Skip to content
Home » 11. தந்தை மண்

11. தந்தை மண்

இல்லத்திற்கு வந்த தமக்கையின் மகளைக் குழப்பத்துடன் பார்த்த ஜோதி, “வா…” என்று வரவேற்று விட்டு, “இன்னும் காசு ரெடி ஆகல. கிடைச்சதும் நானே கொண்டு வந்திருப்பேனே? நீ எதுக்கு..?” என மன சஞ்சலத்துடன் விசாரித்தாள்.

“மாமாவைப் போய்ப் பார்த்துப் பேசுனியா சித்தி?”

“அது..” எனத் திணற, “அவ‌ எப்படிச் சொல்லுவா?‌ அண்ணே, என் பொண்ணுக்குக் கல்யாணத்தை முடிக்கணும். உன் பொண்டாட்டிக்கிட்டப் பேசி பத்திரத்தை வாங்கித் தானு அழுது கெஞ்சி இருப்பா. இல்லேனா, திருடியாவது கொண்டு வந்து கொடுனு யோசனை சொல்லி இருப்பா. உன் புருஷனுக்குத் தான் புத்தியே கிடையாதே.? அப்படி இருந்திருந்தா, ஏழு வருசமா கொடுத்த காசைத் திருப்பி வாங்காம இருப்பானா.?

அந்த அஞ்சு இலட்சத்தை அன்னைக்கு வட்டிக்கு விட்டிருந்தா, இன்னைக்கு எவ்வளவு சேர்ந்திருக்கும்.? நகையா எடுத்து வச்சிருந்தா, இப்போதைக்கான நிலவரம் என்ன? விக்கிற விலைவாசிக்கு ரெண்டு மடங்கா இல்ல, பெருகி இருக்கும்.?

அந்த அளவுக்கு வட்டிக் கேட்டா, தாங்குவாளா இவ? சரினு கொஞ்ச பணத்தைச் சேர்த்துக் கொடுனு சொன்னதுக்கு,‌‌ அப்பாக்கிட்ட சொல்லி நம்மளை என்னெல்லாம் பேச்சு வாங்க வச்சா.?” என்றபடியே வந்தாள் காதம்பரி.

உடன், இராஜ‌ கோபாலன் பட்டியைச் சேர்ந்த சில பெரிய மனிதர்களும் வந்திருந்தனர்.

அவர்களை எல்லாம் பார்த்து திகைத்து இருந்த ஜோதிக்கு, தமக்கையின் பேச்சும் குற்றச்சாட்டும் தன்னைக் கேலிக்கு ஆளாக்கி சிரிப்பது போன்ற‌ உருவகத்தை ஏற்படுத்தியது.

விட்டுச் சென்ற கணவனையும் தந்தையையும் எண்ணி கண்கள் கலங்கிட, இயன்றவரை அதை மற்றவர்களிற்குக் காட்டாமல் அடக்கிக் கொண்டாள்.

“வந்தவங்களை வானு எதுவும் சொல்ல மாட்டியா.? வாசல்லயே நிக்கணுமா அவங்க.?” எனக் காதம்பரி தங்கைக்கு அழுத்தம் கொடுக்க, தனி ஒருவளாய் எதுவும் பேச வழியின்றித் தவித்துப் போனாள் இளையவள். திவ்யா பணிக்குச் சென்றிருந்தாள்.

“வாங்க… உட்காருங்க…” எனப் பொதுவாய் உரைத்த ஜோதி,‌ அவர்கள் அருந்துவதற்கு நீரையும் தந்து, “என்ன விவகாரம், எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள்.

அதில் ஒருவர், “உங்க அக்காதான் வரச் சொல்லுச்சு‌. ஏதோ கொடுக்கல் வாங்கல்ல பிரச்சனையாமே? நீங்க வந்து, பேசி முடிச்சுக் கொடுங்கனு கூப்பிட்டுச்சு.” என விபரம் உரைக்க, தமக்கையையும் அவளின் மகளையும் பார்த்தாள்.

