Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-34

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-34

தன்னிடம் ஏதோ சண்டையிட வந்தவள், சட்டென உறைந்து நிற்கவும் திவாகர் பயந்தான். தன்னைத் திட்டவாவது தன்னிடம் பேசினாளே என்று அவன் கொண்ட ஒரு கண மகிழ்வு காணமற்போக, வானதியின் நெற்றியில் படர்ந்த சிந்தனைக் கோடுகளைக் கவனிக்காமல், அவசரமாக மன்னிப்பு வேண்டத் தொடங்கினான் அவன்.

“வானி… சாரி, நான் எத–“

“ஷ்ஷ்.. பேசாத!”

“மத்தாப்பூ.. ப்ளீஸ்–“

கைகளால் அவன் வாயைப் பொத்தினாள் அவள். அதை எதிர்பாராதவன் சற்றே வியக்க, அதற்குள் விலகி நின்றவள், “நாம எதோ முக்கியமான விஷயம் ஒண்ணை கவனிக்காம இருக்கோம்! அன்னிக்கு ஏன் நம்மளை அக்ரி ஆபிஸ்ல இருந்து அந்த ஆள் கூட்டிட்டுப் போனான்? ஏன் அந்த ஆபிசரை மீட் பண்ண நம்மளை விடல?” என்றாள்.

அவன் குழப்பமாகப் பார்த்தான்.

“நம்மளை ஃபாலோ பண்ணி வந்திருப்பாங்க, சந்தர்ப்பம் கிடைச்சதும் கூட்டிட்டுப் போனாங்க.. அப்படித் தான?”

“அப்படித் தான் நானும் நினைச்சேன். ஆனா அது எதேச்சையா நடந்த மாதிரி இப்பத் தோணல. இன்ஸ்பெக்டரை ப்ளான் பண்ணி ஆக்ஸெடெண்ட் பண்ணவங்க, நம்மளையும் நல்லா ப்ளான் பண்ணித்தான் அந்த ஆபிஸ்க்குள்ள போக விடாம செஞ்சிருக்காங்க. நாமளும் அதை விட்டுட்டு வேற எங்கயோ அலையுறோம்.”

“ம்ஹூம்… எனக்குப் புரியல.. அதான் உங்கண்ணன் செல்ஃபோன்லயே அந்த டெஸ்ட் ரிசல்ட்ஸ் எல்லாமே இருந்ததுல்ல? மறுபடி ஏன்?”

“அது எனக்கும் தெரியல. ஆனா, கண்டிப்பா அங்க ஏதோ இருக்கு. நாம நாளைக்கே அங்க போகணும்!”

“ப்ச்.. இன்னும் ஒரு வாரத்துக்கு உனக்கு எக்ஸாம் தவிர வேற நெனைப்பு வரக் கூடாது! பரீட்சை எழுதி முடிச்சிட்டு அப்றம் ஜேம்ஸ் பாண்ட் வேலை பாக்கலாம். இப்ப வா, தூங்கலாம்.”

உரிமையாகக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றவனை இனம் புரியா உணர்வுடன் பார்த்தாள் அவள்.

என்னால் எப்படித் தூங்க முடியும் என்று நினைக்கறாய் நீ, திவா? ஒரு பக்கம் வழக்கின் சிக்கல், இன்னொரு பக்கம் நம் உறவென்னும் புதிர். இடையில் குடும்பத்தினர்..  வரவேற்புக்கான ஏற்பாடுகளோடு. இன்று எனக்கு மரணம் கூட வரலாம்..  தூக்கம் வராது. சொன்னால் உனக்குப் புரியுமா?’

உள்ளே வந்ததும் அவன் கட்டிலில் அலுப்பாகப் படுக்க, அவளோ கைபேசியில் அழகேசனை அழைத்து இதைப் பற்றிக் கேட்கலாமா என யோசனையில் இருந்தாள். தாடையில் கைபேசியை முட்டுக் கொடுத்தவாறு வைத்து அவள் சிந்தனையில் ஆழ்ந்திருக்க, திரும்பிப் படுத்தவனின் பார்வையில் அவள் தென்பட்டாள்.

கட்டிலிலிருந்து எம்பி, கையை நீட்டி அவளைத் தொட்டான் அவன். சட்டெனத் தீண்டியதில் அவள் அதிர்ந்து விலக, தொப்பென்று தரையில் விழுந்தான் திவாகர்.

“அம்மா!!”

அவசரமாக அறை விளக்கைப் போட்டாள் வானதி. விழுந்து கிடந்தவன் அசட்டுத்தனமாய் சிரித்தான்.

“பைத்தியமா ஒனக்கு? ஒரு நிமிஷம் கூட சும்மா இருக்க மாட்டயா?”

சிரமப்பட்டு மேலெழுந்தவன், “எனக்கு வேணும்தான்! உன்னைப் போய் கட்டிக்கிட்டேன் பாரு..” எனப் புலம்பியபடியே எழுந்து கட்டிலில் அமர்ந்தான்.

“என்ன தான் வேணும் உனக்கு?”

“இப்படி எரிஞ்சு விழுந்தா அப்பறம் நான் பேச மாட்டேன்!”

முகத்தை மடியிலிருந்த தலையணையில் பாதி புதைத்துக்கொண்டு கண்களைச் சுருக்கி உம்மென்று பாவமாகப் பார்த்தான் திவாகர். இரண்டு கணங்களுக்கு மேல் கோபத்தைத் தக்கவைக்க முடியவில்லை அவளால். சிரித்துவிட்டாள்.

“தூங்கு திவா. எனக்குத் தூக்கம் வரல.”

“ம்ஹூம்.. தூக்கம் வரலைன்னு அத்தைகிட்ட சொன்னா என்ன சொல்வாங்க அவங்க?”

வானதிக்கு சோகமும் பூரிப்பும் சேர்ந்து நெஞ்சை அடைத்தது. அவளது அன்னையை நினைவுபடுத்தியிருந்தான் அவன்.

“தூக்கம் வரலைன்னு சொன்னா, யார் ரொம்ப நேரம் கண்ணை மூடிட்டு சத்தமில்லாமப் படுத்திருக்கறாங்களோ, அவங்களை அடுத்த வாரம் டவுனுக்கு கூட்டிட்டுப் போயி ஜவ்வுமிட்டாய் வாங்கித் தர்றேன்னு சொல்வாங்க.”

கண்களைத் துடைத்துக்கொண்டு சிரித்தாள் அவள்.

“நீயும் நானும் சரின்னு சொல்லி அசையாமப் படுத்துட்டு இருப்போம். கொஞ்ச நேரத்தில கண்ணைத் தொறந்து பார்த்தா, லைட்டை நிறுத்திட்டு எல்லாரும் தூங்கியிருப்பாங்க. இருட்டுக்கு பயந்துக்கிட்ட நாமளும் தூங்கிடுவோம்!”

இப்போது அவளது சிரிப்பில் அவனும் கலந்துகொண்டான். இருவரும் சிரித்து முடித்ததும் ஒரு யதார்த்தமான நிசப்தம் படர்ந்தது அறையில். வானதிக்கு நெஞ்சிலிருந்த பாரம் சற்றே குறைந்ததுபோல் இருந்தது. தானாகவே எழுந்து சென்று கட்டிலில் அவனருகில் அமர்ந்து அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் அவள்.

“எவ்ளோ வேகமா வளர்ந்துட்டோம் நாம, இல்ல? எல்லாமே கடகடன்னு மாறிப்போயிடுச்சு…”

அவனும் தோளோடு அவளை அணைத்துக்கொண்டு, தலையோடு தலைசாய்ந்தான்.

“நான்தான் உன்  கூடவே இருக்கேனே மத்தாப்பூ.. சீக்கிரமே எல்லாம் சரியாகிடும் பாரு.”

வேறு நோக்கங்கள் எதுவுமே இல்லாத அந்த அன்பு இதமாக இருந்தது அவளுக்கு. சற்று நேரத்திற்கு மட்டுமாவது எதைப் பற்றியும் நினைக்காமல் இந்தக் கணத்தில் ஆழ்ந்து அமிழ்த்துவிடத் தோன்றியது மனதுக்கு. அப்படியே ஒரு பெருமூச்சுடன் கண்மூடினாள் வானதி.

______________________________________

காலையில் அவசர அவசரமாகத் தேர்வுக்குக் கிளம்பியவளை, பொறுமையாக அமர்த்தி சாப்பிட வைத்து, காரில் அழைத்துச் சென்றான் திவாகர்.

“சுத்தமா புக்கைத் தொட்டுக்  கூடப் பாக்கல. என்ன பண்ணப் போறனோ!?”

வழியெங்கும் இதே போல் அவள் புலம்பிக்கொண்டே வர, திவாகர் எதுவுமே கூறாமல் அமைதியாக வண்டியோட்டிக்கொண்டு வந்தது அவளை இன்னும் உறுத்தியது. வேண்டுமென்றே சத்தமாகப் பெருமூச்சு விட்டாள் அவள். தலையில் கையை வைத்துக்கொண்டு உச்சுக்கொட்டினாள்.

அவனும் இதையெல்லாம் கவனித்தாலும் ஒருவார்த்தை ஆறுதலாகப் பேசாமல் அடக்கிய புன்னகையுடனே சாலையில் கண்ணைப் பதித்துக் காரைச் செலுத்தினான். அவள் ஏமாற்றத்தை மறைக்கவே இல்லை. முகத்தை சுருக்கிக்கொண்டே அமர்ந்திருந்தாள்.

தேர்வு மையம் வந்ததும், “ஹ்ம்.. என்னை ட்ராப் பண்ணிட்டு, அடுத்த பிக்கப்புக்குத் தானே?” என்றுவிட்டு உதட்டைச் சுழித்தாள் அவள். அவன் முறைத்தான்.

“உண்மையைச் சொன்னா, முறைப்பு வருதோ?”

இறங்கப் போனவளைக் கைப்பற்றி இழுத்து இறுக்கி அணைத்தான் அவன். காருக்குள் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. அவள் திகைப்பிலிருந்து மீளாமல் சிலையாகியிருந்தாள். காதுக்குள் பேசினான் அவன்.

“எப்படித்தான் உன்னால மட்டும் ஒரே நேரத்துல அறிவாளியாவும் முட்டாளாவும் இருக்க முடியுதோ! நானும் இப்ப சொல்லலாமா அப்பறம் சொல்லலாமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்… நீயும் கண்டபடி கற்பனை பண்ணிகிட்டு கிடக்க! எனக்கு என்னைக்கும் என் மத்தாப்பூ மட்டும் தான் இஷ்டம். சரியா? ஐ லவ் யூ.

There… I said it! I love you. கண்டதையும் நினைச்சு குழம்பிக்காம, போய் எக்ஸாம் எழுதுற வழியப் பாரு!”

கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு அவளைத் தன் கைச்சிறையிலிருந்து விடுவித்தான் அவன். சிலகணங்கள் எதுவும் செய்யாமல் திகைத்துப் போனவள் வெட்கத்தில் கன்னங்கள் சிவக்க இறங்கி வேகமாகப் பள்ளிக்கு ஓடினாள். சிரித்துவிட்டு அவன் காரைக் கிளப்ப, சட்டென அவனது காரை மறித்து நின்றது ஒரு ஜீப்.

அதிலிருந்து இறங்கியவர்களை எங்கேயோ பார்த்தது போல இருந்தது திவாகருக்கு. சற்றே கண்ணைச் சுருக்கி யோசித்தவாறு, சீட்டிலிருந்து இறங்காமல் அமர்ந்திருந்தான் அவன்.

“பார்ரா… தொறை காரவிட்டு எறங்க மாட்டாக போல!!”

பேசியவாறே வந்த ஒருவன் திவாகரின் பக்கக் கதவைத் திறக்க, தலைவன் போல இருந்தவன் அவனுக்கெதிரில் வந்து நின்றான். வானதி சென்றுவிட்டதைக் கடைக்கண்ணால் உறுதி செய்துகொண்டு, “யாருன்னு தெரியலையே..?” என்றான் திவாகர்.

“ஆண்டிப்பட்டி மலையப்பன்னு கேள்விப்பட்டிருக்கீகளா? அண்ணன்தான்.” என்றது ஒரு அல்லக்கை.

வெள்ளை வேஷ்டியும் சட்டையும், சம்பந்தமே இல்லாமல் கருப்பு கூலிங் க்ளாசுமாய், வட்டிக்காரனின் பத்துப் பொருத்தமும் இருந்தது மலையப்பனுக்கு. நினைவு வந்தவனாய் திவாகர் புன்னகைத்தான். ஒரு வாரத்துக்கு முன்பென்றால் தனது டேக்வாண்டோ உதையில் இரண்டு விட்டிருப்பான்; இப்போதோ காதலில் விழுந்திருந்த மனது அவனைக் கட்டிப்பிடித்து முத்தம் கூடக் கொடுக்கலாம் என்றது!

இருப்பினும் அதைச் செய்யாமல் கைக் குலுக்கியபடி எழுந்தவன், “அண்ணே… நீ செஞ்ச உதவியை என் வாழ்க்கைக்கும் மறக்க மாட்டேண்ணே!! அண்ணனுக்கு ஒரு குறையும் வராம சந்தோஷமா இருப்பீங்க எப்பவும்!!” என்றான் வாயெல்லாம் பல்லாக. அவ்வித நடவடிக்கையை எதிர்பாராத மலையப்பனுக்கும் திகைப்பாக இருந்தது. தனது இடது கைப் பக்கம் நின்றவனை முறைத்தான் அவன்.

“தம்பி.. அண்ணனுக்கு இதெல்லாம் புடிக்காது. அவரு கட்டிக்க இருந்த பொண்ணைக் கட்டிகிட்டு, இப்டி அவரு முன்னாடியே கட்டிப்புடிக்கறீக..  அப்பறம்.. ம்ம்..”

அவன் சொல்ல முடியாமல் இழுத்தான். திவாகர் வெட்கப்பட்டுக்கொண்டு சிரித்தான்.

“அது… நியூயார்க்ல இதெல்லாம் கேஷுவலா நடக்கும். யாரும் கண்டுக்க மாட்டாங்க.. நீ எதுக்குன்னே காருக்குள்ள எல்லாம் பாக்கற?”

தோளில் கையைப் போட்டுக்கொண்டு சாவதானமாகப் பேச, மலையப்பனுக்குக் கோபத்தை விடத் திகைப்பே மேலோங்கியது.

“ஏய்! அண்ணன் யாரு தெரியுமா? அவரு தோளுலயே கையப் போடுற? ஆண்டிப்பட்டியில, சிம்மக்கல்லுல அண்ணன் பேரைச் சொன்னாலே போதும்! ஊரே அதிரும்! ஆதிகேசவன் ஐயாவுக்கு அண்ணன் தான் எல்லாமே, தெரியுமா?”

ஆச்சரியமும் பூரிப்புமாய் திவாகர் அவனை பார்க்க, அது ஏனெனப் புரியவில்லை மலையப்பனுக்கு!

4 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-34”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *