Skip to content
Home » 16. சுடரி இருளில் ஏங்காதே!

16. சுடரி இருளில் ஏங்காதே!

தனது மகள் வயிற்றுப் பேரனுக்குக் குலதெய்வக் கோயிலிற்குக் கூட்டிச் சென்று, அனைவரும் முழு மனதாகச் சம்மதித்து,‘அர்ஜூன்’ என்ற பெயரை அவனுக்கு நாமமாக வைத்து விட்டு வந்தார்கள்.

அன்றிலிருந்து அவனைக் கொஞ்சிக் கொண்டே தன்னுடைய காலத்தைத் தள்ள ஆரம்பித்து விட்டார் தூயவன்.

அப்பொழுதெல்லாம், அவருக்குத் தலை கால் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது. அதை அனுபவித்துக் கொண்டும், தன்னுடைய நண்பர்களிடம் பேரனின் புகழைப் பேசிக் கொண்டும் சுற்றினார் தூயவன்.

வாழ்க்கைத் தரும் சந்தோசங்களை எல்லாம் முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை எழும் சமயத்தில் தான், அது தரப் போகும் ஏமாற்றத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்பது விதி போலும்.

அந்த விதி தூயவனையும் விட்டு வைக்கவில்லை! அது துரத்த, அவர் அதிலிருந்து தப்பிக்கப் போராட என்று இறுதியாக அவருடைய உயிர் தான் அநியாயமாகப் பிரிந்து போனது.

அர்ஜூனுக்குப் பெயர் வைத்ததற்குப் பிறகான நாட்கள் மற்றும் மாதங்களில் அவனுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டது.

அதனால், அந்தச் சமயத்தில் எல்லாம் அவனைத் தனது பிறந்தகத்திற்கு அவர்களது அனுமதியுடன் அழைத்து வந்து விடுவாள் புவனா.

அந்த வீட்டின் செல்லமாக மாறி விட்டான் அவளது மகன் அர்ஜூன். அந்த ஒரு வருடமும் அவர்களுக்குத் தினம் தினம் தீபாவளிக் கொண்டாட்டம் தான் என்பதைப் போலவே, தூயவன், தாட்சாயணி மற்றும் ரேவதியும் அவனைக் கொண்டாடித் தீர்த்தனர்.

ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், அர்ஜூனின் முதல் பிறந்தநாள் வந்து விட, அதை மிகவும் சிறப்பாக நடைபெறச் செய்வதற்குரிய ஏற்பாடுகளைப் பண்ணினார்கள்.

அவனுக்கு உடை எடுத்துக் கொடுத்து விட்டு, அர்ஜூனுடைய பிறந்தநாளுக்கு முந்தைய தினத்தில், அவனுக்கான கேக்கை ஆர்டர் செய்து விட்டனர்.

அதற்கடுத்த நாள், காலையில் தினகரன்,புவனா மற்றும் அவர்களது மகன் அர்ஜூன் மூவரும் கோயிலுக்குச் சென்று வந்தார்கள்.

அதற்குப் பிறகு, மாலையில் வீட்டை அலங்கரிக்கத் தொடங்கினர்.

இதில், என்னவொரு திருப்தியான விஷயம் நடந்தது என்றால், தினகரனின் பெற்றோரும், புவனாவின் தாய் வீட்டில் தான் அவர்களுடைய பேரனின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் எனக் கூறிச் சம்மதம்  தெரிவித்து இருந்தனர்.

அவர்களும் தங்களது மகன் வழிப் பேரனுக்குப் புதுத்துணி மற்றும் விளையாட்டுச் சாமான்களை வாங்கி வைத்திருந்தார்கள்.

தூயவனின் வீட்டில் அலங்காரத்தைச் செய்து முடித்ததும், முதலில் தாங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த உடையை மகனுக்குப் போட்டு விட்டு அழைத்து வந்தனர் தினகரன் மற்றும் புவனா.

“ஹேய்! குட்டிச் செல்லம்! நீ அவ்வளவு அழகாக இருக்கடா!” என்று அர்ஜூனை ஆளாளுக்குத் தூக்கி வைத்துக் கொஞ்சி விட்டு அவனுடைய பிஞ்சுக் கரங்களைப் பூ மாதிரி மென்மையாகப் பிடித்து கேக்கை வெட்டச் செய்தனர் அவனுடைய பெற்றோர்.

அதைக் கண்ட அனைவருக்கும் உற்சாகம் தொற்றிக் கொள்ளவே, பெரியவர்கள் எல்லாரும் கைத் தட்டி ஆரவாரம் செய்ய, ரேவதி மட்டும் கூச்சலிட்டுத் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்.

அதற்குப் பிறகு, அவர்களுக்குக் கேக் துண்டுகளை வெட்டிக் கொடுத்து உண்ண வைத்தனர்.

அந்தச் சமயத்திலேயே, தாங்கள் வாங்கி வந்தப் பரிசுப் பொருட்களை அர்ஜூனுக்குத் தந்து அவனை மகிழ்ச்சிப்படுத்தினார்கள்.

அந்த வீட்டின் முதல் வாரிசு என்பதால் அவனுடைய பிறந்தநாள் விழா சீரோடும், சிறப்போடும் நடந்து முடிந்தது.

அதைப் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளி விட்டாள் ரேவதி. அவன் தன்னைச் சித்தி என்று தனது மழலைக் குரலில் அழைக்கப் போகும் நாளிற்காக காத்திருக்கிறாள்.

“சாப்பாடு தயாராக இருக்குச் சம்பந்தி. எல்லாரும் வாங்க” என்று அனைவரையும் அழைத்துச் சென்று அன்றைய சிறப்பு விருந்தாக வெஜ் பிரியாணி, மஷ்ரூம் சிக்ஸ்ட்டி ஃபைவ் மற்றும் இனிப்பிற்காக குலாப் ஜாமூன் செய்து வைத்து இருந்தார்கள் புவனாவின் வீட்டார்.

அதை ருசித்து உண்ட பின்னர்,”எல்லாரும் எடுத்துக் கொடுத்த டிரெஸ்களையும் அவனுக்குப் போட்டு விடுடா ம்மா” எனத் தன் மகளுக்கு அறிவுறுத்தினார் தூயவன்.

“சரிப்பா” என்றவளோ, தனது தாய் வீட்டில் வாங்கித் தந்த உடையை முதலில் மகனுக்கு உடுத்தி விட்டுக் கூட்டி வந்தாள் புவனா.

அந்த ஆடை அவனுக்கு மிகவும் அழகாக இருக்கவும்,

“வாவ்!” என்று தன் அக்கா மகனைத் தூக்கிக் கொண்டாள் ரேவதி.

அதன் பிறகு, அவனைத் தகப்பனிடமும், தாயிடமும் கொடுத்து விடவே, அவர்களோ ஆசை தீரத் தங்களது பேரனைக் கொஞ்சித் தீர்த்ததும்,

“அவன் சோர்வாகி இருப்பான் ம்மா. நாங்க எடுத்துத் தந்த துணியை இன்னொரு நாள் கூடப் போட்டு விடு” என்று மருமகளிடம் சொன்னார் மல்லிகா.

“அவன் முகத்தைப் பாருங்க அத்தை. சோர்வு தெரியலை. நல்லா ஜாலியாக விளையாட்றான். அதனால் இப்போவே போட்டு விட்டுடலாம்” என அவரிடம் சொல்லி விட்டு அவர்கள் எடுத்து வந்த துணியையும் அவனுக்கு உடுத்தி அழகு பார்த்துக் கொண்டனர்.

தன் அக்கா மகனுக்காக அவனது புகைப்படங்கள் சிலவற்றை ஒன்று சேர்த்து வைத்து அழகாகச் சட்டமிடப்பட்டுக் கொடுத்தாள் ரேவதி.

அதைப் பெற்றுக் கொண்ட தினகரன் மற்றும் புவனாவிற்கு ஆனந்தம் தாளவில்லை.

“சூப்பராக இருக்கு! இந்த ஃபோட்டோஸை எல்லாம் எப்படி எடுத்த?” என அவளிடம் ஆச்சரியமாக கேட்ட தமக்கையிடம்,

“நீ இவனோட ஃபோட்டோவைத் தான், வாட்சப்பில் அடிக்கடி புரொஃபல் பிக்சர், அப்பறம் ஸ்டேட்டஸ் வைப்பியே! அதை சேவ் (save) செஞ்சுக்கிட்டேன். அதே மாதிரி அப்பப்போ எங்களுக்கு அனுப்புறதையும் வச்சுத் தான் ரெடி பண்ணேன்” என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தாள் ரேவதி.

இப்படியாக, அந்த வீட்டின் குட்டி இளவரசனுடைய பிறந்தநாள் விழா கொண்டாட்டம் சிறப்பானதாக நடந்து முடிந்திருந்தது.

அன்று முழுவதும் தனது மனம் நிறைந்து காணப்பட்டதைக் கூடத் தாட்சாயணியிடம் பகிர்ந்து கொண்டார் தூயவன்.

“உங்களுக்குச் சந்தோஷம் தானே ங்க? அப்போ சரி” என்று தானும் அவரிடம் மகிழ்ச்சியாக உரையாடினார் அவரது மனைவி.

காலம் அதன் வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது போலும்!

அர்ஜூனின் பிறந்த நாள் விழா முடிந்த சில நாட்களுக்குப் பின்னர், அன்றைய நாள் தனக்கு விடுப்பு ஆதலால், மகனைத் தூக்கிக் கொண்டுப் பிறந்த வீட்டிற்கு வந்திருந்தாள் புவனா.

தன்னுடைய மூத்த மகள் வந்திருப்பதை அறிந்த தூயவனும் அவள் ரசித்து உண்ணும் ஆட்டுக் கறியைத் தாராளமான அளவு வாங்கி வந்து விட்டிருந்தார்.

அவர் தன் பேரனுடன் விளையாடும் நேரத்தில், சமையல் செய்து கொண்டிருந்த தன் அன்னையுடனும், அவருக்கு உதவி செய்து கொண்டிருந்த தங்கையுடனும் அளவளாவிக் கொண்டிருந்தாள் புவனா.

“அக்காவுக்குப் பிடிச்ச மட்டனை மட்டும் வாங்கிட்டு வந்திருக்காருல்ல!” என்று குறை கூறிக் கொண்டே தான் வேலையைப் பார்த்தாள் ரேவதி.

“இன்னைக்கு ஒருநாள் தானே ம்மா? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ!” என்று அவளிடம் நைச்சியமாக கூறிச் சமாதானம் செய்தார் தாட்சாயணி.

“ம்மா! இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை! நாம நான்வெஜ் எடுக்கிறதே இந்த நாள் மட்டும் தான்! இப்போ கூட மட்டன் குழம்பு தான் வைக்கிறீங்க! எனக்குச் சிக்கனைக் கண்ணில் காட்டவே மாட்டேங்குறீங்க! இனி எப்போ வரப் போற வாரக் கடைசியில் எனக்குப் பிடிச்ச சிக்கனை எடுத்து சமைச்சுத் தரப் போறீங்களோ?” என்று கூறி நொடித்துக் கொண்டாள் அவரது இளைய மகள்.

அதைக் கேட்டதும் சிரிக்கத் தொடங்கி விட்டாள் புவனா.

உடனே அவளைப் பார்த்து முறைத்து விட்டுச் சினுங்கலுடன் தன் அன்னையைப் பார்த்தாள் ரேவதி.

“ஏய் சும்மா இருடி! அப்பறம் இப்போவே உன்னோட மாமியார் வீட்டுக்கு அனுப்பி விட்ருவேன்” என அவளை அதட்டி அமைதியாக இருக்கச் சொன்னார் தாட்சாயணி.

“ஓஹ்ஹோ! உங்கச் சின்ன மகளுக்காக என்னை விரட்டி விடப் பார்க்கிறீங்களா? எனக்கு எங்கப்பா இருக்கார். அவர்கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடுவேன்!” என்று கூறி அவரை மிரட்டினாள் புவனா.

“அப்போ உனக்கு இன்னைக்குச் சாப்பாடு இல்லை. போ!” என்றாள் ரேவதி.

“அதை நீ சொல்லாதே டி!” எனத் தங்கையிடம் எகிறவும்,

“இங்கே என்னச் சத்தம்?” எனக் கேட்டபடியே தன் கையிலிருந்த பேரனுடன் இவர்களிடம் வந்தார் தூயவன்.

தந்தையைக் கண்டதும் உடனே அவரிடம் தங்கை சொன்னதைக் கூறிக் குற்றப் பத்திரிக்கை வாசிக்க ஆரம்பித்து விட்டாள் அவரது மூத்த மகள்.

“என்னம்மா ரேவா! அக்காவை இப்படிச் சொல்லலாமா?” என்று தன் இளைய மகளிடம் வினவினார் அவளது தந்தை.

“ப்பா! நான் முதல்ல உங்க மேலேயே கோபமாகத் தான் இருக்கேன்!” என்று அவரிடம் செல்லம் கொஞ்சினாள் ரேவதி.

“அச்சோ! ஏன் ம்மா?” என்று அவளிடம் கனிவுடன் விசாரிக்கவும்,

“நீங்க ஏன் எனக்காக சிக்கன் வாங்கிட்டு வரலை ப்பா?” என்றாள் இளையவள்.

“ஓஹ்! அது தான் இப்போ பிரச்சினையா?” என்று கேட்டதற்கு ஆமாம் எனத் தலையசைத்தார் ரேவதி.

“இப்போ போய் வாங்கிட்டு வரவா?” என அவளிடம் கேட்க,

அதற்கு மகள் பதில் சொல்வதற்குள்,”இப்போ தான், மட்டன் குழம்புக்குத் தேவையானதை எல்லாம் செஞ்சு வச்சிருக்கேன் ங்க! நீங்க இனிமேல் சிக்கன் எடுத்துட்டு வந்தால் அதைச் சமைக்கிறது ரொம்ப கஷ்டம்!” என்று தன் கணவரிடம் தீர்க்கமாக உரைத்தார் தாட்சாயணி.

அதைக் கேட்டுக் காதில் புகை வராத குறையாக,”ம்ஹூம்! இரண்டாவது பொண்ணுன்னாலே உங்க எல்லாருக்கும் இளக்காரமாகத் தானே இருக்கும்!” என்று கூறினாலும் தான் பார்த்துக் கொண்டு இருக்கும் வேலையைச் செய்வதை நிறுத்தவில்லை ரேவதி.

“சாரிடா ம்மா” என்று அவளிடம் குற்ற உணர்ச்சியில் மன்னிப்புக் கேட்டார் அவளது தந்தை.

அதைக் கேள்வியுற்றதும்,”பரவா இல்லை ப்பா. நான் சும்மா தான் கோபப்பட்டேன்” என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தினாள் அவருடைய இளைய மகள்.

“நானும் உங்கிட்ட சாரி சொல்லிக்கிறேன்!” என்றாள் புவனா.

“ஹேய்! அதெல்லாம் ஒன்னுமில்லை க்கா. நீயே எப்போதாவது தான் வர்ற! உனக்குப் பிடிச்சதை தானே சமைச்சுத் தரனும்? சோ, இட்ஸ் ஓகே” என்று தமக்கையிடம் பெருந்தன்மையுடன் உரைத்தாள் ரேவதி.

புவனா,“தாங்க்ஸ் டி!” என அவளது கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சவும்,

இருவரையும் மனம் நிறையப் பார்த்தனர் அவர்களது பெற்றோர்.

“வெங்காயம் உரிக்கப் போறோம் ங்க. அவனை வெளியே கூட்டிட்டுப் போங்க” என்று தன் கணவனுக்கு அறிவுறுத்தினார் தாட்சாயணி.

“சரிம்மா” என்று அவரும் அடுக்களையை விட்டு வெளியேறியதும், துரிதமாக செயல்பட்டு உணவைச் செய்து விட்டனர் மூவரும்.

அதன் பிறகு, அனைவரும் ஆட்டுக்கறிக் குழம்பை ஒரு பிடி பிடித்து முடித்ததும், சோர்வின் காரணமாக உறங்கப் போய் விட்டார் தூயவன்.

மற்ற மூவரும் கூட, உறங்கி எழுந்து விட, அந்த நேரத்தில் தினகரனும் வேலையை முடித்து வந்து தன் மனைவி மற்றும் மகனை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்து விட்டான்.

“உட்காருங்க மாப்பிள்ளை” என்று அவனை வரவேற்று அமரச் சொன்னார் தூயவன்.

அந்த இடைப்பட்ட சமயத்தில், தான் வேறு உடையை மாற்றி விட்டுத் தனது மகனுக்கும் ஆடை அணிந்து தூக்கி வந்தாள் புவனா.

தன் தந்தையைக் கண்டவுடன், உடனே அவனது கரங்களுக்குத் தாவி விட்டான் அர்ஜூன்.

அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர் தூயவன், தாட்சாயணி மற்றும் ரேவதி.

பின்னர், ஞாபகம் வந்தவராக,”உனக்குக் குழம்பு எடுத்து வச்சிருக்கேன். வீட்டுக்கு எடுத்துட்டுப் போ” என்று அவளிடம் சொன்னார் புவனாவின் அன்னை.

“சரிங்க ம்மா” என்று கூறி விட்டு அவள் சமையலறைக்குப் போக எத்தனிக்கும் போது அந்தப் பாத்திரத்தை எடுத்து வந்து தமக்கையிடம் கொடுத்தாள் ரேவதி.

அதைப் பெற்றுக் கொண்டு சில மணித்துளிகள் தன் வீட்டாரிடம் பேச ஆரம்பித்து விட்டாள் புவனா.

“வேலையெல்லாம் எப்படி போகுது மாப்பிள்ளை? ஏதாவது கஷ்டம் இருக்கா?” எனத் தன் மருமகனிடம் வினவினார் தூயவன்.

“அதெல்லாம் எந்தக் கஷ்டமும் இல்லை மாமா. எப்பவும் போலத் தான் இருக்கு” என்று அவரிடம் ஒரிரு வார்த்தைகள் பேசி விட்டு அவர்களிடம் விடைபெற்று விட்டுத் தன் மனைவி மற்றும் மகனுடன் வீட்டிற்குப் போய் விட்டான் தினகரன்.

தன் பேரனுடன் உலாவிய தருணங்களை எண்ணிப் பார்த்து மகிழ்ந்து கொண்டாரோ,”நான் போய்க் கடையில் உட்கார்ந்து பேசிட்டு, அப்படியே டீ குடிச்சிட்டு வர்றேன் ம்மா” என்று தன் மனைவியிடம் உரைத்து விட்டுச் சென்றார் அவரது கணவர்.

இரவும், பகலும் போல, வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் சகஜமானது தான்! ஆனால், அந்த துன்பம் ஒருவருடைய உயிரைப் பறித்துச் செல்லும் என்பதை யார் அறிவார்?

  • தொடரும் 

5 thoughts on “16. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. CRVS2797

    உண்மை தான்..! அதிக சந்தோஷமும் சரி, அதிக துக்கமும் சரி… ஒரு ஆளை சாகடிச்சிடும் வல்லமை கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *