Skip to content
Home » 14. சுடரி இருளில் ஏங்காதே!

14. சுடரி இருளில் ஏங்காதே!

தான் சொன்னதைப் போலவே, அடுத்த நாள் அதிகாலையிலேயே, தனது இளைய மகளான ரேவதியை எழுப்பிக் குளிக்க அனுப்பி வைத்து விட்டு,

அதற்கு முன்பாகவே, தான் குளித்துத் தயாராகி இருந்ததால், தன்னுடைய கணவருக்கு முப்பது கும்பிடுவதற்குத் தேவையானவற்றை ஐயர் சொன்னபடியே எடுத்து வைப்பதில் முனைந்தார் தாட்சாயணி.

அதற்குள்ளாக அவரது மகளும் தயாராகி வரவே, அவளும் தாய்க்கு உதவிக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளுக்குச் செல்பேசி அழைப்பு விடுத்த அபிராமியோ,”ரேவா! நான் வீட்டில் இருந்து கிளம்பிட்டேன்” என்று அவளிடம் தகவல் தெரிவிக்கவும்,

“சரிங்க அக்கா. வாங்க” என்றாள் ரேவதி.

“புவி வந்தாச்சா?” என்று அவளிடம் வினவ,

“இன்னும் வரலை க்கா” என்ற பதிலைக் கேட்டதும்,

“சரி. நான் வர்றேன்” என்று கூறி விட்டு அழைப்பை வைத்து விட்டாள் அபிராமி.

அந்தத் தகவலைத் தாயிடம் உரைத்து விட்டு வேலையைத் தொடர்ந்தாள் ரேவதி.

“புவனாவுக்குக் கால் செஞ்சுக் கேளு” என்று அவளுக்கு ஆணைப் பிறப்பித்தார் அவளது அன்னை.

அதற்கு இணங்கியவளோ, தமக்கைக்கு அழைத்துப் பேசவும், அவளோ,”அஜ்ஜூவுக்குப் பாலை ஆத்திக் கொடுக்க லேட் ஆகிடுச்சு. இதோ இப்போ கிளம்பிட்டோம். அம்மாகிட்ட சொல்லிடு” என்று தங்கையிடம் உறுதியாக கூறி வைத்தாள் புவனா.

அதையும் தாயிடம் சொல்லியவளோ,”அவங்க எல்லாரும் சொன்னபடி வந்துடுவாங்க ம்மா. நாம் எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டோமான்னு சரி பாருங்க” என்று அவருக்கு அறிவுறுத்தினாள் ரேவதி.

அவரும் அதை ஒப்புக் கொண்டு, அனைத்தையும் சரிபார்த்து முடித்து விட்டு,”கோயிலுக்குப் போய் விளக்குப் போட்டுட்டு வந்ததுக்கு அப்பறம் தான் சாப்பிடனும் டா. வந்து சமைச்சுக்கலாம். ஓகே யா?” என்று மகளிடம் வினவினார் தாட்சாயணி.

“ஓகே ம்மா” என்று அதை ஏற்றுக் கொண்டவளோ, தனது உடன்பிறந்த மற்றும் உடன்பிறவாத சகோதரிகளின் வருகைக்காக காத்திருக்கலானாள் அவரது இளைய மகள்.

அனைத்துப் பொருட்களையும் எடுத்து வைத்தப் பின்னர், தாயும், மகளும் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டிருந்த வேளையில், அவர்களது வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் அபிராமி.

“வாங்க க்கா” என்றவளோ,

“எல்லார் கூடேயும் வர்றேன்னு சொல்லி இருந்தீங்களே?” என்கவும்,

“அவருக்கு முக்கியமான வேலை வந்துருச்சு ரேவா! அப்பறம் எங்கே அந்த ரெண்டையும் சமாளிக்கிறது? அதான், ஸ்கூலுக்குத் தாட்டி விட்டுட்டேன்” என்று அவளிடம் சொன்னாள் அபிராமி.

“ஓஹோ! சரிங்க அக்கா” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, புவனாவும், தினகரனும், தங்கள் மகன் அர்ஜூனுடனும், சேகர் மற்றும் மல்லிகாவுடனும் அங்கே வந்து விட,

“ஹேய் குட்டி மனுஷா!” என அவனைத் தன்னுடைய கைகளில் வாங்கிக் கொண்டு,

“வாங்க!” என்று அந்த ஐவரையும் வரவேற்றாள் ரேவதி.

அவளது நலனை விசாரித்து விட்டுத் தாட்சாயணியிடம் சென்று விட்டார்கள் புவனாவும், மல்லிகாவும்.

தினகரனும், சேகரும் அந்த வீட்டின் ஹாலிலேயே நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கொண்டனர்.

“எல்லாம் முடிச்சாச்சு. எப்போ கோயிலுக்குப் போகப் போறோம் மா?” என்றாள் புவனா.

“இப்போ கிளம்பிடலாம்” என்றவரோ, தன் வீட்டு ஆட்கள் அனைவரையும் வெளியே செல்லத் தயாராகச் சொல்லி விட்டு ஆளுக்கு ஒரு பொருளைக் கொடுத்துப் பத்திரமாக கொண்டு வருமாறு உத்தரவிட்டார் தாட்சாயணி.

அதன் பின்னர், அனைவரும் ஆட்டோவில் ஏறி கோயிலுக்குச் சென்று, அங்கே கடவுள் சன்னதியில் தூயவனுக்காக விளக்கை ஏற்றி விட்டு மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்கள் அனைவரும்.

“எங்க எல்லாரையும் எப்பவும் நல்லபடியாக வாழ வைக்கனும்!” என்ற வேண்டுதல் தான், அவர்கள் அனைவரிடத்திலும் ஒரு மனதாக காணப்பட்டது.

அந்தக் கோயிலில் சில நிமிடங்கள் அமர்ந்து விட்டுத் தான் வெளியே வந்தனர்.

அங்கே வந்த ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவர்களோ,”யாருமே சாப்பிடலை. சீக்கிரம் போய்ச் சமைக்கனும்” என்று பேசியபடியே பயணித்துக் கொண்டிருந்தனர்.

வீடு வந்து சேர்ந்ததும், வேலைகளைப் பிரித்துக் கொண்டதால், சமையலும் விரைவாகவே முடிந்து விட்டிருக்க, உணவை உட்கொண்டு விட்டு மதியம் சிறிது நேரத்திற்கு ஓய்வெடுக்கத் தொடங்கினர்.

ஆனால், தாட்சாயணிக்கு உறக்கம் வரவே இல்லை. தனது கணவர் இறந்து இன்றுடன் ஒரு மாதம் ஆகி விட்டது என்று இப்போதும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனது.

அதை எண்ணியே சில மணி நேரங்களைக் கடந்து கொண்டிருந்தவரிடம் வந்த புவனாவோ,”நீங்க அப்பாவை நினைச்சுக் கவலைப்பட்றீங்கன்னுப் புரியுது ம்மா! எனக்கு என்னச் சொல்றதுன்னே தெரியலை. ஆனால் ஒன்னு! நம்மளை விட்டு அவர் எங்கேயும் போகவே மாட்டார் ம்மா! அர்ஜூன் பிறக்குறதுக்கு முன்னாடியும், பிறந்ததுக்கு அப்புறமும் எவ்வளவு சந்தோஷமாக இருந்தார்? அப்பா இடத்தை அவன் நிரப்புவான்னு நான் சொல்லலை. ஆனால், அவர் ஞாபகம் வரும் போதெல்லாம் நான் அவனைத் தான் பார்ப்பேன் ம்மா! அதையே தான் உங்களுக்கும் சொல்றேன். நீங்க அர்ஜூனைப் பார்க்க எப்போ ஆசைப்பட்டாலும் அவனை இங்கே கூட்டிட்டு வந்துருவேன்! இதுக்கு மேல என்னச் சொல்லி உங்களைச் சமாதானப்படுத்துறதுன்னு எனக்குத் தெரியலை ம்மா” என்று கூறித் தாயைத் தேற்ற முயன்றாள்.

“பரவாயில்லை டா ம்மா. எனக்கு நீயும், ரேவாவும் சொல்றது எல்லாம் புரியுது. நீங்க எல்லாரும் என் கூட இருக்கும் போது எனக்கு என்னக் கவலை? நான் இனிமேல் கவலைப்பட மாட்டேன்!” என்று அவளிடம் உறுதி அளித்தார் தாட்சாயணி.

“குட் மம்மி!” என்று அவரை அணைத்துக் கொண்டாள் புவனா.

அதே போலவே அங்கே வந்த ரேவதியும் செய்யவே, தனது இரு மகள்களுடைய நான்கு கரங்களிலும் குழந்தையாக அடங்கிப் போய் விட்டார் அவர்களது தாய்.

அதைக் கண்டதும் தான், இனிமேல் அவர்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து கொள்வார்கள் என்று தினகரன், அவனது பெற்றோர் மற்றும் அபிராமிக்கும் நிம்மதியாக இருந்தது.

அதற்குப் பிறகுச் சத்தம் காட்டாமல் அங்கேயிருந்து அகன்று சென்று விட்டார்கள்.

இதற்குப் பிறகான நாட்கள் யாவும் அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களைத் தருவிக்க வேண்டுமென்ற வேண்டுதலை வைத்துக் கொண்டு தான், தாட்சாயணி மற்றும் ரேவதியிடமிருந்து விடைபெற்றுத் தங்களது இல்லத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

இந்த முப்பது கும்பிடுவதற்காகத் தூயவனுடைய குடும்பத்தாரையும் அழைத்திருக்கலாம் தான்! ஆனால் அதில் எந்தவொரு நல்லதும் ஏற்படப் போவதில்லை என்பதும்,

தங்களது ரத்தச் சொந்தம் தவறிய பிறகு அவருடைய நிர்க்கதியாக நிற்கும் குடும்பத்தை அரவணைக்காமல் விட்டாலும் பரவாயில்லை, அவர்களது நலனை விசாரித்துக் கேட்டிருக்கலாம். ஆனால், தூயவனின் இரத்தப் பந்தங்களில் ஒருவர் கூட, ஏன் அவரது உடன்பிறந்தவர்கள் கூட, அவரது இறப்பிற்குப் பிறகு தாட்சாயணி மற்றும் ரேவதியை எட்டிக் கூடப் பார்க்கவில்லை. 

அப்படியிருக்கும் போது, அவருக்கான எந்தச் சடங்குக்கும் அவர்களை எதிர்பார்த்து நிற்கக் கூடாது என்று முடிவெடுத்து விட்டதால் தான், இப்போது தனது சொந்தங்களை மட்டுமே அழைத்து முப்பதைக் கும்பிட்டு முடித்திருந்தார்கள் தாட்சாயணியின் குடும்பத்தினர்.

தனது இரண்டாவது மகளின் புறத்தோற்றத்தைப் பார்த்து அவருக்குக் கண்ணீர் கசிந்தது.

ஏனென்றால், தந்தையை இழந்த பிறகு அவளால் சரியாகச் சாப்பிடத் தூங்க முடியாமல் மிகவும் வாடிப் போயிருந்தாள்.

எனவே தன்னுடைய அடுத்தச் செயல் அவளை உடலளவிலும், மனதளவிலும் தேற்ற வேண்டுமென்று தனக்குள் சபதம் போட்டுக் கொண்டார் தாட்சாயணி.

வாழ்க்கை எப்போதும் நல்லதையே தராது தான்! ஆனால், அது எப்போதும் கெட்டதையே கொடுக்கும் என்பது இல்லையே? அப்படியே இருந்தாலும் அதை மாற்றும் தைரியமும், துணிவும் இருந்தாலே தானாகவே மாறி விடும், அல்லது மாற்றி விடலாம்!

  • தொடரும் 

5 thoughts on “14. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. CRVS2797

    உண்மை தான்… தொடர்ந்து கஷ்டங்களே தொடராது தானே. புயலுக்குப் பின் அமைதி தானே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *