Skip to content
Home » 12. தந்தை மண்

12. தந்தை மண்

அத்தியாயம் 12

மகள் பணிமுடிந்து வீட்டிற்கு வந்ததும், நடந்த நிகழ்வுககளை மேலோட்டமாய் உரைத்தாள் ஜோதி.

ஒரு பெருமூச்சை வெளிவிட்ட திவ்யா, “இவ்வளவு காலமா, எப்படிம்மா இவங்களைப் பத்தித் தெரிஞ்சிக்காம இருந்த.?”

“தெரியாதுனு சொல்ல முடியாது ம்மா‌‌. ஓரளவுக்குத் தெரியும்‌. என்னன்னாலும் நம்ம சொந்தம். விட்டுக் கொடுக்கக் கூடாதுனு தான், எதுவும் தெரியாத மாதிரியே இருந்தேன். ஆனா, இந்த அளவுக்குக் கெட்ட புத்தியோட இருப்பாங்கனு நினைச்சுப் பார்க்கல.”

“இப்பவாது புரிஞ்சு விலகிட்டியே,‌ அது போதும்!”

“ம்ம்.. அப்படியே காசையும் கொடுத்து, முழுசா இதை முடிச்சிடணும் திவிமா‌.”

“நான், என்னோட ஓனர்கிட்ட கேட்டுப் பார்க்கிறேன் ம்மா‌. நிச்சயமா ஏதாவது உதவி செய்வாங்க.”

தலையசைத்த ஜோதி, தனக்குப் பழக்கமானவர்களைப் பணத்திற்காகப் பார்க்கச் சென்றாள்‌.

வழியில் மனம் முழுவதும் தந்தையின் நினைவே ஆக்கிரமித்து இருந்தது‌.

‘எனக்கும் என் பிள்ளைக்கும் ஒரு வாழ்க்கை அமையணும். பாதுகாப்பு தேவைனு தான், உங்க மண்ணை எங்களுக்குக் கொடுத்தீங்க. ஆனா, அதுவே இந்த ‌அளவுக்கு நாங்க வலியை அனுபவிக்கிறதுக்குக் காரணம் ஆகிடுச்சு.

நான் வேற எந்தச் சாமியையும் கும்பிடல. உங்களைத்தான் அப்பா மனசுல நினைச்சிட்டு இருக்கேன். வரமா, மண்ணைத் தந்த நீங்க, அதோட பலனையும் தந்துடுங்க. நானும் என் பிள்ளையும் நல்லா இருப்போம்!’ என்று இறந்த தந்தையை தெய்வத்தின் இடத்திற்கு ஏற்றி வேண்டிக் கொண்டாள்.

அன்னையும் மகளும் பணத்திற்காக அலைந்து கொண்டு இருக்கையில், தரகரின் மூலமாய், மாப்பிள்ளையின் விபரங்களும் வந்தபடி இருந்தன.

“இதெல்லாம் இப்ப அவசியமா அம்மா? முதல்ல நிலத்தோட பிரச்சனையை முடிப்போம்!” எனத் திவ்யா உரைக்க, “உன்னோட கல்யாணத்தை நல்ல படியா நடத்திக் காட்டுறேன்னு சொல்லி இருக்கேன். அதையும் தள்ளிப் போடாம உடனே செஞ்சாகணும். இல்லேனா, இப்ப செய்யிறது மாதிரி அந்த விசயத்துலயும் ஏதாவது பிரச்சனையை ஆரம்பிச்சு விட்டுடுவாங்க.” என்ற ஜோதி மாப்பிளை தேடும் பணியையும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தாள்‌.

தரகர் சொன்ன பல வரன்களில், சதீஷின் குடும்பத்தார் மட்டும் நேரில் வந்து பார்த்துச் சென்றனர். அவர்களின் குடும்பப் பின்னணியும், மாப்பிள்ளையின் தகுதியுமாய்த் தரகர் சொன்ன விசயங்களும் திருப்திகரமாய் இருந்ததால், ஜோதி தான் வரச் சொல்லி இருந்தாள்.

அந்த வரனை விட்டுவிட அவளிற்கு மனமில்லை‌. அதேநேரம், நிலத்தின் பத்திர விசயத்தில் ஒரு முடிவு ஏற்படாத நிலையில், உடனடியாய் சம்மதம் சொல்லவும் இயலாமல் தவித்தாள்.

அதனால் கால அவகாசம் கேட்டு, அதற்குள் அனைத்தையும் செய்து முடித்து விடலாம் என எண்ணினாள். இம்முறை ஜோதியின் எண்ணங்களும் முயற்சிகளும், கைமேல் பலன் தந்தன.

அவள் உதவி மற்றும் கடன் கேட்ட அனைவருமே, சிறிய அளவிலாவது‌ பணம் தந்தனர்‌. திவ்யா பணிபுரியும் இடத்தில் இருந்து வாங்கி வந்த கடனையும் சேர்த்து, தேவையான தொகை தயாரானது.

மறுநாளே, அந்தப் பணத்தைத் தருவதற்காக இராஜ கோபாலன் பட்டிக்குக் கிளம்பி ‌விட்டால் ஜோதி‌. நேராய் தமையனின் இல்லத்திற்கே சென்று, அவனது மனைவி லோகேஸ்வரியிடம் கொடுத்திருப்பாள் தான்.

ஆனால், அவளை நம்ப‌ இயலாது. அத்தோடு பஞ்சாயத்து பேச வந்த பெரிய மனிதர்களுக்கும் இந்த விசயம் தெரிய வேண்டும் அல்லவா? அவர்கள் தானே சாட்சி! ஆகையால்‍, நேராய் ஊரிற்கே வந்து விட்டாள்.

எனினும் இந்த இடைப்பட்ட இரண்டு மாதங்களில், தன்னால் என்னென்ன பிரச்சனை செய்ய இயலுமோ‍, அனைத்தையும் செய்திருந்தாள் காதம்பரி.

சுந்தரத்தின் இறப்பின் பொழுதே, ஜோதியின் நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி இருந்த செல்வ ரத்னம், அவளிடம் அந்த விசயத்தைத் தெரிவித்தான்.

“..’என்னோட மகளுக்கு நிலத்தைப் பத்தி எதுவும் தெரியாது. யாருக்குக் குத்தகைக்குக் கொடுத்திருக்கேன்ற விபரத்தைக் கூடச் சொல்லல. ஒருவேளை, எனக்கு எதுவும் ஆகிட்டா, நிலத்தை அவக்கிட்ட ஒப்படைச்சிடு’னு ஐயா சொல்லி இருந்தாருமா‌ என்கிட்ட. எப்ப உங்களுக்குத் தோட்டம்‌ வேணும்னு, ஒரு நாலு மாசத்துக்கு முன்னாடியே சொல்லீடுங்க. அதுக்குத் தகுந்த மாதிரி, நான்‌ என்னோட வேலையை முடிச்சுக்குவேன்!” என உரைத்துத் தனது தொடர்பு எண்ணையும் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான்.

ஜோதிக்கு அந்நிமிடம் வரை, நிலத்தின் குத்தகை பற்றிய யோசனையே இல்லை. அதன்பிறகும் கூட, செல்வத்திடம் அதைப் பற்றிப் பேச இயலவில்லை.

தொடர்ச்சியான உடல் பாதிப்பு, மருத்துவச் சிகிச்சை, உடன் பிறந்தவர்களின் சுயநலமான செயல்பாடுகள் என ஒருவித இறுக்கத்திலும் அச்சத்திலுமே நாள்களைக் கடத்தி வந்திருந்தாள்.

இறுதியாய் ஊரார்கள் வந்த தினத்தன்று பேசி முடிவெடுத்த பின்.. செல்வத்திற்கும் அழைப்பு விடுத்து, “எனக்கு, நிலம் வேணும்பா‌. நீங்க அடுத்து எந்த வெள்ளாமையையும் வைக்காதீங்க!” என்று உரைத்திருந்தாள்.

உடனே, “சரிங்கமா.” என ஒப்புக் கொண்டவன், அதற்குத் தக்கபடி தனது பணியைத் தொடர்ந்தான்.

ஆனால் சுற்றி இருப்பவர்கள் அப்படியே விட்டுவிடுவார்களா என்ன.?

பேச்சு வார்த்தை முடிந்து ஊரிற்கு வந்த காதம்பரிக்கு,‌ தங்கையின் சொல்லும் செயலும்,‌ அளவுகடந்த ஆத்திரத்தை உண்டாக்கி இருந்தது.

முன்னரே, “அவளால தான், உனக்கும் நிலத்துல ஒரு பங்குக் கிடைச்சுச்சு!” என உரைத்த தந்தையின் சொற்களில் தான், ஜோதியின் மீது வெறுப்பு என்பது உருவாகத் துவங்கி இருந்தது.

‘எந்த நிலத்தை வைத்து தந்தையானவர் தன்னைத் தாழ்த்திப் பேசினாரோ, அந்த நிலம் தங்கையின் கைகளிற்குச் செல்லவே கூடாது‌!’ என்பதில் உறுதியாக இருந்தாள்.

இவை அனைத்திற்கும் முன்னரே, தந்தையின் மண்ணை மொத்தமாய்த் தன்வசம் மாற்றிக் கொள்ளும் எண்ணம் இருந்தது காதம்பரிக்கு‌. ஆனால், ஆண்பிள்ளைகள் இருவர் இருக்கையில் அது சாத்தியம் இல்லை என்பதால், அமைதியாய் காலத்தைக் கடத்தினாள்.

அத்தருணத்தில் தான் வெங்கடேஷிற்கு விபத்து நடந்து, பணம் தேவையென ரவியிடம் வந்து நின்றாள் ஜோதி.

‘பின்னாளில் அதனை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்!’ என எண்ணி, மகளிடம் உரைத்துப் பணம் கொடுக்கச் சம்மதம் தெரிவித்தாள். ஆகையால் தான், ரவி தங்கைக்கு உதவும் பொழுது, லோகேஸ்வரி எவ்வித மறுப்பும் சொல்லவில்லை.

சுந்தரம் பெண் பிள்ளைகளுக்கும் நிலத்தைப் பிரித்துக் கொடுத்தது, ஜோதி பெற்ற பணத்திற்கு அடமானமாய்ப் பத்திரத்தையே கொண்டு வந்து தந்தது என, அனைத்தும் அவர்களுக்குச் சாதகமாகத்தாய்த் தான் நடந்து கொண்டிருந்தது.

ஆனால் இவர்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ‘நிலத்தின் பத்திரமே வேண்டாம்!’ என்று தந்தையானவர் எடுத்த முடிவுதான், காதம்பரியையும் லோகுவையும் ஆட்டம் காண வைத்து விட்டது‌.

தங்களிடம் இருக்கும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக, பத்திர அலுவலகத்தில் பணிபுரியும் ஒருவரைப் பிடித்துப் பழகி,‌ வேலையைத் தாமதப்படுத்தினர். இறுதியில் புதிய பத்திரத்தை வாங்காமலேயே, சுந்தரமும் காலனிடம் சென்றடைந்தார்.

‘எப்படியும் ஜோதியிடம் இருந்து நிலத்தைப் பெற்று விடலாம்!’ என எண்ணிக் கொண்டிருந்த காதம்பரி, தங்கையின் இந்தப் புதிய முகத்தை எதிர்பார்த்திடவில்லை.

‘பணத்திற்குப் பதில் நிலத்தை எழுதி வாங்கிவிடலாம்!’ என நினைக்க, அதற்கு வாய்ப்புக் கொடுக்காமல், கண்ட கனவுகளிற்குக் கானல் நீரைப் பரிசளித்து அனுப்பி விட்டாள் இளையவள்.

அடைந்த ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ள இயலாது, நிலத்தைக் குத்தகைக்கு வாங்கி இருக்கும் செல்வ ரத்னத்திற்குத் தொந்தரவு தர ஆரம்பித்துவிட்டாள் காதம்பரி.

“நிலத்தோட பத்திரம் இருக்கிறது என்கிட்ட.‌ நீ, யார்கிட்ட கேட்டு வெள்ளாமை வச்ச?‌ ஒழுங்கா, வச்ச செடியை எல்லாம் பிடுங்கிப் போட்டுட்டு நிலத்தை ஒப்படைக்கிற வழியைப் பாரு!” என்று குத்தகைக்கு வாங்கியவனிடம் சண்டைக்குச் சென்று, அதன் மூலமாய் ஜோதியை மேலும் மேலும் சிக்கலிற்குள் தள்ள முயன்றாள்.

சுந்தரம், தனது பிள்ளைகளின் குணத்தையும் அவர்களின் குடும்பத்தின் சூழலைப் பற்றியும் மேலோட்டமாய்ச் செல்வத்திடம் முன்னரே உரைத்து வைத்திருந்தால், அவனும் இதுபோலான ஒரு நிகழ்வை எதிர்பார்த்தே இருந்தான்.

“பத்திரம் உங்க கையில இருந்தா, நிலம் உங்களுக்குச் சொந்தம் ஆகிடுமா? ஜோதி அம்மா, எதுவும் எழுதிக் கொடுத்திருக்காங்களா? இல்லேல? எனக்குக் குத்தகைக்கு விட்டது சுந்தரம் ஐயா.‌ கேள்வி கேட்கிறதுக்கு அவரோட இளைய மகளைத் தவிர, வேற யாருக்கும் அதிகாரமோ உரிமையோ இல்ல‌! போயிட்டு வாங்க.” என முகத்தில் அடித்தாற் போல், அதேநேரம் வெகு நிதானமாகவும் தெளிவாகவும் பதில் அளித்துச் சென்றான் அவன்.

மூக்கு உடைபட்டது போலானது காதம்பரிக்கு. அந்த ஆத்திரத்தில் காய்கறி செடிகளில் இருந்து தக்காளி, வெண்டை, மிளகாய், கத்தரி போன்றவற்றைப் பறித்துச் சென்றாள்.‌ மனைவியின் சொல்லில், ஜெயராஜும் அப்பணியை இணைந்து செய்தான். தினமும் இது தொடர்ந்தது.

ஜோதி, ‘நிலம் வேண்டும்!’ ‌என உரைப்பதற்கு ஒன்றரை மாதம் முன்புதான் செடிகளை நட்டிருந்தான் செல்வம். ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒருகாயைப் பறித்து விற்பனைக்குக் கொண்டு செல்வது போன்று பயிர் செய்திருந்தான்‌.

அப்பொழுதுதான், காய்கள் வரத் துவங்கி இருந்தன. முடிந்த மட்டும் காய்களை எடுத்துவிட்டு, உழுது ஜோதியிடம் ஒப்படைத்து விடலாம் என எண்ணியிருந்தான்.

ஆனால் செய்த பணிக்கான பலனைக் கிடைக்க விடாது இடையில் புகுந்து, அதனைத் தான் அனுபவித்துக் கொண்டிருந்தாள் காதம்பரி.

எப்பொழுதும் நிலத்திலேயே நின்று காவல் காக்க இயலாத நிலை செல்வத்திற்கு.‌ தினமும் வாக்குவாதம் நிகழ்ந்தது.

காதம்பரியும் ஜெயராஜும் மாறுவதாய்த் தெரியாததால்.. அவன் ஜோதிக்கு அழைப்பு விடுத்து விவரங்களை உரைத்தான்.

“தம்பி, இப்ப இருக்கிற நிலைமையில என்னால எதையும் செய்ய முடியாது‌. எதுனாலும் நீங்களே பார்த்துக்கோங்க!” என்று அவள் பதில் சொல்லிவிட, ஒருநிலைக்கு மேல் பொறுமை காக்க இயலாது, காவல் நிலையத்தில் புகார் அளித்தான்.

காவலர்கள் காதம்பரியிடம் சென்று விசாரிக்க, குடிபோதையில் தனது கணவன் அப்படிச் செய்து விட்டதாய் பழியை ஜெயராஜுன் மீது போட்டாள்.

முதலில் அவர்கள் எச்சரித்துச் செல்ல, அதை எல்லாம் கண்டு கொள்ளாது மீண்டும் மீண்டும் அதையே தொடர்ந்தனர் கணவனும் மனைவியும்‌.

செல்வம் நியாயம் கேட்க செல்ல, வாக்குவாதம் வலுத்து, கைக்கலப்பு உருவானது. மதுவின் போதையில், செல்வத்தின் மனைவியைப் பற்றி ஜெயராஜ் வரைமுறை அற்ற சொற்களை உதிர்க்க, அடித்து வாயையும் கையையும் உடைத்து விட்டான் அவன்.

விபரம் காவல்துறைக்குச் சென்றது, ஜெயராஜை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, செல்வத்தைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

விசயம் காட்டுத்தீ போல் பரவி, ஜோதியின் செவிகளையும் அடைந்தது. செல்வத்தைத் தவிர்த்து அவனது பின்புலமோ குடும்பத்தாரைப் பற்றியோ எதுவும் தெரியாது என்பதால், ஊரிற்குச் செல்லும் பொழுது நேரில் பார்த்துப் பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாய் இருந்து விட்டாள்.

எனினும் ‘தன்னால் தானோ இதெல்லாம்?’ என்ற மெலிதான குற்ற‌ உணர்வு அவளுள் இருக்கத்தான் செய்தது.

ஊரில் இருந்த தோழி கோகிலாவின் மூலம், அங்கு நடந்த நிகழ்வுகளை அவ்வப்போது கேட்டறிந்தாள். செல்வம் கைதானதற்குப் பிறகு, காதம்பரி நிலத்தைப் பராமரித்து வருவதாய்த் தெரிவித்தாள் அவள்.‌

அவனின் குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, “செல்வத்தோட தம்பி, தள்ளு வண்டிக் கடை ஒண்ணு வச்சிருக்கான். இவனோட பொண்டாட்டிதான், கொழுந்தனுக்குத் தேவையான உதவி எல்லாம் செஞ்சு தொழிலைக் கூட இருந்து பார்த்துக்கிறா. அதுனால வருமானத்துக்கு எல்லாம் பிரச்சனை இல்ல.

அவனை அரெஸ்ட் பண்ணி விசாரணைக் கைதியா வச்சிருக்காங்க. வீணான பிரச்சனை வேண்டாம்னே அவனோட பொண்டாட்டி தம்பி யாரும், நிலத்து பக்கமே வர்றது இல்ல ஜோதி. ஆனாலும் நாலு வருசம் பாடுபட்டு உருவாக்குன மண்ணு.‌ நீ, ஒருமுறை வந்து பாரேன். உனக்கே புரியும். நினைக்க நினைக்க, எனக்கே சங்கடமா இருக்குடி. மனசே ஆற மாட்டிது.

உங்கக்கா எல்லாம் மனுசி தானா.? ராட்சசி ராட்சசி‌. அதுலயும், அவ புருஷன்‌. அவனுக்கு எல்லாம் நல்ல சாவே வராது!

செல்வத்தோட பொண்டாட்டி, எப்படியானவனு தெரியுமா? தங்கமான குணம். யாரும் எதுவும் கேட்டா, இல்லன்னே சொல்லாது. கொழுந்தனும் அந்தப் பிள்ளயும் அண்ணன் தங்கச்சி மாதிரி பழகுனா, உங்கக்கா புருஷன் ரெண்டு பேரையும் சேர்த்து அசிங்கமா பேசி கேவலப்படுத்தி விட்டுட்டான்.

செல்வம் தம்பிக்கு, அவ்வளவு லேசுல கோபம் வராது தெரியுமா? அப்படியே கோபம் வந்தாலும், வெளிய காட்டிக்காது. எதிர்ல இருக்கிறவங்க குணம் அதுதான்னு விலகிப் போயிடும். ஆனா, இந்த முறை கை நீட்டி‌ இருக்குனா, இவங்க எவ்வளவு தூரத்துக்குப் பேசி இருப்பாங்கனு பார்த்துக்க!” என்று ஊரில் இருக்கும் சூழலை உரைத்தாள்.

நடந்த நிகழ்வுகளை எல்லாம் சிந்தித்தபடியே, பாப்பாத்தி அம்மன் கோவிலில் அமர்ந்து இருந்தாள் ஜோதி.

இன்னும் செல்வத்தின் குடும்பத்தாரைச் சந்திக்கவில்லை. இந்தப் பிரச்சனைகளை எல்லாம் முடித்துவிட்டுப் போய்ப் பார்க்க வேண்டும் என எண்ணி இருக்கிறாள்.

7 thoughts on “12. தந்தை மண்”

  1. Avatar

    இவ இப்படி எல்லாத்தையும் ஆறப் போடறதாலத்தான்
    நிறைய பிரச்சினைகளே உருவாகுதோ என்னவோ..?

    1. NandhiniSugumaran

      இருக்கலாம். ஆனா ஒரு தனி மனுசியால எந்த ஒரு முடிவையும் சட்டுனு எடுத்துட முடியாது இல்லையா.?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *