Skip to content
Home » 8. சுடரி இருளில் ஏங்காதே!

8. சுடரி இருளில் ஏங்காதே!

அந்த நலங்கு நிகழ்வின் போது, தங்களது மகளைச் சர்வ அலங்காரங்களுடன் மேடையேற்றி விட்டப் பிறகு, ஒரு நாற்காலியில் தூயவனை அமரச் செய்து விட்டு, மண்டபத்திற்கு வரும் விருந்தாளிகளை வரவேற்பதற்காகப் போய் விட்டார் தாட்சாயணி.

சிறிது நேரத்திற்குள்ளாக, புவனாவிற்கு நலங்கு செய்து முடித்து அவளை அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

அந்தச் சமயத்தில் இருந்து, அவளது தங்கை ரேவதியும், பெரியம்மா மகள் அபிராமியும் அவளுடனேயே இருக்க முடிவெடுத்து விட்டார்கள்.

“மாப்பிள்ளை அழைப்பு ஆரம்பிக்கப் போகுது ங்க” என்று தன்னுடைய கணவனிடம் உரைத்தார் தாட்சாயணி.

“ஓஹ் சரிம்மா. இது வரைக்கும் வந்தவங்களைச் சாப்பிடப் பந்திக்கு அனுப்பி வைக்கலாம்ல?” என்று அவரிடம் கேட்டார் தூயவன்.

“இதோ நான் எல்லார்கிட்டயும் சொல்லி அனுப்பி வைக்கிறேன்” என்றார் அவருடைய மனைவி.

அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, உணவு உண்ணச் சென்று விட்டனர்.

அப்போது, மாப்பிள்ளை வந்த வாகனம் அந்த மண்டபத்தின் வாயிலை அடைந்து விட்டிருந்தது.

அதிலிருந்து இறங்கியவர்களை வரவேற்பதற்கு அங்கே சென்றார் தாட்சாயணி.

தன்னுடைய இருக்கையில் அப்படியே அமர்ந்து கொண்டு அனைத்தையும் தூயவனால் பார்த்துக் கொண்டு இருக்க மட்டுமே முடிந்தது. 

தன்னருகே இருந்த அந்தப் பையனிடம்,”நான் என் பொண்ணோட கல்யாணத்தில் ஓடியாடி வேலை செஞ்சு, இப்படி எல்லாத்தையும் பார்த்துக்கனும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் டா! அதுவும் இது என்னோட மூத்த மகளோட கல்யாணம்! சும்மா கையைக் கட்டி உட்கார்ந்து இருக்கேன் பாரு!” என்று கூறி வெகுவாக வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தார் தூயவன்.

“கவலைப்படாதீங்க சித்தப்பா. நீங்க சீக்கிரம் சரி ஆகிடுவீங்க” என அவருக்கு ஆறுதல் அளித்தான் அந்தப் பையன்.

மாப்பிள்ளை அழைப்பு முடிந்து, இவரிடம் வந்து விசாரித்தப் பிறகே மேடையேறினான் தினகரன்.

அவனுடைய பெற்றோரும் கூடத் தூயவனைத் தான் முதலில் பார்த்து விட்டுச் சென்றார்கள். ஏனெனில், தன்னை இப்படி யாரும் கவனிக்காமல் இருந்து விட்டார்களே? என்ற மனச் சுணக்கம் அவருக்கு ஏற்பட்டு விடக் கூடாது அல்லவா! அதனால் தான், அவருக்கு முன்னுரிமை அளித்துப் பேசினர் அனைவரும்.

அதன் பிறகு, சிறிது நேரம் கழித்து, புவனாவை மேடைக்கு அழைத்து, அவளைத் தினகரனுடன் நிற்க வைத்து விட்டு, மணமகனின் பெற்றோர் சேகர் மற்றும் மல்லிகாவும், அவளுக்கு நலங்குப் புடவையைக் கொடுத்து அனுப்பினர்.

இப்படியான ஒரு நிலையில் தங்களது நலங்கும், திருமணமும் நிகழப் போவதை ஏற்றுக் கொள்ள முடியாத தினகரனும், புவனாவும், ஒருவருக்கொருவர் எந்தப் பார்வைப் பரிமாற்றத்தையும் அவர்கள்  இருவரும் மேற்கொள்ளவில்லை.

என்ன நிகழ்கிறதோ! அதன்படியே நடப்போம் என்ற எண்ணத்தில் இருந்தார்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, அனைத்து சடங்குகளையும் நிறைவேற்ற முடிவெடுத்தனர் மணமக்கள்.

அந்தப் பச்சைப் புடவையைப் பெற்றுக் கொண்டு உள்ளே சென்ற புவனாவிற்கு அதை வாகாக உடுத்தி விட்டாள் அபிராமி.

அந்த வைபவத்தில் கலந்து கொண்ட தூயவன் மற்றும்‌ தாட்சாயணியின் சில உறவினர்களோ,”என்ன தான், உடம்பு முடியாமல் இருந்தாலும் கூடப் பொண்ணோட கல்யாணத்தைத் தள்ளிப் போடாமல் எப்படி நடத்துறாங்கன்னுப் பாருங்களேன்!” என்று தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்.

அதையெல்லாம் நின்று தெளிவாக கேட்கும் மனநிலையும், பொறுமையும் தாட்சாயணிக்கு இல்லை.

அவர் பாட்டுக்கு அந்த மண்டபத்தில் பம்பரமாகச் சுழன்று கொண்டு இருந்தார்.

“சேலையைக் கட்டி விட்டாச்சுன்னா, பொண்ணை ஸ்டேஜூக்கு அழைச்சிட்டு வாங்க” என்று யாரோ ஒருவர் கொடுத்தக் குரலில், மீண்டும் மேடை ஏற்றப்பட்டவளைப் பார்த்துப் புன்னகை செய்தான் தினகரன். 

அதே போலவே, அவனைக் கண்டுத், தானும் ஒரு குறுநகையை உதிர்த்தாள் புவனா.

அதற்குப் பின்னர், அவர்களை மேடைக்குச் சென்று, தங்கள்  பாதங்களில் பணிந்து எழுந்த மணமக்களை வாழ்த்தினார்கள் தூயவன் மற்றும்‌ தாட்சாயணி.

அவர்களைப் பின்பற்றி மற்றவர்களும் வாழ்த்தி விட்டுச் செல்லவும், தினகரன், புவனா மற்றும் ரேவதியுடன் சேர்ந்து உணவுண்ணச் செல்லத் தயாராகினர்.

அதனால், தன் கணவனிடம் வந்து,”நாமப் போய்ச் சாப்பிட்டு வந்துடலாம். வாங்க” என்று அவரை அழைத்தார் தாட்சாயணி.

“சரிம்மா” என்று தங்களது சம்பந்தி வீட்டாரையும் கூட்டிச் சென்று சாப்பிட்டு விட்டு வந்தனர்.

தனது இரவு உணவை முடித்தவுடன், தூயவன் தன்னுடைய மாத்திரைகளை விழுங்க வேண்டும். ஆதலால், அதைத் தாட்சாயணிக்கு ஞாபகப்படுத்தவும்,

“அதெல்லாம் என் ஹேண்ட்பேக்கில் தான் இருக்குங்க. எடுத்து தர்றேன். மாத்திரையைப் போட்டுட்டு வீட்டுக்குப் போய்த் தூங்குறீங்களா? நான் காலையில் வந்து உங்களைக் குளிக்க வச்சுத் தயார் செஞ்சு அனுப்பவா?” என்று வினவினார் அவருடைய மனைவி.

“சரி தாட்சா ம்மா” என்று அதற்குத் தானும் ஒப்புக் கொண்டார் தூயவன்.

உடனே மாத்திரைகளையும், தண்ணீரையும் அவருக்குக் கொடுத்து விட்டு, அவருடன் இருந்த அந்தப் பையனிடம்,”உங்கச் சித்தப்பாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வந்துடறியா டா?” என்று அவனிடம் கேட்டார் தாட்சாயணி.

“ஓகே ங்க சித்தி” என அவனும் தூயவனை வண்டியில் ஏற்றிச் சென்று வீட்டில் விட்டு வந்தான்.

ஒவ்வொருவராக மேடைக்கு ஏறிப் போய், மணமக்களைப் பார்த்து முடித்ததும், 

“நாங்க இங்கேயே தங்கிக்கிறோம் சம்பந்தி. நீங்க வீட்டுக்குப் போயிட்டுக் காலையில் வாங்க” என்றனர் சேகர் மற்றும் மல்லிகா.

தாட்சாயணி,“நீங்க மட்டும் எப்படி சமாளிப்பீங்க?” என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டு இருக்கும் போதே,

“நான் இங்கே அக்கா கூடத் தூங்குறேன் ம்மா. நீங்க அப்பாவைப் பார்த்துட்டுக் காலையில் கிளம்பி வந்தால் போதும்” என்று தன் அன்னையிடம் கூறினாள் ரேவதி.

“நீங்க மட்டும் எப்படி தனியாக இருப்பீங்க?” என அவளிடம் வேதனையுடன் கேட்கவும்,

“இனிமேல் எல்லாத்தையும் பழகிக்கனும்ல ம்மா?” என்று அவரிடம் உறுதியாக உரைத்தாள் தாட்சாயணி மற்றும் தூயவனின் இளைய மகள்.

இந்த வார்த்தைகளைக் கேட்டப் பின்னர், தனக்குள் எழுந்த தன்னம்பிக்கையில்,”சரிடா. பத்திரமாக இருங்க” என்கவும்,

“நாங்க அவங்க கூட இருப்போம் சம்பந்தியம்மா” என்று அவரைத் தேற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள் தினகரனின் பெற்றோர்.

கனத்த மனதுடன் தன்னுடைய இல்லத்திற்கு வந்து சேர்ந்திருந்தார் தாட்சாயணி.

_____________________

இவை அனைத்தையும், யோசித்துப் பார்த்துக் கொண்டிருந்த அன்னையும், அவரது இரண்டு மகள்களும், அதற்கு மேல், அவற்றை நினைக்கத் திராணியற்றுப் போய்க் கிடந்தனர்.

மூத்தவளுக்குக் கொஞ்சம், கொஞ்சமாக காய்ச்சல் சரியாகிக் கொண்டே இருக்கவும்,”நீ அங்கே போயிட்டு வேலைக்குக் கிளம்பு புவி” என்று அவளுக்கு அறிவுறுத்தினார் தாட்சாயணி.

“எனக்கு ஃபீவர் சரி ஆகிடுச்சு தான் ம்மா. அதுக்காக இங்கே எல்லாத்தையும் அப்படி அப்படியே போட்டுட்டுப் போக மனசு வரலை. இன்னும் ரெண்டு நாள் தங்கி இருந்து உங்களுக்குச் சமைச்சுக் கொடுத்துட்டுத் தான் போவேன்” என்று அவரிடம் தீர்க்கமாக கூறினாள் புவனா.

“ஹேய் உன் பிள்ளையும் அங்கே இருக்கான் டி. அவனைப் பார்க்க வேணாமா?” என்று மகளிடம் கேட்டார் அவளது அன்னை.

“அதெல்லாம் எங்க அத்தை எப்பவோ எங்கிட்ட கால் செஞ்சு சொல்லிட்டாங்க ம்மா” என்றுரைத்து விட்டாள் அவருடைய மகள்.

“என்னமோ பண்ணு” என்றவருக்கும், அவள் தங்களுடன் மேலும் இரண்டு நாட்கள் தங்கப் போவது தாட்சாயணிக்கு ஆசுவாசமாகத் தான் இருந்தது.

“தாங்க்ஸ் க்கா” எனத் தனது தமக்கைக்கு நன்றி கூறினாள் ரேவதி.

“ஏய்! உன்னைப் பிச்சுப் போடுவேன்” என்று அவளைப் பொய்யாக மிரட்டியவளோ,

அதே மாதிரி, அடுத்து வந்த இரு தினங்களிலும், மூவருக்கும் சேர்த்து சமைப்பது, துணி துவைப்பது மற்றும் இதர வேலைகளைச் செய்து தந்து கொண்டிருந்தாள் புவனா.

அந்த இரண்டு நாட்களும் முடிவடைந்த போது,”எல்லாத்தையும் எடுத்துக்கிட்டியா?” என வினவவும்,

“ம்ம். எடுத்தாச்சு ம்மா. நீங்க ரெண்டு பேரும் ஒழுங்காக நேரா நேரத்துக்குச் சாப்பிடனும். சரியா?” என்று தனது அன்னை மற்றும் தங்கையிடம் வலியுறுத்திக் கூறி விட்டுத் தன்னை அழைத்துச் செல்ல வந்திருந்தக் கணவனுடன் தன் புகுந்த வீட்டிற்குப் போய் விட்டாள் அவரது மூத்த மகள்.

“நீ உன்னோட லைஃப்ல அடுத்து என்னப் பண்ணலாம்னு இருக்கிற?” என இளையவளிடம் வினவினார் தாட்சாயணி.

“அடுத்த வருஷம் அப்பாவுக்குத் திதி கொடுத்து முடிச்சிட்டு சொல்றேன் ம்மா” என்று தாயிடம் உரைத்து விட்டாள் ரேவதி.

இவையெல்லாம் நடந்து முடிந்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு, தூயவனின் இறப்பைப் பற்றி விசாரிக்கவென்று அவர்களது தூரத்து உறவினர் ஒருவர் தனது மனைவியுடன் சொல்லாமல் கொள்ளாமல் வந்தது மட்டுமில்லாமல், வீட்டினுள் நுழைவதற்கு முன்னர் தூயவனுடைய செல்பேசியில் அழைப்பு விடுத்தார்.

  • தொடரும் 

5 thoughts on “8. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. Kalidevi

    Superb story going good. Vera vali illaye vazhkaila mukiyamana oruthara ilanthutu apdiye iruka mudiyathu la pasanga irukurapo avangalukaga nama thethikittu aganum thane

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *