Skip to content
Home » 10. சுடரி இருளில் ஏங்காதே!

10. சுடரி இருளில் ஏங்காதே!

தங்களது மகளுடைய திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததால், தன்னுடைய உடம்பில் புது தெம்பு வந்ததைப் போல உணர்ந்தவரோ,

அதனால், தனது மனைவி மற்றும் இளைய மகளின் உதவி இல்லாமல் அவ்வப்போது தன்னாலான முயற்சிகளைச் செய்து தனக்குத் தேவையானதை தாமே செய்து கொள்ளத் தொடங்கினார் தூயவன்.

அதைக் கண்டு சற்று நிம்மதி அடைந்தார்கள் மற்ற இருவரும். 

தகுந்த சிகிச்சையும் நடந்து கொண்டிருக்க, உடல் பாகங்களை அசைத்து சிற்சில வேலைகளைப் பார்த்தார் தூயவன்.

தனது வேலையும் காத்திருக்கவே, கொஞ்சம் கொஞ்சமாக உடல் தேறிக் கொண்டு இருந்ததால், இன்னும் சிறிது நாட்களில் வேலைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்துக் கொண்டார்.

தன்னுடைய மனைவியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது,”அப்படியே நம்மப் பேரனையும் பாத்துடனும் மா” என்றார் தூயவன்.

“பேரனா? பேத்தியா இருந்தால் என்னப் பண்ணுவீங்க?” என்று அவரிடம் கேட்டுப் புன்னகைத்தார் தாட்சாயணி.

“பேத்தியும் இருக்கலாம் மா. ஆனால் எனக்கு என்னமோ பேரன்னு தான் தோனுது” என்று அடித்துச் சொன்னார் அவரது கணவர்.

“அட! பார்ப்போம் ங்க” என்றவரிடம்,

“எந்தக் குழந்தையாக இருந்தாலும் ஓகே தான் ம்மா” என்று கூறி விட்டார் தூயவன்.

அவரும் சரியாகிக் கொண்டிருக்கத் தனது திருமணம் மற்றும் மறு வீட்டுச் சடங்குகள் யாவும் முடிவடைந்தப் பின்னர், மாமியார் வீட்டிலிருந்து கொண்டு தன்னுடைய கல்லூரிப் பேராசிரியர் பணிக்குப் போகத் தொடங்கி விட்டாள் புவனா.

அவளைத் தன் இருசக்கர வாகனத்திலேயே கொண்டு விட்டு விட்டுத் தனது அலுவலகத்திற்குப் போய் மாலை வேலை முடிந்தவுடன் மனைவியைத் தன்னுடனேயே அழைத்துக் கொண்டு வந்து விடுவான் தினகரன். 

இப்படியாகப் போய்க் கொண்டிருந்த நாட்களில், தானும் சரியாகி வேலைக்குச் செல்லத் தயாராகினார் தூயவன்.

“என்னங்க! உங்களுக்கு இப்போ தான் கொஞ்சம் சரியாகி இருக்கு. அதுக்குள்ளே வேலைக்குப் போயாகனுமா?” என்று அவரிடம் வினவினார் தாட்சாயணி.

“ஆமாம் மா. இன்னுமே போகாமல் இருந்தால், அப்பறம் சம்பளத்தில் பிடிச்சிக்கப் போறாங்க. அதான்” என்று உறுதியாக கூறினார் அவரது கணவர்.

“ப்ச்! அது கிடக்குது ங்க. உங்களோட உடம்பு நல்லா இருக்கா?” என்ற மனைவியிடம்,

“ம்ஹ்ம்! எத்தனை தடவை சொல்றது ம்மா? எனக்கு உடம்பு தேறிடுச்சு” என்று அவருக்குப் பதிலளித்தார் தூயவன்.

“அப்போ சரி” என்று கூறி விட்டு அவரை வேலைக்கு அனுப்பி வைத்தார் தாட்சாயணி.

என்ன தான், தனது உடல்நிலை நன்றாகி விட்டாலும், வேலை செய்யும் சமயங்களில் முன்பைப் போல ஒரு சுரத்தே இல்லை அவருக்கு.

“சார்! உங்களுக்கு ஓகேவா? இதை நானே செய்றேனே?” என்றார் அவருடன் வேலை செய்பவர்.

“பரவாயில்லை ப்பா. நானே பார்த்துக்கிறேன்” என்று அவரிடத்தில் தீர்க்கமாக உரைத்தார்.

ஆனால், நேரம் ஆக ஆக அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்ட போது மனமுடைந்து போய் வீட்டிற்குச் சென்று விட்டார் தூயவன்.

தன்னிடம் என்னவென்று கூறாமல், வந்ததில் இருந்து அமைதியாகவும், இறுக்கமாகவும் காணப்பட்ட கணவனைப் பதறிப் போய்ப் பார்த்துக் கொண்டு இருந்தார் தாட்சாயணி.

அவர்களது மகள் ரேவதியோ, அந்த நேரத்தில் கல்லூரிக்குப் போயிருந்தாள். அதனால் அவளுக்கு எதுவும் தெரியவில்லை.

“ஏங்க!” என்று தன் கணவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தார் அவரது மனைவி.

“சொல்லும்மா” என்றார் தூயவன்.

“என்னாச்சு ங்க? இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க?” என்று அவரிடம் கேட்டார் தாட்சாயணி.

அதைக் கேட்டதும், உடனே உடைந்து கதறி அழுத ஆரம்பித்து விட்டார் அந்த மனிதன்.

அதைப் பார்த்ததும்,”என்னங்க!” என்று பதட்டம் மற்றும் பயத்துடன் அவரைப் பிடித்து உலுக்கினார் அவருடைய மனைவி.

“அங்கே என்னால் வேலை செய்யவே முடியலை ம்மா! ஒரு மாதிரி உடம்பெல்லாம் அடிக்கடி டயர்ட் ஆகுது. மயக்கமாக வருது!” என்று கத்தி அழுது கொண்டே கூறினார் தூயவன்.

“அது ஏன்னு ஹாஸ்பிடலுக்குப் போய்ச் செக்கப் பண்ணிட்டு வருவோமா ங்க?” என்று கணவனிடம் வினவினார் தாட்சாயணி.

“நான் இந்த நரகத்தில் இருந்து வெளியே வரவே முடியாதா ம்மா?” என்று அவரிடம் கேட்கவும்,

“ஒரே ஒரு தடவை போய்ப் பார்த்துட்டு வந்துடலாம் ங்க” எனவும்,

“சரிம்மா” என்றதும், மாலை வீட்டிற்கு வந்த மகள் ரேவதியிடம், இதைப் பற்றி எடுத்துரைத்தார் தாட்சாயணி.

“அச்சோ! நீங்க முதல்ல அப்பாவைக் கூட்டிட்டு ஹாஸ்பிடலுக்குப் போயிட்டு வாங்க ம்மா” என்று அவளும் சம்மதித்து விட,

புவனாவிடமும் சொல்லி விட்டு, மருத்துவமனைக்குப் போனார்கள் இருவரும்.

அங்கே,”பக்கவாதம் வந்ததில், இவரோட உடம்பு ரொம்பவே தளர்ந்து போச்சு. இவ்வளவு சீக்கிரம் எப்படி குணம் அடைஞ்சாருன்னுத் தெரியலை. ஆனால் அப்படி இருந்தாலும் கூட உடம்புக்கு அதிகமான அழுத்தம் கொடுக்கக் கூடாது. எப்பவும் ஃப்ரீ ஆக இருக்கனும். ஸ்ட்ரெயின் பண்ணக் கூடாது!” என்று அடுக்கிக் கொண்டே போனார் மருத்துவர்.

“ம்ஹ்ம். சரிங்க டாக்டர்” என்று மேலதிக விபரங்களைக் கேட்டறிந்து கொண்டு அந்தக் கணவனும், மனைவியும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.

அவர்கள் வந்ததும், என்ன விஷயம் என்று கேட்ட ரேவதியிடம், மருத்துவர் அறிவுறுத்தியவற்றைப் பகிர்ந்து கொண்டார் தாட்சாயணி.

“கரெக்ட் தான் ம்மா. அப்பா பேசாமல் ரிடையர்ட் ஆகிட்டு வீட்டில் இருந்துகிட்டு ரெஸ்ட் எடுக்கட்டும்” என்று கூறி விட்டாள் அவர்களது இரண்டாவது மகள்.

அதை அப்படியே புவனா மற்றும் அவளது கணவனிடமும் உரைத்தாள் ரேவதி.

அன்றிலிருந்து, சில நாட்களுக்குப் பிறகுத் தனது வேலையிலிருந்து விருப்ப ஒய்வு பெற விண்ணப்பித்தார் தூயவன்.

ஆனால், அது கிடைப்பது மிக எளிதான விஷயமல்ல. அவரது அலுவலகத்தில் இருந்து சில பேர் வந்து அவருடைய உடல் நிலையைப் பார்த்து அறிந்து கொண்ட பின்னரே தூயவனுக்கு வேலையிலிருந்து ஓய்வு பெற அனுமதி கொடுத்து விட்டனர்.

காலையில் விரைவாக எழுந்து, குளித்து உணவை முடித்துக் கொண்டுத் தன்னுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் தேநீர்க் கடைக்குச் சென்று விடுவார் தூயவன்.

அதன் பிறகு, மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு மாலை ஐந்து மணி வரைக்கும் உறங்கி எழுபவரோ, மாலை நேரத்தில் தேநீர்க் குடிக்கப் போய் விட்டு அங்கே இருப்பவர்களிடம் சிறிது நேரம் பேசி விட்டு ஏழு மணியளவில் வீட்டிற்கு வந்து இரவு உணவை உண்டு விட்டு உறங்கிப் போவார்.

இது தான், தனது விருப்ப ஓய்விற்குப் பின் அவரது தினசரி நடவடிக்கைகளாக இருந்தது.

இடையிடையே, தொண்ணூறுகளில் வெளியான படங்களைப் பார்ப்பதையும் தனது வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் தூயவன்.

இப்படி சில மாதங்கள் கடந்திருக்கும் சமயத்தில் தான், புவனாவின் கர்ப்பம் உறுதியான செய்தி வந்து சேர்ந்தது அவர்களுக்கு.

அந்த இரு குடும்பங்களுமே ஆரவார மகிழ்ச்சி அடைந்து கொண்டார்கள்.

அதை எண்ணிப் பார்க்கையிலேயே கண்களில் நீர் பூத்துக் கொண்டது தூயவனின் உறவுகளுக்கு.

எவ்வளவு ஆனந்தத்துடன் அந்தப் புதிய உறவை வரவேற்கக் காத்திருந்தார் என்பதை அவர்கள் கண்ணாரப் பார்த்திருந்தார்களே!

மூத்த மகளின் முதல் பிரசவம் தாய் வீட்டில் பார்க்க வேண்டும் என்பதை அறிந்து கொண்ட பிறகு, அதற்காகத் தனது விருப்ப ஓய்விற்கு வந்தப் பணத்திலிருந்து கொஞ்சத்தை அப்போதே எடுத்து தனியாக வைத்து விட்டிருந்தார் தூயவன்.

  • தொடரும் 

5 thoughts on “10. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. Kalidevi

    Superb epi. Appa epovum spl tha ponnungaluku athu mari mrg panni aduthu pregnant aana athula evlo santhosam varuthu amma ku pannathatha kuda ponnuku panni alagu papanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *