Skip to content
Home » Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-42

Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-42

திவாகரை அங்கே எதிர்பாராத வானதி அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவனோ கூர்விழிப் பார்வையால் அவள் கண்களையே நேராக நோக்கினான்.

Thank you for reading this post, provide your thoughts and give encouragement.

“ஏன்? ஏன் யார்கிட்டவும் சொல்லாம இப்படி ஓடிவந்த? எதுக்காக பத்திரத்தை எல்லாம் எடுத்துக்கிட்டு போற?”

சற்றே குரலுயர்த்தி அவன் கேட்க, பதிலின்றி நின்றாள் அவள்.

அருகில் வந்து மீண்டும் அவன் கேட்க, “உனக்காகத் தான்!!” என அவளும் கத்தி, கண்ணீரில் கரைந்தாள்.

“நான் ஏற்கனவே நிறைய இழந்துட்டேன்.. உன்னையும் என்னால இழக்கமுடியாது திவா…”

அவன் மார்பின்மீது சாய்ந்து அவள் கதற, அவனுக்கும் கண்ணீர் ததும்பியது. அவள் தனக்கு வந்த அழைப்புகளைப் பற்றிச் சொல்ல, திவாகர் முகம் இறுகியது.

அவளை இறுக்க அணைத்துக்கொண்டான் அவன். அவள் கூந்தலில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு முத்தமிட்டான்.

“மத்தாப்பூ.. உன்னை விட்டுட்டு எங்கயும் போயிடமாட்டேன் நான்.. இத்தனை தூரம் கஷ்டப்பட்டது எல்லாம் வீணாகவும் விடமாட்டேன். உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு வானி… மாமாக்கு, அத்தைக்கு, விக்னேஷுக்கு நியாயம் கிடைக்குற வரை, நாம ஓய்ஞ்சு போயிடக் கூடாது. அவங்க சாவுக்குக் காரணமானவங்களை சும்மா விடக் கூடாது! உனக்கும் நம்ம முயற்சி மேல நம்பிக்கை இருக்குன்னா, என் பேச்சைக் கேளு”

அவள் இன்னும் விசும்பிக்கொண்டே அவன் மார்பில் சாய்ந்திருந்தாள்.

“போதும் திவா… கஷ்டப்பட்டதெல்லாம் போதும். எனக்கு நீ இருக்க, அதுவே போதும் எனக்கு. பகை, பழி, எதுவுமே நமக்கு வேணாம்… நீ இங்க இருக்க வேணாம். நாம அமெரிக்காவுக்கே போயிடலாம். “

“என்ன பேசற நீ? இது பகையோ பழியோ இல்ல வானி.. இது இறந்து போனவங்களுக்கான நீதி. அவங்க மரணத்துக்கான நியாயம். இன்னொரு குடும்பத்துக்கு இப்படி ஒரு அக்கிரமம் நடக்காம இருக்கறதுக்கான காப்பு. எடுத்ததைப் பாதியில விட்டுட்டு வர்றவளா என்னோட மத்தாப்பூ?? ஆயிரம் சிக்கல் வந்தாலும், பின்வாங்காமப் போராடற வானி எங்க? எனக்கு எதுவும் ஆகாது. அப்படியே எதுவும் ஆனாலும்கூட, உன் முயற்சியை நீ கைவிடக் கூடாது. அப்றம் இவ்ளோ தூரம் பட்ட சிரமமெல்லாம் வீணாப் போயிடும். பயப்படாத மத்தாப்பூ. சீக்கரமே இதுக்குக் காரணமானவங்க சட்டத்துக்கு முன்னாடி நிறுத்தப்படுவாங்க! அத்தை,மாமா, விக்கியோட ஆத்மாவும் சாந்தியடையும். எல்லாம் சரியாகும்.”

ஆயிரம் சமாதானங்கள் சொல்லியும் தாளாமல், குழந்தை போல் தன் தோளில் சாய்த்துத் தட்டிக்கொடுத்து அவளது அழுகையை நிறுத்தினான் அவன். கண்ணோரம் சேர்ந்திருந்த ஈரத்தைக் கட்டைவிரலால் துடைத்துவிட்டவன், நெற்றியில் முத்தமிட்டு அவளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். அவளறியாமல் கையிலிருந்த பையை வாங்கி மறைத்து வைத்தான்.

“எங்கே வரச் சொன்னாங்க?”

“பனையூர்ல இருக்கற ஒரு பழைய மில், அது பின்னாடி ஒரு காட்டன் குடோன் இருக்கு. அங்க வந்து பத்திரத்தை குடுக்க சொன்னாங்க.”

“சரி.. நீ இங்கயே இரு..”

கிளம்பப் போனவனின் சட்டையைப் பிடித்துத் தடுத்தாள் அவள்.

“ப்ளீஸ்.. வேணாம் திவா..”

“தனியா போகல, இன்ஸ்பெக்டரையும் வரச் சொல்லிடறேன்.”

“வேணாம்.. ஒருவேளை அவனுங்களுக்கு தெரிஞ்சதுன்னா, அப்பறம் ஒவ்வொரு நிமிஷமும் நாம பயத்துலயே இருக்கணும். எதுக்கு அதெல்லாம்?”

“வானி.. யாருக்கும் எதுவும் ஆகாது. அப்பாவைத் தொடற அளவுக்கு இந்த ஊருலயே எவனுக்கும் தைரியம் கிடையாது. அம்மாவோ ஹரிணியோ, கூட ஆளுங்க இல்லாம எங்கயும் போகறதில்லை. உனக்கு நான் இருக்கேன். சுதாகர் இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிடுவான்.. பானு அண்ணியையும் கூட்டிட்டு.”

அவள் சமாதானமாகவில்லை என்பது அவள் முகத்திலேயே தெரிந்தது.

“நீ ரொம்ப கன்ஃப்யூஸ்டா இருக்க மத்தாப்பூ.. வா.. ரெண்டு பேருக்கும் சூடா காபி போட்டு எடுத்துட்டு வா. காபி குடிச்சிட்டே பேசலாம்..”

மனமின்றி அவள் சமையலறைக்குள் சென்றாள். பாலில்லாத கடுங்காப்பி போட்டு இரண்டு கோப்பைகளில் எடுத்துக்கொண்டு அவள் வெளியே வந்தபோது, திவாகர் காணாமற்போயிருந்தான்.

_______________________________________

“சிவகங்கை க்ரைம் பிராஞ்ச். யார் பேசறது?”

ஆய்வாளர் அழகேசனின் பரிச்சயப்பட்ட குரல் கேட்டதும் திவாகர் பெருமூச்சு விட்டான்.

“சார்.. நான் திவாகர். ஒரு அவசரமான விஷயம். உங்க ஹெல்ப் வேணும்! நான் தான் பேசறேன்னு ஃபோன்ல காட்டிக்காதீங்க ப்ளீஸ்..”

“அ.. அப்படியா.. ஓ.. சரி, சொல்லுங்க தம்பி.. லைன்மேன் நாளைக்கு தான்  வருவான்னு சொன்னாங்க. நீ இப்ப எங்க இருக்க?”

அவரும் தெளிவாக மாற்றிப் பேசினார்.

திவாகர் விவரத்தை சொல்ல, அவர் கவனமாகக் கேட்டுக்கொண்டார்.

“ஓ.. வீட்டுக்கா.. சரி தம்பி.. நான் இப்ப வர்றேன்..” என்றபடி தொலைபேசியை வைத்துவிட்டு, “நான் வீடு வரைக்கும் போயிட்டு வந்தர்றேன். லைன் மேன் வந்திருக்கான், ஒரு ஃப்யூஸ் கழற்றணும்..” என ஸ்டேஷனில் அனைவருக்கும் கேட்கும்படி சொல்லிவிட்டு, வெளியே வந்து தனது ஜீப்பை எடுத்தார் அவர். அவர் போவதை எழுத்தர் மேசையில் அமர்ந்திருந்த யாரோ ஒருவன் உன்னிப்பாகப் பார்த்தான்.

பதினைந்து நிமிடத்தில் பனையூர் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் திவாகரை சந்தித்தார் அவர்.

“நம்ம ப்ளான் என்ன?”

“சார், எப்படியும் வானதியை எதிர்பார்த்து வர்றவனுங்க, ஆள் கம்மியா தான் வருவாய்ங்க. அதிகபட்சமா நாலஞ்சு பேருதான் இருக்கணும். நம்ம ரெண்டு பேரே சமாளிச்சிடலாம்னு நினைக்கறேன்.”

“உங்களுக்கு.. அடிபட்டிருக்கே திவாகர்.. எப்படி.. நீங்க?”

“எனக்கு ஒண்ணும் இல்ல சார். I can manage.”

“சரி, மொதல்ல, அவனுக வண்டிய காத்துப் பிடுங்கி விடணும். அப்பதான் யாரும் தப்பிச்சுப் போகமாட்டானுங்க. அத்தோட, பனையூர் செல்போன் டவரை தற்காலிகமா தடுக்கணும். நான் சைபர் ஆபிஸ்ல பேசறேன். அஞ்சே நிமிசத்துல டவரை நிறுத்திடலாம். உள்ள போனதும், நான் ஷூட் பண்ண ஆரம்பிப்பேன். யூ டேக் கவர். மெயினான ஆளைப் பிடிச்சு உண்மைய வாங்கறது உங்களோட வேலை.”

புரிந்ததாகத் தலையாட்டினான் அவனும். அடுத்த ஐந்தாவது நிமிடம், குடோனின் பின்பக்க சுவரில் ஏறி இருவரும் உள்ளே குதித்திருந்தனர். தனது கைபேசியில் டவர் நின்றுபோனதை உறுதிசெய்துகொண்டு, ஓசையெழுப்பாமல் உள்ளே நுழைந்தார் அழகேசன்.

எங்கேயோ பார்த்துக்கொண்டு நின்ற இரண்டு அடியாட்களை சத்தமெழுப்பாமல் கழுத்தைத் திருப்பி மயக்கமுறச் செய்து தரையில் தள்ளிவிட்டு, பின்தொடர்ந்தான் திவாகர். இயந்திரங்களின் நடுவே மறைந்துகொண்டு முன்பகுதியில் என்ன நடக்கிறதெனப் பார்த்தனர் இருவரும்.

தலைவன் போல் இருந்தவன் ஒருவனின் முதுகு தெரிந்தது. மேலும் நான்கு அடியாட்கள் தெரிந்தனர்.

“என்னடா, இவ்வளவு நேரமாச்சு, இன்னும் அவளைக் காணோம்? அவுங்க மாமாகிட்ட சொல்லியிருக்குமோ??”

எரிச்சலாகக் கேட்டான் அவன்.

“இருண்ணே.. இன்னொரு அஞ்சு நிமிசம் பாப்போம்.” என்றான் உடனிருந்த தடியன்.

“ப்ச்.. போனை போடுடா அவளுக்கு.”

அந்த தடியன் தன் கைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு, “அண்ணே.. டவரே சுத்தமா இல்லண்ணே..” என்று எச்சரிக்கையான குரலில் சொல்ல, அதுதான் சமயமென உணர்ந்த அழகேசன் தனது துப்பாக்கியுடன் வெளிப்பட்டார். தடியனை முட்டிக்குக் கீழ் சுட்டு வீழ்த்தியவர், அடுத்து இன்னொருவனைக் கையில் சுட்டார்.

அதற்குள் சுதாரித்து ஓடத் தொடங்கிய ஒருவனை திவாகர் ஒரு இரும்புக் கட்டையால் முதுகில் தாக்கி விழ வைத்தான். அதற்குள் மேலும் ஒருவனை ஆய்வாளர் சுட்டிருந்தார். கண்ணிமைக்கும் நொடியில் நடந்தேறியதை எதிர்பாராத அந்தக் கூட்டத்தின் தலைவன் திகைத்துப்போய் நிற்க, துப்பாக்கி முனையில் அவனைப் பிடித்தனர் திவாகரும் அழகேசனும்.

“வெல் டன் திவாகர். இவன் ஒரு பழைய கேடி தான். அடிக்கடி கட்டப்பஞ்சாயத்து கேசுல ஸ்டேஷனுக்கு வருவான். இப்ப தலைவர் பெரிய கை கூடவெல்லாம் சேர்ந்துட்டார் போலயே..”

திவாகர் தனது டேக்வாண்டோ உதையில் ஒன்று விட, அவன் சுருண்டுபோய் கீழே விழுந்தான்.

“சார்.. என்ன ஒண்ணும் பண்ணிடாதீங்க சார்!! நான் சும்மா பத்திரத்தை வாங்க வந்தவன் தான் சார்!! எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல சார்!” என அலறினான் அவன்.

“டேய்!! மரியாதையா சொல்லு, யாரு உன்னை அனுப்புனது?”

மீண்டும் உதைப்பதற்காக திவாகர் காலை உயர்த்த, அவன் மருண்டபடி, “மலையப்பன் தான் சார், போயி பத்திரத்தை வாங்கிட்டு, அவளை மிரட்டிட்டு வான்னு அனுப்புனான். அது மட்டும் தான் சார் தெரியும்.. என்னை விட்டுடுங்க சார்!!” என்றான்.

“சே!!” என அருகிலிருந்த கட்டையை உதைத்தான் திவாகர். அழகேசன் அனைத்து அடியாட்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல தனது கைபேசியில் கட்டளைகள் தந்துவிட்டு, திவாகரிடம் வந்தார்.

“பத்திரத்தைக் கேட்டவன் மலையப்பன்னா, அவனை வச்சு ஆதிகேசவனைப் பிடிச்சிரலாம். இப்போதைக்கு இவனை கஸ்டடில எடுத்து இவன வச்சு மலையப்பனை ஈஸியாப் பிடிச்சுரலாம் திவாகர். இப்போதைக்கு, இங்க நடந்ததை வெளிய யாருக்கும் தெரியாமப் பாத்துக்கணும்.”

“இவன் போகலைன்னா, மலையப்பனுக்கு சந்தேகம் வந்துடுமே..”

தரையில் கிடந்தவன் சற்றே கஷ்டப்பட்டு முனகலுடன் எழுந்து அமர்ந்தான்.

“இல்ல சார்..  என்னை பத்திரத்தை வாங்கிட்டு வரச் சொல்லல…”

3 thoughts on “Madhu_dr_cool-நீயன்றி வேறில்லை-42”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *