Skip to content
Home » 6. தந்தை மண்

6. தந்தை மண்

‘இத்தனை ஆண்டுக் காலம் வாழ்ந்த ஊரைவிட்டு, மகளைத் திருமணம் செய்து கொடுத்த ஊரிலா மனைவியின் இறுதி சடங்கு நடக்க வேண்டும்?‌’ என்றெண்ணி, ருக்கம்மாவை அவசர ஊர்தியில் வைத்து ராஜ கோபாலன் பட்டிக்கே கொண்டு சென்றார், சுந்தரம்.

தாய்க்குத் தலைமகன் என்ற வழக்கப்படி, கோபாலன் தனது கடமையைச் செய்து முடித்தான்.

ஜோதியின் நிலம், தமையன் ரவியின் வசம் தான் இருந்தது‌. சொல்லப் போனால் காதம்பரியிடம். தம்பி, தங்கை, தன்னுடையது என மூவருக்கும் உரிமையானதை அவளின் பொறுப்பிலேயே வைத்திருந்தாள்.

பதினாறாம் நாள் காரியம் முடிந்ததும்..‌ சுந்தரம் இளைய மகளையும் பெயர்த்தியும் அழைத்துச் சென்று நிலத்தைக் காட்டினார்.

சோளக் கதிர்கள் செழித்து நின்றன‌. இரு வாரங்களில் அறுவடையைத் துவக்கி விடுவர்.

தோட்டத்திலும், வறண்ட நிலத்திலும் கைக்காட்டி, “இதுல இருந்து இது வரைக்கும்‌ உன்னோடது. நடுவுல இருக்கிற ஏழு அடி வண்டிப் பாதை, பெத்தண்ணசாமி கோயிலுக்குப் போறது. இந்தப் பாதைக்குக் காசு வாங்கிட்டா, நாளைக்கு நிலத்தை விக்கிறப்ப இதைப் பயன்படுத்த அனுமதி தருவாங்களானு தெரியல. அதுனால பேருக்கு மட்டும் கொஞ்சமா பணத்தை வாங்கிட்டு, பொதுப் பாதையா எல்லாரும் பயன்படுத்திக்கலாம்னு எழுதிக் கொடுத்திருக்கேன்.

கோயிலோட பின்பக்க சுவர் வரைக்கும் உன்னோட இடம் ஜோதிமா. அரை ஏக்கரைக் காட்டிலும், ஒரு ரெண்டு மூணு செண்ட் சேர்த்துதான் வரும். இப்ப இருக்கிற சூழ்நிலைல, நிலத்தை அளந்து வேலி போட முடியாது. தேவைப்படுறப்ப, நீ செஞ்சுக்க.‌

இந்த விபரம் எல்லாம் தெரிஞ்சிருந்தா, அப்ப உனக்கு உபயோகமா இருக்கும்னு தான் சொல்லுறேன். திவி கண்ணு, உனக்கும் தான்.‌ பார்த்துக்க!” என்றிட, அன்னையும் மகளும் கனத்த மனதுடன் ஒன்று போல் தலை அசைத்தனர்.

“நிறையக் காலம் இருப்பா. உனக்குத் துணையா நின்னு, இந்தப் பிள்ளைய எப்படியும் கரை சேர்த்திடலாம்னு நினைச்சேன்‌. பாவி மக! நீயே உன் பிள்ளைகள இருந்து பாருய்யானு விட்டுட்டுப் போயிட்டா.‌ இங்க தான்.. இங்கனக்குள்ள தான், வேலையை முடிச்சிட்டு ஒண்ணா உட்கார்ந்து காப்பித் தண்ணிக் குடிப்போம்!” என்றவர் குனிந்து அவ்விடத்தின் மண்ணைக் கரத்தில் அள்ளிப் பார்த்திட, விழிகளில் இருந்து வெளியேறிய நீரின் சில துளிகள் அம்மண்ணில் விழுந்தது.

புன்செய் நிலம் அது. பொன்னாய் மாறியதில், ருக்கம்மாவிற்கும் பெரும் பங்கு உண்டு.‌ சொல்லப் போனால், கணவர் சுந்தரத்திற்கு இணையாக வேலைப் பார்த்தார்.

பழைய நினைவுகளில் மனம் கலங்கிட விழிகளில் நிறைந்த நீருடன், மூவரும் மெல்ல நடந்தனர்.

“ஐயா..” என்ற அழைப்பில் சுந்தரம் நின்றிட, மற்ற இருவரும் திரும்பிப் பார்த்தனர்.

“ரத்னம்.. என்னப்பா எப்படி இருக்க?”

தலையசைத்த அவன், “இயக்கத்துல இருக்கிற ஆளுங்களோட போயிட்டு, இன்னைக்குத்தான் வந்தேன். அம்மா, விபரம் சொன்னாங்க. வீட்டுக்கே வந்து பார்க்கலாம்னு இருந்தேன்.” எனப் பாதியில் பேச்சை நிறுத்திட, “பரவாயில்ல. இந்தத் தடவை எந்த ஊரு.?”

“திண்டுக்கல் பக்கம் இருக்கிற‌ குக்கிராமங்கள்.”

“எல்லாம் சரிதான். பொதுப்பணியோட சேர்த்து வீட்டையும் கவனிக்கலாம்ல?”

“நான் உங்கக்கிட்ட துக்கம் விசாரிக்க வந்தா, நீங்க எனக்கு அறிவுரை சொல்லுறீங்க.?”

“துக்கத்தையே தூக்கி வச்சுக்கிட்டு இருக்க முடியுமா? அவளுக்கு அவசரம்னு முன்னாடிப் போயிட்டா. நான், கொஞ்சம் காலம் கழிச்சுப் போகப் போறேன்! அவ்வளவு தான.?”

“வெளிய இப்படிப் பேசுறதுக்குப் பின்னாடி இருக்குற வலி, எனக்கு நல்லாவே தெரியுங்க ஐயா‌. அம்மா, அனுபவிச்சதைப் பார்த்து இருக்கேன்! மத்தவங்களுக்காக நம்ம வேதனையை மறச்சுக்கணும்னு அவசியம் இல்ல.‌”

“நீ, உன்னோட கொள்கையைச் சொல்லுற. நான், என்னோட அனுபவத்துக்குத் தகுந்தபடி நடந்துக்கிறேன்!”

அவன் முயன்று புன்னகைக்க, “நான், என்னோட சின்ன மகக்கூட மதுரைக்குப் போயிடலாம்னு இருக்கேன். நீ, இங்க கொஞ்சம் பார்த்துக்கப்பா..” எனச் சுந்தரம் உரைக்க, தலை அசைத்தான்.

“வாங்கம்மா போகலாம்!” என்று உடன் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு நடக்க‍, மூவரையும் சில நொடிகள் பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றான் அவன்.

“யாருப்பா‌ இது.?‌ நான் பார்த்தது இல்லையே?‌‌” என ஜோதி விசாரிக்க, “நம்ம ஊருதான் ம்மா. பேரு செல்வரத்னம்.‌‌ ஆண்டிப்பட்டில டிஃபன் கடை வச்சிருந்தாரு, இவனோட அப்பா. நான் போறப்ப எல்லாம் அங்கதான் சாப்பிடுவேன். கடை பக்கத்துலயே தான் குடி இருந்தாங்க. பங்காளிகளுக்கு இடையில ஏற்பட்ட தகராறுல, அவரை வெட்டிட்டானுங்க.‌ அதுக்குப் பின்னாடி, ரெண்டு பையனுங்களையும் கூட்டிட்டு, இவனோட அம்மா இங்கேயே வந்திடுச்சு. சின்னப் பையன் காலேஜ் பிடிக்கிறான். இவன், சமூகப் பணி செய்யிறேன்னு சுத்திக்கிட்டு இருக்கான்.”

“அடடா! இப்படி இருந்தா, குடும்பம் என்னத்துக்கு ஆகும்? ஆம்பளைப் பிள்ளனா, நல்லபடியா சம்பாதிச்சு தன்கூட இருக்கிறவங்களைப் பார்த்துக்க வேண்டாமா?”

“தோட்ட வேலைக்குப் போயி, அதுல குடும்பத்தைப் பார்த்துக்கிறான்‌. என்ன, அப்பப்ப இந்த மாதிரி இயக்கத்தோட ஆளுங்க கூடப் போயிடுவான்.”

“என்னப்பா? இயக்கம் அது இதுனு என்னென்னமோ சொல்லுறீங்க?”

சுந்தரம் புன்னகைத்து, “கிராமிய மிதிவண்டி இயக்கம் ஜோதிமா. பைக் எதுவும் பயன்படுத்த மாட்டான். சைக்கிள் மட்டும் தான்.‌ ஒருதடவை, இங்க இருந்து சைக்கிள்லயே திருப்பூருக்குப் போயிட்டு வந்தான்!” என்றிட, ஒன்றும் புரியாமல் வியப்பாய் நோக்கினாள் அவள்.

திவ்யாவிற்கு, இவர்களது பேச்சு எதுவும் செவியில் கூட விழவில்லை. நடந்து செல்லும் மண் சாலையின் ஓரம் விதவிதமாய் வளர்ந்து நின்ற பெயர் அறியா செடிகளையும், அதில் மலர்ந்திருந்த சிறு சிறு பூக்களையும் வேடிக்கை பார்த்தபடி சென்றாள்.

காலம் எவருக்காகவும் இறங்குவது இல்லை‌. அதே போலத்தான் மனிதனின் குணங்களும். தேவை இருந்தால் ஒழிய, எதற்காகவும் எவருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ள மாட்டான்.

முதல் குழந்தை பிறந்ததும்..‌ தங்களது தோட்டத்தின் முன்பகுதியில் இருந்த இடத்தில், தேவைக்கு அளவான சிறிய வீடு ஒன்றைக் கட்டி இருந்தான் கோபாலன். அதில் தான் தற்போதும் இருந்து வருகிறான்.‌

மாமியாரின் உறவில் இருக்கும் பாட்டியின் இறப்பிற்கு வந்திருந்த லோகு..‌ நடப்பவற்றை எல்லாம் கவனித்துவிட்டு, “மாமா, நாமளும் ஊருல ஒரு வீட்டைக் கட்டிடுவோமா? தாத்தா, சித்தியோட போறேன்றாரு. அதுனால குடி இருக்கிற இந்த வீட்டைக் காலி செஞ்சிடுவாரு. நாம இனி வந்து போனா, எங்க தங்குறது?‌

உன்னோட அண்ணே வீட்டுல போய் இருக்க முடியுமா? அப்பாவோட வீடு, நம்ம நிலத்துல இருந்து தூரமா இருக்கு. போயிட்டு வர சிரமமா இருக்கும்‌. உன்னோட அண்ணனோட வீட்டு பக்கத்துலயே, ஒண்ணைக் கட்டிடுவோமே? நமக்கும்,‌ அந்த இடத்துல பங்கு இருக்குல்ல? நிலமும் கண் முன்னாடியே இருக்கும். அம்மாவும், அலையாம அங்கேயே தங்கிப் பார்த்துக்கும்!” என ரவியிடம் உரைக்க, யோசனையில் சுருங்கியது அவன் முகம்.

“நிலத்துல வேலை செய்யிறப்பவே இத்தனை வம்பு வழக்கு. இதுல பக்கத்துலயே குடி வந்தா, சொல்லவா வேணும்? ஏன், இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் இல்லாம செஞ்சிடணும்னு பார்க்குறீங்களோ? நான், இதுக்குச் சம்மதிக்க மாட்டேன்!” என்று கோபாலன் தனது எதிர்ப்புக் குரலை எழுப்ப,

“ஏன், வீட்டைச் சுத்தி இருக்குற இடத்தை நீயே அமுக்கிடலாம்னு பார்க்குறியா? பங்குனா பங்கு தான். தம்பி, நீ வீட்டைக் கட்டுடா. என்னதையும் தர்றேன். ஜோதியோடதையும் எடுத்துக்குவோம், அவதான் உனக்குக் காசு தரணும்ல?” எனத் தந்திரமான தனது யோசனையை உரைத்தாள் காதம்பரி.

குடிகார கணவனை நம்பிக் கொண்டு, காலத்தைக் கழித்திட முடியாது. ‘போதையில் ஏதேனும் செய்து விட்டாலோ அல்லது எதிலாவது அடிபட்டு இறந்து தொலைத்தாலோ தனது நிலை என்னவாகும்?’ என்ற சிந்தனை அவளிற்கு எப்பொழுதுமே உண்டு.

அதனால் தான், ‘மகளிற்கு மட்டும் அல்லாது தனக்கும் ஆதரவு வேண்டும்!’ என யோசித்துத் தம்பியை மருமகனாய் மாற்றினாள். இரண்டாம் மகளிற்கும் தனக்குத் தகுந்தது போலவே, ஒருவனைத் தேடிப் பிடித்துத் திருமணம் முடித்து வைத்து விட்டாள்.‌

கையோடு இரு மகள்களிடமும் பேசி சிறிது பணத்தை ஜெயராஜிடம் கொடுத்து, அவனது பெயரில் இருந்த வீடு நிலம் அனைத்தையும் பிள்ளைகளின் பெயரிற்கு மாற்றிக் கொடுத்தாள்.

தற்போது தனது பாதுகாப்பிற்காகவும், எதிர்காலப் பிடிமானத்திற்காகவும்.. தந்தையின் மண்ணைப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறாள்.

அனைத்தும் சரிதான். பெண் புத்தி பின்புத்தி என ஒப்புக் கொள்ளலாம்.

‘ஆனால், தம்பி மற்றும் தங்கைக்கு உரிமையானதையும் தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும்!’ என்ற அவளின் பேராசை தான், உடன் பிறந்தவர்களுக்கு இடையேயான அன்பைக் கொன்று மெல்ல மெல்ல விரோதத்தை வளர்த்துக் கொண்டிருந்தது.

அன்னையின் புத்தி அப்படியே மகளின் வழியாய், ரவியின் எண்ணங்களிற்கும் நுழைந்திட, அவனும் மெல்ல உறவுகளிடம் இருந்து தூரமானான்.

இவர்களின் பேச்சைக் கேட்டிருந்த சுந்தரம், “யார் இடத்துக்கு, யார் உரிமை கொண்டாடுறது? தோட்டத்தையும், குழியையும் தான் உங்களுக்குக் கொடுத்திருக்கேன். மத்தது எல்லாம், இன்னும் என் பேருலதான் இருக்கு. உரிமைப் பட்டவன் நான். என்கிட்ட கேக்காம நீங்களா எப்படி முடிவெடுப்பீங்க.?” என வினவ, “அப்ப, ஏன் பெரியவனுக்கு மட்டும் வீடு கட்ட சம்மதம் சொன்னீங்க?” என்று மறுவினா தொடுத்தாள் காதம்பரி.

“அதை, அன்னைக்கான தேவைக்குக் கொடுத்தேன். அப்பவும், நான் அவனுக்கு எழுதிக் கொடுக்கலயே? அப்புறம் என்ன.?”

“அப்ப, உங்களோட மூத்த மகனைப் போலவே எனக்கும் வீடு கட்ட அனுமதி கொடுங்க அப்பா.” என ரவி இம்முறை நேரடியாகவே கேட்க, “அது எப்படிக் கொடுப்பாரு? அவருக்கு மூத்த மகனும், இளைய மகளும் தான் உசத்தி. உன்னையும் எங்கம்மாவையும், தாத்தா பிள்ளைகளாவே நினைக்கல மாமா! அதுனால தான், சித்திக்கு அஞ்சு இலட்சம் கொடுத்த விசயத்துலயும், இப்ப வீட்டுப் பிரச்சனையிலயும் உங்களுக்கு எதிராவே பேசுறாரு!” என்று எரியும் கொள்ளியில் நெய்யை ஊற்றினாள் லோகு.

“என்னைக்கா இருந்தாலும், அது எங்களுக்குத் தான?‌ இப்பவே தந்துட்டா, அவங்கவங்க தேவைக்கு வீட்டைக் கட்டி இருந்துக்குவோம்ல?” எனக் காதம்பரி வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் உரைக்க, அதன் குத்தலில் சுந்தரத்தின் முகமும் மனமும் சுணங்கியது.

‘இதற்கு மேலும் இந்தப் பேச்சு தொடர்ந்தால், பிள்ளைகளுக்கு இடையே பிரச்சனை வலுக்கும்!’ என உணர்ந்தவர், அதற்கு வழி வகுத்துவிடா வண்ணம், “சரி‌! எழுதித் தர்றேன்! என்று வாக்களித்தார்.

“அப்படியே சித்தியோடதையும் சேர்த்து, எங்களுக்கே தந்துடுங்க. அதுதான், ஊருக்கே வர்றது இல்லயே? அந்தச் சின்ன இடத்தை வச்சு, என்ன செய்யப் போகுது? இதுல பத்திர செலவு வேற செய்யணும்?” என லோகு உரைக்க, அதில் பெரியவரின் பொறுமை கரைந்தது.

பதில் பேச முனைந்த தந்தையின் கைப்பற்றித் தடுத்த ஜோதி, “எனக்கு வேணாம்பா. சின்ன அண்ணனுக்கே கொடுத்திடுங்க!” என்று மொழிய, தங்கையை வெறுப்புடன் நோக்கிவிட்டு நகர்ந்தான் கோபாலன்.

மூத்த தமையனின் பார்வையை உணர்ந்தவள் பின்தொடர்ந்து செல்ல, திவ்யா திருதிருவென விழித்தபடி அங்கு நின்றிருந்தாள்.

5 thoughts on “6. தந்தை மண்”

  1. CRVS2797

    அட கூறுகெட்டவளே…! இவ என்ன இப்படி பண்றா..?
    எல்லாத்தையும் கொடுத்துட்டு இவ என்ன பண்ணப் போறாளாம்..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *