Skip to content
Home » 4. சுடரி இருளில் ஏங்காதே!

4. சுடரி இருளில் ஏங்காதே!

அன்றைய காலை நேரத்தில் தனது வேலைக்குக் கிளம்பிக் கொண்டு இருந்தார் தூயவன்.

உடையை மாற்றிக் கொண்டு இருந்த போது தனது சட்டையைப் போட்டுக் கொண்டு இருக்கும் போது அதிலிருந்த பட்டன்களை அவரால் போடவோ முடியவில்லை.

அதேபோல், தனது கைகளை அவ்வப்போது சுருக்கி விரித்துப் பார்த்துக் கொண்டவர்,

எப்படியோ முயன்று தனது சட்டையை மாட்டிக் கொண்டவரோ, இதை எதையும் தன் மனைவியிடம் பகிர்ந்து கொள்ளாமல் அவரிடம் வேலைக்குச் செல்வதாக மட்டும் தெரிவித்து விட்டுக் கிளம்பிச் சென்று விட்டார் தூயவன்.

“உங்க அப்பாவோட நடவடிக்கையே சரியில்லை” எனத் தன் மூத்த மகளிடம் கூறினார் தாட்சாயணி.

அவளைக் குழப்பத்துடன் நோக்கிய புவனாவோ,”ஏன் ம்மா? என்னாச்சு?” என்று அவரிடம் வினவினாள்.

“அவருக்கு இன்னும் உடம்பு சரியாகலை டா. ஏதோ பிரச்சினை இருக்கு. அதை நம்மகிட்ட சொல்லாமல் மறைக்கிறார்” என்று அவளிடம் தெரிவித்தார் அவளது அன்னை.

“அப்படியா ம்மா? அவர் வீட்டுக்கு வந்ததும் கேட்போம்” என்று கூறி அவருக்குத் தைரியம் கொடுத்தாள் அவருடைய மகள்.

“சரி” என்றவரோ, ஏதோ தவறாக நடக்கப போகிறது என்று கூறிய தன்னுடைய உள்ளுணர்வை அசட்டை செய்யாமல், செல்பேசியைக் கையில் வைத்துக் கொண்டு காத்திருந்தார் தாட்சாயணி.

தன்னுடைய வாழ்க்கையில் இன்றைய நாளை அவரால் எப்பொழுதுமே மறக்க முடியாத அளவிற்கு அன்றொரு விஷயம் நடந்து அவரைக் கதி கலங்க வைத்து விட்டது.

மதிய உணவைத் தயாரித்து முடித்து வந்தவருக்குச் செல்பேசி அழைப்பு வந்தது. அதை எடுத்துப் பேசியவரிடம்,”தாட்சா! என்னால் முடியலை!!!” என்று கூறியதைக் கேட்டதும்,

“ஹலோ! என்னங்க ஆச்சு? ஏங்க!” என அவர் கூறியதைக் கேட்டதும் பதறித் துடித்துப் போனார் அவரது மனைவி.

அந்தச் சமயத்தில், அவரிடமிருந்த செல்பேசியை வாங்கப்பட்டது போலும்.

“ஹலோ மேடம்!” என்ற வேறு ஒரு ஆண் குரல் கேட்டதும்,

“ஹலோ சார்! அவருக்கு என்னாச்சு? நீங்க அங்கே தானே இருக்கீங்க?” என்று அவரிடம் கலவரம் நிறைந்த குரலில் வினவினார் தாட்சாயணி.

“ஆமாம் மேடம். சாருக்குத் திடீர்னு உடம்பில் எதுவும் வேலை செய்யாமல் போயிருச்சு போல! இப்போ தான், ஆம்புலன்ஸ்ஸை வர வச்சு ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டு இருக்கோம்” எனவும்,

“ஐயையோ! எந்த ஹாஸ்பிடல் சார்?” என்று அதன் பெயரைக் கேட்டுக் கொண்டவரோ,

இரு மகள்களையும் அழைத்து,”உங்க அப்பாவுக்குத் திடீர்னு உடம்பு முடியலையாம்! நான் அவரைப் பார்க்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் வீட்டில் தைரியமாக இருங்க” என அவர்களிடம் கூறினார் தாட்சாயணி.

“ம்மா! நாங்களும் உங்க கூட வர்றோம்” என்றனர் இருவரும்.

“நான் போய்ப் பாத்துட்டு உங்களுக்குச் சொல்றேன். நீங்க கிளம்பி வாங்க” என்று கூறியவருக்குத் தன் கணவனின் நிலையை எண்ணிக் கண்ணீர் தான் வந்தது.

அதனுடன் தான், ஆட்டோவில் விரைந்து சென்று மருத்துவமனையை அடைந்ததும், தூயவன் இருந்த அறையை ரிசப்ஷனில் கேட்டுத் தெரிந்து கொண்டு அவரைப் பார்க்கப் பதைபதைப்புடன் போனார் தாட்சாயணி.

“வாங்க மேடம். உள்ளே போய்ப் பாருங்க” என்று அவருக்குக் கால் செய்து விஷயத்தைத் தெரிவித்த நபர் அவரை அறைக்குள் செல்ல அனுமதித்தார்.

அங்கே அவரது கணவனுக்கோ, களைந்து போய், உடலெங்கும் வியர்வை வடிந்த நிலையில், குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது.

“என்னங்க!” என்று கேவிக் கொண்டே அவரை அழைத்தார் தாட்சாயணி.

அந்தக் கதறலில் மெல்ல கண் விழித்துப் பார்த்து,”தாட்சா!” எனத் தொய்வுடன் தன் மனைவியின் பெயரைச் சொன்னார் தூயவன்.

உடனே உள்ளே வந்த நபரிடம்,“இவருக்கு என்ன தாங்க ஆச்சு? காலையில் நல்லபடியாகத் தானே வேலைக்குக் கிளம்பினார்? இதோட மூனாவது தடவை! இவரோட உடம்புக்கு என்ன தான் பிரச்சினை?” எனத் தலையில் அடித்துக் கொண்டு கேட்டவரிடம்,

“தெரியலைங்க மேடம். காலையில்  வேலைக்கு வந்ததும்,  நல்லா தான் இருந்தார்! ஆனால், நேரம் ஆக ஆக, அவரால் நிற்கவே முடியலை போல! கையையும், காலையும் அசைக்க டிரை பண்ணார்! அதுவும் முடியாமல் அப்படியே உட்கார்ந்தவரு, முடிஞ்சளவுக்கு முயற்சி செஞ்சு உங்களுக்குக் கால் செஞ்சுப் பேசினார். அப்பறம் ரொம்ப கையை அசைக்க முடியலை போல, அதான், அவர்கிட்ட பேச வந்த நான் இங்கே கொண்டு வந்து சேர்த்துட்டேன்!” என்று அவருக்கு விளக்கிச் சொல்லவும்,

“ரொம்ப தாங்க்ஸ் சார்! டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று விசாரிக்க,

அதற்குத் தன் எதிரில் இருந்த மனிதன் கூறியதைக் கேட்டு முற்றிலும் நொடிந்துப் போய் விட்டார் தாட்சாயணி.

தன்‌ கணவனுடைய உடல்நிலை சரியில்லாததற்குக் காரணத்தை அறிந்து கொண்ட பிறகு, அவர் தன் சுயநினைவிற்கு வரவே வெகு நேரமாகி விட்டிருக்கத், 

தன் கைப்பேசியின் உதவியுடன் மகள்களுக்குத் தகவல் தெரிவிக்கும் விதமாக,”உங்க அப்பாவுக்கு என்ன வியாதின்னு தெரிஞ்சிருச்சு. நீங்க இங்கே வர வேண்டாம். அவரை நான் மட்டுமே ஹாஸ்பிடலில் இருந்து பாத்துக்கிறேன். எத்தனை நாள் இங்கே இருக்கனும்னு தெரியலை. அதுவரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் ஆறுதலாக இருந்துக்கோங்க. சண்டை போடாதீங்க! சாப்பாட்டுக்குக் காய் வாங்க காசு வேணும்னா நான் கொடுத்து விட்றேன். நைட் பத்திரமாக இருங்க” என்று கூறி வைத்து விட்டுத் தன் கண்களைத் தாண்டிச் சென்ற கண்ணீரைத் துடைக்கும் மனமின்றி அப்படியே கல்லாய்ச் சமைந்து போய் அமர்ந்து விட்டார் தூயவனின் மனைவி.

இங்கோ அவர்களுடைய இரு மகள்களும், தங்களது தாய் சொன்ன செய்தியைக் கேட்டதும் அதிர்ந்து போனார்கள்.

அவரது  உடலிற்கு என்னப் பிரச்சினை என்பதை அறிய விழைந்தார்கள். ஏனென்றால், எப்பொழுதுமே கம்பீரமாகத் தங்களுக்குக் காட்சியளிக்கும் தந்தையோ, இப்படி அடிக்கடி உடல்நலக் குறைவு என மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைக் கேள்விப்பட்டு அதை நம்ப முடியாமல் நொந்து போயினர்.

“அப்பாவுக்கு என்னாச்சு க்கா? அம்மா ஏதாவது சொன்னாங்களா?” என்று தன் தமக்கையிடம் துயரத்துடன் வினவிக் கொண்டு இருந்தாள் ரேவதி.

“ஹாங்!” என்று சுயத்திற்கு வந்தவளோ, தாய் தன்னிடம் உரைத்தவற்றை எல்லாம் தங்கைக்குச் சொன்னாள் புவனா.

“என்னக்கா இப்படி சொல்லிட்டாங்க? அப்பாவுக்கு ரொம்ப முடியலையா?” என்கவும்,

“அப்படித் தான் போல ரேவா!” என்றாள் அவளது அக்கா.

“அம்மா ரொம்ப உடைஞ்சுப் போயிருப்பாங்கள்ல?” என்று அவளிடம் கேட்டாள் தங்கை.

இருவருக்கும் தந்தையின் உடல்நிலை சரியில்லாமல் அவதியுறுவதையும், அங்கே அதை நேரடியாகப் பார்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டு இருக்கும் தாயின் மனநிலையையும் நினைத்துப் பார்த்தவர்களோ, செய்வதறியாது திகைத்துப் போய் நின்றார்கள்.

அந்த நேரத்தில், தனக்கு நிச்சயிக்கப்பட்டு இருந்த மாப்பிள்ளையான தினகரனுடைய குறுஞ்செய்தி வரவும், அவனிடம் தங்களது தற்போதைய நிலையைப் பற்றி எடுத்துரைத்து விட்டாள் புவனா.

அதைப் பார்த்ததும் சிறிதும் தாமதிக்காமல், அவளுக்குக் கால் செய்து,”மாமாவுக்கு என்னம்மா ஆச்சு?” என்று அவளிடம் விசாரித்து, விஷயத்தைத் தெரிந்து கொண்ட பிறகு, அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினான்.

பின்னர்,”முதல்ல உங்களுக்குத் துணைக்குச் சொந்தக்காரவங்க யாராவது வீட்டில் இருக்காங்களா?” என்று அவளிடம் வினவினான் தினகரன்.

“இல்லை ங்க. இப்போ தான் எங்களுக்கே விஷயம் தெரிஞ்சது. இன்னும் முழுமையாக தெரிஞ்ச அப்பறம் தான், எல்லாருக்கும் சொல்லனும்” என்று அவனுக்குப் பதிலளித்தாள் புவனா.

“சரி. நான் இப்போ எங்க அப்பா, அம்மாவை ஹாஸ்பிடலுக்கு அனுப்புறேன். எங்க வீட்டிலிருந்து யாரையாவது அனுப்பி விடவா? நீங்க தனியாகச் சமாளிக்க முடியாதே! பேசாமல் எங்க அம்மாவை வரச் சொல்றேன். இந்த மூனு நாளும் உங்களுக்குத் துணையாக நைட் அவங்க அங்கே தூங்கட்டும்” என்று அவளிடம் கூறினான் தினகரன்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம் ங்க! அதெல்லாம் வேண்டாம்” என்று விரக்தியுடன் பேசியவளிடம்,

“ஒரு சிரமமும் இல்லை ம்மா. நானும் வொர்க் முடிச்சிட்டு உங்க அப்பாவைப் பார்க்கப் போயிட்டு அப்படியே வரும் போது எங்க அம்மாவை அங்கே விட்டுட்டு வர்றேன்” என்று கூறி அதற்கு அவளை ஒப்புக் கொள்ளச் செய்தான்.

அந்த அழைப்பை வைத்து விட்டு, அவன் சொன்னதை தன் தங்கையிடம் உரைக்கவும்,

“அவங்க வர வேண்டாம் க்கா! நாமளே பார்த்துக்கலாம்” என்று உறுதியாக கூறினாள் ரேவதி.

“அவங்க ஹாஸ்பிடலுக்குப் போய்ப் பார்க்கட்டும். அப்பறம் அம்மாவே நமக்குக் கால் பண்ணி என்னப் பண்ணலாம்னு சொல்லுவாங்க” என அவளைச் சமாதானம் செய்தவளோ,

தனக்கு நிச்சயமாகி விட்டது, இன்னும் சில மாதங்களில் தன்னுடைய திருமணம் நடக்கப் போகிறது என்பதையெல்லாம் தாண்டி, இப்போது என்ன செய்யப் போகிறோம்? என்று யோசித்தவாறே தனது தங்கையைத் தோள்களில் தாங்கிக் கொண்டாள் புவனா.

அவளிடம் கூறியபடியே, தங்களது வருங்கால சம்பந்தியான தூயவனை அனுமதித்திருந்த மருத்துவமனைக்குப் போய் அவரது உடலை வதைத்துக் கொண்டிருக்கும் நோயைப் பற்றிக் கேட்டார்கள் தினகரனின் தந்தை சேகர் மற்றும் தாய் மல்லிகா.

அப்போது தான், அந்தக் காரணத்தை வெளிப்படுத்தும் வகையில்,”அவருக்குப் பக்கவாதம் வந்துருக்கு சார்” என்று அவர்கள் இருவரிடமும் பகிர்ந்து கொண்டார் தாட்சாயணி.

“என்னது? எப்படி சம்பந்தி?” என்று அவரிடம் மேலும் தகவல்களைக் கேட்டனர்.

“அவர் எடுத்துக்கிட்ட மாத்திரை, மருந்தா இல்லை, சாப்பாடான்னு தெரியலை! ஏதோ ஒன்னு அவரோட உடம்புக்கு சேரலை. அதான் இப்படி ஆகியிருக்கு!” என்று விழிகளில் வலியுடன் கூறினார் தூயவனின் மனைவி.

“ஸ்ஸோ! ரொம்ப கஷ்டமாக இருக்கு ம்மா” என்றார் சேகர்.

“பிள்ளைங்க வீட்டில் தனியாக இருக்காங்கன்னு தினா சொன்னான் ம்மா. நான் வேணும்னா அங்கே போய் அவங்களைப் பார்த்துக்கவா?” என்று அவரிடம் வினவினார் மல்லிகா.

“காலையிலிருந்து சாயந்தரம் வரைக்கும் சின்னவளுக்கு ஆன்லைன் கிளாஸ் இருக்கு. அதனால், நைட் மட்டும் போய்ப் பார்த்துக்கோங்க சம்பந்தி” என்று தினகரனுடைய அன்னையிடம் கேட்டுக் கொண்டார் தாட்சாயணி.

உடனே அவரும்,”நான் பாத்துக்கிறேன் ங்க” என அவருக்கு நம்பிக்கை அளித்தார்.

அப்போது, அவர்களது மகனும் அந்த இடத்திற்கு வந்து, தனது மாமனாரைப் பார்த்து விட்டு மாமியாரிடம்,

“நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க அத்தை. மாமாவை வெளியூருக்குக் கூட்டிப் போய்ச் செக்கப் பண்றதுனாலும் பாத்துக்கலாம்!” என்று அவருக்கு ஆறுதல் கூறினான்.

“சரிப்பா” என்று அவனிடம் சொன்னார் தாட்சாயணி.

“எங்க அம்மாவை அங்கே கொண்டு போய் விட்டுட்டு வர்றேன் அத்தை” என்றவனோ, தன் அன்னையை அழைத்துக் கொண்டுத் தனது வருங்கால மனைவியின் வீட்டிற்குப் போனான் தினகரன்.

அவர்களது வருகையை அறிந்த அக்காவும், தங்கையும், ஓடிப் போய்க் கதவைத் திறந்தார்கள்.

  • தொடரும் 

9 thoughts on “4. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. Avatar

    அச்சோ எதனால இப்படி???… தினகரன் குடும்பம் ஆறுதலா நின்னது நிம்மதி!!…

  2. CRVS 2797

    அச்சோ…! ஏன் இப்படி ஆச்சு…?
    இப்படி திடீர்ன்னு வர அளவுக்கு அவருக்கு மன அமுத்தம் ஏதாவது இருந்ததோ…????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *