Skip to content
Home » 6. சுடரி இருளில் ஏங்காதே!

6. சுடரி இருளில் ஏங்காதே!

“நீங்க இப்படி இருக்கிற நிலைமையில் கல்யாணத்தை எப்படி நடத்த முடியும்ங்க?” எனத் தன் கணவனிடம் வினவினார் தாட்சாயணி.

“அதெல்லாம் நடத்திடலாம் மா. என்னால் முடிஞ்சளவுக்கு நான் கொஞ்சம் கொஞ்சமாக நடக்க டிரை பண்ணுவேன். கை தான் பிராப்ளம் ஆகும். அதை மட்டும் நீ பாத்துக்கிறியா?” என்று தன்னிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டவரை அமைதியாகப் பார்த்தார் அவரது மனைவி.

“ஏன் இப்படி அவசரப்படுறீங்கன்னு தானே கேட்க நினைக்கிற?” என்றார் தூயவன்.

அதற்கு ‘ஆம்’ எனத் தலையை அசைத்தவரிடம்,

“எனக்கு ரொம்பவே உடம்பு சரியில்லை! அதனால் தான்…” என்று ஆரம்பித்தவரைத்,

தன் கையை உயர்த்தி தடுத்து விட்டு,”நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். அதை உங்க வாயால் கேட்கிற சக்தி எனக்கு இல்லை! உங்களுக்கு இந்தக் கல்யாணத்தை நடத்தனும். அவ்ளோ தானே? சரி. நான் சம்பந்தி வீட்டுக்காரங்க கிட்டே பேசலை. போதுமா?” என்று தன்னுடைய குரல் கமற உரைத்தார் தாட்சாயணி.

“என்னை மன்னிச்சிரு ம்மா! எனக்கு வேற வழி தெரியலை. நம்மப் பொண்ணுக் கல்யாணத்தை நான் பார்த்தே ஆகனும்!” என்று தீர்க்கமாக கூறி விடவும்,

“நமக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க! அந்த ரெண்டு பேரோட கல்யாணத்தையும் முன்ன நின்னு நடத்தப் போறது நீங்க தான்! நீங்கப் பழைய மாதிரி மாறிடுவீங்க! தைரியமாக இருங்க” என்று தன் கணவருக்கு நம்பிக்கை அளித்தார் அவருடைய மனைவி.

“சரிம்மா. கல்யாணச் செலவுக்குக் காசு இருக்கும்ல?” என அவரிடம் பரிதாபமாக கேட்டார் தூயவன்.

ஏனெனில், அவருக்கு உடல்நலம் நன்றாக இருந்த சமயத்தில், தங்கள் மகளுடைய திருமணத்திற்கானப் பணத்தை தன்னுடைய மனைவியிடம் தான் கொடுத்து வைத்திருக்கிறார்.

தனது மருத்துவ செலவிற்குப் போக மீதி எவ்வளவு உள்ளது? என்பதை தெரிந்து கொள்வதற்காக இதைக் கேட்டிருந்தார் அவரது கணவன்.

“ம்ஹ்ம். தேவையான அளவுக்கு இருக்கு ங்க. நீங்க எதையும் போட்டுக் குழப்பிக்காதீங்க! எங்கிட்ட விட்ருங்க” என்று இப்படியான, பற்பல வார்த்தைகளைக் கூறி அவரைச் சமாதானப்படுத்தி விட்டு, மகள்களின் அறைக்குச் சென்றார் தாட்சாயணி.

“அவர் வீட்டில் பேசிட்டீங்களா ம்மா?” என்று அன்னையிடம் வினவினாள் புவனா.

“இல்லை. உங்க அப்பா வேண்டாம்னு சொல்லிட்டார்” என்றவரோ, அதற்கான காரணத்தையும் அவர்களிடம் மறைக்காமல் பகிர்ந்து கொண்டார்.

“இந்த நிலைமையில், கல்யாணத்தை எப்படி ம்மா நடத்துறது?” என்று தானும் தன் மனக்குறையை அவரிடம் வெளிப்படுத்தினாள் புவனா.

“அப்பா ஏன் இப்படியெல்லாம் நினைக்கிறார்? எல்லா அரேன்ட்ஜ்மெண்ட்ஸ்ஸையும் நாம மட்டும் எப்படி பார்க்கிறது?” என்று தாயிடம் கேட்டாள் ரேவதி.

“நம்ம சொந்தக்காரங்களைக் கூடமாட ஒத்தாசை செய்யக் கூப்பிட்டுக்கலாமா?” என்றார் தாட்சாயணி.

“க்கும்! அவங்ககிட்ட அப்பாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடலில் சேர்த்துருக்கோம்ன்னு இன்ஃபார்ம் செஞ்சும், வந்துப் பாக்கவே இல்லை. கல்யாண வேலையைப் பார்க்கிறதுக்கு மட்டும் எப்படி வரப் போறாங்க?” என்று அவரிடம் வினவினாள் மூத்த மகள்.

