Skip to content
Home » 1. தந்தை மண்

1. தந்தை மண்

மறுபுறம் கைப்பேசி பட்டென்று வைக்கப்பட்டது. தனது செவியில் இருந்ததை எடுத்துப் பார்த்து, ஒரு பெருமூச்சை வெளிவிட்டாள் திவ்யா.

மதுரை அழகர் கோவிலில், ஒரு காதுகுத்து விழாவிற்கு அடுத்த வாரம் வருகிறானாம் சதீஷ்‌.

“வா.. நேர்ல பார்க்கலாம்!” என அழைக்கிறான்‌.

‘செல்லலாமா? வேண்டாமா? இது, சரிதானா.?’ எனப் பெண்ணிற்குள் குழப்பமும் தயக்கமும் ஒன்றுக்கொன்று போட்டியிட, “மேரேஜ் கன்ஃபார்ம் ஆகட்டும் முதல்ல. எதுக்கு அவசரப் படுறீங்க.?” என்று நாசுக்காய் மறுக்க முயன்றாள்.

“ஆல்ரெடி கன்ஃபார்ம் ஆன மாதிரி தான? எவ்வளவு ஆசையா கூப்பிடுறேன். இதுக்கூட, செய்ய முடியாதா உன்னால.?” எனத் தனக்குள் உண்டான ஏமாற்றத்தை மறைக்க முயலாது அவன் இணைப்பைத் துண்டித்து விட‍, காரணம் இன்றி மனம் படபடத்தது‌ அவளிற்கு.

பெரியவர்கள் பார்த்த மாப்பிள்ளை தான்‌. ஒன்றரை மாதங்களிற்கு முன்பு, வீட்டிற்கு வந்து பெண் பார்த்துச் சென்று இருந்தனர். இருபுறமுமே பிடித்து விட்டது. ஆனால் திவ்யாவின் அன்னை ஜோதி, இன்னும் மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்மதம் சொல்லவில்லை.

‘வெறும் கையில் எப்படி முழம் போடுவது?‌’ என்ற தயக்கம்.‌ மகளின் திருமணத்திற்கு என்று அவளிடம் தற்போது இருப்பது, ஒரு இலட்சம் மட்டும் தான்.

சேமித்தவை யாவும், அவ்வப்போதான மருத்துவ செலவுகளுக்கே கரைந்து போய்விட்டது. தங்கம் விற்கும் விலையில் இரண்டு சவரன் கூட, நகை செய்து போட இயலாது.

ஜோதியின் தந்தை மீனாட்சி சுந்தரம், அவளிற்கு அளித்த நிலம் ஒன்று உள்ளது‌. மகளின் திருமணத்திற்கு அதைத்தான் நம்பி இருக்கிறாள். இருந்தும், எதனையும் உடனடியாய்ச் செய்து முடிக்க இயலாத சூழல்.

ஏழு மாதங்களிற்கு முன்பான மீனாட்சி சுந்தரத்தின் இறப்பு, அதிகப்படியான இரத்த அழுத்தம், இரத்தில் இருக்கும் கூடுதலான உப்பின் அளவு‌, அதனால் உண்டாகும் சிறுநீரக கோளாறுகள், உடன் பிறந்தவர்களின் திடீர் நிறமாற்றம் போன்ற உடல் மற்றும் மனதளவிலான பாதிப்பில் இருந்து, தற்போது தான் மீண்டு இருக்கிறாள் ஜோதி‌.

அதுவும், ‘மகளிற்குத் தனது கடமையைச் செய்துவிட வேண்டும்!’ என்ற வைராக்கியத்திற்காக.

ஆனால் இந்த இடைவெளியில். திவ்யாவிற்கும் சதீஷிற்கும் இடையே ஒருவித உரிமையுணர்வு ஏற்பட்டு இருந்தது.

ஜோதிக்குக் கைப்பேசியைச் சரியாக கையாளத் தெரியாது‌. வெளியில் எங்கேனும் செல்லும் பொழுது, மறந்து வைத்துவிட்டு வந்து விடுவாள். இதுவரை மூன்று பொத்தான் வகை கைப்பேசிகள் தொலைந்து போயிருக்கிறது.‌

‘இரண்டாயிரம் கொடுத்து வாங்கிய கைப்பேசியைக் கண்டறிவதற்காக, ஆட்டோவிற்கு நூறு இருநூறு என்று செலவழித்து ஐந்தாறு முறைக்கும் மேல் காவல் நிலையத்திற்கு அலைய வேண்டுமா?’ என அப்படியே விட்டு விடுவாள்.

அதனாலேயே பொதுவாய், எங்கும் கைப்பேசியை எடுத்துச் செல்ல மாட்டாள்‌. பெரும்பாலான நேரங்கள், வீட்டில் தான் இருக்கும். திவ்யா தான், அவ்வப்பொழுது கவனித்து அதற்குச் சார்ஜ் போட்டு வைப்பாள்‌. இதன் காரணமாக, தேவையான இடங்களில் அன்னைக்குப் பதில் மகளின் கைப்பேசி எண்ணே கொடுக்கப்பட்டு இருந்தது.

இப்படித்தான் மாப்பிள்ளை வீட்டாருக்கு, திவ்யாவின்‌ எண் போய் சேர்ந்தது. சதீஷிற்கு அதைக் கண்டறிவதில் பெரியதாய் எவ்வித சிரமமும் இருக்கவில்லை‌.

பெண் பார்த்து சென்ற ஐந்தாம் நாளே, அவளிற்கு அழைத்து விட்டான்‌.

புதியதாய் இருந்த எண்களைத் திரையில் கண்டு ‘யார் இது, பேசுவோமா வேண்டாமா?’ எனக் கால் நிமிடம் தனக்குள் பட்டிமன்றம் நடத்தி இறுதியாய், ‘சரி பேசுவோம். தெரிஞ்சவங்களா இருந்தா, பதில் சொல்ல போறோம்.‌ இல்லனா ராங் நம்பர்னு சொல்லிட்டு கட் பண்ண போறோம். இதுல என்ன இருக்கு?’ என்று தொடர்பை இணைத்தாள்.

“ஹலோ..”

“ஹலோ.. திவ்யா..?”

“எஸ்.. நீங்க.?”

“நான் சதீஷ்.”

சட்டென்று அவனைப் பற்றி நினைவிற்கு வராததால், “எந்த சதீஷ்?”

“ஓ‌ காட்.. ஃப்ரை டே ஈவ்னிங் உங்க வீட்டுக்கு!” என்றவன்‌ பாதியோடு நிறுத்த, ‘அச்சச்சோ! அவனா இது.?’ எனத் தலையில் தட்டிக் கொண்டாள்.

அதற்குள் அவன் மூன்று முறை, “திவ்யா.‌. திவ்யா.. திவ்யா.‌.” என்று ஏலம் விட்டிருக்க, “ஸாரி.. நான் எக்பெட் பண்ணல. என்ன, சடனா கால் எல்லாம்.?”

“இட்ஸ் ஓகே. எனக்கு, உன்னைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதம்னு நான் அப்பவே சொல்லிட்டேன். ஐம் ஸுயர்,‌ உனக்கும் ஓகே தான். அப்புறம் ஏன், உங்கம்மா இவ்வளவு தயங்குறாங்க?”

“அது..‌ அப்படிச் சொல்லிட முடியாது! என்னோட ஃபேமிலி சுச்சுவேஷன் அந்த மாதிரி‌.”

“ம்ம்..‌ அது என்ன சுச்சுவேஷன்னு உங்களுக்குத்தான் தெரியும். நான் எதுவும் சொல்ல முடியாது. பட், என்னோட வீட்டுல நான் உறுதியா சொல்லிட்டேன், உன்னைத் தான் கல்யாணம் செஞ்சுப்பேனு. உனக்கு ஓகேனா, அத்தைக்கிட்டப் பேசி சீக்கிரம் நல்ல முடிவா எடுக்கச் சொல்லு. என்ன சரியா‌‍?”

அவனது அதிகப்படியான வேகமும்.. பிடித்தத்தை வெளிப்படையாய் உரைக்கும் திடமும், நொடியில் அவளை ஈர்த்துக் கொண்டது.

இருந்தும் அதை வெளிக்காட்டாது, “ம்ம்..” என்றதோடு நிறுத்திக் கொண்டாள். அதற்கு மேல், எதுவும் பேசவில்லை.

‘பெண் பார்க்கும் படலத்தின் பொழுது, குடும்பத்தினரது அனுமதியுடன் இருவரும் பத்து நிமிடங்கள் உரையாடிக் கொண்டதன் விளைவு தான், அவனது இந்த உரிமை உணர்வு!’ என ஊகித்துக் கொண்டாள்‌.

பொதுவாகவே திவ்யா.. எவராய் இருந்தாலும் அறிமுகமான நான்காவது நிமிடமே, நெடுநாள் பழகியது போல் பேசத் துவங்கி விடுவாள். அவள் செய்யும் வேலையின் காரணமாய், வந்த பழக்கம் அது.

குளிர்பானங்களை விநியோகம் செய்யும் நடுத்தர அளவிலான நிறுவனம் ஒன்றில், பணி செய்கிறாள். உற்பத்தியாளர்களிடம் பேசி தேவைக்குக் கொள்முதல் செய்வதும், சிறு விற்பனையாளர்களின் தேவைக்கு அதை அனுப்புவதுமே அவளின் வேலை.

திவ்யாவின் பணியானது, பெரும்பாலும் கைப்பேசி உரையாடல்களில் தான் நிகழும்‌. அதில்‌ பெண்ணின் குரலைக் கேட்டதுமே, வேலையைத் தவிர்த்து சீண்டும் விதமாகவும் தவறான நோக்கத்துடனும் பேசுபவர்கள் அனேகம் பேர் உண்டு‌.

முதன்முறை அப்படியான அனுபவத்தின் போது, நிறுவனத்தின் உரிமையாளரிடம் சென்று புகார் கொடுத்தாள்.

அந்த நடுத்தர வயது பெண்மணி, “எல்லா இடத்துலயும் இப்படி ஆம்பளைங்க இருக்கத்தான் செய்யிவாங்க. அது, உன்னோட தப்பு இல்ல.‌ அதுனால, அதை யோசிச்சு கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்ல‌. யார்க்கிட்ட எந்த அளவுல பேசணும்? எப்படி பேசணும்னு, நீ முடிவெடு. முயற்சி செஞ்சு பார்த்துட்டு முடியலேனா, அவனுங்களே தானா போயிடுவாங்க. நீ தான், உனக்கு முதல் பாதுகாப்பு. போயி வேலையைப் பாரு. இந்த காலத்துல மதிப்போட வாழ, சம்பாத்தியம் ரொம்ப முக்கியம் ம்மா‌.” என்று தனது அனுபவத்தில் அவளுக்குத் தைரியம் சொல்ல, அதற்குத் தகுந்தது போல் தன்னை மாற்றிக் கொண்டாள்.

சிறிய கடைக்காரர்களும் சில்லறை வியாபாரிகளும், “தங்கச்சி, ஒரு கேஸ் பவண்டோ பாட்டில் கடைக்கு வேணும். அனுப்பி விடுறியா? ரூபாயை அடுத்த முறை வர்றப்ப வாங்கிக்கச் சொல்லு!” என இயல்பாய்க் கேட்பது உண்டு. உற்பத்தியாளர்களின் பக்கமும் கன்னியமான ஆண்கள் நிறைய பேர் இருந்தனர்.‌

அப்படியானவர்களிடம் கறாராக பேசுவது என்பது இயலாத காரியம். தொழில் முறைக்காகவேனும், சில மேற்பூச்சு வார்த்தைகள் தேவைப்படுகின்றன.

புதியதாய் அறிமுகமாகும் விற்பனையாளரிடம்.. அவரது தேவையைக் கேட்டறிந்து அத்தோடு இன்னும் பேசி அதனைப் பெரிய வியாபாரமாய் மாற்றும் கலை அறிந்திருக்க வேண்டும். அதற்கு அடித்தளம், வாடிக்கையாளர்களை இரண்டே நிமிடங்களில் தங்களின் பக்கம் திரும்ப வைக்கும் சரளமான பேச்சும், சினேகமான உரையாடல்களும் தான். நிறுவனத்தின் உரிமையாளருமே, அவளுக்கு அதைத்தான் கற்றுக் கொடுத்திருந்தார்.

சதீஷ் பெண் பார்க்க வந்திருந்த பொழுதும், அதுதான் நடந்தது.

‘என்ன படிப்பு? எங்கு வேலை.?’ என இயல்பாய் துவங்கிய அவர்களின் உரையாடல், மற்றவரின் குடும்பத்தைப் பற்றிய விசாரிப்பில் முடிந்தது.

அந்த பேச்சு அவனுள், ‘இவள் தான், தனக்கு துணையாய் வரப் போகிறாள்!’ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்க, திவ்யாவிற்குமே சதீஷின் மேல் ஒருவகை ஈர்ப்பு ஏற்பட்டு இருந்தது. அது, ‘தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை!’ என்பதான நினைப்பால் கூட இருக்கலாம்.‌

ஆனால் அன்று இரவே‌‌, “பார்ப்போம் மா. நல்ல பையன் தான். குடும்பமும் நல்லவிதமா தான் தெரியிறாங்க‌. இருந்தாலும், நம்மப்பக்கம் நாம ரெடியா இருக்கணும்ல? பதில் சொல்ல, அவங்கக்கிட்ட ஒரு ரெண்டு மாசம் டைம் கேட்டிருக்கேன்‌. அதுக்குள்ள நமக்குச் சாதகமா ஏதாவது நடந்தா, சீக்கிரம் உன்னோட கல்யாண தேதியைக் குறிச்சிடலாம். என்ன?” என்று மகளின் ஆசைக்குத் தடை விதிக்காமலும், அதேநேரம் அது அவளைக் கடந்து சென்றுவிடாமலும் தடுப்பணை போட்டிருந்தாள் ஜோதி.

அதனாலேயே திவ்யா, சதீஷைப் பற்றிப் பெரியதாய்ச் சிந்திக்கவில்லை. ஆனால், அவன் அப்படி இருக்கவில்லை.

மாநிறத்தில், கொடியிடை என்ற பெயரிற்கு ஏற்றபடியான தேக வளைவில், பெரிய மற்றும் அழகிய கண்களுடன் இருபத்திரண்டு வயதிற்கே உரிய ததும்பும் இளமையில் மிளிர்ந்தவளைக் கண்டவுடனே பிடித்துவிட்டது ஆடவனிற்கு.

இடையைத் தொடும் அளவிற்கு அடர்த்தியான கார்குழலின் அசைந்தாடும் பின்னல், அவளது பின்னழகைக் கூட்டியிருந்தது‌. பெண் பார்க்கச் செல்லும் போது, சுடிதார் தான் அணிந்து இருந்தாள். உடலை ஒட்டியது போலான வேலைபாடு மிகுந்த அவ்வுடையில் பார்த்ததும் அவனிற்கு முதலில் தோன்றியது, ‘இடுப்புல கைப்போட்டு அணைச்சுக்கிட்டா, பிடிமானத்துக்கு நல்லா வசதியா இருக்கும்!’ என்பது தான்.

இப்படியான எண்ணங்களால், குணத்தில் தாழ்ந்தவன் எனச் சொல்லி விட இயலாது. பருவமும், வயதும், இளமைக்கான தேடலும், ஹார்மோன்களின் விளையாட்டும் நிகழ்த்தும் வேடிக்கை இது. உணர்வுகள் இப்படித்தான் கொதிக்கும் உலையாய், எகிறி குதித்த வண்ணம் இருக்கும்.

அது.. அவனைப் பொறுமையாய் இருக்கவிடாது இம்சிக்க, ஐந்தாவது தினமே அவளிடம் பேசி விட்டான். அதன்பின்னர், அவ்வப்போது சதீஷிடம் இருந்து அழைப்பு வரும்.

“உன்னோட அம்மா என்ன சொன்னாங்க?” என்பது தான், முதல் வினாவாய் இருக்கும். அப்படிக் கேட்குப் பொழுது.. அவனது குரலில் மிகுந்திருக்கும் ஆர்வமும் எதிர்பார்ப்பும், அவளின் மனதில் பட்டாம்பூச்சிகளைப் பறக்க வைத்தது. திவ்யாவிற்கும் மெல்ல மெல்ல, சதீஷைப் பிடிக்கத் துவங்கியது.

‘அம்மா.. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தா நல்லா இருக்கும்!’ என்று எண்ணம் தோன்றியது. ஆனால் அதனைப் பற்றி வெளிப்படையாய் ஜோதியிடம் பேச முடியாமல், நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள்.

அதேநேரம், சதீஷுடனான கைப்பேசி உரையாடல் நேரம் அதிகரித்து, ஒருவர் மற்றவரைப் பற்றி அறிந்து கொள்ள முயன்றனர்.‌ அந்த முயற்சி, பிடித்தத்தைக் கூட்டி அடுத்த நிலைக்கு இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

அதன் வெளிப்படாய் தான், அவன் ‘நேரில் சந்திக்கலாம்’ என்றான். அவளிற்குமே ஆசை இருந்தது.

இன்னமும் உறவு உறுதி ஆகாமல் இருப்பது மட்டுமே பெண்ணவளை தடுத்துக் கொண்டிருக்க..‌ மந்தியான மனமோ, ‘சும்மா.. பார்க்கிறதாலயோ பேசுறதாலயோ என்ன ஆகிடப் போகுது? வேலைப் பார்க்கிற இடத்துல எத்தனை ஆம்பளைங்களோட பேசுற? இதெல்லாம் சின்ன விசயம் திவி!’ என இளமையின் வேகத்திற்கு சாவி கொடுத்தது.

9 thoughts on “1. தந்தை மண்”

    1. NandhiniSugumaran

      😂😂.. அதென்னமோ உண்மை தான். வயசுக் கோளாறுல இப்படித்தான் பிற்ளைக ஏதாவது செஞ்சுட்டு பின்னாடி கஷ்டப்படுதுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *