Skip to content
Home » 5. தந்தை மண்

5. தந்தை மண்

இல்லத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. அனைத்துப் பணிகளையும் முடித்துவிட்டு, இளைய மகளைக் காண்பதற்காக வந்திருந்தார்‌ மீனாட்சி சுந்தரம்.

அருந்துவதற்காக அவரின் கையில் நீரைக் கொடுத்த ஜோதி, “ஏன்பா இப்படிச் செஞ்சீங்க.?”

“அப்பா, தப்பு எதுவும் செஞ்சிடலயே ம்மா.?”

“இருந்ததை நாலு பேருக்கும் கொடுத்துட்டீங்க. இனி, உங்களுக்கும் அம்மாவுக்கும் என்ன செய்யிவீங்க.?”

“எங்களுக்கு என்னமா, பெருசா தேவைனு இருக்கப் போகுது.? அதான் செலவுக்குக் காசு தருவீங்களே, அது போதாதா?‌ ரேசன்ல காசில்லாம அரிசி, பருப்பு, சீனினு எல்லாம் போடுறான். வருசத்துக்கு ஒருதடம் வேட்டி சேலையும் கிடைச்சிடுது‌. என்ன, பாலும் காயும் தான‌ கடையில வாங்கப் போறோம்‌. அதுக்கு மேல தேவைப்பட்டா, எதுவும் வேலைக்குப் போயிக்கிறேன் ம்மா. நீ,‌ என்னை நினைச்சுக் கவலைப்படாத. உன்னையும் பிள்ளையையும் பாரு.‌ நிலத்தை‍, நம்ம திவ்யா கல்யாணத்துக்கு வச்சுக்க‌. மத்ததுக்கு எல்லாம், நீதான் சம்பாதிக்கணும்!”

“ம்ம்..” எனத் தலையசைத்தவள், “அஞ்சு இலட்சத்துக்கு மூணு வருச குத்தகை பணம் ஈடாகுமா அப்பா.? எப்படி,‌ அண்ணே ஒத்துக்கிச்சு?”

“ஈடு ஆகாது தான். ஆனா, நமக்கு வேற வழியும் இல்லேல ஜோதி ம்மா? வெளிய வட்டிக்கு வாங்கிக் கொடுத்துட்டு, அதுல இருந்து நம்மளால மீள முடியுமா.‌ சொல்லு? இப்போதைக்கு இப்படியே இருக்கட்டும்‌.

இடையில எதுவும் பணம் கிடைச்சா, ரவிக்குக் கொடுத்திடலாம். அப்படியே முடியலனாலும் பிரச்சனை இல்ல. உன்னோட வீட்டுக்காரர், அவங்களுக்கு என்ன கொஞ்சமாவா செஞ்சிருக்காரு.?”

“இதுக்கு எல்லாமா அப்பா, கணக்குப் பார்ப்பாங்க?”

“அவங்க பார்க்கிறாங்களே ஜோதிமா? அஞ்சு இலட்சம்ங்குறது, பெரிய அளவு பணம்தான்‌. இந்தக் காலத்துல.. அதை, யாரும் விட்டுக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டாங்க. ஆனா அதுக்குனு.. துக்கம் நடந்த வீடுனு கூட யோசிக்காம, உடனே பணத்தைக் கேட்டு வந்துட்டா உன்னோட அக்கா மக!”

“அதுல தப்பு எதுவும் இல்லயே? அவளும் ரெண்டு பிள்ளைகளை வச்சிருக்கா. அதுகளோட எதிர்காலத்துக்குச் சேர்த்து வைக்கணும்ல.?”

“நீ புரிஞ்சுக்கிட்ட மாதிரி, அவங்க உன்னோட நிலையைப் புரிஞ்சுக்க முயற்சி செய்யலயே ம்மா.?”

“விடுங்கப்பா!” என்றவள் அப்படியே அந்தப் பேச்சிற்கு முற்றும் போட, “வேலைக்குப் போற, முன்ன பின்ன ஆகும். வீட்டுல, குழந்தைக்குத் துணைக்கு ஆள் வேணும்ல? அதுனால அம்மா இங்கேயே இருக்கட்டும். நான், நாளைக்கு ஊருக்குக் கிளம்புறேன்!” என்றார் மீனாட்சி சுந்தரம்.

“நீங்களும் இங்கேயே இருக்கலாம்ல.?” என வினவிட, “நான் உழைச்சு வாங்குன மண்ணு. அதுல போய் நாலு நடை நடக்கலேனா, தூக்கமே வராது. அதுவும் இல்லாம,‌ உன்னோட அண்ணனும் அக்காவும் நிலத்தை என்ன செய்யிறாங்கனு வேற பார்க்கணும்ல? என்னதான் எழுதித் தந்துட்டாலும்,‌ அது என்னோட மண்ணு ம்மா..” என்றவர் ருக்கம்மாவிடமும் உரைத்துவிட்டுக் கிளம்பினார்.

