Skip to content
Home » 5. சுடரி இருளில் ஏங்காதே!

5. சுடரி இருளில் ஏங்காதே!

அவர்களை உள்ளே வர அனுமதி அளித்தனர் இருவரும்.

இரு பெண்களின் முகங்களும் சோபையிழந்து, கலவரத்துடனும், கலக்கத்துடனும் இருப்பதைக் கண்டு, தினகரன் மற்றும் அவனது தாய் மல்லிகாவிற்கும் இதயமே வலித்தது.

“உட்காருங்க” என அவர்களை அமரச் செய்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்துப் பருகச் செய்தாள் புவனா.

“சாப்பிட்டீங்களா டா?” என்று அவர்களிடம் விசாரித்தார் தினகரனின் அன்னை.

“இன்னும் இல்லை அத்தை” எனப் பதிலளித்தாள் மூத்தவள்.

“ஏன்டா ம்மா? நாங்க இப்போ ஹாஸ்பிடலுக்குப் போய் உங்க அப்பாவையும், அம்மாவையும் பார்த்துட்டுத் தான் வர்றோம். எல்லாம் சரியாகிடும்!” என்று அவர்களுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டிருந்தார் மல்லிகா.

ஆனால், பின்னாளில் தனக்கு மனைவியாக வரப் போகிற பெண் மற்றும் தன்னுடன் பிறவாத சகோதரியைப் போல இருக்கும் அந்தச் சின்னப் பெண்ணும் இவ்வளவு வேதனை அடைந்து கொண்டு இருக்கிறார்களே என அவ்விருவரையும் வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவனோ,

தன் அன்னை அங்கே இருந்ததால், அவனால் புவனாவிடம் அவ்வளவாகப் பேச முடியவில்லை. அவர்கள் இருவரிடமும் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் விதமாக சற்று தள்ளி இருந்து கொண்டான் தினகரன்.

மல்லிகாவிடம்,”அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு எங்கம்மா உங்ககிட்ட சொல்லி இருப்பாங்கள்ல? நீங்களாவது சொல்லுங்களேன்?” என்று அவரிடம் இறைஞ்சிக் கேட்டாள் ரேவதி.

இளையவளின் கேள்வியில், அந்த தாய்க்கும், மகனுக்கும் வருத்தம் மேலிட்டது.

ஆனால், அவர்களுடைய முகத்தைப் பார்த்தே தங்களது தந்தைக்கு ஏதோ பெரிய பிரச்சினை ஏற்பட்டு உள்ளது என்பதை அறிந்து கொண்டாள் புவனா.

தினகரன்,”உங்க அம்மாவே வந்து உங்ககிட்ட சொல்றேன்னு சொன்னாங்க ம்மா! எதுவாக இருந்தாலும், அவங்க ரெண்டு பேரும், தைரியமாக எதிர்கொள்ளனும்! வேளாவேளைக்குச் சாப்பிடனும்னு சொல்லி விட்டாங்க டா” என்று ஆறுதலாக உரைத்தான்.

“ம்ஹூம்!” என அவர்களிடமிருந்து சரியான விளக்கமும், பதிலும் வரவில்லை என்ற ஆற்றாமையில் தமக்கையிடம் சென்று நின்று கொண்டாள் ரேவதி.

“அவ வருத்தத்தில் இப்படி நடந்துக்கிறா…” எனக் கூற வந்தப் புவனாவிடம்,”தெரியும் டா ம்மா! நான் நைட் வரைக்கும் இங்கே தான் இருக்கப் போறேன். இப்போ சமைக்க ஆரம்பிச்சா லேட் ஆகிடும்” என்றவர்,

“தினகரா! நீ கடைக்குப் போய் இவங்க ரெண்டு பேருக்கும் சாப்பாடு வாங்கிட்டு வா” என்று மகனிடம் அறிவுறுத்த, அவனும்,”சரிம்மா” என்று உடனே கிளம்பி விட்டான்.

மல்லிகா,“நான் இங்கே இருக்கேன்னு நினைச்சிட்டு ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்காதீங்க! சாதாரணமாக இருங்க டா! நான் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டேன்! ஆனால், எதாவது உதவின்னா கூப்பிடுங்க!” என்று கூறி விட்டு முன்னறைக்குச் சென்று அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார் மல்லிகா.

“அம்மாவுக்கும் சாப்பாடு போகும்ல்ல க்கா?” என்று வினவினாள் தங்கை.“ம்ஹ்ம். அம்மா கண்டிப்பாக சாப்பிட்டு இருப்பாங்க ரேவா” என்று தன் தாய்க்கு நிச்சயமாக உணவு வாங்கிக் கொடுத்து விட்டுத் தான், தினகரன் இங்கே வருவான் என்ற நம்பிக்கையில் அவளிடம் கூறினாள் புவனா.

அதைக் கேட்டதும்,“அப்போ சரிக்கா” எனச் சற்றுத் தெளிந்தாள் ரேவதி.

அதன் பிறகு, அவள் தன் தங்கையிடம் கூறியபடியே தான், தினகரனும் நடந்து கொண்டான்.தான் வாங்கிய உணவை முதலில் தாட்சாயணியிடம் கொடுத்து உண்ணுமாறு வலியுறுத்தி விட்டுத் தான், இவர்களிடம் இரண்டு உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் தினகரன்.

அதை வாங்கித், தங்களால் முடிந்த அளவிற்கு உணவை உண்டு முடித்தார்கள் புவனா மற்றும் ரேவதி.

தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றும் விதமாக, அவர்கள் இருவருடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாமல் இருந்தாலும், அவர்கள் மீது ஒரு கண்ணையும் வைத்துக் கொண்டவரோ,

இரவு நேரத்தில் மட்டும், அவர்களுக்கு ஆயிரம் பத்திரங்களைச் சொல்லி விட்டு வீட்டிற்குச் செல்வார் மல்லிகா.

இப்படியாக, அவர்களது தந்தை தூயவன், மருத்துவனையில் வாசம் செய்த அந்த மூன்று நாட்களும், தினகரனும், அவனது அன்னையும் தங்களுடைய பொறுப்பைத் தவறாமல் செய்து விட்டிருந்தார்கள்.

அவனது தந்தை சேகர் மட்டும் சம்பந்தியும், அவரது மனைவியும் வீட்டிற்கு வந்த பிறகு அங்கே சென்று பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி இருந்தார்.

அதேபோல், தூயவன் மற்றும் தாட்சாயணியும் அன்றைய மதிய நேரத்தில் இல்லம் திரும்பப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத்திருக்க,

உடனே களைந்து இருந்த வீட்டை நன்றாக ஒதுங்க வைத்து விட்டுத் தங்களது பெற்றோரின் வருகைக்காக காத்திருந்தனர் புவனா மற்றும் ரேவதி.

ஆட்டோவில் இருந்து இறங்கிய தந்தையின் நிலையைக் கண்டு, அவர்கள் இருவருக்கும் இரத்தக் கண்ணீரே வருவதைப் போல் இருந்தது.

ஏனெனில், எவ்வளவு தேஜஸாகவும், கம்பீரமாகவும் இருந்த தூயவனோ, இப்போது தனக்குச் சுயமாகத் தன்னால் எதையுமே செய்து கொள்ள முடியாதவராகத் தன்னுடைய மனைவியின் உதவியுடன் தான், மெதுவாக வீட்டுப் படியேறி வந்தார்.

அதைக் கண்டு தான், அதிர்ச்சியிலும், துக்கத்திலும் மனம் சோர்ந்து போனார்கள் அவரது மகள்கள்.

வீட்டினுள் வந்த தந்தையையும், தாயையும் மாறி மாறிப் பார்த்தவர்களிடம்,”என்னப் பார்த்துட்டே நிற்கிறீங்க? அப்பாவைப் பிடிச்சு உட்கார வைங்க” என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் தாட்சாயணி.

அதைக் கேட்டவுடன், தூயவனைக் கைத்தாங்கலாகப் பிடித்து நாற்காலியில் அமர வைத்து விட்டனர்.

அவருக்குத் தன் இயலாமை பிள்ளைகளின் முகத்தில் அருவருப்பைக் கொண்டு வந்து விடுமோ என்ற பயமும், பதட்டமும் இருந்ததால், அவர்களை நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

எப்பொழுதும், தங்களை அழைத்து ஏதாவதொரு விஷயத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் தந்தை, இப்போது ஏன் தலையைக் கவிழ்ந்து கொண்டுள்ளார் என்பதை உணர்ந்த புவனாவோ, அவரருகில் சென்று தரையில் அமர்ந்து,”அப்பா! உங்களுக்கு என்னப் பிரச்சினையாக இருந்தாலும், அதைச் சரி பண்ணி, நீங்க நல்லபடியாக குணமாகிடுவீங்க பாருங்க! இதனால் நாங்க கண்டிப்பாக உங்களை ஒதுக்கிட மாட்டோம்! அப்பவும், இப்பவும், எப்பவும் எங்களோட ஹீரோ தான்!” என்று அவரிடம் கனிவுடன் கூறினாள்.

அதை ஆமோதிக்கும் வகையில், தானும் அவரது இன்னொரு புறம் போய் உட்கார்ந்து கொண்டு,“உங்களுக்குச் சரி ஆகிட்டாலே போதும் ப்பா! எதுக்கும் கவலைப்படாதீங்க! நாங்கப் பாத்துக்கிறோம்!” என்று அவருக்கு வாக்கு கொடுத்தாள் ரேவதி.

அவர்களது தலையைக் கோதி விடுவதற்குக் கூடத் தன் கைகளை அசைக்க முடியவில்லையே என்ற வேதனை அவர்களை வேதனை பொங்கப் பார்த்தார் தூயவன்.

தன் கணவனின் கண்களில் கண்ணீர் வரப் போகிறது என்பதை அறிந்து கொண்ட தாட்சாயணியோ,”நீங்கப் போய் ரெஸ்ட் எடுங்க!” என அவரைத் தாங்கிக் கொண்டு போய் அறையிலிருந்த கட்டிலில் படுக்க வைத்து விட்டு வந்தார்.

மெல்லத் தன் மகள்களைப் பார்த்தவரோ,”உங்கப்பாவுக்கு என்னாச்சுன்னு இப்போ உங்ககிட்ட சொல்றேன்” என்று கூறி விட்டுத், தூயவனுடைய கைகளும், கால்களும் அவருக்கு ஒத்துழைக்காது எனவும், அவரால் எந்த வேலையையும் தன்னிச்சையாகச் செயல்பட்டுச் செய்ய‌ முடியாது எனவும், அதற்குக் காரணம், அதிகப்படியான மன அழுத்தம் என்பதையும் தங்கள் பிள்ளைகளிடம் விளக்கிச் சொல்லி முடித்தார் தாட்சாயணி.

அதைக் காதுகளில் வாங்கிக் கொண்ட புவனா மற்றும் ரேவதிக்கோ, அழுகைத் தானாகவே பெருக்கெடுத்தது.

“உஷ்! அழுகாதீங்க டா! அவருக்குக் கேட்டால் வேதனைப்படுவார்!” எனத் தன் மகள்களை அணைத்துக் கொண்டார் அவர்களது தாய்.

“அப்பா ரொம்ப பாவம் மா!” என்று கூறிக் கொண்டே கேவினாள் ரேவதி.“ஆமாம் டா.நாம அவரை நல்லா கவனிச்சுக்குவோம்!” என்று அவளைச் சமாதானப்படுத்தினார் தாட்சாயணி.

“என்னோட கல்யாணத்தைத் தள்ளி வச்சிடலாம் மா! அப்பாவைப் பார்த்துக்கலாம். அவருக்குக் குணம் ஆனதும் அதை நடத்தலாம்” என்று அவரிடம் உறுதியாக தெரிவித்தாள் புவனா.

இந்த யோசனை அவருக்கும் இருந்தது தான்! இதைச் சொன்னால், மாப்பிள்ளை வீட்டார் ஒப்புக் கொள்வார்களா என்று சஞ்சலப்பட்டுப் போனார் தூயவனின் மனைவி.

“தினகரனோட வீட்டாளுங்க சங்கடப்படுவாங்கன்னு யோசிக்கிறீங்களா? அவங்ககிட்ட நான் எடுத்துச் சொல்றேன் ம்மா! அவங்களும் புரிஞ்சுப்பாங்க” என்றாள் அவரது மூத்த மகள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த ரேவதியோ, என்ன சொல்வதென்றே தெரியாமல் கண்ணீர் மல்க இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“நானே அவங்ககிட்ட பேசிப் பார்க்கிறேன் டா. நீ எதுவும் செய்ய வேண்டாம். இனிமேல் அப்பா நமக்குக் குழந்தை மாதிரி அவரை நல்லபடியாகப் பார்த்துக்கனும். சரியா?” என்று மகள்களிடம் வினவினார் தாட்சாயணி.

அதற்கு அவர்களும் ஒப்புதலாக தலையசைத்து விட, அடுத்ததாக தங்களது சம்பந்தி வீட்டாரிடம் பேச வேண்டுமென காத்திருந்த தாட்சாயணியிடம் வேண்டாமென்று தடுத்து விட்டார் தூயவன்.

  • தொடரும்

9 thoughts on “5. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. CRVS 2797

    பாவம் தான் தூயவன். பொண்ணு கலடயாணத்தை வச்சிருக்கிற நேரத்துல் இப்படியான, யாராலத்தான் தாங்கிக்க முடியும்..???

  2. Avatar

    தினகரன், மல்லிகா சூப்பர்!!… ரொம்ப அக்கறையா பார்த்துக்குறாங்க!!… அப்பாவை பார்க்க நிஜமாவே கஷ்டமா இருக்கு!!… எப்படி மீண்டு வரப் போறங்களோ!??…

  3. Kalidevi

    Udane uyir poita kuda antha valiya ethukalam aana ippadi iruntha avarukum kastam kuda irunthu pakuravangaluku inum evlo kastama irukum. Ithula ponnu mrg vachitu ippadi aeiduchi nu appa ku inum depression tha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *