Skip to content
Home » 1. சுடரி இருளில் ஏங்காதே!

1. சுடரி இருளில் ஏங்காதே!

அந்த மருத்துவமனையின் வரவேற்பில் போடப்பட்டு இருந்த நாற்காலிகளில் அமர்ந்திருந்தவரோ, மஞ்சள் தாலி இடம் பெற்றிருந்த அவரது கழுத்தோ, தற்போது காலியாக கிடந்தது.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்களை எப்போது அழைப்பார்கள் என்று காத்துக் கொண்டு இருந்தார் தாட்சாயணி.அத்தோடு, தன் அருகிலிருந்த தனது இரண்டு மகள்களையும் கண்களில் வேதனை பொங்கப் பார்த்தார்.

அவர்களில் ஒரு பெண்ணுக்கு மட்டும் திருமணம் ஆகி இருந்தது. மற்றுமொரு பெண்ணிற்குக் கல்யாணம் செய்து வைக்கும் வயது தான்! ஆனாலும் அதைப் பற்றிய பேச்சை இப்போது தொடர முடியாத சூழ்நிலை அவருக்கு.

“மேம்! நீங்க மூனு பேரும் உள்ளே போகலாம்” என்று அவர்களை அறைக்குள் செல்லுமாறு கூறினாள் வரவேற்பறையில் இருந்தப் பெண்.“தாங்க்யூ மா” என்று அவளிடம் கூறி விட்டு உள்ளே போய், தன் மகள்கள் மற்றும் தனக்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொண்டு, அதற்குரிய பணத்தையும் கொடுத்து, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வீட்டிற்குச் சென்று இறங்கினார் தாட்சாயணி.

அந்த வாயிலிலேயே அவர்களைப் பார்த்து விட்டு, “இன்னும் முப்பது முடியவே இல்லை. இந்த நேரத்தில் தான், நீங்க மூனு பேரும், சூதானமாக இருக்கனும். ஆனால், நீங்க என்னடான்னா இப்படி எங்கேயோ ஆட்டோவில் வெளியே போயிட்டு, வந்துட்டு இருக்கீங்களே!” என்று அவரிடம் சொல்லி அங்கலாய்த்தார் பக்கத்து வீட்டுப் பெண்மணி.

“அதுக்காக காய்ச்சல் வந்திருக்கிற பிள்ளைங்களை அப்படியே விட முடியுமா க்கா?” என்றவாறு தன் மகள்களை வீட்டினுள்ளே செல்லுமாறு அனுப்பி வைத்தார் தாட்சாயணி.

“ஓஹோ! காய்ச்சலா? தலை வழியாகத் தண்ணீர் ஊத்துனது தான் சேராமல் போயிருக்கும். இப்போ பரவாயில்லையா ம்மா? ஹாஸ்பிடலில் என்ன சொன்னாங்க?” என்று அவர்களது நலனைப் பற்றி விசாரிக்கத் தொடங்கி விட்டார் அந்தப் பெண்.

“ஊசி போட்டு மாத்திரை தந்திருக்காங்க க்கா. சரி ஆகிடும்” என்று கூறி விட்டு அவரிடம் விடைபெற்று உள்ளே சென்றவரோ, தனது இரண்டு மகள்களும், ஊசி போட்டிருந்ததால் உறக்கம் வந்து விட அப்படியே தூங்கி விட்டிருந்தனர்.

அவர்களையும், ஐந்து நாட்களுக்கு முன்னர், தங்களை விட்டுப் பிரிந்து விண்ணுலகத்தை அடைந்த தன் கணவரின் புகைப்படத்தையும் கண்ணீர் மல்கப் பார்த்தவாறே ஒரு மூலையில் முடங்கிக் கொண்டார் அவ்விருவருடைய தாயார் தாட்சாயணி.

அவர்களுக்கு இரவில் உறக்கம் வருவேனா என்றது! எப்போதடா விடியல் வரும் என்பதை எண்ணிக் கொண்டே தூக்கத்தை தொலைத்து ஏங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்களது வாழ்வின் முக்கியமான உறவை இழந்து விட்டு அதற்குப் பிறகான நாட்களை எவ்வாறு கழிக்கப் போகிறோம் என்பதை அறியாது தவித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த வீட்டின் மூத்தவரான தாட்சாயணியோ, தன் கண்ணீர் சிந்திக் கொண்டு இருக்கும் விழிகளுக்குச் சற்று நேரம் ஓய்வு அளிக்க முடிவெடுத்துப் பெருமுயற்சி செய்து உறங்க முற்பட்டு அதில் பாதி வெற்றியும் கண்டு விட்டார்.

அதன்பிறகு, அவருடைய மகள்களும் கூட ஊசி மருந்தின் வீரியத்தால் கண் அயர்ந்து தூங்கி விட்டிருந்தனர்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து விட்டார்கள் மூவரும்.“தூக்கமே வரலை!” என்றாள் மூத்தவள் புவனா.

“எனக்கும் தான் புவி!” என்று அவளிடம் கூறினாள் இளையவள் ரேவதி.

“கஷ்டமாகத் தான் இருக்கும் டா. ஆனால் தூங்க டிரை பண்ணுங்க” என்று அவர்களைத் தேற்றி பல் துலக்கி விட்டு வர அனுப்பி வைத்து விட்டு, பால் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அடுக்களைக்குச் சென்றவரோ, அதை வேறு பாத்திரத்தில் மாற்றி விட்டு, அடுப்பில் வைத்து மூவருக்கும் தேநீர் கலக்கிக் கொண்டு போனார் தாட்சாயணி.

“ம்மா! டீ குடிக்கவே பிடிக்க மாட்டேங்குது!” என்று வருத்தத்துடன் கூறினாள் ரேவதி.ஏனென்றால், இன்னும் முப்பது நாட்களுக்கு அவர்களால் எதையுமே மனமார செய்ய முடியாது என்பது அவர்களுக்கு எப்போதோ தெரிந்து விட்டிருக்க, அதை எப்படி கடப்பது என்பதே மிகவும் கடினமாக இருந்தது அவர்கள் மூவருக்கும்.

“உடம்புக்குத் தெம்பு வேணும்ல டா ம்மா? கொஞ்சமாவது குடிடா!” என அவளைச் சமாதானம் செய்து தேநீரைப் பருக வைத்தார் தாட்சாயணி.

இதற்கிடையில், புவனாவிற்குக் கால் செய்து விசாரித்தார் அவளது கணவன் தினகரன்.

“இப்போ தான் டீ குடிக்கிறோம் ங்க. நீங்க ஆஃபீஸூக்குக் கிளம்பியாச்சா?” என்று அவனிடம் கேட்டாள் மனைவி.

“நான் ஆஃபீஸில் தான் இருக்கேன். உங்க மூனு பேருக்கும் ஃபீவர் எப்படி இருக்கு? பரவாயில்லையா?” எனவும்,

“நேத்து இன்ஜெக்ஷன் போட்டது கொஞ்சம் நல்லா இருக்குங்க” என்றவள்,

”அஜ்ஜூ நைட் அழுதானா?” எனத் தங்களது ஒரு வயது மகனைப் பற்றிக் கேட்டாள் புவனா.

“இல்லை ம்மா. அவன் ரொம்ப சமர்த்தாக இருந்துக்கிட்டான். அம்மாவும், அப்பாவும் அவனைக் கவனிச்சிக்கிறாங்க. நீ ஃபீவர் சரியானதும், அவங்களைப் பார்த்துக்கிட்டு, எப்போ வேணும்னாலும் கிளம்பி வா. நாங்க இங்கே மேனேஜ் பண்ணிப்போம்” என்று மனைவிக்கு ஆதரவாகப் பேசினார் தினகரன்.

“சரிங்க. நீங்களும் உங்க உடம்பைப் பாத்துக்கோங்க” என்று அழைப்பை வைத்து விட்டுத் தன் அன்னையிடம் அதைப் பகிர்ந்து கொண்டாள் அவனது மனைவி.

“ஒவ்வொருத்தரா போய்க் குளிச்சிட்டு வாங்க. நாம சாப்பிடலாம்” என்று அவர்களுக்கு அறிவுறுத்தி விட்டு உணவைத் தயாரிக்கச் சென்றார் தாட்சாயணி.

அவர்களும் குளித்து விட்டு வரக் காலை உணவாகச் செய்த இட்லியை ஆளுக்கு இரண்டாக உண்டு முடித்தனர்.

அதற்கு மேல், அவர்களது வயிற்றுக்குள் உணவு செல்லவே இல்லை. அதன்பிறகு, என்ன செய்வது? ஏது செய்வது? என்று தெரியாமல் அப்படியே இருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டார்கள் மூவரும்.

இவை தான், அவர்களது தினசரி நடவடிக்கைகளாக இருக்கிறது.

தூயவன் மற்றும்‌ தாட்சாயணி தம்பதியின் மூத்த மகளான புவனாவிற்கு, உள்ளூரிலேயே மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து வைத்து இருந்தார்கள்.

அவர்களுக்கு ஒரு வயதில் அர்ஜூன் என்ற மகன் இருக்கிறான்.ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார் தினகரன்.

அதேபோலவே, ஒரு கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள் புவனா.காய்ச்சல் இருப்பதால், தன்னுடைய வேலையிலிருந்து இரண்டு நாட்களுக்கு விடுப்பு எடுத்து இருக்கிறாள்.

தாட்சாயணி மற்றும் தூயவனுடைய இரண்டாவது மகள் ரேவதியோ, அந்த வருடத்தில் தான், கல்லூரி படிப்பை முடித்திருந்தாள்.

அதனால், இந்த ஒரு மாதம் மட்டுமில்லாமல், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் அவள் வீட்டில் இருந்து கொள்ளலாம். தன்னுடைய படிப்பிற்குத் தகுந்தவாறு இருந்த வேலைகளுக்கு விண்ணப்பித்து வைக்க முடிவெடுத்து இருந்தாள். ஆனால், இப்போது ஒரு வருடத்திற்கு எங்கேயும் போக வேண்டாமென்று அவளுக்கு உத்தரவு பிறப்பித்து விட்டார் அவளது அன்னை.

இந்த சில நாட்களாக, உணவும், உறக்கமும் அவர்களுக்குப் பாகற்காய் மற்றும் வேம்பைப் போலக் கசந்து போயிருந்தது. எந்த உணவாக இருந்தாலுமே, அது வாய்க்கு நன்றாக இல்லை என்பதைப் போன்றதொரு உணர்வு!

அவர்களது வீட்டின் தலைவரான தூயவன், இதுவரையிலும், தனது குடும்பத்தாரைக் கண்ணுங் கருத்துமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார் எனலாம். அவர் ஒரு அரசாங்க அதிகாரியாகப் பணிபுரிந்து கொண்டு இருந்த போது, அவர்களது வாழ்வில் இருக்கும் ஒரே எதிரி அவருடைய சொந்தப் பந்தங்கள் தான்.

என்ன தான், தூயவன் ஒரு நல்ல மனிதன் என்றாலும் கூட, அவரது உற்றார், உறவினர்கள் அவ்வாறானதொரு குணத்தைக் கொண்டவர்களாக இல்லை. அதில் ஒரு சிலரின் குணாதிசயங்கள் யாவும் மதிக்கத்தக்க வகையில் இருக்காது.அதுவும் அவரது உடன் பிறந்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும், அவர்களும் கூட காலப்போக்கில் மாறி விடுவார்கள் என்பதை தூயவனோ கனவிலும் நினைத்துப் பார்த்தது இல்லை.ஆனாலும், தனது சுபாவத்தின் மூலமாக அவர்களை மாற்றி விடலாம் என்று மனக்கணக்கைப் போட்டார்.

அதுவும், அவருக்குக் கை கொடுக்கவில்லை.அதனால், தானுண்டு தன் வேலையுண்டு, தன்னுடைய குடும்பம் உண்டு என்று தனியாகப் போய் விட்டார் தூயவன்.

தன் மனைவி தாட்சாயணியுடன் சேர்ந்து இரண்டு மகள்களையும் நன்றாகவே பார்த்துக் கொண்டும், படிக்க வைத்துக் கொண்டும் இருந்தார்.

தூயவனின் தந்தை இறந்து ஒரு வருடம் ஆன தருவாயில் உடன்பிறந்தவர்கள் அனைவரும் சொத்தைப் பிரித்துக் கொள்ள விழைந்தார்கள்.

அதனால், அந்தப் பத்திரத்தை வழக்கறிஞரின் உதவியுடன் வாசித்துப் பார்க்கவும், அதில், தனது மகன்கள் இருவருக்கும் தானப் பத்திரத்தை எழுதி வைத்திருந்தார். பிறகுத் தன்னுடைய இரண்டு மகள்களுக்குப் பணம் மற்றும் நகைகளை எழுதிக் கொடுத்திருந்தார்.

அந்தச் சொத்துப் பிரித்துக் கொள்ளும் முறையில் எல்லாமே சரியாக நடந்து முடிந்திருந்தது.அதனால், தனது பங்குப் பணத்தை வங்கியில் போட்டு வைத்துக் கொண்டார் தூயவன்.

தனக்காக ஒதுக்கப்பட்டுக் கொடுத்திருந்த இடத்தை மகள்களின் திருமணத்தை நடத்தும் போது விற்றுக் கொள்ளலாம் என்று காத்திருந்தார்கள் இருவரும்.

அவர்களது பூர்வீக பூமியை விட்டு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கித் தன் குடும்பத்தை அழைத்துச் சென்று விட்டார் தூயவன்.அந்த ஊரில் தான், அவர்களது மகள்களான புவனா மற்றும் ரேவதியும், தங்களது படிப்பைத் தொடர்ந்தனர்.

வாழ்க்கை அனைத்தையும் ஒரே நேர்கோட்டிலேயே வைத்திருக்காது அல்லவா?தன்னுடைய வேலையில் இருந்த அழுத்தத்தின் காரணமாகத் தூயவனுக்கு இரத்த அழுத்தம் எகிறிப் போனது.அதனால், அதற்குரிய மாத்திரைகளை எடுத்துக் கொண்டு இருந்தார்.அதனுடன் தான், அந்த வேலையைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு இரத்த அழுத்தம் அதிகமாகி, ஒரு கட்டத்தில் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக தாட்சாயணிக்குச் செல்பேசி வழியாகத் தகவல் தெரிவித்து விட்டார்கள்.

அதைக் கேட்டதும், அடித்துப் பிடித்து அவரைக் கூட்டிச் சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதித்தனர் அவரும், அவரது மகள்களும்.அவரது உடல், சிறிது சிறிதாக, தேறி வந்த நேரத்தில், மீண்டும் பணியில் சேர்ந்து வேலையைப் பார்க்க ஆரம்பித்தார் தூயவன்.

அந்தச் சமயத்தில் தான், அவர்களுடைய மூத்த மகள் புவனாவிற்குத் திருமணம் செய்து வைக்கலாம் என்ற முடிவிற்கு வந்தனர் இருவரும்.உடனேயே, அவளது தகுதிகளுக்கு ஏற்ற, மாப்பிள்ளையைப் பார்க்க ஆரம்பித்து விட, அவளுக்கான வரன் வந்த வண்ணம் இருந்தது.ஒரு சிலருடைய ஜாதகம் புவனாவின் ஜாதகத்துடன் சேரவே இல்லை.

எனவே, அது வரைக்கும் அவளுக்கான மணமகனைப் பார்க்கும் வேலையைத் தொடர்ந்து கொண்டே இருந்தார்கள் தூயவன் மற்றும் தாட்சாயணி.புவனாவும் ஒரு புறம் தனது பணியில் பிஸியாக இருக்க, மிகவும் அலசி ஆராய்ந்து ஒரு வரனை அவளது தாயும், தந்தையும், அவளுக்காகத் தேடிப் பிடித்து விட்டார்கள்.

அந்த மணமகனான தினகரனுடைய புகைப்படத்தை அவளிடம் கொடுத்துப் பார்க்கச் சொல்ல, அவளும் அதைக் கண்டு பிடித்துப் போய் விட்டதாக கூறி விட்டாள்.எனவே, அவனையும், அவனது குடும்பத்தையும் பெண் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தனர் தூயவன் மற்றும்‌ தாட்சாயணி.

  • தொடரும்

13 thoughts on “1. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. Fellik

    எப்படி தூயவன் இறந்து போனார் அந்த இடத்தை வைத்து தான் பிரச்சினையா

    1. Avatar

      இல்லை சகி. அவருக்குப் பக்கவாதம் வந்ததால் அதைத் தொடர்ந்து நெஞ்சு வலி வந்து விட்டது. அதனால் தான் அவர் இறந்து விட்டார். மிக்க நன்றி சகி 🤩🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *