வண்டியில் விபத்தானதற்கு எவ்வித அறிகுறியும் தென்படாததால் வானதிக்கு சந்தேகம் பிறந்தது.
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
‘விழுந்து விபத்தாகியிருந்தால், எதற்காக சுதாகர் அதைச் சொல்லத் தயங்க வேண்டும்? திவாகர் மட்டுமே ஏன் அதைச் சொல்லவேண்டும்? என்ன மறைக்கிறான் என்னிடம்?’
தன்னிடம் ஏன் பொய் சொல்ல வேண்டுமெனப் புரியாமல், தன்னறைக்கு திவாகரைத் தேடிச் சென்றாள் அவள்.
கையிலும், வயிற்றிலும் பெரிய கட்டுக்களாகப் போடப்பட்டிருக்க, அதில் ரத்தத் துளிகளும் தெரிந்தன. அவள் வந்ததைப் பார்த்தவன் வலியிலும் லேசாகப் புன்னகைக்க, வானதிக்கு இன்னும் கண்ணீர் பெருகியது. வீல்சேரிலிருந்து மெல்ல எழுந்து கட்டிலில் சாய்தது அமர்ந்தான் அவன். வாயைப் பொத்தி அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அவனிடம் சென்று அமர்ந்து அவன் தலையைக் கோதினாள் வானதி. அவளது கையைப் பிடித்துக்கொண்டு ஆறுதலாக அழுத்தினான் அவன்.
“என்ன நடந்தது திவா? என்கிட்ட சொல்லக் கூடாத அளவுக்கு அப்படி என்ன ஆச்சு?”
“ஹேய்.. நிஜமாவே பைக் ஓட்டறப்போ விழுந்துட்டேன்.. அவ்ளோதான்.. நீ ஏன் இப்ப கண்டதை கற்பனை பண்ணிக்கற?”
“சரி.. எங்க விழுந்தீங்க? எப்படி விழுந்தீங்க? எந்தப் பக்கம் போயிருந்தீங்க?”
“ப்ச்.. இதென்ன போலீஸ் விசாரணை மாதிரி இத்தனை கேள்வி? எனக்கு சரியா ஞாபகம் இல்ல.. டையர்டா இருக்கு. செடேட்டிவ் போட்டதால தூக்கம் வருது.. நான் தூங்கறேன்”
மேற்கொண்டு அவளை எதுவும் கேட்கவிடாமல், புரண்டு படுத்துக்கொண்டான் அவன். கண்ணீருடன் அவன் தலையை வருடிக்கொடுத்தவள், அதற்குமேல் என்ன செய்வதெனத் தெரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். பானுவும் ஹரிணியும் சில முறை வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். சுதாகர் வந்து ஓரமாக நின்றான், தலையை தொங்கப்போட்டுக்கொண்டு. பொறுக்கமாட்டாமல் அவனிடம் சென்று தீர்க்கமாக முறைத்தாள் அவள்.
“என்ன ஆச்சு அங்க? எப்படி அடிப்பட்டுச்சு? உண்மைய சொல்லு நீயாச்சும்.”
தடுமாறினான் சுதாகர்.
“எனக்கு சரியாத் தெரில வானி.. தீடீர்னு கார்ல ஆளுங்க வந்தாங்க.. எங்களை வழிமறிச்சு நின்னாங்க.. என்ன ஏதுக்கு கேட்கறதுக்கு முன்ன அடிக்க ஆரம்பிச்சாங்க. நான் தூரமா ஓடி வந்துட்டேன், போலீசுக்கு ஃபோன் பண்ண. இவன் வராம நின்னு சண்டைபோட்டான். சட்டுனு ஒருத்தன் கத்தியை எடுத்துக் கீறிட்டான். அதுக்குள்ள போலீஸ் வரவும் அவனுக போயிட்டானுக. தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் போல, திவாகரே போலீஸ்கிட்ட கேஸ் எதுவும் வேணாம்னுட்டான். ஏன்னு கேட்டதுக்கு சரியா பதில் சொல்லல. அப்பறம் ஹாஸ்பிடல் போனோம்.. காயம் ஆழமா இருந்தால தையல் போடணும்னு சொன்னாங்க. வீட்டுக்கு ஃபோன் பண்ணலாம்னு சொன்னேன், அதுக்கும் வேண்டாம்னுட்டான். யாரையும் பயமுறுத்த வேண்டாம்னு சொல்லிட்டான். என்னால அவனை மீறி எதுவுமே பண்ணமுடில, சாரி..”
தூங்கும் திவாகரைக் கண்ணில் நீர்த்திரையோடு ஏறிட்டாள் அவள். சுதாகர் அவளுக்குத் தனிமை தந்து விலகிச் சென்றுவிட, தலையைப் பிடித்துக்கொண்டு நாற்காலியில் சரிந்தாள் அவள். நடப்பவை எதையும் அவளால் சரியாக அளவிடவே முடியாமல் தடுமாறினாள்.
‘கத்தியால் குத்திக் கொலை பண்ண முயலும் அளவிற்கு யார் இவனுக்கு எதிரி? ஏன் என்னிடமும் இதை மறைக்க வேண்டும் இவன்? எதற்காக போலீசில் வழக்குப் பதிவிட வேண்டாமென்றான்? என்னை விட அதிகமாக என்ன தெரியும் இவனுக்கு? ஏன் சொல்ல மறுக்கிறான்?’
மெல்லிய விசும்பலாக ஆரம்பித்து, சற்றே விசித்து விசித்து அவள் அழத் தொடங்க, சட்டெனக் கைபேசி ஒலிக்கவும் மூச்சடக்கி அழுகையை நிறுத்திவிட்டு அதை எடுத்தாள்.
புது எண்ணாக இருந்தது.
“ஹலோ?”
“ஏய்!! குத்துயிரும் குலையுயிருமா வீட்டுக்கு வந்துருக்கானா உன் வீட்டுக்காரன்? இன்னும் அரை இஞ்ச் ஆழமா கீறியிருந்தா அவன் காலி! தெரியுமா?”
சத்தமான, எச்சரிக்கும் குரலில் எதிர்முனை ஒலித்ததும் அவளுக்கு சர்வமும் நடுங்கியது. முகம் வெளிறி, விழிகள் பயத்தில் விரிந்தது.
“ஹலோ, யாரு நீங்க? யார் பேசறது? என்ன வேணும் உங்களுக்கு?”
“ஹாஹாஹா!! நாங்க யாருன்னு சொன்னா மட்டும்? என்ன பண்ணிடுவ நீ? இங்க பாரு, சொல்றதைத் தெளிவா கேட்டுக்க. வாபஸ் வாங்குற மாதிரி வாங்கிட்டு, அந்தக் கேசைத் தொடர்ந்து நடத்துறது எங்களுக்குத் தெரியாதுன்னு நினைச்சியா? ஒழுங்கு மரியாதையா அதையெல்லாம் நிறுத்திட்டு, நாங்க சொல்ற இடத்துக்கு உங்க நிலத்தோட பத்திரத்தை எடுத்துட்டு வந்து குடுக்கற நீ. இல்லைன்னா இப்ப இறங்குன கத்தி அடுத்த தடவை இன்னும் ஆழமா இறங்கும்! ஜாக்கிரதை!”
அழைப்புத் துண்டிக்கப்பட்டது.
வானதி மூச்சுவிட மறந்து கல்லாய் உறைந்திருந்தாள். உடம்பெல்லாம் நடுங்கியது.
அப்போது சட்டெனத் தூக்கத்தில் திவாகர் திரும்பிப் படுக்கவும், அந்த அசைவில் தன்னிலை திரும்பியவள் அவனை ஒருமுறை ஏறிட்டுப் பார்த்தாள். சலனமற்ற முகத்தோடு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனது முகத்தில் இருபது ஆண்டுகளாகக் கனவில், மனதில் பதிந்திருந்த சாயல் தெரிந்தது.
அவளுக்கு முடிவெடுக்க அதிக நேரம் தேவைப்படவில்லை.
_________________________________________
“என்னம்மா.. இப்ப போயே ஆகணுமா?”
வேதாசலம் கேட்கும் தொனி புரிந்தாலும், அழுத்தமாகத் தலையைக் குனிந்தபடியே சன்னமாய் ஆமாம் என்றாள் அவள்.
“கொஞ்சம் முக்கியமான விஷயம் மாமா.. என்னோட சர்ட்டிபிகேட் எல்லாம் எடுக்கணும். அவசரமா தேவைப்படுது. நான் போயிட்டு அரை மணி நேரத்தில வந்தர்றேன்.”
நாளை வானதி-திவாகர் வரவேற்பு என்பதால், வீட்டில் அனைவரும் அந்த வேலைகளில் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தனர். திவாகர் மட்டும் எங்கும் நகராமல் கட்டிலில் இருக்க, அவனுக்குத் துணையாக சுதாகரும் கட்டிலில் அமர்த்துகொண்டு அவனுடன் மடிக்கணினியில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தான். இரண்டு நாட்களாகவே அவனுடன் முகம் கொடுத்துப் பேசாமல் தவிர்த்து வந்தாள் வானதி. தான் கேட்டு அவன் கூறாதபோது, பேசி என்ன பயன் என்றிருந்தது அவளுக்கு. அதிலும் அடிக்கடி மருதாணி வைக்க, ஒப்பனை செய்து பார்க்க, புடவை தேர்வு செய்ய என அவளை பத்து நிமிடம் கூட அமர விடாமல் அழைத்துக்கொண்டே இருந்தனர் மீனாட்சியும் பானுவும். அதுவுமே ஒரு காரணம்.
இரு தினங்களாகவே சோகத்திலும் குழப்பத்திலும் இருந்த மருமகள் இப்போது திடுதிப்பென வந்து வேம்பத்தூர் வீட்டுக்குப் போய் வருவதாகக் கேட்க, வேதாசலத்துக்குத் துணுக்குற்றது. ஆனால் வானதியிடம் காரணம் கேட்கவும் மனது ஒப்பவில்லை. மணியைப் பார்த்தார், மாலை நான்காகியிருந்தது.
“சரிம்மா.. போயிட்டு வா. பொன்னையாவை கூட்டிட்டுப் போ.”
தலையசைத்துவிட்டுத் தங்கள் வீட்டுச் சாவியை நடுங்கும் கைகளால் பிடித்து அழுத்திக்கொண்டு வெளியே கிளம்பினாள் அவள்.
சற்று முன்பு தான் வானதிக்கு அநாமதேய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது.
“ஏய்! உங்க நிலப் பத்திரத்தை எல்லாம் எடுத்துக்கிட்டு, பனையூர்ல இருக்கற பழைய பஞ்சு குடோன்கிட்ட வா. நீ மட்டும் தனியா வரணும். போலீஸ் கிட்டவோ, உன் மாமனார் கிட்டவோ இதை சொன்னன்னு வை, அடுத்த தடவை உங்க வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வராது, பொண வண்டிதான் வரும்.”
முடிந்தவரை கண்ணீரைத் தடுத்துவிட்டு, காரில் ஏறி அமர்ந்தாள் அவள்.
“வேம்பத்தூர் போங்கண்ணே..”
வீட்டுக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றபோது, சென்றமுறை விட்டுச்சென்றது போலவே பொருட்கள் அங்குமிங்கும் கிடந்தன. வீட்டின் வெறுமை தாங்க முடியாத அளவு இருந்தது. தூசியும் நிறையவே இருந்தது. கொஞ்சமாக அவற்றை ஒழுங்குபடுத்திவிட்டு, உள்ளறைக்குள் சென்று, பூட்டியிருந்த அலமாரியைத் திறந்தாள் வானதி.
அம்மாவின் புடவைகளுக்கு நடுவே இருந்த சின்னப் பெட்டியை மெதுவாக வெளியே எடுக்க முயன்றபோது, அலமாரியின் பின்சுவற்றில் வைத்திருந்த விக்கியின் புகைப்படம் அவளைப் பார்த்துச் சிரித்தது.
“என்னை மன்னிச்சிடு விக்கியண்ணா!!!” என வாய்விட்டு அழுதாள் அவள்.
‘அவனது வாழ்நாள் முயற்சி இது. எங்கள் குடும்பத்தின் சொத்து. என் தந்தையின் அடையாளம். எங்கள் வாழ்க்கை. இதையெல்லாம் எடுத்துச்சென்று எவனுக்கோ தாரை வார்க்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது?? என்னால் இப்படியொரு துரோகத்தை செய்ய முடியுமா? என் குடும்பம் என்னை மன்னிக்குமா?’
இறந்துவிட்ட குடும்பத்தினரை விட, இப்போது நம்மோடு இருக்கும் திவாகரின் உயிர் தான் முக்கியம் என்று மனதுக்கு சமாதானம் சொல்லிக்கொண்டு, மெதுவாக சாவியைத் தேடிப் பிடித்து எடுத்து சின்னப் பெட்டியைத் திறந்தாள் அவள். அவளது, அண்ணனது பட்டப்படிப்பு சான்றிதழ்கள், விவசாய சங்கத்தின் விவரங்கள் கொண்ட சில தாள்கள் போன்றவை மேலாக இருந்தன. அவற்றைக் களைந்துவிட்டு, பச்சை வண்ணத் தாள்களில் எழுதப்பட்ட நிலப் பத்திரங்களைக் கையில் எடுத்தாள் அவள்.
மஞ்சளாகிக் கொண்டிருந்த தாள்கள் நிலத்தின் பூர்வீகத் தன்மையையும், பத்திரத்தின் உண்மைத் தன்மையையும் சான்றளித்தன. கனத்த மனதோடு அவற்றை பத்திரமாக ஒரு பையில் போட்டு எடுத்துக்கொண்டு, பெட்டியைப் பூட்டி அலமாரியில் வைத்துவிட்டு அவள் திரும்பினாள்.
அங்கே வாசல் நிலையில் சாய்ந்து கைகளைக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் திவாகர்.
Paarda avan kanla padama unala iruka mudiuma nee ena ninaikiriyo atha nee sollala nalum kandu pidichi vantan paru
Super super😍👍
💜💜💜💜