Skip to content
Home » 9. சுடரி இருளில் ஏங்காதே!

9. சுடரி இருளில் ஏங்காதே!

இறந்த மனிதரின் செல்பேசி எண்ணுக்கு அழைப்பு வருமா அப்படி யாராவது செய்வார்களா? ஆமாம்! கண்டிப்பாக செய்வார்கள் தான்!

ஏனெனில், இறந்தவருடைய பெரும்பான்மையான பொருட்களின் மீது ஒரு கண் வைத்திருப்பவர்கள் இதைச் செய்வதில் ஆச்சரியம் இல்லையே?

இந்த மாதிரியான செயல்களை இந்தச் சமயத்தில் தான் செய்யத் தோன்றுமா?

திடீரென்று தனது கணவனின் செல்பேசிக்கு அழைப்பு வரவும் திடுக்கிட்ட தாட்சாயணியோ, அவர் இறந்ததைப் பற்றித் தெரியாத யாரோ அவருக்குக் கால் செய்கிறார் என்று நினைத்துக் கொண்டு அதை எடுத்துப் பார்த்தார்.

ஆனால், அந்த எண்ணிற்குச் சொந்தக்காரரான நபருக்குத் தூயவன் இறந்த செய்தியும் தெரியும், அவர் இறந்த நாளின் போது, வீட்டிற்கு அருகில் தான் இருந்தார் என்பது தாட்சாயணியும் அறிவார். அப்படியிருக்கும் போது, இந்தச் செயலிற்கான காரணம் என்ன? என்று யோசித்துக் கொண்டே, அந்த அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தார்.

“ஹலோ” என்றவுடன்,

“ஹலோ தங்கச்சி! வீட்டில் இருக்கீங்களா?” என்று மறுமுனையில் இருந்தவர் கேட்டதும்,

“ஆமாம் ண்ணா” எனப் பதிலளித்தார் தாட்சாயணி.

“வீட்டுக்கு விசாரிக்க வரனும்னு நினைச்சோம். அதான் கேட்டேன் ம்மா. இதோ வர்றோம்” என்று அழைப்பை வைத்து விட்டார் அந்த நபர்.

“யாரும்மா கால் பண்ணது?” என்று அவரிடம் வினவினாள் ரேவதி.

“உங்க மாமா சண்முகம் தான் பேசினார்” என்று கூறவும்,

“சரி. அவர் எதுக்கு அப்பா நம்பருக்குக் கால் செய்யனும்? அப்பா விஷயம் தான் அவருக்குத் தெரியுமே?” என்றாள்.

“அது தான் எனக்கும் புரியலை. இங்கே வரட்டும் கேட்போம்” என்று சொல்லி விட்டு அமைதியாக இருந்தார் தாட்சாயணி.

சிறிது நேரத்திற்குள்ளாகவே, அவர்களது வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.

“அவங்களாகத் தான் இருப்பாங்க. நான் போய்க் கேட்டுக் கதவைத் திறக்கிறேன். நீ உள்ளே இரு” என்று மகளை அறைக்கு அனுப்பி வைத்து விட்டுக் கதவின் தாழை நீக்கினார் தாட்சாயணி.

அங்கே, அந்த சண்முகம் மற்றும் அவரது மனைவியும் நின்றிருந்தார்கள்.

“வாங்க ண்ணா” என்று அவர்களை நிர்மலமான முகத்துடன் வரவேற்று அவர்கள் இருவருக்கும் காஃபி போட்டுக் கொடுத்தார் தாட்சாயணி.

தூயவனின் உடல்நிலை மற்றும் அவரது மறைவிற்கான காரணத்தைக் கேட்டு அதற்கேற்ப வார்த்தைகளைச் சொல்லி அவருக்குத் தைரியம் கொடுத்தனர் இருவரும்.

அப்போது,”அவரோட வண்டி என்னாச்சு? எங்கே போச்சு?” என்று விசாரித்தார் சண்முகம்.

“எந்த வண்டி?” என்கவும்,“ராயல் என்ஃபீல்டு” என்றார்.

“அவர் உயிரோட இருக்கும் போதே அந்த வண்டியை எப்பவோ வித்தாச்சே!” என்று இவர் சொல்லவும், அந்த மனிதருக்கு முகம் சுருங்கிப் போயிற்று.

அப்படியும் விடாமல்,” உனக்கு நான் புது மொபைல் வாங்கித் தர்றேன்னு, அவர் எப்பவும் என் பையன் கிட்டே சொல்லிட்டே இருப்பாரு” என்று அடுத்ததுக்கு அடி போட்டார் சண்முகம்.

அவரது மனைவியும் அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க,

“ஓஹ்!” என்ற ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டார் தாட்சாயணி.

அதைக் கேட்டதும் அந்த நபருக்கு இங்கே எதுவும் தேறாது என்பது தெரிந்து விட்டது போலும்!

எனவே,”சரிம்மா. பிள்ளைங்களைப் பாத்துக்கோ” என்று கூறி விட்டுத் தன் மனைவியுடன் அவ்வீட்டில் இருந்து வெளியேறினார் சண்முகம்.

“என்னம்மா இவங்க இப்படி பேசிட்டுப் போறாங்க? உண்மையிலேயே விசாரிக்கத் தான் வந்தாங்களா?” என்று அவர்கள் சென்றதும், தன் அன்னையிடம் வந்து கேட்டாள் ரேவதி.

“ம்ஹூம்! இல்லைடி. உங்க அப்பாவோட திங்க்ஸ்ஸைப் பத்தி விசாரிச்சுட்டுப் போயிருக்காங்க!” என்று கூறி மகளை வெறுமையாய்ப் பார்த்தார் தாட்சாயணி.

“ஏன் ம்மா இப்படி இருக்காங்க? இங்கே வந்து விசாரிக்கலைன்னாலும் பரவாயில்லை. அதுக்குன்னு இப்படியா பண்ணுவாங்க? கொஞ்சம் கூட நம்மளோட மனநிலையைப் பத்தி யோசிக்கவே மாட்டாங்களா?” என்று எரிச்சலுடன் வினவினாள் அவரது இளைய மகள்.

“அதெல்லாம் யோசிக்க மாட்டாங்க. இப்போ தான், எல்லாரைப் பத்தியும் நமக்குத் தெரியப் போகுது” என்று அவளிடம் சொன்னார் அவளது தாய்.

“ச்சே!” என்று நொந்து போய்க் கத்தியவளோ,

இதை அப்படியே, தன்னுடைய தமக்கையிடம் பகிர்ந்து கொண்டாள் ரேவதி.

“அவங்களுக்குக் கொஞ்சம் கூட இங்கிதமே இல்லை! நீங்க அதையெல்லாம் நினைக்காமல் வேற வேலையைப் பாருங்க. அப்பாவுக்கு முப்பது கும்பிடும் போது நானும், அவரும், அஜ்ஜூவைத் தூக்கிட்டு வீட்டுக்கு வர்றேன்” என்று அவளுக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறினாள் புவனா.

“சரிக்கா. காலேஜில் இருக்கியா என்ன?” என்றாள் அவளது தங்கை.

“ஆமாம். பிரேக் டைமில் பேசிட்டு இருக்கேன்” என்றதும்,

“ஓகே. நீ போய் வேலையைப் பாரு” எனக் கூறி அழைப்பை வைத்து விட்டவளோ,

அன்றைய தினம் நிகழ்ந்ததை மீண்டுமொரு நினைத்துப் பார்த்து வருத்தம் அடைந்தாள் ரேவதி.

அதிலிருந்து அப்படியே பின்னோக்கிப் போனது அவளுடைய நினைவுகள்!

தனது சகோதரியின் நலங்கு நிகழ்வு முடிந்த பிறகு, அன்றிரவு தூயவனைப் பார்த்துக் கொள்ளத் தாட்சாயணியும் வீட்டிலேயே தங்கிக் கொண்டு அதிகாலையிலேயே எழுந்து தன் கணவரைக் குளிப்பாட்டி, உடையுடுத்தி விட்டுத் தானும் கிளம்பி மண்டபத்திற்குப் போனார்கள் இருவரும்.

அங்கே, மணப்பெண் அறையில், வேலைப்பாடுகள் கொண்ட புடவை அணிந்து, முக அலங்காரத்தையும் முடித்துக் கொண்டு காற்றாடிக்குக் கீழே நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் புவனா.

அவளுக்கு அருகிலேயே பக்காவாக தயாராகி நின்றிருந்தாள் ரேவதி.தங்களது இரண்டு மகள்களும் தேவதையாக ஜொலிப்பதைப் பார்த்து முகம் மலர்ந்தது தாட்சாயணிக்கு.

“அழகாக இருக்கீங்க டா” என்று அவர்களிடம் கூறவும் செய்தார்.“தாங்க்ஸ் ம்மா. அப்பாவையும் கூட்டிட்டு வந்துட்டீங்களா?” என அவரிடம் வினவினாள் புவனா.

“அவர் வெளியே ஹாலில் தான் உட்கார்ந்து இருக்கார். உனக்குக் கன்னியாதானம் செய்யும் போது என் கூட சேர்ந்து வருவார்” என்று அவளிடம் தெரிவித்தார்.

“சரிம்மா” என்றவள், இன்னும் சாப்பிடாமல் இருப்பதை அறிந்து கொண்டவரோ, அவளுக்கான உணவை எடுத்து ரேவதியிடம் கொடுத்து அனுப்பி விட்டார் தாட்சாயணி.

தன்னுடைய அலங்காரத்தைப் பொருட்படுத்தாமல் அதை வாங்கி உண்டுத் தன் பசியைப் போக்கிக் கொண்டாள் புவனா.

இதே போல, மணமகனுக்கும் உணவு அனுப்பி வைக்கப்பட்டது.அவனும் உண்டு முடித்ததும், ஐயர் மந்திர உச்சாடனம் செய்வதை ஆரம்பித்தார்.

அங்கே வந்த நெருங்கிய உறவினர்கள் யாவரும் தூயவன் மற்றும் தாட்சாயணியின் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலையை நன்றாக அறிந்து கொண்டவர்கள். ஆதலால்,”இவங்களுக்கு இருக்கிற கஷ்டம் எல்லாம் சீக்கிரம் விலகிடனும்” என்று மனதாரப் பிரார்த்தித்துக் கொள்ள,

ஒரு சிலரோ,”எப்படித் தான், யாரோட உதவியும் இல்லாமல் இந்தளவுக்கு வந்தாங்களோ!” என்றும் பேசிக் கொண்டனர்.

ஏனெனில், தூயவன் மற்றும் தாட்சாயணியோ தங்களது மகளின் திருமணத்திற்கு உதவி செய்ய சொந்தங்கள் சிலரை எதிர்பார்த்து தான் இருந்தார்கள்.

ஆனால், அவர்களோ அதில் எந்த ஆர்வமும் காட்டாமல் இருக்கவே தாங்களே பார்த்துக் கொள்வதாக முடிவெடுத்து அனைத்தையும் செய்து விட்டதைக் கண்டு அனைவருக்கும் உள்ளூர சிறிது பொறாமை தான்!

அனைத்தும் தயாராகி இருக்க, மணமகன் மற்றும் மணப்பெண்ணிற்கான சடங்குகள் யாவும் நிறைவடைந்து விட்டதும், புவனாவைக் கன்னியாதானம் செய்து கொடுக்கும் நேரம் வந்து விட்டிருந்தது.

“ஏங்க!” என்று தன்னருகே வந்த மனைவியைப் பார்த்துப் புன்சிரிப்புடன்,”நான் ஸ்டேஜூக்கு வரனுமா ம்மா?” என்றார் தூயவன்.

“ஆமாம் ங்க” எனப் பதில் சொன்னார் தாட்சாயணி.

“இதோ வர்றேன் ம்மா” என மெல்ல எழுந்து அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு மேடைக்குப் போனார் அவரது கணவர்.

தங்களுடைய மகளைக் கன்னியாதானம் செய்து வைத்தார்கள் தூயவன் மற்றும்‌ தாட்சாயணி.

அதன் பிற்பாடு, தினகரன் மற்றும் புவனாவின் திருமணம் கோலாகலமாக நடந்தேறியது.

புவனாவின் கழுத்தில் தாலி ஏறுவதைக் கண்டு இங்கே அவளது பெற்றோரின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் அளவில்லாமல் வந்தது.

பந்தியில் மதிய உணவு பரிமாறிக் கொண்டிருக்கத் தனது கணவர் மற்றும் சின்ன மகளுடன் சேர்ந்து உணவை உண்டு விட்டு அடுத்த ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார் தாட்சாயணி.

எப்படியோ முட்டி, மோதி தங்களது மூத்த மகளின் திருமணத்தை நல்லபடியாக நடத்தி முடித்த திருப்தியில் இருந்தவர்களோ,”இதை இப்படி சுபமாகச் செஞ்சு முடிப்போம்ன்னு உங்களுக்கு நம்பிக்கை இருந்துச்சா ங்க?” என்ற மனைவியிடம்,

“சத்தியமாக இல்லை ம்மா. நான் இப்படி கொஞ்சம் தெம்பாக இருந்து நம்மப் பொண்ணோட கல்யாணத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு இருக்கேன்னா, அதுக்கு நீ மட்டும் தான் காரணம் மா” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் தூயவன்.

“நாம நாலு பேரும் தான் அதுக்குக் காரணம் ங்க. நம்ம ரேவதி எவ்ளோ பொறுப்பான புள்ளையா நடந்துக்கிட்டா தெரியுமா ங்க?” என்று சின்ன மகளைப் பற்றிப் பெருமையாகப் பேசினார் தாட்சாயணி.

“ம்ம். காலையில் சொன்னியே ம்மா. நம்ம ரெண்டு பொண்ணுங்களும் சமர்த்து தான் ம்மா” என்று அவரிடம் சொன்னார் அவரது கணவர்.

திருமணம் முடிந்து மறுவீட்டு விருந்து மற்றும் மற்ற சம்பிரதாயங்களையும் ஒரு குறையும் இன்றி நன்றாகவே செய்து முடித்திருந்தார்கள் புவனா மற்றும் தினகரனின் பெற்றோர்கள்.

அப்படியே தனது பேரனையும் பார்த்து விட வேண்டுமென்று ஆசை கொண்டார் தூயவன்.

தொடரும்

5 thoughts on “9. சுடரி இருளில் ஏங்காதே!”

  1. Kalidevi

    Yarka irunthalum aasai iruka thane seium mrg panita aduthu pera pasanga la pakanumnu athuvum udambu mudiyama irukapo kandipa thonum santhosama nalla padiya thatchayani panitanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *