வானதி கலங்கிப்போனாள்.
தான் யாரை இவ்வழக்கின் கலங்கரையாக நம்பினாளோ, அவரே கழற்றிவிட நினைக்கையில், இனி அவள் என்னதான் செய்வாள்? கண்ணைத் துடைத்துக்கொண்டு, அவரை வெறுப்பான பார்வையொன்று பார்த்துவிட்டு வெளியே ஓடினாள் வானதி.
திவாகரும் அவள் நிலையைக் கண்டு அழகேசன்மீது வெறுப்புடன் அவ்விடம்விட்டு எழுந்து செல்ல எத்தனித்தபோது, அவனது கையைப் பிடித்து அருகில் அமரவைத்தார் அவர். சட்டென அவர் இழுக்கவும் திடுக்கிட்டவன், அவரை விழிகளால் வினவ, குரலைத் தாழ்த்திக்கொண்டு தீவிரமான பார்வையுடன் அவர் தொடர்ந்தார்.
“திவாகர், நான் சொல்றதை கவனமா கேளுங்க. இது உங்களுக்கும் எனக்கும் நடுவில மட்டும் இருக்கட்டும். ஏன்னா, இப்போ தான் வானதி உங்களை எவ்வளவு நம்புறாங்கனு நான் கண்கூடாப் பாத்தேன். அவங்களோட பாதுகாப்பு மேல உங்களுக்கும் அக்கறை இருக்குன்னு நான் நம்புறேன். அவங்களோட குடும்பத்துக்கு நடந்தது விபத்து இல்லை. திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. Yes, it is a murder. இதை வானதி இன்னும் விசாரிச்சா, அவங்களையும் கொல்றதுக்கு அவங்க தயங்கமாட்டாங்க. ஆனா, வானதியை கன்வின்ஸ் பண்றது அவ்ளோ ஈஸியான விஷயமா தெரியலை.
நீங்கதான் எப்படியாவது முயற்சி பண்ணி அவங்களை கேசை வாபஸ் வாங்க வைக்கணும். அதுக்காக இந்தக் கேஸ் முடிஞ்சுடுச்சுனு நீங்க நினைக்கவேணாம். நான் unofficialஆ இந்த கேசை நடத்தலாம்னு நினைக்கறேன். எங்க டிபார்ட்மெண்ட்லயே யாரை நம்பறதுன்னு தெரியலை எனக்கு. எனக்கு நேத்து நடந்த ஆக்சிடெண்ட் கூட ஒரு அட்டெம்ப்ட் தான்னு நினைக்கறேன். அதுனால, நம்ம மேல டவுட்சை க்ளியர் பண்ணிக்கறதுக்கு, ஸ்டேஷன்ல வந்து கம்ப்ளெய்ண்ட்டை வாபஸ் வாங்கிக்கங்க.
வானதிக்குத் தெரியாம, இந்தக் கேசோட விசாரணைக்கு உங்க ஹெல்ப்பும் எனக்குத் தேவைப்படும். இதையெல்லாம் நீங்க எனக்காக செய்ய வேண்டாம், வானதிக்காக செய்யுங்க. அவங்க உங்களோட நல்ல ஃப்ரெண்டு தான? அவங்களுக்காக நீங்க இதை செய்வீங்க தானே?”
‘அவ புருசன்டா நானு’ என வாய் வரை வந்ததைக் கூறாமல் மென்றுகொண்டு, தலையை மட்டும் ஆட்டினான் அவன்.
“குட். என்னோட ஆபிஸ்க்கு போய், ஷெல்ஃப்ல இருக்க லாக்கைத் திறந்தீங்கனா, விக்னேஷோட மொபைல் இருக்கும். அதை நீங்களே பத்திரமா வச்சுக்கோங்க. ஸ்டேஷன்ல இருந்தா ஆபத்து. கேசுக்கு ஸ்ட்ராங்கான பாயிண்ட்ஸ் கிடைச்சதும், யாரையும் தப்பிக்க முடியாத அளவுக்கு லாக் பண்ணிடலாம். எனக்கு குணமாகறவரை அண்டர்கவர்ல இருங்க. வானதியையும் பாத்துக்கங்க.. பாவம் ரொம்பவே கஷ்டத்துல இருக்காங்க..”
அவரை அதற்கு மேல் பேசவிடாமல் அவசரமாக, “சரி சார், நான் பாத்துக்கறேன்” என்றுவிட்டு, கை குலுக்கிக்கொண்டு வெளியேறினான் அவன்.
புங்கை மரத்தினடியில் இருந்த கான்கிரீட் திட்டில் அமர்ந்து தலைகவிழ்ந்து அழுது கொண்டிருந்தாள் வானதி. அவளருகில் சென்றவன், “இன்ஸ்பெக்டர் சொன்னது தான் சரின்னு தோணுது. நாம கேசை வாபஸ் வாங்கிடலாம்” என்க, நிமிர்ந்து அனல்கக்கும் விழிகளால் அவனை எரித்தாள் அவள்.
“எனக்கு யார் தயவும் தேவையில்லை. நானே இதைக் கண்டுபிடிக்கறேன். எங்க குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கற வரைக்கும் நான் சும்மா விடமாட்டேன்!”
“அதெல்லாம் கரெக்ட் தான். ஆனா, அதுக்கு நீ உயிரோட இருக்கணுமே?”
அந்த சூழலுக்குப் பொருந்தாத ஏளனச் சிரிப்புடன் அவன் கேட்க, கோபத்தைத் தாண்டிக் குழப்பமே பெருகியது அவளுக்கு.
“இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார் உன்கிட்ட?”
“அ.. அ.. அவர் வேற எதும் சொல்லல. ஒழுங்கா ஸ்டேஷன்ல போய் கம்ப்ளெய்ண்ட்டை வாபஸ் வாங்க சொன்னார். ஒழுங்கா வேற வேலை இருந்தா பாக்க சொன்னார்.
எனக்கும் அது தான் கரெக்ட்னு தோணுது. நேத்துத் தானே நீ சொன்ன, மெய்ன்ஸ் எக்ஸாம்க்கு அப்ளை பண்ணலாம்னு? அதுக்கான வேலை பாக்கவே நமக்கு நேரம் சரியா இருக்கும். கொஞ்ச நாள் இந்த டென்ஷனை எல்லாம் ஓரங்கட்டி வச்சுட்டு, முழுசா அதுல கவனமா படி.”
திவாகரின் பேச்சில் ஏதோ மாயம் இருந்தது போலும், அவனது சாந்தமான குரலும் கருத்துக்களும் வானதியை அசைத்தன. சம்மதமாகத் தலையாட்டினாள் அவள்.
ஒருவாறாக, காவல் நிலையத்தில் வழக்கைத் திருப்பிப் பெற்றுக்கொள்ள அவளையும் அழைத்துச் சென்றான் அவன். அவள் எழுத்தரிடம் விபரம் கூறி கேசை வாபஸ் வாங்கும் வேலைகளைப் பார்க்க, இவனோ யாரும் பார்க்காத சமயம் அழகேசனின் அறைக்குள் நுழைந்தான். லாக்கப்பில் இருந்த கைதிகள் இருவர்மட்டும் அவனைப் பார்த்துவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
மின்னல் வேகத்தில் அலமாரியைத் திறந்து கைபேசியைக் கைப்பற்றியவன், வந்தது போலவே திரும்பி வெளியே வந்தான். ஏதுமறியாதவன் போன்று முகத்தை வைத்திருந்தாலும், உள்ளே இதயம் படபடவென அடித்துக்கொண்டது. வீட்டில் கூட திருட்டுத்தனமாய் ஒரு வேலையும் செய்யாதவன், இன்று காவல் நிலையத்திலேயே கையை வைக்கத் துணிந்திருக்கிறான். வழியாத வியர்வையை ஒருமுறைக்கு இருமுறை துடைத்துக்கொண்டு, உதறலெடுக்கும் கைகளை பாக்கெட்டில் விட்டு மறைத்துக்கொண்டான் அவன்.
வானதி வேலைகளை முடித்ததும், தொய்ந்த முகத்தோடு கிளம்பினாள் அவனுடன். வழியில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதிலளித்துக்கொண்டு வந்தாள். அவளை குஷிப்படுத்த ஐஸ் வண்டியின் அருகில் பைக்கை நிறுத்த, அவளோ பிடிவாதமாக மறுத்துவிட்டாள். அவள் வருத்தத்தைக் காண முடியாமல், இரண்டொரு முறை உண்மையைக் கூறிவிடலாமா என்றுகூட யோசித்தான் அவன். ஆனால் சிரமப்பட்டு தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, வழக்கின் மீது அக்கறையில்லாதது போலவே நடித்தான்.
வீட்டுக்கு வந்து, தன் பெட்டியின் அடியில் கைவிட்டு, டில்லி முகவரியிட்டு வந்திருந்த அந்தக் காக்கிக் கவரைக் கை நடுங்க எடுத்தாள் அவள். முதற்கட்டப் பரீட்சையில் தேர்வாகிய மாணவர்களுக்கு அனுப்பப்படும் அடுத்த கட்ட மெய்ன்ஸ் தேர்வுக்கான விண்ணப்பம் அது. அவர்கள் படித்த கோச்சிங் சென்டரிலேயே இருவருக்கு தான் அந்தக் காக்கிக் கடுதாசி வந்திருக்க, அன்று கொண்ட ஆனந்தத்தை நினைவு கூர்ந்தவளின் நெஞ்சில் சோகம் பாரமாக இறங்கியது.
‘அப்பொழுதே அப்பாவுக்கு அழைத்து இந்த சந்தோஷ செய்தியை சொல்லியிருந்தால்… எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? அவரது மகிழ்ச்சியைக் கண்கூடாகக் காணவேண்டும் என்று ஆசைப்பட்டு சொல்லாமல் இருந்துவிட்டோமே… இப்போது அதைச் சொல்லும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதே…’
கண்களின் ஈரம் காக்கிக் கவரில் படவும், கவனமாக அதைத் துடைத்துவிட்டு, கவரை நெஞ்சோடு அழுத்திக்கொண்டு எழுந்தாள் அவள். திவாகர் அவளது சோக முகத்தைப் பார்த்து வருந்தியபடியே நின்றான். கவரைப் பிரித்து விண்ணப்பத்தில் அவள் எழுதப்போக, “ஒரு நிமிஷம்..” எனத் தடுத்தான் அவன்.
அவள் என்னவெனத் திரும்பி வினவ, “கண்ணை மூடி, ‘அப்பா நான் Prelimsல செலெக்ட் ஆகிட்டேன்’ அப்டினு சொல்லு” என்றான் அவன். தன் மனதில் நினைத்ததையே அவனும் சொல்ல, ஒரு ஆச்சரியப் பார்வை பார்த்துவிட்டுக் கண்களை மூடினாள் அவளும். கண்ணுக்குள் புன்னகை முகமாகத் தன் குடும்பத்தினர் தெரிய, நாத் தழுதழுக்க “அ..அப்பா..” என்றவள், அதற்குமேல் பேச முடியாமல் அவனைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
அமைதியாக அவளைத் தேற்றியவன், கண்களைத் துடைத்துவிட்டு, “மறுபடி ட்ரை பண்ணு..” என்றான்.
இம்முறையும் அழத் தொடங்கியவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தான் தன் குடும்பத்தோடு கழித்த தினங்களை மனதுக்குள் கொண்டுவந்தாள். அண்ணனின் சேட்டை, அவனைத் திட்டிக்கொண்டு துரத்தும் அம்மா, இதை அவளுடன் அமர்ந்து வேடிக்கை பார்த்து வெடித்துச் சிரிக்கும் அப்பா.. வயல்களில் நால்வரும் நடந்து போகும் நேரங்கள், திருவிழாவுக்கு குடும்பமாகச் செல்லும் தருணங்கள்.. இதழோரம் லேசாகப் புன்னகை பிறக்க, “அப்பா.. அண்ணா.. அம்மா.. நான் ப்ரெலிம்ஸ் செலக்ட் ஆகிட்டேன். முதல் அட்டெம்ப்ட்லயே செலெக்ட் ஆகிட்டேன். உங்க பொண்ணு ஐஏஎஸ் ஆகப் போறாப்பா.. உன் தங்கச்சி கலெக்டராகப் போறா அண்ணா..” என உதட்டுக்குள் பேசினாள் வானதி.
தெளிந்த முகத்தோடு கண்திறந்தவள், இன்னும் தன் தோளில் ஆதரவாகப் பிடித்திருந்த திவாகரைப் பார்த்து முறுவல் பூத்தாள். “தேங்க்ஸ் திவா.”
திவாகரும் பதிலுக்குச் சிரித்தான்.
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, சிவகங்கை கலெக்டரேட்டில் அதைச் சமர்ப்பிக்கச் சென்றனர் இருவரும். தன் நிலையை எடுத்துக் கூறி, சென்னைக்கு செல்லாமல் சிவகங்கையிலேயே தேர்வெழுத அனுமதிக்குமாறு ஒரு மனுவும் தந்துவிட்டு வந்தாள் அவள்.
வழியிலேயே தேர்வுக்குத் தேவையான புத்தகங்கள் என்று ஒரு மூட்டை புத்தகங்களை அவள் வாங்கிச் சேர்க்க, பைக்கில் அதையும் சுமந்துகொண்டு வீடு வந்து சேர்ந்தனர். சரியாக சாப்பாட்டு நேரத்துக்கு அவர்கள் வந்துவிட, பானு அத்தனை புத்தகங்களைப் பார்த்து மலைத்தவாறே, “இதையெல்லாம் இன்னும் எவ்ளோ நாள்ல படிக்கணுமாமா?” எனக் கேட்க, வானதியோ சாதாரணமாய், “இன்னும் ஒன்றரை மாசத்துல..” என்று கூற, திவாகருமே திகைத்தான்.
“பதறாதீங்க, ரெண்டு வருஷமா படிச்சிட்டு இருக்கறது தான். கரண்ட் அஃபயர்ஸ் மட்டும் புதுசாப் படிக்கணும்.”
“வாத்தியாரே, சாப்ட்டு சாயங்காலமா ஆரம்பிக்கலாமா..?”
ஹரிணி சிரிப்போடு வினவ, மற்றவர்களும் சிரித்துவிட்டனர்.
வானதி உணவருந்திவிட்டு அவர்களுடன் பொழுதைக் கழிக்க, திவாகர் அறையைத் தாழிட்டுவிட்டு, விக்கியின் கைபேசியை உயிர்ப்பித்தான்.
Interesting
💜💜💜💜