அதன்பின்னர், ஜோதியின் நாள்கள் இயந்திரமாய் மாறிப் போயின. காலை எழுந்து சமையலை முடித்த கையோடு, அன்னையிடம் மற்ற வேலைகளை ஒப்படைத்துவிட்டு, பணிக்குக் கிளம்பி விடுவாள்.

இனிப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தாள்‌. காலை எட்டு மணி முதல் இரவு எட்டு வரை எனப் பன்னிரெண்டு மணி நேரம். பொதுவாய் எட்டு மணி நேரம் தான் அனைவரும் வேலை செய்வர்‌. பணத் தேவைக்காகவும் மகளின் எதிர்கால வாழ்வை முன்னிருத்தியும், தானாய் அதிக நேர பணியைக் கேட்டுப் பெற்றிருந்தாள் ஜோதி.

ஊரில் கோபாலன் தனக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் வழக்கம் போல் பூச்செடிகளை வைத்து வேலை பார்க்க, மற்ற மூவரின் பகுதிகளிலும் காதம்பரியே வெள்ளாமை வைத்தாள்.

லோகுவும் ரவியும் தாங்கள் ஊரில் வந்து தங்கி நிலத்தில் பணி செய்ய இயலாது என்பதால், பொறுப்பை மூத்தவளிடம் ஒப்படைத்து இருந்தனர்.

ஜோதிக்கு உரிய வறண்ட நிலத்தின் பகுதியை, செங்கல் தயாரிக்கும் காலவாசலிற்குக் குத்தகைக்குக் கொடுத்தனர்.

‘நான்கு பங்குகள் என்பதால் நான்கு நாள்களிற்கு ஒருமுறை, ஒருவர் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக் கொள்ளலாம்.‌ அதுவும் இத்தனை மணி நேரம் தான் இயந்திரத்தை இயக்க வேண்டும்!’ எனப் பேசி வைத்திருந்தனர்.

அதற்குத் தகுந்த படி தோட்டத்தில் அதிகம் தண்ணீர் தேவைப்படாத.. மக்காச்சோளம், எள், நிலக்கடலை,‌ கேழ்வரகு, கம்பு, வரகு, சாமை, சூரியகாந்தி போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயிர் செய்தனர் காதம்பரியும் அவளின் கணவன் ஜெயராஜும்.

கோபாலனிற்கு உடைமையானதைத் தவிர, மற்ற பகுதிகள் முழுவதும் மூத்தவளின் வசம் இருந்தது‌.

ஊர்க்காரர்கள் எல்லாம், “என்னமா? தங்கச்சியோட இடத்துலயும் நீயே வேலை செய்யிற?” என வினவ, “அதுதான், வாங்குன காசுக்கு நிலத்தைக் கொடுத்திடுச்சு இல்ல?” என்று ஒரே போடாகப் போட்டாள்.

காற்று வாக்கில் செய்தி சுந்தரத்தை அடைந்தது. மூத்த மகளின் பேச்சும் நடவடிக்கையும் பிடித்தம் இல்லாவிட்டாலும், வீணான பிரச்சனைகளை உருவாக்க வேண்டாம் என்று அமைதியாய் இருந்து விட்டார்.

கிணற்றில் இருந்து நீர் எடுப்பதில், தமக்கைக்கும் தம்பிக்கும் இடையில் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படும். அது நாளடைவில் முற்றி ஜெயராஜிற்கும் கோபாலனிற்கும் இடையே அடிதடி சண்டை வரை இழுத்துச் சென்றது.

மூத்தவனிற்குமே, ‘சொத்தை பெண் பிள்ளைகளுக்கும் சேர்த்துப் பிரித்துக் கொடுத்து விட்டாரே.‍?’ என்று தந்தையின் மீது அதிருப்தியும் லேசான சினமும் உண்டு.

இருந்தாலும் ஜோதியின் நிலையை எண்ணி ‘சரி போகிறது’ எனத் தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். அவனால் ஏற்றுக் கொள்ளவே இயலாத ஒரு நிகழ்வு என்றால், அது காதம்பரிக்கு நிலத்தைக் கொடுத்தது தான்.

‘வசதியானவனுக்குத் தான கட்டிக் கொடுத்திருக்கு? சொந்தமா, நாலு வீடு வேற வச்சிருக்கா. இவளுக்குச் செஞ்சு செஞ்சே, என்னை நடுத்தெருவுல விட்டுட்டான் எங்க அப்பன்காரன். அதெல்லாம் போதாதுனு, நிலத்தை வேற எழுதிக் கொடுத்தாச்சு.‌ அவ புருஷன், அவன் நிலத்துல போய் வெள்ளாமை வைக்க வேண்டியது தான? அதை விட்டுட்டுப் பொண்டாட்டியோட நிலத்துல அதிகாரம் செஞ்சிட்டு இருக்கான். எதுக்கு எனக்குப் போட்டியா,‌ வந்து உயிரை வாங்குறானோ தெரியல.‌’ என்ற எண்ணம் உடன்பிறந்தவள் மற்றும் அவளது கணவன் மீது ஒரு வெறுப்புணர்வை உருவாக்கி இருந்தது‌.

அத்தோடு விடாமல், ஜெயராஜ் மதுவை அருந்திக் கொண்டு அதன் போதையில் ஊரார் ‌மற்றும் மூத்த மச்சினனிடம் வம்புக்குச் செல்வதை வாடிக்கையாய் வைத்திருந்தான்.

கோபாலனோ ‘பொறுமை என்றால் என்ன விலை.?’ எனக் கேட்பவன். உணவு உண்ணும் பொழுதுக்கூட, ‘உடன் பிறந்தவர்களிற்குச் சாப்பிட்டார்களா இல்லையா? அவர்களுக்கு வேண்டுமே?’ என்று சிந்திக்க மாட்டான். தன் வயிற்றை மட்டுமே, முக்கியமாய் எண்ணுபவன்‌.

தேவை என்றாலோ அல்லது குடும்பத்தார் மீது ஏதேனும் சினம் இருந்தாலோ‍, வீம்பிற்காகப் பாத்திரத்தில் இருக்கும் மொத்த உணவையும் அவன் ஒருவனே தின்று தீர்த்துச் சென்று விடுவான்‌. அவனது சிந்தனை, அவ்வளவு சுயநலம் மிக்கது‌.

சில நேரங்களில், அது குரூரமாகவும் யோசிக்கும். அந்தக் குரூரம், காதம்பரி வெள்ளாமை வைத்திருக்கும் பயிர்களில், செடிகளைப் பிடுங்கிப் போடும்‌. அறுவடைக்குத் தயாராய் நிற்கும் பொழுது, மோட்டரை இயக்கிவிட்டு நிலத்தில் நீரைப் பாய்ச்சும். மதுவை அருந்திவிட்டு, வஞ்சத்தோட வார்த்தைகளைச் சிதறவிடும். வரைமுறைகள் யாவும் கடந்து செல்லும்‌.

மூத்தவளோ, இரத்த உறவுகளுக்கு இடையிலேயே கணக்கைப் பார்ப்பவள். கோபாலனை, ‘போனால் போகிறான்!’ என விட்டு விடுவாளா என்ன?

விடிவதற்கு முன்பே எழுந்து சென்று, அவன் வைத்திருக்கும் செடிகளில் பூக்களைப் பறித்து, ஆண்டிப்பட்டிக்குக் கொண்டு சென்று விற்று விடுவாள்.

பச்சை மிளகாய், தக்காளி, இன்னும் பிற செடிகளில் இருந்துதான், வீட்டிற்குத் தேவையான காய்களைப் பறிப்பதே! அச்செயல், கோபாலனின் சினத்தை மேலும் மேலும் தூண்டும். பதிலிற்கு, தமக்கையையே கை நீட்டுவான்‌. மாமன்காரன் இடையில் வந்தால் அவனிற்கும் அடிவிடும். அரிவாளும் கம்பும் ஆயுதமாய், கரத்திற்கு வரும்.

சுந்தரத்தின் மீது மரியாதை வைத்திருக்கும் ஊர்க்காரர்களும், நலம் விரும்பிகளும் ஒன்றுகூடி, இவர்களைப் பிரித்துவிட்டுச் சமாதானம் செய்வர்.

வரப்பு தகராறு, வாய்க்கால் தகராறு, அடிதடி, ஆயுதத்தைக் காட்டி மிரட்டல் என ஓராண்டில் ஐந்து முறை காவல் நிலையம் வரை சென்று வந்தனர்.

நடப்பதை எல்லாம் பார்த்து, நொந்து போனார் சுந்தரம்.

மூத்த மகனிடம் இதைப் பற்றிப் பேச முயல, “எல்லாம் உன்னால தான்யா‌. நல்ல மருமகனைப் பிடிச்சுக் கொண்டு வந்த. அவனால, எங்க எல்லாரோட வாழ்க்கையும் போச்சு. உன்னோட மூத்த மகளைச் சொத்து இருக்கிறவனா பார்த்து கட்டிக் கொடுக்காட்டி, ஜோதியை மாதிரி கூலி வேலை செய்யிறவனுக்குத் தந்திருந்தா‍, இந்நேரம் அனுசரணையா இருந்திருப்பான் இல்ல?

அதோட விடாம, மக பெத்த நாடகக்காரியையே சின்னவனுக்கும் கட்டிவச்சு,‌ அவனையும் பொம்மையா மாத்தி வச்சுட்ட. சின்னவளையும் மூளி ஆக்கிட்ட. எனக்கும்‌ ஒண்ணும் இல்லாதவளைக் தேடிப் பிடிச்ச. இப்ப, சீக்காளியா கிடக்கா. எந்தப் பிள்ளைக்குத்தான், நல்ல வாழ்க்கையைத் தேடிக் கொடுத்த நீ?” என கோபாலன் மனதில் இருந்த அத்தனையையும் கொட்டிவிட, சுந்தரம் தவித்துப் போனார்.

அவர், நான்கு பிள்ளைகளிற்கும் நல்வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்றுதான் எண்ணினார். ஆனால், காலம் வேறொன்றை நிகழ்த்திவிட்டது.‌

மூத்த மகளின் கணவனைக் கண்டு பெற்ற அனுபவத்தில் தான், கோபாலனிற்கு ஏழ்மையான குடும்பத்தில் பெண் தேடினார்.

பொறுப்பற்று இருந்தவனது திருமணத்திற்குப் பெண் கிடைத்ததே, அத்தந்தையைப் பொறுத்தவரை பெரிய விஷயம். கோசலாவைப் பெரியதாய்க் குறை என்று சொல்லிவிட இயலாது. உறவுகளோடு ஒன்ற மாட்டாள். கணவனைப் போலவே சுயநலம் கொண்டவள். எனினும், தன்னளவில் குடும்பத்தை நல்முறையிலேயே வழிநடத்தினாள்‌.

அதிகப்படியான உடல்பருமன் இயல்பான வாழ்விற்குத் தடையாய் வந்ததை, விதி என்று தான் சொல்லாமல் வேறு என்ன காரணத்தை உரைக்க முடியும்? அதனால் கோபாலனிற்கு மனைவியை எண்ணி சற்று வருத்தம் இருந்தாலும் கூட, கோசலாவை நன்றாகவே பார்த்துக் கொண்டான்.

‘தன்னை நம்பி வந்தவள்!’‌ என்ற எண்ணம் ஒன்றே அவளிடம் அன்பு கொள்வதற்குப் போதுமானதாய் இருந்தது. அந்த வகையில்‍, சுந்தரம் உட்பட அனைவருமே அவனை ‘நல்ல கணவன்’ என ஒப்புக் கொள்வர்.

இரு பிள்ளைகளின் துணையையும் பார்த்துவிட்டு தான், ஜோதிக்குக் குணம் நிறைந்த வெங்கடேஷை கணவனாய்க் கொண்டு வந்தார்‌.‌ ஆனால், நடந்ததோ வேறு.

‘இளைய மகனின் குணத்திற்குத் தகுந்தபடி பெண் பார்க்க வேண்டும்!’ என்று அவர் எண்ணி இருக்க, விதி யாரை விட்டது? அன்னை தந்தை இருவரது குணத்தையும் ஒன்று சேர்த்தது போல் பிறந்து வந்து‍, தாய்மாமனிற்கே மனைவியாகி இருந்தாள் லோகு‌.

தற்போது எதுவும் சுந்தரத்தின் கையில் இல்லை. பிள்ளைகள் நலமுடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன், மிச்சக் காலத்தையும் கழித்துவிட்டுப் போய்ச் சேர்வது தான் ஒரே வழி.

நடந்த நிகழ்வுகளும், கோபாலனின் பேச்சும் நடவடிக்கையும், ருக்கம்மாவிற்குப் போய்ச் சேர்ந்தது.‌ பிள்ளைகளுக்கு இடையே அடித்துக் கொள்வதையும், கணவரின் நிலையையும் எண்ணி நொந்து போனார்.

‘ஊரிலேயே இருந்தால், இதற்கு மேலும் மரியாதையற்ற பேச்சுகளைக் கேட்க வேண்டி வரும். இறுதி காலத்தில் அவமானத்தைச் சந்திக்க வேண்டாம்!’ என்றெண்ணி ஜோதியின் வீட்டிற்குக் கிளம்பி விட்டார் சுந்தரம்.

மகளின் இல்லத்தை அடையும் பொழுது, ‘மனையாள் இறைவனைச் சென்றடைந்து விட்டாள்!’ என்ற செய்தி தான் அவரை வரவேற்றது.

7 thoughts on “5. தந்தை மண்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *