Skip to content
Home » 12. சுடரி இருளில் ஏங்காதே!

12. சுடரி இருளில் ஏங்காதே!

தனது கணவரிடம்,”நமக்குப் பேரன் பிறந்திருக்கான் ங்க!” என்று கூறிய தாட்சாயணியின் முகத்தில் புன்னகையும், பரவசமும் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் மா” எனக் கேட்டவருக்கும் முகம் கொள்ளாத மகிழ்ச்சி தாண்டவமாடியது.

அவருடைய வாய் முகூர்த்தம் பலித்து விட்டதால் இன்னும் அதிகமான ஆனந்தப் பரவசத்தில் இருந்தார் தூயவன்.

தனது மகனைக் கரங்களில் ஏந்திக் கொண்டு அவனது வதனத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவன், தனது மனைவியைப் பற்றி விசாரித்தான் தினகரன்.

“அவங்களை இப்போ நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம். அப்பறம் போய்ப் பாருங்க” என்று கூறி விட்டுச் சென்றார் செவிலியர்.

அதன் பிறகு, புவனாவை வேறு ஒரு அறைக்கு மாற்றி விட்டப் பிறகு குழந்தையையும் அவளது அருகில் படுக்க வைத்து விட்டு அவளுடைய வீட்டாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதைக் கேட்டவுடனேயே, தங்கள் வீட்டுப் பெண்ணையும், அவள் பெற்றக் குழந்தைச் செல்வத்தையும் பார்க்கப் போனார்கள்.

“அப்படியே உன்னை மாதிரியே இருக்கான் ம்மா!” என்று அந்தக் குழந்தையைக் குழுமியிருந்த அனைவரும் புவானவிடம் இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தனர்.

“வாழ்த்துகள் புவி! வாழ்த்துகள் மாமா?” என்று அறைக்குள் இருந்து ரேவதியின் குரல் சற்று சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது.

அப்போது,”ஏங்க! உங்கப் பேரனை வந்து பார்க்கலையா?” என அவரிடம் வினவினார் தாட்சாயணி.

“ஆங்! இதோ வர்றேன் ம்மா” என்றவரோ, நடுங்கிய உடல்மொழியுடன் தன்னுடைய மகள் இருந்த அறைக்குள் சென்றார் தூயவன்.

அதை உணர்ந்த அவருடைய மனைவியோ,“என்னாச்சு ங்க?” என்று அவரிடம் கேட்கவும்,

“ஒரு மாதிரி பறக்குற உணர்வு ம்மா! நம்மளோட வீட்டு வாரிசு பிறந்துட்டான்ல? அதான்!” என்று நெகிழ்வான குரலில் உரைத்தார்.

“ஓஹோ! அப்போ பொண்ணுப் பிறந்திருந்தால் என்ன சொல்லி இருப்பீங்க?” என்று வினவியவாறே அவரை உள்ளே அழைத்துப் போய்ப் பேரனைக் காட்டினார் தாட்சாயணி.

“எனக்கே ரெண்டு மகளுங்க இருக்காங்க! அப்போ பேத்திப் பிறந்தால் மட்டும் நான் சோகமாகவா இருப்பேன்?” என்று தன் மனைவியிடம் சொல்லி விட்டுப் பேரனைப் பார்த்துப் புன்னகைத்தார் தூயவன்.

அங்கே ஏற்கனவே தனது அக்காவின் மகனைத் தொட்டுத் தொட்டுப் பார்த்துக்,“குட்டிப்பா!!” என்று கொஞ்சிக் கொண்டிருந்த ரேவதியிடம்,”இப்படி வா. உங்கப்பா இவனைப் பார்க்கனும்” என்று சொல்லித் தன்னருகே நிறுத்திக் கொண்டார் தாட்சாயணி.

அவளும் தாயுடன் சமர்த்தாக நின்று கொண்டதும்,

“அப்படியே பார்த்துச் சிரிக்க மட்டும் செய்றீங்களே? உங்கப் பேரனைத் தூக்கிக்கொங்க சம்பந்தி” என்று தூயவனுக்கு வலியுறுத்தினார் சேகர்.

“அச்சோ! இருக்கட்டும் சம்பந்தி” என்று கூறி விட்டார் புவனாவின் தந்தை.

“நான் தூக்கிக் காட்டுறேன்” எனக் குழந்தையைத் தனது கரங்களில் ஏந்திக் கொண்டுக் கணவரின் முன்னால் நீட்டினார் தாட்சாயணி.

அவனது நெற்றியிலிருந்து, கண்கள், காதுகள் என்று அனைத்தையும் ஆசையாகப், பாசமாகத் தடவிப் பார்த்துக் கொண்டார் தூயவன்.

அங்கேயிருந்த மற்றவர்கள் சொன்னதைப் போலவே, அந்தக் குழந்தை புவனாவைப் போலத் தான் இருந்தான். 

இன்னும் வளர வளர அவனுடைய உடல் மற்றும் முகத்தில் மாற்றம் நிகழக் கூடும். ஆனால், அதையெல்லாம் இப்போது அந்த இரு குடும்பங்களும் தங்களது கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

அவர்களைப் பொறுத்தவரை அந்தக் குழந்தையின் வரவே தங்களுடைய மகிழ்ச்சிக்கும், நிறைவிற்கும் போதுமானதாக இருந்தது.

அந்தக் குழந்தையை விட்டுத் தன் பார்வையை அகற்றவே இல்லை தூயவன். அவருக்குத் தனது குலதெய்வம் மற்றும்  தனது தந்தையைப் போலவே, மகளுக்குப் பையன் பிறந்ததைப் போன்றதொரு உவகை உண்டாகியது.

அதனால் அப்போதிருந்தே அவனை, “ஐயா” என்று விளிக்கத் தொடங்கி விட்டார் தூயவன்.

அவனைக் காணக் கோடிக் கண்கள் போதாது என்பதைப் போல இருந்தது அவரது பார்வைகளும், அன்பான தழுவல்களும்.

அதற்குப் பிறகான நாட்களில், அவளது ஒரு வார மருத்துவமனையில் வாசம் செய்தப் பின்னர், புவனாவின் பிரசவத்திற்கு ஆகிய பணத்தைக் கொடுத்து விட்டு அவளை வீட்டிற்கு அழைத்து வந்து, வீட்டின் வாயிலில் நிற்க வைத்து தினகரன், புவனா மற்றும் அவர்களது மகனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டிச் சென்றார்கள்.

அவர்களோடு சேகர் மற்றும் மல்லிகாவும் உடன் வந்திருந்ததால் அவர்களுக்குக் காஃபி கொடுத்து உபசரித்தனர் தாட்சாயணி மற்றும் ரேவதி.

தனது மனைவியுடனும், குழந்தையுடனும் ஒரு சில மணித்துளிகள் நேரம் செலவிட்டு முடித்த தினகரன் மற்றும் அவனது பெற்றோரும் கிளம்பும் சமயம் வந்த போது,

“உடம்பை பாத்துக்கோ ம்மா. இவங்க மூனு பேரும் குழந்தையை நல்லபடியாக பாத்துப்பாங்கன்னு எங்களுக்குத் தெரியும். அதனால் அதைத் தனியாகச் சொல்லனும்னு அவசியமில்லை. நானும் ஏதாவது பத்தியச் சாப்பாடு செஞ்சுக் கொண்டு வந்து கொடுப்பேன். நீ கண்டிப்பாக சாப்பிட்டுத் தான் ஆகனும்” என்று தனது மருமகளிடம் வலியுறுத்தி விட்டு இவர்களிடம் விடைபெற்றுச் சென்று விட்டனர்.

அந்தக் குழந்தையோ, ஆறு மாத காலங்களில் தனது அன்னையின் பெற்றோர் மற்றும் தங்கையின் பராமரிப்பில் மிகவும் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ந்து வந்தான்.

அதில் மிக முக்கியமான விஷயம் என்னவெனில், அவன் அநேகமான சமயங்களில் தன் தாத்தா மற்றும் பாட்டியுடன் தான் இருந்தான். 

அவனது சித்தியான ரேவதியோ, ஒரு படி மேலே போய் இரவும், பகலும் அவனைத் தனது கண்ணின் மணியைப் போலக் கவனித்துக் கொண்டாள்.

ஒரு சிறிய முணுமுணுப்புக் கூட இல்லாமல் அவனுக்கும், தன் மகளுக்கும் தேவையானப் பொருட்களை எல்லாம் கணக்குப் பார்க்காமல் வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருந்தார் தூயவன்.

அப்போதும் கூட, அவர்களுக்கு உண்டான செலவைத், தான் பார்த்துக் கொள்வதாக சொல்லி முன் வந்த தினகரனிடம்,”அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை. பொண்ணுக்கு முதல் பிரசவம் தாய் வீட்டில் தான் நடக்கனும்ன்ற மாதிரி அதுக்கப்புறமும் நாங்க தான் அவங்களுக்கு எல்லாமே பார்த்து அனுப்புவோம்” என்று அவனிடம் உறுதியாக கூறி விட்டார்கள் புவனாவின் தாய் மற்றும் தந்தை.

இவ்வளவு அருமை பெருமையாக வளர்த்த தனது பேரனின் அருகாமையில் இருந்த தூயவனுடைய ஆயுட்காலம் மிகக் குறைவே என்பதை அவரது இறப்பிற்குப் பின்னர் தான் அவரது மனைவியும், மகள்களும் உணர்ந்து கொண்டனர்.

ஏனென்றால், புவனாவின் மகனுடைய ஒரு வயது பிறந்தநாளை மட்டும் தான் அவரால் கொண்டாட முடிந்தது. அதன்பின், மீளாத் தூக்கத்திற்குப் போய் விட்டார் தூயவன்.

  • தொடரும் 

5 thoughts on “12. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. Kalidevi

    Oru appa va avar kadamai ellathaium ponnuku pani pathu alagu pathutaru athum mootha ponuku seirathu periya aasai tha appavuku

  2. Avatar

    அச்சோ..! பாவம் தான் தூயவன். அவர் கொடுத்து வைச்சது அவ்வளவு தான் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *