Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17

அத்தியாயம்-17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   பிரஷாந்த் முன்னே பாரதி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
   இதே போல பேச வந்து திரும்பியதன் விளைவு, இன்று பாரதி வாழ்க்கை ஊஞ்சலாடிக் கொண்டுள்ளது.

  அன்று எதிர்பார்ப்பும் ஆர்வமுமாய் கலந்து வெட்கத்தோடு எதிர்கால துணையென்று பேசியது. இன்று மௌனமாய் அமர்ந்திருக்க பிரஷாந்தே ஆரம்பித்தான்.

“எப்படியிருக்க பாரதி?” என்று நலம் விசாரித்தான்.

“நல்லாயிருக்கேன்னு சொல்லற அளவுக்கு சில கசப்பை மறக்க மெனக்கெடறேன். ஐ ஹோப்.. என் சம்பந்தமில்லாம நடந்த நிகழ்வு என்பதால, என்னால மறக்க முடியும்.” என்றாள் தைரியமாக.

  பிரஷாந்தோ பாரதியை ஆச்சரியமாக பார்த்து, “சில நேரம் நமக்கு நம்ம பெற்றவர்கள்  வைக்கிற பெயருக்கு நியாயம் சேர்க்குற விதமா, நம்ம செயல்கள் அமையும். அந்த விதத்தில் பாரதி என்ற பெயர் உனக்கு கனகச்சிதமா இருக்கு” என்று பாராட்டினான்.

   “தேங்க்ஸ்… உங்க பாராட்டு பத்திரத்தை கேட்க நான் வரலை. எதுக்கு என்னை பார்த்து பேசணும்னு சொன்னிங்களாம். அப்பா அம்மா சொன்னாங்க. என்ன காரணம்னு சொல்லுங்க. கேட்டுட்டு போறேன்” என்றாள்.

பிரஷாந்த் தலைகுணிந்து, “வீட்ல அந்த பொண்ணுக்கு என்னடா குறைச்சல்? ஏன் வேண்டாம்னு சொல்லறனு ஒரே டார்ச்சர்.
நானும் உன்னை பத்தி எதுவும் சொல்லாம தவிர்க்கறேன். முடியலை… அம்மா தான் ‘பாரதி வீட்டுக்கு ஒரே பொண்ணு. அழகா லட்சணமா இருக்கா. நல்லா படிச்சிருக்கா. நல்ல வேலையில் இருக்கா. நல்ல சம்பளம்‌. சத்தமா பேசாதவளா, வீட்டுக்கு ஏத்த குத்துவிளக்கா தெரியறா? பட்டிக்காடு போலவும் இல்லை. அதே போல மாடர்னாவும் இருக்கா. வசதி வாய்ப்புனு பார்த்தா கூட நம்மள மாதிரி இருக்கானு சொல்லிட்டே, ஏன் வேண்டாம்னு சொல்லறனு காரணம் கேட்கறாங்க. வேற பொண்ணை பாருங்கன்னு சொல்லியும், வேற வரனை பார்க்க மாட்டேங்கறாங்க.” என்று கூறினான்.

பாரதியோ, “ரொம்ப இம்சை படுத்தினா என்னை ஒருத்தன் என் அனுமதியில்லாம கெடுத்துட்டான்னு சொல்லிடுங்க பிரஷாந்த். அதுக்கு பிறகு எப்பேற்பட்ட நல்ல பொண்ணா இருந்தாலும் உங்க அம்மா என்னை தான் மணக்கணும்னு போர்ஸ் பண்ண மாட்டாங்க.” என்றதும் பிரஷாந்த் அவளையே பார்த்தான்.

  “என்னால சொல்ல முடியலை பாரதி.” என்றான்.‌

  பாரதிக்குள் இத்தனை நல்லவனா? என்று ஆச்சரியம் கூடியது.
  ஆனால் பிரஷாந்தோ அடுத்த நிமிடமே, “இரண்டு வருஷம் முன்ன வேலை செய்த ஆபிஸ் மூலமா மலேசியாவுக்கு போனேன். அங்க ஒரு கிளைன்ட் மீட்டிங் இருந்தது.  என் ஆபீஸ் கேர்ள்ஸ் கூட வந்தாங்க. எங்க டீம் ஒரு ஏழு பேரு.
அங்க நானும் என் கூட வந்த பொண்ணும், ஒன்நைட் ஷேர் பண்ணிக்கிட்டோம்.” என்றுரைத்தான்.‌

பாரதிக்கு ஏதோ விளங்கியது ஆனாலும் ‘என்ன ஷேரிங்?” என்றாள்.
“நானும் அவளும் மியூட்சுவலா ஒன்னா இருந்தோம். பட் சென்னை வந்தப்பிறகு நான் அவ இரண்டு பேருமே அவங்க அவங்க வேலையில் கவனம் செலுத்தினோம். நடந்ததை பெருசா எடுத்துக்கலை.
  இந்த இடைப்பட்ட இரண்டு வருஷத்துல புது ஆபிஸ் வேற. அதுக்கு பிறகு  நான் அவளை சந்திக்கலை.
  சொல்லப்போனா அந்த நாளை நான் மறந்துட்டேன்.‌ இப்ப உன்னோட வாழணும்னு பெரிய கனவு கண்டேன். நீ உன் பெண்மையை இழந்ததும் அதை கேட்டு கொஞ்சம் அப்செட். இந்த இடைப்பட்ட நாளில் அம்மாவும் வேற பொண்ணை பார்க்க தயங்கறாங்க. எனக்கும் உன்னை மறக்க முடியலை. நீயும் மனசுல ஓடிக்கிட்டே இருந்த.
  நான் முன்ன செய்த தப்பு நினைவு வந்துச்சு. நானாவது தெரிந்து தப்பு பண்ணினேன். ஆனா உனக்கு நிகழ்ந்தது… நீ… நீயா தப்பு செய்யலை. அதோட நீ அதிலிருந்து மீண்டு வர. சோ… எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோனுது. நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமே” என்றான்.‌

பாரதியோ அனல் கக்கிய மூச்சுடன், “நீங்க என்னை வேண்டாம்னு போனப்ப கூட எனக்கு உங்க மேல மரியாதை இருந்தது பிரஷாந்த். ஆனா இப்ப நீங்க பேசியதை கேட்டா எனக்கு கோபமா வருது.” என்றாள்.

பிரஷாந்தோ தானாக வந்து கல்யாணம் செய்ய சம்மதித்தால் எப்படியும் பாரதி நன்றி கூறி அகமகிழ்வாளென்று எண்ணினான்.‌ ஆனால் ஏன் இப்படி பேசுகின்றாளென விழித்தான்.

“ஏன் பிரஷாந்த்… இதே முதல்ல காபி ஷாப்ல சந்திச்சோமே. அப்ப நீங்க, ஒரு பொண்ணோட இருந்ததை என்னிடம் ஏன் சொல்லலை?” என்றாள் பாரதி.

பிரஷாந்தோ “அது அப்ப தேவையில்லாத பேச்சுனு நினைச்சேன். வீணா குழப்பம் வரும்னு.” என்று கூறினான்.‌

“இப்ப ஏன் சொன்னிங்க?” என்றதும், “இல்லை… முதல்ல வேண்டாம்னு போனதும் இப்ப யோசிச்சேன் இல்லையா.. என் தப்புக்கும் உன்னோட மைனஸுக்கும் பேலன்ஸ் ஆகிடும். சோ… என்னால உன்னை ஏத்துக்க முடிந்தது. அதோட நானும் உன்னை போல ஹானஸ்டா என் மலேசியா ட்ரிப் சொல்லிட்டேன்.” என்றான் இலகுவாக.

“வேண்டாம் பிரஷாந்த… நமக்குள் கல்யாணம் வேண்டாம். தயவுசெய்து பேசிபேசி இருக்கற நன்மதிப்பை இழந்துடாதிங்க.” என்று எழ முற்பட்டாள்.

“ஏன் கல்யாணம் வேண்டாம்? நான் ஹானஸ்டா தானே இருக்கேன்.” என்றான் பிரஷாந்த்

“இல்லை பிரஷாந்த் நீங்க ஹானஸ்டா இல்லை. மலேசியா ட்ரிப் பத்தி நீங்க முதல்ல சொல்ல உங்களுக்கு வாய் வரலை. ஏன்னா… அப்ப நீங்க மலேசியாவுல ஒரு பெண்ணிடம் நடந்துக்கிட்ட விஷயம் தப்புனு தெரியும். எங்க அதை சொன்னா நான் தப்பா எடுத்துப்பேனோனு பயந்திங்க. ஆனா இப்ப நான் கெடுக்கப்பட்டவனு தெரிந்ததும், இப்ப உங்க நேர்மையை விவரிச்சு, எனக்கு வாழ்க்கை பிச்சை தர நினைக்கறிங்க.
  ஏன்னா… நான் உங்க பார்வையில் எவனாலையோ கெடுக்கப்பட்டதால கேவலமா தோணவும், தியாகம் செய்யறிங்க.
  இந்த தியாகத்துக்கு நான் சந்தோஷமா நினைச்சி உங்களை கல்யாணம் செய்துக்கிட்டா, இந்த வாழ்க்கை எதுல நிறுத்தும் தெரியுமா?

  நம்ம இரண்டு பேரோட வாழ்க்கையிலும் அதோ… அந்த பொம்மையா உருவாக்கப்பட்ட கேக்கை பார்த்து ரசிக்கற மனநிலையில தள்ளும்.

  நாம மற்றவர் பார்வைக்கு அழகான தம்பதியரா, அன்னியோன்யமான தம்பதியரா தெரியலாம். ஆனா பொம்மை கேக் ருசியான உணவா இருக்குமா? சத்தியமா இருக்காது. காலம் முழுக்க, உங்களுக்கும் எனக்கும் இந்த வடு தான் நினைவிருக்கும்.
  இந்த வடுன்னு நான் சொல்லறது எது தெரியுமா? நான் கற்பிழந்ததையோ? இல்லை நீங்க ஒரு பொண்ணிடம் மியூட்சுவலா செக்ஸ் வச்சிக்கிட்டதையும் சொல்லலை.
  நீங்க நான் இந்த இரண்டு காரணத்தோட கட்டாயத்துல காம்பிரமைன்ஸ் பண்ணி தான் வாழறோம்ன்ற வடு மனசுல இருக்கும்.

  இது சரிப்பட்டு வராது பிரஷாந்த். உங்க தியாகத்துக்கு வேற பொண்ணை பாருங்க. மத்தவங்க பார்வைக்கு தான் கற்பை இழந்தேன்.
  என்னோட மைன்ட்ல, அந்த ரஞ்சித்தோட விரல் கூட என் மேல இன்னமும் ஏற்காத கற்புக்கரசியா தான் இருக்கேன்.” என்றாள்.

  பிரஷாந்தோ, அவள் சொல்ல வரும் விஷயம் புரிந்தவனாக மௌனமானான்.

  என்ன தான் மியூட்சுவலாக இவன் நடந்துக்கொண்டாலும் அவன் மற்றொரு பெண்ணிடம் நடந்துக்கொண்டதில் அவன் சம்மதம் இருந்தது. பாரதிக்கு நிகழ்ந்ததில் அவள் சம்மதம் எதுவுமில்லையே. அதை சுட்டிக்காட்டுகின்றாள்.

  பிரஷாந்த் டீகோப்பையை கீழே வைத்து, “இங்க பாரு பாரதி. நான் நல்லவன்னு என்னை காட்டிக்கலை. ஆனா என்னை கல்யாணம் பண்ணிக்கலாம். அது தப்பில்லையே. மேபீ… நம்ம வாழ்க்கையில பொம்மை கேக்கா சில நேரம் இருக்கலாம். அதுக்காக ருசிக்காத பண்டமா நாம இருக்க மாட்டோம். அந்த பொம்மை கேக்ல அடில கொஞ்ச லேயராவது இனிப்பும் கேக் பீஸும் இருக்கும் தானே?” என்றான்.

   பாரதியோ “சாரி பிரஷாந்த்… ஒருவேளை நீங்க முதல்ல பொண்ணு பார்க்க வந்தப்பவே இதை சொல்லியிருந்தா நிச்சயம் நான் உங்களை பாராட்டியிருப்பேன். ஹானஸ்டா இருக்கிங்கன்னு. ஆனா நீங்க என்ன சொன்னாலும் உங்க பேச்சுல தொக்கி நிற்பது என்ன தெரியுமா? நான் கற்பிழந்தவளா இருந்ததால இப்ப இதை ஷேர் பண்ணியிருப்பதா மட்டும் தான் என்னால பார்க்க முடியுது. அதர்வைஸ் உங்களை கல்யாணம் செய்ய என்னால முடியாது. உங்களைன்னு இல்லை. என்னால யாரையும் கல்யாணம் பண்ண முடியாது. எங்கப்பா அம்மா உங்களுக்கு ஏதாவது அழுத்தம் தந்து பேசி கெஞ்சி என்னை மணக்க கேட்டிருந்தா சாரி. நமக்குள் கல்யாணம் நடக்காதுனு தெளிவா புரிய வச்சிட்டு, உங்க அம்மாவிடம், என்னை பத்தி சொல்லணும்னாலும் ஓகே. இல்லை… நான் திமிர்பிடிச்சவ, உங்க டேஸ்டுக்கு ஒத்து போக மாட்டேன்னு வேற ஏதாவது காரணம் சொல்லிக்கிட்டாலும் உங்க இஷ்டம். அடுத்து வேற பொண்ணை பாருங்கன்னு தெளிவா எடுத்து சொல்லிடுங்க.” என்று கைப்பையை எடுத்துக் கொண்டு எழுந்தாள்.

    பாரதி அன்று போலவே எதிரே யார் இருக்கின்றார் என்று பாராது கடந்து போனாள். பாரதி எதிரே ரஞ்சித் இவர்கள் பேச்சை கேட்டவாறு சிலையாக நின்றியிருந்தான்.

  பிரஷாந்தோ போனை எடுத்து, “சாரி அங்கிள்.. நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தான் இருந்தேன். ஆனா பாரதி விடாப்பிடியா மறுக்கறா. என்னை மட்டும் இல்லை… அவ யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லறா. இதுக்கு மேல பாரதியிடம் கெஞ்ச என்னால முடியாது.
  நான் எந்த தப்பு பண்ணினாலும், இப்பவும் என்னை மணக்க பொண்ணுங்க இருக்காங்க. அது பாரதிக்கு அவ நிலைமை புரியலை. ஏதோ பாரதியை ரொம்ப பிடிச்சதேனு லாஸ்டா ஒரு முறை வந்தேன். பச்… செட்டாகலை.” என்றான்.

  மறுபக்கம் என்ன பேச்சு வார்த்தை நிகழ்ந்ததோ, “சாரி அங்கிள். இந்த முறை அம்மாவிடம் நான் ஏதாவது சொல்லி, வேற வரன் பார்க்க போயிடுவேன்.
  நாம இப்படியே இந்த சம்பவங்களை மறந்துடுவோம். பை அங்கிள்” என்று துண்டித்தான்.

  பிரஷாந்தோ தரகர் தந்த பாரதியின் புகைப்படத்தை கண்டு, ‘எவனாலையோ கெடுக்கப்பட்டும் பேச்சுல எத்தனை திமிரு. நான் என்ன தப்பு பண்ணினேன். மியூட்சுவலா ஒருத்தியோட இருந்தேன்னு ஹானஸ்டா ஷேர் பண்ணியதுல, ரொம்ப பண்ணறா. இவளையெல்லாம் கல்யாணம் பண்ணி வாழ்க்கை தரணும்னு நினைச்சேன். இதெல்லாம் தேறாத கேஸு. அவங்க அப்பாவே இவளுக்கு நிகழ்ந்ததை, மறைச்சி கல்யாணம் பண்ண பார்த்தப்ப அதையே மறுத்துட்டு, என்னிடம் பெரிய உண்மை விளம்பியா ஷேர் பண்ண நினைச்ச முட்டாள் பாரதி நீ.’ என்று புகைப்படத்தை கோபத்தால் போனிலிருந்து அழித்தான்.

  ரஞ்சித் பக்கத்து டேபிளில் அமர்ந்தவன் பிரஷாந்தின் பேச்சை கேட்டு, மெதுவாக எழுந்து வெளியேறினான்.

  நேற்று பாரதியை பின் தொடர்ந்து அவளது இருப்பிடத்தை அறிந்திருந்தான் ரஞ்சித். அதனால் பாரதியை நேரில் சந்திக்க அங்கு செல்ல முடிவெடுத்தான்.

  பாரதியின் வீட்டிற்கு செல்லும் தெருவுக்கு முந்தைய தெருவிலேயே தன் காரை நிறுத்தியிருந்தான். பாரதி இருக்கும் தெருவில் அவனது கார் நுழையாது. அதனால் மெதுவாக நடந்து வந்தான்.

சில இருப்பிடம் சிலருக்கான அடையாளம் என்பார்கள். அப்படி தான் அவ்விடம் பொருளாதாரத்தில் கீழ்மட்டத்தில் உள்ள மக்களின் இருப்பிடம் என்று ரஞ்சித்திற்கு புரிந்தது. இங்கு வந்து, ஏன் வாழ்கின்றாள் என்று அவன் மனம் வினாத்தொடுத்தது.
  
   அதை உருப்போட்டபடி, வர, ஆட்டோவிலிருந்து வந்த இரு முதியவரை கண்டான்.

பாரதி இருக்கும் வீட்டில் யார் நுழைவது. எல்லாம் மணிமேகலையும், சௌந்திராஜனும் தான்.‌
 வீட்டுக்குள் வந்ததும் வராததும் “பிரஷாந்த் உன்னோட விஷயத்தை மறந்து கல்யாணம் பண்ணிக்கறதா பேசியதுக்கு அவனை வேண்டாம்னு செல்லிட்டியாமே. ‘உங்களையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். வேற யாரையும் கல்யாணம் பண்ண மாட்டேன்’னு பேசினியாம். என்னடி நினைச்சிட்டு இருக்க?” என்று மணிமேகலை காய்ந்தார்.

   சௌந்திராஜனோ, “உனக்கு நடந்ததை மறந்து பெரிய மனுஷனா கல்யாணம் பண்ணிக்கறதா சொன்னார். அவரை போய் மறுத்துட்ட. பைத்தியம் பிடிச்சிடுச்சா பாரதி. முதல்ல ஹாஸ்பிடலுக்கு வா.” என்றார்.
  ஏனெனில் பாரதி திருமணத்தையே வேண்டாம் என்று‌ அல்லவா கூறிவிட்டாள்.

  “இங்க பாருங்கப்பா… அவர் என்ன சொன்னாருனு தெரியுமா?” என்று ஆரம்பிக்க, “என்ன சொன்னாலும் பரவாயில்லையே. உன்னை பார்த்துட்டு போனவனே, உன்னை பத்தி தெரிந்தவனே கல்யாணம் பண்ணிக்கறேன்னு‌ சொன்னான்ல. நீ ஏன் மறுத்த? நாம மறுக்கற இடத்துலயா இருக்கறோம்.” என்று கோபமும் ஆதங்கமாய் கேட்டார்.

  பாரதியோ “மறுக்கற இடத்துல இல்லையா? ஏன்ப்பா?” என்றாள்.

  சௌந்திராஜனுக்கு தலையிலடித்தா கொள்ளலாம் போல இருந்தது. மணிமேகலை அவர் அப்படி தான் அடித்து முடித்து அழுதார்.

“புரியாம பேசறியே. நீ எவனாலையோ நாசமானவ” என்று கூறவும், பாரதியோ “இல்லை… இல்லை… இல்லை. நான் சுத்தமா இருக்கேன். மனசால பரிசுத்தமா இருக்கேன். இதுக்கு தான் உங்களை விட்டு தள்ளி தள்ளி தனியா வந்தது.
  உங்க மனசுலமே நான் பரிசுத்தமா இல்லையென்ற கண்ணோட்டத்துல தான் பார்க்கறிங்க” என்று கத்தினாள்.

  பாரதி இப்படி கத்துவது இதுவே முதல் முறை. அவள் மென்மை குணமானவள் என்று தான் தாய் தந்தையர் கண்டது. இப்படி ஆக்ரோஷமாக கத்தி கூச்சலிடவும், சௌந்திராஜன் அரண்டார்.

  “தயவு செய்து வெளியே போங்க. நான் தனியா இருக்க விரும்பறேன். என் மனசை புரிந்துக்காம கல்யாணம் பண்ணிக்க சொல்லி டார்ச்சர் பண்ணாதிங்க. ஏதாவது டார்ச்சர் தந்தா நான் பிறகு தற்கொலை பண்ணிப்பேன். அப்பறம் ஒரேடியா கருமாந்திரம் தான் பண்ணணும்.” என்று கத்தவும் விமலா அனிதா இருவரும் வந்து எட்டி பார்த்தனர்.

  கடைசியாக பாரதி பேசியதை மட்டும் கேட்டுவிட்டனர்.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ். 

8 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-17”

  1. M. Sarathi Rio

    மட்கும் வாழ்வில், மட்காத காதல்…!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 17)

    அவளே பாவம், தான் செய்யாத தப்புக்கு, கெட்டுப்போனவள் என்கிற சிலுவை சுமந்திட்டிருக்காள். இதுல இவங்க வேற, சும்மா சும்மா
    கல்யாணம் கருமாந்திரம்ன்னு கடுப்பேத்திட்டிருக்காங்க.
    இவங்களுக்கு இவங்க கடமையை முடிச்சு தொலைச்சிடணும், ஆனா அதற்கான ஸ்பேசையோ டைமையோ தரவே மாட்டாங்க
    அப்படித்தானே…?

    இப்ப ரஞ்சித் எது க்கு ஃபாலோ பண்றான்…? இப்ப இவன் வேற வாழ்க்கைத் தரேன், மயிறுத் தரேன்னு ஸீனைப் போடப்போறான் அப்படித்தானே. அதாவது கெடுத்தவனையே குலசாமி ஆக்குவான்ங்க அதானே.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    Evlo thairiyama vanthu intha Prasanth pesuran avan mela thappu vachitu Inga vanthu thiyagam panra mari pesitu irukan yar keta thiyagatha . Appa amma oru support ah illanu tha thaniya vanthu iruka ipovum Inga vanthu kalyanam panikonu torture panranga avala purinjikama

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!