“போன தடவை, நாங்க மட்டும் வந்து உன்னோட அப்பாக்கிட்ட அசிங்கப்பட்டுட்டுப் போனோம்‌. அதான், இந்தத் தடவை எங்க பக்கம் ஆளுங்க இருந்தா நல்லதுனு நினைச்சு வரச் சொன்னேன்.”

“என்ன அக்கா இது.? நான் என்ன, எனக்குத் துணையா பத்து இருபது பேரை கூப்பிட்டு வச்சிருக்கேனா? நீ,‌ இப்படி நடந்துக்கிறது சரியில்ல!” என‌ ஜோதி மனதில் தோன்றியதை வெளிப்படையாகவே உரைக்க, “அம்மா, நாலு பேரை வச்சு பேசி ஒரு முடிவுக்கு வர்றது நல்லது தான? நாங்க யாரு பக்கமும் இல்ல.‌ பொதுவாத்தான் பேசுவோம்!” என்றார் கூட்டத்தில் இருந்த மற்றொருவர்.

மனம் அதை ஏற்க மறுத்தாலும், “சரி சொல்லுங்க, என்ன பேசி முடிக்கணும்.?”

லோகு, “என்ன சித்தி, தெரியாத மாதிரி கேட்கிற? நான் கொடுத்த காசுக்கு, ஒரு பதிலைச் சொல்லு!”

“ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்கேன். கிடைச்சதும் தந்துடுறேன்!”

“அது, எப்ப என்னைக்குனு சொன்னேனா, கொஞ்சம் நல்லா இருக்கும்.”

“இந்த நாளுதான்னு, உறுதியா சொல்ல முடியாது என்னால.‌ வெளிய‍, ஒண்ணு ரெண்டு பேருக்கிட்ட கேட்டிருக்கேன். அவங்க தந்தா தான் ஆச்சு.”

“ஏற்கனவே ஏழு வருசமா பொறுமையா இருந்தாச்சு‌. இனி, எல்லாம் அப்படி இருக்க முடியாது.”

“நான் வேணும்னு எதுவும் செய்யல ம்மா. என்னோட நிலைமை அப்படி!”

“அதுக்காக, நான் காசை விட்டுக் கொடுக்க முடியுமா?”

“நான் ஒண்ணும் உன்னை விட்டுக் கொடுக்கச் சொல்லலையே? கொஞ்சம் பொறு!”

“இன்னும் எத்தனை நாளு, வாரம், மாசம்? இல்ல, வருசமா.?”

ஜோதி பதிலின்றி நிற்க, “எதுக்கு இவ்வளவு பாடு? அதான் உனக்கு, உங்கப்பா கொடுத்த நிலம் இருக்குல அம்மா? காசுக்குப் பதிலா, பத்து செண்டோ பன்னெண்டு செண்டோ எழுதிக் கொடுத்திட வேண்டியது தான?‌” என்றார் பஞ்சாயத்து பேச வந்த ஒருவர்.

“நிலத்தை வாங்கிக்கிறேன்னு, அப்பா இருக்கும் போதே வந்து பேசுனாங்க. தர்றதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல.‌ ஆனா, கொஞ்சம் நியாயமா விலை கேட்கணும்ல?”

பஞ்சாயத்து காரர், “சரிதான், லோகு நீ என்ன சொல்லுற?”

“அதெப்படி? காசுக்கு ஈடா நிலமா? அது, ஒரு சமயம் விலை கூடும் குறையும். உறுதியா சொல்ல முடியாது. நான் இப்ப வாங்கிட்டு, விக்கிறப்ப விலை போகலேனா என்ன செய்யிறது? அப்புறம், எனக்குத் தான நட்டமாகும்?” என, தான் எவ்வளவு அபத்தமாய்ப் பேசுகிறோம் என்று அறிந்தே உரைத்தாள்.

பஞ்சாயத்து காரர்களும்‍, காதம்பரி அழைத்து வந்தவர்கள் என்பதால்‌, லோகு பேசியதை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து இருந்தனர்.

ஜோதி மறுமொழி உரைப்பதற்காக வாயைத் திறக்க, “இரு சித்தி! நான் முதல்ல எல்லாத்தையும் விபரமா சொல்லிடுறேன்.‌ பத்து செண்டு, பன்னெண்டு செண்டுனா, அதுக்கும் பாதை வேணும்ல. வாங்க வர்றவனுக்கு நாலு பக்கமும் அடைச்சுக் கொடுத்தா, சம்மதிப்பானா.?”

“சரி, என்ன செய்யலாம்னு நீயே சொல்லு.”

“கோயிலுக்குப் போற பாதையை ஒட்டி இருக்கிற நிலத்தைக் கொடுக்கிறதா இருந்தா‍, எனக்குச் சம்மதம்.”

“பாதையை ஒட்டி இவங்களுக்குக் கொடுத்தா, பின்னாடி இருக்குற நிலத்தை நான் எப்படிங்க ஐயா விக்கிறது?”

பஞ்சாயத்து காரர், “இதுல என்னமா இருக்கு? வர்றவங்களுக்கு, நடந்து போற அளவுக்கு வழி விடாதா லோகு.?”

“நடந்தா? ஐயா, கொஞ்சம் எதார்த்தமா பேசுங்க‌. நான், இப்படித் துண்டு துண்டா வித்தா நிச்சயம் விதைப்பு வைக்க முடியாது‌.‌ வாங்குறவங்க, இடத்துல வீடோ கடையோ தான் கட்டுவாங்க. இன்னைக்கு நிலைமைக்குப் பைக் இல்லாத வீடே இல்ல. வண்டி போக வரனு, ஒரு கார் போற அளவுக்காவது வழி வேணும்ல?

பெத்தண்ணசாமிக்குக் கொடுத்தது, நடந்து போறதுக்கான வழிதான்.‌ அதுக்கே எங்கப்பா ஏழு அடில பாதை கொடுத்தாரு. இப்ப, நீங்களே சொல்லுங்க!” என்றிட, லோகுவை பார்த்தனர் அவர்கள்.

“ஏழு அடிக்கு பாதைக் கொடுத்தா, அந்த நிலத்துல எனக்கு என்ன இருக்கு? அதெல்லாம் முடியாது.‌‌ வேணும்னா சித்தியே பாதை போட்டுட்டு, மீதி இருக்கிற இடத்துல எனக்குத் தரட்டும்.”

மத்தியஸ்தர்கள் ஜோதியைக் கேள்வியாய்ப் பார்க்க, திகைப்புடன் நின்றிருந்தாள் அவள்‌.

‘ஏழு அடிக்கு முன்பக்கம் இருந்து இறுதி வரை வழி ஏற்படுத்தினால், அதிலேயே மூன்று செண்ட் இடம் போய்விடும். இவள் முன்பக்கம் பத்துச் செண்ட் வாங்கினால், வருபவர்களும் அதுபோலவே மூன்று கொடு நான்கு கொடு என்பர். ஒருவருக்குப் பாதை இருந்து மற்றவருக்கு இல்லை எனில் வாங்க மாட்டார்கள். அவர்களிற்கும் பாதையை ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதனையும் சட்டென்று செய்துவிட முடியாது. நில அளவையாளர்களை வைத்து, அளந்து பிரித்து ஒவ்வொரு பணியாய்ச் செய்ய வேண்டும். அனைத்திற்கும் பணம் செலவழிக்க வேண்டும். அதற்கெல்லாம் காசு இருந்தால், எதற்கு இத்தனை போராட்டம்? இந்தப் பணி எல்லாம் எப்பொழுது முடிந்து, நிலத்தை எத்தருணத்தில் விற்று, மகளின் திருமணத்தை என்று நடத்துவது?’

நினைத்துப் பார்கவே நெஞ்சம் பதறியது ஜோதிக்கு‌.

‘ஏன்பா இப்படிச் செஞ்சீங்க? எனக்கு, நீங்க நிலத்தைத் தராமலேயே இருந்திருக்கலாம். உழைச்சு அந்தக் கடனை அடைச்சிட்டு, ஏதோ இருக்கிறதை வச்சு, கை கால் இல்லாதவனுக்குக் கூட என் பொண்ணைக் கட்டிக் கொடுத்துட்டு இருந்திருப்பேனே? சரி, போய்த் தொலையிதுனு இப்ப விட்டாலும், நான் போன பின்னாடி அந்தக் காசைக் கேட்டு, என்பிள்ளையை நிம்மதியா வாழ விடமாட்டாங்களே இவங்க.

என்கிட்ட நிலம் இருக்கிறது தான், இவங்களுக்குக் கண்ணை உருத்துது. அது இல்லைனா, என்னை விட்டு விலகிப் போயிருப்பாங்க. நானும் நிம்மதியாக இருந்திருப்பேன்!’ என இல்லாத தந்தையிடம் வினவியவளுக்கு, கண்களில் நீர் பெருகியது. சட்டென்று புடைவை முந்தானையால் துடைத்து,‌ தன்னைச் சரிசெய்து கொண்டாள்.

“என்னமா ஜோதி, எதுவும் சொல்லாம இருக்க?‌” எனக் கேட்க, ஒரு பெருமூச்சை விட்டவள், “நான் பாதையைப் போடுறதா இருந்தா, பின்னாடி இருக்க நிலத்தைத் தான் தருவேன். அதுவும் கரெக்டா எட்டுச் செண்ட் தான். அதுக்கு மேல, ஒரு சதுர அடிக்கூடத் தர முடியாது!”

“ஏது எட்டு செண்டா? அப்ப எனக்குக் கோயில் பாதை பக்கத்துல தான் வேணும்.”

“இவங்க கேட்கிற இடத்துல எல்லாம், என்னால தர முடியாதுங்க!”

“நான் அதுக்கு ஒத்துக்க மாட்டேன்!” என்று இருவரும் அடுத்தடுத்து உரைக்க, “ஏன்மா, யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுங்க‌. ரெண்டு பேருமே இப்படிப் பிடிவாதமா நின்னா என்ன அர்த்தம்?”

“கொஞ்சம் மனசாட்சியோட பேசுங்க.‌ அவ பேசுறதுல ஏதாவது நியாயம் இருக்கா?” என ஜோதி வினவ, அனைவரும் லோகுவைப் பார்த்தனர்.

“என்னை என்ன பார்க்கிறீங்க? நான், நியாயமா தான் பேசுறேன். ஏழு வருசம் யாரு காசை வாங்காம பொறுமையா இருப்பான்னு சொல்லுங்க?”

பஞ்சாயத்துப் பேசுபவரில் ஒருவர், “சரிமா, இவ்வளவு காலம் பொறுத்த நீ, உன்னோட சித்திக்காகக் கொஞ்சம் விட்டுத்தான் கொடேன்.”

அவள் சட்டை செய்யாமல் நிற்க,‌ காதம்பரியைப் பார்த்தவர்கள், “நீதான் உன்னோட மகளுக்குக் கொஞ்சம் எடுத்துச் சொல்லுறது? ஜோதி, உன்கூடப் பிறந்தவ இல்லையா? அவ சூழ்நிலையையும் கொஞ்சம் யோசிக்கணும்ல?” என அவளின் புறம் திரும்பினர்.

“காசு கொடுத்தது அவ, வாங்குனது இவ. இப்ப இருக்க நிலைமையில யாராவது ஒருத்தருக்கு தான், சாதகமா பேச முடியும். அப்படிப் பேசுனா இன்னொருத்தரை பகைச்சுக்கிட்ட மாதிரி ஆகிடும். அதுனால, நடுவுல நான் வந்து பேசுறது அவ்வளவு சரியா இருக்காது!” என்றுவிட, ‘இப்படியும் ஒருவளால் நடிக்க முடியுமா?’ என அதிர்ச்சியும் வியப்புமாய்ப் பார்த்திருந்தாள் ஜோதி.

“இப்படிப் பேசிக்கிட்டே இருந்தா, ஒரு முடிவும் கிடைக்காது. பணம், உறவுகளுக்குள்ள என்னைக்கா இருந்தாலும் பகையைக் கொண்டு வந்துடும்‌. அதுனால காலம் தாழ்த்தாம திருப்பித் தர்றது தான் நல்லது.

ஒண்ணு, வாங்குன காசுக்கு ஈடா அவங்க கேட்கிற மாதிரி நிலத்தை அளந்து எழுதிக் கொடுத்துடு ஜோதி. இல்லேனா ரெண்டு மாசத்துல காசைத் திரும்பிக் கொடுக்கிற வழியைப் பாரு.

மூணாவதா ஒரு யோசனை இருக்கு. ஏற்கனவே லோகுவுக்கு, உன்னோட நிலத்தை வாங்குற எண்ணம் இருந்திருக்கு. முன்ன பின்ன ஆனாலும் சரி, உங்களுக்குள்ளேயே பேசி முடிச்சுக்கோங்க!” என்றார் பஞ்சாயத்துப் பேசுபவர்களில், அனைவரையும் காட்டிலும் மூத்தவராய் இருந்த ஒருவர்.

“இப்போதைக்கு என்னால வாங்க முடியாதுங்க. கையில அவ்வளவு காசு இல்ல. பத்திரத்தை முடிச்ச பின்னாடி வேணும்னா, கொஞ்சம் கொஞ்சமா தர்றேன். அதுக்குச் சம்மதிச்சா கிரையம் செஞ்சுக்கலாம்.” என லோகு உரைக்க,

“பத்திரம் முடிச்சிட்டா, அப்புறம் எங்க இவங்க தருவாங்க? வேலை முடிஞ்சிடுச்சுனு கமுக்கமா இல்ல இருந்துப்பாங்க. பின்னாடி, நானும்‌ என் பொண்ணும் நடுத்தெருவுல தான் நிக்கணும்.” என்றாள் ஜோதி.

“நான் ஒண்ணும் உன்னை மாதிரி இல்ல சித்தி. ஏழு வருஷமா நீ ஏமாத்துன மாதிரி, நான் செய்ய மாட்டேன்.” என்று அவளின் சுயமரியாதையைச் சீண்டிட,

“என்ன ஏமாத்துனேனா? அப்படி ஏமாத்துறவாளா இருந்தா, இன்னமும் இதே ஊர்ல உங்க கண்ணுல படுற மாதிரி, இதே வீட்டுல இத்தனை வருஷம் இருப்பேனா? வாய் இருக்குனு, என்ன வேணும்னாலும் பேசுவியா நீ.?”

“வாய் இருக்குனு பேசல. நிஜத்தைச் சொல்லுறேன். உனக்கு எங்கேயும் போக வழியில்ல. அத்தோட தாத்தாவோட நிலத்தை விட்டுட்டு, எங்க போக முடியும்? சொத்து வேணுமே? அதுக்காகத்தான்,
நாங்க இவ்வளவு பேசியும் காது விழாத மாதிரி சூடு சுரணைனு எதுவும் இல்லாம இன்னமும் இருக்க. ஒருவேளை வித்து இருந்தேனா, எங்களை ஏமாத்திட்டு, அந்தக் காசோட அம்மாவும் மகளும் ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டே ஓடி இருப்பீங்க!”

தமக்கையின் மகளை அதிர்ச்சியுடன் பார்த்த ஜோதி, “ஒருத்தியால இவ்வளவு கேவலமா பேச முடியுமா? என்னைப் பத்தித் தெரிஞ்சிருந்தும், நாக்குக் கூசாம இப்படி வார்த்தையைக் கொட்டுற? உங்கம்மா தான பின்னாடி இருந்து, உனக்குச் சாவி கொடுத்து‍‌ இப்படி எல்லாம் பேச வைக்குது?

என்‌ புருஷன், உன்னையும் தன்னோட பொண்ணா நினைச்சு என்ன எல்லாம் செஞ்சாரு‌‍? அதைக்கூட மறந்துட்ட இல்ல? ச்சீ.. நன்றி கெட்ட நாய்களா! சே.. சே.‌. நாய் நன்றியுள்ள ஜீவன். அதோட பெயரை உங்களுக்குச் சொல்லி, அதைக் கேவலப்படுத்த கூடாது!” என இதுவரை இழுத்துப் பிடித்திருந்த பொறுமையை முழுமையாய்க் கைவிட்டு, மனதில் இருந்த ரணத்தைச் சொற்களால் வெளியேற்றினாள்.

“என் பொண்ணையே பேசுவியா நீ.?” எனக் காதம்பரி தங்கையை அறைந்துவிட, அங்கு இருந்தவர்களிற்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.

‘அனைத்திற்கும் காரணம் தமக்கை தான்!’ என அறிந்திருந்தும் கூட, இவ்வளவு காலமும் உறவிற்காக அமைதியாய் இருந்தவள்,‌ இம்முறை திருப்பி அடிப்பதற்காகக் கை ஓங்கிட,‌ அதற்குள் ஓடிவந்து தடுத்து விட்டான் ரவி.

பணி முடிந்து வீட்டிற்கு வந்தவன் மனைவியைக் காணாது மகன்களிடம் விசாரிக்க, இருவரும் உரைத்ததின் படிதான் தங்கையின் இல்லத்திற்கு வந்திருந்தான்.

“என்ன ஜோதி இது? நம்மளை விட மூத்தது அது. இப்படிக் கை ஓங்கலாமா.?”

இளையவளின் கண்களில் சட்டென்று நீர் நிறைந்து விட, “எவ்வளவு நாளைக்குத்தான் பொறுமையாவே இருக்கிறது? நானும் மனுசி தான? எனக்கும் கோபம் வரும்ல? அப்படி என்ன அண்ணே, நான் தப்புச் செஞ்சிட்டேன்? ராணி மாதிரி பாத்துக்கிட்ட புருஷன், அல்பாயுசுல போய்ட்டாரு.‌ தூண் மாதிரி திடமான துணை நின்ன அப்பாவும் இல்ல. புருஷன் பிள்ளனு வாழ கொடுத்து வைக்கல.

சரி, பிள்ளையாவது நல்லா வாழட்டுமேனு நினைச்சா, அதுக்கும் வழி இல்லாம நிக்கிறேன். உங்க எல்லாரையும் விட, எந்த விதத்துல நான் நல்லபடியா வாழ்ந்துட்டேன்? அப்படி என்ன,‌ அக்காவுக்கும் உன்னோட பொண்டாட்டிக்கும் என்மேல வன்மம்? இப்படி மாறி மாறி என்னை ரணமாக்குறாங்க?

நம்ம அண்ணந்தானனு, உன்கிட்ட வந்து உதவி கேட்டது தப்பா? நான், உன்னோட காசை ஏமாத்த நினைக்கலயே அண்ணே? இந்த நிமிசம் வரைக்கும் திருப்பித் தரத்தான போராடிக்கிட்டு இருக்கேன். அப்புறமும்‌ ஏன் அண்ணே, இப்படிச் செய்யிறாங்க.? நீ அன்னைக்கே காசு இல்ல போனு சொல்லி இருந்தா, இப்ப இவ்வளவு தூரம் அசிங்கப்பட்டு நிக்க மாட்டேனோ என்னவோ?

நான், நகை நட்டு கேட்டேனா? என்னோட மகளுக்குச் சீர் செய்யச் சொன்னேனா.? நானும் என் புருஷனும் உன்னோட பையனுக்குச் செஞ்ச அளவுக்காவது, நீ என்னோட மக வயசுக்கு வந்தப்ப செஞ்சியா? ஐநூறு ரூபாய்க்கு சேலை எடுத்து வச்ச. என் புருஷன் சாதாரணமா வாங்கித் தர்ற சேலைக் கூட அறுநூறு எழுநூறுனு இருக்கும்.

நீ இல்லாத பட்டவனா இருந்திருந்தா, நம்ம அண்ணே கஷ்டத்துலயும் இவ்வளவு தூரம் செஞ்சிருக்கேன்னு சந்தோஷப்பட்டு இருப்பேன். ஆனா, நாலு வீட்டுக்குச் சொந்தக்காரன் சீர் செய்யிற முறையா இது? கண்ணாடி, சீப்பு, பொட்டு, வளையல்னு ஒவ்வொன்னையும், எது எடுத்தாலும் பத்து ரூபா கடையில இருந்து வாங்கி வந்து வச்சிருந்தா, உன்னோட பொண்டாட்டி.‌ ஒரு அம்பது ரூபா செலவழிக்கிறதுக்கு, தகுதி இல்லாதவளா நானு? அப்படியா, என் புருஷன் என்னை வச்சிருந்தாரு.?

இத்தனை வருசத்துல அதைப் பத்தி, ஒரு நாளாவது ஒரு வார்த்தை? என்னோட வாயில இருந்து வந்திருக்குமா அண்ணே? இல்ல, அவருதான் உயிரோட இருந்த வரைக்கும் கேட்டிருப்பாரா? என்னை, பிச்சைக்காரி அளவுக்குக் கீழ இறக்கி விட்டுட்டியே?

பொண்டாட்டியையும், பொண்ணைத் தந்த அக்காவையும் கொஞ்சம் மனசாட்சியோட நடந்துக்கோங்கனு சொல்லி வைக்கிற அளவுக்குக் கூடவா, உனக்குத் தைரியம் இல்லாம போச்சு? அப்புறம், என்ன ஆம்பளை நீ? எப்பவும் மாமியா பின்னாடி தான போய் நிப்ப? இப்ப மட்டும் எந்தத் தைரியத்துல முன்னாடி வந்த? ஏன், என்கிட்ட மட்டும் தான் உன்னோட வாய் பேசுமா? அவங்கக்கிட்ட எல்லாம் தார் உருண்டைய முழுங்கின மாதிரி மூடிக்குமா.?

அன்னைக்கே பெரிய அண்ணே சொல்லுச்சு, ‘உன்னை அவங்க நிம்மதியா வாழ விடமாட்டாங்க’னு. நான்தான் பாவி! நம்ம அக்கா, நம்ம அண்ணனு பைத்தியக்காரியாவே இருந்துட்டேன். அண்ணே பொண்டாட்டி, நாம பெத்த பிள்ள மாதிரி தானனு நினைச்சேன்.

காசு.. காசு.. காசுனு.. எப்பப்பாரு காசு. சைய் பணப் பிசாசுங்களா! அந்த நிலத்துக்காகத் தான.. நீ, உன்னோட பொண்டாட்டி, உன் மாமியா எல்லாருமா சேர்ந்து என்னை இந்தப் பாடு படுத்துறீங்க? தர முடியாது, தரவும் மாட்டேன். அது, என்னோட அப்பா எனக்குத் தந்தது. எங்கப்பனோட மண்ணு. எவனோ ஒருத்தன் கூட அதை அனுபவிச்சிட்டுப் போகட்டும். ஆனா, உங்களுக்குக் கிடைக்கக் கூடாது! உசுரே போனாலும், ஒருநாளும் அதுக்கு நான் விடமாட்டேன்.” என்று தன்னுள் இருந்த ஆதங்கத்தை எல்லாம் ஆவேசமாய்க் கொட்டி முடித்தாள் ஜோதி.

“வார்த்தையை அளந்து பேசு சித்தி. உனக்கும் ஒரு பொண்ணு இருக்கு. அதைக் கட்டிக் கொடுக்கணும், நீ! எங்க தயவு இல்லாம, அவ கல்யாணத்தை நடத்திட முடியாது! தாய்மாமனா, என்னோட புருஷன்தான்‌ வந்து நிக்கணும்! புத்தி சொன்ன, உன்னோட மூத்த நொண்ணன் வந்து நிக்க மாட்டான்!” என்று லோகேஸ்வரி தனது உண்மை முகத்தைக் காட்ட,

“என் பிள்ளையோட கல்யாணத்தை எப்படி நடத்தணும்னு, எனக்கு நல்லாவே தெரியும். முதுகெலும்பு இல்லாத எந்த ஆம்பளையும், தாய்மாமனா வந்து நிக்க வேண்டிய அவசியம் இல்ல. அது மூத்தவனோ இளையவனோ, எவனும் தேவை இல்ல எனக்கு! காசு தான வேணும்?‌ அந்தப் பஞ்சாயத்து பண்ண பெரிய மனுசங்க சொன்ன மாதிரி, ரெண்டு மாசத்துல உன்னோட காசை கொண்டு வந்து தூக்கிப் போட்டுட்டு, என்னோட பத்திரத்தை வாங்கிக்கிறேன். பெரிய மனுசங்களா, நீங்கதான் இதுக்குச் சாட்சி!

அக்கா, அண்ணேனு இனி எந்த உறவும் நமக்குள்ள கிடையாது.‌ நீ கடன் கொடுத்துருக்க. நான் வாங்கி இருக்கேன்.‌ அவ்வளவுதான். உங்களை மாதிரி ஆளுங்க பார்வைப் பட்டாக்கூட, வாழ்க்கை பட்டுப்போகும். அதான், நான் இப்படி நிக்கிறேன் போல. இதுக்கு மேலயும் ரணப்பட நான் தயாரா இல்ல. இப்ப, இடத்தைக் காலி பண்ணுங்க சாமிகளா!” என்று தலைக்கு மேலே இரு கைகளையும் தூக்கிக் கும்பிட, காதம்பரியும் லோகுவும் பார்வையாலேயே வெறுப்பை உமிழ்ந்து விட்டு வெளியேறினர்.

உலைகலனாய் கொதித்த ஜோதியின் இதயம் அதிவேகத்தில் துடித்து உடலின் மற்ற உறுப்புகளிற்கும் அதனைக் கடத்த, மார்பு மேலும் கீழுமாய் ஏறி இறங்கியது. அதன் அனுபவிக்கும் வலியை பிரதிபலிக்கும் விதமாய், இரு விழிகளின் ஓரமும் கண்ணீர் கசிந்து வழிந்தது. பஞ்சாயத்துச் செய்ய வந்த ஊர்க்காரர்கள் அவளின் நிலையைக் கண்டு பார்வையாளர்களாய் கடந்து செல்ல, அடிப்பட்ட மனதுடன் தங்கையின் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி நகர்ந்தான் ரவி.

5 thoughts on “11. தந்தை மண்”

  1. Avatar

    சே… இவனெல்லாம் என்ன அண்ணன். போய் பொண்டாட்டி முந்திக்குள்ள நுழைஞ்சுக்கச் சொல்லுங்க.
    ஜோதி சொன்ன மாதிரி இவங்க பார்வை பட்டு தான் ஜோதியோட குடும்பமே பட்டுடுச்சோ என்னவோ.

    இவங்க எதிர்க்கவெல்லாம் நின்னு, வாழ்ந்து ஜெயிச்சு காட்டணும் ஜோதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *