Skip to content
Home » 22. சுடரி இருளில் ஏங்காதே! (ஃபைனல் யூடி)

22. சுடரி இருளில் ஏங்காதே! (ஃபைனல் யூடி)

புவனாவின் வழிகாட்டுதலின் படி, மே மாதத்தில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பில் சேர்ந்து விட்டாள் ரேவதி.

அங்கே சேர்ந்தது முதல், ஆசிரியர்கள் அளிக்கும் அசைன்மெண்ட்ஸ் மற்றும் செமினார்களை அவ்வப்போது செய்து முடித்து நேரில் சென்று கொடுப்பாள் அல்லது செல்பேசியில் புலனத்தின் வாயிலாக அதற்குரிய ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்து விடுவாள்.

அந்தப் படிப்பு மற்றும் சிறப்பு வகுப்பு என்று அவ்விரண்டையும் சரிசமமாகவே பார்த்துக் கொண்டாள் ரேவதி.

வெகு நாட்களுக்குப் பின்னர், அன்றைய தினம், தன் மகனுடன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள் புவனா.

அன்றொரு நாள், தூயவன் உயிருடன் இருக்கும் போது, இப்படித் தானே, அசைவ உணவுகளைச் சமைத்து அனைவரும் சந்தோஷமாக உண்டோம் என்பதை எண்ணிப் பார்த்து அந்த உணர்வில் ஆட்கொண்டு விட்டிருந்தனர் தாட்சாயணி, புவனா மற்றும் ரேவதி.

தூயவன் இருந்த போது நடைபெற்ற அனைத்து நேர்மறையான விஷயங்களையும் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள் மூவரும்.

“அப்பா இருந்திருந்தால் இந்நேரம் அர்ஜூனைக் கையை விட்டு இறக்கி இருக்கவே மாட்டாருல்ல?” என்று தாயிடம் கேட்டாள் புவனா.

அதற்கு ‘ஆம்’ என்று ஒப்புக் கொள்ளும் வகையில், தலையை அசைத்தவரது உள்ளத்தில் ஒரு விஷயம் நெருஞ்சி முள்ளாக குத்திக் கொண்டே இருக்கிறது. அதை மகள்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா? வேண்டாமா? என்று குழப்பத்தில் கரைந்தார் தாட்சாயணி.

தான் சமைத்திருந்த உணவை ருசித்து உண்டு கொண்டிருந்தப் புவனாவையும், தன் கையிலிருந்த அக்காவின் மகனைக் கீழேயே விடாமல் இருந்த ரேவதியையும் பார்த்தவருக்கு, அவர்கள் இருவரிடமும் உண்மையைக் கூறினால் தாங்குவார்களா? என்ற யோசனையிலேயே அங்கே நடக்கும் எதையும் உணர முடியவில்லை அவரால்!

“ம்மா” எனத் தன்னை இரு மகள்களும் அழைத்தப் பின்னர் தான், 

“ஹாங்!” என்று நிகழ் உலகத்திற்கு வந்தார் தாட்சாயணி.

“என்ன யோசனையில் இருக்கீங்க? இவன் உங்களைக் கையைக் காட்டி உங்ககிட்ட வர்றதுக்கு அழுதுகிட்டு இருக்கான் பாருங்க” என்று அவரிடம் சொல்லித் தன்னிடமிருந்த அர்ஜூனைக் காண்பித்தாள் ரேவதி.

அவள் கூறியதைப் போலவே, தன் பேரனின் நடவடிக்கை இருக்கவே, விரைந்து சென்று அவனைத் தன் கரங்களில் வாங்கிக் கொண்டு வெளியே வேடிக்கைக் காட்டப் போய் விட்டார்.

“அம்மாவுக்கு என்னாச்சு?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டார்கள் அவரது இரண்டு மகள்களும்.

தன்னுடைய பேரனை இடுப்பில் வைத்துக் கொண்டு, வீட்டுக் கேட்டின் முன்னால் நின்றிருந்த தாட்சாயணிக்குச் சிறிது நேரத்திற்கு முன்னர், புவனாவும், ரேவதியும் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்ததைக் கண்டது இப்போது வரைக்கும் அவரது நெஞ்சை விட்டு அகலவில்லை.

அதைப் பார்த்தப் பிறகு, அவர்களது தந்தையைப் பற்றிய உண்மையை அவர்கள் இருவரிடமும் உரைக்கும் மனத் திடமும், தைரியமும் தாட்சாயணிக்கு வரவில்லை.

அவருடைய மனம் அத்தனைத் தடுமாற்றங்களை எதிர்கொண்டது.

கணவரின் உயிர் பிரிந்த அன்றே அதை மகள்களிடம் கூறி இருக்க வேண்டும் அல்லது சென்ற வருடத்திலேயே விஷயத்தைச் சொல்லி இருக்க வேண்டும் அதை விட்டு விட்டு, ஒரு வருடத்திற்கு மேலாகி விட்டப் பின், இப்போது அதைக் கூறி மகள்களின் ஆனந்தத்தை அழிக்க வேண்டுமா? என்பது தான் அவரது உள்ளத்தில் தோன்றிய முதன்மைக் கேள்வியாக இருந்தது.

“ம்மா” எனக் கொஞ்சி அவருடைய சிந்தனையைத் திசை திருப்பிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

தன் கணவன் இறப்பதற்கு முன், அவருக்கு வந்த நெஞ்சு வலியை உடனே சொல்லவில்லை மற்றும் அதை ஏன் தாமதமாகத் தன்னிடம் கூறினார் என்ற ரகசியங்களைத் தனக்குள்ளேயே வைத்துக் கொள்ள முடிவெடுத்து விட்டவரோ,

எதிர்காலத்தில் இவ்விஷயம் தெரிய வந்தாலும், மற்றவர்களைப் பொருத்த வரையில் இது சுயநலமான எண்ணமாக இருக்கலாம்!

ஆனால் அவரைப் பொறுத்தவரை இந்த முடிவு தனது மகள்களின் மனநலத்தைக் காப்பாற்றுவதற்காக எடுக்கப்படுவதாகும் என்று தன் மனதை தேற்றிக் கொண்டார் தாட்சாயணி.

தன்னைத் தூற்றுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் ஒரு சிலர் தானே, இந்த விஷயத்தை அறிந்தால் பொரிந்து தள்ளுவார்கள். அதையெல்லாம் கடந்து வந்து விடலாம் என்ற துணிவும், தைரியமும் அவருக்குள் எப்போதோ வந்து விட்டிருந்தது.

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டவர்களுக்கு இது ஒரு விஷயமா? என்று தான் பிறருக்குத் தோன்றும். ஆனால், ஒரு தாயைப் பொறுத்த வரை, தனது பிள்ளைகளின் மனநிலை கெட்டு விடக் கூடாது என்ற பதைபதைப்பு இருக்கும்.

அதனாலேயே, கடந்த கால உண்மைகளை அவர்களிடமிருந்து மறைக்க முடிவு செய்தவர்,

அதை அப்படியே தன் மனதில் உருப் போட்டுக் கொண்டுப் பேரனுடன் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் தாட்சாயணி.

அவருடைய தெளிந்த முகத்தைப் பார்த்ததும்,’தந்தையின் இறப்பை நினைத்து வாடுகிறார் போலும்!’ என்று தான் எண்ணிக் கொண்டனர் புவனா மற்றும் ரேவதி.

அப்படியே இருந்து விட்டுப் போகட்டுமே! அவர்கள் இனிமேல் நிகழும் ஏற்றங்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும்!

அன்று மாலை வரை, தனது மகள்கள் மற்றும் பேரனுடன் அந்த நாளை நன்றாக அனுபவித்துக் கொண்டார் தாட்சாயணி.

அதன்பின், வழக்கம் போல, தன் வேலையை முடித்து விட்டு வந்து மனைவியையும், மகனையும் அழைத்துச் சென்று விட்டான் தினகரன்.

இப்போது, அவர்களுக்குத் தனிமை என்பதே இருந்ததில்லை.

ஏனென்றால், அந்த வீட்டின் முக்கியமான மனிதரின் இறப்பு அவர்களை எவ்வளவு உலுக்கிப் போட்டிருந்தாலும், அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து இப்போது தங்களுடைய வாழ்வைத் தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம், அரூபமாக இருக்கும் தூயவன் பார்த்தாலும் கூடத் தன் குடும்பத்தை எண்ணிப் பெருமிதம் தான் கொள்வார். அதில் சந்தேகமே இல்லை!

தான் எடுக்கும் சிறப்பு வகுப்புகளின் மூலமாகப் பெற்ற முதல் வருமானத்தை அன்னையிடம் அப்படியே ஒப்படைத்து விட,

அதை அவர் மறுத்த போது,”இது உங்களுக்கு மட்டுமே கிடைக்க வேண்டிய நியாயமான விஷயம் மா! வேண்டாம்னு சொல்லாதீங்க!” என்று அவருக்குப் பதிலளித்தாள் ரேவதி.

அதற்குப் பிறகுத் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பாகத்தைத் தன்னுடைய வங்கிக் கணக்கில் சேமித்து வைத்துக் கொண்டு, மிச்சப் பணத்தில் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதாவது ஒரு பரிசை அடிக்கடி வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருப்பது அவளது வாடிக்கையாகி விட்டது.

தினகரன் மற்றும் அவனது பெற்றோரும் கூட, ரேவதியின் இந்தச் செயல்பாடுகளை அறிந்து மனதாரப் பாராட்டி, தங்கள் வாழ்த்துகளையும் அவளுக்குத் தெரிவித்தனர்.

அதிலிருந்து, தங்கள் வாழ்வில் நடைபெறும் எல்லா நல்ல காரியங்களையும் தூயவனின் ஆசீர்வாதத்தோடு தான் செய்து முடித்தனர். அதனால் அவையெல்லாம் எந்தவித தடையும் இன்றி சுபமாகவே நடந்து முடிந்தது.

  • முற்றும் 

3 thoughts on “22. சுடரி இருளில் ஏங்காதே! (ஃபைனல் யூடி)”

  1. Avatar

    இறந்தவங்க ஆசிர்வாதம் என்னைக்கும் அவங்களுக்கு கிடைச்சுட்டேத்தான் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *