Skip to content
Home » 8. தந்தை மண்

8. தந்தை மண்

ஜோதி, இயல்பிலேயே அமைதியானவள்‌. வெகுவாய் பொறுமையையும் நிதானத்தையும் கொண்டிருந்தாள்.

தன்‌ மீது செலுத்தப்படும் அன்பிற்கும் கரிசனத்திற்கும் ஈடான பிரதிபலிப்பை‍, தன்னைச் சார்ந்தவர்களிடமும் காட்ட வேண்டும் எனக் கொள்கை கொண்டவள். அவள் அறிந்தது எல்லாம், பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களை மட்டுமே.

துவக்கத்தில் இருந்தே கோபால கிருஷ்ணன், மற்றவர்களுடன் இயல்பாய் பழக‌ மாட்டான் என்பதால், ஜோதிக்கு மூத்த தமையனிடம் பெரியதாய் ஒட்டுதல் என்று எதுவும் உண்டாகவில்லை. அண்டை வீட்டுக்காரர்களைப் போல் தான், உரையாடிக் கொள்வர்.

அன்னையும் தந்தையும் தோட்டத்தைக் கவனிக்கச் செல்வதால்,‌ அவளிற்கு இல்லத்தில் இருந்த ஒரே‌ துணை ஆதரவு அனைத்தும், காதம்பரி தான்.‌ அதனால், தமக்கையிடம் அன்பும் மரியாதையும் கொண்டிருந்தாள். அதனை அப்படியே தக்கவைத்துக் கொள்ள, ஜோதிக்குத் தேவையானதைக் கவனித்து நன்றாகவே பார்த்துக் கொண்டாள் மூத்தவளும்.

ரவியும் தன்னால் இயன்ற வரை தங்கையிடம் அன்பு காட்ட தவறியது இல்லை. ஆகையால் இயல்பாகவே இவ்விருவரிடமும் பற்றுதல் உண்டாகி இருந்தது, சிறியவளிற்கு.

காதம்பரி திருமணம் முடிந்து போகும் போது, மற்றவர்களைக் காட்டிலும் ஜோதி தான் தவித்துப் போனாள். அதன்பின்னர் வீட்டைக் கவனிக்கும் முழுப் பொறுப்பும், அவளிடம் வந்து சேர்ந்தது.

சிறிது காலத்தில் ரவியும் தமக்கையுடன் சென்று இணைந்து கொள்ள, தனித்து விடப்பட்டதைப் போல் ஆனாள், சிறியவள்.

அத்தருணங்களில் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டும் வீட்டிற்கு வரும் கோபாலன், பெரியதாய் அவளிடம் எதுவும் பேசிக் கொள்ள மாட்டான். தேவையான தருணங்களில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசும் பொழுது, அவனுள் இருக்கும் சிறிதளவு நல்லவன் வெளிப்படுவான். அதன் பின்னர்த் தான், ஜோதி மூத்த தமையனிடம் பேசவே துவங்கினாள்.

அக்கறையான சில அறிவுரைகளையும், வீட்டு நிகழ்வுகளைப் பகிர்தலையும் தவிர, இருவருக்கும் இடையே வேறு எவ்வித பிணைப்பும் உண்டாகவில்லை.

தாமரை இலை நீராய் உண்டான அந்தப் பிணைப்பிற்காகவே, கோபாலனின் மகள் பூப்பெய்திய பொழுது அத்தையாய் சீர் செய்துவிட்டு வந்தாள் ஜோதி. அவனுமே, தங்கையின் குணத்திற்குக் குறை உண்டாகாதபடி, திவ்யாவின் சடங்கில் சிறுசிறு பொருட்களாய் எதையும் வாங்காது, பித்தளை அண்டாவை வாங்கி வந்திருந்தான்.

ரவி.. புடவையும், இன்னபிற பொருட்களுடன் தட்டு வைக்க, தானும் அதையே செய்ய வேண்டாம் என்று இப்படிச் செய்தான். திவ்யாவின் திருமணத்தில் அதையே சீராய் கொடுப்பதற்காக, பத்திரமாய் வைத்து இருக்கிறாள் ஜோதி.

இயன்ற வரை, உடன்பிறந்த மூவரிடமுமே ஒரு சுமூகமான உறவை கொண்டிருந்தாள். அதில் காதம்பரிக்குத் தான், முதல் இடம். அன்னை தந்தைக்கு அடுத்தபடியாய்‌‌ அவள் அன்பும் மரியாதையும் வைத்திருப்பதும், நம்பிக்கையைக் கொண்டிருப்பதும் தமக்கையிடம் தான்.

இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்த பொழுதுக்கூட, குடும்பத்தை எப்படி வழிநடத்துவது என்று அக்காவிடம் தான் கேட்டறிந்தாள்.

சகோதரிகளிற்கு இடையே மனக்கசப்புகளும், வாக்குவாதங்களும் பலமுறை உண்டாகி இருக்கிறது‌. லோகுவை, ரவிக்கு மணம் முடிக்கும் விசயத்தில் கூட, ஜோதிக்குப் பிடித்தம் இல்லைதான்.

“பத்தாவது முடிச்ச பிள்ளைய மேல படிக்க வைக்காம, எதுக்கு அவசர அவசரமா அண்ணனுக்குக் கல்யாணம் செய்யிற? மெதுவா பார்க்கலாம் அக்கா.” எனத் தமக்கையிடம் சொல்லிப் பார்த்தாள்‌.

“ரவிக்கு வயசு ஆகுதுல? இப்ப‌ என்ன, அவ படிச்சு உத்தியோகத்துக்கா போகப் போறா? எப்படியும் கல்யாணம் செஞ்சுதான அனுப்ப போறோம், அதை எப்ப செஞ்சா என்ன?” என்றாள் காதம்பரி.

“அது சரி! வேற மாப்பிள்ளய கூட, பார்க்க வேண்டியது தான? அண்ணனை விட லோகுக்கு, வயசு ரொம்பக் குறைவா இருக்கு அக்கா.”

“இருந்தா என்ன? மூத்தவன் இருந்தாலும் இல்லாத மாதிரி தான். ரவியும் பொண்டாட்டி வந்ததுக்கு அப்புறம் மாறிட்டானா, என்ன செய்யிறது? கூடப் பிறந்தவன்னு அவன் ஒருத்தனாவது, நமக்கு ஆதரவா இருக்கணும் இல்ல? வெளியே இருந்து பொண்ணு எடுத்தா, வர்றவ நாத்தனார்களை அனுசரிச்சு நடந்தப்பானு சொல்ல முடியாது. அதுவே என்னோட பொண்ணுனா கடைசிக் காலத்துல நம்மள பாத்துக்குவா ஜோதி!‌” என்று உரைத்திட, அதற்கு மேல் எதுவும் பேச இயலாது அமைதியானாள் இளையவள்.

தமக்கை மகளைத் தன்மகளாய் நினைத்து.. திருமணம்‌, கர்ப காலம், வளை பூட்டும் விழா, பேறுகாலம், அதன் பின்னரான நாட்கள் என ஒவ்வொரு சூழலிலும் உடனிருந்து அனைத்து வேலைகளையும் செய்து கவனித்துக் கொண்டாள்.

அத்தருணங்களில் எல்லாம், காதம்பரி வெறும் பார்வையாளினியாய் மட்டுமே இருந்தாள். வாயால், கட்டளை இடுவதை மட்டுமே பணியாய் வைத்திருந்தாள். மூத்தவளின் சொல்லைத் துளியும் தட்டாது, ரவியும் ஜோதியும் முகம் சுருக்காமல் மன மலர்ச்சியுடனே செய்தனர்.

அவர்கள் இருவரும் அவ்வுறவை அன்பால் அணுக, தமக்கையானவளோ தனது தேவைக்காக உதவியாளர்களாய் எண்ணினாள். மகளின் கணவனாய் இருந்தாலும், ரவியும் நிலையும் அதுவாகத்தான் இருந்தது. அதை, தமையனும் தங்கையும் சற்றும் உணரவில்லை என்பது தான், கண்ணை மறைத்த பாசத்தின் உச்சம்.

உறவு வண்டி தொய்வின்றிச் சரியான லயத்தில் தான் இயங்கிக் கொண்டிருந்தது, ஜோதியின் கணவன் வெங்கடேஷனின் இறப்பு வரை‌. அதன்பின்னர் தான், லோகுவின் குணம் மெல்ல மெல்ல வெளிப்பட, காதம்பரி தனது போலி முகத்தை இயன்ற அளவு தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அன்னையின் இறப்பில், அந்தப் பொய் முகத்தைப் பல கோணங்களில் தங்கையிடம் கிழித்துக் காட்டி இருந்தான் கோபாலன். ஆனால் அவளின் மனம்தான், அதை ஏற்க மறுத்தது.

தமையன் உரைத்ததைச் சிந்தித்தபடியே, இல்லம் வந்து சேர்ந்தாள். வாயிலில் அமர்ந்து இருந்தாள், மகள் திவ்யா.

“என்னமா, இங்க உட்கார்ந்து இருக்க.?” என வினவ, “பெரியம்மாக்கும் தாத்தாக்கும் பெரிய சண்டை ஆகிடுச்சு அம்மா.”

ஜோதி திகைத்து, “என்ன திவி சொல்லுற.?”

“ஆமா அம்மா. பெரியம்மா, தாத்தாவைத் திட்டிட்டாங்க. தாத்தா, பதிலுக்குக் கை ஓங்கிட்டாரு!”

“ஐயோ! அப்பா..” என்றபடி ஜோதி உள்ளே செல்ல, கட்டிலில் படுத்திருந்தார் சுந்தரம்.

“என்னப்பா ஆச்சு.?” என வினவியவள் உட்புறம் பார்வையால் தேடினாள், தமக்கை தமையன் இருவரையும்.

மகளின் மனதை உணர்ந்த பெரியவர், “இங்க இல்லம்மா அவங்க. லோகுவோட அப்பா வீட்டுக்குப் போயிருக்காங்க.”

“ஏன் ப்பா‍? என்ன பிரச்சனை? அக்காவைக் கை ஓங்குனீங்களாம்? இந்த வயசுல, இதெல்லாம் தேவையா.?”

“நாளப்பின்ன உறவு தேவைப்படும்னு தான் இவ்வளவு காலமும் அமைதியா இருந்தேன். ஆனா, எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு இல்ல? ‌அந்த எல்லையைத் தாண்டி போறப்ப, எப்படிச் சும்மா இருக்குறது.?”

“இருக்கட்டுமே அப்பா! அதுக்காக அவ்வளவு தூரம் போகணுமா? மகளைக் கட்டிக் கொடுத்து பேரப் பிள்ளைகள‌ எடுத்துட்டா. வெளிய தெரிஞ்சா, அசிங்கம் இல்லையா? அக்கா அப்படி‌ என்ன செஞ்சிடுச்சுனு, கை ஓங்குனீங்க?”

அவர் மறுமொழி உரைக்காமல் இருக்க, தந்தையே பார்த்திருந்தவள், “அக்கா எதுவும் சொல்லுச்சா அப்பா?”

மறுத்துத் தலை அசைத்தவர், “காரியம் முடிச்சிடுச்சு. இனி, வேலை இல்ல. ஊருக்குக் கிளம்புவோமா ஜோதி ம்மா?”

அதிர்ச்சியுடன் நோக்கியவள், “இன்னும் முப்பது நாள் கழியலயே அப்பா?‌ அதுக்குள்ள எப்படி.?”

“கடைசிக் காலத்துல, அவக்கூட இருக்க முடியாம போச்சு.‌ உங்கம்மா நினைப்பாவே இருக்கும்மா. இங்கேயே இருந்தா, அதை நினைச்சு நினைச்சே எனக்கும் ஏதாவது ஆகிடும். உனக்கும், உன்னோட மகளுக்கும், கொஞ்ச நாளைக்குத் துணையா இருக்கணும்னு நினைக்கிறேன். போகலாம். எல்லாம் போன பின்னாடி, என்ன பெரிய சம்பிரதாயம்.?” என்றவரின் குரலில் வெறுமை எட்டிப் பார்க்க, அதை உணர்ந்த ஜோதி, “சரிப்பா, போகலாம்!” என உரைத்தாள்.

அன்று மாலையே மூவரும் கிளம்பினர். மதுரையை அடையும் பயணத்தின் பொழுது, நடந்த நிகழ்வுகளை மகள் திவ்யாவின் மூலம் அறிந்து கொண்டாள்.

ஜோதி கோபாலனின் இல்லத்திற்குச் சென்ற‌ பின்னர், “வீடு கட்ட இடத்தை எழுதிக் கொடுனு அதிகாரமா கேட்கிறீங்க, அம்மாவும் மகளும்? அவ்வளவு தைரியம் வந்துடுச்சா? ஏண்டா,‌ அப்பன் நான் உசுரோட இருக்கும் போதே கூறுபோட நினைக்கிற? நீ, எல்லாம் மகனாடா.?” என்று காதம்பரி, லோகு, ரவி மூவரிடமும் சுந்தரம் வினா தொடுக்க, பிரச்சனை வலுத்தது.

“தர வேண்டிய காசைத் தராம, குத்தகை அது இதுனு ஒண்ணுத்துக்கும் உதவாத ஒரு பத்திரத்தை எழுதிக் கொடுத்து என்னோட மகளோட எதிர்காலத்தையே கெடுக்கப் பார்க்கிறீங்க அப்பா. சரி, இந்த நிலத்தையாவது வாங்கி, அவளுக்குப் பாதுகாப்பு செய்யலாம்னு நினைச்சா, அதுக்கும் ஒத்துக்க மாட்டிறீங்க?

பெரிய மகனும், இளைய மகளும் நல்லா இருந்தா போதும்‌. நானும், என்னோட பொண்ணைக் கட்டுனவனும் நடுத்தெருவுல நிக்கணும். அதுதான, உங்க எண்ணம்? ஆனாலும்‌ உங்களை மாதிரி கேடுகெட்ட ஒரு அப்பனை, எங்கேயும் பார்க்க முடியாது!

இந்தக் குத்தகை, மண்ணு, மண்ணாங்கட்டி எதுவும் எங்களுக்கு வேண்டாம். கொடுத்த பணத்தை, ஒழுங்கு மரியாதையா ஒரு வருசத்துக்கான வட்டியோட உங்க மகக்கிட்ட இருந்து வாங்கிக் கொடுங்க. இல்லேனா, அப்பானு கூடப் பார்க்க மாட்டேன்!”‌ என விரல் நீட்டிப் பேசிய மகளின் மரியாதையற்ற செயலைக் கண்டு, நிதானத்தைத் தொலைத்தார் சுந்தரம்.

‘தான் பெற்று வளர்த்தவள் தனக்கு எதிராய் நிற்கிறாள், அதுவும் அநியாயமாய். அதைக் கண்டும் அமைதியாய் இருந்தால், அதைவிடப் பெரும் அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது!’ என்ற எண்ணம் தோன்றிட,‌ சட்டென்று கையை ஓங்கி விட்டார் சுந்தரம்‌.

அது அடியாய் மாறும் முன்னர் இடைநுழைந்த லோகு, “எங்க அம்மாவை அடிக்க, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு‌? ஏமாத்து புத்தியோட எல்லா‌த்தையும் செஞ்சுட்டு, என்னமோ நல்லவரு மாதிரி பேசுறதைப் பாரு!” என்றிட, அவள் உரைத்த சொற்களைக் கேட்டு வெகுவாய் மனம் நொந்து போனார் மூத்தவர்.

மகனைப் பார்த்திட, தனக்கும் அங்கே நடப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல், வேறுபுறம் பார்த்தபடி சிலையென நின்று கொண்டிருந்தான் ரவி.

“வாம்மா.. காசையும் கொடுத்துட்டு. இவர்கிட்ட அடியையும் வாங்கணுமா நாம?” என லோகு அன்னையை அழைத்துச் செல்ல, மனைவியை வால் பிடித்துக் கொண்டு அவளின் கணவனும் வெளியேறினான்.

விபரங்களை அறிந்ததும், ‘தந்தையின் மனநிலை எப்படி இருக்கும்?’ என உணர்ந்து கொண்டாள் ஜோதி.

நான்கு மக்களைப் பெற்று, ஊரார் மெச்ச‌ வாழ்ந்த மனிதர்.‌ வசதி இல்லை என்றாலும், மதிப்பிற்கும் மரியாதைக்கும் குறைவு இருந்தது இல்லை. அறிந்தவர் தெரிந்தவர் எவரும், “ஐயா!” என்ற‌‌ அழைப்பிற்குக் குறைவாய் பேசியது இல்லை.‌

அப்படியானவரை சொந்த மகளும் மகனுமே சொற்களால் தாக்கி, உறவின் ஆழத்தைச் சோதனை செய்து பார்த்திருக்கின்றனர்.

‘எனில், மூத்த தமையன் கோபாலன் உரைத்தது அனைத்தும் உண்மையா? நான்தான், இவர்களை இத்தனை காலமும் புரிந்து கொள்ளாமல் போய் விட்டேனா? சிறிய‌ அண்ணனும், எடுப்பார் கைப்பிள்ளையாய் இப்படி மாறிப் போனானே?’ என யோசித்து யோசித்தே மன‌ அமைதியை இழந்தாள் ஜோதி.

நாள்கள் மெல்ல நகர்ந்தது. லோகுவும் ரவியும் ஊரிற்கு வந்தபின், “ஏன்,‌ அப்பாக்கிட்ட அப்படிப் பேசுனீங்க? ஏற்கனவே அம்மா இறந்த துக்கத்துல இருக்கறவரை, நீங்களும் இப்படிக் காயப்படுத்துறது சரியா‌?” எனத் தமையனிடம் வினவ,‌

“நாங்க அப்படிப் பேசுணும்னு நினைக்கல சித்தி.‌ தாத்தா, எங்களைப் பேச வச்சிட்டாரு. உன்னோட நிலத்துக்குத் தோட்டத்தையும் குழியையும் சேர்த்தே, வருசத்துக்கு அம்பதாயிரம் தான் குத்தகையா வருது‌. மொத்தம் ஒன்றரை இலட்சம்.‌ மீதி பணம்.? மூன்றரை இலட்சம்கிறது சும்மாவா இருக்கு?

உன்னால வேற எதுவும் செய்ய முடியாதுனு தெரியும். அதுனால தான், உன் இடத்துலயும் சேர்த்து வீடு கட்டிக்கிறோம்னு நானும் அம்மாவும் கேட்டோம். இதுல என்ன தப்பிருக்கு? அதுக்கு அம்மாவை அடிக்க வர்றாரு.‌ நீயே யார் பக்கம் நியாயம் இருக்குனு சொல்லு!‌” என மறுவினா தொடுத்தாள் லோகு.

அவளுக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. நியாயம் இல்லை என்பதாகவே தோன்றியது.

ஒரு தந்தையாய் இதுவரை நடந்த நிகழ்வுகளைக் கொண்டு, சுந்தரம் ஒரு கணக்குப் போட்டார்.‌ ஆனால் மற்றவர்களால், அதை ஏற்க இயலவில்லை.‌

‘தனது அவசர தேவைக்கு உதவியவர்கள்!’ என்ற நன்றியுணர்வு, தமையன் மற்றும் லோகுவிடம் இருந்தது ஜோதிக்கு‌. அதனால், அவர்களை மறுத்துச் பேச கூட வாய் எழவில்லை. அதேநேரம், தந்தையை இதுபோலான சூழலில் நிறுத்தவும் அவள் விரும்பவில்லை.

எதிர்பாராத விதத்தில் நிகழ்ந்த கணவனின் இழப்பு. அதில் இருந்து மீளும் முன்னரே, அன்னையான ருக்கம்மாவும் இறைவனடி சேர்ந்துவிட்டார். தற்போது இருக்கும் ஒரே துணை, ஆதரவு, பலம் அனைத்தும் தந்தை தான். அவர் அமைதியின்றித் தவிப்பதைக் காண சகியாமல், ஒவ்வொரு நாளையும் பெரும் மன வலியுடனே கடத்திக் கொண்டிருந்தாள்.

இறுதி காலத்தில் அவரும் நிம்மதியுடன் இருக்க வேண்டும். பிள்ளைகளும் நன்முறையில் நடந்து கொள்ள வேண்டும். பெற்றவர்களுக்கு, அவர்தம் மக்கள் தரும் மரியாதையும் ஆகச் சிறந்த பரிசும் அதுவாகத்தான் இருக்க முடியும். அதைத் தனது தந்தைக்குத் தர முடிவெடுத்தாள் ஜோதி.

“காசுதான லோகு பிரச்சனை‌? அப்பா, செஞ்சு வச்சிருக்க ஏற்பாடு படியே எல்லாம், அப்படியே இருக்கட்டும். குத்ககையில கழிச்சது போக மீதிப் பணத்தை நான் தர்றேன். அப்பாக்குத் தெரிய வேணாம். இனிமேல், அவருக்கிட்ட இந்த மாதிரி பேசாதீங்க!” என உரைக்க, “என்னமா, நீ?” என்றான் ரவி.

“சித்தியே ஒரு வழி சொல்லுது,‌ சும்மா இரு மாமா!” எனக் கணவனை அடக்கிய லோகு, “இதை எப்படி நம்புறது? தாயா பிள்ளையா பழகினாலும் வாயும் வயிறும் வேற வேற தான? காசு உறவுகள பகையாக்கி விட்டுடும் சித்தி. சொல்லு மாறுனா, நாளை பின்ன ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க முடியாது. உனக்குத் தெரியாதா?” என்றாள்.

தமக்கை மகளின் என்ன ஓட்டத்தை உணர்ந்து கொண்ட ஜோதி, “அடமானமா, நிலத்தோட பத்திரத்தைக் கொண்டு வந்து தர்றேன். காசை முழுசா கொடுத்துட்டு அதை வாங்கிக்கிறேன்!” என்று சொல்லிச் சென்றாள். சொன்னது போலவே, அடுத்த இரண்டு நாட்களில் செய்தாள்.

நேர்மை மற்றும் நியாயத்துடன், உறவுகள் மீது பற்றோடும் நடந்து கொண்டவளிற்கு, காலம் தகுதியான எந்த மறுஉபகாரம் எதையும் செய்யாமல் விட்டுவிட்டது. அதனை விதி என்பதா? இல்லை உறவுகள் இழைத்த சதி என்பதா.?

5 thoughts on “8. தந்தை மண்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *