Skip to content
Home » காற்றோடு காற்றாக-12

காற்றோடு காற்றாக-12

12

அறையின் உள்ளே சங்கர் நுழைந்த போது திருமண உடையைக் கூட மாற்றாமல் கட்டிலில்

முழங்காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள் பிரியா. பின்னோடு பட்டு வேட்டி பட்டு

சட்டையில் ஆணின் வாசத்துடன் நுழைந்தான் சங்கர். அருகில் நெருங்கி நின்றவனிடம்

வெறுப்பை உமிழ்ந்த கண்களும் அந்த கண்களில் கசிந்திருந்த கண்ணீரும் சங்கருக்கு புதிராக

இருந்ததென்றால் அதை விட புரியாமல் இருந்தது எதுவென்றால், திருமண நாள் முதல்

இரவில், அன்று காலை தான் ஊர் அறிய உலகறிய தன் உறவாகிப் போன கணவனை

தனியாக சந்திக்கும் எந்த பெண்ணும் அழுவாளா என்ன! அந்த நினைப்பு தான் தான் அவனை

கலக்கியது நிஜம்.

சங்கரும் எதிர்பார்க்கவில்லை பிரியாவின் பிடிக்கவில்லை எனும் பதிலை. ஒரு நிமிடம் தயங்கி

நின்றான். பின் சுதாரித்துக் கொண்டவனாக நிதானமாக அவளருகில் வந்து குனிந்திருந்த

அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தி, ஒரு நீண்ட பெருமூச்சுடன் தீர்க்கமாக கேட்டான்.

“உனக்கு என்னைப் பிடிக்கவில்லை?” பதிலை கேள்வியாக கேட்டான்.

“ம்” என்று தலையசைத்து மறுப்பை பதிலாகத் தந்தாள் அவள்.

“ஓகே. குட்” என்றவன் முன்பை விட இன்னும் அதி நிதானமாக “ஒன்று மட்டும் சொல்”

என்றான்.

என்ன என்பதைப் போல நிமிர்ந்து நன்றாகவே அவன் முகத்தைப் பார்த்தாள்.

“எப்போது என்னை விவாகரத்து செய்யப் போகிறாய்?”

“என்ன……?”

“என்னோடு வாழப் பிடிக்கவில்லை. ஏனெனில் என்னையே உனக்குப் பிடிக்கவில்லை. சரி

ஓப்புக் கொள்கிறேன். அதனால் தான் கேட்கிறேன். என்னை எப்போது விவாகரத்து செய்யப்

போகிறாய்?”

“எது?”ஒரு சின்ன அதிர்ச்சியுடன் என்ன இப்படி கேட்கிறாய் என்பதைப் போல பார்த்தாள்.

“என்ன புரியவில்லையா?” என்று அவளை நேருக்கு நேர் பார்த்துக் கேட்டவன் மீண்டும்

“உனக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால் எப்படி நாம் சேர்ந்து வாழ முடியும்?” என்று

கேட்டான்.

அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் தெய்வமே என்று அவனைப் பார்த்துக்

கொண்டிருந்தாள் அவள்.”சேர்ந்து வாழ முடியாது என்றானால் பிரிந்து தானே ஆக வேண்டும்.

தான் கேட்கிறேன். நீ என்னை எப்போது விவாகரத்து செய்யப் போகிறாய்?”

அவன் தெள்ளத் தெளிவாக கேட்டதால் ஓ இப்படி ஒன்று இருக்கிறதா? மனதில் தோன்றிய

அசூசையினால் பேச முடியவில்லை. ஒன்றும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

கொஞ்ச நேரம் அவனிடமிருந்து ஒரு சத்தமும் வரவில்லை. என்னடா ஒன்னும் பேசாமல்

இருக்கிறானே என்று நிமிர்ந்து பார்த்தாள். அவன் முதுகு தான் தெரிந்தது. என்ன செய்து

கொண்டிருக்கிறான்? ரொம்ப நேரம் யோசிப்பதற்கு இடம் கொடாமல் அவனே அவள் முன்

வந்து நின்றான். அவனை நிமிர்ந்து பார்த்தாள். கையில் பெட்டி இருந்தது. அப்போது கழட்டிப்

போட்டிருந்த கல்யாண பட்டு வேட்டி சட்டையைக் காணவில்லை. எங்கோ கிளம்புகிறான்

எங்கே?

“சரி பிரியா. நான் போய் வருகிறேன்”

அவளுடைய திகைத்த பார்வையைக் கண்டவன் “ஆங். உன் பெற்றோரிடம் சொல்லி விட்டே

செல்கிறேன்” என்றான். பெட்டியை எடுத்துக் கொண்டு மாடிப்படிக்கட்டில் இறங்கிக்

கொண்டிருந்தான்.

சட்டென்று யதார்த்தம் புரிபட எழுந்து விரைந்து ஓடி மாடிப்படிக்கட்டில் அவனுக்கு முன்னே

போய் நின்றாள்.”இல்லை…போக வேண்டாம். தயவு செய்து உள்ளே வாருங்கள்”

“இப்போ என்ன பண்ண சொல்றே?”

அது அவளுக்கும் புரிந்தால் தானே. மௌனமாக இருந்தாள். மீண்டும் படி இறங்கத்

தொடங்கியவனை மறித்தாள்.”ப்ளீஸ். உள்ளே வாருங்கள்”

அவனும் மேற்கொண்டு கீழே இறங்க முயற்சிக்காமல் அவள் வார்த்தைக்கு கட்டுப்பட்டு

மீண்டும் அறையின் உள்ளே வந்தான். “என்ன பிரியா?”

“போக வேண்டாம்”

“சேர்ந்து வாழ்வோமா?” நேரிடையான கேள்விக்கு பதில் இல்லை.

“என்னைப் பிடிக்கவும் இல்லை. சேர்ந்து வாழவும் முடியாது. ஆனால் உன்னை விட்டு நான்

போகவும் கூடாது. ஏனெனில் உன் பெற்றோருக்கு தெரியக் கூடாது. அப்படித் தானே”

கொஞ்சம் கிட்டத்தட்ட அப்படித் தான் என்பது போல பார்த்தாள்.

அவனுக்கும் சிரிப்பு வந்தது. அதே சிரிப்புடன் “எப்படி பிரியா! இந்த சூழ்நிலைக்கு நான்

பால்கனியில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டு வலது தோளில் சிவப்பு சால்வைப் போட்டுக்

கொண்டு “நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே. நிழலைப் பார்த்து பூமி

சொன்னது என்னைத் தொடாதே என்று சிவாஜி கணேசன் ஸ்டைலில் பாட்டுப் பாடணுமா”

அந்த கற்பனைக்கு சிறு முறுவல் பூத்தாலும் அமைதியாகவே இருந்தாள்.

“சரி சரி. போய் உடலைக் கழுவி உடை மாற்றிப் படு. களைப்பாயிருப்பாய்”

“இல்லே. விவாகரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை”

“நாளை பேசிக் கொள்ளலாம்”

“இனி அதைப் போல பேசாதீர்கள்”

“சரி. அதைப் பற்றிப் பிறகு பேசலாம்”

அவள் உடை மாற்ற குளியலறைக்குள் சென்றதும் அவன் படுக்கையில் படுத்தான். குளித்து

உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்தவள் அவன் படுக்கையில் படுத்திருப்பதை

எதிர்பார்க்கவில்லை. இப்போது என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே நின்றாள்.

“எவ்வளவு நேரம் நிற்கப் போகிறாய்? வா. வந்து படு”

“எப்படி…….?” அவள் கண்கள் படுக்கையை பார்த்து விட்டு பின்பு அவன் முகத்தில் நின்றது.

“எனக்கு என் மேல் நம்பிக்கை இருக்கிறது” குரலில் கிண்டலா பரியாசமா என்று

தெரியவில்லை.

அவன் எதிர்பார்த்ததைப் போல அவளும் படுக்கையில் அவனருகில் படுத்தாள்.”எனக்கும் என்

மேல் நம்பிக்கை இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்தவளாய். அவனுக்கு முதுகைக்

காட்டிக் கொண்டு படுத்தவள் எட்டி சுவிட்சைத் தட்டி விளக்கை அணைத்தாள்.

சிறு இரவு விளக்கின் வெளிச்சமும், சின்னதாக ஏ சி இயந்திரத்தின் ரீங்காரமும், அமைதியான

அந்த இரவும், திருமணம் என்னும் சடங்கு கொடுத்த உறவும் உரிமையும்…..

“பிரியா”

அசையவேயில்லை அவள்.

“பிரியா” மெல்ல அசைத்தான்.

“ம்’

“ஒரு விஷயம் சொல்லேன்” அவள் பதிலுக்கு காத்திராமல் “ஏன் பிரியா, சினிமாவில்

வருவதைப் போல முதலிரவு அறைக்குள் நீ வரும் போது உன் பெற்றோர் உனக்கு அறிவுரை

ஏதும் சொல்லவில்லையா?”

பதில் சொல்லாமல் படுத்திருந்த அவளை மீண்டும் அசக்கினான்.

“ம்… சொன்னார்கள் தான்”

“என்னவென்று….?”

என்னவென்று சொல்வாள்? திருமணத்திற்கு முன் அப்பா சொன்னது நினைவு வந்தது. “நாம்

நினைத்தது ஒன்று. இன்று நடப்பது வேறு. அதுவே நமக்கு தலையிறக்கம் தான். ஆனால்

ரொம்ப கேவலப்படாமல் இம்மட்டும் கடவுள் நம்மைக் காத்தார்” என்றவர் மீண்டும்,

“அதனால் இது தான் இனி உன் வாழ்க்கை. உன் விதியின் படி நடக்கட்டும். உன் கனவுகள்

எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் ஒதுக்கி விட்டு இந்த வாழ்க்கையை அனுசரித்து நடந்தகொள்”

இதை நாம் இப்போது இவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் உன் அப்பாவே

சொன்னதைப் போல என்னை அனுசரித்துப் போ என்று எதையாவது நம்மிடம் இவன்

எதிர்பார்ப்பானே. பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தாள்.

அவனும் இவளுடைய பதிலை எதிர்பார்க்கவில்லை. ஆதலால் அவனே தொடர்ந்தான்.

“பிரியா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய் என்று உனக்குத் தெரியுமா?”

“…………..”

“பாறைக்கும் ஆண்மை தரும் அழகு. பெண்களே பொறாமை கொள்ளும் பேரழகு என்றேனும்

கேள்விபட்டிருக்கிறாயா?”

மெல்ல அவள் புறம் திரும்பி அவள் இடுப்பில் கையைப் போட்டுக் கொண்டு அவள் காதோடு

சொன்னான்.”என்னை உனக்குப் பிடிக்கவில்லை என்றாலும் நாமிருவரும் ஆயுசுக்கும்

சேர்ந்தே வாழ வேண்டும். அப்படித் தானே”

தன் மேல் கிடந்த அவன் கையின் கனமும் அதை விட அவன் சொன்னதின் உண்மையும்…!

எல்லாவற்றையும் விட தன்னுடைய நிராதரவான நிலையும்……….!

அவளுக்கு மீண்டும் கண்ணீர் வந்தது.

ஆனால் அதை அவன் பொருட்படுத்தினால் தானே.

பெருமூச்சு விட்டாள்.

“உன்னை நினைத்தால் பாவமாகத் தானிருக்கு” குரலில் கிண்டலா அல்லது உண்மையா என்று

இருட்டில் இனம் காண முடியவில்லை.

“ஆனால்….!” அவளைத் தன்னோடு இறுக்கிக் கொண்டான். அவனிடமிருந்து நகர்ந்து கொள்ள

பிரயத்தனப்பட்டாள். ஆனால் அவனோ விடுவதாக இல்லை.

“ப்ளீஸ். விடுங்க”

“முடியாது”

“படுக்கும் முன்பு என்ன சொன்னீங்க?”

“என்ன சொன்னேன்?”

“உங்கள் மேல் நம்பிக்கை இருக்குன்னு சொன்னீங்க”

“ஆமாம் சொன்னேன்”

“இது தானா உங்கள் நம்பிக்கை?”

“சரியா புரிஞ்சிக்கோ. என் மேல் நம்பிக்கை இருக்குன்னு சொன்னது இதை அல்ல”

“அப்புறம். அதை நம்பி தானே நான் இங்கே வந்தேன்”

“உன்னை” இறுக்கி கொண்டு .”ம்….இதைத் தான் நம்பிக்கை இருக்குன்னு சொன்னேன்”

“ப்ளீஸ்”

“ஆனால் முதலிரவுக்கு வரும் முன்பு என்னோட அப்பா சொன்னதைத் தட்ட முடியாதே”

“என்ன சொன்னார்?”

“முதலிரவில் களைப்பாக இருக்கிறது என்று அசட்டையாக விட்டு விடாதே”

“அப்புறம்?”

“முதலிரவில் அதற்குண்டான சாங்கியத்தை சரியாக செய்யவில்லை என்றால் பின்பு ஆயுசுக்கும் உங்களுக்குள் அன்னியோன்யம் இல்லாமல் போய் விடும் என்று சொன்னார்”

இப்படி எல்லாம் ஒரு தகப்பன் பேசியிருப்பாரா? ச்சை. இருக்காது. இவனாக காரியம் ஆகவேண்டும் என்று இந்த சூழ்நிலைக்கு சொல்கிறான்.

மேற்கொண்டு யோசிக்க முடியாதபடி அவன் அவளை தனதாக்கிக் கொண்ட போது

முரட்டுத்தனமான அவன் பேச்சுக்கு நேர்மாறாக தன்னிடம் மென்மையாக நடந்து கொண்ட அவனை அவளுக்கு ஏனோ மேலும் பிடிக்காமல் தான் போயிற்று.

2 thoughts on “காற்றோடு காற்றாக-12”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *