அத்தியாயம் -30
வெளியே வந்த மருத்துவர் அவனுக்கு உடனே இரத்தம் ஏற்ற வேண்டும் ஆனால் அதையும் அவரது உடல் ஒத்துழைத்தால்தான் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கமுடியும் என்று கூறியவர் கூடவே இன்னொரு விஷயமும் சொன்னார்.. அவரது தாய் அல்லது தாய் போல அவரை பார்த்துக்கொள்ளும் பெண் அவரிடம் நல்ல தைரியமான வார்த்தைகளை பேசினால் அவரது மனம் மாறி மருத்துவத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க வாய்ப்பு உள்ளது.. ஏனெனில் அவரது வாயிலிருந்து வந்த ஒரே வார்த்தை அம்மா தான் என்று கூற..
ரியோட்டோவிற்கு என்ன செய்வது என்றே விளங்கவில்லை.. டாக்டர் கூறியதில் மனம் உடைந்து போன மேதா மேலும் கலங்கி நின்றாள்..
உடனே யோசனை வந்தவளாய் ரியோட்டோவை உலுக்கினாள்..
“சார்.. உடனே அவரோட அப்பாக்கு ஃபோன் செஞ்சு அவங்க அம்மாவை கூட்டிட்டு வர சொல்லுங்க” என்று கூற..
“அவனோட அம்மா அவனோட சின்ன வயசுலேயே இறந்துட்டாங்கடா.. இப்போ இருக்குறவங்க அவனோட சித்தி.. அவங்களுக்கும் இவனுக்கும் ஏதோ பிரச்சினை டா அதான் இவனை தனியா கூட்டிட்டு வந்துட்டார் அப்பா” என்று கூறியவன் வருந்த..
“அவங்களும் ஒரு அம்மா தானே சார் இப்படி ஒரு நிலமைனு எடுத்து சொன்னா கண்டிப்பா வருவாங்க.. ப்ளீஸ் பேசுங்க” என்று கூற..
அவனும் மொபைலை எடுத்து அவனது அப்பாவிற்கு டையல் செய்ய அவரே அவசரமாய் ஓடி வந்தார்..
“ரியோ..ஆரா?” என்று கேட்டபடி வர.. அதுவரை அமைதியாய் இருந்தவன் ஓடிச்சென்று அவரை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டான்..
“அப்பா” என்றபடி அவரை கட்டிக்கொண்டு அழுதவன் டாக்டர் கூறியதை கூற அவரோ
“அவதான் அவனை கொல்ல பார்க்குறதே அவளாவது வர்றதாவது” என்று கோவமாய் பேசியவர் அருகில் கலங்கியபடி நின்ற மேதாவை பார்த்தார்.. மாஸ்க் அணிந்து இருந்ததால் அவளது கலங்கிய கண்கள்தான் அவருக்கு தெரிந்தது..
“ரியோ.. யார் இந்த பொண்ணு.. இவள அவனோட அம்மா மாதிரி பேச வைக்கலாம்ல?” என்று கேட்க..
அதிர்ந்த மேதா
“நோ.. என்னால அவர.. முடியாது..ப்ளீஸ்” என்று கலங்கிய கண்களோடு பேச..
“ப்ளீஸ் மா.. அவனுக்கு அவன் அம்மானா புடிக்கும்..அவ அம்மா என்ன சொன்னாலும் கேட்பான்..ஆனா என் செகென்ட் வைஃப் க்கு அவன புடிக்கல.. அவனை கொல்ல பார்க்கிறா.. அவ இப்போ உதவி கேட்டாலும் செய்ய மாட்டா.. நீ கொஞ்சம் உதவி பண்ணுமா” என்று அவர் கேட்க..
சிறிது தயங்கியவள்..
சரியென தலையாட்டியபடி டாக்டரின் அனுமதியோடு உள்ளே சென்றாள்..
உள்ளே அவனுக்கு செயற்கை சுவாசம் செலுத்தப்பட்டு அவனது கையில் கட்டு போட்டு இரத்தப்போக்கை கட்டுப்படுத்த முயற்சி மும்முரமாக நடந்து கொண்டு இருந்தது.. ஒரு முடிவோடு பெருமூச்சை விட்டவள் வடிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு அவனது அருகில் சென்று
நின்றவள் அவனது காயம்படாத கையை எடுத்து தன் கைக்குள் புதைத்தவள்..
“ராஷி.. ராஷி.. நா..நான் பேசுறது உங்களுக்கு கேட்குதா? இப்போ என்ன நடந்துடுச்சுனு நீங்க சாக நினைக்கறீங்க..எதையுமே சாதிக்காம உங்கள எதிரியா பார்க்குறவங்களுக்கு நீங்க கோழைனு நிரூபிக்க போறீங்களா? இல்ல நீங்க நல்ல நடிகர் நல்ல பாடகர் அப்படினு சாதிச்சு காட்ட போறீங்களா?
எ..என்னோட ராஷி எதையும் எதிர்த்து சாதிக்க பிறந்தவர் சாதிக்காம சாக மாட்டார்.. உங்க அம்மாக்கு நீங்க உங்க திறமை மூலம் பேர் வாங்கி கொடுக்கனும்.. அதுதான் உங்கள வீழ்த்த நினைக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்கிற பதிலடி..
உங்க அம்மா.. எப்பவும் உங்ககூட தான் இருக்காங்க..
எப்பவும் உங்களை ஒருத்தர் கவனிச்சுட்டு தான் இருக்காங்கனு நினைச்சு நடிக்கனும் பாடணும்..அதுதான் நீங்க முன்னேற வைக்கும்.. எதை பத்தியும் கவலைபடாம கஷ்டப்பட்டு முன்னேற பாருங்க.. உங்க அம்மாக்காக இதை செய்வீங்களா? மருத்துவத்துக்கு ஒத்துழைப்பு கொடுப்பீங்களா?” என்றபடி அவனது கையை பிடித்தபடி பேசிக்கொண்டு இருந்தவள் சட்டென அதிர்ந்து அவனை பார்த்தாள்.. சுயநினைவு இன்றி இருந்தவனின் கைகள் அவளது கையை அழுத்தம் கொடுத்து லேசாக கண்களை திறந்து பார்த்தவன் அவளின் கலங்கிய கண்களை பார்த்ததும் மயங்கி போனான்..
“டாக்டர்.. டாக்டர்” என்று மேதா அழைக்க..உள்ளே ஓடிவந்த டாக்டர் உடனடியாக அடுத்தடுத்த சிகிச்சையை ஆரம்பிக்க.. மேதா வெளியே வந்து நின்றாள்..அடுத்ததாக அவனது வகை இரத்தம் உடனடியாக தேவைபடுகிறது ஹாஸ்பிடலில் அவ்வகை இரத்தம் இல்லை என்றும் உடனே இரண்டு பாட்டில் ஏற்பாடு செய்யும்படியும் கூறிவிட்டனர்..
அவனது இரத்த வகையை கேட்ட மேதா உடனே தானும் அதே வகை தான் உடனே எடுத்துக்கொள்ளும்படி கூறினாள்..
அவளது இரத்தம் டெஸ்ட் செய்யப்பட்டு உடனே எடுத்து ஆராஷிக்கு ஏற்றப்பட்டது..
ஆராஷியின் தந்தைக்கு அவளை பார்த்து ஆச்சரியம் தான்..
தன் மகனுக்காக தான் துடிப்பது நியாயம்தான் ஆனால் இவள் துடிப்பது எதனால்..அப்படி ஒன்றும் அவன் பெரிய ஆள் இல்லையே என்ற எண்ணம்தான் அவருக்கு..
ஒருவேளை ஆராஷியும் இவளும் காதலிக்கின்றனரோ என்று எண்ணியவர் அதை ரியோட்டோவிடமும் விசாரிக்க..
அவனுக்கே இது காதலா? ஈர்ப்பா? என்று உறுதியாக தெரியாத நிலையில் இதை சொல்ல அவனுக்கு விருப்பம் இல்லை.. அதனால் அவள் தன் தோழிதான் இருவருக்கும் இதுவரை எந்த பழக்கமும் இல்லை என்று விட்டான்..
இருந்தாலும் ஆராஷியின் தந்தைக்கு ஒருபுறம் சந்தேகம் இருந்துகொண்டேதான் இருந்தது.. ஆனால் அப்போது அதை பற்றி மேலும் பேசவேண்டாம் என விட்டுவிட்டார்..
அவளது பேச்சும் அவளது இரத்தமும் ஒன்றாக வேலை செய்து அவனது மரணநேரத்தை ஒதுக்கிவைத்துவிட்டு மருத்துவத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்தது அவனது உடல்..
இரண்டு நாட்கள் கழித்து அவனது உடல்நலம் தற்போது பரவாயில்லை என்று மருத்துவர் கூறிய பின்னரே அவளுக்கு உயிர் வந்தது..
அதன்பின் அவளை அவன் பார்க்கவே இல்லையே..எப்படி கண்டுபிடிப்பது என்று எண்ணியபடி உலா வந்தவனுக்கு தன் பி.ஏ வாக இருந்தவள்தான் தன்னவள் என்ற உண்மை தெரியவர அருகில் இருந்த மாணிக்கத்தை தானே குப்பையில் கொட்டி விட்டதாய் எண்ணி மனம் நொந்து போனான்..
அவளையும் நெருங்கமுடியவில்லை.. அவளுக்காக தான் ஆசையாய் வாங்கிய பெண்டன்ட்டும் காணவில்லை..
இதையும் ரகசியமாக போலீஸிடம் சொல்லலாம் ஆனால்.. உயிரை மீண்டும் காத்தவள் அதே மேதாவாக இருந்தால்.. இல்லை.. உயிரை காத்த ஏதோ ஒரு பெண்ணுக்கு தான் வழங்கிய பரிசு என அந்த பெண் எண்ணி எடுத்துக்கொண்டால் திரும்ப கேட்பது நியாயம் ஆகுமா? அதனாலேயே அதைப்பற்றி அவன் யோசிக்கவே இல்லை..
இருவரும் ஒருவராக இருந்தால் என்ன என்று அவன் மனம் எண்ண ஆரம்பித்து விட்டது..
நினைவுகளில் இருந்து மீண்டவன் எப்படியாவது இருவரையும் கண்டுபிடித்தே ஆகவேண்டும்.. அதிலும் தன்னிடம் ஏதும் இல்லாதபோது தன்மேல் நம்பிக்கை வைத்து அவள் இரத்தத்தை கொடுத்து தன்னை காப்பாற்றியவள்.. அவளிடம் தன் அன்னையின் அன்பை உணர்ந்தான்.. அவளை முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணியபடி அடுத்த வேலைகளை செய்ய தயாரானான்..
அவனை காப்பாற்றியவளோ இரண்டு நாட்கள் ஷர்மாவை பதறவைத்து கண்விழித்தாள்..
அவளது அண்ணனுக்கு தெரியாமல் இதை மறைப்பதே அவனுக்கு பெரும்பாடாய் ஆனது..
அவள் ஆய்வுகூடம்உள்ளே இருப்பதாகவும் அதனுள்ளே மொபைல் அனுமதி இல்லை என்றும் சொல்லியே சமாளித்தான் இரண்டு நாளும்.. இது வழக்கமாக நடக்கும் என்பதால் நிதினும் அதை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை..
கத்தி சிறிது ஆழமாய் இறங்கி இருப்பதாலும் அதில் ஸ்லோ பாய்ஸன் தடவி இருந்ததாலும் கற்பபையும் சேர்த்து பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று கூறிவிட்டனர்.. அதனால் முழுமையாக மூன்று மாதங்கள் ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லிட்டாங்க..
ஆனால் அவள் செய்த அமர்ககளத்தில் அவளை ஒரு மாதத்திலேயே டிஸ்சார்ஜ் செய்வதாக கூறிவிட்டனர்..
அதன்பின்னரே ஷர்மாவின் உதவியோடு தன் அண்ணனை சமாளித்தாள்..
அதன்பின் அண்ணனிடம் எல்லா விவரங்களையும் சேகரித்து கொண்டாள்..
அப்போது அவளை கவனிக்க ஷர்மாவின் தாயும் தந்தையும் சேர்ந்து கண்மணியை அனுப்பி வைத்தனர்..
ஒரு மாதத்திற்குள் தன்னை நலமாக இருப்பது போல காட்டிக்கொண்டு இந்தியா புறப்பட தயாரானாள் மேதா..
அவளை அதுவரை பத்திரமாய் பார்த்துக்கொண்ட ஷர்மா..
“உன்ன கண்டிப்பா மூனு மாசம் ரெஸ்ட் எடுக்கனும்னு சொன்னா இப்படி ஓடனும்னு சொல்றியே பேபி?.. உன் ஹெல்த் என்ன ஆகுறது..எனக்கு உன்ன அனுப்பவே புடிக்கல பேபி..நான் அரேஞ்ச் பண்ண ஆளே அந்த வேலையை பார்க்கட்டுமே..நீ உடம்ப பார்த்துக்க பேபி”
என்று அவளிடம் கெஞ்சுதலாய் கேட்டான்