ருத்ரமாதேவி - 58
அத்தியாயம் 58
தமிழ் வேந்தன் பெற்றோர் சங்கரேஷ்வர் உமா மகேஸ்வரி இருவரின் வரவால் ருத்ராவின் வீடு மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. ருத்ரா அத்தை மாமா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு தன் தோழி கலைச்செல்வியின் அருகில் சென்று நின்று கொண்டாள்.
சதாசிவம் அனைவரையும் அழைத்துக் கொண்டு எதிர்வீடான ஐஸ்வர்யாவின் வீட்டிற்கு சென்றார். எதற்கு என்று புரியாமல் சங்கரேஷ்வர் உமா மகாதேவி அனைவரும் அவரிடம் கேட்க, அவர் பதில் கூறும் முன் அனைவரும் ஐஸ்வர்யாவின் வீட்டு ஹாலில் கூடிவிட்டனர்.
திடீரென்று தங்கள் வீட்டிற்கு வந்தவர்களை கண்டு சற்று அதிர்ந்து, பின்னர் மகிழ்வுடன் வரவேற்றார் ஐஸ்வர்யாவின் தந்தை. பின்னர் "என்ன விஷயம்? யார் இவர்கள்?" என்று கேட்க, சதாசிவம் இவர் என் மனைவியின் அண்ணன் என்று அறிமுகப்படுத்திவிட்டு தமிழ் வேந்தனின் தாய் தந்தையர் என்றார்.
அவரும் மகிழ்ந்து வரவேற்று தன் மனைவியை அழைத்து உபசரிக்க சொல்ல அவரும் அனைவருக்கும் காஃபியுடன் வந்தே வரவேற்றார்.
பின்னர் சதாசிவம் ஐஸ்வர்யாவின் தந்தையிடம் உங்கள் மகள் ஐஸ்வர்யாவை என் மருமகனின் நண்பன் ராஜசேகருக்கு மணமுடிக்க கேட்டு வந்துள்ளோம் என்றார்.
அவர் அப்படி கேட்டதும் தமிழ் வேந்தன் ராஜசேகரை பார்க்க அவனும் அமைதியாக தலை குனிந்தான்.
ஐஸ்வர்யாவின் தந்தை திடீரென்று எப்படி என்று குழம்பி நிற்க, "சதாசிவம் எந்த குழப்பமும் வேண்டாம். என் பெண் ருத்ராவிற்கு தமிழ் வேந்தனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதே மேடையில் ராஜசேகருக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடத்தி விடலாம்" என்றார். மேலும் இருவரும் காதலிக்கிறார்கள் என்பதையும் தெரிவித்தார்.
அதில் அதிர்ந்த ஐஸ்வர்யாவின் தந்தையை சதாசிவம் பேசி புரிய வைத்து சம்மதிக்க வைத்தார்.
"அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்வார்களா?" என்று சற்று சந்தேகமாகவே கேட்டார் ஐஸ்வர்யாவின் தந்தை.
அதற்கு சதாசிவம் "நான் அவர்களுடன் பேசி விட்டேன். இன்று மாலை முறைப்படி பெண் கேட்க அவர்கள் வருவார்கள். என்று கூறி அதை உன்னிடம் தெரிவிப்பதற்காக தான் இப்பொழுது நான் வந்தேன்" என்பதையும் கூறினார்.
அதில் அவர் மகிழ்ந்து அதற்கான ஏற்பாட்டை செய்யும்படி தன் மனைவியிடம் கூறினார்.
கலைச்செல்வி ருத்ரா இருவரும் ஐஸ்வர்யாவை கேளி கிண்டல் செய்து மாலையில் எந்த புடவை கட்டுவது, எப்படி அலங்காரம் செய்வது என்று அதற்கு தேவையானவற்றை எடுத்து வைத்து தயாராக தொடங்கினர்.
ராஜசேகருக்கு சிறுவயதிலேயே தந்தை இறந்து விட்டதால் தாய் மட்டுமே. அவரும் அவரின் அண்ணன் வீட்டில் இருப்பதால், தன் தாய் மற்றும் தாய் மாமா, அவரின் குடும்பத்துடன் ஐஸ்வர்யாவை பெண் பார்க்க வந்தார்கள்.
பெண் பார்க்கும் படலம் இனிதே முடியவும் திருமண நாள் குறித்து பேச, மகாதேவி தன் மகளின் இருபத்தியோராம் பிறந்த நாளுக்கு பிறகு தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டார்.
ராஜசேகரின் தாயும் தங்களுக்கும் சிறிது கால அவகாசம் வேண்டும் என்று கேட்க, அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக இன்னும் மூன்று மாதம் கழித்து ருத்ராவின் பிறந்தநாள் கழித்த பிறகு வரும் முதல் முகூர்த்தத்தில் திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்தனர்.
அனைவரும் மகிழ்ச்சியாக இரவு உணவை முடித்து அவரவர் இல்லம் சென்று திருமண வேலைகளை தொடங்க ஆரம்பித்தனர்.
ஒரு பக்கம் திருமண வேலை சிறப்பாக நடந்து கொண்டிருக்க, மறுப்பக்கம் வழக்கு விசாரணையும் முடிந்தது. பாதிக்கப்பட்ட பெண்களை அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து விட்டனர் காவல் துறையினர்.
அதில் பல பெண்கள் மரணம் அடைந்திருந்தனர். அதில் தமிழரசியும் அடக்கம். பள்ளியில் இருந்து வரும் போது வேறு ஒரு பெண்ணிற்கு பதிலாக தமிழரசியை கடத்திச் சென்று விட்டார்கள். அதிலிருந்து தப்பிக்க முயன்றவளை அடித்து தங்கள் இச்சையை தீர்த்துக் கொண்டனர். அதில் அவள் இறந்து விட, ஆற்றில் தூக்கி வீசி விட்டார்கள்.
அங்கிருந்த விவரத்தின்படி அவர்கள் குடும்பத்தை கண்டுபிடித்து விவரம் தெரிவிக்கப்பட, தமிழ் வேந்தனின் தாயும் தந்தையும் கதி கலங்கி போயினர். அவனுக்கு அந்த கயவர்களை கொல்லும் அளவு வெறி வர, வேகமாக கிளம்பியவனை தடுத்து நிறுத்திய அவனின் தாய், "தவறு செய்தவர்களை தண்டிக்க அரசாங்கம் இருக்கிறது" என்று கூறினார்.
"இப்படித்தான் முன்பும் நாங்கள் அரசாங்கம் தண்டனை தரும் என்று காத்திருந்தோம். ஆனால் அவர்கள் பணத்தைக் கொடுத்து வெளியே வந்து விட்டார்களே!" என்று தன் தாயிடம் ஆதங்கத்தில் கத்தினான்.
அவனின் தந்தை அவனின் தோள் பற்றி அழுத்தி, "பொறுமையாக இரு தமிழ். அரசாங்கம் தண்டனை கொடுக்காவிட்டாலும் தெய்வம் நிச்சயம் தண்டிக்கும். இப்பொழுது நீ போய் என்ன ஆகப் போகிறது. என் பெண் மீண்டும் உயிருடன் வரப்போகிறாளா?" என்று விரக்தியாக கேட்டார்.
இப்படியாக பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மன வேதனையில் நாட்கள் கடக்க, தீர்ப்பு நாளும் வந்தது. இன்று தீர்ப்புக்காக அனைவரும் காத்திருந்தனர்.
சதாசிவம், தமிழ் வேந்தன், ராஜசேகர், அன்பரசு அனைவரும் நீதிமன்ற வளாகத்தில் தீர்ப்புக்காக காத்திருந்தனர். அங்கு தூரத்தில் ஒரு பெண்மணி முந்தானையால் வாய் மூடி அழுது கொண்டிருப்பதும் அவளை முறைத்துக் கொண்டு ஓர் ஆண் இருப்பதையும் கண்ட சதாசிவம், அவரை எங்கோ பார்த்தது போல் இருப்பதாக நினைத்து அருகில் நெருங்க, அது அவரின் தம்பி சாந்தசிவம்.
தன் தம்பியை அங்கு கண்டதும் 'ஒருவேளை அவனுக்கு பெண் குழந்தை இருந்து, அதுவும் இவர்களிடம் சிக்கி இருக்குமோ?' என்று பலவிதமான எண்ணம் தோன்ற தன் தம்பியின் தோள் தொட்டு "தம்பி" என்று திருப்பினார்.
தன்னை "தம்பி" என்று அழைத்து திருப்பிய வரை கண்டதும், அவரைக் கட்டி அணைத்து "அண்ணா... அண்ணா..." என்று அழ ஆரம்பித்து விட்டார் சாந்தசிவம்.
அவரின் முதுகை ஆதரவாய் தடவி விட்டுக் கொண்டே, "நீ எப்படி இருக்கிறாய்? அப்பா அம்மா எப்படி இருக்கிறார்கள்? பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்? நீ ஏன் இங்கு வந்தாய்?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
கண்களை துடைத்துக் கொண்டே, "ஏன் வந்தாய்? என்று கேட்காதீங்க. ஏன் இன்னும் உயிரோடு இருக்கிறாய்? என்று கேளுங்கள்" என்று விரக்தியாக கூறினார் சாந்தசிவம்.
தன் தம்பியின் குடும்பமும் பாதிக்க பட்டு இருக்குமோ என்று பயந்தவாறே. "ஏன் இப்படி பேசுகிறாய்? என்ன ஆயிற்று? என்றார் பயத்துடனே.
ஆனால் சாந்தசிவம் கூறியதை கேட்டு அதிர்ந்து விட்டார் சதாசிவம்.
தொடரும்...
- அருள்மொழி மணவாளன்...
Leave a reply
-
ருத்ரமாதேவி - 60 இறுதி அத்தியாயம்
2 weeks ago
-
ருத்ரமாதேவி - 59
2 weeks ago
-
ருத்ரமாதேவி - 57
2 weeks ago
-
ருத்ரமாதேவி - 56
2 weeks ago
-
ருத்ரமாதேவி - 55
3 weeks ago
- 143 Forums
- 2,628 Topics
- 3,137 Posts
- 0 Online
- 2,143 Members
