Skip to content
Home » Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-4

Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-4

4

மனமெல்லாம் குமுறலுடன் ஒரு போக்கிடம் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தான் திவாகர்.

சற்றுமுன் அவனுக்குத் திருமணம் முடிந்திருந்தது.

ஆம்.. அவனாலே நம்பமுடியாதபடி நடந்துமுடிந்திருந்தது ஒரு திருமணம்.

ஒரு இழவு வீட்டில்… முன்பின் தெரியாத பெண்ணுடன்… அவள் சம்மதத்தைப் பற்றி சிறிதும் அக்கறையின்றி… ஒரு அவசரக் கல்யாணம்.. காக்கும் யுக்தி.. அவன் காதலுக்கு சமாதி.

அப்பாவின் கவுரவம் காப்பாற்றப்பட்டுவிட்டது. ஆனால் தன் வாழ்க்கை?

தானா இப்படி முன்வந்து தாலிகட்டினோம் என்று இன்னமும் நம்பமுடியவில்லை அவனால். அமெரிக்கா, நாகரிகம், நளினம் என்றெல்லாம் பேசுபவன், இன்று சொந்த மண்ணில் இறங்கியதும் மண்ணின் பண்புகள் தன்னுள் புகுந்துகொண்டு தன்னை ஆட்டிவைத்ததுபோல் இருந்தது. ஆபத்தில் இருக்கும் பெண்களைக் காப்பதே தமிழ்மண்ணில் பிறந்த ஆண்மகனின் கடமை அல்லவா? சங்க இலக்கியம் முதல் சிறுகதைகள் வரை அதைத்தானே சொல்கின்றன?

தான் மனைவியாக்கிக் கொண்ட அந்தப் பெண்ணை மீண்டும் ஒருமுறை ஏறிட்டான் அவன்.

மனதில் ஏமாற்றங்களும் ஆற்றாமைகளும் எழ, எச்சில் விழுங்கிவிட்டு கண்களை மூடினான் அவன்.

சட்டெனக் கைபேசி அடித்து அவனை நிகழுலகிற்கு அழைத்து வந்தது. எடுத்துப் பெயர்பார்த்தவனின் மனதில் ஆயிரம் பாறைகள் இறங்கின.

‘ரூபா’

ஆளில்லாத இடம்தேடி வெளியே வந்தவன், பெருமூச்சுடன் கைபேசியைக் காதில் வைத்தான். எதிர்முனை நடந்ததை அறியாமல் உற்சாகமாகக் கீச்சிட்டது.

“டார்லிங்!! மிஸ்ஸிங் யூ சோ மச்…உன்  கூட பேசாம என்னால இருக்க முடியலடா… அதான்.. தூங்கப் போறதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சிட்டு தூங்கலாம்னு கூப்டேன்.. பேசுடா..”

சிரமப்பட்டு குரலை சாந்தமாக்கினான் அவன்.

“ரூபா.. நான் சொல்றதை கவனமாக் கேளு… நம்ம ரிலேஷன்ஷிப் முடிஞ்சுபோச்சு… இந்த நிமிஷத்தோட. இட்ஸ் ஓவர்”

“டார்லிங்..?? என்னாச்சுடா உனக்கு? தண்ணி எதும் அடிச்சிருக்கியா? இல்லையே.. நீ இந்தியால எந்தத் தப்பும் பண்ணமாட்டயே.. என்ன நடக்குது அங்க?? ப்ளீஸ் என்  கூட விளையாடாத திவா!! நான் அழுதுருவேன்..”

உடைந்துவிடுவதுபோல் இருந்தது அவளது குரல். இவனுக்கும் அடக்கிவைத்த சோகம் எல்லாம் வார்த்தைகளில் வந்து நடுங்கியது.

“எ.. எனக்குக் கல்யாணம் நடந்துடுச்சு ரூபா. ஐம் மேரீட். ஒரு விபத்து மாதிரி நடந்துடுச்சு அது… என்னை மன்னிச்சிடு ரூபா.. என்னை மறந்துடு.”

அவள் ஓவென அழத்தொடங்க, அதைக் கேட்கமுடியாதவன் அழைப்பைத் துண்டித்தான். முகத்தைக் கைகளில் தாங்கியவன் அப்படியே சுவரில் தலையை மோதியபடி நின்றான்.

“தம்பி.. உங்களை ஐயா கூப்பிடறாங்க..”

ஒருவர் வாசலில் நின்று அவனை அழைக்க, கரித்த கண்களை நாசூக்காகத் துடைத்தபடி, கைகளை பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு உள்ளே வந்தான் அவன்.

உள்ளக்கொதிப்பு அடங்கமறுக்க, பெருமூச்சுக்கள் விட்டுத் தன்னை சமன்படுத்திக்கொண்டவாறே வந்து தந்தையிடம் நின்றான்.

“தம்பி திவாகர்.. அப்பா இடுகாடு வரைக்கும் போயிட்டு வர்றேன்… கொஞ்சம் வானதிய பாத்துக்கோப்பா… அவளோட பொருளெல்லாம் எடுத்துவைக்க ஒத்தாசை பண்ணு. நாங்க வர்றதுக்கு மதியத்துக்கு மேல ஆகும்.”

வேதாசலம் அவனுக்கு ஆணையிட்டுவிட்டுக் கிளம்பிவிட, தனது முகபாவத்தை அவரிடம் காட்டாமல் தலையைக் குனிந்தபடி நின்றே உம்கொட்டினான் அவன்.

மூலையில் அமர்ந்திருந்த வானதியை அக்கினிப் பார்வையால் சுட்டான் திவாகர். அவளோ இவன்புறம் திரும்பியும் பார்க்காமல் ஏதோ பிரம்மையில் இருப்பதுபோல் கண்கள் வெறிக்க அமர்ந்திருந்தாள்.

திடீரென யாரோ வந்து சடலங்களின் மீதிருந்த மலர் மாலைகளை அகற்றத் தொடங்க, சன்னதம் வந்ததுபோல் அலறியவள், “அப்பா!!!!” என்ற ஓலத்துடன் ஓடிசென்று தன் தந்தையின் உடலைப் பிடித்துக்கொண்டு அழுதாள் வானதி.

அவளைப் பிரிக்கமுயன்று இரண்டு பெண்கள் தோற்க, அதற்குள் தமையனின் உடல்மீது யாரோ கையை வைக்க, இங்கிருந்து தாவி அந்த உடலைப் பிடித்துக்கொண்டு அழுதாள் அவள். காண்போரெல்லாம் கலங்கிநிற்க, அவளது ஆங்காரக் கூச்சலில் சிலிர்த்து அதிர்ந்து திவாகரும் உறைந்து நின்றான். முன்னர் பார்த்த பாட்டி வந்து திவாகரை வானதியின் பக்கம் நகர்த்திவிட, அவனுக்கோ என்ன செய்வதெனப் புரியவில்லை.

தன் காலடியில் கதறிக்கொண்டிருந்தவளை, மனிதாபிமான எண்ணத்தோடு மெல்லத் தூக்கினான் அவன்.

“என்னை விடு!! எங்க அம்மா வேணும் எனக்கு… அப்பா வேணும்.. அண்ணன் வேணும்.. என்னை விடு.. விடுடா!!!”

தனது வேதனையெல்லாம் இவளுக்கு நேர்ந்த கொடுமைக்கு முன்னால் ஒன்றுமே இல்லையென்று தோன்றியது அவனுக்கு. எனவே அவளை விடாமல் பற்றிப்பிடித்து இழுத்து, சடலங்களிடமிருந்து தூரமாய்க் கொண்டுவந்தான்.

அதற்குள் ஆட்கள் வந்து மூன்று உடல்களையும் தூக்க, இயலாமையும் துக்கமும் சேர்ந்து அழுகையாக வெளிப்பட, தன்னைப் பிடித்திருந்தவனின் மார்பிலேயே சாய்ந்து அழுதுதீர்த்தாள் வானதி. கல்போல் இறுகி, அவள் தீண்டலை எதுவும் உணராமல், ஒரு கடமையாகவே அதைச் செய்தான் திவாகர்.

ஆட்கள் வீட்டைவிட்டுச் சென்றதும், பக்கத்திலிருந்த பாட்டியிடம் அவளைத் தள்ளிவிட்டுவிட்டு, தன் கைபேசியை எடுத்துக்கொண்டு வீட்டின் காம்ப்பவுண்டுக்கு வெளியே சென்றான் அவன்.

கேலரி முழுக்க தானும் தன் நெஞ்சுக்கினியாளும் கொஞ்சிக்கொண்டு நிற்கும் புகைப்படங்கள் மட்டுமே நிறைந்திருக்க, கண்ணீரைத் தடமின்றி அழித்துக்கொண்டே அவற்றையும் நிர்மூலமாக்கினான்.

இதுவரை முப்பது தவறிய அழைப்புகள் ரூபாவிடமிருந்து வந்திருக்க, வாட்ஸாப்பில், ஸ்கைப்பில், ஏன் டெக்ஸ்ட் மெசேஜ் செயலியில்  கூட நூற்றுக்கணக்கில் குறுஞ்செய்திகள் வந்து இறைஞ்ச, அவற்றைத் திறந்தால் இங்கேயே உடைந்துவிடுவோம் என்பது நிச்சயமாய்த் தோன்ற, கைபேசியை அணைத்துவைத்தான் அவன்.

மீண்டும் அவளைக் காண்பது  கூட அவனால் முடியுமா என்று சந்தேகித்தான் அவன்.

இன்று அப்பாவின் உத்தரவை ஏற்றுத் தாலிகட்டிவிட்டு, நாளை விவாகரத்து செய்துவிட்டால், ஊர்மக்கள் முன்னிலையில் அவரது மரியாதை என்னவாகும்? அதுவும் தன் நண்பரின் மகளை, அவ்வளவு எளிதில் தன்னைப் பிரியவிட்டுவிடுவாரா அப்பாவும்?

தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மீதி வாழ்க்கை அந்தப் பெயரறியா மங்கையிடன்தான்.

பெயரறியா…?

அறிவான், பெயரை மட்டும்.

வானதி.

அச்சு அசலான கிராமத்துப் பெண் என்று நன்றாகத் தெரிந்தது அவனுக்கு. இவளைக் கட்டிக்கொண்டு காடுகழனியில் பாடுபடத்தான் முதல்பிரிவு எடுத்துப் படித்து Biochemical Engineering துறையில் தேர்ச்சி பெற்றானா இவன்?

காற்றடித்தால் ஒடிந்துவிடும் முல்லைக்கொடி போல இருக்கிறாள் அவள். அதிர்ந்து பேசினால் அழுதுவிடுவாள் போலும். ஏன்.. இப்போதுதானே அவள் கண்ணீரையெல்லாம் வெள்ளமாக வழியவிட்ட காட்சிகளைப் பார்த்து வந்தான் அவன்!

தான் செய்யும் உடற்பயிற்சியின் விளைவா, அல்லது உண்மையிலேயே பஞ்சால் அவளைச் செய்துவைத்தார்களா என்று தெரியவில்லை, தான் தொட்டதும் பச்சைக்குழந்தைபோல கையோடு தூக்கமுடிந்ததே அவளை!

ரூபாவின் வாளிப்பும் சௌந்தர்யமும் என்ன? அவளது வெண்பட்டு தேகத்தில் பனித்துளி பட்டாலே சிவக்குமே…

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த டெல்லிப் பூர்வீகப் பெண் அவள். அவளது கவர்ச்சியும் நளினமும் கண்டு மயங்கிய திவாகரின் விழிகளுக்கு, வானதியின் மாநிறம் ரசிக்கவில்லை.

தன் விதியை நொந்துகொண்டு, ரூபாவை மனதிலிருந்து அகற்றப் பிரயத்தனப்பட்டான் அவன்.

ம்ஹூம்… முடியவில்லை.

கண்ணை மூடினால் அவளது வட்டமுகமும், வசீகரிக்கும் சிரிப்பும், வானவில் காட்டும் விழிகளுமே நிறைந்தன நினைவில்.

சே! ஓரிரவில் வாழ்க்கை மாறிவிடும் கதைகளை புத்தகங்களில் அல்லவா கேள்விப்பட்டிருந்தோம்இப்படி நமக்கே நிகழுமென்று கனவா கண்டோம்!!’

காலையில் சாப்பிட்டிருந்தாலும், இப்போது மீண்டும் பசி தலைதூக்க, தண்ணீராவது குடிக்கலாம் என்று வீட்டினுள் சென்றான் திவாகர்.

கூடத்தில் கிடந்த மாலைகளையும் மலர்வளையங்களையும் அப்புறப்படுத்தியிருக்க, பூஜை அறையிலிருந்து ஒரு ஆரத்தித் தட்டைக் கொண்டுவந்து தன்முன்னால் சுற்றும் பாட்டியை சலிப்புடன் பார்த்தான் அவன்.

“என் மகராசன்!! உனக்கு ஆயுசு நூறுய்யா!!” என்றபடி குங்கும நீரை எடுத்து நெற்றியில் இட்டார் அந்தப் பாட்டியம்மாள். அவர் அப்பால் சென்றதும் கைக்குட்டையால் அதைத் துடைத்தவன், அவன் தாலிகட்டிய சோளக்கொல்லை பொம்மை எங்கேயெனத் தேடினான்.

உள்ளறைக்குள் இருந்து விசும்பல் சத்தம் கேட்க, அங்கேதான் அந்த மடந்தை இருப்பதாகத் தோன்றி அவ்விடம் விரைந்தான் அவன்.

உள்ளே கட்டிலில் அமர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு முழங்கால்களுக்கிடையில் முகம்புதைத்து அழுதுகொண்டிருந்தாள் அவள். அந்த அறையில் நல்லவேளையாக ஒரு தண்ணீர் சொம்பு இருக்க, அதை எடுத்து மடக் மடக்கென்று குடித்துத் தாகத்தைத் தணித்துக்கொண்டான் திவாகர். பாதிச் சொம்பு தீர்ந்ததும்தான் தன்னருகில் அழுதுகொண்டிருக்கும் பெண்ணுக்கும் தண்ணீர் தேவை என்பதை உணர்ந்தான்.

மனமே இல்லாமல் சொம்பை மேசையில் வைத்துவிட்டு, அறையைச் சுற்றிக் கண்களை சுழலவிட்டான் அவன்.

நிறைய பரிசுக்கோப்பைகள், பதக்கங்கள் அலமாரியில் அடுக்கியிருந்தன. அழுதுகொண்டிருக்கும் பெண்ணும் அவள் குடும்பமும் ஒரு புகைப்படத்தில் வஞ்சமின்றிச் சிரித்துக்கொண்டு நின்றனர்.

நேரில் இருப்பதைவிடப் புகைப்படத்தில் அழகும் மகிழ்வும் நிறையவே கொண்டிருந்தாள் அவள். அவள் தோள்மீது கைபோட்டபடி அவளைவிட நான்கு அங்குலம் உயரமாய், வாட்டசாட்டமாய் எழிலே உருவாக அருகில் நின்றிருந்தான் ஒருவன்.

அவன் முகத்தையும் எங்கோ பார்த்ததுபோல் இருந்தது திவாகருக்கு!

தொடரும்

Madhu_dr_cool

6 thoughts on “Madhu_dr_cool – நீயன்றி வேறில்லை-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *