திவாகரின் ஆர்வமான பார்வைக்கு அர்த்தம் புரியாமல் மலையப்பன் மலைத்து நிற்க, அவனோ வாய்க்கொள்ளாப் புன்னகையுடன், ‘உன்னைத் தானே தேடிட்டு இருந்தேன்’ என மனதுக்குள் சொல்லியபடி மலையப்பனைத் தோளில் கைபோட்டு அழைத்துக்கொண்டு சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் நுழைந்தான்.
“டீ சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் வாங்க!”
இயல்பாக இரண்டு தேநீருக்குச் சொல்லிவிட்டுப் புன்னகையுடன் அமர்ந்தான் அவன்.
மலையப்பன் தனது ஆட்களை முறைக்க, அவர்களும் செய்வதறியாது திருதிருவென விழித்தனர். வேதாசலத்தின் மகனென்பதால் அவன் மீது கை வைக்கவும் தயங்கினர். மலைப்பனுக்கும் பயந்தனர்.
“என்ன விஷயம்?”
முடிந்த வரை தனது இறுமாப்பை விடாமலிருக்கப் பிரயத்தனப்பட்டான் மலையப்பன்.
சட்டைப் பையிலிருந்து ஒரு அழைப்பு அட்டையை எடுத்து நீட்டி, “இது என் காலிங் கார்ட். வச்சுக்கோங்க. உங்ககிட்ட நான் நிறையப் பேசணும். வானதி கூட உங்களைப் பார்த்தா சந்தோஷப்படுவா.” என்றான் திவாகர், சிரிப்புக் குறையாமல்.
அட்டையை வாங்காமல் முறைத்த மலையப்பன், “உனக்கு எங்கிட்ட என்ன பேசணும்? என்ன வேணும் உனக்கு? பெரியவர் மகன்னா, ஒண்ணும் செய்ய மாட்டோம்னு நினைச்சுக்கிட்டயோ? உங்கப்பனுக்கும் சேர்த்து உனக்கு செய்வோம்!” என்று கத்த, டீக்கடையில் இருந்தவர்கள் பயத்தில் எழுந்து வெளியேறத் தொடங்கினர்.
திவாகர் அசையாமல் அமர்ந்திருந்தான். முகத்தில் ஒரு துளி பயமில்லை.
“நான் டீசண்ட்டா பேசறேன்.. நீங்க கத்துறீங்க. சரி, அப்ப வேற என்ன வழி…”
மலையப்பனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான் அவன். அதற்குள் அவன் கண்ணைக் காட்ட, பின்னாலிருந்து ஒருவன் அவனை அடிப்பதற்குப் பாய்ந்து வர, கடைசி நொடியில் நழுவி அப்படியே அவனது கையைப் பிடித்துத் திருகினான் திவாகர்.
“Let’s not make a scene.”
மீண்டும் அவன் பேச முற்பட, அதற்குள் மேலும் இருவர் சண்டையிட வந்துவிட, சலிப்புடன் அவர்களுக்கும் சில டேக்வாண்டோ அடிகளை அளித்துவிட்டு, மறுபடி பேசத் தொடங்கினான். இருந்த ஐந்து பேரையும் அடித்துப் போட்டுவிட்டுத் தனது சட்டையின் கசங்கலை சரிப்படுத்திவிட்டு நின்றான் திவாகர்.
மலையப்பன் இதை எதிர்பாராமல் திடுக்கிட்டு நிற்க, தனது அட்டையை அவனது சட்டைப்பையில் வைத்துவிட்டு, “பேசலாம்” என்றுவிட்டு நகர்ந்தான் அவன்.
____________________________________
மதுரை மேரியட் நட்சத்திர விடுதி பகல் வெளிச்சத்தில் தங்கமாய் ஜொலித்தது. வழி விசாரித்துவிட்டு ரூபாவின் அறைக்கு வந்தபோது, அழைப்பானை அழுத்தும் வேலையின்றி அவளே வெளியே வந்துகொண்டிருந்தாள்.
திவாகரைப் பார்த்துவிட்டு மலர்ச்சியாகப் புன்னகைத்தாள் ரூபா.
“நேத்து தான் பார்த்தோம். இவ்ளோ சீக்கரம் உன்னை எதிர்பார்க்கல. உன் வொய்ஃப் வரலையா?”
அவன் புன்னகையுடன், “இல்ல, பரீட்சை எழுதப் போயிருக்கா. I wanted to see you. And I couldn’t delay it.” என்றான்.
அவனை அழைத்துச்சென்று அறையில் போட்டிருந்த பிரம்மாண்ட சோபாவைக் காட்டினாள் அவள். எதிரில் கட்டிலில் அமர்ந்துகொண்டாள்.
“அமெரிக்கா வர்ற ஐடியா இல்லை போல? உன் மெயிலை படிச்சேன்.”
“வானதி… ஐ மீன்.. என் வொய்ஃப்புக்கு இங்க சிவில் சர்வீஸ் வேலை கிடைச்சுடும். அவளால அமெரிக்கா வர முடியாது. அவளை விட்டுட்டு நானும் இருக்க முடியாது.”
ரூபா புருவம் தூக்கிப் பார்த்தாள் அவனை.
“சாரி ரூபா. நேத்து தான் எனக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரிஞ்சது. வானதியும் நானும் சின்ன வயசுல இருந்து ஒண்ணாப் பழகினவங்க. எங்க ரெண்டு குடும்பமும் ஒண்ணோட ஒண்ணு நெருங்கினது. சில காரணங்களால பேச்சு வார்த்தை இல்லாம இருந்தது. நான் வானதியை விட்டு ஒரு நாள் கூட இருந்தில்ல, அப்பல்லாம். அவளோட பிரிவு என்னை ரொம்ப பாதிச்சு, traumatize பண்ணிடுச்சு. என் மூளை அந்த நினைவுகளை என்கிட்ட இருந்து மறைச்சுடுச்சு.
இதையெல்லாம் உன்னால நம்ப முடியுமான்னு தெரியல. நீ பயாலஜிஸ்ட். புரிஞ்சுக்குவனு நினைச்சு சொல்றேன். நிச்சயமா சொல்றேன், நான் வானதியை மறக்காம இருந்திருந்தா, நம்ம காதல் நடந்திருக்காது. அவ என் வாழ்க்கைக்கு அவ்ளோ முக்கியம். உயிர் வாழத் தேவையான ஆக்சிஜன் மாதிரி, அவ எனக்கு.
எனக்கு பழைய ஞாபகம் இல்லைன்னு தெரிஞ்சும் கூட என்னை அவ வெறுக்கல. கோபப்பட்டா, திட்டினா, ஆனா அதுலயும் நான் அன்பைத் தான் பார்த்தேன். அவளை மறந்திருந்த அந்த நேரத்துல கூட, மனசு மறுபடி அவளை விரும்பத் தொடங்கிச்சு. அப்பவே எனக்குப் புரிஞ்சுது, வானதிதான் எனக்கு எல்லாமேன்னு.
நம்ம பண்ணின லவ் இதை விட ரொம்ப மேம்போக்கானது ரூபா. We were individuals. We saw each other, we liked each other, we went on dates. ஆனா அந்தக் காதலை என்னால இந்தளவு ஆழமாப் பார்க்கமுடியலை. நான் உன்னை ஏமாத்தினதா நினைச்சா, என்னை எவ்ளோ வேணா திட்டு, அடி. ஆனா, என்னை மறந்துட்டு, உன் வாழ்க்கையைத் தொடரணும் நீ.
I’m just another worthless person who crossed your life. உன் வாழ்க்கையில எனக்கான இடம் எதுவும் இல்ல. கடந்துபோன ஒரு நிழலான நினைவு தான் நான். என்னால உன் மனசுல எந்த பாதிப்பும் இருக்கக் கூடாது. நம்ம காதல் உன்னை ஏமாத்தல, நான் தான் உன்னை ஏமாத்துனேன். சோ, காதலை வெறுக்க நினைக்காத. என்னை ஒரு கெட்ட கனவா நினைச்சு அடியோட மறந்தாலும் சரி, இல்லை பழசை மறந்துட்டு என்னை ஒரு ஃப்ரெண்டா ஏத்துக்கிட்டாலும் சரி. ஐம் ஓகே.
I want the best for you. என்னால உனக்கு என்ன செய்ய முடிஞ்சாலும் தாராளமா கேளு. கண்டிப்பா நான் செய்யறேன்.”
ரூபா பெருமூச்சு விட்டாள். முயன்று வரவழைத்த புன்னகையுடன், “வானதி ரொம்ப லக்கி கேர்ள்.. இவளை மனசுக்குள்ள வச்சு பாதுகாக்கற ஒருத்தனை அடைஞ்சிட்டாளே அவ..” என்றுமட்டும் சொன்னாள்.
திவாகர் சங்கடமாகப் புன்னகைத்தான்.
“திவா, உனக்கு ஆட்சேபனை இல்லன்னா, நான் வானதி கிட்டப் பேசணும்.”
என்னவென்று கேட்க நினைத்துக் கேட்காமல் நிறுத்திக்கொண்டான் திவாகர்.
“யா.. ஸ்யூர்.. கண்டிப்பா நீங்க ரெண்டு பேரும் சந்திச்சுப் பேச வைக்கறேன். வரேன்.”
அவளிடம் விடைபெற்றுக்கொண்டு வந்து தேர்வு மையத்துக்குக் காரைக் கிளப்பிக்கொண்டு வந்தபோது, அவனைத் தேடியபடி பள்ளிக்கூட வாசலில் அங்குமிங்கும் பார்த்துக்கொண்டு நின்றாள் வானதி.
ஒருமுறை ஹாரன் அடித்து அவளை அழைக்கவும், அவளும் பார்த்துவிட்டு அருகே வந்தாள். காரில் ஏறியவள், “ஏன் லேட்டு? எங்க போயிருந்த? எவ்ளோ நேரம் வெய்ட் பண்றது?” என்று படபடத்தபடியே தனது தலையிலிருந்த கேட்ச் க்ளிப்பைப் பிரித்து முடியைக் கையால் கோதிவிட்டுக்கொண்டு மீண்டும் போட்டுக்கொண்டாள்.
திவாகர் பதில் கூறாமல் அவளையே பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்டவள், “என்ன?” என்றால் புருவத்தை உயர்த்தி.
தலையை ஒன்றுமில்லை என அசைத்துவிட்டு, காரைச் செலுத்தினான் அவன். வானதி தனக்குள் சிரித்துக்கொண்டாள். காலையில் அவன் சொன்னதற்கு பதிலை எதிர்பார்க்கிறான் எனப் புரிந்தது அவளுக்கும்.
‘என்னை எத்தனை வருஷம் காத்திருக்க வச்ச… நான் மட்டும் ஒரே நாள்ல சொல்லணுமா?’
மதுரை-சிவகங்கை தேசிய நெடுஞ்சாலையில் கார் வழுக்கிக்கொண்டு சென்றது. ஜன்னலின் வழியே காற்று சூடாக வந்து முகத்தில் அடித்தது. வானதி தனது பக்கக் கண்ணாடியை சற்று ஏற்றிக்கொண்டாள்.
அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“உன்கிட்ட ரெண்டு விஷயம் சொல்லணும்.”
“ம்ம்?”
“எதை முதல்ல சொல்றதுன்னு தெரியல..”
“ரெண்டையும் தான சொல்லப் போற, எதை முதல்ல சொன்னா என்ன?”
“ஓகே. இன்னிக்கு ரெண்டு பேரை மீட் பண்ணேன். Two different people. Unrelated. ஆனா நமக்கு சம்மந்தப்பட்டவங்க.”
“ம்ம்.”
“முதல்ல நம்ம கேசுக்கு ஒரு லீட். ஆதிகேசவனோட அஸிஸ்டெண்ட் மாதிரி ஒருத்தன்.”
ஆதிகேசவன் என்ற பெயரைக் கேட்டதுமே அவள் பதறினாள்.
“நீ எப்படி அவனை எல்லாம் போய்ப் பார்த்த? ஏன் தனியாப் போற? இன்ஸ்பெக்டர் என்ன சொன்னார்? அவர் உன்னைப் போக சொன்னாரா?”
“இல்ல. அவனாவே வந்து மாட்டுனான்.”
“புரியல.. யார் அது?”
“உனக்குத் தெரிஞ்சிருக்கும். மலையப்பன்.”
அவள் முகத்தைப் பார்த்தான் அவன். அவள் கல்லாக இறுகியிருந்தாள். அவளுக்கும் நினைவிருக்கிறதெனத் தெரிந்துகொண்டான் அவன்.
“அவனேதான். ஆதிகேசவனோட லிங்க் இருக்கு அவனுக்கு. அவனை சத்தமில்லாம விசாரிச்சா, நமக்கு ஏதாவது தகவல் கிடைக்கலாம்.”
தலையை அசைத்துவிட்டுத் தனக்குள் ஏதோ பேசிக்கொண்டாள் அவள். பின் அவனிடம் திரும்பினாள்.
“அப்பறம் யாரு?”
“நான் உங்கிட்ட சொல்லணும்னு நினைச்ச ஆள். ரூபா. அமெரிக்கால இருந்து வந்திருக்கா.”
இப்போதும் இறுக்கமாகவே வைத்திருந்தாள் முகத்தை. அவன் ஏதும் பேசுமுன், “அவங்ககிட்ட நான் பேசலாமா?” என்றாள் வானதி.
திவாகர் அதில் திகைத்துப்போனான்.
interesting
💜💜💜💜
Interesting😍😍
Rendu peraiyum meet panna yethuvum prachanai aagathe?