ருத்ரமாதேவி - 16
அத்தியாயம் 16
சதாசிவம் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து வேலையை கற்றுக் கொண்டே சிறப்பாக செயல்பட அவனின் அலுவலகத்தில் அவனுக்கு மரியாதை உயர்ந்தது.
மகாதேவி தன் கணவனின் தேவை அறிந்து அனைத்தும் செய்ய அவன் அவளை மகாராணியாக தாங்கினான்.
அளவான சம்பளம், சிக்கனமான செலவுகள் என்று தங்கள் வருமானத்திற்குள் செலவுகள் செய்து கையிருப்பாக சிறு தொகை வங்கியில் சேமித்தனர்.
அவளின் படிப்புக்கு தடை இல்லாமல் வார இறுதியில் நெல்லையப்பர் கோயில், அம்பாசமுத்திரம், குற்றாலம், தென்காசி கோயில், பாபநாசம், திருச்செந்தூர் என்று திருநெல்வேலியை சுற்றி உள்ள இடங்களையும் சுற்றினார்கள் இருவரும்.
இப்படியே இனிமையாக நகர்ந்தது அவர்களது வாழ்க்கை. சனிக்கிழமை அரை நாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சதாசிவம் மதிய உணவின் போது இன்று சாயங்காலம் நெல்லையப்பர் கோயில் போகலாமா என்று தன் மனைவியிடம் கேட்டான்.
அவளும் சரியென கூற, சாயங்காலம் காஃபி குடித்து முடித்து கோயில் நோக்கிச் சென்றார்கள். நெல்லையப்பரையும் காந்திமதி அம்பாளையும் தரிசித்து விட்டு பிரகாரம் சுற்றி விட்டு ஓர் இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்.
அவர்கள் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருப்பதை இரு கண்கள் பார்த்தது. மீண்டும் மீண்டும் பார்த்து அவர்கள் தான் என்று உறுதியாக தெரிந்ததும், அவர்கள் மகிழ்ச்சியில் குரோதம் கொண்டு, உன்னை நிம்மதியாக வாழ விடமாட்டேன் என்று மனதில் நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தது.
அந்த கண்களுக்கு சொந்தமான நபரை, அவர்களை விட்டு விலகி செல்கையில் பார்த்து விட்டாள் மகாதேவி. பார்த்ததும் அவளுக்குள் பயம் வந்து விட்டது. அவளை அறியாமலேயே அவளின் கைகள் நடுங்க ஆரம்பித்து.
அந்த நேரத்தில் திடீரென்று அவளுக்கு உண்டான பதட்டதையும் கைகளில் தோன்றிய நடுக்கத்தையும் கண்டு பதறிய சதாசிவம், "என்ன ஆச்சு மகா?. ஏன் திடீர்னு பதட்டமாகிட்ட?" என்றான் பதட்டமாக.
இல்லை ஒன்னுமில்லை என்று சமாளிக்க முயன்றாள் மகாதேவி.
என்ன வென்று சொல் மகா என்றான் சிறிது அதட்டலாக.
" இல்லை அது வந்து" என்று தயங்கிய படியே இருக்க அவனின் ஒரு முறைப்பில்
"அது ஊரில் என்னை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை இப்ப நான் பார்த்தேன். ஒரு வேளை அவர் நம்மை பார்த்திருந்தால் அப்பாவிடம் சொல்லி விடுவாறே! அதான் பயம் வந்து விட்டது" என்றாள் மிரண்டவாறு.
"ஓஓ" என்று யோசித்த படியே, "அதெல்லாம் பார்த்திருக்க மாட்டார். கவலை படாதே" என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவனுக்கும் சிறிது பயமாக தான் இருந்தது.
சிறிது நேரம் கழித்து கோயிலில் இருந்து கிளம்பி வீடு வந்தனர். அவள் இரவு உணவு செய்ய சமையல் அறைக்கு செல்ல, அவளிடம் நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருவதாக கூறிச் சென்றான்.
அவன் நேராக சென்றது மேனேஜர் வீட்டிற்கு தான். அந்நேரம் அவனை எதிர் பார்க்காத மேனேஜர், "என்ன சதாசிவம்?. இந்நேரம் வந்து இருக்கீங்க?. எதுவும் அவசரமா?" என்றார் யோசனையாக.
"இந்த நேரத்தில் உங்களை தொந்தரவு செய்வதற்கு மன்னிப்பு கேட்டுக்குறேன் சார். ஒரு சின்ன உதவி வேண்டும். அதான் நேரம் காலம் பார்க்காமல் வந்துவிட்டேன்" என்று கூறி விட்டு, இன்று கோவிலில் நடந்ததை கூறி, "அவர் சென்று மனைவியின் வீட்டில் தெரிவித்து விட்டால் அவ்வளவு தான் சார். அதான் என்ன செய்ய என்று தெரியவில்லை" என்றான் சோகமாக.
"வேறு எங்காவது செல்ல வேண்டும். எங்கு என்று தான் தெரியவில்லை. கோயம்புத்தூர் அல்லது சென்னை செல்லலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மனைவியையும் அழைத்துக் கொண்டு எப்படி வேலை தேடுவது. எங்கு தங்குவது என்றுதான் ஒரே யோசனையாக இருக்கிறது" என்றான்.
சிறிது நேரம் யோசித்த மேனேஜர், "ஒரு சின்ன யோசனை. சரி வருமா என்று பாருங்கள் என்று கூறி, சேலத்தில் எனக்கு தெரிந்த கம்பெனி ஒன்றில் வேலை இருக்கிறது. அங்கு செல்கிறீர்களா?" என்றார்.
அது அவனுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. உடனே சரி என்று கூறிவிட்டான். அவரும் சிபாரிசு கடிதம் எழுதி அவனிடம் கொடுத்தார்.
அதை பெற்றுக்கொண்ட சதாசிவம், "ரொம்ப நன்றி சார். நாங்க இன்றே கிளம்பி விடுகிறோம்" என்க,
அதற்கு அவரும், "சரி நான் சேலம் கம்பெனிக்கு ஃபோன் செய்து சொல்லி விடுகிறேன்" என்றார். "நீங்க இங்கிருந்து எப்படி போவீர்கள்?" என்க,
"தேவையான பொருட்கள் மட்டும் எடுத்துக் கொண்டு பஸ்ஸில் செல்லலாம் என்று நினைக்கிறேன். பிறகு ஒரு நாள் வந்து மற்ற வேலைகளை முடிக்க வேண்டும்" என்றான்.
"என்னோட காரை எடுத்துக்கோங்க. கட்டில் பீரோ போன்றவற்றை பிறகு வண்டி வைத்து எடுத்துக் கொள்ளுங்க" என்றார் மேனேஜர்.
"இல்லை சார் எந்த பெரிய பொருட்களும் இல்லை. ஒரு தையல் இயந்திரம் மட்டுமே. மற்றபடி சமையல் பாத்திரங்கள் மட்டும் தான். ஒரு சாக்கு மூட்டையில் அடங்கிவிடும்" என்றான்.
"அப்படி என்றால் கார் போதுமானதாக தான் இருக்கும்" என்று கூறி விட்டு, வேலையாளை அழைத்து, ஓட்டுநரை அழைத்து வருமாறு கூறினார்.
"சார் நீங்க யார் கிட்டேயும் நான் சேலம் போயிருப்பதை சொல்லாதீர்கள். சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டதாக சொல்லி விடுங்கள். ஏன் என்றால் ஒரு வேளை என் மனைவியின் வீட்டில் இருந்து எங்களைத் தேடி வந்தால் அவர்களுக்கு நாங்கள் இருக்கும் இடம் தெரிந்து விடும் அல்லவா.
இப்போது நாங்கள் அவர்களை எதிர்கொள்வது சரியாக படவில்லை. நாங்கள் இன்னும் கொஞ்சம் எங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். அதன் பிறகு தான் எங்களாலும் அவர்களுடன் ஏதாவது பேச முடியும்" என்றான்.
அவன் கூறுவதும் சரியாக பட அவரும் அதற்கு ஒத்துக் கொண்டு,
"சரி அப்படியே சொல்லி விடுகிறேன். நீங்கள் சீக்கிரம் பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள். பேர பிள்ளைகளை பார்த்தால் அவர்கள் மனது மாறிவிடுவார்கள்" என்று ( ஃபிரீ அட்வைஸ்) சிரித்துக் கொண்டே கூறினார்.
அவனும் மௌனமாக சிரிக்க, வண்டி ஓட்டுநர் வர, மீண்டும் ஒரு முறை அவருக்கு நன்றிகள் கூறி அவரிடம் இருந்து விடைபெற்று தன் இல்லம் நோக்கி காரை செலுத்த ஓட்டுநரிடம் கூறினான்.
இரவு உணவு தயாரானதும் எடுத்து வைத்துவிட்டு வீட்டையும் ஒதுக்கிவிட்டு தன் கணவனுக்காக காத்திருந்தாள் மகாதேவி.
கார் சத்தம் கேட்டதும் வெளியே சென்று பார்க்க, அங்கு தன் கணவன் காரில் இருந்து இறங்குவதை கண்டு குழப்பத்துடன் அவனின் அருகில் விரைந்து செல்ல, அதற்குள் அவன் அவளின் அருகில் வந்து, "என்ன மகா! சமையல் முடிந்ததா?" என்று கேட்டுக் கொண்டே அவளின் தோளில் கை போட்டு கொண்டு. அவளை அழைத்துக்கொண்டு வீட்டினுள் வந்தான்.
வீட்டிற்குள் வந்ததும் அவளிடம், "நாம் இங்கிருந்து இப்பவே கிளம்புகிறோம்" என்றான்.
அவனை கேள்வியாக பார்த்தாள் மகாதேவி.
தொடரும்....
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 1830 minutes ago
-
ருத்ரமாதேவி - 1713 hours ago
-
ருத்ரமாதேவி - 153 days ago
-
ருத்ரமாதேவி - 143 days ago
-
ருத்ரமாதேவி - 134 days ago
- 143 Forums
- 2,510 Topics
- 2,993 Posts
- 18 Online
- 2,065 Members
