கு கவனிச்சுக்கறேன்..கடுப்பு ஏத்தாதே” என்றபடி ஃபோனை வைத்தவள் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள்..
வெளியே போன ரியோட்டோ ஹர்ஷத் உதவியுடன் சிறிது நேரத்திலேயே ஒரு துணிக்கடையையே அவர்களது அறைக்குள் கொண்டு வந்தான்.. அதை பார்த்தவள் அதிர்ந்து எழுந்து நின்றாள்..
“என்ன இது? எதுக்கு இவ்ளோ டிரஸ்ஸஸ்?” என்றாள் தேஜு..
ஹர்ஷத் குழந்தையை தூக்கி கொண்டு வெளியே செல்லும்வரை வெயிட் செய்தவன்
“நீ அரூ பிரின்ஸஸ்கிட்ட பேசினதை கேட்டேன்..அதான் நம்ம மேத்ராஷ் ல இருந்து கலெக்ஷன்ஸ்ஸ எடுத்துட்டு வர சொன்னேன் பேபி” என்று கூற..
அவனை முறைத்தவள் “அதுக்கு இங்க எதுக்கு கடையை ஓபன் பண்ணீங்க? ஒரு நாலு டிரெஸ் எடுத்துட்டு வந்தா போதாதா? இவ்ளோவா கொண்டு வருவீங்க?” என்றாள்.. திருதிருவென முழித்தவன்
“அது அதுவந்து பேபி.. நீ..நீ டிரெஸ் இல்லனு சொன்னியா அதான் உனக்கு எது தேவையோ அதை நீயே செலெக்ட் பண்ணிப்பனு எடுத்துட்டு வந்தேன்” என்று கூற.. அவனை முறைத்தவள்..
“எல்லாம் அந்த ஷ்ரத்தா அருந்ததியால வந்தது அவளுங்கள போய் வெச்சுக்கிறேன்..சும்மா பார்த்துட்டு நிக்காதீங்க வந்து செலெக்ட் பண்ண ஹெல்ப் பண்ணுங்க” என்று கூற
“ஐயம் ஆல்வேய்ஸ் அட் யுவர் சர்வீஸ் பேபி” என்றதும் கோவம் கொண்டவள்
“சும்மா பேபி பேபினு சொல்லாதீங்க கொன்னுடுவேன்” என்றபடி கோவப்பட..
அதிர்ந்து வாயின்மேல் விரலை வைத்துக்கொண்டவன் அமைதியாக உடைகளை பார்வையிட்டான்..
அவள் அரைமணி நேரம் பார்த்து ஒரே ஒரு உடையை தான் செலெக்ட் செய்தாள்.. அவள் தேர்வு செய்து முடித்ததும் ரியோட்டோ அதையெல்லாம் ஒரு பார்வையிட்டவன் கடகடவென நாலைந்து செட் துணிகளை அவளுக்கு செலெக்ட் செய்து விட்டான்.. அனைத்தும் பார்க்க ஆடம்பரம் இல்லாமல் அதே நேரம் அழகாக இருந்தது..
‘இவ்ளோ நேரம் இதெல்லாம் நம்ம கண்ணுல படலையே..ம்ம்..பரவாயில்லை நல்லாதான் செலெக்ட் செய்யுறான்’ என்று அவள் பெருமிதம் கொள்ள..
“உனக்கு இதெல்லாம் செட் ஆகும்னு தோணுச்சு பேபி..அதான் எடுத்தேன்..உனக்கு பிடிச்சா போடு இல்லனா நீயே வேற சூஸ் பண்ணு” என்று கூற.. முறைத்தவள்
“இதுவே நல்லாதான் இருக்கு..சிம்ப்ளி சூப்பர்ப்” என்றவள் அதற்கு தேவையான பொருட்களையும் தேர்வு செய்தவள் தனக்கான அலமாரியில் அடுக்க ஆரம்பித்தாள்..
“நா..நான் போய் பேபிய தூக்கிட்டு வர்றேன்..நீ டிரெஸ் சேன்ஞ் பண்ணிக்க” என்றுவிட்டு வெளியே சென்றவன் ஹர்ஷத்திடம் பேசியபடி குழந்தையை வாங்கியவன் ஆராஷியை பற்றி விசாரித்தான்.. அவன் நடந்து கொண்டதை கூறிய ஹர்ஷத் அவன் பேசியதையும் கூறினான்..
அதை கேட்டவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு
“எல்லாம் சரியாகனும்” என்று விட்டு அவனை ஆராஷியோடு இருக்கும்படி அனுப்பியவன் அவனது தோளில் தூங்கிய குழந்தையை தூக்கிக்கொண்டு ரூமிற்குள் சென்றான்..