“முதல்ல கேட்போம். அவங்க வர முடியாதுன்னு சொல்லிட்டா விட்ரலாம்” என்றார் அவருடைய தாய்.

“என்னமோ பண்ணுங்க” என்று கூறி அமைதியாகி விட்டாள் ரேவதி.

அந்த நேரத்தில், தாட்சாயணியின் செல்பேசி ஒலித்ததும், அதை அட்டெண்ட் செய்து,”ஹலோ” என்று பேசினார்.

“சம்பந்தியம்மா!” என்று பேச்சை ஆரம்பித்தார் மல்லிகா.

“ஹாங்! சொல்லுங்க” என அவருக்கு உடனடியாகப் பதிலளித்தார் புவனாவின் அன்னை.

“சம்பந்தி ஐயா, இப்போ எப்படி இருக்கார்?” என்று வினவவும்,“ம்ம். நல்லா இருக்கார் ங்க” என்று கூறி விட்டார் தாட்சாயணி.

“நானும், இவரும் சேர்ந்து தூயவன் ஐயாவைப் பார்க்க வரலாம்னு இருக்கோம். நாங்க எப்போ வந்தால் உங்களுக்கு சௌகரியமாக இருக்கும்?” என்று அவரிடம் கேட்டார் மல்லிகா.

“சாயந்தரம் வாங்க சம்பந்தியம்மா” என்றார் புவனாவின் அன்னை.

“சரிங்க. இன்னைக்கு சாயந்தரம் வர்றோம்” என்று அவரிடம் சொல்ல, அதற்கு ஒப்புதல் அளித்தவரோ,

”உங்க கூட மாப்பிள்ளையும் வருவாரா ங்க?” என்ற கேள்வியை அவர் முன் வைத்தார் தாட்சாயணி.

“அவன் வர‌ மாட்டான் ங்க. அவனுக்கு வேலை முடியிறுதுக்கு நைட் ஆகிடும்” என விடையளித்தார் மல்லிகா.

“ஓஹ் சரி. அப்போ நீங்க வாங்க” என்று சொல்லி, அழைப்பை வைத்து விட்டு,”இன்னும் கொஞ்ச நேரத்தில், தினகரனோட அப்பாவும், அம்மாவும் இங்கே வரப் போறாங்க” என்று தனது இரு மகள்களிடம் தகவல் தெரிவித்தார் அவர்களது தாய்.

ரேவதி,“அப்போ இந்தக் கல்யாணத்தை நடத்திடலாம்னு அவங்ககிட்ட நேரிலேயே சொல்லிடுங்க ம்மா”

“அதைத் தான் பண்ணனும்” என்று அவளிடம் சொன்னவர்,

உடனே, தூயவனிடம் சென்று இந்தச் செய்தியை அறிவித்தார் தாட்சாயணி.

“சரி, அவங்க வரட்டும். நானே எல்லாத்தையும் சொல்லிடறேன்” என்று மனைவியிடம் கூறி விட்டு அவர்கள் வரும் வரை ஓய்வெடுத்துக் கொள்வதாக கண்களை மூடிக் கொண்டு படுத்து விட்டார் தூயவன்.

அன்றைய மாலை நேரத்தில், தங்களது மகனுக்கு அழைத்துப் புவனாவின் சம்பந்தியைப் பார்க்கச் செல்வதாகத் தெரிவித்து விட்டுத், தூயவனின் வீட்டிற்குப் போனார்கள் சேகர் மற்றும் மல்லிகா.

மற்ற‌ மூவருடைய நலன்களை விசாரித்து முடித்ததும், தூயவன் இருக்கும் அறைக்கு அவர்களை அழைத்துச் சென்றனர் தாட்சாயணி, புவனா மற்றும் ரேவதி.

“வாங்க சம்பந்தி” என்றவரோ, எழுந்து அமர‌ முயற்சிக்கவும்,

“எழுந்திரிக்க வேண்டாம் சம்பந்தி. நீங்கப் படுத்துக்கோங்க” என்று அவருக்கு அறிவுறுத்தினார் சேகர்.

அவர் அவ்வாறு கூறியதும், மெல்லப் படுக்கையில் படுத்து விட்டார் தூயவன்.

“இப்போ எப்படி இருக்குங்க?” என்று அவரிடம் மல்லிகா மெதுவாக விசாரிக்க,

“ஹாங்… பரவாயில்லை தான் ம்மா” என்று அவருக்குப் பதிலளித்தார்.

அதன் பின்னர், அவருடைய உடல்நிலையில் எப்போது முன்னேற்றம் நடக்கும் என்பதையெல்லாம் கேட்டுக் கொண்டார்கள் தினகரனின் பெற்றோர்.

அவர்களுக்குக் காஃபி கொடுத்து உபசரித்து விட்டு, அவர்களுடன் சேர்ந்து பேச்சில் கலந்து கொண்டார் தாட்சாயணி.

தந்தையின் இந்த நிலையைக் கண்டுத் தவித்துப் போய், தனது உடல்நிலையில் கவனமின்றி இருந்த புவனாவைத் தான் துயரத்துடன் ஏறிட்டனர் சேகர் மற்றும் மல்லிகா.

இந்தச் சமயத்தின் போது, தங்கள் மகனுடைய திருமணத்தை நடத்துவதில் அவர்களுக்கும் அவ்வளவாகப் பிடித்தமில்லை.

இப்போதிருக்கும் சூழ்நிலையில், தங்களுடைய சம்பந்தியின் உடல் தேறி வருவது தான் மிக முக்கியமான விஷயமாக அவர்களுக்கு இருந்தது.அதைப் புவனாவின் பெற்றோரிடமும் கூறினார்கள் இருவரும்.

அதற்குத் தாட்சாயணியோ,”அதுக்கு இவர் சம்மதிக்கனுமே?” என்று சொல்லித் தன் கணவரைப் பார்த்தார்.

அவரும் மிகவும் பிரயத்தனப்பட்டுத் தனது இதழ்களைப் பிரித்து,”என் பொண்ணோட கல்யாணத்தை நான் கூடிய சீக்கிரமே பார்க்கனும்னு எனக்கு ஆசையாக இருக்கு!” என்று உறுதியாக கூறினார் தூயவன்.

“நீங்க உடம்பு சரியாகி, நல்லா எழுந்து நடந்ததுக்கு அப்பறம் இவங்களோட கல்யாணத்தை வச்சுக்கலாம் சம்பந்தி” என்று அவரைச் சமாதானப்படுத்திப் பார்த்து விட்டனர் சேகர் மற்றும் மல்லிகா.

“இல்லை ங்க சம்பந்தி. என்னோட உடல்நிலையைப் பார்த்துட்டு எதையும் நிறுத்தி வைக்க வேண்டாம். கல்யாணத்துக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய ஆரம்பிச்சிடலாம். எனக்காக எல்லாரும் சேர்ந்து இதைப் பண்ணிக் கொடுங்க” என்று அவர்கள் அனைவரிடமும் மன்றாடினார் தூயவன்.

அதைப் பார்த்து நெகிழ்ந்து போனவர்களோ,”சரிங்க சம்பந்தி. உங்க இஷ்டப்படியே எல்லாம் நடக்கட்டும். நாங்கப் பாத்துக்கிறோம்” என்று கூறி அவருக்கு ஆறுதல் அளித்தார்கள்.

தூயவனின் குடும்பத்தாரிடம் இருந்து விடைபெற்றுக் கிளம்பிய சேகரும், மல்லிகாவும், தங்களிடம் தூயவன் கேட்டுக் கொண்ட விஷயத்தைப் பற்றித் தங்களது மகனிடம் தெரிவித்து விட்டனர்.

அதைக் கேட்டவனும் கூட,”மாமாவோட இந்த நிலைமையில் இதெல்லாம் தேவையா?” எனத் தனது பெற்றோரிடம், வருத்தத்துடன் வினவினான் தினகரன்.

“நாங்க மட்டுமில்லை, அவரோட பொண்டாட்டி, பிள்ளைங்க கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு! ஆனால், அவர் கேட்கவே மாட்டேங்கிறார்!” என்று அவனிடம் சொன்னார் சேகர்.

“ப்ச்! அவர் கிட்ட நான் வேணும்னா பேசிப் பார்க்கட்டுமா?” என்று அவர்களிடம் கேட்டான் தினகரன்.

“ஊஹூம்! அவரைச் சமாதானமே பண்ண முடியாதுடா! அதான், சம்பந்தியம்மாவே கல்யாண வேலையைப் பார்க்கலாம்னு சொல்லிட்டாங்க” என்று தங்களது மகனிடம் தெரிவித்து விட்டார் மல்லிகா.

அதனால், அதை ஒப்புக் கொள்வதை தவிர, தினகரனுக்கும் வேறு வழியில்லை என்றான பின், தானும் இந்தக் கல்யாணத்தைச் செய்து கொள்ளச் சம்மதித்து விட்டான்.

அதற்குப் பிறகு, கல்யாணச் செலவுகள் அனைத்தும் தங்களது பொறுப்பு என்பதாலும், அதற்கான ஆயத்தங்கள் யாவற்றையும் வெகு விரைவாகவே நடத்தி முடிக்கத் திட்டமிட்டனர் அனைவரும்.

தொடரும்

5 thoughts on “6. சுடரி இருளில் ஏங்காதே!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *