வெகுநேரம் தூங்காமல் புரண்டுகொண்டே இருந்தாள் வானதி. மனதில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தவை அனைத்தும் திரும்பத் திரும்ப ஓடியது.
தான் எடுத்துக்கொண்ட வழக்கு விசாரணையைக் கவனிக்காமல், நிறையவே தடம்மாறிச் சென்றுவிட்டதாகத் தோன்றியது. அப்பாவை, அண்ணனை நினைத்தபோது கண்கள் கலங்கியது.
“என் பொண்ணுக்கு என்ன குறை? அவ கலெக்டரு! அவளைக் கட்டிக்க ஆயிரம் மாப்பிள்ளை க்யூவுல நிப்பான்!!”
“ஆமாமா.. க்யூவுல வந்து, இவ பண்ற கூத்தெல்லாம் பாத்துட்டு ஓடிப் போயிடுவான்!! பொம்பளைப் புள்ள, இன்னும் காலைல ஒன்போது மணி வரைக்கும் இழுத்துப் போர்த்திட்டுத் தூங்கறா! வீடு வெளங்குமா?”
“ம்மா! இது உனக்கே ஓவரா இல்ல? அந்த எருமையும் தான் பத்து மணி வரைக்கும் தூங்கறான்! அவனை எதாச்சும் சொல்றயா நீ?? நான் மட்டும் என்ன இளிச்சவாயா?”
“என்னை எதுக்குடி இழுக்கற?? பிசாசு! நான் காடு கழனிக்குப் போயி கைகால் நோக வேலை செஞ்சுட்டு, வீட்டுக்கு வர்றதுக்கே மணி பதினொண்ணாகுது.. நான் தூங்குனா உனக்கு வலிக்குதா?”
“பாத்தீங்களாப்பா? வெளிய ‘நேச்சர் லவ்வர், அக்ரி சயன்டிஸ்ட்னு‘ பெருமை பேசிக்கிட்டு, நம்மகிட்ட சோகப் பாட்டு பாடறான் பாருங்க!! ஏன், இவனுக்குப் பொண்ணுக் கிடைக்கறது பத்தியெல்லாம் நீ கவலப்பட மாட்டியாம்மா?”
“என் பையனுக்கு என்ன? ராணி மாதிரிப் பொண்ணு வருவா அவனுக்காக!”
“ராணின்னா… நம்ம பக்கத்துத் தெரு சபேசன் மாமாவோட பசுமாடு தானே? செம்ம செலக்சன் மா!!”
“அடிங்க!! ஏய்! நில்லுடி, ஓடுனா எக்ஸ்ட்ரா அடிப்பேன்!!”
நினைவுகள் கண்ணில் நீரையும் உதட்டில் சிரிப்பையும் தர, சத்தமின்றிக் கண்களைத் துடைத்துக்கொண்டு திரும்பி திவாகரைப் பார்த்துப் படுத்தாள் அவள். சலனமின்றி உறங்கிக்கொண்டிருந்த அவன் முகத்தை கையால் வருடினாள்.
‘அப்பா… உங்கள் முன்னிலையில் எங்கள் திருமணம் நடந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்..? விக்கி.. நீயும் திவாகரும் பழைய கதைகள் பேசிச் சிரித்து, விளையாடி, மச்சான்–மாப்பிள்ளையாக வந்து நின்றால் ஊரெல்லாம் கண்ணுப் பட்டிருக்குமே… அம்மா.. கல்யாணம் முடிந்து என்னைப் பிரிவதற்கே நீ நிச்சயம் அழுதிருப்பாயே… இப்படி ஒரேயடியாக விட்டுப்போக எப்படி முடிந்தது உன்னால்..?’
மெல்லிய விசும்பல் அவளிடம் எழவும் திவாகர் முழித்துவிட்டான்.
“வானி.. என்ன ஆச்சு?”
அவள் அவசரமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
“ஒண்ணுமில்லயே..”
“Mhm.. I know what you are thinking. உங்க அப்பாம்மா பத்தி, இல்லைனா கேஸ் பத்தி.”
அவள் திரும்பிப் பார்த்து அதிசயிக்க, அவன் சிரித்தான்.
“இதைத் தவிர வேற எதையாச்சும் நினைச்சின்னா, மழை கொட்டுமே இங்க!!”
அவள் முறைப்பாக முகத்தை வைத்துக்கொள்ள, இரு கைகளாலும் அவள் கன்னங்களைப் பிடித்து முகத்தை உயர்த்தி, அவள் நெற்றியில் தன் நெற்றியை லேசாக ஒட்டிக்கொண்டு, “தூங்குங்க ஐஏஎஸ் மேடம்.. இன்னும் நாலே நாள்.. நாலே எக்ஸாம்ஸ். முடிச்சதும், மறுபடி ஷெர்லாக் ஹோம்ஸ் வேலை பாக்கலாம்!” என்றான் அவன்.
“திவா… நான் ரொம்ப அலட்சியமா, அக்கறையில்லாம இருந்துட்டேனா? ரெண்டு மாசமாச்சு… இன்னும் ஒண்ணுமே கண்டுபிடிக்கல..”
“ஹேய்.. யாரு சொன்னா அப்படி? எத்தனை புது லீட்ஸ் கிடைச்சிருக்கு.. அதுவும் லைஃப்ல ஆல்ரெடி இத்தனை குழப்பம் நடந்துட்டு இருக்கும்போது! நீ செஞ்சது எல்லாமே remarkable. I feel like we are nearing something big. And soon, we will find the truth. Just sleep now. Everything will be alright.”
நம்பிக்கையாகத் தலையசைத்துவிட்டு அவன் நெஞ்சில் சாய்ந்து கண்மூடினாள் வானதி.
________________________________________
மறுநாள் தேர்வெழுதி முடித்துவிட்டு அவள் காத்திருக்க, நேரந்தவறாமல் காரில் அவன் வந்ததைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விழிவிரித்தாள் வானதி.
“சுதாகரை பிக்கப் பண்ண போயிடுவன்னு நினைச்சேனே..?”
“அப்பா ட்ரைவரை மட்டும் அனுப்பலாம்னு சொல்லிட்டார். பெரிய வண்டியை எடுத்துட்டுப் போயிருக்காங்க..”
“ஓ..”
அவர்கள் வீட்டுக்கு வந்தபோது, சுதாகர் வந்துவிட்டதற்கான அறிகுறியே காணவில்லை. பானு முன்னறை வாசலில் நின்று காத்திருந்தாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்து காரின் ஒலி கேட்டதும் முகமலர்ந்தாள் பானு.
கார் சத்தத்தில் அவன் வருகையை அறிந்து மீனாட்சியும் வேதாசலமும் முன்னால் வெளியே வர, புன்னகையுடன் அம்மாவிடம் சென்று கட்டிப்பிடித்துக்கொண்ட சுதாகர், அப்பாவிடம் சற்றே மரியாதையான இடைவெளியில் நின்று தலையை மட்டும் அசைத்தான்.
“அப்பா.”
“வா தம்பி.. ஃப்ளைட்டு பயணமெல்லாம் ஒழுங்கா இருந்ததா? அலுப்பா இருக்கா உனக்கு?”
“அதெல்லாம் இல்லப்பா.”
அப்போதுதான் பின்னால் நின்றிருந்த தம்பியையும் பெண்கள் இருவரையும் பார்த்தான் அவன். பானுவைக் கண்டு லேசாக சிரித்தவன், அவளருகில் நின்றிருந்த புதியவளைக் கேள்வியாகப் பார்த்தாள். வேலையாட்கள் அவனது பெட்டியை உள்ளே எடுத்துச் செல்ல, அவன் திவாகரை நோக்கி வந்தான்.
“டேய்.. திவா!”
வானதி அவனைச் சற்றே கவனித்தாள். திவாகரின் அச்சொத்த உருவத்தில், சற்றே முதிர்வான முகத்தோடு, உயரம் சற்றே குறைவாக இருந்தான் சுதாகர். ஆனால் வாய்நிறையச் சிரித்த அந்த சிரிப்பை அவனிடம் மட்டும் தான் பார்க்க முடிந்தது. தம்பியை அணைத்துக்கொண்டவன் அதன்பின் பானுவைப் பார்த்துச் சிரித்துவிட்டு அடுத்ததாக வானதியை ஏறிட, அவள் தயக்கமாகப் புன்னகைத்தாள்.
அவன் கண்கள் சுருக்கி அவளைப் பார்த்துவிட்டு, “இது… நீ.. நஞ்சேசன் மாமா பொண்ணு இல்ல?” என்க, மூவருமே வியப்பாகப் பார்த்தனர். வானதி திவாகரை முறைத்து, “பாரு.. அவனுக்குக் கூட ஞாபகம் இருக்கு.. நீ தான் மறந்துட்ட..” என அவனுக்கு மட்டும் கேட்கும்படி முணுமுணுக்க, அவனோ அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.
சுதாகரிடம் திரும்பியவள், “பரவாயில்லையே.. இன்னும் மறக்கல..” என்றிட, அவன் சிரிப்போடு, “குட்டச்சி.. உன்னைத் தான் பிடிச்சு இவனுக்குக் கட்டிவெச்சாங்களா?” என அவள் உச்சந்தலையைக் கலைத்தான்.
“யாரோ வானதின்னு ஒரு பொண்ணுன்னு சொன்னாங்களா… எனக்கு சட்டுனு தோணவே இல்ல. என்னிக்கு உன் பேரை சொல்லி கூப்பிட்டிருக்கோம் நாம! குட்டச்சி!”
அவள் விளையாட்டாக முறைத்தபடி அவன் தோளில் தட்டினாள்.
“இன்னும் நீ மட்டும்தான் அந்தப் பேர யூஸ் பண்ற. ப்ளீஸ் ஸ்டாப்பிட்!”
“என்னது? விக்கி உன்னை என்னன்னு கூப்பிடறான் அப்ப? விக்கி எங்க இருக்கான்? நல்லா இருக்கானா?”
சட்டென அவள் கலங்க, மற்றவர்களும் பாவமான பார்வை பார்க்க, சுதாகருக்கு எதுவும் புரியவில்லை. திவாகரைத் திரும்பிப் பார்த்து, “என்னாச்சு?” என்றான் அவன்.
வானதியே அதற்குள், “சுதா… அ.. வந்து.. விக்கி, அப்பா, அம்மா.. மூணு பேரும் ஆக்ஸிடெண்ட் ஆகி இறந்துட்டாங்க..” என்றாள் நடுக்கமான குரலில்.
அவனது முகத்திலேயே அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது.
“என்னடி சொல்ற?? என்கிட்ட ஏன் யாருமே எதுவுமே சொல்லல? அப்பா கூட ஒண்ணும் சொல்லவே இல்லை!! ஐயோ!! எப்படி ஆச்சு??”
வானதியின் விழிகளில் கண்ணீர் துளிர்க்க, திவாகர் அவளை ஆதரவாக அணைத்துப் பிடித்துக்கொண்டு சுதாகரை முறைக்க, அவன் வானதியை உண்மையான பரிதாபத்துடன் பார்த்தான்.
“நாம நிறைய பேசணும் வானதி. என்னால நீ சொன்னதை சத்தியமா நம்பவே முடியல.. உன் வேதனை எப்படி இருக்கும்னு நினைச்சாலே எனக்கு பதறுது. ப்ளீஸ்.. தைரியமா இரு வானதி. நாங்க இருக்கோம் உனக்காக.. நான் இருக்கேன், திவா இருக்கான்.. அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்க.. உன்னைத் தனிச்சு விட்டுற மாட்டோம் யாரும். திவா, அவளைப் பாத்துக்க..”
கூறிவிட்டு பானுவின் பின்னால் அவன் செல்ல, வானதி அவனது ஆறுதல் வார்த்தைகளில் ஒருவித அமைதியை அறிந்தாள். கண்களைத் துடைத்துக்கொண்டு திவாகரோடு சென்றாள்.
மதிய உணவிற்குப் பின்னால் பானு, சுதாகர், வானதி, திவாகர் என நால்வரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
வேலை, படிப்பு எனப் பேசியவர்கள் மீண்டும் வானதியின் குடும்பத்தைப் பற்றிப் பேசத் தொடங்க, வானதி ஆரம்பம் முதலாய் நடந்தவற்றை சுதாகருக்குச் சொன்னாள். இடையிடாமல் கவனித்தவன், இறுதியில் சற்றே யோசனையில் ஆழ்ந்தான்.
“ஏன் வானி, ஆக்ஸிடெண்ட், அக்ரி ஆபிஸ், அழகேசன் இன்ஸ்பெக்டர், ஆதிகேசவன்.. எதுவுமே சரியா பொருந்தவே இல்லையே…? அம்பைக் கண்டுபிடிச்சா தானே எய்தவனை கண்டுபிடிக்க முடியும்? லாரியோ, வேனோ, அதை ஓட்டுனவனைக் கண்டுபிடிச்சாலே கேஸ்ல ஒரு முக்கியமான தடயம் கிடைக்கலாம்ல?”
“ப்ச்.. நாங்க அதை யோசிக்கலைன்னு நினைச்சயா? விபத்து நடந்த இடத்த சுத்தி ஒரு கிலோமீட்டருக்கு எந்த வீடோ, கடையோ கிடையாது. சிசிடிவி கேமராவும் கிடையாது. தூரத்துல ஒரேயொரு சர்ச் மட்டும்தான். அதுவும் ரோட்ல இல்ல, உள்ளே தள்ளி இருக்கு.”
“இருந்தாலும், ஆரம்பிச்ச இடத்துக்கே மறுபடி போய்ப் பாக்கறது அவசியம். நிச்சயமா எதாவது க்ளூ கிடைக்கும்.”
அவன் வார்த்தையில் மீண்டும் வானதிக்குப் பொறிதட்டியது.
ஆரம்பித்த இடம்…
ena iruku papom
💜💜💜💜
Interesting😍😍😍😍